இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு காடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீ புகையால், சிங்கப்பூர் மற்றும் மலேசியா கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. மூச்சுத் திணறும் சிங்கப்பூர் நிலைமை என்ன ஆச்சுன்னு பார்ப்போம்.
இது போல ஒரு மோசமான பாதிப்பை இரு நாடுகளுமே முன்பு சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. Image Credit
இந்தக் காட்டுத் தீ எதனால் ஏற்படுகிறது?
இந்தோனேசியாவில் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் அங்கு நிலவும் வெப்பமான சீதோஷ்ண நிலை காரணமாக அங்கு உள்ள காடுகளில் ‘தீ’ பிடிக்கும்.
விவசாயிகள் தங்கள் பகுதியில் மரங்கள் / முற்றிய பாமாயில் மரங்களை அழித்து விவசாயத்திற்காகத் தயார் செய்வார்கள்.
நம்ம ஊரில் கரும்புக் காட்டிற்கு தீ வைப்பது போல.
இங்கு பாமாயில் மரங்கள் மூலம் அதிக லாபம் அடைகிறார்கள். எனவே, இங்குள்ள காடுகளை அழித்து அதில் பாமாயில் மரங்களை வளர்க்கிறார்கள்.
இது போல மரங்கள் மலேசியாவில் அதிகம் காண முடியும்.
இது அதிகம் லாபம் தருவதால், சிங்கப்பூர் மலேசியாவில் உள்ள பெரும் நிறுவனங்கள் இந்தோனேசியா காடுகளை அழித்து அங்கு பாமாயில் மரங்களை வளர்க்க முயற்சி செய்கிறார்கள்.
இந்த முறை நடந்த மோசமான காட்டுத் ‘தீ’ பிரச்சனைக்குக் காரணம் இயற்கை அல்ல மனித தவறுகளே என்று கூறப்படுகிறது.
அதாவது, அதிகளவில் காடுகளை எரித்ததே இந்த மோசமான நிலைக்குக் காரணம்.
இந்தோனேசியா ஏழ்மையான நாடாகும் எனவே, அவர்கள் வருமானம் வந்தால் போதும் என்ற அளவில் தான் செயல்படுகிறார்கள்.
PSI [Pollutant Standards Index – சுவாசத் தரக் குறியீடு]
வருடாவருடம் இந்த மாதங்களில் புகை மூட்டம் ஏற்படும். கடந்த 1997 ம் ஆண்டு தான் அதிகளவாகச் சுவாசத் தரக் குறியீடு 226 பதிவாகி இருந்தது.
சாதாரண நிலை என்றால் 0 – 50 ஆகும். இந்த முறை உண்மையில் மிரட்டி விட்டது.
PSI 400 தாண்டி விட்டது, அப்படி என்றால் எப்படி இருந்து இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.
Image Credit – wikipedia.org
சிங்கப்பூரில் எல்லாமே தரமாக இருப்பதால், கொஞ்சம் அப்படி இப்படி என்றாலே இங்குள்ளவர்களுக்கு உடம்பு முடியாமல் போய் விடும்.
இவர்களுக்கு எதிர்ப்புச் சக்தி மிகக் குறைவு.
தொண்டைல கிச்சு கிச்சு
முதல் நாள் கொஞ்சம் புகை.. இரண்டாம் நாள் இன்னும் கொஞ்சம் அதிகரித்தது. உடனே இங்கே கொஞ்சம் பேர் சுவாசக் கவசம் போட ஆரம்பித்து விட்டார்கள்.
கடந்த வருடங்களிலும் இது போல வந்து இருக்கிறது ஆனால், பெரியளவில் பாதிப்பில்லை. பனிமூட்டம் போல இருக்கும் ஆனால் விரைவில் சரியாகி விடும்.
மூன்று நாள் ஆச்சு லைட்டா தொண்டைல கிச்சு கிச்சு ஆச்சு… ம்ம்ம் என்னடாது நமக்கே வேலை காட்டுதே என்று நினைத்தேன்.
இங்குள்ளவர்கள் சுவாசக் கவசம் அணிபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே சென்றது. திடீர் தேவையால் பற்றாக்குறை ஏற்பட்டது.
