நினைவுத் திறன் ஏன் பாதிக்கப்படுகிறது?

11
நினைவுத் திறன்

விஞ்ஞானம் வளர வளரத் தொழில்நுட்பங்களால் மக்களுக்குப் புதிய வசதிகள், பிரச்சனைகள் என்று இருந்தாலும் நம் வாழ்க்கையில் முக்கியமான நம் நினைவுத் திறன் பாதிக்கப்படுவது என்பது மிகவும் சிக்கலாக உள்ளது.

நினைவுத் திறன்

சமீபமாக மக்கள் தங்களால் பல சம்பவங்களை, தகவல்களை நினைவு வைத்துக் கொள்ள முடியவில்லை என்ற குற்றச்சாட்டை அடிக்கடி கேட்க முடிகிறது.

இது குறித்துப் பல்வேறு தளங்கள் கட்டுரைகள் எழுதி வருகின்றன. Image Credit

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்

முன்பு எளிதாக நினைவு வைக்க முடிந்த பல விசயங்கள் இன்று வாய்ப்பே இல்லை எனும் நிலையாகி விட்டது. அடிப்படை விசயமான தொலைபேசி எண்கள் நினைவிலில்லை.

திறன்பேசி (Smartphone) பிரபலமாகும் முன்பு நினைவு வைத்து இருந்த எண்கள் மட்டுமே தற்போது நினைவில் உள்ளது.

புதிதாக வரும் அனைத்து எண்களும் சேமிக்கப்படுவதால், நினைவில் வைக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போனது.

கூகுள்

நம் நினைவுத் திறன் காலியாகப் பல காரணிகள் இருந்தாலும், கூகுள் கடும் குற்றச்சாட்டை எதிர் கொண்டு இருக்கிறது. கூகுள் இதை வேண்டும் என்றே செய்யவில்லை என்றாலும் தொழில்நுட்ப வளர்ச்சி இவ்வாறு நினைக்க வைக்கிறது.

கூகுள் அனைத்தையும் கொண்டு இருப்பதால், எதைத் தேட வேண்டும் என்றாலும் நம் மூளையைப் பயன்படுத்தாமல் உடனடியாகக் கிடைக்கும் கூகுளுக்குத் தான் போகிறோம்.

இது நம்முடைய மூளையின் பயன்பாட்டைக் குறைக்கிறது.

எந்திரமாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் பயன்படுத்தாமல் வைத்து இருந்தால் அதில் பிரச்சனை வருவது இயல்பு.

எந்திரமும் மனிதனும் ஒன்றா?!

ஒன்று தான். எந்திரம் சரியான முறையில் பராமரிக்கவில்லை என்றால் துருப்பிடித்துப் பயனற்றதாகி விடும். அது புத்தம் புது எந்திரமாக இருந்தாலும்.

மாணவர்களின் மூளையைக் கூர் படுத்த பல கணக்கு முறைகள் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் மேலும் அவர்களின் அறிவு மேம்படுகிறது.

நீண்ட நாட்களாக உடற்பயிற்சி செய்யாமல் திடீர் என்று ஓடினால் மூச்சு வாங்குகிறது. ஏன்?

நம் உடல் இதற்குப் பழகவில்லை ஆனால், அதே சில நாட்கள் தொடர்ச்சியான ஓட்டத்திற்குப் பிறகு நம்மால் எளிதாக ஓட முடிகிறது.

இதே நிலை தான் மூளைக்கும். நாம் நம்முடைய மூளையைப் பயன்படுத்தினால் 5 நிமிடத்தில் கூகுள் உதவி மூலம் கண்டறிவதை 30 அல்லது 45 நிமிடங்களில் கண்டறியலாம் அல்லது பிரச்சனையைப் பொறுத்து ஒரு நாள் கூட ஆகலாம்.

நமக்கு மற்றவர்களிடமிருந்து வரும் நெருக்கடி, சோம்பேறித்தனம், எந்த முடிவும் வேகமாகத் தெரியனும் என்ற இயல்பான எண்ணங்கள் போன்றவற்றால், மூளையைப் பயன்படுத்தாமல் கூகுள் உதவியை நாடுவதால் மூளை அதற்குப் பழகி விடுகிறது.

