குலு(க்)ங்கிய விமானம் | Turbulence

16
குலு(க்)ங்கிய விமானம்

விமானப்பயணம் புதிதாக போகிறவர்களுக்கு வியப்பான பயணம் அடிக்கடி போகிறவர்களுக்கு சலிப்பான பயணம் ஆனால் இந்த இருவருக்கும் ஏற்படும் திகிலான பயணமும் இருக்கிறது 🙂 . Image Credit

Turbulence

விமானப்பயணத்தின்போது வானிலை காரணமாக சில நேரங்களில் மேக மோதல், அழுத்தம் (Turbulence) காரணமாக சில குலுக்கல்கள் அதிர்வுகள் இருக்கும்.

இதைச் சந்திக்காத விமானப்பயணம் யாருக்கும் இருக்க முடியாது.

முதல் முறை போகும் போது இதைப் போலக் கொஞ்சம் ஆனதுக்கே இது பற்றி அதிகம் தெரியாமல் இருந்ததால் பயத்தில் நாக்கெல்லாம் உலர்ந்து விட்டது.

பின் இதை நண்பர்களிடம் கூறிய பிறகு அட இதா! இதெல்லாம் சகஜமப்பா என்று கூறி என்னை அமைதியாக்கி விட்டார்கள் பின்னர் எனக்கும் இது பழகி விட்டது.

இந்த முறை ஊருக்கு வந்துவிட்டு திரும்பச் சிங்கப்பூர் (இரவு) செல்லும் போது மீண்டும் ஒரு முறை எனக்கு உயிர் பயத்தைக் காட்டி விட்டது.

சீதோஷ்ண நிலை

சென்னையில் தற்போது மழை பெய்து கொண்டு இருப்பதால் சீதோஷ்ண நிலை காரணமாக ஆடிய ஆட்டத்தில் அடி வயிறு எல்லாம் கலங்கி விட்டது.

நான் அடுத்த நாள் அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் விமானம் கிளம்பும் முன்பே தூங்கி விட்டேன். விமானம் கிளம்பும் போது அதிர்வில் லேசாக விழித்துப் பின் அரைத்தூக்கத்தில் இருந்தேன்.

ஐந்து நிமிடம் தான் இருக்கும் விமானம் கிளம்பி “தடக்” னு கீழே இறங்கியது.

எடுத்துக்காட்டுக்கு, சீரான சாலையில் சென்று கொண்டு இருக்கும் போது நாம் செல்லும் பேருந்து பள்ளத்தில் திடீரென்று இறங்கினால் எப்படி இருக்கும் அது மாதிரி.

இது தரையில ஆனா பரவாயில்லைங்க வானத்துல ஆனா! எனக்கு தூக்கி வாரிப்போட்டு விட்டது. இது வரை என் பயணங்களில் இந்த அளவிற்கு இறக்க அதிர்வை நான் கண்டதில்லை.

சரி ஆகிவிடும் என்று இருந்தால் ஒரு பத்து நொடிக்கு நம்ம சென்னை சாலையில் போகிற மாதிரி கடக் புடக்குனு மேலே கீழே இறங்கி ஆடிய ஆட்டத்தில் மனைவி பயத்தில் வீல் என்று கத்தி விட்டார்.

இந்தச் சமயங்களில் பத்து நொடி என்பது பத்து நிமிடம் போல நமக்குத் தெரியும்.

வீரம்னா பயமில்லாத மாதிரி காட்டிக்கிறது

நான் என்ன பண்ணினேன் என்று கேட்கறீங்களா! குருதிப்புனல் படத்துல கமல் என்ன சொல்லி இருக்காரு “வீரம்னா பயமில்லாத மாதிரி காட்டிக்கிறது” னு அதை அப்படியே பின்பற்றி நான் பயக்காத மாதிரி உட்கார்ந்து இருந்தேன் 😀 .