எனவே, இதற்கு டிமாண்ட் அதிகம் ஆகி விட்டது. வழக்கமான விலையை விட அதிக விலைக்கு விற்றார்கள். ஒருவருடைய கஷ்டம் இன்னொருவருக்கு லாபம்.
அலுவலகத்தின் உள்ளே நெடி
வியாழக்கிழமை [20-06-2013] மதியம் அலுவலகத்தின் உள்ளேயே புகை நெடி வந்து விட்டது. AC காற்று வெளிக் காற்றை உள்ளே கொண்டு வந்து விட்டது.
தொண்டை எல்லாம் எரிய ஆரம்பித்து விட்டது.
எங்கள் அலுவலக கட்டிடம் முழுவதும் AC. எனவே, மதியம் சாப்பிட வெளியே வர கதவை திறந்தவுடன் எரிக்கும் நெடி குப்புன்னு அடிக்குது. ஒரு நொடி மூச்சு அடைத்து விட்டது.
இதுக்கு மேல தாக்குப் பிடிக்க முடியாது என்று அலுவலகத்தில் கொடுத்த சுவாசக் கவசம் அணிந்து தான் வெளியே சென்றேன்.
கீழே உள்ள படம் எங்கள் அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
வியாழன் வெள்ளி இரு நாட்கள் கடுப்பாக்கி விட்டது. எங்கேயும் போக முடியவில்லை. வீட்டில் கதவு ஜன்னல் என்று அனைத்தையும் மூடி வைக்க வேண்டியதாகி விட்டது.
இந்தோனேசியாவில் எரிக்கிற நெடி இங்க வரைக்கும் வருகிறது.
பிரச்சனை உள்ளவர்களுக்குக் கடும் பாதிப்பு
குழந்தைகள், வயதானவர்கள், ஆஸ்த்மா, நுரையீரல் பிரச்சனை இருப்பவர்கள் நிச்சயம் கடும் பாதிப்பைச் சந்தித்து இருப்பார்கள்.
அரசாங்கம் வருமானம் குறைவானவர்களுக்கு சுவாசக் கவசத்தை இலவசமாகக் கொடுக்க ஏற்பாடுகளைச் செய்து இருந்தனர்.
சுவாசக் கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்படாமல் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து இருக்கின்றனர்.
சுவாசக் கவசத்தில் N95 என்ற கவசமே பாதுகாப்பானது, மற்றவை ஓரளவு தான் புகையைத் தடுக்கும்.
பெரும்பாலான அலுவலகங்களில் சுவாசக் கவசங்களை ஊழியர்களுக்குத் தர ஏற்பாடு செய்து இருந்தனர்.
சிங்கப்பூருக்கு ஏற்பட்ட நட்டம்
“தென்னமரத்துல தேளு கொட்டிச்சாம். பனை மரத்துல நெறி கட்டிச்சாம்” இந்தப் பழ மொழி தற்போது சிங்கப்பூருக்கு பக்காவாகப் பொருந்தும்.
யாரோ செய்யும் தவறுக்கு சம்பந்தமே இல்லாமல், சிங்கபூருக்கு பில்லியன் கணக்கில் நட்டம் ஏற்பட்டு இருக்கிறது.
Image Credit – mypaper.sg
சிங்கப்பூரின் வருமானத்தில் முக்கியப் பங்கு சுற்றாலாவை நம்பி இருக்கிறது.
இந்தப் புகைத் தொல்லை காரணமாகச் சுற்றுலா வருபவர்கள் தங்கள் பயணத்தைத் தள்ளிப் போட்டு விட்டார்கள்.
இங்கே இருக்கலாம் என்று இருந்தவர்கள் விரைவிலேயே பெட்டியை எடுத்துட்டு கிளம்பி விட்டார்கள்.
இங்கே வேறு வழி இல்லாமல் இருந்தவர்களும் எங்கும் செல்ல முடியாமல் ஹோட்டல்லையே தங்க வேண்டியாகி விட்டது.
இதனால் இதைச் சார்ந்து இருந்த இடங்களுக்கு வருமானம் பாதிக்கப்பட்டது.
ஃபுட்கோர்ட்
இங்கே ஃபுட்கோர்ட் எனப்படும், பல சிறு உணவங்கள் இணைந்து இருக்கும் இடங்கள் அதிகம். இங்கே சாப்பிட வருபவர்களும் குறைந்து விட்டார்கள்.
