காக்கா முட்டை [2015]

9
காக்கா முட்டை [2015]

நீண்ட வருடங்களுக்குப் பிறகு அழுகை சோகமில்லாமல் விருதுகளையும் குவித்துப் பொதுமக்களையும் கவர்ந்த திரைப்படமாகப் பலரிடம் காக்கா முட்டை திரைப்படம் பாராட்டையும் வரவேற்பையும் பெற்று இருக்கிறது. Image Credit

ஆகச் சிறந்த படமாகக் கூற முடியாது என்றாலும் தமிழில் இது போன்ற படங்கள் வருவது குறைவு என்பது தான் அனைவரையும் பாராட்ட வைத்து இருக்கிறது.

தயாரிப்பாளர்கள் தனுஷ் / வெற்றிமாறன் என்ற பிரபலங்களால் இந்தப் படத்திற்கு நல்ல விளம்பரமும் அதைச் சரியான முறையில் கொண்டு சென்ற விதமுமே படத்தைப் பெரிய வெற்றிப் படமாக்கி இருக்கிறது என்றால் மிகையில்லை.

காக்கா முட்டை

சென்னை சேரிப் பகுதியைச் சார்ந்த இரு சிறுவர்கள் விளம்பரத்தில் பார்த்த 300₹ “பீட்சா”வை சாப்பிட விரும்பி அந்தப் பணத்தைச் சேர்க்க இவர்கள் எடுக்கும் முயற்சிகளும் அதன் தொடர்பான சம்பவங்களுமே படம்.

உண்மையாகவே  ஒரு “பீட்சா” தான் கதையே!

நம் ஒவ்வொருவருக்கும் நம் தகுதிக்கேற்ப / அதையும் தாண்டி ஒவ்வொரு ஆசை.

எனக்கு அமெரிக்கா ஒரு முறை செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். இந்தப் பசங்களுக்கு “பீட்சா” சாப்பிட வேண்டும் என்பது ஆசை 🙂 .

ரயில் பாதைகளில் கிடைக்கும் கரித்துண்டுகளை விற்று அதன் மூலம் தினமும் 5₹ / 10₹ சம்பாதிப்பவர்கள்.

இந்தப் பணத்தின் மூலம் எப்படி 300₹ சேர்க்கிறார்கள், அதன் பிறகு அதை வைத்து அவர்கள் விருப்பம் நிறைவேறியதா என்பதைக் கலகலப்பாகக் கொண்டு சென்று இருக்கிறார்கள்.

படத்தின் பெயர்க் காரணம்

அண்ணன் தம்பி இருவரும் காக்கா முட்டையைச் சாப்பிடுவதால் இவர்கள் இருவர் பெயரே சின்னக் காக்கா முட்டை பெரிய காக்கா முட்டை தான்.

இதைப் பெருமையாகவும் கூறிக் கொள்வார்கள்.

இந்தப் படத்தில் குறிப்பிட வேண்டிய முக்கிய விசயம், பணம் இல்லையென்றாலும் அதைப் பிரச்சனையாக நினைக்காமல், இருக்கும் வசதியுடன் சந்தோசமாக வீட்டை வைத்து இருக்கும் இவர்களின் அம்மா (ஐஸ்வர்யா – ரம்மி) இவர்களின் பாட்டி தான்.

அப்பா சிறையில் இருப்பார்.

புதுமுகங்கள்

இந்தப் பசங்களின் நடிப்பை பாராட்டுவதற்கு முன் எனக்குப் பாராட்ட முக்கிய நபராகத் தோன்றுவது  இவர்களின் பாட்டி தான்.

இந்தப் பாட்டியெல்லாம் இத்தனை நாள் எங்கே இருந்தாங்க..! எனக்கு நம்ம ஆளுங்க குறிப்பிட்ட சிலரையே தொடர்ந்து நடிக்க வைத்துச் சலிப்பாக்குகிறார்கள் என்று தோன்றுகிறது.

இது போலப் புது முகங்களைப் பார்க்கும் போது நமக்கும் உற்சாகமாக இருக்கிறது.

தாத்தா பாட்டியின் அன்பே கிடைக்காமல் வளர்ந்த எனக்கெல்லாம் இந்தப் பாட்டி தெய்வம் மாதிரி தெரிகிறார். இவரின் கண்களே கருணை / அன்பு பொங்குவதாக இருக்கிறது.

இவர் இந்தப் பசங்களுக்காக வாஞ்சையாகப் பேசும் போதும் “பீட்சா” படத்தைப் பார்த்து தானே “பீட்சா” தயாரிப்பதும்! என்று கலக்கி இருக்கிறார்.

