குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலைச்சொல் கேளாதோர்

46
Kids Art குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலைச்சொல் கேளாதோர்

குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலைச்சொல் கேளாதோர் என்பதைப் பார்ப்போம். Image Credit

குழந்தைகள் என்றால் ரொம்ப பிரியம், அக்கா பொண்ணு பசங்களும் சரி, என் உறவினர்கள் நண்பர்களின் குழந்தைகளும் சரி என்னுடன் ரொம்ப பிரியமாக இருப்பார்கள்.

அது ஏன் என்று எனக்கு இன்று வரை புரியவில்லை..ஒருவேளை என் நகைச்சுவையான பேச்சுகள் நடவடிக்கைகள் அவர்களைக் கவர்ந்ததோ என்னவோ..!

என் மனைவி கருத்தரித்த போது வழக்கமான கணவனைப் போல நானும் மகிழ்ச்சியடைந்தேன், குழந்தை பிறந்த போது நான் ஊரில் இல்லை சிங்கையில் இருந்தேன்.

தனிமை

அப்போது நான் ஊரில் இல்லையே என்று வருத்தம் இருந்தாலும் பெரிதாகப் பாதிக்கவில்லை, காரணம் நான் குழந்தைகளிடம் அதிகம் நேரம் செலவழித்ததில்லை அல்லது அதற்கான வாய்ப்பு அமையவில்லை.

பெரும்பான்மையான நாட்களை ஹாஸ்டல் மற்றும் வெளி ஊரிலே கழித்து விட்டேன்.

ஊருக்குச் சென்று அவனை பார்த்த போது அதுவும் அவனைக் கையில் எடுத்த போது மிகவும் சந்தோசம் அடைந்தேன், அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

நண்பர் அனுபவம்

அதன் பிறகு திரும்பச் சிங்கை வந்த பிறகு அவன் நினைப்பு இருந்தாலும் அந்தப் பிரிவு என்னைப் பாதிக்கவில்லை.

அப்போது நண்பர் லோகன் தன்னுடைய பையனை அழைத்து வரச் சென்னை செல்வதாகக் கூறினார்.

ஏன் என்று கேட்டேன்..காரணம் அப்போது தான் சென்று வந்து இருந்தார். பையன் இல்லாமல் ரொம்ப போர் அடிக்குதுங்க என்று கூறுவார்.

எனக்கு ஒன்றும் அப்படி தெரியவில்லையே என்று கூறினேன்.. நீங்க இன்னும் உங்க பையன் கூட இருக்கவில்லை அதனால் அப்படி கூறுகிறீர்கள், கொஞ்ச நாள் இருந்து பாருங்க அப்பத் தெரியும் என்றார்.

அப்படி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை என்று கூறினேன், அதன் பிறகு அதை மறந்து விட்டேன்.

காரணம் 7 வகுப்பிலிருந்து ஹாஸ்டலில் இருந்தேன் பள்ளி படிப்பு முடிந்து சென்னை வந்து 12 வருடம் தனியாக நண்பர்களுடன் இருந்தேன்.

எனவே, குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருப்பது எனக்குப் புதிய விஷயம் இல்லை.

பிறகு பையனுக்கு 7 மாதம் ஆகிய பிறகு சரி சிங்கை அழைத்து வரலாம் என்று ஊருக்குச் சென்று என் மனைவியையும் என் பையனையும் அழைத்து வந்தேன்.

குழல் இனிது யாழ் இனிது

உண்மையா கூறுகிறேன் என்னோட வாழ்க்கையில் அவனுடன் இருந்த அந்த ஆறு மாதம் என்னால் மறக்கவே முடியாதது (தற்போது ஊரில் உள்ளான் அடுத்த மாதம் வந்து விடுவான்).

நண்பர் லோகன் கூறிய அந்த வார்த்தைகளை அப்போது தான் சரியாக உணர முடிந்தது.

பொதுவாக வீட்டில் நான் எந்த வேலையும் செய்யமாட்டேன் அல்லது செய்ய அனுமதிக்க மாட்டார்கள், அதே போலக் குழந்தையைப் பார்த்துக் கொள்வது என்றாலும் தெறித்து ஓடி விடுவேன்.

