Amazon Echo / Google Home பிரச்சனைகள்!

4
Amazon Echo / Google Home

செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial Intelligence (சுருக்கமாக AI) தற்போது இணையத்தில் சக்கைப்போடு போகிறது. இதனுடைய அடுத்தக் கட்டமாகத் தற்போது அமேசான் நிறுவனத்தின் Amazon Echo பரபரப்பாக உள்ளது. Image Credit

Amazon Echo என்றால் என்ன?

நம் குரல் கட்டளைகளை உள்வாங்கி அதற்கேற்ப செயல்படுவது தான் இதன் வேலை.

எடுத்துக்காட்டுக்கு, ஒரு பாடல் வேண்டும் என்றால், பாடலைக் கூறினாலோ, நேரம் தெரியணும் என்று கேட்டாலோ, அதுவே உடனடியாகப் பதில் கூறும்.

இதன் மூலம் உங்கள் வீட்டு விளக்கு, மின்விசிறி என்று அனைத்தையும் (அதற்கான தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தியிருந்தால்) கட்டுப்படுத்த முடியும்.

எதையும் உங்கள் கைகள் மூலமாகச் செயல்படுத்த வேண்டியதில்லை, குரல் கட்டளை போதும்.

உதாரணத்துக்குத் தற்போது படிப்பதை விடப் பார்ப்பதை அதிகம் அனைவரும் விரும்புகிறார்கள். ஏன் என்று யோசித்துள்ளார்களா?

படிப்பதை விடக் காணொளி வழியாகப் பார்ப்பது எளிது. எனவே தான், தற்போது Video Blogging என்பது பிரபலமாகி வருகிறது.

இதே முறை தான் Amazon Echo க்கும். கைகளால் செயல்படுத்துவதை விட அமர்ந்த இடத்திலிருந்து குரல் மூலம் கட்டுப்படுத்துவது எளிது. எனவே, இதற்கு வரவேற்பு.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் Amazon Echo பட்டையைக்கிளப்பி வருகிறது. இதற்குப் போட்டியாக வந்தது தான் Google Home.

கூகுள் ஏற்கனவே உள்ள தன்னுடைய சேவைகளை இதில் இணைத்து வேகமாக முன்னேறி வருகிறது. இருப்பினும் இதில் அமேசான் பலபடிகள் முன்னே உள்ளது என்பது தான் உண்மை.

எனக்குப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் அலாதி ஆர்வம். என்ன புதிதாக வந்தாலும் அதை முயற்சித்துப்பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்.

எனவே, இதை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். அதோட குழந்தைகளுக்கு இதன் மூலம் ஆங்கிலம் மேம்படும் என்று நினைத்தேன்.

ஆனால், சிறு மாற்றம்

நண்பன் பேசிக்கொண்டு இருக்கும் போது “எங்க வீட்டுல Amazon Echo உள்ளது, எல்லாமே அதுவே பார்த்துக்கும். என்னோட பசங்க, எங்க கிட்ட பேசுவதை விட அதனுடன் பேசுவதே அதிகம்” என்று பெருமையாகக் கூறினான்.

இதைக் கேட்டதும் திக்கென்று இருந்தது. இது குறித்து மற்ற யோசனைகளும் எனக்குத் தோன்றியது.

அதில் ஒன்று மறதி.

ஏற்கனவே, அனைத்துக்கும் கூகுளை பயன்படுத்தி மறதி அதிகம் ஆவதாக எனக்கு ஒரு உணர்வு.

பலரின் பெயர் மறந்து, எதையும் Keywords வைத்து தான் நினைவுக்குக் கொண்டு வர முடியும் என்பது போல ஆனது. ஏதாவது ஒரு படம் பெயர் யோசித்தால், உடனே நினைவுக்கு வராது.

இது கூகுள் மற்றும் திறன்பேசியை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்பட்ட பிரச்சனை.

நினைவுத்திறன் குறைவு ஏற்படும்

Google Home / Amazon Echo போன்றவற்றையும் பயன்படுத்த ஆரம்பித்தால், யோசிக்கும் திறன் என்பதே குறைந்து அனைத்தையும் இதிலேயே கேட்டுக்கொண்டு இருக்க வேண்டியது தான்.

சில வருடங்களில் இச்சாதனம் இல்லையென்றால், டாட்டூவை அழித்த கஜினி சூர்யா போல ஆகி, எதுவுமே தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்க வேண்டியது தான்.

பசங்களுக்குச் சிறிய வயதிலேயே இதை அறிமுகம் செய்தால், அவர்களுக்கு நினைவுத்திறன் குறைய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, இதை வாங்கும் முடிவை கை விட்டுவிட்டேன்.

எதிர்காலத்தில் இச்சாதனம் ஒரு அடிப்படை சாதனமாக, தவிர்க்க முடியாததாக மாறும் நெருக்கடி வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று வாங்கும் முடிவை நிறுத்தி விட்டேன்.

முன்னர் Washing Machine என்பது ஆடம்பர பொருளாக இருந்து, தற்போது அத்யாவசிய பொருளாகி விட்டது.

எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தேவை காரணமாக இதுவும் தவிர்க்க முடியாத சாதனமாக மாற 100% வாய்ப்புள்ளது.

