22 வயது இளைஞரின் முதல் திரைப்படம், பல பிரபலங்களின் பாராட்டு ஆகியவையே துருவங்கள் பதினாறு படத்தைப் பார்க்கத்தூண்டிய காரணங்கள். Image Credit
துருவங்கள் பதினாறு
ஒரு தற்கொலை போலச் சம்பவம், கொலை(கள்) நடந்ததற்கான அடையாளங்கள் காவல் துறைக்குப் புகாராக வருகிறது.
இக்கொலைகள், தற்கொலை எனப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதா? யார் கொலை செய்தது என்பதே துருவங்கள் பதினாறு கதை.
கவனக்குறைவால் ஒரு நண்பர்கள் குழு விபத்தை ஏற்படுத்த, அப்போது ஆரம்பிக்கும் “ஏன்? எப்படி? எங்கே?” கேள்விகள் இறுதி வரை தொடர்கிறது, படம் முடிந்தும் தொடர்கிறது.
ரகுமான்
உயர் காவல் அதிகாரியான ரகுமான், தான் விசாரித்த வழக்கின் ஒரு விபத்தில் தன் காலை இழந்து பணி ஓய்வு வாழ்க்கையில் வாழ்பவர். படத்தின் கதை இவர் பார்வையில் விரிகிறது.
ரகுமான் ஏற்கனவே “ராம்” திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாகச் இயல்பாக நடித்து இருப்பார். இந்த வேடமே இயக்குநருக்கு ரகுமானை தேர்வு செய்ய ஒரு காரணமாக இருக்கலாம்.
எந்த ஒரு ஆர்ப்பாட்டமோ, திரைப்படத்துக்கே உண்டான உடல்மொழியோ இல்லாமல் இயல்பாக வந்து செல்கிறார்.
ஆனால், ஒரு காவல்துறை அதிகாரி இவ்வளவு அமைதியான கதாப்பாத்திரமாக அதிர்ந்து பேசாதவராக இருப்பாரா! என்பது உறுத்தலாக இருக்கிறது.
ரகுமானுடன், புதிதாக வேலைக்குச் சேர்ந்து இருக்கும் கான்ஸ்டபிளாக வரும் இளைஞர் பொருத்தமான தேர்வு.
இளைஞருக்கே உண்டான ஆர்வம் துடிப்பு என்று தன் பங்கை செய்து இருக்கிறார்.
படத்தில் ரகுமான் தவிர அனைவரும் புதுமுகங்கள். டெல்லி கணேஷ் சிறு கதாப்பாத்திரத்தில் வந்து செல்கிறார்.
குழப்பமான கதை
இப்படத்துக்கு எப்படி இயக்குநர் திரைக்கதை எழுதினார் என்று வியப்பாக இருந்தது, அதுவும் இவ்வளவு சிறிய வயதில்.
அப்படியொரு குழப்பமான கதை அதோடு சிறிது பார்க்காமல் விட்டாலும் படம் பார்க்கும் நபர் குழம்பி விடுவதற்கான வாய்ப்புள்ளது.
படம் முடிந்து வெளியே வந்து யோசித்த பிறகே பல விசயங்கள் எனக்குப் புரிந்தது. உடன் வந்த நண்பனோடு விவாதித்த பிறகு சில கேள்விகள் புரிந்தன.
இன்னும் எனக்குக் கேள்விகள் உள்ளன.
இப்படம் அனைவருக்குமான படமல்ல, த்ரில்லர் படங்களை இது போன்ற பரபரப்பு நிறைந்த கதையமைப்பை விரும்புவர்களுக்கானது.
வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளும் பல விடை தெரியாத கேள்விகளும்
படத்தில் குறிப்பிட்ட சூழ்நிலையைக் கொண்டு வருவதற்குச் சில காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டுக்கு ரகுமான், காவல் நிலையத்தில் தனது கைபேசியை மறந்து வைத்துச் சென்று விட்டேன் என்று கூறுவது.
இதோட சில கேள்விகளும் இருக்கிறது ஆனால், அதைக் கூறினால் உங்களுக்குப் படம் பார்க்கும் போது விறுவிறுப்பு இருக்காது.
த்ரில்லர் வகைப் படங்களை விமர்சிப்பதில் உள்ள பிரச்சனைகள்.
யார் கொலை செய்து இருப்பார்கள் என்று ஊகிப்பது கடினமான செயலே! ஆனால், இவர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று மட்டும் ஊகிக்க முடியும்.
குறும்படம் எடுக்கிறேன் என்று மாட்டிக்கொள்ளும் இளைஞர்கள், ரகுமானிடம் கொடுத்த நிழற்படக் கருவியை வாங்க வீட்டுக்கு வந்து, இவரின் வழக்குப் பரபரப்பைக் கண்டு விழிக்கும் போது, ரகுமான் “காவல் துறை பணிக்கு வரும் விருப்பமுள்ளதா?” என்று கேட்பார்.
அப்போது அவர்களின் முகபாவனைச் செமையாக இருக்கும் 🙂 .
