கடனட்டை (HDFC Credit Card Vs ICICI Credit Card Vs SBI Credit Card) பெறும் போது மிக முக்கியமான விஷயமாகக் கவனிக்க வேண்டியது, என்ன வகையான கடனட்டை பெறுகிறோம் என்பது. Image Credit
அதிகம் பயணிப்பவராக, Online கடைகளில் பொருட்கள் வாங்குபவராக, எரிபொருள் அடிக்கடி பயன்படுத்துபவராக, திரைப்படங்கள் பார்ப்பவராக இருக்கலாம்.
எந்தச் சேவையை அதிகம் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துக் கடனட்டை வாங்கினால் இலாபம் பெறலாம். ஒரே வங்கி கடனட்டையில் பல பிரிவுகள் உள்ளன.
ஒவ்வொரு கடனட்டையும் ஒவ்வொரு செலவுக்கு / சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. எனவே, எந்தக் கடனட்டை வாங்கினால் பயனுள்ளது என்று அறிந்து அதன்படி வாங்கலாம்.
கடனட்டையில் உள்ள சிறப்பு என்னவென்றால், நாம் செய்யும் செலவுக்கு Reward Points கிடைக்கும். இதைப் பயன்படுத்தி அவர்கள் பரிந்துரைக்கும் பொருட்களை வாங்கலாம் அல்லது பரிசுக் கூப்பனாக, பணமாகப் பெறலாம்.
HDFC Credit Card Vs ICICI Credit Card Vs SBI Credit Card
1. HDFC Regalia Credit Card
2004 ம் ஆண்டு முதன் முதலாக வாங்கிய கடனட்டை. தற்போது வரை எந்தப் பிரச்சனையுமில்லை. வாடிக்கையாளர் சேவை மிகச்சிறப்பாக உள்ளது.
இதுவரை தவறான செலவுக்கணக்கோ, ஏமாற்றலோ நடந்தது இல்லை. ஆண்டுக்கட்டணம் எனக்குக் கிடையாது.
தற்போது HDFC Regalia கடனட்டை பயன்படுத்துகிறேன்.
Reward Points மூலம் கிடைக்கும் பணம் கடனட்டை கணக்கிலேயே வரவு வைக்கப்படும். நாம் செய்யும் செலவுகளுக்கு இதில் இருந்து கழித்துக்கொள்ளலாம்.
பொருட்களாக வேண்டும் என்றாலும், அவர்கள் தளத்தில் Reward Points பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம்.
புதிய இடத்திலோ அல்லது அதிகப்படியானோ செலவோ செய்தால், வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து அழைத்து, பரிவர்த்தனை செய்தது நாம் தானா என்று உறுதி செய்து கொள்வார்கள்.
2. ICICI Amazon Pay Credit Card
கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு, Amazon Online Offer க்காகவும், ஒரு Backup Credit Card இருந்தால் நல்லது தானே என்கிற யோசனையிலும் அமேசான் பரிந்துரைத்த Amazon Pay ICICI Credit Card வாங்கினேன்.
இக்கடனட்டையின் மூலம் அமேசானில் பொருட்கள் வாங்கினால், சேவையைப் பெற்றால் கூடுதலாக 5% தள்ளுபடி கிடைக்கிறது.
இவ்வாறு கிடைக்கும் தள்ளுபடி பணத்தை அமேசான் Wallet ல் ஒவ்வொரு மாதமும் ICICI செலுத்தி விடும். அதோடு குறிப்பிட்ட பொருட்களை அமேசானில் வாங்கினால், கூடுதல் தள்ளுபடியை பெற முடியும்.
ஆண்டுக் கட்டணம் இக்கடனட்டைக்குக் கிடையாது.
கடனட்டை வாங்கி ஏழு மாதங்களே ஆகியுள்ளதாலும், இதுவரை பிரச்சனையை எதிர்கொள்ளாததாலும், வாடிக்கையாளர் சேவை பற்றிக் கூற முடியவில்லை.
தானியங்கியாக இக்கடனட்டை அமேசான் வழியாகப்பெறுவதால், வேறு எந்தக் கூடுதல் நடைமுறையும் இல்லாமல், ஏற்கனவே உள்ள ICICI வங்கிக்கணக்கு விவரங்களை வைத்துக் கொடுக்கப்படும்.
