வாசிப்பது எப்படி? என்ற தலைப்பைப் பார்த்ததும், எப்படி வாசிப்பது என்று செல்வேந்திரன் சொல்லித்தருகிறார் போல என்று நினைத்தேன் ஆனால், வாசிப்பதின் அவசியம் குறித்தே அதிகம் விளக்கப்பட்டுள்ளது.
வாசிப்புப் பழக்கம் இல்லாததால், மாணவர்கள் பொது அறிவில் எந்த அளவுக்கு மோசமாக உள்ளார்கள் என்பதை நடந்த சம்பவங்களுடன் கூறியுள்ளார்.
மிகைப்படுத்தப்பட்ட சம்பவங்களா?!
படிக்கும் அனைவருக்கும், இவ்வளவு முட்டாளாக மாணவர்கள் இருப்பார்களா?! என்ற சந்தேகம் வரும் அளவுக்கு உள்ளது.
இக்கட்டுரையின் மையக்கருத்துக்காகச் சம்பவங்களை மிகைப்படுத்திக் கூறுவதாகத் தோன்றினாலும் இப்படியும் இருக்க வாய்ப்புள்ளது என்றும் தோன்றுகிறது.
காரணம், சில YouTube காணொளிகளில் வேடிக்கையாகக் கேட்கப்படும் எளிமையான கேள்விக்குக் கூடத் திணறும் மாணவர்களைக் காண முடிகிறது.
புத்தகங்களின் வலிமை
ஒரு புத்தகம் நமது எண்ணங்களை மாற்றிக்கொள்ள உதவுகிறது, புதிய கண்ணோட்டத்தைத் தருகிறது.
ஜெயமோகனின் ‘யானை டாக்டர்‘ நாவலை ஒன்றிப் படித்த எவரும், காடுகளில் பீர் பாட்டிலை வீச முடியாத அளவுக்குப் படிப்பவர்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
செய்தித்தாள்கள், புத்தகங்கள் அனுபவங்களைக் கொடுத்துள்ளது, கருத்துகளைத் தெளிவுபடுத்த உதவியிருக்கிறது, புதிய செய்திகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
பல நாடுகள், நூல்கள் படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன, அதனாலயே சிந்திப்பதில் முன்னோடியாக உள்ளார்கள். முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் படிப்பதற்கென்றே நேரத்தை ஒதுக்குகிறார்கள்.
சிந்தனையும் அறிவும் உயரும் போது தேச முன்னற்றத்துக்கு வழிவகுக்கும். விஷயம் தெரிந்தவர்களை ஏமாற்ற முடியாது. அறிவை கண்டு எவரும் அஞ்சுவர், நிர்வாகம் சீர்படும் என்று குறிப்பிடுகிறார்
எதனால் வாசிப்பதில்லை?
தற்போதைய தலைமுறையினர் வாசிப்பதை குறைத்ததற்கு அல்லது நிறுத்தியதற்குப் பல காரணங்களைக் கூறுகிறார். அனைத்துமே ஏற்றுக்கொள்ளும்படியுள்ளது.
இவற்றில் நான் குறிப்பிட விரும்புவது கவனச்சிதறல்கள் மற்றும் சுருக்கமாக, சுவாரசியமாகப் படிக்க நினைக்கும் மனப்பான்மை.
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பல அர்த்தமில்லாததாக இருந்தாலும் சுவாரசியமாக உள்ளது. புத்தகங்களில் ஆர்வம் இழக்க இதுவும் காரணம்.
சாதனங்கள் (Mobile / Tab) அதிகரித்ததை கால மாற்றம் என்று எடுத்துக்கொண்டு, Kindle போன்ற நவீன புத்தக வடிவில் படிக்கும் வழக்கத்தைத் தொடர்வதே சரி.
புத்தகம் வாசிப்பது எப்படி?
புத்தகத்தைப் பிடிக்கவில்லை என்றாலும் வாசித்தே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை. முன்முடிவோடு படிக்கக் கூடாது.
சிலர் தங்கள் சித்தாந்தத்தைத் திணிப்பார்கள், அவற்றைத் தவிர்த்து விடுவது நலம்.
படிக்கச் செலவாகுமா?
இலவசமாகப் படிக்க ஏராளமான இணையத் தளங்கள் உள்ளன. Kindle ல் இலவசமாகப் புத்தகங்கள் கிடைக்கின்றன.
நூலகங்கள் உட்பட பல்வேறு வசதிகளின் மூலம் இலவசமாகப் புத்தகங்களைப் படிக்கலாம்.
டெலிகிராம் போன்ற செயலியில் பகிரப்படும் Piracy புத்தகங்களைப் படிப்பது தவறு.