ஆனால், இவன் வந்த பிறகு நானே கவனம் எடுத்து இவனுக்காக வேலைகள் செய்த போது எனக்கேவியப்பு. என் மனைவி மற்றும் அம்மாவிற்கு அதை விட வியப்பு.

அலுவலகம் செல்லும் போதும் சென்று வரும் போதும் சிரிப்பு முகத்தால் வரவேற்கும் போது மனதில் எத்தனை கவலை பிரச்சனை யோசனைகள் இருந்தாலும் அனைத்தும் ஒரு நொடியில் போய் விடும் என்று தெரிந்து கொண்டது அந்தச் சமயத்தில் தான்.

சொல்லப்போனால் இப்ப என்ன செய்து கொண்டு இருப்பான் என்று யோசித்துக்கொண்டே தான் வீட்டிற்க்கே செல்வேன்.

கள்ளம் இல்லாத உள்ளம்

தவறி கீழே விழுந்து அழுவதால், சமாதானப்படுத்தியவுடன் அடுத்த நொடி இதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை மறந்து உடனே சிரிப்பதை பார்க்கும் போது கள்ளம் இல்லாத உள்ளம் என்பது இது தான் என்று நம்மை உணர செய்வது குழந்தை உள்ளம்.

சிங்கையில் பொதுவாக (நம்ம ஊரில் கூட) அபார்ட்மென்ட்டில் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் (சீனர்கள், மலாய்) அதிகம் தொடர்பு கொள்ள மாட்டார்கள், வழியில் பார்த்தாலும் ஒரு சிலர் புன்னகை கூடச் செய்யமாட்டார்கள், ஒரு சிலர் விதிவிலக்கு.

விலகியவர்கள் நெருங்கினார்கள்

இவன் வந்த பிறகு என்னிடம் இத்தனை வருடத்தில் பேசாதவர்கள் கூட இவனை பார்க்க வருகிறார்கள், இப்ப நான் கிரி போய் வினய் அப்பாவாகி விட்டேன் 🙂 .

எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு தமிழ் குடும்பம் உள்ளது (இங்கே குடியுரிமை பெற்று இருக்கிறார்கள்), அவர்கள் அனைவருமே பெரியவர்கள் குழந்தைகள் யாரும் இல்லை.

எனவே, அவர்கள் அனைவருக்கும் செல்லப்பிள்ளை இவன் தான், எங்களை விட அதிக பாசம் வைத்துள்ளார்கள்.

இங்கே சீனர்கள் பொதுவாக அவர்கள் குழந்தைகளை மற்றவர்கள் தொடுவதையோ அல்லது எடுத்துக்கொள்வதையோ விரும்புவதில்லை, எனவே இவர்கள் இவ்வளவு பாசமாக இருப்பதில் வியப்பு இல்லை.

என்னை விட இவர்கள் எப்போது வருவான் என்று ரொம்ப ஆர்வமாக உள்ளார்கள்.

பாசமாக இருப்பானா?

என் மீது மற்ற குழந்தைகள் அன்பு வைத்து இருந்தாலும் என் பையன் எப்படி பழகுவான் என்று சந்தேகமாகவே இருந்தது..சில நேரத்தில் கவலையாகவும் இருந்தது.

இது குறித்து என் மனைவியிடம் கூறி (புலம்பி) அவரை ஒரு வழி ஆக்கி விடுவேன்.

உங்க இம்சையே தாங்க முடியல….அதெல்லாம் உங்க கூட நல்லா பழகுவான் என்று கூறினாலும் எனக்குச் சமாதானமாகவில்லை.

சிங்கை வந்த இரண்டு வாரத்தில் என்னுடன் நன்கு பழகி விட்டான், நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

குழந்தையை வைத்துக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை என்பது குழந்தை பெற்றவர்களுக்கு நன்கு தெரியும்.

அலுவலகத்தில் ப்ரொடக்சன் சர்வர் டவுன் ஆனா கூட பார்த்து விடலாம் ஒரு குழந்தையைச் சமாளிப்பது என்பது அவ்வளவு எளிதில்லை.

