இந்த முறை ஊருக்குச் சென்று இருந்த போது அப்பாவின் நண்பரைப் பார்க்க வேண்டி இருந்தது, அவருடன் தொலைபேசியில் பேசிப் பழக்கம் இருந்தாலும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. Image Credit
அவரைச் சந்தித்த போது அவருக்குப் பார்வை முழுவதுமாகத் தெரியாது என்று தெரிந்த போது எனக்கு வியப்பு கலந்த சோகம் ஏற்பட்டது.
இந்தச் சோகம் அவருடன் பேசிய பிறகு மறைந்து விட்டிருந்தது.
அவருடன் பேசியதை ஒரு உரையாடலாகவும், கேள்வி பதிலுடனும் தொகுத்து இருக்கிறேன்
இனி உலகம் தெரிந்ததவருடன் ….
உங்களுக்கு முதன் முதலில் பார்வை குறைவு எப்போது ஏற்பட்டது
20 வருடமாகக் கண் பிரச்சனை உள்ளது, கடந்த 5 வருடமாகச் சுத்தமாகத் தெரிவதில்லை க்ளுக்கோமா பிரச்சனையால்.
பார்வை தெரியவில்லை என்று உங்களுக்குப் பெரிய குறைபாடாகத் தற்போது உள்ளதா!
எனக்கு 20 வருடமாக இந்தப் பிரச்சனை இருப்பதால் கண் பார்வை முற்றிலும் போய் விடும் என்று எனக்குத் தெரியும்.
எனவே, என்னை நான் தயார் செய்து கொண்டேன்
எந்த வழியில்?
பார்வை சுமாராகத் தெரிந்த போதே கண்ணாடி எதுவும் இல்லாமல் சவரவம் செய்து கொள்ளுவது போன்ற வேலைகள் செய்து என்னைப் பழக்கப்படுத்திக் கொண்டேன்.
உண்மையில் கண் தெரிந்த போது செய்ததை விடத் தற்போது நன்றாகச் சவரம் செய்வதாக உணருகிறேன் (சிரிக்கிறார்).
பார்வை தெரிந்து தற்போது பார்வை இல்லாமல் இருப்பது உங்களுக்குக் கஷ்டமாக இல்லையா?
தற்போது இல்லை, காரணம் நான் இந்தப் புதிய உலகத்தில் வாழப் பழகிக் கொண்டேன். எனக்கு எதுவும் சிரமமாகத் தெரியவில்லை. அனைத்தும் சிஸ்டமேட்டிக்காக உள்ளது
உங்களுடைய பொழுபோக்கு என்ன?
எனக்கு வானொலி கேட்பதில் அதிகம் விருப்பம். நான் அதிகம் BBC செய்திகள் கேட்பேன், கிட்டத்தட்ட 50 வருடமாகக் கேட்கிறேன்.
குறிப்பிட்ட நேரத்தில் கேட்பீர்களா?
ஆமாம்
உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் வரும் நேரத்தில் வேறு யாராவது உங்களைச் சந்திக்க வந்தால்… (இடையில் நான் நுழைந்ததால் இந்தச் சந்தேகம் எனக்கு :-D).
சில சமயம் சிரமமாகத் தான் இருக்கும், அதற்காக வந்தவர்களைக் கவனிக்காமல் இருக்க முடியுமா!
அவர்கள் மூன்று முறை செய்திகளை ஒலிபரப்புவார்கள், அதனால் ஏதாவது ஒரு நேரத்தில் கேட்டுக் கொள்வேன்.
உங்களுக்கு எது பற்றி விசயங்களில் அல்லது செய்திகளில் ஆர்வம்?
எனக்கு Intellectual ஆன விசயங்களைப் பேசுவதில் தெரிந்து கொள்வதில் ரொம்ப விருப்பம்.
உங்களைச் சந்திக்க உங்கள் நண்பர்கள் அதிகம் வருகிறார்களா?
நிறைய வருவார்கள் பேசி விட்டுச் செல்வார்கள்.
எதைப் பற்றி அதிகம் பேசுவார்கள்?