இது வரைக்கும் நல்லாத்தான் போச்சு!! இதன் பிறகு நடந்து வந்து கொண்டு இருந்த பணிப்பெண் விமானம் ஆடிய ஆட்டத்தில் நடக்க கூடாது என்ற விதிமுறைக்கு ஏற்ப அப்படியே என் அருகில் தரையில் உட்கார்ந்து கொண்டார்.

இது கூட எனக்கு பயமில்ல ஆனால், உட்கார்ந்ததோட இல்லாமல் கடவுளை வேண்டுச்சு பாருங்க அங்க தான் பீதியாகிட்டேன்.

பொதுவா பணிப்பெண்களுக்கு இது போலச் சம்பவங்கள் ரொம்ப சகஜம்.

பணிப்பெண்

இதை விட ஆட்டத்தை எல்லாம் பார்த்து இருப்பாங்க அதனால் அவங்க பயப்பட மாட்டாங்க ஆனால், அந்தப்பெண்ணே பயப்பட்டுக் கடவுளை வேண்டியதும் கலவரமாகி விட்டது.

ஆஹா! நம்மை நேரா மேலேயே கூட்டிட்டு போய்டுவாங்க போல இருக்குன்னு. இதன் பிறகும் ஆட்டம் நிற்கவில்லை.

சும்மா கட்ட வண்டில போகிற மாதிரி டக்குனு கீழே இறங்குது வலது பக்கம் போகுது இடது பக்கம் போகுது நமக்கு சங்கு தான் போல இருக்குனு செம பயமாகி விட்டது.

நாங்க மூன்று பேர் இருக்கையில் அமர்ந்து இருந்தோம் ஜன்னல் பக்கம் மனைவி, நான் நடைபாதை பக்கம், என் மகன் என் மனைவியின் மடியில் தலை வைத்து என் மீது கால் வைத்து நடுவில் படுத்து இருந்தான்.

விமானத்தில் இருக்கிறவங்க எல்லாம் பயத்துல இருக்காங்க. பின்னாடி இருந்த ஒரு பொண்ணு (ஆண்ட்டி!) அவர் அருகில் இருந்தவரை கட்டிபிடித்துட்டு கீச் கீச் னு கத்திட்டு இருக்கு.

முன்னாடி இருக்கிறவங்க எல்லாம் பேய் அடிச்ச மாதிரி திருதிருன்னு பார்த்துட்டு இருக்காங்க.

இவன் “அப்பா இந்த ப்ளைட் சரி இல்ல ரொம்ப ஆடுது நாம் அன்னைக்கு வந்த ப்ளைட் தான் நல்லா இருந்தது” ன்னு சொல்லிட்டு இருக்கான்.

அடேய்! இரண்டுமே ஒரே ப்ளைட் தாண்டா! இங்க ரணகளமே நடந்துட்டு இருக்கு இவன் என்னடான்னா இப்படி சொல்றான் என்ன நடக்குது என்று தெரியாமல்.

கழிவறை

நம்ம ஆளுங்களுக்கு விமான நிலையத்தில் இருக்கும் வரை எதுவும் வராது ஆனால் விமானம் ஏறியதும் தான் எல்லாம் வரும்.

வழக்கம் போல ஒருத்தரு விமானம் கிளம்பி கொஞ்ச நேரத்துலையே கழிவறைக்குள்ள போயிட்டாரு இவர் உள்ளே போய் ஒரு இரண்டு நிமிசத்தில் இந்த ஆட்டம்.

சும்மாவே ஆட்டம் பயங்கரமா இருக்கு இவர் இருந்த டாய்லெட் விமான டாய்லெட் என்பதால் இரண்டடிக்கு இரண்டி தான் இருக்கும்.

சும்மா குலுக்கு குலுக்குனு குலுக்கி இருக்கும் கதவுல எல்லாம் மோதி இருப்பாரு 🙂 .