அங்கே இங்கே நகர முடியாது, கொஞ்சம் ஏமாந்தாலும் எதையாவது உடைத்து விடுவார்கள், மின்சார வயரை இழுத்து விடுவார்கள், செருப்பு பக்கம் போய் விடுவார்கள் 🙂 .

ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

கடினமான வேலையாக இருந்தாலும், ரசித்து உண்மையாகச் செய்தால் விருப்பமான பணியாக மாற்றி விடலாம் என்பதற்கு குழந்தை வளர்ப்பே ஒரு சிறந்த உதாரணம்.

பட்டப்பெயர்

இதில் என்னைப் போன்றவர்களைவிட பெண்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து இருப்பார்கள். நான் அவனுக்கு ஏகப்பட்ட பட்டப்பெயர் வைத்து இருக்கேன் 🙂 .

என் மனைவி ஏங்க! சும்மாவே இருக்க மாட்டீங்களா! அவன் பெரியவன் ஆனதும் உங்களைக் கிண்டல் செய்யப்போகிறான் பாருங்க! என்று கூறுவார் 🙂 .

அம்மா எந்தக் குழந்தையை எங்கே பார்த்தாலும் அது பற்றியே பேசிக்கொண்டு இருப்பார்கள், அந்தக் குழந்தை அப்படி இருந்தது! இப்படி இருந்தது!! அவர்கள் மாதிரி இருந்தது!!! என்று ஒரு பெரிய புராணமாக இருக்கும்.

அம்மாவைக் கிண்டல் செய்து கொண்டு இருப்பேன் 🙂 .

மாறிய எண்ணங்கள்

தற்போது இவன் கூட இருந்த பிறகு இது வரை இருந்த என் அனைத்து எண்ணங்களும் மாறி விட்டது, தற்போது எந்தக் குழந்தையை எங்கே பார்த்தாலும் எடுத்துக்கொள்ள வேண்டும் போலவே தோன்றுகிறது.

குழந்தை என்றாலே அழகு தான் அவர்கள் தற்போது என் கண்களுக்கு இன்னும் அழகாகத் தெரிகிறார்கள்.

அதுவும் தற்போது அவன் இல்லாததால் எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் அவன் நினைவாகவே இருக்கும்.

அப்போது நான் நினைப்பது ஒரு குழந்தை பெற்ற நமக்கே இப்படி என்றால் என்னை என் சகோதரிகளைப் பெற்று, பேரன் பேத்தியை வளர்த்த என் அம்மாவின் உணர்வை நானும் ஒரு குழந்தையின் அப்பாவாக ஆன போது தான் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஒரு சில நாள் இடையிலே விழித்துக்கொண்டு தூங்காமல் அடம் பிடிப்பான், அப்போது அவன் தூங்கும் வரை அவனுடன் விளையாடிக் கொண்டு இருப்பது கடுப்பாக இருந்தாலும் ஒரு சுகமான அனுபவம்.

இன்னும் இதைப்போலப் பல விசயங்களை இங்கு எழுத நினைத்தேன் ஆனால், அவன் பெரியவன் ஆகி இதைப் படித்தால் ரொம்ப கூச்சமாக நினைப்பான் என்பதால் எழுதாமல் விடுகிறேன் 😉 .

பேருந்துப் பயணம்

முதன் முதலில் பேருந்தில் அழைத்துச் செல்லலாம் என்று அவனை அழைத்துச் சென்ற போது இரண்டாவது நிறுத்தத்திலேயே அழ ஆரம்பித்து விட்டான்.

என்னடா இது! வம்பா போச்சு!! என்று அடுத்த நிறுத்தத்தில் இறங்கி திரும்ப வீட்டிற்கே வந்து விட்டோம்.

சிங்கையில் ஒரு அதிசயம் இங்குள்ள குழந்தைகள் அழவே மாட்டார்கள். அழுதால் அது கண்டிப்பாக இந்திய குழந்தையாகத்தான் இருக்கும் 🙂 .

பின் அவனை வெளியில் கூட்டி செல்லப் பழக்கப்படுத்தி தற்போது மாலை அலுவலகம் முடிந்து, கொஞ்ச நேரம் வெளியே எடுத்துச் செல்வேன்.