பெரும்பாலும் சினிமா அரசியல் இது பற்றித் தான் பேசுவார்கள், ஆனால் எனக்கு அதில் எல்லாம் ஆர்வம் இல்லை (சிரிக்கிறார்).
உங்களுக்குப் பார்வை சென்ற பிறகு நீங்கள் தெரிந்து கொண்ட முக்கிய விஷயம் என்ன?
தமிழ்
எப்படி? !!!
எனக்குச் சிறுவயதில் ஆங்கிலத்தில் அதிக ஈடுபாடு, BBC போன்றவற்றில் அதிக விருப்பம். எனவே, தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் விட்டு விட்டேன்.
தற்போது வானொலி மூலம் நன்கு தமிழ் கற்றுக் கொண்டேன், கடவுள் முருகன் பற்றி வாழ்த்துப்பா கூட எழுதி இருக்கிறேன்.
(எடுத்துத் தந்து படிக்கக் கூறுகிறார், அதைப் படித்துக் காட்ட அதற்க்கு விளக்கம் கூறுகிறார்)
ஆங்கிலத்தில் poem நிறைய எழுதி இருக்கிறேன் தற்போது தமிழில் எழுதிக் கொண்டு இருக்கிறேன், நான் கூறுவேன், யாராவது எழுதுவார்கள்.
நீங்கள் செய்திகள் அதிகம் கேட்பதாகக் கூறினீர்கள், உங்களுக்கு இந்திய, தமிழகச் செய்திகள் பிடிக்குமா? உலகச் செய்திகள் பிடிக்குமா?
உலகச் செய்திகள்
ஏன்?
இந்தியாவில் அரசியல் செய்திகள் அதிகம் வருகிறது, எதுவும் சரி இல்லை. அனைவரும் மக்கள் பணத்தைக் கொள்ளை அடிப்பதிலே குறியாக இருக்கிறார்கள்.
(தமிழ் நாட்டில் உள்ள பிரபல அரசியல்வாதியையும் வட நாட்டு அரசியவாதியையும் சாடுகிறார்)
இத்தனை பணத்தைச் சம்பாரித்து இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
எய்ட்ஸ்
பேச்சு எய்ட்ஸ் பற்றித் திரும்புகிறது
எய்ட்ஸ் என்பது ஒரு நோய் அல்ல, ஒரு வைரஸ் அவ்வளோ தான்.
இதன் ஆரம்ப நிலை தான் HIV, இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் இது இருப்பதே தெரியாது நார்மலாகத் தான் இருப்பார்கள், பின் தான் அது எய்ட்ஸ் ஆக மாறும்.
இந்த வைரஸ் ன் வேலை என்னவென்றால் நம்முடைய எதிர்ப்புச் சக்தியைக் காலி செய்து கொண்டே வரும்.
நமது எதிர்ப்புச் சக்தி முழுவதும் போகும் நிலை வரும் போது தான் எய்ட்ஸ் என்ற நிலையை அடைகிறோம்.
எதிர்ப்பு சக்தியே உடலில் இல்லை என்றால் என்ன ஆகும்? உலகில் உள்ள மொத்த வியாதியும் இந்த வைரஸ் தாக்கியவரை வந்தடையும்.
நாம் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவருடன் சகஜமாகப் பழகலாம், அதனால் நமக்கு எந்தவித பாதிப்புமில்லை.
சலூனில் ஒருவரின் முகத்தைச் சவரம் செய்த அதே பிளேடை பயன்படுத்துவது மிகவும் தவறான ஒன்றாகும்.
ஒருவேளை பாதிக்கப்பட்ட ஒருவருக்குச் சவரம் செய்து அவருடைய ரத்தம், நமக்குச் செய்யப்படும் போது ஏற்படும் காயத்தில் பட்டால் நமக்கும் அந்த வைரஸ் தாக்கி விடும்.
எனவே. இதை அறவே தவிர்ப்பது நல்லது.
ஆனால் ரத்தம் நம் உடலிலிருந்து வெளியே வந்து மிகவும் குறுகிய காலமே (வினாடிகளே) இருக்க முடியும், அதற்கு மேல் வெளி சீதோஷண நிலையைத் தாங்காது அதில் உள்ள வைரஸ்கள் அழிந்து விடும்.