பின்வரும் காணொளியைப் பார்த்தால், இச்சாதனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தொடர்புடைய கட்டுரைகள்

நினைவுத் திறனை அழிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி

வேலைக்கு ஆப்பு வைக்கும் “Amazon Go”

கொசுறு

உங்களுக்குத் தொழில்நுட்பங்களால் மறதி ஏற்படுகிறதா? என்னைப் போல அனுபவங்கள் உள்ளதா?

நண்பர்கள் இது போலப் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறி இருக்கிறார்கள். உங்கள் கருத்தென்ன?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. 2 ஆம் தலைமுறை அறிமுகமானபோது கடந்த மார்கழியில் முன்விற்பனையில் வாங்கியிர்ந்தேன். அம்மா தனிமையில் வீட்டில் இருக்கும்போது பயன்படுத்துவார் என்பதற்காகத்தான் வாங்கியிருந்தேன், ஒவ்வொரு தடவையும் எக்கோ என்று கூபிட்டுத்தான் எதைய்ம் சொல்லவேண்டும். அம்மாவிற்கு அது கஷ்டமாக இருந்த்தால் பயன்படுத்துவதில்லை. நான் வீட்டில் இருக்கும்போது பாடல்களை ஸ்பொட்டிபையில் போட மாத்திரமே பயன்படுத்தினேன். வீட்டிற்கு வந்த நண்பர் ஒருவர் கடனாக 2 மாதங்களிற்கு முன் கொண்டு சென்றான். அவருடயவீட்ட்டில் நிறைய ஸ்மாட் கருவிகள் உள்ளன. இதுவரை காலமும் கைபேசி செயலி மூலமாகத்தான் அவற்றை கட்டுப்படுத்தினார். இப்போது எக்கோ குரல்வழியில் பயன்ப்டுத்துகிறார். திருப்பிதர்வதாக எந்த எண்ணமுமில்லை போல் உள்ளது.

  2. கில்லாடி, முன்னாடி நெறைய அலைபேசி எண்கள் தெரியும் ஆனா இப்போ என்னோட அலைபேசி எண் தவிர அணைத்து எண்களும் நினைவில் இல்லை 🙁

    ஈஸியான பெருக்கல் கணக்குக்கு கூட நாம கால்குலேட்டர் தான் தேடுகிறோம் அதனால உங்க முடிவு சரியானது தான்.
    ஆப்பிள் கம்பெனில வேலை பார்க்குறவங்க பசங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் பெருள்கள்கள் கொடுப்பதே இல்லையாம். எங்கயோ படித்த மாதிரி ஞபாகம்…

  3. கைபேசியோட வரவுக்கு பின்பு, யாரும் அதிக அளவிலான தகவல்களை நினைவில் வைத்து கொள்வதில்லை.. கடவு சொல்லை கூட கைபேசியில் தான் சேமித்து கொள்கின்றார்.. எத்தனை பேருக்கு குடும்ப நபர்களின் கைபேசி எண்கள் நினைவில் உள்ளது…???? ஏற்கனவே நினைவு திறன் குறைந்து கொண்டே வரும் நிலையில், இதுபோன்ற சாதனங்கள் தேவையா??? இல்லையா??? என்ற கேள்வி வருகிறது.. நான் எப்போதும் பழமையை விரும்புபவன்…

    நண்பர்களுடன் ஆரோக்கியமான விவாதங்களில் கூட நான் பழமையை ஆதரித்து தான் பேசுவேன்… தற்போது நம்முடைய இளைய தலைமுறை கொஞ்சம்,கொஞ்சம் நம்மை விட்டு விலகி சென்று கொண்டு இருக்கிறது…தொழில்நுட்ப வளர்ச்சியும் இதற்கு ஒரு காரணம்தான்… இந்த தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாமல் இருந்த நேரங்களில் வாழ்க்கை மகிழ்ச்சியாக தானே இருந்தது.. வளர்ச்சி என்ற ஒன்று அடுத்த தலைமுறைக்கு வீழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருக்கக்கூடாது.. புதிய தகவலுக்கு நன்றி கிரி..

  4. @ப்ரியா இதை நானே குறிப்பிடனும் என்று இருந்து மறந்து விட்டேன். தனிமையில் உள்ளவர்களுக்கு உற்ற தோழன். Cast Away திரைப்படத்தில் வாலிபால் பேச்சு துணைக்கு இருப்பது போல. அது பேசாது ஆனால், இது பேசும்.

    எதிர்காலத்தில் இச்சாதனம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும்.

    பாடலை கேட்க, YouTube பயன்படுத்த வசதியானது ஆனால், நாளடைவில் அப்படியே மற்றதுக்கும் தொடர்ந்து அப்படியே பழக்கமாகி விடும். போதை மருந்து போல.

    @விஜய் ஆமா கேப்டன்.. இப்ப எதுக்கு எடுத்தாலும் இச்சாதனங்களுக்கு தான் செல்கிறோம்.

    @யாசின் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நமக்கு பிடிக்குதோ இல்லையோ நம் உடன் வந்து கொண்டே இருக்கும். நீங்கள் எவ்வளோ தான் விலகி சென்றாலும் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாது.

    விடாது கறுப்பு 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here