ஊடகத்துறை அசிங்கப்பட யார் காரணம்?

9
ஊடகத்துறை Media

த்திரிகையாளர் சந்திப்பில் தேமுதிக கட்சிப் பொருளாளர் பிரேமலதா அவர்கள் ஒருமுறையில் பேசியதும், மரியாதைக்குறைவாக நடந்துகொண்டதும் சர்ச்சையானது. ஊடகத்துறை சம்பந்தப்பட்டவர்கள் விமர்சித்தார்கள்.

ஊடகத்துறை

ஊடகங்களும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். Image Credit

பிரேமலதா நடந்து கொண்டது தவறான ஒன்று தான், அதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால், ஊடகங்கள் உலக உத்தமர்கள் போலப் பேசிக்கொண்டுள்ளார்கள்.

ஊடகத்துறை ஒரு காலத்தில் மரியாதைக்குரியதாக இருந்தது ஆனால், அம்மரியாதையை இழந்து பல ஆண்டுகள் ஆகி விட்டதை நேர்மையான ஊடகவியலாளர்களே ஏற்றுக்கொள்வார்கள்.

சமூகத்தளங்களில் பிரேமலதா பேசியதுக்கு (அரசியலுக்காக வந்த மீம்கள் தவிர்த்து), கருத்துப்பகுதிகளில் அவர் பேசியத்துக்கு ஆதரவான கருத்தே இருந்தது.

இது குறித்த செய்தித்தளங்களின் கட்டுரையின் கருத்துப் பகுதியில் சென்று பார்த்தால், எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்பது புரியும்.

ஒருமையில் பேசினார் என்ற தவறைத் தவிர, கேள்விகளைத் தைரியமாகக் கையாண்டார்.

நடுநிலையா… அது எங்கே கிடைக்கும்?!

ஊடகத்துறை என்பது நடுநிலையான கருத்தைக் கூறாமல், தங்களுடைய தனிப்பட்ட கருத்தைத் திணிக்கும் துறையாக மாறி விட்டது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியுமா?

ட்விட்டரில் சென்று பாருங்கள்! ஊடகத்துறையினரின் இலட்சணத்தை, எந்த அளவுக்குக் கேவலமாக நடந்து கொள்கிறார்கள் என்று.

ஊடகத்துறையைச் சேர்ந்தவர் என்றால், என்னவென்றாலும் கேட்பார்கள் சம்பந்தப்பட்டவர் கோபப்படாமல் நாகரீகமாகப் பதில் சொல்ல வேண்டுமாம்!

அன்புமணி

அன்புமணி பத்திரிகையாளர் சந்திப்பில் நாகரீகமாகவே தன் கருத்தைப் பதிவு செய்தார்.

அவரின் கொள்கை முடிவுகள், மாறி மாறிக்கூட்டணி வைப்பது எல்லாம் தவறு தான் ஆனால், அதை அவர்கள் கேட்டதுக்குப் பொறுமையாகவும் நாகரீகமாகவுமே பதில் அளித்தார்.

தொடர்ந்து கேள்வி கேட்டு அன்புமணியைக் கோபப்படுத்திய “ஷபீர்” பக்கா திமுக நபர். அவர் ட்விட்டர் கணக்கில் ஒரு தலைப்பட்சமான கருத்துகளே இருக்கும்.

காங்குடன் கூட்டணியே கிடையாது என்று கூறிய திமுக, திரும்ப அவர்களுடன் கூட்டணி வைத்ததை இது போலக் கேள்வி கேட்க முடியுமா?!

அன்புமணி தானாகப் பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து மாட்டிக்கொண்டார்.

தமிழ் பத்திரிகையாளர்!

தமிழகப் பத்திரிகையாளர் என்று பெயர் ஆனால், முழுக்க முழுக்க ஆங்கிலக்கலப்பில், எழுத்துப்பிழையுடன் தவறாக எழுதுவது.

தமிழில் ‘தினமணி’ ‘தமிழ் இந்து’ செய்தித்தாள்கள் தவிர எந்த முன்னணி பத்திரிக்கையாவது ஆங்கிலக்கலப்பு இல்லாமல், எழுத்துப் பிழை இல்லாமல் எழுத முயற்சிக்கிறார்களா?!

செய்தித்தாளில், இணைய செய்தி ஊடகங்களில் உள்ள செய்திகளில் ஆயிரம் பிழைகள். இவர்கள் எல்லாம் எப்படிப் பத்திரிகையாளர்களானார்கள்?

பொதுமக்கள் கற்றுக்கொள்வதே செய்தித்தாள்கள், ஊடகத்துறையினரிடம் இருந்து தான்.