ம்ம்ம் ரொம்ப பெருமையாகத்தான் உள்ளது. நானும் அப்பா 🙂 .

அவன் செய்த சேட்டைகள் அவ்வப்போது ஏதாவது ஒரு சம்பவத்தின் மூலம் நினைவிற்கு வந்து என்னைச் மகிழ்ச்சிப்படுத்திக்கொண்டே இருக்கும்.

அப்பா

நான் காத்துக்கொண்டு இருப்பது அவன் கூறும் அப்பா என்ற ஒரு வார்த்தைக்காகத்தான், எத்தனை பெரியவன் ஆனாலும் எவ்வளவு படித்தாலும் அவனை அம்மா அப்பா என்று அழைக்கக் கூறுவேன்.

அம்மா அப்பா என்று கூறுவதில் இருக்கும் ஒரு மன நிறைவு மம்மி டாடி என்று கூறுவதில் இல்லை என்பது என் கருத்து.

தற்போது சிலர் குழந்தை பெற்று கொள்வதை தொல்லையாக நினைக்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் சொல்வது வாழ்க்கையின் முக்கியமான, மகிழ்ச்சியான பகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள் என்பதே அது!

குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலைச்சொல் கேளாதோர் என்பது சரி தான்.

தொடர்புடைய கட்டுரைகள்

குழந்தை வளர்ப்பின் ரகசியங்கள்

குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்கள்

குழந்தைகளை அழைத்துச் செல்லும் முறை தெரியுமா?!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

46 COMMENTS

  1. குட்டிப்பையன் உங்களை பெண்டு நிமிர்ந்த வாழ்த்துக்கள். குழந்தைகள் லூட்டி அத்தனையும் ரசிக்கத்தெரியாதவர்கள் மனிதர்களே இல்லை. அப்படியும் சிலர் இருக்கிறார்கள்.
    குழந்தைகளுக்கு தனி வலைப்பதிவு வைத்திருப்பதை கிண்டல் அடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  2. கிரி,உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள். அருமை. நானும் எனது மகனை பிரிந்து இருந்தேன், காலத்தின் கட்டாயத்தால். இப்போது என்னுடன், மிகவும் மகிழ்ச்சியாய்.சுட்டிக்கு என் வாழ்த்துக்கள்.பிரபாகர்.

  3. ஜி, அனேகமா இதுதான் நீங்க எழுதின பெரிய பதிவுனு நினைக்கறேன். சிறப்பானதும் கூட.

    வினய்-க்கு என் அன்பு முத்தங்கள்.

  4. ஜூனியர் அறிமுகம் நல்லா இருக்கு. அவரு விமானத்தில் டரியலாக்கினத எழுதறதா சொன்னது பெண்டிங் கிரி. எப்போ.அவருக்கு என் வாழ்த்துகள்.

  5. I Love Kids!//என்னுடைய எழுத்துக்களின் ரசிகர்..[எனக்கு ஒரு ரசிகர் ;-)]:) 🙂 🙂

  6. குழந்தைகள் எப்போதும் கொண்டாட கூடியவர்கள் …

    கிரி நீங்க நல்ல அப்பா அதை விட நல்ல கணவர்.

    //இரவில் இவன் பாலுக்காக எழும் போது என் மனைவிக்கு உதவுவது எனக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று.//

    இதே நெறைய பேருக்கு பிரச்சனை ஆகிடும். நல்ல பதிவு கிரி,

    உங்களுக்கும், வினய் க்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள். 🙂

  7. பதிவு அருமை. //குட்டிப்பையன் உங்களை பெண்டு நிமிர்ந்த வாழ்த்துக்கள்//:))

  8. பாசகி:
    //ஜி, அனேகமா இதுதான் நீங்க எழுதின பெரிய பதிவுனு நினைக்கறேன்.//

    இன்னும் பெரிதாக நீண்டாலும் வாசிக்கலாம் போலிருக்கிறது. வெகு அருமை.

    //என் அம்மாவின் உணர்வை நானும் ஒரு குழந்தையின் அப்பாவாக ஆன போது தான் உணர்ந்து கொள்ள முடிந்தது.//

    இது அத்தனை பேர் வாழ்விலும் நடக்கிறது:)!

