காவலர் தேர்வு | சேரும் முன்பு சேர்ந்த பின்பு :-)

49
TN Police காவலர் தேர்வு

ம்ம ஊர்ல கணிப்பொறி துறையில் அதிக பணம் வருகிறது என்று அதைப் படிக்கத் துடிக்கும் பெரும்பாலான மக்கள் இருந்தாலும், காவலர் தேர்வு போட்டியில் கலந்து பதவியைப் பெற  எப்போதும் கடும் போட்டி இருக்கும். Image Credit

எப்போது தேர்வு நடந்தாலும் ஆயிரக் கணக்கில் இளைஞர்கள் மற்றும் தற்போது இளைஞிகளும் கூடுகிறார்கள்.

உடற்பயிற்சி

பொதுவாக நடுத்தர மக்களே காவலர் பதவிக்கு வருகிறார்கள். சேரும் முன்பு தினமும் கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்று தங்களை வருத்தி உடம்பை கட்டுமஸ்தாக வைத்து இருப்பார்கள்.

தேர்வில் தேர்வாகி சேர்ந்த பிறகு, கொஞ்ச நாள் கடுமையான பயிற்சி இருக்கும், உங்க வீட்டு எங்க வீட்டு கண்டிப்பு இல்லைங்க படு பயங்கரமா பயிற்சி இருக்கும்.

நம்மவர்களும் தன்னை ‘அன்புசெல்வன் IPS‘ அளவுக்கு நினைத்துக்கொண்டு தங்கள் முழு ஈடுபாட்டைக் காட்டுவார்கள்.

பயிற்சி முடிந்து வேலையில் சேர்ந்த பிறகு கொஞ்ச நாள் “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜான்னு” சும்மா முறுக்கிட்டு இருப்பாங்க.

மூத்த காவலர்கள்

அப்புறம் அங்கே இருக்கும் மூத்த காவலர்கள், தம்பி இந்த மாதிரி எல்லாம் நாங்களும் தான் இருந்தோம், அப்புறம் எங்க கதையே மாறி விட்டது என்று ஆரம்பத்துலேயே அவங்க நிலைமைய புரிய வைத்து விடுவாங்க.

நம்ம ஆளுங்க பலவித எதிர்பார்ப்புல வந்து இப்படி சப்புனு ஆகி போச்சேன்னு கொஞ்ச நாள் சோகமா இருந்துட்டு, மற்றவர்களைப் போல் நடைமுறைக்குத் தாவி விடுவார்கள்.

திரைப்படங்கள் வேறு நடைமுறை  வேறு என்று மனதை தேற்றி கொள்வார்கள்.

அப்புறம் அப்பாவியை மிரட்டுவது, லஞ்சம் வாங்குவது, ஊரெல்லாம் ஏமாத்துறவனை விட்டுட்டு சிக்னலில் மஞ்சள் கோட்டை தாண்டியவனை, நாட்டின் எல்லை கோட்டையே தாண்டியது போல் கருதி அவனை நொங்கு எடுப்பது.

மாத கடைசியில் “மட்டும்” போக்குவரத்து விதிகளைச் சரியாக கடை பிடிப்பது என்று “மாமூல்” வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள்.

பிறகு தான் முழு காவலராக அவர் அறிய படுகிறார், அதாவது தற்போது தான் சரியான பயிற்சி முடிந்து வெளியே வருகிறார் 🙂 .

நேர்மையான காவலர்கள்

நேர்மையான காவலர்களும் இருக்க தான் செய்கிறார்கள், இல்லையென்று யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவ்வாறு இருப்பதால் அவர்கள் படும் சிரமங்கள் சொல்லி மாளாது.

இதைப் போல் இருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது மாற்றல் என்ற ஆயுதத்தால், பாவம் ஊர் ஊராகச் சுத்தி, பிள்ளைகளை வருடம் ஒரு மாவட்டத்தில் படிக்க வைத்து மனைவியிடம் திட்டு வாங்கி காலத்தை ஓட்ட வேண்டி உள்ளது.

காவலர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது எப்போது கூப்பிட்டாலும் வர வேண்டும். சம்பளமும் மிகக் குறைவு.

இதுவும் இவர்கள் லஞ்சம் வாங்குவதற்கு ஒரு காரணம். வேலை பளுவும் அதிகம், 8 மணி நேர வேலை எல்லாம் கிடையாது அதுவும் ஜனாதிபதி, பிரதமர்வருகிறார்கள் என்றால், கொடுமை தான்.

இவ்வாறு சில நிறை பல குறைகள் இருந்தாலும் காவலர்களுக்குக் கொடுக்கப்படும் பயமும் மரியாதையுமே இப்பதவிக்கான மதிப்பை உயர்த்தி காட்டுகிறது.

இங்கே கீழே உள்ள படத்தில் காவலர் தேர்வுக்கு வந்த ஒருவர் எப்படி வயிற்றை எக்கி நெஞ்சை நிமிர்த்தி (மார்பை விரித்து) வேலையில் சேர துடிக்கிறார் பாருங்க.

கீழே கொடி பிடித்தது இருக்கும் மூத்த காவலரைப் பாருங்க, அவர் ஒரு பக்கம் இருக்காரு அவர் தொப்பை ஒரு பக்கம் இருக்கிறது 🙂 .

சேரும் முன்பு கடுமையான உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தாக இருந்தவர்கள், காவலர் தேர்வு முடிந்த பிறகு தொப்பை தள்ளி இப்படி ஆகிவிடுகிறார்கள்.

அவர் தேர்வுக்கு வந்த நபரைப் பார்த்து இப்படி தான் நினைத்து இருப்பாரு “எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்” 🙂 .

காவலர் தேர்வில் முயற்சிக்கும் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள்.

தொடர்புடைய கட்டுரை

நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?

49 COMMENTS

 1. வாங்க சிவா மற்றும் அதிஷா உங்க வருகைக்கு நன்றி.

  திருமணத்திற்கு முன் பின் என்று இன்னொரு பதிவு போடணும் ஹீ ஹி ஹி அதுவும் இதற்க்கு போட்டியாக இருக்கும்.

 2. சரியாச் சொன்னீங்க கிரி.

  80 கள்ல பாத்தீங்கன்னா 80% போலிசார் ஃபிட் ஆகவும் மீதிப் பேர் தொந்தியும் தொப்பையுமா (இரண்டும் ஒன்றுதானே?) இருந்தார்கள்.

  ஆனல் இன்றோ, 80% தொந்தியும் தொப்பையுமாகவும் மீதிப் பேர் புதிதாகச் சேர்ந்த்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

  இவங்கல்லாம் என்னைக்கு ஓடிப்போய்த் திருடனைப் பிடிச்சு… ஹம்.

  கோயமுத்தூர்ல போலிசாரின் துப்பாக்கியைத் திருடிட்டு போனவனப் பிடிக்கமுடியவில்லை. தானா வந்து மாட்னவனயும் தப்பிக்க விட்டுட்டாங்க.

  இன்னுங் கொஞ்ச நாள்ல போலிசார் பணி முடிந்து திரும்பும் போது ஸ்டேசன் ஜீப்லயே கொண்டு விடும் சூழ்நிலை வந்தாலும் வரலாம்.

  கடவுள்தான் நம்மைக் காப்பாத்தனும்.

 3. வாங்க வடகரை வேலன் உங்க முதல் வரவு நல்வரவு ஆகுக.

  //இவங்கல்லாம் என்னைக்கு ஓடிப்போய்த் திருடனைப் பிடிச்சு… ஹம்//

  இவங்க ஓடி போய் பிடிக்கவே தேவையில்லைங்க, ஏன்னா! இவங்களுக்கு இந்த திருட்டு இவன் தான் செய்து இருப்பான், பீரோ புல்லிங்கா அவனை அமுக்குன்னு சரியா சொல்வாங்க. நம்ம தமிழக காவலர்கள் கிட்ட ஏகப்பட்ட திறமை இருக்கு ஆனா சமூக சூழ்நிலை காரணமாக அவர்களும் மாறிடறாங்க. அப்புறம் விசயத்துக்கு வரேன்..இவங்க நடந்தே போக முடியாது இதுல ஓடி…..பிடித்து ….ரொம்ப கஷ்டம் தான்

  //தானா வந்து மாட்னவனயும் தப்பிக்க விட்டுட்டாங்க//

  அது தாங்க நம்ம சிறப்பு … ஹீ ஹீ ஹீ

 4. //இத்துப்போன ரீல் said…
  ஓரே தமாஷு! அய்யோ! அய்யோ!//

  ஆனா அவங்க கிட்ட நாம மாட்டினோம்னு வைங்க .. ஹீ ஹீ நம்ம டமாசு ஆகிடுவோம். கஞ்ச கருப்பு சொல்லுவார் ராம் படத்துல அய்யா! இவர் வீட்டுல தண்ணீர் வரலைங்கலாம் அதுக்கு போய் என்ன போட்டு நொக்கி எடுக்கிறாருங்க ஹீ ஹீ ஹீ ஹீ

 5. வாங்க ஸ்ரீதர் நாராயணன்

  //1.5 இலட்சம் ரூபாய்கள் தயாராக வைத்திருந்தார் ‘மேற்படி செலவுக்கு’. அந்த நேரத்தில் அது மிகப்பெரிய தொகை. அவருடைய ஒரே நம்பிக்கை ‘சேர்ந்த ஒரு வருடத்தில் அந்த பணத்தை திருப்பி எடுத்திடுவோம்ல’. இதுதான் நிதர்சனம்//

  சரியா சொன்னீங்க. வேலைக்கு சேரும் பலரும் இதை மனதில் வைத்தே பணம் கொடுக்கிறார்கள், பணத்தை வாங்கி சிபாரிசு செய்பவர்களும், என்னப்பா! எப்படி இருந்தாலும் சம்பாதிக்க போறே அப்புறம் என்ன.. என்று கூறி பணம் வாங்குகிறார்கள்.

  அப்புறம் இப்படி எல்லாம் பண்ணாம இருந்தாலும், வேலை கிடைக்காது. நேர்மையா இருந்தா நம்ம ஊர்ல கேன பயன்னு சொல்லிடுவாங்க இல்ல பிழைக்க தெரியாதவன்னு பட்டம் கட்டிடுவாங்க. பணம் வாங்குனா அட பாவி! இப்படி கொள்ளை அடிக்கறானேன்னு சொல்லுவாங்க. அப்புறம் இந்த துறையில் மனசாட்சி படி எல்லாம் வேலை செய்யணும் என்பதெல்லாம் கனவிலும் நடக்காத காரியம்.

 6. வாங்க சுந்தர் எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்..என் பதிவெல்லாம் மொக்கையா இருந்துதா 🙂

  //இளக்காரமாக ஏளனம் செய்வதும், கேலி செய்வதும் தவிர என்று மரியாதையாக அவர்களை நடத்தியிருக்கிறோம்?//

  இதற்க்கு இருவர் மீதும் தவறு உள்ளது என்பது என் கருத்து. அவர்களும் மதிக்கும் படி நடந்து கொண்டால் மட்டுமே அதற்கு வாய்ப்புண்டு. ஆனால் நம்ம மக்கள் என்னைக்கு ஒருத்தரை பாராட்டி இருக்காங்க, நிறை குறை இரண்டையும் சொல்ல வேண்டும். ஆனால் குறை கண்டுபிடித்தே வாழ்பவர்கள் தான் பலர்.