ஹோட்டல் உள்ளே சென்று அமர்ந்து சாப்பிடும் படியுள்ள இடங்களுக்குச் சென்றதால் (திறந்தவெளியாக இல்லாமல் மூடிய இடங்களில்) ஃபுட்கோர்ட் பகுதியில் கடைகள் வைத்து இருந்தவர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது.
கடைகளில், மால்களில் கூட்டமில்லை, அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
Starhub
மக்கள் அனைவரும் வெளியே எங்கும் செல்ல முடியாமல் இருந்ததால், சிங்கப்பூரின் பிரபலமான தனியார் கேபிள் நிறுவனம் Starhub, கடந்த வாரம் வெள்ளி இரவிலிருந்து இரு விடுமுறை நாட்களிலும் அனைத்து கட்டணச் சேனல்களையும் இலவசமாகக் கொடுத்து என்ஜாய் பண்ணுங்க என்று கூறி விட்டது 🙂 .
காற்று வீசும் திசையைப் பொறுத்துத் தான் புகை மூட்டம் உள்ளது.
கடந்த மூன்று நாட்களாகக் காற்று திசை மாறி இருப்பதன் காரணமாகச் சிங்கப்பூரில் புகையின் அளவு குறைந்துள்ளது.
நம்ம ஊர்ல சொல்லுவாங்களே ஒருவருக்கு அதிர்ஷ்டம் என்றால், ம்ம்ம் காற்று இவன் பக்கம் வீசுது என்று…. இங்க வீசுனா நட்டம் தான் 🙂 .
மலேசியா
இங்கு கூறப்பட்டுள்ள பெரும்பாலான விஷயங்கள் மலேசியாவிற்கும் பொருந்தும். மலேசியாவில் காற்று தரக்குறியீடு API [Air Pollution Index] என்று கூறப்படுகிறது.
கடந்த ஞாயிறு [23-06-2013] மலேசியாவில் Muar என்ற இடத்தில் API 750 என்று இருந்தது. இதைக் கேள்விப்பட்டவுடன் தலை கிறுகிறுத்து விட்டது.
பள்ளிகளுக்குப் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகைமூட்டத்தால் கடுப்பான சிங்கப்பூர் மக்கள் பலர் இதற்குக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இது இன்னொரு நாட்டின் விவகாரம் இதில் சிங்கப்பூர் அரசாங்கம் ஓரளவு தான் தலையிட முடியும் என்று கூறினாலும், இது குறித்து மாற்றுக் கருத்துகள் பரவிக் கொண்டு இருந்தன.
வெளியுறவுத்துறை அமைச்சர் சண்முகம் ஃபேஸ்புக்கில் இதற்குப் பதில் கூறிக் கொண்டு இருந்தார்.
இந்தப் புகைப் பிரச்சனை உடனே முடிந்து விடக்கூடிய ஒன்றல்ல. தற்போது குறைந்து இருந்தாலும் [PSI 70 – 24/06/2013] திரும்ப இன்னும் சில மாதங்களுக்கு இது போலப் பிரச்சனைகள் இருக்கும்.
எனவே, மக்கள் மனதளவில் தயாராக இருந்து கொள்ளுங்கள் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
சிங்கப்பூர் அரசாங்கம்
சிங்கப்பூர் அரசாங்கம் இதில் சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறியுள்ளது. Image Credit – Tabla.com
தற்போது இந்தோனேசியாவில் செயற்கை மழை பெய்ய வைக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சிங்கப்பூர் ராணுவத்தில் செயற்கை மழைக்கு உதவ தயாராக இருக்கிறார்கள் ஆனால், சரியான ஒத்துழைப்பு இந்தோனேசியா பக்கம் இருந்து இல்லை.
சிங்கப்பூரில் தினமும் மழை பெய்யும், புகைப் பிரச்சனை ஆரம்பித்த பிறகு மழையே பெய்யவில்லை.
இது தாங்க நீங்க கொஞ்ச நாளா செய்திகளில் படித்த சிங்கப்பூர் புகை மூட்டப் பிரச்சனை 🙂 .
கொசுறு 1
சீனாவில் பெய்ஜிங் ல (என்று தான் நினைக்கிறேன்) அங்குள்ள தொழிற்சாலைகளின் காரணமாக இது போல காற்று மாசுபட்டு இருக்கிறது.