    //கோபத்திற்கு பதில் சிரிப்பு தான் வரும்,//

    நிஜமே:))!

    பஸ்ஸில் முதன்முறை அழுதது நீங்கள் அடிக்கடி வெளியே அழைத்து சென்று பழக்கியிராததால்.

    தொடரட்டும் இனிய அனுபவங்கள். கூடவே வினய் அப்டேட்ஸும். ரசித்துப் படிக்க காத்திருக்கிறோம் நாங்கள். எழுத வைத்த ரசிகர் அருணுக்கும் நன்றி:)!

  9. வளர வளர உங்களுக்கு பெண்டு நிமிரப்போவது உறுதி!

    ஆனாலும் அதிலும் ஒரு சுகம் உண்டு!
    குழந்தைகள் தம்மை தாமே பராமரித்து கொள்ள ஐந்து வயதாவது ஆகும்!

  10. கிரி…

    மிக நல்ல பதிவு….

    நானும் என் பிள்ளையை பிரிந்துதான் துபாயில் இருக்கிறேன்… இப்போ அவன் நினைப்பு வந்து விட்டது… தீபாவளிக்கு என்னை அவன் அழைத்தான்… ஊர் சென்று திரும்பி வந்து 5 மாதமே ஆனதால், செல்ல முடியவில்லை…

    அதுவும், தீபாவளி பர்சேஸுக்காக போனபோது, டாடி, உனக்காக நானே ஒரு சட்டை செலக்ட் பண்ணி இருக்கேன் என்று ஃபோனில் சொன்னபோது, மகிழ்ச்சியாகவும், அவனை பிரிந்த வருத்தமும் மாறி மாறி வந்தது…

    இப்போது, என் ஜூனியரின் படிப்பை மட்டுமே முன்னிட்டு, இங்கே கூட்டி வர இயலவில்லை… கூடவே, மந்தமான மார்க்கெட்… இருப்பினும், 6 மாதத்திற்கு ஒரு முறை போய், அவனை பார்த்து விட்டு வருகிறேன்…

    பதிவின் கடைசியில் இருக்கும் "தலைவர்" பாடல் கலக்கல்….

  11. தந்தை மகற்காற்றும் உதவி இதுதான்,கிரி.உங்களுக்கும்,உங்கள் மகனுக்கும் வாழ்த்துகள்.

  12. romba romba nandri giri!!!

    Valakapadi kalakkal pathivu thalaiva.. kuzhanthai photo romba cute marakama thishtee suthi poda solunga..

    unga yeluthoda rasigan nu solurathuku perumaya iruku giri yenna oru pathivu yeluthum pothu antha character neenga rasichu yeluthereenga athu than unga periya plus nu naan ninaikuren

    pathivu kadaisi la irukura thalaivar pattu arumaii… appadiye moondru mugam la ullai pattu – "naan sencha kurumbu undachu karumbu" solluveenganu ninachenn:)

    Thanks,
    Arun

  13. கிரி ,பல இடங்களில் நானே சொல்வது போல இருந்தது .அருமையான பதிவு.
    //தற்போது ஒரு சிலர் குழந்தை பெற்று கொள்வதை சிரமமாக கருதுகிறார்கள் அல்லது தொல்லையாக நினைக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சொல்வது ஒன்றே ஒன்று தான்.. வாழ்க்கையின் முக்கியமான சந்தோசமான பகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள் என்பதே அது!//

    மிகச்சரி!

  14. இது மாதிரி பதிவுகளை வழக்கமாக படிப்பது அரிது. காரணம் நாம் அறிவோம். மிக்க நன்றி கிரி.

    நான் ஒரு புத்தகம் முழுமையாக படித்தாலும், அடிகோடிட்டு காட்டும் வரிகள் மிக சிலதகாவே இருக்கும். ஆனால் இந்த பதிவு முழுவதயும் அடிகோடிட்டு காட்ட விரும்பிகிறேன்.

    "Best wishes for him"

  15. //இப்ப நான் கிரி போய் வினய் அப்பாவாகி விட்டேன் //யதார்த்தம். அனுபவித்தவர்களுக்கு தான் அதன் சுகம் தெரியும்.., உங்கள் குழந்தைக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும்

  16. //இப்ப நான் கிரி போய் வினய் அப்பாவாகி விட்டேன் :-)//

    சூப்பரப்போவ்..