எனவே, உண்மையாகவே நாம் மூளையைப் பயன்படுத்தும் போது அல்லது பயன்படுத்த வேண்டிய நிலை வரும் போது முந்தைய விடைகளைத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வரத் திணறுகிறது.

Key Words

தற்போது யாராவது நமக்கு நன்கு தெரிந்த திரைப்படத்தின் பெயரைத் திடீர் என்று கேட்டால், நம்மால் அதை உடனே நினைவுக்குக் கொண்டு வர முடிவதில்லை.

கூகுளில் அதற்கான Key Words பயன்படுத்தித் தான் கண்டறிய முடிகிறது.

எடுத்துக்காட்டுக்கு “அங்காடித்தெரு” படத்தின் பெயர் தெரியும் ஆனால் மறந்து இருக்கும் ஆனால், “வசந்த பாலன்” பெயரோ “அஞ்சலி” பெயரோ நினைவு இருக்கும்.

இவர்கள் பெயரைப் பயன்படுத்திப் படத்தின் பெயரைத் தேடி கண்டறிகிறோம்.

இதுவே பிரச்சனை!

நமக்கு Key Words மட்டுமே உடனடி நினைவு இருக்கிறது, கேட்ட பெயர் நினைவுக்கு வருவதில்லை.

நண்பர்கள் பெயர்

எனக்குப் பழைய நண்பர்கள் பெயர் கூட மறந்து இருக்கிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒருவர் சந்திக்கும் போது, அவர் பெயரை மறந்து தர்மசங்கடம் ஆகி இருக்கிறது.

இது எனக்கு மட்டுமல்ல இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நேர்ந்து இருக்கும்.

முகம் நினைவு இருக்கும் ஆனால், பெயர் நினைவு இருக்காது.

இதைப் பற்றிப் பல விவாதங்கள் நடந்து வருகின்றன. உலகப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.

நாமும் “கஜினி சூர்யா” தான்

 

எதிர்காலத்தில் நம் பெயரை யாராவது கேட்டால் கூடச் சிறிது யோசித்துக் கூறும் நிலை வரும் என்று உறுதியாக நம்புகிறேன். நம்முடைய தொலைபேசி எண் கூட மறந்து விட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

‘கஜினி” சூர்யாவின் டாட்டூவை அழித்து விட்டால் அவர் ஒன்றுமில்லை என்பது போல நம் தொலைபேசி, இணையக் கணக்குகளை அழித்து விட்டால், கிட்டத்தட்ட நாமும் கஜினி சூர்யா தான்.

எந்தத் தகவல்களும் நமக்குத் தெரியாது.

எதிர்கால மாணவர்கள் இணையம் / மின்னணு சாதனங்களை அதிகம் பயன்படுத்தி அவர்களின் நினைவுத் திறன் என்ன ஆகும்? என்று யோசனையாக உள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமே பிரச்சனையா?

முன்னர் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பார்க்க வேண்டிய விசயங்கள் குறைவாக இருந்தன ஆனால், தற்போது நிலைமையே வேறு.

முன்பு குடும்பத்தில் / நண்பர்கள் வட்டத்தில் அதிகபட்சம் 15 பேர் தொலைபேசி வைத்து இருந்தார்கள். அதனால் நினைவு வைக்க எளிதாக இருந்தது.

தற்போது ஒருவரே இரண்டு எண்கள் வைத்து இருக்கிறார்கள் அதோடு பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

எனவே, அனைவரின் எண்ணையும் நினைவு வைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

அதிகரித்தத் தகவல்களின் எண்ணிக்கை

முன்பு நாம் படிக்கும், தெரிந்து கொள்ளும் செய்திகள், தகவல்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

ஆனால், தற்போது இணையம் வந்த பிறகு தினமும் படிக்கும் தெரிந்து கொள்ளும் தகவல்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்து விட்டது.

எனவே, அத்தனையையும் நினைவு வைப்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது.