இவர்கள் தங்களுடைய அடிப்படை பொறுப்பை, கடமையைக் கூடச் சரிவரச் செய்வதில்லை ஆனால், கோபம் மட்டும் வருகிறது!

இவர்களுக்கெல்லாம் கோபப்பட என்ன தார்மீக உரிமையுள்ளது?!

தகுதியில்லாதவர் எல்லாம் பத்திரிகையாளர்

பத்திரிகையாளர் என்பதற்கே மரியாதை குறைந்ததுக்குக் காரணம், கேப்டன், பிரேமலதா போன்றவர்கள் பேசியதல்ல, அதற்குப் பத்திரிகையாளர் நடந்து கொள்ளும் முறையே!

ஊடகவியலாளர் சந்திப்பு என்றால், எதோ சந்தையின் உள்ளே நுழைந்ததைப் போலக் காட்டுக்கத்தல், கூச்சல், குழப்பம், ஒவ்வொருவருக்குள்ளும் அடிதடி!

இவ்வளவு பேசும் பத்திரிகையாளர்கள், ஒரே ஒரு அமைதியான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த முடியுமா?! என்று முயற்சியுங்கள்.

இப்பெல்லாம் எவர் வேண்டும் என்றாலும், பத்திரிகையாளர் என்று கூறிவிட்டு என்ன வேண்டும் என்றாலும் கேள்வி கேட்க முடிகிறது.

நமக்கான மரியாதை கிடைப்பது நாம் நடந்து கொள்ளும் முறையிலேயே உள்ளது.

அதைப் புரிந்து கொள்ளாமல் ஊடகத்துறையை அவமதித்து விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பதில் எந்தப் பயனுமில்லை.

இனி கனவிலும் தங்களுக்கான மரியாதையைப் பொதுமக்களிடமும் எதிர்பார்க்க முடியாது. நாளாக இன்னும் மோசமான எண்ணங்களே மக்களுக்கு இருக்கும்.

அபிநந்தன் தென்னிந்தியா என்று மட்டும் கூறியபிறகு அவர் குறித்த அனைத்து விவரங்களையும் சில நிமிடங்களில் TRP க்காக உலகுக்கே தெரிவித்த புண்ணியவான்கள் தான் இவர்கள்.

எதோ இன்னும் ஒரு சில பத்திரிகையாளர்கள் நேர்மையாக இருப்பதால் தான், கொஞ்சமாவது ஊடகத் துறைக்கு மரியாதையுள்ளது. விரைவில் அந்தக் கொஞ்சமும் காணாமல் சென்று விடும்.

ஊடகத்துறையின் இந்த மோசமான நிலைக்குக் காரணம் மற்றவர்கள் அல்ல! முழுக்கப் பத்திரிகையாளர்கள் நடந்து கொள்ளும் முறையே.

தொடர்புடைய கட்டுரை

தமிழ் ஊடகங்களின் தமிழ் அழிப்பு

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

9 COMMENTS

  1. நான்கு மாதங்களாக வாரப் பத்திரிக்கைகள் வாங்குவதை முழுமையாக நிறுத்திவிட்டேன். ஒரு மாதமாக தொலைக்காட்சியையும் நிறுத்தி விட்டேன். குறை சொல்வதை விட புறக்கணிப்பு ஒன்றே நாம் அமைதி பெறுவதற்கான வழி.

  2. After that DMDK interview, even among bloggers in tamil manam website, I am seeing this only one true post. Happy and hats of to you for telling the truth

  3. இதழியல் : எவ்வளவு அழகான வார்த்தை, ஆங்கிலத்தில் (Journalism), சமுதாயத்தில் எவ்வளவு பொறுப்பு கொண்ட துறை இது!!! ஆனால் இங்கு நடப்பது என்ன??? எத்தனை நாடுகளில் ஊடகங்களினால் எத்தனை நல்ல விஷியங்கள் நடந்துள்ளது.. ஆட்சி மாற்றம் கூட ஏற்பட்டுள்ளது.. ஆனால் இங்கு நடப்பது என்ன???? ஒரு நொடியில் நல்லவனை கெட்டவனாகவும், கெட்டவனை நல்லவனாகவும் எளிதாக காட்ட முடியும்… தற்போது தேர்தல் நேரம் வேறு எல்லா ஊடங்கங்களும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும்.. சமுதாயத்திற்கு முக்கியமான செய்திகள் பெட்டி செய்தியாக ஒரு சிறு கட்டத்துக்குள் அடங்கி விடுகிறது.. உப்பு,சப்பு இயலாத செய்திகள் பத்திரிகையின் முதற்பக்கத்தை அலங்கரிக்கிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  4. ஒன்னு இந்தியா தமிழ் தளத்தில் ஒரு வரி படித்தால் அதில் 3 பிழைகள். எழுத்து பிழைகள். குறைந்த சம்பளத்தில் அரைகுறை படிப்பறிவுடன் வேலைக்கு வந்து நமது உயிரை எடுக்கும் எடிட்டர்கள் இவர்கள்.