என்னடா! ஒண்ணும் சத்தத்தையே காணோமே என்று இருந்தால் கொஞ்சம் ஆட்டம் குறைந்த பிறகு தடதட னு அலறி அடித்துட்டு வெளியே ஓடி வராரு.

ஹா ஹா எனக்கு அந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.

கண்டிப்பா விமானம் கவிழ்ந்து விட்டது என்றே உள்ளே நினைத்து இருப்பார் சிறிய இடம் என்பதால் உள்ளே அங்கே இங்கே மோதி இருப்பார்.

பயத்தோடு உட்கார்ந்து இருந்தேன் பின் கொஞ்ச நேரத்தில் சரி ஆகி விட்டது.

அதன் பிறகு தான் மேட்டரு நம்ம ஆளு மறுபடியும் உள்ளே போயிட்டாரு. பாதியிலேயே வந்துட்டாரு போல பயத்துல. எனக்கு இப்ப நினைத்தாலும் சிரிப்பா இருக்கு 🙂 .

அப்புறம் கண்ணை மூடித் தூங்கிட்டேன்.

Excuse Me Sir!

நடுவுல நம்ம பணி ஆண்!! Excuse Me Sir! Do you want veg or non Veg னு கேட்டார்.

யோவ்! ஏற்கனவே கலக்கி இருக்கு இதுல இது வேறயா ஆளை விடுன்னு No Thanks சொல்லிட்டேன். Are you sure Sir னு விடாம கேட்கிறார்.

ஆமாயா வேண்டவே வேண்டாம் னு கண்ணை மூடியவன் அதன் பிறகு சிங்கப்பூர் வந்த பிறகு தான் கண்ணைத் திறந்தேன்.

வீட்டுக்கு வந்த பிறகு மனைவியிடம் அதன் பிறகு விமானம் ஆடுச்சா ன்னு கேட்டேன்.

ஆமா… நீங்க என்ன கண்ணை மூடித் தூங்கிட்டீங்க! அதன் பிறகும் ஆடிட்டே இருந்தது பயத்துல நான் தூங்கவே இல்லை என்று கூறினார் 🙂 .

Read : முதல் வெளிநாட்டு விமானப் பயணம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

16 COMMENTS

  1. விமானப் பயணத்தில் இவ்வளவு திகில் உள்ளதா? நல்ல வேலை நாங்களெல்லாம் கொத்தாம்பட்டியிலியே இருப்பதால் என்றுமே நாங்கள் சேப்…குலுங்கிய என்பது தானே சரி கிரி?

  2. //ஐந்து நிமிடம் தான் இருக்கும் விமானம் கிளம்பி “தடக்” னு கீழே இறங்கியது. உதாரணத்துக்கு சீரான சாலையில் சென்று கொண்டு இருக்கும் போது நாம் செல்லும் பேருந்து பள்ளத்தில் திடீரென்று இறங்கினால் உங்களுக்கு எப்படி இருக்கும் அது மாதிரி. //

    🙂 டர்புலன்ஸின் போது கூட பயம் இருக்காது, அதுக்கு அவனுங்க கீழே இறக்குவானுங்கப் பாருங்க பக்கு பக்கு இருக்கும் கடலுக்குள்ள போய்டுமோன்னு. ஐம்பது மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நிற்கும் போது கட்டிடம் வேகமாக மண்ணுக்குள்ளப் போவது போல் போனால் எப்படி இருக்குமோ அப்படி

  3. ஒரு இருபது வருஷங்களுக்கு முன்னாடி முதன் முதலில் எனக்கும் விமானத்தில் போகும் பொழுது இது மாதிரி ஏற்பட்டது. ஆனா இரண்டு செகண்டுதான் சுத்திலும் பார்த்தா எல்லோரும் அமைதியாஅவுங்க அவுங்க வேலை பார்த்துட்டு இருந்தாங்க அப்பதான் எனக்கு பின்னாடி இருந்த சின்ன பையன் சொன்னான் அப்பா எனக்கு பயமா இருக்கு . அதை கேட்டுட்டு பக்கத்தில் இருந்த நண்பனிடம் நான் சொன்னேன் அவன் சொல்லிட்டான் நான் சொல்லலை அப்படீன்னு . எப்படியோ எனது முதல் விமான பயணத்தை நியாபக படுத்தீட்டீங்க.