நம் உடலில் இருக்கும் வெப்ப நிலையிலேயே அவற்றால் உயிருடன் இருக்க முடியும். இப்படி இருந்தாலும் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது.
இவர் இதுபற்றிக் கூறிய போது ஜூனியர் விகடனில் (என்று நினைக்கிறேன்) ஒரு முறை வந்த கட்டுரை நினைவிற்கு வந்தது.
சில சைக்கோக்கள் திரைஅரங்கில் இருக்கையில் ஊசி வைத்து விட்டு அதில் “Welcome to Aids family” எழுதி வைத்து இருந்தார்கள்.
அதைப் பார்த்த பலர் நாம் அந்த ஊசியின் மீது பட்டு இருப்போமோ என்று பீதி ஆனது குறித்துச் செய்தி வந்து இருந்தது.
(எனக்கு நேரம் இல்லாததால் மேலும் அவரிடம் தொடரமுடியவில்லை, என் அக்கா பையன் வேறு பொறுமை இழந்து கொண்டு இருந்தான்)
நான் கிளம்ப வேண்டி இருப்பதால் பிறகு உங்களைச் சந்திக்கிறேன்
இருங்கள் (என் அப்பா, அக்கா மற்றும் என் அக்கா பையன் உடன் இருந்தார்கள்) காஃபி சாப்பிட்டு விட்டுத் தான் செல்ல வேண்டும்.
எங்க வீட்டு காஃபி சுவையாக இல்லாமல் இருக்கலாம் ஆனால், அன்பு அதிகம் கலந்தது
அவர் அன்பை மறுக்க மனது இல்லாமல் அவரது வீட்டில் சமையலுக்கு உதவியாக இருக்கும் ஒரு அம்மா கொடுத்த காஃபியை குடித்த பிறகே கிளம்பினோம்.
உங்கள் அனைவரையும் ரொம்பப் போர் அடித்து விட்டேன் என்று நினைக்கிறேன் (சிரிக்கிறார்)
உண்மையில் உங்களிடம் பேசிய பிறகு நான் தான் நிறையத் தெரிந்து கொண்டேன்.
உங்களிடம் இன்னும் நிறையக் கேள்விகள் கேட்க நினைத்து இருந்தேன், எனக்கு நேரமில்லாததால் தற்போது கிளம்ப மனம் இல்லாமல் கிளம்புகிறேன்.
முடிந்தால் சிங்கப்பூர் செல்லும் முன் வந்து செல்
சரிங்க (ஆனால் திரும்பச் செல்லமுடியவில்லை)
*********************************
எனக்கு நீண்ட நாட்களாக இந்தப் பார்வை தெரியாதவர்கள் எவ்வாறு சிந்திப்பார்கள், அவர்கள் மிகவும் சிரமப்படுவார்களா! பார்வை தெரியாததை நினைத்து வருந்துவார்களா!
அவர்களின் அன்றாட அடிப்படை தேவைகளை எப்படிச் சமாளிக்கிறார்கள்! என்று பல சந்தேகங்கள் ஆனால், இவரிடம் பேசிய பிறகு எனக்கு அது பற்றிய சந்தேகங்கள் பல குறைந்தது.
எனக்கு ஒரே ஒரு குறை இன்னும் பல கேள்விகள் கேட்க நினைத்து அவற்றை நேரமின்மையால் கேட்க முடியாமல் போனது, இதில் எனக்கு மிக மிக மிக மிக ஏமாற்றம்.
குறிப்பு
இவருடன் பேசி 20 நாட்களுக்கு மேலாகி விட்டபடியால் நான் அவர் கூறியதாகக் கூறிய வார்த்தைகளில் என் நினைவிலிருந்து ஏதாவது மாற்றி நான் எழுதி இருக்கலாம்.