  //அமெரிக்க வீரர்களை விமான நிலையத்தில் பார்த்தமாத்திரத்தில் – அல்லது எந்த இடத்தில் அவர்களைப் பார்த்தாலும் இனம், மதம், மொழி, கட்சி என்று எந்த பேதமுமில்லாமல் கைதட்டிப் பாராட்டி அமெரிக்கர்கள் வரவேற்கிறார்கள் இங்கு! //

  நம்மவர்களும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். காவலர்களை தான் மதிப்பதில்லை.

  //அடிப்படை ஒழுக்கம், நேர்மை, தேசப்பற்று, பொதுநல சிந்தனை, ஒற்றுமை, பொதுவில் நடந்துகொள்ளும் பழக்கவழக்கங்கள், நாகரிகங்கள் ஆகியவற்றை கட்டாயமாக்கிப் பயிற்றுவிக்கச் செய்யவேண்டும்!//

  நல்ல யோசனை தான் ஆனால் செயல் படுத்துவது தான் சிரமம்.

  //’பிற்படுத்தப்பட்ட ஜாதி’ என்று பிஞ்சு மனதில் அங்கேயே நஞ்சை ஊன்றிவிடுகிறார்கள்//

  கசப்பான உண்மை தான் 🙁

  //எல்லாரையும் மாற்றி, சமுதாயம்… அட போங்கப்பா! ஆயாசமாக இருக்கிறது.//

  என் மனதை பிரதிபலிக்கிறீர்கள் :-)))

  //நாம் என்ன ஒழுங்கு? என்ற கேள்வியையே கேட்டுக்கொள்வதில்லை. :(//

  சரியா சொன்னீங்க. ஊரெல்லாம் குப்பையாக இருக்குதுன்னு சொல்றோம், அந்த மாதிரி குப்பைகளை போடுவது யாரு??? வசதி செய்து கொடுத்தாலும் நாம வெளியே தான் ஒண்ணுக்கு போறோம். அப்புறம் என்னத்த சொல்றது..

  //வெயில், மழை, தூசி என்று எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நாள் முழுதும் முச்சந்தியில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலரிடம் //

  இருப்பதிலேயே ரொம்ப கொடுமையான வேலை இதுதான்னு நினைக்கிறேன். ரொம்ப பாவம் புகைக்கு நடுவே வெய்யில் கொடுமைக்கு இடையில்… என்ன இவங்க, நம்ம கிட்ட அனைத்தும் சரியா இருந்தும் லஞ்சம் வாங்கும் போது அவர்கள் மீதான பரிதாபம் குறைந்து விடுகிறது.

  //சென்னையிலிருந்து லொங்கு லொங்கு என்று இயந்திர சத்தம், சூடு, என்று எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு 10 மணி நேரம் பேருந்தை இரவில் ஓட்டி மதுரைக்குக் கொண்டு வந்து சேர்த்த அரசுப் பேருந்து ஓட்டுனருக்கு //

  இவங்க நிலைமையும் பாவம் வெய்யில் என்றாலும் கொடுமை குளிர் என்றாலும் கொடுமை. இரண்டுமே இவருக்கு உச்சத்தில் இருக்கும். அதுவும் வெய்யில் காலங்களில் அந்த இஞ்சின் அருகே உட்கார்ந்து … என்னமோ போங்க…:-(

  //குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குவது //

  என் பதிவு அப்படி இல்லை என்றே கருதுகிறேன் 🙂 பொதுவாக நான் எப்போதும் நிறை குறை இரண்டையும் கூறுவேன்.

  //ரொம்ப நீளமாக அறுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஏதோ சொல்லத் தோன்றியது//

  தன்னடக்கமா சொல்லுறீங்க. அருமையா கூறி இருக்கீங்க, இதை நீங்க ஒரு பதிவாவே போட்டு இருக்கலாம் 🙂

  சுந்தர் உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. அடிக்கடி வாங்க உங்க கருத்த சொல்லுங்க. தவறு இருப்பின் சுட்டி காட்டுங்க.

 7. எல்லாம் சரி சுந்தர்.

  ஆனால் அவர்கள் மீது இருக்கும் மரியாதையை அவர்களாகவே குறைத்துக் கொள்கிறார்களே.

  இரண்டு உதாரணம் தருகிறேன்.

  1. எந்த லாரி ட்ரைவரை வேண்டுமானலும் கேட்டுப் பாருங்கள் போலிசாரைப் பற்றி நல்ல ரிப்போர்ட் தருகிறார்களா என்று.

  2. பாதையோர வியபாரிகளிடம் கேட்டுப்பாருங்கள் கண்ணீர் விட்டுக் கதறுவர்.

  பழனியிலுள்ள என் நன்பன் பேக்கரியில் நடந்த சம்பவம். வாடிக்கையாளருக்கு பிஸ்கட் பாக்கட்டைக் கொடுக்கும் போது கை தவறி கீழே விழுந்து சிதறி விட்டது. வாடிக்கையாளர் சென்றவுடன், கடைச்சிறுவன் கீழே இரங்கி ஒவ்வொரு பிஸ்கட்டாக எடுத்து ஊதித் துடைத்து பாக்கெட்டிலேயே வைத்து ரப்பர் பேண்ட் போட்டுக் கட்டி வைத்தான்.

  இதை யாருக்கவது விற்பாயா அல்லது கம்பெனியில் கொடுத்து டேமேஜ் க்ளைம் செய்வாயா என்று கேட்டதற்கு, இதுக்குன்னெ ஒருத்தன் வருவாம் பாரு என்று சொன்னான்.

  கடை அடைக்கும் நேரம், ஒரு காவலர் வந்தார். அவரிடம் அந்த பிஸ்கட்டைக் கொடுத்தான் கடைச் சிறுவன். பின்பு காவலரைத் தொடருமாறு நன்பன் கண் ஜாடை காட்டி னான். அவர் பக்கத்து ஸ்வீட் ஸ்டால், புரோட்டக்கடை, பூக்கரி, பழக்கூடைக்காரி ஆகியோரிடம் பொட்டலங்களைப் பெற்றுக் கொண்டு நடையைக் கட்டினார்.

  இப்படித்தான்டா செய்றார் இரண்டு வருடமாக ஒரு பைசா கூடத் தருவதில்லை என்றான்.

  பரவாயில்ல, அவரு குழந்தை இந்த பிஸ்கட்டை சாப்பிட்டு ஏதாவது ஆயிருச்சுன்னா நமக்குத்தான்டா பாவம். ஏதாவது விலை குறைந்த பிஸ்கட்டைக் கொடுத்துச் சமாளி என்றேன்.

  எனக்குத் தெரி்ஞ்ச குடும்பத்ல ஒரு பெண் காதலனுடன் சென்று பின் ஒரு மாதம் கழித்து இருவருமாக வந்து சேர்ந்தனர். இடைப்பட்ட காலத்தில் போலிசில் சொல்லியதால் அவர்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம். 50 ரூ ரிசார்ஜ் கூப்பன் மட்டும் 5000 ரூபய்க்கு வாங்கிக் கொடுத்திருப்பர்கள்.

  தன் குடும்பத்துக்கு தன் சம்பாத்தியத்துல சாப்பாடு போடுபவன்தான் மனிதன்.

  நாம படிக்கிற காலத்துல அவங்க மேல ஒரு பயம் கலந்த மரியாதை இருந்திச்சு. இப்ப வெறுப்புதான் இருக்கு.

  இதையும் மீறி சில நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்கள் இனிமேல் இந்த வேலைக்கு வராமல் இருப்பது நல்லது.

 8. //வடகரை வேலன் said…
  இடைப்பட்ட காலத்தில் போலிசில் சொல்லியதால் அவர்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம். 50 ரூ ரிசார்ஜ் கூப்பன் மட்டும் 5000 ரூபய்க்கு வாங்கிக் கொடுத்திருப்பர்கள்.//

  அட பாவிகளா!! இதெல்லாம் நடக்குதா….நல்ல வேலை ரிசார்ஜ் கூப்பன் வாங்குனதோட நிறுத்திகிட்டாங்க.. அதை போடறதுக்கு கைத்தொலைபேசி வாங்கி தர சொல்லாம இருந்தாங்களே :-))

 9. வாங்க முரளிக்கண்ணன். பதிவர் சந்திப்புக்கு தயாராகிட்டீங்க போல 😉

 10. //மாமூல் வாங்குபவர்களையும், கடைகடையாகச் சென்று ஓசியில் தேவையானவற்றை வாங்குபவர்களையும் சாலையோர உணவுக் கடைகளில் வாங்கித் தின்றுவிட்டுக் காசுகொடுக்காமல் செல்லும் காவலர்களையும் புறந் தள்ளுங்கள்.//

  சுந்தர் பாதிக்கபடுபவர்கள் அவ்வாறு செய்வார்களா என்பது சந்தேகம் தான். எனென்றால் ஏழைகள், தங்களிடம் இருக்கும் கொஞ்சத்தையும் இப்படி அதிகாரத்தை பயன்படுத்தி பிடுங்குகிறார்களே என்று வெறுத்து போய் இவர்களை கண்டாலே வெறுப்பாகி விடுகிறார்கள். எப்படி கற்பழிக்கப்படும் பெண் ஆண் வர்க்கத்தையே வெறுக்கிறாள். பாதிப்பு அதிகம் ஆகும் பொது அதனுடைய வெறுப்பின் அளவும் அதிகம் ஆகிறது.

  //கடமையைச் செய்பவர்களை அடையாளம் கண்டு பாராட்டுங்கள். ஊக்குவியுங்கள். அவர்களைக் கெளரவப்படுத்துங்கள்.//

  இதற்க்கு 100% என் சம்மதத்தை தெரிவிக்கிறேன். ஒருவர் தவறு செய்யும் பொது திட்டுகிறோம், அதே நபர் ஒரு சிறப்பான செயலை செய்யும் போது ஏன் பாராட்டக்கூடாது? அந்த மனம் ஏன் பலருக்கு வருவதில்லை. என்னுடைய கொள்கை எப்போதும் ஒருவர் சிறப்பாக ஒரு செயலை செய்தால் மனம் திறந்து பாராட்டிவிடுவேன், அது யாராக இருந்தாலும், அவரை எனக்கு பிடிக்கவில்லை என்றாலும்.

  //நிலவின் இருள் பக்கத்தை நாம் ஏன் பார்க்க வேண்டும்? வெளிச்சத்தை மட்டும் பார்ப்போமே//

  நம்ம ஊரில் இருள் அதிகமாகவும் வெளிச்சம் குறைவாகவும் இருப்பதே பல பிரச்சனைகளுக்கு காரணம் என்று கருதுகிறேன்.