கடனட்டை வாங்க –> Amazon Pay ICICI Credit Card
ஏற்றுக்கொள்ளாத அமேசான்
ஒருமுறை அமேசான் ‘Sale’ ல் (10%) தள்ளுபடி கொடுக்க அமேசான் மறுத்து விட்டது.
வழக்கமான ICICI கடனட்டைக்கு மட்டுமே தள்ளுபடி, ICICI Amazon Pay Card க்கு இல்லையென்று கூறி விட்டார்கள்.
ICICI கடனட்டை வாங்கியதே இது போன்ற தள்ளுபடிக்காகவே.
அமேசான் வாடிக்கையாளர் சேவை மையத்திடம் ‘இதே நிலை தான் அடுத்து வரும் ‘sale’ க்கும் இருக்குமா?‘ என்று கேட்ட போது, ‘அப்படியில்லை, அதற்குத் தள்ளுபடி இருக்கும்‘ என்றார்கள், இருப்பினும் நம்பிக்கையில்லை.
பயன்படுத்திப்பார்த்ததில் மற்ற ICICI கடனட்டைகளுக்கு தருவது போல இதில் Instant Discount தராமல், பின்னர் தரும் முறையைச் செயல்படுத்தியுள்ளார்கள்.
அதாவது, வழக்கமாக தரும் 5% தள்ளுபடி மற்றும் மீண்டும் 5% தள்ளுபடி என்று பிரித்துக்கொடுக்கிறார்கள்.
இவை குறிப்பிட்ட சில தள்ளுபடிகளுக்கு மட்டுமா! அல்லது அனைத்துக்குமா என்று தெரியவில்லை.
3. SBI Simply Click Credit Card
ICICI கடனட்டை வாங்கிய பிறகு இதே Online சலுகைகளுக்காக SBI Simply Click கடனட்டையை நண்பர் ஹரிஷ் பரிந்துரையில் வாங்கினேன்.
ICICI Amazon Pay Card போலவே இதிலும் சலுகைகள் உள்ளன. ₹40,000 செலவு செய்தால் 2000 Reward points க்கு Amazon Gift Voucher ₹500 கிடைக்கும்.
இதைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.
இதில் உள்ள ஒரே கடுப்படிக்கும் விஷயம், மாதக்கட்டணத்தைச் செலுத்த Auto Debit வசதிக்கு இணையம், செயலியிலேயே செயல்படுத்த முடியாது.
குர்கான் அலுவலகத்துக்குப் பதிவு தபாலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
எளிதான இச்சேவையை இணையத் தளம், செயலியிலேயே செயல்படுத்த வசதி கொடுக்க முடியும் ஆனால், எதனால், இந்த நடைமுறை என்று புரியவில்லை!
இக்கடனட்டை வாங்க இணையம் வழியாக விண்ணப்பித்தேன். விவரங்கள் பெற வந்தவர் என் மொபைல் எண்ணை மற்றவர்களிடம் பகிர்ந்து விட்டார்.
இதன் பிறகு ஸ்பாம் அழைப்புகள் தொல்லை சகிக்க முடியவில்லை, தொடர் (TRAI) புகார் காரணமாகத் தற்போது குறைந்துள்ளது.
ஆண்டுக்கட்டணம் ₹499. ஆண்டுக்கு ₹1 லட்சம் செலவு செய்தால், ஆண்டுக்கட்டணம் திரும்பக் கொடுத்து விடுவதாகக் கூறியுள்ளார்கள்.
இக்கடனட்டை பெற்று ஆறு மாதங்களே ஆவதால், வாடிக்கையாளர் சேவை பற்றிக் கூற வாய்ப்புக்கிடைக்கவில்லை.
SBI App
SBI கடனட்டைக்காகவே தனிச் செயலி உள்ளது. மற்ற இரு வங்கிகளும் வங்கி கணக்கு செயலியிலேயே இணைத்துள்ளது.