    உதாரணம் : மொய்ப்பன ஏடு என்பதை பொய் பண ஏடு என எழுதினால் என்ன ஆகும். ரொம்ப கஷ்டமா இருக்கு.

  5. புலனாய்வு பத்திரிகைகள் என்ற பெயரில் இயங்கும் எந்த பத்திரிகையும் புலனாய்வு செய்வதில்லை. நடிகரும் நடிகையும் ரிவீட்டரில் போடும் கீச்சுக்கள்தான் இன்று முக்கிய செய்திகளாகின்றன. எப்போதாவது தமிழ் வார இதழ்களை படிக்கும் எனக்கு படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இந்த பத்திரிகை எந்த கட்சி சார்பான பத்திரிகை என்று உய்த்தறிய முடிகிறது.

    நீங்கள் இதனை நடு நிலையோடு எழுதியிருந்தாலம், ஏதோ எனக்கு முன்னர் ரஜினியை இவர்கள் அவமானப்படுத்தியதற்கு நீங்கள் இப்போது வஞ்சம் தீர்ப்பது போலவே தோன்றுகிறது. எனக்கும் மாலை கண் நோய் போல. ( சும்மா காமடி. கடுப்பாகவேண்டாம். )

  6. @ஜோதிஜி சரியா சொன்னீங்க 🙂 . நான் தொலைக்காட்சி பார்ப்பதே இல்லை. இது குறித்த பதிவு ஒன்று அப்புறமா எழுதுவேன்.

    அதாவது மக்கள் தான் இது போல செய்திகளை அதிகம் பார்த்து இவர்களை இவ்வளவு கேவலமாக மாற்றியது.

    @true wisher நன்றி

    @யாசின் “இதழியல்” நல்லா இருக்கு 🙂 ஆனால் இது ஜர்னலிசம் க்கு பொருந்துமா என்று சந்தேகமாக உள்ளது.

    “ஒரு நொடியில் நல்லவனை கெட்டவனாகவும், கெட்டவனை நல்லவனாகவும் எளிதாக காட்ட முடியும்”

    இது தான் தற்போது நடந்து கொண்டுள்ளது. குரங்கு கையில் பூமாலை என்பது போல, இவர்கள் கையில் ஊடகம்.

    @தமிழ்நெஞ்சம் சரியான சொன்னீங்க.. தமிழைக் கொலை செய்வதில் இவர்களுக்கு முதல் இடம் தரலாம்.

    நான் இத்தளத்தில் படிப்பதை நிறுத்தி இந்த மாதத்தோடு ஒரு வருடம் நிறைவு பெறுகிறது.

    @ப்ரியா உனக்கு என்ன பிரச்னை? 24 மணி நேரமும் இவரையே நினைத்துட்டு இருக்கே. என்னமோ இவர் உன்னோட குடியை கெடுத்தது போல!

    எதுல பார்த்தாலும் இவரை கொண்டு வந்து நுழைத்துட்டு.. உனக்கே கடுப்பா இல்ல! ஒரு ரஜினி ரசிகன் என்றால், அவனுக்கு சொந்தமா வேறு எந்தக் கருத்தும் இருக்கக்கூடாதா?!!

    எல்லாத்திலும் ரஜினியை மனதில் வைத்து எழுதிட்டு இருப்பது தான் எனக்கு வேலையா?!

    ரசிகர்களை விட உன்னை போன்றவர்கள் தான் 24 மணி நேரமும் நினைத்து புலம்பிட்டு இருக்கிறீர்கள்.

    BTW கோபம் வருகிற மாதிரி காமெடி பண்ணாதே!

  7. //நான் இத்தளத்தில் படிப்பதை நிறுத்தி இந்த மாதத்தோடு ஒரு வருடம் நிறைவு பெறுகிறது//

    நானும் மாறனும். வேற எந்த செய்தி தளத்தில் படிக்குறீங்க?

  8. @ஸ்வாமிராஜன் தினத்தந்தி, தினமணி, தினமலர், தமிழ் இந்து ஆகியவை.

    இதிலும் மோசமுண்டு.. இருப்பதில் இவை கொஞ்சம் பரவாயில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!