  சுந்தர் நீங்க ரொம்ப நல்லவர் என்று நினைக்கிறேன் :-)))

 11. //’கடமையை மீற லஞ்சம்’ என்ற நிலை மாறி ‘கடமையை செய்ய லஞ்சம்’ என்ற நிலைதான் இப்பொழுது.//

  //பணபலம் இல்லாமல் இந்த சேவை மையங்களில் ஒரு சிறு கல்லைக் கூட புரட்டமுடியாது என்பதுதான் உண்மை.//

  //இதில் கடமையை இலஞ்சம் வாங்காமல் செய்தால் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நாம் எவ்வளவு தூரம் மரத்துப் போய்விட்டோம் என்று காட்டுகிறது.//

  நீங்கள் கூறுவது சரி தான் ஸ்ரீதர்.

 12. அவர் தேர்வுக்கு வந்த நபரை பார்த்து இப்படி தான் நினைத்து இருப்பாரு “எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்” :-))))

 13. ரெம்ப சந்தோஷமா இருக்கு சுந்தர். இவ்வளவு பாசிட்டிவ்வா இருப்பதைப் பாக்குறப்போ.

  நானும் உங்கள மாதிரித்தான் இருந்தேன்.

  குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல். வள்ளுவர் சொல்லியிருக்கார்.

  இங்க குணத்தை விட குற்றம் அதிகமா இருக்குங்றதுதான் வேதனையாயிருக்கு.

  நான் பேரூர் கோயிலில் தொலைத்த யமஹா பைக்குக்கு FIR போடவே DSP ரெகமெண்டேசன் வாங்க வேண்டியதாகிவிட்டது.

  பைக்க தொலைக்காம வச்சுக்க முடியல உனக்கெல்லாம் எதுக்குய்யா பைக்குன்னு கேக்குறார் ஸ்டேசன் SI. என்ன சொல்ல. 90 நாள் கழித்து non tracebale certificate வாங்கறதுக்குள்ள தாவு தீந்துருச்சு.

  வெறுப்புல சொல்லலிங்க. நல்ல திறமையும் நேர்மையும் உள்ளவங்க இங்க வந்து மன வேதனையோட சிரமப்படவேண்டாம்னுதான் சொல்லுறேன்.

  குருதிப்புனல்ல சொன்ன மாதிரி எல்லோருக்கும் ஒரு பாய்லிங் பாய்ண்ட் இருக்கு.

  ஸ்டேசனுக்குள்ள போற வரைக்கும் இருக்கும் இமேஜுக்கும், ஸ்டேசனில் நிலவும் ரியாலிட்டிக்கும் சம்பந்தமே இல்லிங்க.

 14. எனது கல்லூரி காலத்தில் ஒரு நன்பர் இப்படித்தான். எஸ்.ஐ தேர்வுக்காக மிகவும் கடுமையாக் உழைத்தார். முதுகலை பட்டம், தடகளத்தில் பல்கலைகழக அளவில் சான்றிதழ்கள், பல்வேறு விளையாட்டு சான்றிதழ்கள், கணிணி படிப்பு சான்றிதழ் என்று பக்காவாக வைத்திருந்தார். இது எல்லாம் விட 1.5 இலட்சம் ரூபாய்கள் தயாராக வைத்திருந்தார் ‘மேற்படி செலவுக்கு’. அந்த நேரத்தில் அது மிகப்பெரிய தொகை. அவருடைய ஒரே நம்பிக்கை ‘சேர்ந்த ஒரு வருடத்தில் அந்த பணத்தை திருப்பி எடுத்திடுவோம்ல’. இதுதான் நிதர்சனம். இப்படிபட்ட நிலையினால்தான் ஏனோ அரசாங்க வேலையில் சேரவே பிடிக்காமல் போனது.

 15. //ரெம்ப சந்தோஷமா இருக்கு சுந்தர். இவ்வளவு பாசிட்டிவ்வா இருப்பதைப் பாக்குறப்போ.//

  சுந்தர் தாறுமாறா பாசிட்டிவா இருக்காரு :-)))

  //பைக்க தொலைக்காம வச்சுக்க முடியல உனக்கெல்லாம் எதுக்குய்யா பைக்குன்னு கேக்குறார் ஸ்டேசன் SI.//

  தொலைஞ்ச பைக் கண்டுபிடித்து தர முடியல நீங்க எல்லாம் எதுக்கு SI யாக இருக்கீங்கன்னு ………….கேட்கலாம் ஆனா கேட்க முடியாதே :-)))

  //நல்ல திறமையும் நேர்மையும் உள்ளவங்க இங்க வந்து மன வேதனையோட சிரமப்படவேண்டாம்னுதான் சொல்லுறேன்.//

  இந்த பிரச்சனை அனைத்து துறைகளிலும் இருக்கிறது. இப்போது வேலை செய்யும் அனைவரும் மனசாட்சியுடன் வேலை செய்கிறார்கள் என்று கருதுகிறீர்களா??

 16. அது சரி. வலதோரம் இருக்கும் அந்த இளைஞரும் கொடி மாதிரியே இருக்காரே! எந்த தைரியத்துல நேர்முகத்திற்கு வந்தார்னு தெரியலையே! 🙂

  நிற்க.

  காவல்துறையில் நேர்மையானவர்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் மாற்றல் அது இது என்று அவஸ்தைப்படுவதென்னவோ நிஜம்தான். ஆனால் நம்மில் எவ்வளவு பேர் காவலர்கள் மீது மரியாதை செலுத்துகிறோம்? இளக்காரமாக ஏளனம் செய்வதும், கேலி செய்வதும் தவிர என்று மரியாதையாக அவர்களை நடத்தியிருக்கிறோம்? எத்தனை பேர் நம் ஏரியாவில் நன்றாகப் பணிபுரியும் கடமை வீரர்களை பொதுமக்கள் சார்பாகப் பாராட்டியிருக்கிறோம்?

  என்னதான் அரக்கத்தனம் செய்து அட்டூழியம் செய்தாலும் ஈராக் பயணம் முடித்து சீருடையோடு ஊர் திரும்பும் அமெரிக்க வீரர்களை விமான நிலையத்தில் பார்த்தமாத்திரத்தில் – அல்லது எந்த இடத்தில் அவர்களைப் பார்த்தாலும் இனம், மதம், மொழி, கட்சி என்று எந்த பேதமுமில்லாமல் கைதட்டிப் பாராட்டி அமெரிக்கர்கள் வரவேற்கிறார்கள் இங்கு!

  நம்மூரில் பள்ளியில் மனப்பாடம் செய்து ஒப்புவி(வாந்தியெடு)க்கும் பழக்கத்தை மாற்றி முதலில் அடிப்படை ஒழுக்கம், நேர்மை, தேசப்பற்று, பொதுநல சிந்தனை, ஒற்றுமை, பொதுவில் நடந்துகொள்ளும் பழக்கவழக்கங்கள், நாகரிகங்கள் ஆகியவற்றை கட்டாயமாக்கிப் பயிற்றுவிக்கச் செய்யவேண்டும்! விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யும் போதே ‘ஜாதி?’ என்ற கேள்வியில் மற்ற எல்லாவும் அடிபட்டுப் போகிறது. ‘நாம் வேற ஜாதி’ அல்லது ‘பிற்படுத்தப்பட்ட ஜாதி’ என்று பிஞ்சு மனதில் அங்கேயே நஞ்சை ஊன்றிவிடுகிறார்கள். பிறகு அது வளர்ந்து விருட்சமாகி – சுயநலம் ஒன்றைத் தவிர வேறு எதையும் நினைத்துப் பார்க்கமுடியாத தலைமுறைகளாக எல்லாரையும் மாற்றி, சமுதாயம்… அட போங்கப்பா! ஆயாசமாக இருக்கிறது.

  தலை ஒழுங்காக இருந்தால்தான் வால் ஒழுங்காக இருக்கும் என்ற பதினெட்டாம் நூற்றாண்டுப் பழமொழியைச் சொல்லிச்சொல்லியே இன்று வரை பழியை அரசாங்கம் மீது போட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்கிறோம். நாம் என்ன ஒழுங்கு? என்ற கேள்வியையே கேட்டுக்கொள்வதில்லை. 🙁

  வெயில், மழை, தூசி என்று எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நாள் முழுதும் முச்சந்தியில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலரிடம் நின்று ஒரு சிறிய பாராட்டைத் தெரிவிக்க நமக்கு ஏன் தோன்றுவதில்லை?. ஒரு டம்ளர் குளிர்ந்த பானத்தை அவருக்கு வாங்கித் தரவேண்டும் என்று நமக்கு ஏன் தோன்றுவதில்லை?. ‘நீங்கள் செய்யும் சேவைக்கு ரொம்ப நன்றி அண்ணே’ என்று ஒருவரிடம் சொன்னால் வெடித்து ஆனந்தத்தில் அழுதுவிடுவார்! அரசு அளிக்கும் அங்கீகாரத்தை விட, பயனாளிகளான நாம் அளிக்கும் அங்கீகாரத்தினால் அவர்களுக்குக் கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்கவில்லை. காவலர்கள் என்று மட்டுமில்லை. பொதுவாகவே சேவைத்துறையில் இருக்கும் யாருக்கும் மனமார்ந்த பாராட்டுகளையோ நன்றியையோ நாம் தெரிவிப்பதில்லை.

  சென்னையிலிருந்து லொங்கு லொங்கு என்று இயந்திர சத்தம், சூடு, என்று எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு 10 மணி நேரம் பேருந்தை இரவில் ஓட்டி மதுரைக்குக் கொண்டு வந்து சேர்த்த அரசுப் பேருந்து ஓட்டுனருக்கு கடைசியாக இறங்குமுன் ‘நல்லபடியாக ஓட்டிக்கொண்டு வந்து சேர்த்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் அண்ணே’ என்று நான் ஒரு முறை சொன்னதும் அவர் கண்ணில் நீர் உடனடியாகத் தளும்பிவிட்டு வாய்நிறைந்த சிரிப்புடன் ‘சரிங்க தம்பி’ என்றார். மறக்கமுடியாத உணர்வு வெளிப்பாடு அது. இது ஒரு உதாரணத்திற்கு – நம்மால் Motivate செய்யப்படவேண்டிவர்கள் நிறையவே இருக்கிறார்கள். செய்யத் துவங்கினால் அவர்களது மேலிட பிரஷர் போன்றவற்றை அவர்களால் மனதளவில் துச்சமாக எதிர்கொண்டு செயல்திறனை இன்னும் மேம்படுத்திக் கொள்வார்கள்!

  ஊடகங்கள் செய்யும் அதே தவறை நாமும் செய்யாமல் – குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குவது – நல்லவற்றை அடையாளம் கண்டு அங்கீகரிக்கத் துவங்கிவிட்டால் போதும்!

  ரொம்ப நீளமாக அறுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஏதோ சொல்லத் தோன்றியது.

  நன்றி.