துவக்கத்தில் இரு (வங்கி கணக்கு / கடனட்டை) செயலிகளைப் பயன்படுத்துவது கடுப்பாக இருந்தது ஆனால், SBI செயலியின் வடிவமைப்பு (UI) மிகச்சிறப்பாக இருந்ததால், மிகக்கவர்ந்து விட்டது.
அனைத்தையும் எளிதில் கட்டுப்படுத்த, பயன்படுத்த முடியும். அனுமதிக்கப்பட்ட Credit Limit யை நம் தேவைக்கு ஏற்பக் கூட்ட குறைக்க எளிதாகச் செய்ய முடியும்.
மூன்றில் எந்தக் கடனட்டை சிறந்தது?
முன்னரே கூறியபடி நம் பயன்பாடு என்னவோ அதையொட்டியே கடனட்டை தேர்வும் செய்ய வேண்டும். HDFC க்கு நான் அதைச் செய்யவில்லை என்று கருதுகிறேன்.
காரணம், கடந்த ஐந்து வருடங்களில் பயன்படுத்திய கடனட்டை செலவுகளை வைத்து, Reward Points மூலமாக ₹14,000 பெற்றேன்.
SBI Simply Click கடனட்டையின் மூலமாக ₹3000 ரூபாயை ஆறே மாதத்தில் பெற்று விட்டேன். முன்பு ஒரே கடனட்டை தற்போது மூன்று, செலவுகள் பிரிகிறது.
ICICI Amazon Pay Card ல் குறைந்த Credit Limit என்பதால், அதிகம் பயன்படுத்த முடியவில்லை. ஆனாலும், அதிலும் குறிப்பிடத்தக்க பணத்தைப் பெற்று விட்டேன்.
குறிப்பிட்ட பொருட்களை வாங்கினால், சேவையைப் பயன்படுத்தினால் கூடுதல் (10X) Reward Points கிடைக்கும்.
எனவே, மனதில் வைத்துக்கொண்டு எந்தக் கடனட்டையை எங்கே பயன்படுத்த வேண்டுமோ அங்கே பயன்படுத்தினால், கூடுதல் இலாபம் கிடைக்கும்.
மூன்று கடனட்டைகளுமே Contactless (WiFi) கட்டணம் செலுத்த வசதி தருகிறது.
செயலிகளில் SBI செயலியே சிறந்தது, சிறப்பான UI & வசதிகள்.
ஒப்பீட்டளவில் ICICI & SBI இரு கடனட்டைகளுமே சமமான அளவு Reward Points பணம் தருகின்றன. அமேசான் பயன்படுத்துபவர்களுக்கு இவற்றைப் பரிந்துரைக்கிறேன்.
HDFC வாடிக்கையாளர் சேவை சிறப்பான சேவையை வழங்குகிறது.
மற்ற இரு வங்கிகளின் வாடிக்கையாளர் சேவையை இதுவரை பயன்படுத்த வாய்ப்பு அமையவில்லை.
கடனட்டை இலாபமா நட்டமா?
சரியான தேதியில் பணத்தைக்கட்டிவிட வேண்டும். இதைச் சரியாகச் செய்யவில்லை என்றால், கடுமையான நட்டம். அபராதக்கட்டணம் அதிகம்.
Insurance, Mobile, Broadband, DTH, School Fees, Gas, Regular Purchase என்று அனைத்துக் கட்டணங்கள், செலவுகளையும் கடனட்டை மூலமாகவே செய்வதால், கூடுதல் Reward Points பெற முடிகிறது.
சுருக்கமாக, நாம் செலவு செய்ய வங்கிகள் பணம் தருகிறார்கள்.
கடனட்டையைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால், மிக அதிகளவில் இலாபம் பெறலாம், பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கு, துன்பமான சேவை.
கடனட்டை இருந்தால், கண்டபடி செலவு செய்து விடுவேன் என்று கருதினால், விலகி இருப்பதே நலம்.
இந்த மூன்று வங்கிகளிலும் சேமிப்புக்கணக்கு வைத்துள்ளேன். இவற்றைப் பற்றிப் பின்னர் எழுதுகிறேன்.