தான் சாப்பாடு சாப்பிட்டு குடும்பத்துக்குப் பாரமாக இருப்பதாக நினைத்து வருத்தப்படும் காட்சிகளிலும் இந்த இரண்டு பசங்க சந்தோசத்தைப் பார்த்து தான் மகிழ்வதும் என்று எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அசத்தி இருக்கிறார்.

இந்தப் படத்தின் ட்ரைலரில் ஒரு நாய்க் குட்டியை வைத்து சில காட்சிகள் இருக்கும் இதனால் நாய் தொடர்பான காட்சிகள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால், அந்த அளவிற்கு இல்லாதது நாய் ரசிகனாக கொஞ்சம் ஏமாற்றம் தான்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா இந்தச் சின்ன வயதில் எப்படி இரு பசங்களுக்குத் தாயாக நடிக்கச் சம்மதித்தார் என்று ஆச்சர்யமாக இருந்தது. படத்திலும் ஒருத்தர் இவர் பையனை உன்னோட தம்பியா என்ற கேட்டு (வேறு மாதிரி) கலாயிப்பார்.

இவர் பேசும் சென்னைத் தமிழ் நன்றாகப் பொருந்தி இருக்கிறது ஆனால், இவர் பேசும் ஆங்கில வார்த்தைகளின் தெளிவு தான் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.

மற்றபடி ஆர்ப்பாட்டமில்லாத அழகான நடிப்பு. குறிப்பாகப் பசங்களை அடிக்காமல் அதிர்ந்து பேசாமல் அமைதியாக நடந்து கொண்டு இருக்கிறார்.

இந்தப் பசங்க நடிப்பைப் பற்றித் தனியாகக் குறிப்பிட வேண்டியதில்லை. ஏற்கனவே நிறையப் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

அண்ணனும் தம்பியும் பட்டாசாக நடித்து இருக்கிறார்கள். பணம் இல்லையென்றாலும் கீழிறங்கிப் போகாமலும் திருடாமலும் இருக்க நினைப்பது ரசிக்க வைத்தது.

இவனுக இரண்டு பேரும் இறுதியில் “பீட்சா” சாப்பிட்ட பிறகு கூறும் வசனத்திற்குப் பலத்த சிரிப்பலை.

பீட்சா வாங்கப் போய் அங்கே அடி வாங்க, அதை வைத்து ஊடகங்கள், அரசியல்வாதிகள், ரவுடிகள்!, காவல்துறை எப்படியெல்லாம் சம்பாதிக்க நினைக்கின்றன என்பதையும் வாரி இருக்கிறார்கள். உண்மையும் கூட!

சிம்பு

கவுரவத் தோற்றத்தில் சிம்பு வந்து சென்றார். படத்திலும் இவரைக் கலாயித்தது வருத்தமாக இருந்தது.

சிம்புவின் நிலைக்கு அவர் தான் காரணம் என்றாலும் சமீபமாகச் சமூகத்தளங்களில் அனைவரும் அவர் படம் வராததை வைத்து கிண்டலடிப்பதால் அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

இறுதியிலும் ஒரு காட்சியில் வந்து தவறு என்றால் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகக் கூறிய போது பார்க்கப் பாவமாக இருந்தது.

தனுஷ் தன் நண்பர் என்ற வகையில் சிம்பு நடித்துக் கொடுத்து இருக்கிறார். இதற்காக அவருக்குச் சிறப்பாகக் காட்சி வைத்து இருந்து இருக்கலாம்.

ஒளிப்பதிவு & இசை

படத்தின் ஒளிப்பதிவை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஏனென்றால் படம் முழுக்கச் சேரிப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துமே இயல்பான இடங்கள்.

செட்டிங்ஸ் இருப்பதாக எங்குமே தோன்றவில்லை எனவே, ஒளிப்பதிவு படத்தின் இயல்புத் தன்மைக்கு மிகப்பெரிய பலம்.

செட்டிங்ஸ் போட்டு எடுத்தாலே படத்தின் நம்பகத் தன்மை போய் விடும். இதில் வரும் ஒவ்வொரு இடங்களும் அப்படியே வருவதால் என்னை ரொம்பக் கவர்ந்தது.

இந்தப் பகுதிகளில் எப்படி யாரும் அறியாமல் படப்பிடிப்பை நடத்தினார்கள் என்று வியப்பாக உள்ளது.

படத்தின் இசை பற்றிக் கூற என்னிடம் ஒன்றுமில்லை.