 17. வடகரை வேலன்

  //நாம படிக்கிற காலத்துல அவங்க மேல ஒரு பயம் கலந்த மரியாதை இருந்திச்சு. இப்ப வெறுப்புதான் இருக்கு.//

  நல்லவர்களை நாம் பாராட்டி ஆதரித்து ஊக்குவிக்கத் தவறுவதும் மெளனமாக இருப்பதும், அல்லாதவர்களை மறைமுகமாக ஆதரித்து ஊக்குவிப்பதற்குச் சமம். இப்போது அதுதான் நடக்கிறது.

  நாம் எப்போது நல்லவர்களுக்கு, கடமையைச் செய்பவர்களுக்கு அங்கீகாரமும், பாராட்டும் குறையாது அளிக்கத் தொடங்குகிறோமோ அன்று இம்மாதிரி லஞ்சம் வாங்குபவர்களும், திறமையற்றவர்களும் வெட்கப்படத் துவங்குவார்கள்.

  //இதையும் மீறி சில நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்கள் இனிமேல் இந்த வேலைக்கு வராமல் இருப்பது நல்லது.
  //

  தவறான எதிர்மறை (வெறுப்பில் சொல்கிறீர்கள் என்றாலும்) சிந்தனை. விளையாட்டுக்குக்கூட இப்படிச் சொல்லாதீர்கள்.

  இன்னொரு அனுபவம்.

  சென்னை விமானநிலையத்தில் இறங்கி பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியில் வருவதற்கு முன்பாக சுங்க அதிகாரிகள் வெளியே வருபவர்களைக் கண்காணித்துக்கொண்டும், பயணிகளின் உடமைகளைப் பரிசோதித்துக்கொண்டும், சந்தேகப்படும்படியாக நடவடிக்கைகளுடன் இருப்பவர்களை ஓரம் கட்டிச் சோதித்தும் இருப்பார்கள். (சிலர் மின்னணு, தங்கம் முதலியவற்றை சட்டம் வரையறுத்த அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டு வரும் பயணிகளையும் ஓரங்கட்டி, வரி கட்டுகிறாயா? அல்லது எனக்குக் கொஞ்சமாகத் தள்ளிவிட்டு எடுத்துக்கொண்டு போகிறாயா என்ற பேரத்திலும் இருப்பார்கள்).

  மடியில் கனமில்லாது இருந்தாலும் அனாவசியமாக நம்மை நிறுத்தி எதையாவது கேட்டுக் குடைவார்களோ என்று லேசான வெறுப்புடன் வாயிலை நோக்கி நடந்தேன். கடவுச்சீட்டையும் உடமைகளையும் சோதித்துக்கொண்டிருந்த அந்த அதிகாரி இறுகிய முகத்துடன், விறைப்பாக எல்லாரும் எதிரிகள் போன்ற பாவத்துடன் ‘போ.. போ.. இரு.. ஓரமா நில்லு’ என்று இயந்திர கதியில் பணிபுரிந்துகொண்டிருந்தார். என் கடவுச்சீட்டை அவர் வாங்கி பரிசோதித்துக்கொண்டிருக்கையில், என் குட்டிப்பெண் (4 வயது அப்போது) அவரை நெருங்கி அவர் சட்டையை உற்றுப் பார்த்தாள். அவர் அப்போது தன் முன்னால் அவள் நின்றுகொண்டிருப்பதை கவனித்தார். இவள் அவர் சட்டைப் பையின் மீது குத்தியிருந்த இந்திய சின்னம் (மூன்று சிங்கங்கள்) மற்றும் கொடியைப் பார்த்துவிட்டு ‘அங்க்கிள் இது இண்டியன் எம்பிளம்; நேஷனல் ஃப்ளேக் தான?’ என்று கேட்க, அவர் அந்தக் குழந்தையின் வினவலில் சட்டென இறுக்கம் தளர்ந்து சிரித்துக்கொண்டே ‘ஆமம்மா’ என்று சொல்லி அவள் தலையைக் கோதிவிட்டு ‘போங்க ஸார்’ என்று எங்களை வெளியே அனுப்ப, வெளி வாயிலில் வாகனத்திற்குக் காத்திருந்த நிமிடங்களில் அவரைக் கவனித்தேன். எல்லாப் பயணிகளையும் அதன் பிறகு புன்னகையுடன் அணுகிக்கொண்டிருந்தார்.

  எனக்கு இதை வேறு எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. சுருக்கமாகச் சொன்னால் மாமூல் வாங்குபவர்களையும், கடைகடையாகச் சென்று ஓசியில் தேவையானவற்றை வாங்குபவர்களையும் சாலையோர உணவுக் கடைகளில் வாங்கித் தின்றுவிட்டுக் காசுகொடுக்காமல் செல்லும் காவலர்களையும் புறந் தள்ளுங்கள். கடமையைச் செய்பவர்களை அடையாளம் கண்டு பாராட்டுங்கள். ஊக்குவியுங்கள். அவர்களைக் கெளரவப்படுத்துங்கள். மற்றவர்களின் எண்ணிக்கை தானாகக் குறையும். தவறு செய்பவர்களும் வெட்கி அவர்களது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வார்கள் என்பது எனது நம்பிக்கை!

  நன்றி.

 18. //1. எந்த லாரி ட்ரைவரை வேண்டுமானலும் கேட்டுப் பாருங்கள் போலிசாரைப் பற்றி நல்ல ரிப்போர்ட் தருகிறார்களா என்று.

  2. பாதையோர வியபாரிகளிடம் கேட்டுப்பாருங்கள் கண்ணீர் விட்டுக் கதறுவர்.

  //

  பாதையோர வியாபாரம் செய்த அனுபவம் இருப்பதால் நீங்கள் கூறுவதை நான் மறுக்கவில்லை. இம்மாதிரியானவர்கள் இப்போது பெரும் எண்ணிக்கையில் பெருகிவிட்டதால் உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம். கடந்த சில வருடங்களாக இம்மாதிரி ஆசாமிகளைக் கையும் களவுமாகப் பிடித்து ஊடகங்கள் அவ்வப்போது வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதும் நடக்கிறது. அவர்கள் எப்படியோ போய்த் தொலையட்டும் நண்பரே.

  நிலவின் இருள் பக்கத்தை நாம் ஏன் பார்க்க வேண்டும்? வெளிச்சத்தை மட்டும் பார்ப்போமே.

 19. //நல்லவற்றை அடையாளம் கண்டு அங்கீகரிக்கத் துவங்கிவிட்டால் போதும்!//

  இதில் ஆச்சர்யம் என்னவென்றால் – ‘கடமையை மீற லஞ்சம்’ என்ற நிலை மாறி ‘கடமையை செய்ய லஞ்சம்’ என்ற நிலைதான் இப்பொழுது. அவர்கள் கடமையை செய்யத்தான் சம்பளம், வேலை நிரந்தரம், பென்ஷன், பஞ்சப்படி வகையறாக்கள்.

  எந்த போலீசாரும் டீக்கடையில் காசு கொடுத்து டீ குடிப்பதில்லை. பேருந்தில் காசு கொடுத்து டிக்கெட் எடுப்பதில்லை. அப்படி செய்யும் ஒரு சில போலீசாரை அந்த டீக்கடைக்காரர் / கண்டக்டர் நிச்சயம் பாராட்டத்தான் செய்வார். கூடவே ‘பொழைக்கத் தெரியாத மனுசன்’ என்றும் சொல்வார்கள். ஏனென்றால் நிலைமை அவ்வாறு.

  கும்பலாக ஊர்வலம் போகும்போது போலீஸாரை ‘மாமா’ என்று கிண்டல் செய்யலாம். ஆனால், ஒரு போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து பாருங்கள். அது ஒரு சேவை நிறுவனம் மாதிரியா இருக்கிறது? ஒரு சாதாரண பொதுசனம் ஒரு புகாரை கொடுக்க முடியுமா? செல்வாக்கு இல்லாமல் நீங்கள் யார் மீதும் புகார் கூட செய்ய முடியாது.

  கொஞ்சம் விவரம் தெரிந்த பொதுசனமாக இருந்தால் அவர்களும் கொஞ்சம் விவரம் சொல்லி இழுத்தடிப்பார்கள்.

  சாதாரண பாஸ்போர்ட் வெரிபிகேஷன், முக்கிய ஆவணங்கள் தொலைந்து போய்விட்டது, சில்லறைத் திருட்டு – இது மட்டும்தான் அவர்களுக்கு கேஸ்.

  ஒரு மணல்திருட்டை பற்றி புகார் கொடுத்து பாருங்கள்… உங்களை சமாதானப் படுத்தி பஞ்சாயத்து செய்யத்தான் முயல்வார்கள். செல்வாக்கு, பணபலம் இல்லாமல் இந்த சேவை மையங்களில் ஒரு சிறு கல்லைக் கூட புரட்டமுடியாது என்பதுதான் உண்மை.

  இதில் கடமையை இலஞ்சம் வாங்காமல் செய்தால் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நாம் எவ்வளவு தூரம் மரத்துப் போய்விட்டோம் என்று காட்டுகிறது.

 20. சுந்தர் உங்கள் பதிவை படித்தேன், மிக அருமையாக எழுதி இருக்கீறீர்கள் பாராட்டுக்கள். உங்கள் முடிவிலும் எண்ண ஓட்டத்திலும் தொடர்ந்து நிலையாக நீங்கள் இருப்பதை எண்ணி நான் மிகவும் சந்தோசபட்டேன். உங்களை மாதிரி ஒரு சிலர் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள் என்று நினைக்கும் போது மன நிறைவாக இருக்கிறது. ஆனால் நடைமுறை என்று வரும் போது அவ்வாறு இருக்க முடிவதில்லை அவ்வாறு இருந்தால் முட்டாளாக்கப்படுகிறோம் என்பது கசப்பான உண்மை.

  நீங்கள் உங்கள் இந்த முடிவில் 8 வகுப்பில் இருந்தே இவ்வாறு இருப்பது,உங்கள் முதிர்ச்சியான எண்ணத்தையும் சிறுவயதிலே உங்களுக்கு தோன்றிய இந்த பரந்த எண்ணத்தையும் பார்க்கும் போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. அதற்கு உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  //விளம்பரம் என்று நீங்கள் நினைக்காத பட்சத்தில் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு சிறு கட்டுரையை படிக்க முடியுமா?//

  இவ்வாறு என் கூறி என் மனதில் இடம் பிடித்து விட்டீர்கள், அல்லது என்னை உங்களை பற்றிய ஒரு உயர்வான எண்ணத்தை கொடுத்து விட்டீர்கள். அந்த எண்ணம் இதால் மட்டும் அல்ல உங்கள் ஒட்டு மொத்த பதிவாலும் வந்ததே.

  //நாளை நல்லதாய் புலரட்டும். விழிப்புணர்வு பெரும் அளவில் ஏற்படட்டும். தனியொருவனாய் நாம் ஒவ்வொருவரும் லஞ்சத்துக்குத் துணைபோகாமல் நம்மால் இயன்ற அளவு நேர்மையாய் எதையும் அணுக முயற்சி எடுத்தாலே போதுமானது. மாற்றம் நிகழும்//

  இவ்வாறு நீங்கள் கூறி இருந்தீர்கள், உங்களை மனது வருந்த வேண்டும் என்று சொல்வதாக நினைக்க வேண்டாம், இந்த இடைப்பட்ட காலங்களில் நீங்கள் இது அதிகரித்து இருப்பதை கண்டிப்பாக கண்டு இருக்க முடியும். இதற்க்கு முடிவு இப்போதைக்கு இல்லை என்பது தான் கசப்பான உண்மை.