    //நான் காத்துக்கொண்டு இருப்பது அவன் கூறும் அப்பா என்ற ஒரு வார்த்தைக்காகத்தான், எத்தனை பெரியவன் ஆனாலும் எவ்வளவு படித்தாலும் அவனை அம்மா அப்பா என்று அழைக்க கூறுவேன்…//

    சின்னப்பிள்ளையில் அம்மா அப்பா என்று கூப்பிட்டு பழகி விட்டால் எவ்வளவு பெரியவரானாலும் அப்படித்தான் கூப்பிடுவான் வினய் ஜி..

    //பெரியவன் ஆகி இதை படித்தால் ரொம்ப கூச்சமாக நினைப்பான் என்பதால் எழுதாமல் விடுகிறேன் //

    இத படிச்சு சந்தோசம் தான் படுவார்…

    //இந்த இடுகையை என் தளத்தை தொடர்ந்து படித்து வரும் அருண் என்பவருக்காக எழுதி உள்ளேன். //

    அருண் ஒருவருக்காக, எல்லோர்க்கும் பெய்த அன்பு மழை…

    வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தார்க்கு…

    கோபி ஜி –

    //அதுவும், தீபாவளி பர்சேஸுக்காக போனபோது, டாடி, உனக்காக நானே ஒரு சட்டை செலக்ட் பண்ணி இருக்கேன் என்று ஃபோனில் சொன்னபோது, மகிழ்ச்சியாகவும், அவனை பிரிந்த வருத்தமும் மாறி மாறி வந்தது…//

    நெகிழ்ந்தேன்.. சரி விடுங்க பொங்கலுக்கு நீங்க ஒரு ஸ்பெஷல் அவருக்கு எடுத்துட்டுப் போய் சேர்ந்து போட்டுக்கலாம்…

  17. //தற்போது ஒரு சிலர் குழந்தை பெற்று கொள்வதை சிரமமாக கருதுகிறார்கள் அல்லது தொல்லையாக நினைக்கிறார்கள்.// இன்னும் இந்தியர்கள் இந்த மனநிலைக்கு வரவில்லை என்றே நினைக்கிறேன். மிக அருமையானப் பதிவு கிரி. படிக்கிறப்பவே ஒரு ஒரு வரியையும் அனுபவிச்சு, ரசிச்சு எழுதியிருக்கீங்கன்னு தெரியுது.

  18. உங்கள் இரசிகர் அருண் அவர்களுக்கும் உங்களுக்கும் இல்லத்தினருக்கும் வாழ்த்துகள்.

  19. அதனையும் உண்மை. என் வாழ்வில் தற்போது அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.

    இப்பொது தான் என் மகன் முட்டி போட்டு நகர ஆரம்பித்து இருக்கிறான். நீங்கள் சொன்ன அதே இடங்கள். செருப்பு விடும் இடம், மின்சார கடத்தி, தொலைகாட்சி மேஜை மற்றும் பல

    சீக்கிரம் பயனை சிங்கை கொண்டு வாங்க. அவனை இத்தருணத்தில் மிகவும் இழகிறீர்கள்.

  20. பிரமிக்க வைத்த எழுத்து நடை. எத்தனை அழகாக ரசித்து எழுதி இருக்கிறீர்கள். விரைவில் தங்களுடன் வினய் இணைந்திட வாழ்த்துகள்.

    அருமை கிரி அவர்களே.

    வினய்க்கு தினமும் இரவு, கதையும் சொல்லுங்கள்

    ரஜினி ரசிகர் என்பதால் தானோ குழந்தைகள் உங்கள் மீது அதிகம் பிரியம் கொண்டு இருக்கின்றனரோ எனச் சொல்லவும் கூடுமோ!

  21. //☀நான் ஆதவன்☀ said…
    பதிவு அருமை கிரி(அங்கிள்) :)//

    பதிவு அருமை கிரி அங்கிள். 🙂
    (இதுக்கு ரிப்பீட்டுன்ன்னே போட்டுக்கலாம்னு சொல்லாத ஆதவா)

    நாம போக வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கு.