  4. விமான பயணம் கேக்கவே டர்ரா இருக்கு 🙂

    மயக்கம் என்ன பாடல்களில் ‘நான் சொன்னதும் மழை வந்திச்சா’ பாடல்தான் இப்போதைய எனது பேவரிட்; சுட்ட பாடலோ சுடாத பாடலோ அண்மைக்காலங்களில் ஜி.வி.பிரகாஸ் படங்களில் ஒரு மெலடியாவது அற்புதமாக அமைந்துவிடுகிறது. தனுஸ் படித்த ‘ஓட ஓட’வும் செம வரிகள் & வாய்ஸ்.

    ஒஸ்தியில் எனக்கு பிடித்த பாடல் கலசலாதான், ‘மைடியர் டார்லிங் உன்னை மல்லிகா கூப்ட்றா’ வரி செம கிக் 🙂

    நானும் செல்வாவுக்காக மயக்கம் என்னவை மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன், 18 ஆம் திகதி ரிலீஸ் என்கிறார்கள், ஒஸ்தி திகதி முடிவு செய்யப்படவில்லை.

  5. Lovable Story:
    A Flight Was Flying Through The Clouds.
    Suddenly, It Lost The Balance.
    Everyone Started Shouting In Fear.
    But A Small Girl Kept Playing With Her Toy….
    … …After An Hour,The Flight Was Landed Safely.
    A Man Asked The Small Girl,
    “How Could You Play With Your Toy When Everyone Was Afraid?
    “The Small Girl Smiled And Said
    “My Dad Is The Pilot. I Knew He Will Land Me Safely!

    ♥ “LOVE IS NOTHING BUT TRUST” ♥

    You are like this Giri? because u didn’t show the fear na???

  6. சில பயங்கரமான அனுபவங்கள் கூட பிற்காலத்தில் நினைத்து பார்க்கும்போது காமெடியாகத்தான் இருக்கிறது. அந்த டாய்லெட் மேட்டர் செம காமெடி.

  7. @காயத்ரி நாகா மாற்றி விட்டேன். சுட்டியமைக்கு நன்றி 🙂

    @கோவிகண்ணன் உங்க உதாரணத்தை படித்து எனக்கு செம சிரிப்பாகி விட்டது 🙂

    @Butter Cutter 🙂

    @ஜீவதர்ஷன் தனுஷ் “படித்த” ஹா ஹா ரசித்தேன்

    @சுரேஷ் அருமை ரொம்ப நல்லா இருந்தது 🙂

    @பாலா 🙂

    @ஆனந்த் எப்படி எல்லாம் யோசிக்கறாங்கப்பா! பணிப்பெண் கேட்டாலும் அதே பதில் தான் 🙂

  8. ஹா ஹா ஹா ஹா எனக்கும் இப்பிடி நிறைய நேரம் நடந்துருக்குது ஆனால் அந்த நேரம் இருக்கும் பயம் இருக்குதே ஆண்டவா சொல்லி முடியாது, நான் சீட் நுனியில்தான் உக்காந்துருப்பேன்…!!!

  9. கிரி, தலைவரைப் பற்றி எதுவுமே நீண்ட நாட்களாகவே நீங்கள் எழுதவில்லையே? மத்திய அரசின் விளம்பரப் படம் ஒன்றில் தலைவர் ,அமீர்கானுடன் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்…ரானா என்ன ஆச்சு கிரி? அவ்வப்போது தலைவரை பற்றி எழுதுங்கள் கிரி..எதிர்பார்க்கிறேன் தலைவர் + உங்கள் விசிறியாய் ஆவலுடன்..!!!