சுவாசக் கவசம் போட்டு மக்கள் நடமாடிக் கொண்டு இருப்பார்கள்.
சீனா அரசாங்கம் அதிக புகை வரும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், மாசு தரும் தயாரிப்புகளைப் படிப்படியாக நிறுத்தப்போவதாகவும் அறிவித்து இருக்கிறது.
உண்மையில் சீனாவின் வளர்ச்சி என்பது இது போலச் சுற்றுச் சூழலை அழித்துத் தான்.
இங்கே ஒரு வாரத்திற்கே கடுப்பாகி விட்டது, மக்கள் எல்லாம் எப்படி அங்கே வசிக்கிறார்கள்? உலகம் அழியப் போகுது பூமா தேவி வாயப் பொளக்கப் போறா!
கொசுறு 2
சிங்கப்பூர் புகை பிரச்னையைக் கேட்டு, சென்னை நண்பர்கள் பலர் கிண்டலாக, இங்கெல்லாம் தினமும் அப்படித்தான் இருக்கிறது என்றார்கள்.
இது போல புகை பிரச்சனை போக்குவரத்து நெரிசல் இடங்களில் மட்டும் தான் இருக்கும். நம் வீட்டுப் பகுதியில் இருக்காது.
இது ஒரு இடம் விடாமல் எங்கும் இதே போல இருக்கும். உங்களால் சுவாசிக்கவே முடியாது. நல்ல காற்றை எப்போது சுவாசிப்போம் என்று இருக்கும்.
கொசுறு 3
நண்பன் பாபு சொன்னான், தம் அடிக்கிறவன் பக்கத்துல நின்னா PSI Level 1000 இருக்கிறது.
சைக்கிள் கேப்புல இவர்களும் PSI ரொம்ப மோசமா இருக்குனு அடிக்கடி சொல்லிட்டு இருக்காங்க என்று கூறி இருந்தான் 🙂 .
ஹி ஹி நம்மாளு சொல்றது சரி தானே! ஏன்யா தம்மு கோஷ்டிகளா!
நீங்க நடமாடும் இந்தோனேசியாவா தான்யா சுத்திட்டு இருக்கீங்க… அப்புறம் என்ன புகை புகைன்னு ஓவரா சவுண்டு விட்டுட்டு இருக்கீங்க.
நீங்க எல்லாம் சொல்றதுக்கு எந்த ரைட்ஸ் ம் கிடையாது. இப்பவாவது புரியுதா அடுத்தவன் கஷ்டம். ஆண்டவன் இருக்கான் கொமாரு 🙂 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
சிங்கப்பூர் புகை மூட்டப் பிரச்சனை
இயற்கையையே புகைய வைத்துவிட்டார்களே ..!
நெருப்பில்லாமல் புகையாதே ..!
எரிய ஆரம்பிக்கு முன்பே தடுத்தால் நல்லது ..
தல கட்டுரையை படிக்கும் போது நம்ம மூக்குல யெருது புகை… (இது ஒரு இடம் விடாமல் எங்கும் இதே போல இருக்கும். உங்களால் சுவாசிக்கவே முடியாது. நல்ல காற்றை எப்போது சுவாசிப்போம் என்று இருக்கும்.) இது சத்தியம்… பகிர்வுக்கு நன்றி கிரி..
சாம்பியன் டிராபில கலக்கின நம்ம இந்திய அணிய பற்றியும் / தோனிய பற்றியும் நேரம் இருந்தால் ஒரு பதிவு போடலாமே!!!!
வெளியில் நடமாட இயலாத அளவுக்குப் புகை என்பது அச்சம் தருவது. வாகனப்புகையை எல்லாம் இதனோடு ஒப்பிட முடியாது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்நிலை நீடிக்குமோ? கவனமாக இருந்து கொள்ள வேண்டும் அதுவரை.
பதிவு சூப்பர்
கொசுறு 3 கலக்கல்
– அருண்
அனைவரின் வருகைக்கும் நன்றி
@யாசின் எனக்கு இது வரை 1 % கூட இது பற்றி எழுதணும் என்ற யோசனை இல்லை. உங்களுக்காகவும் தல தோனிக்காகவும் முயற்சிக்கிறேன்.
யாசின் கூறிய யோசனைக்கு நானும் வழிமொழிகிறேன். நம்ப தோனிய பற்றிய உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன்.