  நம்ம ஊர்ல நேர்மையா இருக்கிறவங்களுக்கு என்ன பெயர் தெரியுமா? “பொழைக்க தெரியாதவன்”

  நம்ம திருந்த வாய்ப்பே இல்லைன்னு தாங்க நினைக்கிறேன். எனக்கு இதை கூற கஷ்டமாக தான் இருக்கிறது. என்ன செய்வது நடைமுறை அப்படி தான் உள்ளது.

  சுந்தர் என் மனதில் இருந்து சொல்கிறேன் உங்களின் உயர்வான எண்ணத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இதை போல பாராட்டுக்கள் மட்டுமே உங்களுக்கு கிடைக்குமே தவிர (அதை கொடுக்க கூட தயங்க பலர் உண்டு) உங்கள் எண்ணம் ஈடேற வாய்ப்பில்லை 🙁

  ஆனால் நேர்மையாக இருப்பதில் கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைப்பதில்லை, குறிப்பாக யாருக்கும் பயப்பட தேவையில்லை. நீங்கள் முடிந்த வரை நேர்மையாக இருக்கும் போது உங்களுக்கு எந்த சிக்கலும் வராமல் இருக்க இறைவனை வேண்டுவதை தவிர எனக்கு வேறு வேறு வழி தெரியவில்லை.

 21. // அதிஷா said…
  //தொலைஞ்ச பைக் கண்டுபிடித்து தர முடியல நீங்க எல்லாம் எதுக்கு SI யாக இருக்கீங்கன்னு ………….கேட்கலாம் ஆனா கேட்க முடியாதே :-)))//

  கேட்டுதான் பாக்குறது //

  அதிஷா ஏன் இப்படி ஏன் மீது கொலை வெறியோட இருக்கீங்க, எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் :-))))))

 22. சுந்தர்,

  உங்கள் பதிவு பார்த்தேன். இன்றைய நிலவரம் இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது.

  ஆனாலும் னம்மிக்கை இழக்காமலும், குறைந்த அளவு சமரசத்துடனும் வாழ்க்கை நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

  கிரி வைத்த விவாதத்தை விட்டு விலகி விட்டோமோ என்று நினக்கிறேன்.

  காவலராகச் சேர்வதற்கு வேண்டிய தகுதிகள், சேர்ந்த பிறகு தேவையில்லமல் போய்விட்டதே என்பதுதான் அடிப்படை வாதம்.

  பஸ் ட்ரைவருக்கு கண் பார்வை குறைந்தால், அவரை பஸ் ஓட்ட அனுமதிப்பதில்லை.

  கண்பார்வை என்பது அடிப்படைத் தகுதி. அது போலத்தானே உடல் தகுதி என்பது காவலருக்கு.

  தகுதி இல்லாதவரை ஏன் வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

  உடல் தகுதியும் இல்லை, நேர்மையும் இல்லை என்றால்.

 23. // வடகரை வேலன் said
  கிரி வைத்த விவாதத்தை விட்டு விலகி விட்டோமோ என்று நினக்கிறேன்//

  ஆமாம். ஆனாலும் விவாதம் நன்றாக இருந்தது. நன்றி வடகரை வேலன், ஸ்ரீதர் நாராயணன் மற்றும் வற்றாயிருப்பு சுந்தர். பதிவு தொடங்கி இதை போல மிக சில பதிவுகள் மட்டுமே என்னுடையதில் பயனுள்ளதாக இருப்பதாக கருதுகிறேன்.

  //தகுதி இல்லாதவரை ஏன் வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.
  உடல் தகுதியும் இல்லை, நேர்மையும் இல்லை என்றால்//

  அப்புறம் நம்ம ஊர்ல காவலரே இருக்க முடியாதுங்க :-)) நம்ம ஊர்ல தகுதியே நீங்க மேல சொன்னது தான். தொப்பை இருந்தா தான் காவலர், நேர்மை இல்லைனா தான் குப்பை கொட்ட முடியும்.. என்னங்க பண்ணுறது புலம்புறது தவிர வேற ஒண்ணும் பண்ணுறதுக்கு இல்ல 🙁

 24. வடகரை வேலன், ஸ்ரீதர் நாராயணன், கிரி.

  நான் சொல்லவந்ததைச் சரியாக இன்னும் சொல்லவில்லை என்று தோன்றுகிறது. சற்றுக் கோர்வையாக யோசித்துவிட்டு மறுபடியும் வருகிறேன். அதுவரையில் – விளம்பரம் என்று நீங்கள் நினைக்காத பட்சத்தில் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு சிறு கட்டுரையை படிக்க முடியுமா? சுட்டி : http://agaramuthala.blogspot.com/2005/12/blog-post_15.html

  நன்றி

 25. //தொலைஞ்ச பைக் கண்டுபிடித்து தர முடியல நீங்க எல்லாம் எதுக்கு SI யாக இருக்கீங்கன்னு ………….கேட்கலாம் ஆனா கேட்க முடியாதே :-)))//

  கேட்டுதான் பாக்குறது ,

 26. //தவறு செய்பவர்கள் அதற்கான தண்டனையைப் பெற்றுத்தான் தீரவேண்டும் – இதில் எனக்கு மாற்றுக்கருத்தேயில்லை//

  தவறு செய்பவர்கள் தப்பித்து கொண்டே இருக்கிறார்கள், அது தான் வருத்தமாக இருக்கிறது.

  //எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்க்கிறேன்//

  நீங்கள் கூறுவது சரி தான். எண்ண அலைகளே அனைத்திற்கும் காரணம்.

  //சமீபத்தில் ‘சைக்கோ’ என்று வருபவன் போபவனையெல்லாம் பிடித்து எரித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ‘வீரம்’ எல்லாம் தவறு செய்யும் காவலரைத் தட்டிக் கேட்பதில் காட்டினாலென்ன//

  இது வேற ஒண்ணுமில்லைங்க, இவரை கொளுத்தினால் கேட்க யாரும் இல்லை, காவலர்கள் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்று தெரியும் அதனாலேயே யாரும் தட்டி கேட்பதில்லை. பிரச்சனை என்று வந்தால் உடன் இருந்தவர்கள் மாயமாய் மறைந்து விடுவார்கள். அதிகாரத்துடன் போட்டியிட சாதாரண மக்களால் முடிவதில்லை.

  //நம்மால் இயன்ற சிறு துளியைச் செய்வோம். பல வெள்ளமாக அது பல்கிப் பெருகும்.//

  இதை நான் வழிமொழிகிறேன்.

  //நம்பிக்கைதானே வாழ்க்கை?//

  கண்டிப்பாக 🙂

  //நன்றிகள் அனைவருக்கும்!//

  நாங்கள் தான் உங்களுக்கு நன்றி கூறவேண்டும். ஒரு நல்ல விவாதத்தை கொடுத்தற்காக.

 27. //இதில் நல்ல போலீசு, கெட்ட போலீசு என்று யாரையும் பிரிக்கமுடியாது. நல்ல போலீசு என்றால் மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொண்டு, உதைக்கமுடியும். “போராட்டம் சரியானது” அடிக்க மாட்டேன் என சொல்ல முடியுமா? அடுத்த நிமிசம் வேலை காலி!//

  :-))))

  உங்கள் வருகைக்கு நன்றி Socrates

 28. எனக்குத்தெரிந்தவர் ஒருவர் வயது முந்திர்ந்தநிலையில் காவல் பனியில் சேர்ந்தார். ஓரு நாள் சென்னை கோட்டை அருகில் சந்திக்க நேர்ந்தது. அவர் அங்கு பாதுகாப்புப் பனிக்காக வந்துள்ளார். Ok… I couldnt further continue with tamil. He told me that he is there for providing security for some party meeting on duty 24hrs. There were lot of like him. They dont have any place to stay. After sometime he got transferred to Chennai from Palani. After a long search we found a house for him in Triplicane for 1500RS rental. He said he could manage. After three months he said he could no more manage to be in Chennai with the given financial conditions. So he went back to a station near Palani as a driver in demotion, since he had license.

  After sometime when I met him Palani he said there is nothing much different, its very difficult to maintain dignity. He was asked by the SI there to get him cigarettes, at times anything he wishes. Of course with out giving money.

 29. //providing security for some party meeting on duty 24hrs//

  இது அவர்களுக்கான சாபம் வெட்டி பேச்சுக்கெல்லாம் பாதுகாப்பு கொடுத்தாக வேண்டியது.

  //its very difficult to maintain dignity.//

  கசப்பான உண்மை.

  //He was asked by the SI there to get him cigarettes, at times anything he wishes. Of course with out giving money.//

  இது தான் கொடுமை. சாபிடாமல் கூட இருந்து விடலாம், தன்மானத்தை விட்டு இருப்பது தான் முடியாத காரியம்.

 30. நண்பர்களுக்கு

  முதலில் கருத்துகளை ஆக்கப்பூர்வ விவாதமாக எடுத்துக்கொண்டமைக்கு நன்றிகள்.

  ‘அவர்களைப் புறந்தள்ளுங்கள்’ என்று நான் குறிப்பிட்டது ‘கண்டுக்காமல் விட்டுவிடுவோம்’ என்ற தொனியில் அமைந்துவிட்டது. அதே போல பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தை மனதில் கொள்ளாமல் ‘அவர்களைப் புறந்தள்ளுங்கள்’ என்று சொல்வதுபோலவும் அமைந்துவிட்டது. அப்படி நான் நினைக்கவில்லை – சரியாக எழுதாததால் ஏற்பட்ட தவறான புரிதல்கள் – மன்னிக்க.

  ‘இவர்களை நடுத்தெருவில் நிற்கவைத்துச் செருப்பால் அடிக்கவேண்டும்’ என்பதுதான் என் மனதில் எப்போதும் தோன்றும் உணர்வு. தவறு செய்பவர்கள் அதற்கான தண்டனையைப் பெற்றுத்தான் தீரவேண்டும் – இதில் எனக்கு மாற்றுக்கருத்தேயில்லை.

  ‘நல்லவர்கள் வரவேண்டாம். வந்து கஷ்டப்படவேண்டாம்’ அல்லது ‘நம்ம திருந்த வாய்ப்பே இல்லைன்னு தாங்க நினைக்கிறேன்’ ‘புலம்புறது தவிர வேற ஒண்ணும் பண்ணுறதுக்கு இல்ல’ போன்ற சிந்தனைகள் நம்பிக்கையின்மை, விரக்தியின் வெளிப்பாடுகள். இந்தக் கணம் வரை திடீர் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை. வெறுப்பின், விரக்தியின் எல்லைகளுக்குப் பலமுறை சென்ற அனுபவமும் இருக்கிறது. ஆனால்..

  எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்க்கிறேன். வாழ்க்கையில் எதையாவது நம்பித்தான் ஆகவேண்டும். செயலளவில் இறங்கிச் செய்கிறோமோ எல்லையோ, ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் உடைந்து போகாமலிருக்கவும், கடுஞ் சவால்களையும், துன்பங்களையும், வேதனைகளையும் சந்தித்துத் தாங்கிக் கொள்ளவும் பல தருணங்களில் உதவியாயிருக்கிறது. நம் நாட்டில் மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று நான் விழைகிறேன். தீவிரமாக நம்புகிறேன். என்னைப் பொருத்தவரை, if you’re not part of the solution, you are part of the problem – அவ்வளவுதான்.

  //ஆனால் நேர்மையாக இருப்பதில் கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைப்பதில்லை, குறிப்பாக யாருக்கும் பயப்பட தேவையில்லை. //

  இந்த எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருந்தாலே போதுமானது. செயல்வடிவில் காட்ட சந்தர்ப்பங்கள் வராமல் போகாது.

  என் நம்பிக்கைப் பொய்த்துப் போகலாம். ‘லஞ்சம் கொடுத்தால் தவறில்லை’ என்பது சிறுவயதிலிருந்து போதிக்கப்பட்டுவிட்டதால் இதை மாற்றுவதற்கு இன்னும் எத்தனையோ வருடங்களாகலாம்.

  இது முடிவற்ற விவாதமாகத் தோன்றலாம். பதிவிலிருந்து விலகிச் செல்வதால் இன்னொரு நாளில் இன்னொரு பதிவில் விவரமாக உரையாடலாம். sorry for the degression.

  சரி. பதிவிற்கு வருவோம். சென்ற வருடம் என்று நினைக்கிறேன். ஜப்பானிலோ எங்கோ காவல்துறையினருக்கு உடல்தகுதிச் சோதனை (சேருவதற்கு இல்லை. வேலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு) நடத்தி கிலோமீட்டர் கணக்கில் ஆயிரக்கணக்கானவரை ஓடவிட்டதில் பத்து பதினைந்து பேர் மாரடைத்துச் செத்துப் போனார்கள். இது தவிர்க்க முடியாதது. உடல்தகுதி இல்லாவிட்டால் இத்துறைக்கு வரக்கூடாது. தகுதி பார்த்து சேர்ப்பதோடு நில்லாமல், தகுதியைத் தக்கவைத்துக் கொள்கிறார்களா என்பதற்கான சோதனைகளையும் – ஆள்சேர்ப்புக்கு ஊரைக்கூட்டி டமாரம் அடித்துச் செய்வதுபோல – செய்யவேண்டும். கவாத்து பயிற்சிகள் இல்லாமலில்லை. ஆனால் வெளிப்படையாக இல்லை என்று நினைக்கிறேன். தற்போதைய நிலவரம் தெரியாததால் இதை உறுதிபடுத்திக்கொள்ள முடியவில்லை.

  காவல்துறையின் பானைத் தொப்பை ஏற்றுக்கொள்ளவே முடியாதது. அவர்களையும் 24 x 7 என்று கண்ட நேரத்திலும் கண்ட இடங்களிலும் கண்ட நாய்களுக்காக வேலைசெய்ய அழைக்காமல், அத்துறையின் மனிதவள மேம்பாட்டுத்துறையை களையெடுத்து, சிறப்பாகக் காவல்துறை இயங்கும் மற்ற நாடுகளின் மாதிரியைக் கொண்டு சீரமைத்தால் ஓரிரு வருடங்களில் நிலைமையை வெகுவாகச் சீரடையலாம். நம் அரசுகள் எடுத்துக்கொள்ளும் மாதிரிகள் எப்படியிருக்கிறது என்றால் – லட்ச லட்சமாகச் செலவு செய்து எல்லா வசதிகளும் இருக்கும் ஹுண்டாய் ஸொனாட்டா கார்களை வாங்கி – பயன்படுத்தாது – உயரதிகாரிகளின் குடும்பம் போய்வர, பலசரக்கு, காய்கறி வாங்கிவரப் பயன்படுத்துவதில்தான். அட ஆட்களை முதலில் சீரமையுங்களப்பா – ஆயத்தங்களையும் ஆயுதங்களையும் அடுத்த வேலையாக எடுத்துச் சீரமைத்தால் போயிற்று.

  சமீபத்தில் ‘சைக்கோ’ என்று வருபவன் போபவனையெல்லாம் பிடித்து எரித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ‘வீரம்’ எல்லாம் தவறு செய்யும் காவலரைத் தட்டிக் கேட்பதில் காட்டினாலென்ன? (காவலர் என்றில்லை – எந்தத் துறையைச் சேர்ந்த லஞ்சம் வாங்கும் ஜந்துக்களை எல்லாம்தான்).

  முசிறியில் இருந்தபோது கலியமூர்த்தி என்று ஒரு எஸ்.ஐ. இருந்தார். நான் அறிந்தவரை ஒரு நேர்மையாளர். தேவர்மகனில் கமல் வைத்திருந்த முறுக்கு மீசை வைத்திருந்தார் (எண்பதுகளில்). நல்ல உயரம். அவர் நடந்து வருவதே ஒரு கம்பீரமாக இருக்கும். பள்ளிகளில் நடைபெறும் விழாக்களிலெல்லாம் தவறாது அவர் அழைக்கப்படுவார். வந்து அட்டகாசமாக உரையாற்றுவார். அவர் பேசுவதைக் கேட்க உடல் சிலிர்க்கும். நமக்கே யானைபலம் சேர்ந்தாற்போலத் தோன்றும். விழா முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது தெருவில் நடமாடும் Bully-களை ஏளனமாகவும் தைரியமாகவும் எதிர்கொள்ள முடிந்தது. ஏனோ நானே அவர்போல ரொம்பவே பெருமையாக இருக்கும். எங்களுக்கெல்லாம் அவர் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தார் (அடுத்த வருடத்திலேயே எங்கோ தூக்கியடித்தார்களை அவரை). ஒரே ஒரு நேர்மையாளரால் ஒரு சிறு மாணவக் கூட்டத்தின் மனதில் நல்லதை விதைக்கமுடிகிறது. நாமும் அவர்போல ஆகவேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கமுடிகிறது. இம்மாதிரி நேர்ச் சிந்தனைகள் பிள்ளைகளுக்கு எப்போதும் விதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். கலியமூர்த்தி மாதிரி நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் நேர்மையாளர்கள் பெருகினால் போதும்.

  சீர்செய்ய வேண்டிய புரையோடிப்போனவைகள் எத்தனையோ இருக்கிறது – நம்மால் இயன்ற சிறு துளியைச் செய்வோம். பல வெள்ளமாக அது பல்கிப் பெருகும்.

  நம்பிக்கைதானே வாழ்க்கை?

  நன்றிகள் அனைவருக்கும்!

 31. வடகரை வேலன்

  //காவலராகச் சேர்வதற்கு வேண்டிய தகுதிகள், சேர்ந்த பிறகு தேவையில்லமல் போய்விட்டதே என்பதுதான் அடிப்படை வாதம்.
  //

  மிகவும் சரி. சேர்ந்தபிறகும் தகுதிச் சோதனைகளை வெளிப்படையாகத் தொடர்ச்சியாக நடத்தி தகுதியிழந்தவர்களை வீட்டுக்கு அனுப்புவதில் தயவுதாட்சண்யமின்றிச் செயல்படத் தொடங்கினால் முன்னேற்றம் சாத்தியம்.

  நன்றி.

 32. //சும்மா சொன்னேங்க, யாரும் கோச்சுக்காதீங்க//

  :-))) பயப்படாதீங்க rapp ..அவங்க எதையும் தாங்கும் இதயம். இதுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படமாட்டாங்க.

  உங்க வருகைக்கு நன்றி

 33. //எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்?//

  இந்த நகைச்சுவைக்கு பின்பு, சமூக அவலம் இருக்கிறது.

  அரசுக்கு அடியாள்கள் தான் போலிசும், இராணுவமும்.

  இதை நடைமுறையில் புரிந்து கொள்ள…

  கடந்த 1994ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

  இன்றைக்கு, இந்த மூன்று கொள்கைகளும் உலகம் முழுக்க பேசப்பட்டு வருகிறது. விளைவுகள் கடுமையாக இருக்கின்றன.

  இதன் அடிப்படையில், இந்தியாவில் இருக்கக் கூடிய அரசுத்துறைகளை ஒவ்வொன்றாக தனியார் மயப்படுத்தி வருகிறார்கள்.

  இதை எதிர்த்து, நாடு முழுவதும், அரசு ஊழியர்கள், மாணவர்கள், விவசாயிகள் போராடும் பொழுது
  உதைத்தது இந்த போலீசு தான்.

  இதில் நல்ல போலீசு, கெட்ட போலீசு என்று யாரையும் பிரிக்கமுடியாது. நல்ல போலீசு என்றால் மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொண்டு, உதைக்கமுடியும். “போராட்டம் சரியானது” அடிக்க மாட்டேன் என சொல்ல முடியுமா? அடுத்த நிமிசம் வேலை காலி!

  அதனால் தான், மற்ற துறைகளை தனியார்மயப்படுத்தி வரும் பொழுது, இன்றைக்கும் போலிசுக்கும், இராணுவத்திற்கும் மட்டும் ஆள் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

  இன்னும் நிறைய அடி ஆட்கள் அரசுக்கு தேவை. ஏனென்றால், இனி தான், முன்பை விட போராட்டம் வலுக்க இருக்கிறது.

 34. நல்லா சொன்னீங்க போங்க, இவங்கள எல்லாம் ஹேர் ஹோஸ்டஸ்கள்கிட்ட சொல்ற மாதிரி, உங்க பிட்னஸ்ஸ மைன்டைன் பண்லன்னா வேலைக்கு டாட்டா சொல்லிடனும்னு சொன்னா சரி ஆகிடும். சும்மா சொன்னேங்க, யாரும் கோச்சுக்காதீங்க.

 35. //பொதுவாக நமது காவல்துறையினர் விசாரணைத் திறனில் மிகவும் குறைவான திறமை உடையவர்கள் என்பதுதான் என் கருத்து//

  அருள் அப்படி இல்லைங்க, நம்ம காவலர்கள் மிக திறமையானவர்கள் அரசியலும் அதிகார பலமும் தலையிட விட்டால் ஒருத்தன் கூட தப்பிக்க முடியாது. தலையீடு இருப்பதால் மட்டுமே கை கட்ட பட்ட நிலையில் இருக்கிறார்கள்.