தொடர்புடைய கட்டுரைகள்
மொபைல் எண்ணை ஸ்பாம் செய்த SBI வங்கி
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி,
எரிபொருளுக்கு ( பெட்ரோல்) பிரத்தியேக கடனட்டை பற்றி எழுதுவீர்கள்ன்னு எதிர்ப்பார்த்தேன்….
கிரி, இந்த நொடி வரை எந்த கடனட்டையும் வாங்கியதில்லை.. வாங்கவில்லை என்பதை விட வாங்க துளி கூட ஆர்வம் காட்டவில்லை.. இதை வாங்காததால் லாபங்கள் பல பெறாமல் போயிருக்கலாம்.. ஆனால் ஒரு ரூபாய் கூட நட்டம் ஏற்படவில்லை.. நான் இதை வாங்க கூடாது என்று இருந்ததற்கான முதல் காரணம் என் உடன் பணிபுரிந்த நண்பர்கள், குறைவான வருமானத்தில், அவசியமே இல்லாமல் கடனட்டை வாங்கி விட்டு, சரியான நேரத்தில் தவணையை கட்டாமல் தேவையில்லாமல் அபராதம் கட்டிய பல நண்பர்களை பார்த்து இருக்கிறேன்..
இதற்கு ஒரு படி மேலே, என் நெருங்கிய நண்பன் (விற்பனை துறையில்) பணி புரிந்த போது நிறுவன பணத்தை, சொந்த தேவைக்கு (கடனட்டை தவணைக்கு) எடுத்து, பின்பு நிறுவனத்திற்கு தெரிந்து வேலையை விட்டு தூக்கி விட்டார்கள்.. கிட்டத்திட்ட ஒரு வருடம் வேறு வேலை ஏதும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டான்.. இது போல சில பாடங்கள் கண் முன் நிகழ்ந்ததால் கடனட்டை வாங்க வேண்டும் என்ற எண்ணமே வந்ததில்லை.. எங்கள் நிறுவனத்தில் கடனட்டை இல்லாத ஒரே ஆள் நான் மட்டுமே..
எங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்த வடஇந்தியர் (தற்போது 65 வயது) பணியை முடித்து கொண்டு 5 வருடம் முன்பு இந்தியா சென்று விட்டார். பணி புரிந்த காலத்தில் இருவரும் ஒன்றாக வெளியில் போகும் போது பல பழமையான கதைகளை சொல்லுவார்.. அவர் துபாய்க்கு வந்தது 1978 (விமானம் இல்லாததால், கடல் வழி பயணம்) நிறுவனத்தை விட்டு சென்றது 2015.. இடைப்பட்ட காலங்களில் நடந்த பல சுவாரசியமான கதைகளை இவர் மூலம் கேட்டு இருக்கிறேன்.. எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத கதைகள் .. தந்தையாக, ஆசானாக, அண்ணனாக, நண்பனாக இவர் கூறிய சில வார்த்தைகள்:
“என்றும் கவுரவத்திற்க்காக தேவையில்லாமல் செலவு செய்யாதே.. (என் கை கொஞ்சம் நீளம்).. யார் மீதும் முழுமையான நம்பிக்கை வைக்காதே (மனைவியை தவிர).. ஏமாற்றங்களையும், தூரோகங்களையும் தாங்க பழகி கொள்..(ரெண்டுமே பார்த்தாச்சி). நான் இன்று வரை கடனட்டை வாங்காததற்கு இவரும் ஒரு காரணம்.. பகிர்வுக்கு நன்றி கிரி ..
@Barney கட்டுரையிலேயே குறிப்பிட்டுள்ளேன். தனித்தனியாக விளக்கினால், மிகப்பெரிய கட்டுரையாக வந்து விடும். அதோடு இதற்கென்று ஒரு கடனட்டை பயன்படுத்தாததால் நான் கூறுவது சரியாக இருக்காது.
SBI கடனட்டையில் எரிபொருளுக்கு Reward கொடுக்கிறார்கள்.
@யாசின் நீங்கள் முன்பே கூறி இருக்கிறீர்கள். கட்டுரையில் கூறியபடி கடனட்டை பயன்படுத்தத் தெரிந்தால், இலபாமானது இல்லையென்றால், தவிர்ப்பதே நல்லது.
Thalaiva article super. Thanks, Shivam.