  10. இந்த para சொல்லுது கிரி தல நீங்க ஒரு கலக்கல் writer நு.. நிச்சயம் நீங்க சினிமா ல ஸ்கிரிப்ட் writer கு try பண்ணலாம் … supero super ரசிச்சு சிரிச்சேன்….

    “நான் என்ன பண்ணினேன் என்று கேட்கறீங்களா! குருதிப்புனல் படத்துல கமல் என்ன சொல்லி இருக்காரு “வீரம்னா பயமில்லாத மாதிரி காட்டிக்கிறது” னு அதை அப்படியே பின்பற்றி நான் பயக்காத மாதிரி உட்கார்ந்து இருந்தேன் இது வரைக்கும் நல்லாத்தான் போச்சு!! இதன் பிறகு நடந்து வந்து கொண்டு இருந்த பணிப்பெண் விமானம் ஆடிய ஆட்டத்தில் நடக்க கூடாது என்ற விதிமுறைக்கு ஏற்ப அப்படியே என் அருகில் தரையில் உட்கார்ந்து கொண்டார். இது கூட எனக்கு பயமில்ல ஆனால் உட்கார்ந்ததோட இல்லாமல் கடவுளை வேண்டுச்சு பாருங்க அங்க தான் பீதியாகிட்டேன்.:”

    – அருண்

  11. வாழ்வில் நாம் எதிர்பாராமல் நடக்கும் விஷியங்களில் உங்கள் விமான பயணமும் ஒன்று…. வைரமுத்துவின் தண்ணீர் தேசம் புத்தகத்தில் படித்த வரிகள்!!!

    “வாழ்வின் மர்மம் தான்
    வாழ்வின் ருசி.
    நாளை நேர்வதறியாத சூட்சுமம் தான்
    அதன் சுவை.
    எதிர்பாராத வெற்றி தான்
    மனித மகிழ்ச்சி.
    தோல்வியும் எதிர்பாராமல் வருவதால் தான்
    மனிதன் அதன் முன் நிமிஷம் வரைக்கும்
    முயற்சியில் இருக்கிறான்.
    மரணத் தேதி மட்டும் மனிதனுக்குத்
    தெரிந்து விட்டால் மரணம் வரும்முன்னே அவன்
    மரித்து போவான்….. “

  12. @நாஞ்சில் மனோ 🙂

    @காயத்ரிநாகா விரைவில் எழுதுகிறேன் ஆனால் ரஜினி எதுவும் ஒப்பந்தம் இடவில்லை என்று அவரது உதவியாளர் அறிக்கை விட்டு இருக்கிறார்.

    @அருண் நன்றி 🙂

    @யாசின் ரொம்ப நன்றாக இருந்தது உண்மையும் கூட.

  13. அஞ்சு அல்லது ஆறு வருஷம் முன்னாடி சென்னையில் இருந்து மஸ்கட் போற ஃபிளைட். நான் நல்லாத் தூங்கிட்டேன். வண்டி லேண்ட் ஆனதும் முழித்தேன். சுத்தி எல்லாரும் கண்ணீரும்,கம்பலையுமா உக்கார்ந்து இருக்கானுங்க. என்ன ஆச்சுன்னு பக்கத்துல இருந்தவர்கிட்ட கேட்டேன். லேண்டிங்கின்போது சக்கரம் வர வெளிய வரலைன்னு ஒரு மணிநேரமா சுத்தி சுத்தி வந்தாராம் பைலட். முயற்சி பலிக்காம கடைசியா நான் டெயில் லேண்டிங் பண்ணப்போறேன்னு அறிவிப்பும் குடுத்துட்டாறாம். அந்த சமயத்தில் சக்கரம் அதிர்ஷடவசமா ரிலீஸ் ஆயிருக்கு. எனக்கு இதெல்லாம் ஒன்னுமே தெரியாது 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here