  //அதட்டி அச்சுறுத்தி மிரட்டி ஒரு வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கும் முறையையே இது வரை கையாளுகிறார்கள்//

  நீங்கள் சொல்லுவதும் நடக்கிறது. ஒன்றும் தெரியாதவனை பிடித்து அடி நொக்கு நொக்குனு நொக்கி கையெழுத்து வாங்கறது 🙂

  //போலீஸ் செலக்ஷனுக்காக இம்மாதிரி உடலை தயார் படுத்தும் இளைஞர்களை பார்த்தால் காமெடியாக இருக்கிறது.எனது நண்பனிருவன் இவ்விதமாய் உடலை தயார் படுத்தினான் அவனுக்கு போலீஸ் வேலை கிடைக்கவில்லை.ஆகவே அவனே பொலீசாக மாறிவிட்டான்.ஊரில் ஏதாவது பொருள் திருட்டுப் போனால் அவனைத்தான் தேடுகிறார்கள்.//

  ஹா ஹா ஹா ஹா

  உங்க வருகைக்கு நன்றி அருள்.

 36. வாங்க செந்தில். இங்க சிங்கையில் தெரிவதில்லை. மற்றவங்க பார்க்கலாம்.

  ஆனால் இதை சொல்லி தெரியவேண்டியதில்லை, அனைவருக்கும் ஏற்கனவே தெரியும் என்று நினைக்கிறேன். அந்த கொடுமையை தொலைக்காட்சியில் பார்க்கும் அளவுக்கு என் மனது இடம் கொடுக்கவில்லை. ஏனென்றால் அதில் பாலியல் வன்முறை கண்டிப்பாக இருக்கும், அதை பார்க்க என் மனது இடங்கொடுக்காது 🙁

 37. கிரி இதைப் படிக்க மிகவும் சுவராஸ்யமாக இருக்கிறது.பொதுவாக நமது காவல்துறையினர் விசாரணைத் திறனில் மிகவும் குறைவான திறமை உடையவர்கள் என்பதுதான் என் கருத்து.அதட்டி அச்சுறுத்தி மிரட்டி ஒரு வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கும் முறையையே இது வரை கையாளுகிறார்கள்.மற்றபடி போலீஸ் செலக்ஷனுக்காக இம்மாதிரி உடலை தயார் படுத்தும் இளைஞர்களை பார்த்தால் காமெடியாக இருக்கிறது.எனது நண்பனிருவன் இவ்விதமாய் உடலை தயார் படுத்தினான் அவனுக்கு போலீஸ் வேலை கிடைக்கவில்லை.ஆகவே அவனே பொலீசாக மாறிவிட்டான்.ஊரில் ஏதாவது பொருள் திருட்டுப் போனால் அவனைத்தான் தேடுகிறார்கள்.

 38. அன்பு உறுப்பினர்களுக்கு, மக்கள் தொலைக்காட்சியில் வரும் சந்தன காடு தொடரை பாருங்கள்,மனச்சாட்சி இல்லாமல்(போலீஸ் நடத்தும் வன்முறை )தவறு செய்தவர்கள் யார் என்று உங்களுக்கு தெளிவாக தெரியும்

 39. வாங்க அறிவன். புதிய பதிப்பை நிறுவி விட்டீர்களா? தற்போது என் பதிவுகள் சரியாக தெரிகிறதா?

  //கிரி,நல்ல ஒரு topic ஐ தொட்டிருக்கிறீர்கள்.//

  இது நானே எதிர்பாராதது, அதற்கு முக்கிய காரணம் சுந்தர் அவர்கள்.

  //சிறிது மன நெகிழ்வு சார்ந்த நிகழ்வுகள் சித்தரிப்புகளில் நீர்த்துவிட்டது என்றே நினைக்கிறேன்//

  புரியவில்லை. விளக்க முடியுமா? மன்னிக்கவும்

  //ஒரு நாட்டின் நிர்வாக முறைக்கு அதனிலும் மேலான சில விதயங்கள் தேவை என்றே தோன்றுகிறது//

  மேலான விதயங்கள் என்றால் எதை பற்றி கூறுகிறீர்கள். அதை போல் இருக்க முடியாது என்று கூறுகிறீர்களா? அல்லது இதை விட மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா?

  நேரம் இருந்தால் பதில் கூறுங்கள். உங்கள் வருகைக்கு நன்றி

 40. கிரி,

  நான் எடுத்து வைத்த வாதத்தை அறிவன் முன்னெடுத்துச் செல்கிறார்.

  பட்டாளத்துக்கு ஆள் எடுக்கும்போதும் இதுபோல் உடல் தகுதி சோதனை வைத்துத்தானே எடுக்கிறார்கள். அவர்கள் ஓய்வு பெறும் வரையிலும் தகுதியைத் தக்க வைத்துக் கொள்கிறர்களே. முன்னனி வீரர்கள் மட்டுமல்ல சார்பு வேலை செய்யும் அனைத்து அலுவலர்கள் உட்பட கட்டயமாக உடல் தகுதி பேணப்பட வேண்டும்.

  அப்பாஸ் என்பவர் கூறியது போல வருவாய்க்குள் குடும்பம் நடத்தவும் தன்மானத்தை இழக்காமல் இருக்கவும் முடியாமல் இருப்பவர்கள் சதவீதம் குறைவே.

  சென்னையில் ஓடும் ஆட்டோக்களில் பாதி கவலர்களுக்குச் சொந்தமானது என்பது உண்மைதானே. எங்கிருந்து வந்தது காசு, தன்மானத்தை இழந்து லஞ்சம் பெற்றதால்தானே?

  அதுக்காக போலிசில் நல்லவர்களே இல்லை என்று சொல்ல வரவில்லை.

  வாழ்வின் லட்சியமே IPS தேர்வு பெறுவதுதான் என்று எவ்வளவு இளைஞர்கள் தங்களைத் தயார் செய்கின்றனர்.

  IPS தேர்வு பெற்று அரசியல்வாதிக்குச் சல்யூட் அடிக்கவும், ரவுடிகளுக்குத் துணை போகவும்தானா இவ்வளவும்?

  ஸ்கட்லாந்து போலிசுக்கு இணையாக மதிக்கப்பட்டவர்கள் இன்று?

  தான் செய்வது தவறு என்பதைத் தெரியாமல் செய்பவனுக்கு எடுத்துக் கூறி சரிப்படுத்தலாம். தெரிந்தே செய்பவனை.

  10 வதுல கணக்குல 100 மதிப்பெண். +2ல பாஸ் செய்வதற்கு குறைந்தபட்சம் 35% எடுக்க வேண்டுமல்லவா. இல்லல்ல அந்தப் பையன் நல்லாப் படிக்கிறவன், இப்ப ஏதோ முடியல பாஸ் போடுங்கனு முடியுமா. 15 வயது பையனுக்கு ஒரு நீதி அந்த வேலை மூலம் தன் வாழ்க்கைய நடத்தும் ஒருவ்ருக்கு வேறு நீதியா.

  கம்ப்யூட்டர் ஆசாமிகளைப் பாருங்கள். பேசிக், போர்ட்ரான், கோபால், பாஸ்கல், சி, சி++, ஜாவா, xml, html, .net, vb, oracle, த்குதியை வளர்த்துக் கொள்வது ஒரு பக்கம் உயரவும், மறுபக்கம் இருப்பதிலிருந்து கீழே வராமலிருக்கவும்தானே.

  என்ன கஷ்டம் தெரியுமா? இப்ப உடல் தகுதி சோதனை வைத்தால் 75% பாஸாக மாட்டாங்க. 3 மாதம் டைம் கொடுத்து மீண்டும் தேர்வு வைத்துத் தேறாதவர்களை ஒரு தடவை வீட்டுக்கு அனுப்புங்கள். அடுத்த தலை முறைக்க்காவது நல்ல காவலர்கள் கிடைக்கட்டும்.

  கண்டிப்பா சுந்தர் இதுக்கு ஒத்துக்க மாட்டார்.

  அவரு சொன்னது போல இப்ப இருக்கிற கொஞ்ச நல்ல காவலர்கள, உடல் தகுதி, திறமை மற்றும் நேர்மை மிக்க காவலர்கள பாரட்ட இது ஒரு நல்ல வழியாக இருக்கும்.

  “Remember that what’s right isn’t always popular… and what’s popular isn’t always right.”

  decision making குறித்த பதிவு ஒன்று எனது தளத்திலுள்ளது அதையும் படித்து விட்டு உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.

 41. கிரி,நல்ல ஒரு topic ஐ தொட்டிருக்கிறீர்கள்.

  காவலர்களுக்கும் ஏன் காவல்துறை அதிகாரிகளுக்குமான முதல் தகுதி உடல் தகுதி.

  இது ராணுவத்தில் களப்பணியில் இருப்பவர்கள் எப்படி உச்சபட்ச உடல்தகுதியுடன் இருக்க வைக்க முயற்சி செய்ய தூண்டப்படுகிறார்களோ,அதே போல் காவல் துறையும் களப்பணி சேர்ந்ததே என்ற நிலையில்,நீங்கள் சொல்லும் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததும்,கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஒன்றுமாகும்.
  எனக்குத் தெரிந்த வரை சுமார் 15 வருடங்களுக்கு முன்வரை எங்கள் ஊர் காவல் நிலையத்தில் கூட நிலையத்தை ஒட்டிய மைதானத்தில் பயிற்சி மற்றும் விளையாட்டுகளில்-பெரும்பாலும் வாலி பால்- விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன்.

  இப்போது அவர்களுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை.

  ஆனால் சுந்தர் கூறியது-அவர்களின் சேவை பாராட்டப்பட வேண்டும் என்ற கூற்று,பதிவின் பொதுப் பொருளான அந்தந்த வேலையாளர்கள் அந்தந்த தகுதியைக் கொண்டிருக்க வேண்டும்-என்ற கருத்து சிறிது மன நெகிழ்வு சார்ந்த நிகழ்வுகள் சித்தரிப்புகளில் நீர்த்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

  ஆனால் சுந்தர் அவர்களின் பதிவையும்,பின்னூட்டங்களையும் படித்தேன்;அவர் சொல்லும் தீர்வு ஒரு நிறுவனங்கள் போன்ற கட்டமைப்பில் effective ஆக உபயோகம் ஆகலாம்,ஆனால் ஒரு நாட்டின் நிர்வாக முறைக்கு அதனிலும் மேலான சில விதயங்கள் தேவை என்றே தோன்றுகிறது,அவரின் கருத்து முற்றிலும் பாராட்டப்பட வேண்டியதே என்ற போதிலும் !

 42. //பட்டாளத்துக்கு ஆள் எடுக்கும்போதும் இதுபோல் உடல் தகுதி சோதனை வைத்துத்தானே எடுக்கிறார்கள்//

  அங்கே அரசியல் புக முடிவதில்லை, அதனாலேயே தகுதியான வீரர்கள் இருக்கிறார்கள். தகுதி இல்லாதவர்கள் இருந்தாலும் மிக சொற்பமே.

  //அப்பாஸ் என்பவர் கூறியது போல வருவாய்க்குள் குடும்பம் நடத்தவும் தன்மானத்தை இழக்காமல் இருக்கவும் முடியாமல் இருப்பவர்கள் சதவீதம் குறைவே.//

  உண்மை தான். அதற்கு நம் சமூகமும் ஒரு காரணம். ஒருவனை நேர்மையாக வாழ விடாமல் தள்ளுவது நம் சமுதாயமே. இருப்பவர்களும் வெறுத்து போய் மாறி விட யோசிக்கிறார்கள் அரை மனதாக வேறு வழியில்லாமல்.