முன்பு யாஹூ, ஜிமெயில் இணையக் கணக்கின் கடவுச்சொல்லை மட்டும் நினைவு வைத்து இருந்தால் போதும் ஆனால், தற்போது குறைந்த பட்சம் 10 இணையக் கணக்குகள் இருக்கிறது.

இதில் அனைத்திற்கும் ஒரே மாதிரி கடவுச்சொல் வைக்க முடியாத போது இத்தனை கடவுச்சொல்லை நினைவு வைப்பது எப்படி?

எனவே தான் “Password Manager” போன்ற மென்பொருட்கள் வந்து விட்டன.

இதெல்லாம் ஒரு காரணம் என்றாலும் நம் மூளை நினைவுத் திறனை இழந்து வருவது உண்மை தான். இதைத் தவிர்க்கவே முடியாது! எதிர்காலம் இன்னும் மோசமாகும்.

நீங்கள் நினைவுத் திறன் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறீர்களா? பகிர்ந்து கொள்ளுங்கள்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

11 COMMENTS

  1. அன்பின் கிரி,

    வணக்கம் நேற்று தான் நானும் என் நண்பர் ஒருவரும் இதைப்பற்றி நெடு நேரம் விவாதித்து கொண்டிருந்தோம், ஆனால் நீங்களும் நாங்கள் விவாதித்ததை பற்றி எளிமையாய் எழுதியிருக்கிறீக்ர்கள்..

    உண்மையில் மிகப்பிரமாண்டமான தொழில்நுட்பங்கள் பலவும் மனிதனை சிந்திக்கும் திறனில் இருந்தும் சமூக இணக்கத்தில் இருந்தும் முற்றாக ஒழித்திருக்கிறது…

    முன்பெல்லாம் இந்த வசதிகள் இல்லாத போது குழந்தைகளோ அல்லது வயதில் பெரியவர்களோ அவர்களாகவே ஒரு விளையாட்டை உருவாக்கி அதன் மூலம் விளையாடுவதுடன் சமூக ஒற்றுமைக்கும் அது ஒரு வழியாய் இருந்தது ஆனால் இன்று வீட்டிற்குள் இருவர் இருதால் அவர்கள் ஆளுக்கொரு அறையில் இருந்து கொண்டு பேஸ்புக்கில் காலை வணக்கமும், மாலையில் வாட்ஸப்பில் சாட்டும் நடக்கிறது…

  2. வரிக்கு வரி உங்கள் கருத்துகளுடன் ஒத்து போகிறேன் கிரி. என்னுடைய சிறு வயதில் பள்ளி நாட்களில் நடந்த 70% மேற்பட்ட அனைத்து சம்பவங்களும் நினைவில் இருக்கிறது. ஆனால் போன மாதம் நடந்தவற்றை நினைவில் வைக்க முடியவில்லை. நிறைய விஷியங்கள் தற்போது உடனுக்குடன் மறந்து போகிறது.

    1996/1999/2000 வருடங்களில் பார்த்த கிரிக்கெட் போட்டிகள் கண்னெதிரில் நேற்று பார்த்தது போல ஓடி கொண்டு இருக்கிறது. சில சமயம் நண்பர்களே ஆச்சரியபடுவதுண்டு. சத்தியமா புரியல கிரி?? தெளிவான காரணம் என்னவென்று??? உங்களளோட அறிமுகம் எப்படி எனக்கு கிடைத்தது என்று இதுவரை எனக்கு தெரியல!!!! சமயத்தில் யோசித்து பார்த்தாலும் என்னால் நினைவுபடுத்த முடியவில்லை..

    தொழில்நுட்ப வளர்ச்சியை நான் அதிக அளவில் பயன்படுத்துபவன் இல்லை. என்னோட இந்த நிலைக்கு தொழில்நுட்ப வளர்ச்சி மட்டும் காரணம் இல்லை என்று உறுதியாக கூற முடியும்.

    மூளையை சரிவர பயன்படுத்த முறையான பயிர்ச்சியின்மை இல்லாததும், செய்ய கூடிய பணி அரைத்தமாவை திரும்ப அரைப்பது போல இருப்பதும் ஒரு காரணம் என எண்ணுகிறேன்.