முடிந்த வரை சரியாக எழுதி இருப்பதாகக் கருதுகிறேன் அப்படி ஏதாவது மாற்றி வார்த்தைகளை எழுதி இருந்தால் அவர் என்னை மன்னிப்பாராக.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
அவர்களுக்கு மற்ற புலன்கள் கூர்மையாக இருக்கும், எங்கள் ஊரில் இவரைப் போன்று ஒருவர், எல்லா செய்திகளையும் தெரிந்து வைதிருப்பார். ஊருக்கு புதிதாக வந்திருக்கும் உதவி ஆய்வாளர் பெயரை உடனே சொல்லுவார்
நானறிந்த வரையில் பார்வையற்றவர்கள் பெரும்பாலும் தைரியசாலிகளாகவும், கூடுமானவரையில் தங்கள் வேலைகளைத் பிறர் தயவின்றி தாங்களே பார்த்துக் கொள்வதில் அக்கறை செலுத்துபவர்களாகவும், மற்றவரின் இரக்கத்தை எதிர்பாராதவர்களாகவுமே இருக்கிறார்கள். அதிலும் பிறவியிலேயே இக்குறை இருப்பவர்களுக்கு கடவுள் கூடவே வேறொரு அசாத்திய திறமையை தந்து நிறைவு செய்திருப்பதையும் பார்க்கலாம்.
ஜோதிபாரதி சொன்னாற்போல இப்பதிவு வித்தியாசமான முயற்சி. பல தகவல்களை அறிய முடிந்ததுடன் மனச் சோர்வின்றி அவர் வாழ்க்கையை கொண்டு செல்லும் விதம் அனைவருக்கும் ஒரு பாடம்.
இம்மாதிரியான முயற்சிகள் தொடரட்டும் கிரி. வாழ்த்துக்கள்!
//எங்க வீட்டு காஃபி சுவையாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அன்பு அதிகம் கலந்தது //
கொன்னுட்டாரு!
உமையிலேயே தன்னம்பிக்கை அளிக்கும் பதிவு! பகிர்வுக்கு நன்றி தல!
நல்ல பகிர்வு கிரி.. நிறைய விசயங்கள் கற்று கொண்டேன்
நசரேயன், ஜோதிபாரதி, கோவி கண்ணன், ராமலக்ஷ்மி, அருண், மகேஷ் மற்றும் அருண் பாராட்டிற்கு நன்றி
@கோவி கண்ணன்
“ஊருக்கு புதிதாக வந்திருக்கும் உதவி ஆய்வாளர் பெயரை உடனே சொல்லுவார்”
இவரும் ஏகப்பட்ட விஷயம் தெரிந்து வைத்து இருக்கிறார், எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. கண் தெரிந்தவர்களை விட இவர் அதிகம் தெரிந்து வைத்து இருக்கிறார்.
@ராமலக்ஷ்மி
“மற்றவரின் இரக்கத்தை எதிர்பாராதவர்களாகவுமே இருக்கிறார்கள்”
இது முற்றிலும் உண்மை
திரு . கிரி அவர்களே. உங்கள் பதிவு அருமை.
ஆனால் நீங்கள் சந்தித்தது பார்வை இருந்து பார்வை இழந்தவர். இன்றைய கால கட்டத்தில் முதுமை அடையும் அதிகமானோர் பார்வை இழக்க நேரிடுகிறது.
என்னை பொறுத்தவரை பிறவியில் பார்வை இழந்து இந்த பூமிக்கு வருபவரின் மன நிலையை பதிவு செய்ய முயற்சியுங்கள். அது இன்னும் நம்பிக்கை மற்றும் சோகத்தின் அரண்மனையாக இருக்கும். அப்படி நீங்கள் பதிவு செய்தால் அதை வரவேற்கும் முதல் மனிதனாக இருப்பதை என் கடமையாக இருக்கும்.
அன்புடன்
வெங்கடேஷ் . இரா
( அன்பே சிவம் )
hi giri it is intresting nan kalyanathil parthapothu kekalam endur iruthen any way. nalla muyarchi
வேறுபட்ட(வித்யாசமான)முயற்சி!
நன்றாக இருக்கிறது கிரி!
பகிர்தலுக்கு நன்றி.
என்னுடைய உறவினரும் ஒருவர் தனது இறுதி காலத்தில் பார்வை இழந்து சிறிது கடினப்பட்டார். இறைவன் அவரை நல்ல படியாக அழைத்துகொண்டன்.
