இக்கதை நான் எழுதிய “வீடு வாங்க / கட்டப் போகிறீர்களா?” கட்டுரையின் தொடர்பானது. Image Credit
மந்திரியாரே!
நிதி மந்திரியாகப் பதவி வகித்தவர் வயது மூப்புக் காரணமாகத் தான் பதவி விலகுவதாகவும், புதிய நபரை நிதி மந்திரியாகத் தேர்வு செய்யலாம் என்று அரசரிடம் கூறுகிறார்.
அரசரும் ஏற்றுக்கொண்டு தேர்வுகள் வைத்து மூன்று நபர்களைத் தேர்வு செய்கின்றார். மூவருமே திறமையானவர்களாக இருந்ததால், யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது.
தன்னுடைய குழப்பத்தை நிதி மந்திரியிடம் தெரிவித்ததும், “கவலைப்படாதீர்கள் அரசே! இவர்களில் சிறந்தவரை நாம் தேர்வு செய்யலாம்” என்று பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
தேர்வான மூவரையும் அலுவலகத்துக்கு அடுத்த நாள் வரக்கூறி தகவல் அனுப்பினார்.
அதன்படி வந்தவர்களில் ஒருவரை நிதி மந்திரியாகத் தேர்வு செய்து அரசரிடம் அறிவித்தார்.
அரசருக்கு ரொம்ப வியப்பு!
“எப்படி மந்திரியாரே நீங்கள் சரியான நபரை தேர்வு செய்தீர்கள்” என்று வினவினார்.
“அரசே! நான் மூவரையும் இறுதிக்கட்ட நேர்முகத்துக்கு வரக்கூறினேன். அதற்கு முன் என்னுடைய அலுவலகம் முன்பு சகதியாக இருக்கும் படி பார்த்துக்கொண்டேன்.
வருபவர்கள் காலைக் கழுவ தண்ணீரை ஒரு சொம்பில் தனித்தனியாக வைத்தேன்.
முதலில் வந்தவர் அந்தச் சொம்பில் இருந்த முழுத்தண்ணீரையும் பயன்படுத்திக் காலை சுத்தமாகக் கழுவிக்கொண்டார்.
அடுத்தவர் முழுச் சொம்பு தண்ணீரையும் பயன்படுத்தி காலை சுத்தமாகக் கழுவாமல் வந்தார்.
மூன்றாம் நபர் பாதிச் சொம்பு தண்ணீரை மட்டும் பயன்படுத்தி காலை சுத்தமாகக் கழுவி, தண்ணீரையும் மிச்சப்படுத்தினார்.
இவரே பணத்தையும் அவசியமற்றுச் செலவழிக்காமல், திட்டங்களுக்கும் சரியாகப் பயன்படுத்துவார். எனவே, இவரையே நிதி மந்திரியாகத் தேர்வு செய்தேன்” என்றார்.
மந்திரியின் மதியூகத்தைப் பாராட்டி, பரிசுகள் கொடுத்து அரசர் வழியனுப்பி வைத்தார்.
தண்ணீர் மிக முக்கியமானது
எனவே, தண்ணீராக இருந்தாலும், எந்த ஒரு பயன்பாடாக இருந்தாலும், விரயம் செய்யாமல் சரியான முறையில் பயன்படுத்தப் பழக வேண்டும்.
இக்கோடை மிக மிக மோசமான தண்ணீர் பிரச்னையைக் கொண்டு வரும் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்.
பல இடங்களில் குழாய் தண்ணீரில்லாமல் வாளியில் தான் தண்ணீர் வைத்து இருப்பார்கள்.
எனவே, எடுக்கும் முழுக் குவளைத் தண்ணீரையும் வீணடிக்காமல், தேவையான தண்ணீரை மட்டும் நிதி மந்திரியாகத் தேர்வான நபரைப் போலப் பயன்படுத்துங்கள்.
தண்ணீரின் முக்கியத்துவத்தை உங்கள் குடும்பத்தினருக்கும் உணர்த்துங்கள்.
தொடர்புடைய கட்டுரை
எந்த ஒரு பொருளும் நம்மிடம் இல்லாத போது தான் அதன் அவசியம் தெரியும்.. நான் திருமணமான புதிதில் என் மாமனார் வீட்டில் 24 மணி நேரமும் தெரு குழாயில் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும்.. தொட்டியில் தண்ணீர் வழிந்து சில நேரங்களில் குழாயை அடைக்காமல் விடும் போது தண்ணீர் வீணாக செல்லும்.. நான் பார்க்கும் தருணங்களில் மனைவியிடம் அறிவுறுத்தி கொண்டே இருப்பேன்.. சில நேரங்களில் நான் எவ்வளவு சூடாகி சொன்னாலும், அவங்களுக்கு ரொம்ப எளிதாக இருக்கும்.. நான் பணிபுரியும் இடத்தில் சில நேரங்களில் ஒரு குவளை தண்ணீருக்கே தவித்து இருக்கிறேன்.. இல்லாத போது மட்டுமே அதன் வலி நமக்கு தெரியும்..பகிர்வுக்கு நன்றி கிரி..
இல்லாத போதும் பலருக்கு அருமை தெரிவதில்லை. கொஞ்ச நாளைக்கு அப்புறம் தண்ணீர் கிடைக்க ஆரம்பித்த பிறகு மறுபடி பழையபடி தண்ணீரை வீணடிக்கிறார்கள்.
திருந்துவார்கள் மட்டுமே திருந்துவார்கள், மற்றவர்கள் என்ன கூறினாலும் அதே தான்.