இது ஒரு எழுத்தாளரின் உழைப்பை திருடுவது போன்றது. பணம் கொடுத்துப் படியுங்கள் அல்லது அதிகாரப்பூர்வ இலவச புத்தகங்களைப் படியுங்கள்.
இப்புத்தகம் படித்ததும், என் பசங்களையும் Kindle ல் உள்ள சிறுவர் புத்தகங்களைப் படிக்க வலியுறுத்தி உள்ளேன். விளையாடச் செல்ல வேண்டும் என்றால், சிறு கதையைக் கட்டாயம் படித்துவிட்டே செல்ல வேண்டும் என்று கூறியுள்ளேன்.
தொடர்ச்சியான வாசிப்பு, பள்ளி புத்தகங்களையும் சரளமாகப் படிக்க உதவும்.
Kindle
என் வாசிப்பு ஆர்வத்தை மீட்டது, பொன்னியின் செல்வன். ஆர்வத்தைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல உதவுவது அமேசான் Kindle.
படிப்பதில் ஆர்வமுள்ள அனைவரையும் Kindle வாங்கிப் படியுங்கள் என்று வலியறுத்துகிறேன். நிச்சயம் உங்களை ஏமாற்றாது.
‘வாசிப்பது எப்படி?‘ நம் எண்ணத்தில் மாறுதலைக் கொண்டு வரும் அளவுக்கு உள்ளது. வாய்ப்புள்ள அனைவரையும் இப்புத்தகம் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
வாசிப்பது எப்படி? புத்தகம் வாங்க –> Link
கடந்த வாரம் Amazon Unlimited Kindle சலுகையில் ₹2 க்கு இரு மாதங்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சி 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
கிரி, உங்கள் கருத்துடன் ஒத்து போகிறேன்.. (ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பல அர்த்தமில்லாததாக இருந்தாலும் சுவாரசியமாக உள்ளது. புத்தகங்களில் ஆர்வம் இழக்க இதுவும் காரணம்.) மிக சரியாக சொல்லி இருக்கீங்க .. என் பார்வையில் இளைய தலைமுறை முற்றிலும் படிப்பதை குறைத்து விட்டதாக தான் எண்ணுகிறேன்..
உதாரணமாக கடந்த 6 மாதங்களை எடுத்து கொள்ளுவோம்.. நிறைய ஓய்வு நேரங்கள் எல்லோருக்கும் இருந்தாலும், புத்தகம் படித்தவர்களின் எண்ணிக்கை என்னவோ குறைவாகவே இருந்து இருக்கும்.. அதிக அளவில் கைபேசியில் தேவையில்லாமல் நேரத்தை போக்குவது தற்போது அதிகமாக உள்ளது.. கைபேசி நேரத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுத்து கொண்டு இருக்கிறது என்பதை எல்லோருக்கும் தெரிந்தாலும் அந்த மாயஉலகத்தை விட்டு வெளி வர மனம் மறுக்கிறது .. குறிப்பாக இளைய சமுதாயம்.. என் நண்பர்கள் சிலர் இரவு 10 மணிக்கு படுக்கைக்கு சென்று 1 மணியை கடந்த பின் தான் தூங்குகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை என்னால் ஜீரணிக்க முடியவில்லை..
இந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் நிறைய நன்மைகள் இருந்தாலும், என் பார்வையில் தீமைகளே அதிகம் என்பது என் கருத்து.. 10 வயதிற்கு குறைவாக கைபேசியில் கேம் விளையாடாத குழந்தைகளே இல்லை எனலாம் ..வெகு சில குழந்தைகளை தவிர.. (இதில் பெற்றோர்களுக்கு மொட்ட பெருமை வேறு, என் பையன் தானாகவே கேம் டவுன்லோட் செய்வான் என்று) பிஞ்சு நெஞ்சில் நஞ்சை தூவுவதற்கு சமம் இந்த இணைய விளையாட்டுகள்..
இதன் தீமைகள் தெரிந்தும் நாம் எல்லோரும் அனுமதித்து கொண்டிருக்கிறோம் என்னையும் சேர்த்து… இவைகள் ஏதும் இல்லாத போது எவ்வளவு மகிழ்வாக நமது சமுதாயம் இருந்தது.. நான் இது மட்டும் காரணம் என்று கூறவில்லை .. வளர்ச்சி, வளர்ச்சி என்று அதிபாதாளத்தில் விழ வைத்து விட்டார்கள்… இதை புரிந்து என்று நம் இளைய சமூகம் என்று மீளுமோ??? ….கைபேசியை தாண்டி வேறு ஒரு நிஜ உலகம் உள்ளது என்பதை இளைய சமுதாயத்தினரால் ஏற்று கொள்ள முடியவில்லை ..என்னவோ சொல்ல வந்து ஏதோ சொல்லி கொண்டிருக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..