பின்னணி இசை குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவில் எனக்கு எந்த அதிர்வையும் தரவில்லை ஆனால், எந்த உறுத்தலும் இல்லையென்பதையும் குறிப்பிட வேண்டும்.

வரும் பாடல்களும் மாண்டேஜ் பாடல்கள் என்பதால் கதையோட இயல்புத்தன்மைக்கு உதவி இருக்கிறது.

இயக்குநர் மணிகண்டன்

தனது முதல் படத்திலேயே உலகத் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.

இவர் நன்றி கூற வேண்டியது கடமைப்பட்டு இருப்பது தனக்கு வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர்களான தனுஷ் மற்றும் வெற்றி மாறனுக்குத் தான்.

சர்வதேச விருதுகள் 

படத்தை முறையாகக் கொண்டு சென்று விருதுகளைப் பெற வைத்து பின்னர் மக்களிடையே கொண்டு வந்து இருக்கிறார்கள்.

பொதுவாக ஆஸ்கார் விருது பெறும் படங்களை விருது பெற்ற பிறகு பார்ப்பவர்கள் அதிகம் இருப்பார்கள்.

அது போல இந்தப் படத்தின் விருதுகளும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன.

படம் வெளியாகும் முன்பே படத்திற்கு லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்ததாகத் தனுஷ் கூறி இருந்தார். இதன் பிறகு வரும் வசூல் கூடுதல் லாபம் தான்.

இரண்டு நாட்களில் இரண்டு கோடியை வசூலித்து இருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் படத்தில் சிறு கதாப்பாத்திரங்களாகக் குறிப்பிடும் படி பலர் வருகிறார்கள்.

“புதுப்பேட்டை” படத்தில் தனுஷ் தாதா ஆகி பணம் வசூல் செய்யும் போது ஒருத்தர்.. “இவர் கேட்பாராம் நாங்க உடனே தூக்கிக் கொடுத்துடனுமாம்” என்று கூறி நக்கலடிப்பவர் இதில் MLA வாக வருகிறார் என்று நினைக்கிறேன்.

பொருளாதாரம், ஏகாதிபத்தியம், ஏழைகள், ஏழை பணக்கார ஏற்றத் தாழ்வுகள், அடக்குமுறைகள் போன்ற வார்த்தைகளை வைத்து எழுதப்போகிறவர்களை நினைத்தால் தான் திகிலாக இருக்கிறது.

படத்தின் மீது எந்த எதிர்பார்ப்பும் வைக்காமல் ஒரு “Feel Good Movie” என்ற அளவில் செல்லுங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்.

குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.

Directed by M. Manikandan
Produced by Dhanush, Vetrimaaran
Written by Manikandan
Starring Vignesh, Ramesh,Iyshwarya Rajesh
Music by G. V. Prakash Kumar
Cinematography Manikandan
Edited by Kishore Te.
Production company Wunderbar Films, Grass Root Film Company
Distributed by Fox Star Studios
Release dates September 5, 2014 (Toronto International Film Festival) June 5, 2015 (Worldwide)
Running time 109 minutes
Country India
Language Tamil

கொசுறு

இந்தப்படத்தைச் சிங்கப்பூர் “Golden Village” திரையரங்கில் பார்த்தேன். திரையரங்கம் நிரம்பி இருந்தது.

எந்தப் பிரபல நடிகரும் இயக்குநரும் இல்லாத படத்திற்கு இவ்வளவு கூட்டம் நீண்ட காலத்திற்குப் பிறகு பார்க்கிறேன்.

விருதுகளின் விளம்பரம் எவ்வளவு முக்கியம் என்பதற்கு இந்தப் படத்திற்கு வந்து இருந்த வெள்ளைக்காரர்கள் தான் சாட்சி.

விருதுகள் இந்தப் படத்திற்கு நல்ல விளம்பரத்தை கொடுத்து இருந்தது இதன் மூலம் புரிகிறது. வரும் நாட்களில் மற்ற மொழி மக்களும் அதிகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ட்விட்டரில் திரை ரசிகர்கள் சண்டை போட்டுத் தமிழர்களுக்கு மற்ற மாநில மக்களிடையே தலைக்குனிவை ஏற்படுத்தும் போது இது போன்ற படங்கள் நமக்கு மதிப்பைக் கூட்டி ஈடு செய்கின்றன.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

9 COMMENTS

  1. இயல்பான, யதார்த்தமான படங்களின் காதலன் நான்.. காக்க முட்டை படத்தோட பேரே வித்தியாசமாக இருக்கிறது… அடுத்த வாரம் படத்தை பார்க்கலாம் என்று எண்ணுகிறேன்.. பதிவை ஒரு முறை படித்து விட்டு, மீண்டும் ஒரு முறை படிக்க தானாகவே தோன்றுகிறது.. ரொம்ப அழகா, தெளிவா, நேர்த்திய எழுதி இருக்கீங்க!!! பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. நண்பா கிரி
    நம் நாட்டில் எல்லா மக்களும் என்று பொருளாதார நிறைவு பெறுவார்களோ என்ற என்னுடைய ஏக்கம் அந்த சிறுவர்களின் கண்களில் தெரிகிறது…..என்னையும் அறியாமல் கண்ணீரை வர வழித்து விட்டது….