    எடிசனை பற்றி ரொம்ப வருடங்களுக்கு முன் படித்தது (உண்மையா என்று முழுமையா தெரியல) ஒரு நேர்காணலில் அதிக அளவில் நீங்கள் நிறைய கண்டுபிடிப்புகள் செய்து இருக்கிறீர்கள், இவற்றில் ரொம்ப கஷ்டப்பட்டு எதை கண்டுபிடித்திர்கள் என்று கேட்டபோது : எல்லா பொருட்களை கண்டுபிடித்தது கொஞ்சம் கஷ்டம் தான் ஆனால் என்ன கண்டுபிடிக்க போகிறோம் என்பதை பற்றி சிந்திப்பது தான் ரொம்ப கஷ்டமான ஓன்று என்று பதில் அளித்தார். நீண்ட பின்னுடத்திற்கு மன்னிக்கவும். கடந்த நான்கு நாட்களில் மூன்று பதிவு அசத்துங்க கிரி.பகிர்வுக்கு நன்றி.

  3. பள்ளி நண்பர்கள் பெயர்களை மறந்தாலும் சமாளிக்கலாம் அண்ணா ஆனா கல்லூரி நண்பர்களின் பெயர்களை மறப்பது தான் செம கொடுமை.. அப்போ அத சமாளிச்சு வெளிய வரதுக்குள்ள விடிஞ்சுடும்…….

    சின்ன சின்ன கூட்டல் கழித்தல் கணக்குகளை கூட மூளைய பயன்படுத்த தோணவில்லை பால் கணக்கு முதல் கொண்டு எல்லாமும் இப்போது இணையத்திலே நடைபெறுகிறது…

    2 வாரம் ஜிமெயில் பயன்படுத்தல எனக்கு என் ஐடி யே மறந்துடுச்சி னா அப்புறம் போன்ல சேவ் பண்ணை இருந்தத வச்சி கண்டுபிடிச்சேன்……

  4. வங்கி ஆன்லைன் அக்கவுண்டை மாதம் ஒரு முறையே பயன்படுத்துகிறேன். ஒவ்வொரு மாதமும் வேறொரு பாஸ்வேர்ட் மாற்றியே செய்ய வேண்டியுள்ளது. க்ளூ என்ன கொடுத்தோம் என்பது கூட நினைவில் நிற்கமாட்டேன்கிறது.

  5. தொட்டனைத் தூறும் மணற்கேணிமாந்தர்க்கு
    கற்றனைத் தூறும் அறிவு……..

    திருவள்ளுவர் கூறியதை இப்பொழுது நீரிலும் உணர்வதில்லை அறிவுனாலும் உணரவில்லை ஆகையால் இரண்டுமே குறைந்துக் கொண்டு வருகிறது.

    தற்கால நிலையை தெளிவாக எழுதி உள்ளீர்கள்… இது தான் உங்கள் பலமே…..

  6. சமீபகாலமாக நான் பேச வேண்டும் என்று நினைப்பதை வார்த்தைகளாய் சரியாக வரவில்லை. திணறுகிறேன்.

    நான் அதிகமாக இண்டர்நெட் உபயோகப்படுத்துகிறேன். வேலை இல்லாத சமயத்தில் முழுக்க முழுக்க ஏதாவது சினிமா விமர்சனம் அல்லது வாட்ஸ்ஆப் அல்லது ஏதாவது கட்டுரைகள் என்று இணையதளத்திலே இருப்பதால் இந்த பிரச்சினை 3 மாதமாக இருப்பதாக உணர்கிறேன்.

    நான் Facebook உபயோகப்படுத்தவில்லை. ஆனாலும் எனக்கு இவ்வளவு தடுமாற்றம் என்பதால் மிகவும் வருத்தமாக உள்ளது.

    இனி வாட்ஸ் ஆப் மற்றும் இணையத்திற்காக ஒரு நாளைக்கு 1 மணி நேரம் தான் செலவு செய்ய வேண்டும் என்று ஒரு வாரமாக அதை பின் பற்றி வருகிறேன். எனது பழைய நிலை மீண்டும் திரும்பும் என்று நம்புகிறேன்.