    ராஜ் ஏன் சிரிக்கிறார்னு தெரியல. 🙂

  22. //ராஜ் ஏன் சிரிக்கிறார்னு தெரியல. :)//

    அது வேர ஒண்ணும் இல்லேங்க பெஸ்கி, இந்த குழலையும் யாழையும் கேட்காதவங்கள பத்தி நினைச்சு பார்த்தேன் சிரிப்பு வந்துச்சு !!!

  23. //கையில் எடுத்த போது மிகவும் சந்தோசம் அடைந்தேன், அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.//

    சூப்பர் கிரி, எனக்கும் இது புரியும்,

    ஒரு விசையம் சொல்லவா, என் குழந்தையை சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தான் பிறந்தது மூன்று மாதம் கழித்து முதன் முதலாய் பார்த்து தூக்கினேன், மறக்க முடியாத ஒன்று.

  24. //தற்போது ஒரு சிலர் குழந்தை பெற்று கொள்வதை சிரமமாக கருதுகிறார்கள் அல்லது தொல்லையாக நினைக்கிறார்கள்.//

    இன்னும் இந்தியர்கள் இந்த மனநிலைக்கு வரவில்லை என்றே நினைக்கிறேன்.

    மிக அருமையானப் பதிவு கிரி. படிக்கிறப்பவே ஒரு ஒரு வரியையும் அனுபவிச்சு, ரசிச்சு எழுதியிருக்கீங்கன்னு தெரியுது.

  25. //என் அக்கா பொண்ணு பசங்களும் சரி என் உறவினர்கள் நண்பர்களின் குழந்தைகளும் சரி என்னுடன் ரொம்ப பிரியமாக இருப்பார்கள். அது ஏன் என்று எனக்கு இன்று வரை புரியவில்லை //

    இதில் புரியிறதுக்கு என்ன இருக்கு??குழந்தைங்களுக்கு குழந்தைங்களைத்தான் பிடிக்கும் 🙂

    அப்புறம் என்னோட சின்ன அண்ணனுக்கு என் தீபாவளி வாழ்த்துகளை சொல்லிடுங்க 🙂

  26. அருமை…

    உலகில் இதைவிட இனிமை என்று எதை யார் சொன்னாலும் அது தவறான ஒன்றாகவே இருக்கும்.

    பெறாதவர்களிடமும் தாய்மையைச் சுரக்க வைக்கும் இறைவனின் இனிய படைப்புய்யா மழலை என்பது…

    சீனாக்காரன், மலாய்க்காரன், சிங்கப்பூர்க்காரன் யாரா இருந்தாலும் அடிச்சி வீழ்த்திடும்- அந்த மந்திரப் புன்னகை!

    வினய்க்கும் வினய் அப்பாவுக்கும் என் அன்பு!

    -வினோ
    http://www.envazhi.com

  27. வினய்-யைச் சுற்றி (கிரி)வலம் வருவது புரிகிறது. அனுபவிங்க….குழந்தை அப்பா-னு கூப்பிடுவது மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும். அவர்களின் மழலைப் பேச்சுக்கள் இன்னும் உங்கள் சந்தோசம் கூட்டும்….
    அருமையான பதிவு…..

  28. க்ரேட் கிரி.. 🙂 சின்ன அம்மிணி அக்காவை வழிமொழிஞ்சிக்கிறேன். 🙂

  29. /சிங்கையில் ஒரு அதிசயம் இங்குள்ள குழந்தைகள் அழவே மாட்டார்கள்..அப்படி அழுதால் அது கண்டிப்பாக இந்திய குழந்தையாகத்தான் இருக்கும் :-)/ஜெர்மனிலயும் அப்பிடித்தானாம் பாஸ்!அப்பிடி அழாம பிள்ளை வளர்க்க தனி டெக்னிக் இருக்காம் அத தெரிஞ்சிக்கணும்னா நெறைய செலவாகும்!:))))))))))))))

  30. சூப்பர் பதிவு.. ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்கன்னு புரிஞ்சுக்க முடியுது!