  3. படத்தில் சிம்புவை கலாய்க்கும் காட்சிகள் எதுவுமே இல்லையே. சிம்பு வரும் காட்சிகள் எல்லாமே நன்றாக தான் இருந்தது. எனக்கு பிடித்திருந்தது. கண்ணா லட்டு தின்ன ஆசையா விலும் சிம்புவின் part நன்றாக இருக்கும். சமூக தளங்களில் கிண்டலடிக்க படுவது சிம்பு மட்டுமல்ல. அதனால் அது பற்றி எதுவும் தோன்றவில்லை.

  4. தமிழில் யதார்த்தமான நடிப்புள்ள முழு நீள படம் வருவதே அறிதாக உள்ளதால் இந்த படத்திற்கான வெற்றிக்கு முக்கியமான மற்றொரு காரணம்….. இதன் வெற்றி இது போல் பல படங்கள் வர தூண்டும் என்று நம்புவோம்….

  5. கண்டிப்பா பாத்துடுறேன் தல
    movie review கு நன்றி

    – அருண் கோவிந்தன்

  6. நன்றாக இருக்கிறது ‘காக்கா முட்டை’. முதல் நாள் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. படத்தைப் பற்றிய உங்கள் பார்வை நன்று..

  7. எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது கிரி படம் பார்த்த பின் ஒரு அரை மணி நேரம் ஒரு சந்தோச மன நிலையில் இருந்தேன்

  8. ///பொருளாதாரம், ஏகாதிபத்தியம், ஏழைகள், ஏழை பணக்கார ஏற்றத் தாழ்வுகள், அடக்குமுறைகள் போன்ற வார்த்தைகளை வைத்து///

    அய்யோ அண்ணா திரும்புன பக்கமெல்லாம் இத வச்சியே ஒரு கூட்டம் நமக்கு புரியாத வகையில இத பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறது… கொஞ்சம் புரியிற மாதிரி எழுதுங்கள் நண்பர்களே

    காக்கா முட்டை நல்ல படம் ஆனால் அதன் ஆயுசை சந்தானத்தின் இனிமே இப்படிதான் படம் நேற்றே முடித்துவிட்டது. நேற்று தான் நான் இந்த படத்தை பார்த்தேன் நல்ல கூட்டம். இருந்தும் ஏன் இப்படி நல்லா ஓடும் படத்தை கூட வலுக்கட்டாயமாக மாற்றுகிறார்கள் என தெரியவில்லை…

    சிம்பு வை அந்த கடைசி காட்சியில் மட்டும் லைட்டா ஓட்டி இருப்பார்கள் மற்றபடி அவர் தான் இந்த படத்துக்கு ஒரு திருப்பு முனையே… அவர் இல்லனா இந்த படத்தின் அடித்தலமே சும்மா தான்

    கடைசி காட்சியில் ஒரு vip க்கு கொடுக்கும் மரியாதைய கொடுத்து அந்த இரு சிறுவர்களை அழைத்துவரும் சீன் இது வரை எந்த மாஸ் ஹீரோ க்களுக்கும் அமையாத அருமையான மாஸ் சீன் .. அரங்கில் இருந்து அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்….. ஆனால் இது மாதிரியான முக்கியமான காட்சிக்கு கூட சுமாரான பின்னணி இசை தான் கொஞ்சம் ஏமாற்றியது

  9. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @யாசின் பார்த்தாச்சா?

    @ஸ்ரீகாந்த் கண்ணீரை வரவழைக்கும் படி எதுவுமில்லையே…!

    @Guest ரைட்டு (உங்கள் பெயரிலேயே பின்னூட்டம் இடலாமே!)

    @கார்த்தி “காக்கா முட்டை நல்ல படம் ஆனால் அதன் ஆயுசை சந்தானத்தின் இனிமே இப்படிதான் படம் நேற்றே முடித்துவிட்டது”

    சரியா சொன்னே கார்த்தி.. நான் ஊரில் பார்க்க சென்று இருந்த போதும் இதே பிரச்சனை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!