நல்ல பதிவு கிரி…
உங்களோட ரிப்போர்டிங் ஸ்கில் கூடிக்கிட்டே போகுது !!
Giri,
A good & a different kind of post. Compelling read. Thanks for sharing a different perspective. Keep rocking.
Arun
___//எங்க வீட்டு காஃபி சுவையாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அன்பு அதிகம் கலந்தது //___நான் இரசிச்சதையே வால் பையனும் இரசிச்சிருக்காரு நல்ல பதிவு
ஏனுங்க கிரி ?மேல ஒளவையார் படத்தை போட்டுட்டு கீழ உங்க பேருக்கு பக்கத்துல அந்த படம் அவசியம்தானா ?யோசிங்க …விருப்பம் இருந்தா மாத்திடுங்க .
ம்,அவரின் உணர்வுகளை பதிந்துள்ளீர்கள்…சில கேள்விகளை நீங்கள் பதிவில் போடப்பட்ட தொனியில் கேட்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புறேன்..
உரையாடல் பாணியில் இல்லாமல் உரை நடையில் போட்டிருந்தா சந்திப்பு உணர்வை அனைவருக்கும் போய்ச்சேரப் பண்ணியிருக்கலாம்…
//புதுவை தமிழன் said…
என்னை பொறுத்தவரை பிறவியில் பார்வை இழந்து இந்த பூமிக்கு வருபவரின் மன நிலையை பதிவு செய்ய முயற்சியுங்கள்//
வாய்ப்பு கிடைத்தால் பதிவு செய்ய முயற்ச்சிக்கிறேன் வெங்கடேஷ், நன்றி
================================================================================
//BioAgeS !nnovations said…
hi giri it is intresting nan kalyanathil parthapothu kekalam endur iruthen any way. nalla muyarchi//
அங்கே பேச நமக்கு நேரம் கிடைக்கவில்லை. நன்றி அரவிந்த்
================================================================================
லோகன் வருகைக்கு நன்றி
===============================================================================
//மோனி said…
ஏனுங்க கிரி ?
மேல ஒளவையார் படத்தை போட்டுட்டு
கீழ உங்க பேருக்கு பக்கத்துல
அந்த படம் அவசியம்தானா ?//
:-))) படம் அப்படி எதுவும் அசிங்கமாக இல்லையே!
உங்கள் முதல் வருகைக்கு நன்றி மோனி
================================================================================
//Bleachingpowder said…
தப்பா நினைச்சுகாதீங்க கிரி. எவ்வளவு தான் நெருக்கமானவர்களாக இருந்தாலும் பார்வையிழந்தவர்களிடம் எப்படி பார்வை போயிற்று, எப்படி உணருகிறீர்கள் போன்ற கேள்விகளை முடிந்த வரை தவிர்கலாம் என்பது என் எண்ணம்.//
நீங்கள் கூறுவது சரி தான் அருண், அதை அறியாதவன் அல்ல.
உண்மையில் நான் கேட்ட கேள்விகளுக்கு ஆர்வமுடன் பதில் அளித்தார், அவர் சங்கடப்படுவதாக தெரிந்தால் கண்டிப்பாக இதை போல கேட்டு இருக்க மாட்டேன். எனக்கு அவரை பற்றி தெரியும் என்பதால் நான் அவருக்கு பிள்ளை போல என்பதாலும் உற்சாகமாக தான் பதில் தந்தார். அதனால் நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை.
==============================================================================
//’டொன்’ லீ said…
உரையாடல் பாணியில் இல்லாமல் உரை நடையில் போட்டிருந்தா சந்திப்பு உணர்வை அனைவருக்கும் போய்ச்சேரப் பண்ணியிருக்கலாம்…//
உண்மை தான் டொன் லீ. நானும் அப்படி தான் எழுத நினைத்தேன்.
நான் உரைநடை பாணியில் எழுதி இருந்தால் பலருக்கு புரியாது. காரணம் எங்களது கொங்கு தமிழ், சில வார்த்தைகள் அர்த்தம் புரிய சிரமமாக இருக்கலாம்.
இதை போல எழுதினால் அனைவருக்கும் படிக்க எளிதாக இருக்கும்
உங்கள் பதிவு வித்தியாசமாகவும் தகவல் எழுதியவிதம் நல்லைருந்தது.