    இணைய பேரழிவில் இருந்து நம்மை நாமே தான் காப்பாற்றி கொள்ள வேண்டும். ஜாக்கிரதையாக இல்லை என்றால் இணைய அசுரன் நம்மை அழித்து விடுவான்.

    வீட்டில் மனைவியுடன் கூட பேச முடியாத அளவுக்கு இந்த இணையம் நம்மை கட்டி போடுகிறது. இதனால் சரியான புரிதல் இல்லாமல் பல பேர் நல்ல உறவுகளை இழக்கிறார்கள்.

    நமக்கு நாமே கட்டுப்பாட்டு வைத்து கொண்டு இணையத்தை சரியாக திட்டமிட்டு கையாள வேண்டும் இல்லை என்றால் வாழ்க்கையே பறிபோய் விடும்.

    உங்கள் கட்டுரை படித்த பின் நிறைய பேருக்கு இந்த பாதிப்பு இருப்பதை தெரிந்து கொண்டேன். விழிப்புணர்வுடன் இருப்போம் பொன்னான நேரத்தை மனிதர்களிடத்தில் செலவிட்டு சந்தோஷமாக இருப்போம்.

  7. @தனபாலன் வாழ்த்துகள்

    @GSR அனைத்து இடங்களிலும் இதே நிலை தான். நானும் இப்படித் தான் இருந்தேன்.. தற்போது பரவாயில்லை.

    @யாசின் உண்மை. பழைய சம்பவங்கள் நினைவில் உள்ளது.. புதியவை தங்குவதில்லை.

    “மூளையை சரிவர பயன்படுத்த முறையான பயிர்ச்சியின்மை இல்லாததும், செய்ய கூடிய பணி அரைத்தமாவை திரும்ப அரைப்பது போல இருப்பதும் ஒரு காரணம் என எண்ணுகிறேன்.”

    இருக்கலாம்.

    நீண்ட பின்னூட்டம் எப்போதுமே ஒருவருக்கு கிடைக்கும் அங்கீகாரம். உண்மையில் எனக்கு இது சந்தோசம் தான்.

    கடந்த வார இறுதியில் நேரம் கிடைத்தது எழுதி விட்டேன் 🙂 .. நேரம் கிடைத்தது என்றால் எதோ நான் வேலை இருந்து ஓய்வுன்னு நினைத்துக்காதீங்க.. படம் பார்க்காம இருந்தேன் 🙂 🙂

    @கார்த்தி / தமிழ் நெஞ்சம் உண்மை. எனக்கு விடுமுறை முடிந்து அலுவலகம் வந்தால் என்னுடைய விண்டோஸ் கடவுச்சொல் மறந்து விடும்.

    @பாலா அவங்க பாதிப்படம் அப்படித் தான் இருக்கும் 🙂

    Midnight FM, I saw the Devil பாருங்க இதுவரை பார்க்கவில்லை என்றால்.

    @பிரகாஷ் நன்றி.. கொஞ்ச நாளா ஆளைக் காணோமே!

    @நவின் உங்க கருத்து படித்து உண்மையில் வருத்தமாக இருந்தது. நீங்கள் வெளிப்படையாகக் கூறி விட்டீர்கள் மற்றவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

    பேசவே திணறினீர்கள் என்பது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. மற்றபடி குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் லேப்டாப் / மொபைல் நோண்டிட்டு இருப்பது அனைத்து குடும்பங்களிலும் நடக்கிறது.

    இவை எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனைகளை குடும்பத்தில் ஏற்படுத்தப்போகிறது.

    கட்டுப்பாடு இல்லையென்றால் சிரமமே!

  8. எனக்கும் ஞாபக மறதி அதிகமாக இருந்தது இப்போது பரவாயில்லை.
    ஞாபக சக்தியை அதிகரிக்க இதை ப்பாருங்கள்.
    எனக்கு மிக பிரயோசனமாக இருந்தது.
    https://www.youtube.com/watch?v=QFBUpRUGAfo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!