  //சென்னையில் ஓடும் ஆட்டோக்களில் பாதி கவலர்களுக்குச் சொந்தமானது என்பது உண்மைதானே. எங்கிருந்து வந்தது காசு, தன்மானத்தை இழந்து லஞ்சம் பெற்றதால்தானே?//

  உண்மையை சொல்ல போனால் இதை போல இருப்பவர்கள், தன்மானத்தை பெரிதாக அலட்டி கொள்வதில்லை. அதை பற்றி கவலைபடுவதுமில்லை.

  //அதுக்காக போலிசில் நல்லவர்களே இல்லை என்று சொல்ல வரவில்லை//

  காவல் துறை மட்டுமல்ல எந்த துறையிலும் அவ்வாறு கூறமுடியாது.

  //வாழ்வின் லட்சியமே IPS தேர்வு பெறுவதுதான் என்று எவ்வளவு இளைஞர்கள் தங்களைத் தயார் செய்கின்றனர்//

  உண்மை தான் அஞ்சாதே படத்தை போல.

  //IPS தேர்வு பெற்று அரசியல்வாதிக்குச் சல்யூட் அடிக்கவும், ரவுடிகளுக்குத் துணை போகவும்தானா இவ்வளவும்?//

  அது தானே நடைமுறை. முட்டாள்கள் ஊரில் நாம் புத்திசாலியாக இருந்தால் நாம் முட்டாளாகி விடுவோம். இவை மாற வாய்ப்பு குறைவு, அடுத்த தலைமுறை நல்ல சிந்தனையை வளர்த்தால் உண்டு. ஆனால் வருபவர்களும் பணத்தின் மீதும், அதிகாரத்தின் மீதும், சொகுசான வாழ்க்கை மீதும், செக்ஸ் ன் மீதும் அளவுகடந்த ஆசை வைத்து இருப்பதால், இதை போல எண்ணுபவர்களின் நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் இதை கட்டுக்குள் கொண்டு வர முடியாது, என்பது என் கருத்து. ஆனால் சுந்தர் அவர்கள் சொல்வதை போல் நல்லதையே நினைப்போம்.

  //தான் செய்வது தவறு என்பதைத் தெரியாமல் செய்பவனுக்கு எடுத்துக் கூறி சரிப்படுத்தலாம். தெரிந்தே செய்பவனை//

  தூங்குறவனை எழுப்பலாம் தூங்குகிற மாதிரி நடிப்பவனை ???

  //15 வயது பையனுக்கு ஒரு நீதி அந்த வேலை மூலம் தன் வாழ்க்கைய நடத்தும் ஒருவ்ருக்கு வேறு நீதியா//

  நியாயமான கேள்வி. ஆனால் என்னிடம் பதில் இல்லை 🙂

  //கம்ப்யூட்டர் ஆசாமிகளைப் பாருங்கள். பேசிக், போர்ட்ரான், கோபால், பாஸ்கல், சி, சி++, ஜாவா, xml, html, .net, vb, oracle, த்குதியை வளர்த்துக் கொள்வது ஒரு பக்கம் உயரவும், மறுபக்கம் இருப்பதிலிருந்து கீழே வராமலிருக்கவும்தானே.//

  இங்கு அரசியல் உண்டு ஆனால் அரசியல்வாதிகள் இல்லை. அதுவே உயர் நிலைக்கு காரணம்.

  //என்ன கஷ்டம் தெரியுமா? இப்ப உடல் தகுதி சோதனை வைத்தால் 75% பாஸாக மாட்டாங்க//

  நீங்கள் அதிகமான சதவீதம் சொல்வதாக கருதுகிறேன் 😀

  //3 மாதம் டைம் கொடுத்து மீண்டும் தேர்வு வைத்துத் தேறாதவர்களை ஒரு தடவை வீட்டுக்கு அனுப்புங்கள். அடுத்த தலை முறைக்க்காவது நல்ல காவலர்கள் கிடைக்கட்டும்//

  நல்ல யோசனை. தலைவர் சரியாக இருந்தால் தானே தொண்டன் சரியாக இருப்பார். அதிகாரி சரியாக இருந்தால் தானே கீழே வேலை செய்பவர் சரியாக இருப்பார்.

  //கண்டிப்பா சுந்தர் இதுக்கு ஒத்துக்க மாட்டார்//

  சுந்தர் நல்லது செய்தால் பாராட்டுங்கள் என்று கூறினாரே தவிர, இதை எதிர்க்கவில்லை என்றே கருதுகிறேன். எனவே மாற்றங்களை ஆதரிப்பார் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் நல்லது நடக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசை, எனவே அதற்கான முயற்சி நடைபெற்றால் கண்டிப்பாக பாராட்டுவார். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது?

  //அவரு சொன்னது போல இப்ப இருக்கிற கொஞ்ச நல்ல காவலர்கள, உடல் தகுதி, திறமை மற்றும் நேர்மை மிக்க காவலர்கள பாரட்ட இது ஒரு நல்ல வழியாக இருக்கும்.//

  அவர் கூறுவது, பாராட்ட ஏன் அதுவரை காத்து இருக்க வேண்டும். ஒருவர் நல்லது செய்தால் பாராட்டுங்களே? இது தான் அவருடைய வாதம். இதை நான் ஆமோதிக்கிறேன்.

  //”Remember that what’s right isn’t always popular… and what’s popular isn’t always right.”

  decision making குறித்த பதிவு ஒன்று எனது தளத்திலுள்ளது அதையும் படித்து விட்டு உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.//

  கண்டிப்பாக செய்கிறேன்.

  வேலன், நீங்கள் ஸ்ரீதர் சுந்தர் போன்ற நேர்மையை பற்றி நினைப்பவர்கள், நம் ஊரில் இன்னும் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மனதுக்கு மிக சந்தோசமாக இருக்கிறது.

  சுந்தர் அவர்கள் கூறுவது போல நம்பிக்கை தானே வாழ்க்கை 🙂

 43. //மொத்தத்தில் ஒட்டுமொத்தமாகத் தலையிலிருந்து வால்வரைக் களையெடுப்பு நடந்தால் மட்டுமே சீரடைய வாய்ப்பு இருக்கிறது. இது அந்தத் துறையில் நிகழ வேண்டிய மாற்றம். //

  கேட்பதற்கு நன்றாக தான் இருக்கிறது..ஆனால்.. என்னமோ போங்க 🙁

  //பொதுஜனமாகிய நாம் செய்யவேண்டியது, நேர்மையாளர்களை வஞ்சகமில்லாமல் அங்கீகரித்து, பாராட்டி, ஊக்குவித்து //

  நான் பண்ணுறேங்க.

  /முடியும் ஸார். ஊர் கூடினால் தேர் இழுக்க முடியும்!//

  நீங்க சொல்றது சரி தான். ஆனா நம்ப ஆளுங்க இப்படி இழுக்கும் போது எவனாவது நடுவுல வந்து சக்கரத்தை கழட்டி விட்டுடுறாங்க :-)))) சரி நல்லதையே நினைப்போம்.

  உங்கள் கருத்திற்கும் ஆரோக்யமான விவாதத்திற்கும் நன்றி வேலன்.

 44. வடகரை வேலன்

  //இப்ப உடல் தகுதி சோதனை வைத்தால் 75% பாஸாக மாட்டாங்க. 3 மாதம் டைம் கொடுத்து மீண்டும் தேர்வு வைத்துத் தேறாதவர்களை ஒரு தடவை வீட்டுக்கு அனுப்புங்கள். அடுத்த தலை முறைக்க்காவது நல்ல காவலர்கள் கிடைக்கட்டும்.

  கண்டிப்பா சுந்தர் இதுக்கு ஒத்துக்க மாட்டார்.
  //

  வளவளவென்று எழுதிவிட்டுச் சரிபார்க்காமல் பின்னூட்டியதால் இம்மாதிரி ஒரு தோற்றம் வந்துவிட்டது என் தவறுதான்! 🙂 மன்னிக்க.

  எனது முந்தைய பின்னூட்டமொன்றில்

  //சேர்ந்தபிறகும் தகுதிச் சோதனைகளை வெளிப்படையாகத் தொடர்ச்சியாக நடத்தி தகுதியிழந்தவர்களை வீட்டுக்கு அனுப்புவதில் தயவுதாட்சண்யமின்றிச் செயல்படத் தொடங்கினால் முன்னேற்றம் சாத்தியம்//

  என்று குறிப்பிட்டிருந்ததை நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

  உடல் தகுதி, மருத்துவ தகுதி இல்லாத காவலர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்பிவிடவேண்டும். இளரத்தம் ஏராளமாய் பாய்ச்சப்பட வேண்டும். அதே சமயத்தில் செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமானது – இம்மாதிரி தகுதியிழந்த நிலையை அவர்கள் அடைய மறைமுகக் காரணங்களில் ஒன்றான – நேர்மையற்ற அதிகாரிகளையும் தயவுதாட்சண்யமின்றிப் பணிநீக்கம் செய்து விடவேண்டும். இல்லாவிட்டால் பாய்ச்சப்படும் புது ரத்தமும் கெட்டுப் போய்விடும்! மொத்தத்தில் ஒட்டுமொத்தமாகத் தலையிலிருந்து வால்வரைக் களையெடுப்பு நடந்தால் மட்டுமே சீரடைய வாய்ப்பு இருக்கிறது. இது அந்தத் துறையில் நிகழ வேண்டிய மாற்றம்.

  பொதுஜனமாகிய நாம் செய்யவேண்டியது, நேர்மையாளர்களை வஞ்சகமில்லாமல் அங்கீகரித்து, பாராட்டி, ஊக்குவித்து – we should bring them all to the lime light and make them all feel proud of themselves. அதே போல தவறுசெய்பவர்களை சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் தட்டிக்கேட்கவேண்டும் – ஊடகங்களைத் துணைக்கழைக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாகத் தவறுக்கு நாம் துணைபோவதைத் தவிர்க்க முயல்வது இன்னும் முக்கியம்.

  முடியும் ஸார். ஊர் கூடினால் தேர் இழுக்க முடியும்!

  நன்றி.

 45. //நம்ம நாட்டுக்கு ஒரு சாபக் கேடு.
  பதவி நாற்காலியில் அமர்ந்தாலும் ,காவலர் சீருடை அணிந்தாலும் பணமே குறி என்று எண்ண வைத்து விடும் //

  நீங்கள் கூறுவது சரி தான். அதற்கு நம் சமூகமும் ஒரு காரணம்.

 46. நம்ம நாட்டுக்கு ஒரு சாபக் கேடு.
  பதவி நாற்காலியில் அமர்ந்தாலும் ,காவலர் சீருடை அணிந்தாலும் பணமே குறி என்று எண்ண வைத்து விடும் .விக்ரமாதித்தன் நாற்காலி மாதிரியானது கிடைத்தாலும் அதையும் பாழாக்கி விடுவார்கள் நம்மவர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here