தப்பா நினைச்சுகாதீங்க கிரி. எவ்வளவு தான் நெருக்கமானவர்களாக இருந்தாலும் பார்வையிழந்தவர்களிடம் எப்படி பார்வை போயிற்று, எப்படி உணருகிறீர்கள் போன்ற கேள்விகளை முடிந்த வரை தவிர்கலாம் என்பது என் எண்ணம்.
நல்ல பதிவு கிரி
பொய்யான மற்றும் போலியான வாழ்க்கை வாழும் நமக்கு அவரின் உணர்வு பூர்வமான பதில் வாழ்க்கையின் உண்மையை நமக்கு அழகாக சொல்லி இருக்கிறார்.
அவர் நல்ல நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
//malar said…
உங்கள் பதிவு வித்தியாசமாகவும் தகவல் எழுதியவிதம் நல்லைருந்தது.//
நன்றி மலர்
================================================================================
//♠புதுவை சிவா♠ said…
நல்ல பதிவு கிரி
பொய்யான மற்றும் போலியான வாழ்க்கை வாழும் நமக்கு//
:-)))
நல்லா சொன்னீங்க சிவா
//வாழ்க்கையின் உண்மையை நமக்கு அழகாக சொல்லி இருக்கிறார்.//
நம்மில் பலர் கண்ணிருந்தும் குருடர்கள், இவரை போன்றவர்களோ பார்வை இல்லை என்றாலும் உலகம் தெரிந்தவர்கள்.
நல்லா இருக்கு! 🙂
வித்தியாசமான முயற்சிகள்!!! தொடரட்டும் உங்களோட பதிவு!!!!
A very nice & a different kind of post Giri!!
Thanks,
Arun
நாடோடி பையன் அசோசியேட் மற்றும் அருண் பாராட்டிற்கு நன்றி
ரொம்ப தன்னம்பிக்கைங்க அவருக்கு, இவரைப் போல உறுதியானவங்களை சந்திக்கும்போது நமக்கும் புது உற்சாகம் பிறக்குது…
உருப்படியான பதிவு!!! (அப்ப இதுவரைக்கும் உருப்படியா எழுதலயானு கேக்கப்படாது 🙂 )
//பாசகி said…
ரொம்ப தன்னம்பிக்கைங்க அவருக்கு, இவரைப் போல உறுதியானவங்களை சந்திக்கும்போது நமக்கும் புது உற்சாகம் பிறக்குது…//
உண்மை தான் சக்தி.
//அப்ப இதுவரைக்கும் உருப்படியா எழுதலயானு கேக்கப்படாது :)//
:-))) கேட்பேன்
அருமையா பதிவு செஞ்சிருக்கீங்க கிரி.
//மங்களூர் சிவா said…
அருமையா பதிவு செஞ்சிருக்கீங்க கிரி.//
நன்றி சிவா
கிரி!அருமையான பதிவுங்க!
க்ளுக்கோமா பற்றி சொல்லியிருந்தீர்கள்.இதன் மூலம் பற்றி எனக்குத் தெரியவில்லை.ஆனால் நமது தட்ப வெப்ப நிலைகளுக்கு எண்ணெய்க் குளியல்,தினமும் தலைக்கு என்னை தேய்ப்பது போன்றவைகள் அவசியமான ஒன்று.
முன்பு கண்ணாடி போட்டுக்கொள்ளும் சிறுவர்கள் மிகவும் அரிது.ஆனால் இப்பொழுது சாதாரண தோற்றமாகி விட்டது.
கிராமப் புறத்திலிருந்து ஆமணக்கு கொட்டைகள் சேர்த்து,வறுத்து, இடித்து,சுடுநீரில் சுத்தமாக காய்ச்சு எடுத்த எண்ணெய் தினமும் இரவிலோ அல்லது காலையில் குளித்து முடித்து விட்டு இரண்டு சொட்டுக்கள் விட்டுக் கொள்வது கண் தூசு,கண்ணில் நீர்வடிவது,கண் வியாதி போன்றவை வருவதை நிச்சயமாகத் தடுக்கும்.