அனைவருக்குமான படமல்ல
படத்தில் பாடல்கள் இல்லை, பின்னணி இசை த்ரில்லர் படங்களுக்குத் தேவையான அளவில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
நிறைய இடங்களில் இருட்டு அதிகம் இருப்பதால், ஒளிப்பதிவாளருக்கு சவாலாகவே இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
முன்னரே கூறியபடி இது அனைவருக்குமான படமல்ல காரணம், சிலர் “என்னய்யா! ஒன்றுமே புரியலை!” என்று எளிதாகக் கடந்து விட வாய்ப்புள்ளது.
ரசிப்பவர்களுக்கு “அதுக்குள்ள இடைவேளை வந்து விட்டதா?!” என்று வியப்பாக இருக்கும்.
த்ரில்லர் திரைப்படங்களை ரசிப்பவர்கள் தவறவிடக்கூடாத படம்.
பாடல்கள், வழக்கமான சண்டைகள், அர்த்தமற்ற நகைச்சுவைகள் என்று சுழன்று கொண்டு இருக்காமல், குறைகள் இருந்தாலும், தமிழ் திரைப்படங்களை வித்யாசமாகக் கொடுக்க முயலும் இது போன்ற இளைஞர்களின் முயற்சியை ஊக்குவிக்கலாம்.
கிரி எதுக்கும் ஒரு தடவை ப்ரீடெஸ்டினேஷன் படத்தை பாருங்க.. டைம் டிராவல் படம் தான்.. அங்கேயும் உங்களுக்கு திரைக்கதை எப்படி எழுதியிருப்பார்கள் என்ற குழப்பம் நீடிக்கும்.
பிரெடெஸ்டினேஷன் அட்டகாசமான திரைப்படம். கண்டிப்பா பாருங்க. அசந்து போயிடுவீங்க.
நான் பார்த்த திரில்லர் படங்களில் இது மிக சிறந்த படம், நான் படம் பார்த்து விட்டு வெளியே வந்த பிறகு உங்களிடம் சொல்லி விமர்சனம் எழுத சொல்லலாம் என்று நினைத்தேன், அந்த அளவுக்கு வெகுவாக கவர்ந்த படம்… உங்கள் விமர்சனம் அருமை.
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும்!!! பொங்கலை தெறிக்க விடுங்க உங்க கோபில!!!
அன்புடன்
சுரேஷ் பழனி…
கிரி, உங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தோன்றுகிறது. என்னை பொறுத்தவரை பின்னணி இசையும், திரைக்கதையும் தான் ஒரு படத்தின் முக்கிய உயிர்நாடி. இவை இரண்டும் தரமமாக இருக்கும் பட்சத்தில் படம் வெற்றி பெற வாய்ப்புண்டு. இந்த படத்திற்கு வரவேற்பு எப்படி உள்ளது என்று தெரியவில்லை. ரகுமானை இன்னும் தமிழ் திரையுலகம் முழுமையாக பயன்படுத்தவில்லை என்றே கருதுகிறேன். த்ரில்லர் பட ரசிகனாக இருப்பதால், நீங்கள் நிச்சயம் ரசித்து இருப்பீர்கள் என்று கருதுகிறேன். பகிர்வுக்கு நன்றி கிரி.
@ராஜ்குமார் பார்க்க முயற்சிக்கிறேன். இந்தியாக்கு வந்த பிறகு வேற்று மொழி படங்கள் பார்ப்பதே முற்றிலும் நின்று விட்டது 🙁
@சுரேஷ் நன்றி 🙂
@யாசின் படம் நன்றாக உள்ளது. விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது போல கேள்விகளும் உள்ளது. ரகுமான் சிறப்பான நடிப்பு.
கிரி, இன்றைக்கு படத்தை பார்த்தேன்… செமையான படம். இன்னும் ஒரு முறை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ரகுமான் பாத்திரத்தில் வேறு ஏதாவது பெரிய ஹீரோ நடித்து இருந்திருந்தால் படம் வேற லெவல்… ரகுமானின் நடிப்பும் அட்டகாசம் ஆனால் நம்மளை பொறுத்தவரை பெரிய நடிகர்கள் படங்களுக்கு மட்டுமே வரவேற்பு அதிகமாக இருக்கும். படத்தின் ஓளிப்பதிவும், இசையும், திரைக்கதை அமைப்பும், நடிகர்களின் தேர்வும், பொருத்தமாக நன்றாக இருந்தது. விமர்ச்சனத்துக்கு நன்றி கிரி.
நன்றி யாசின் 🙂
உங்க கமெண்ட்’ல பார்த்து “ப்ரீடெஸ்டினேஷன்” படம் பார்த்தேன். அருமையான படம். இது போல நல்ல படங்கள் இருந்தால் கூறுங்கள். நேரம் இருந்தால், சிறந்த வெளிநாட்டு படங்கள் பற்றிய பதிவு ஒன்று எழுதவும். மிக்க நன்றி.