  31. சிறப்பான பதிவு.
    //அம்மா அப்பா என்று கூறுவதில் இருக்கும் ஒரு மன நிறைவு மம்மி டாடி என்று கூறுவதில் இல்லை என்பது என் கருத்து//
    இப்படி நானும் நினைப்பதுண்டு.

    உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.

  32. வேணும் என்பவர்களுக்கு கிடைப்பதில்லை, வேண்டாமென்பவர்களுக்கு சீக்கிரம் கிடைத்து விடுகிறது இதற்கு நானே சாட்சி.

  33. Paravai skip பண்ணியதற்கு மன்னிக்கவும், மீண்டும் முழுவதையும் படித்து மனைவியிடம் படிக்கச் சொன்னேன், அவரும் படித்துவிட்டு, எப்படி மனச்சாட்சி (எப்படியோ உங்க தலைப்பு வந்துடுச்சு) இல்லாமே பொய் சொல்லி இருக்கீங்க, ஊருக்கு போன் பண்ணும் போதுல்லாம் நீ இல்லாமே பயங்கரமா போர் அடிக்குது, நீ இல்லாமே பயங்கரமா போர் அடிக்குது சொல்லிட்டு கிரி கிட்ட பையன் இல்லாமல் ரொம்ப போர் அடிக்குதுங்க என்று சொல்லி இருக்கீங்களே என்று கேட்கிறார்கள் 🙂

  34. //அம்மா அப்பா என்று கூறுவதில் இருக்கும் ஒரு மன நிறைவு மம்மி டாடி என்று கூறுவதில் இல்லை என்பது என் கருத்து//

    என்னண்ணே இது முரண்பாடு!!! குழல் , யாழை விட இனிமையான குழந்தை சொல் மம்மி டாடின்னு சொன்னாலும் பொருந்தும் தானே!!!

  35. //*இன்னும் இதைப்போல பல விசயங்களை இங்கு எழுத நினைத்தேன் ஆனால் அவன் பெரியவன் ஆகி இதை படித்தால் ரொம்ப கூச்சமாக நினைப்பான் என்பதால் எழுதாமல் விடுகிறேன்**/
    இங்க எழுதாட்டி என்ன? தனியாக ஒரு டைரியில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். வளர்ந்த பிறகு வினய் படிக்க கூச்சப்பட்டாலும், உங்களிருவருக்கும் படிக்க நன்றாக இருக்கும். It'll be a good memory to recollect.

  36. கிரி குழந்தை பற்றிய உங்கள் பதிவு அருமை

    வினய்க்கு எனது வாழ்த்துக்கள்

    எனக்கு கூட என் மகனை பற்றி எழுத வேண்டும் போல் ஆசை வருகிறது

  37. கிரி குழந்தை பற்றிய உங்கள் பதிவு அருமை

    வினய்க்கு எனது வாழ்த்துக்கள்

    எனக்கு கூட என் மகனை பற்றி எழுத வேண்டும் போல் ஆசை வருகிறது

  38. என்ன கிரி எனது பின்னுடம் இன்னும் இடம் பெறவில்லை ….

  39. வணக்கம் கிரி அருமையான பதிவு ..எனக்கும் 10 மதத்தில் ஒரு குழந்தை உள்ளது ..நானும் சிங்கையில் தன வசிக்கிறேன் ….இந்த பதிவை என் மனைவியையும் படிக்கச் சொன்னேன் ….நீங்கள் எந்த பகுதியல் வசிக்கிரிர்கள் ?

  40. மன்னிக்கவும் பிரபு உங்க முந்தைய கமெண்ட் ஸ்பாம் ல் போய் இருக்கும் அதனால் கவனிக்காமல் இருந்து இருப்பேன். என்னுடைய தளத்தில் கமெண்ட் மாடரேசன் கிடையாது அதனால் நீங்கள் கமெண்ட் இட்டால் உடனே வெளியாகி விடும்.

    நான் தம்பனீஸ் ல் உள்ளேன். மேலும் தகவல்கள் தேவை என்றால் என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவும். நன்றி

    இன்னொரு பதிவு இது போல எழுத நினைத்துள்ளேன் நேரம் தான் சரியாக அமையவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!