தமிழகம் முழுவதும் ஈழ தமிழர்களின் பிரச்சனை தீர வேண்டும் என்று பொதுமக்கள் நினைத்துக் கொண்டு இருக்க, அரசியல் வியாதிகளோ அதைப் பற்றிய கவலை கொஞ்சமும் இல்லாமல் தினமும் வீர அறிக்கை விட்டுக்கொண்டு போராடுவோம் போராடுவோம் என்று வெற்று பேச்சு பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
தங்களைத் தன்மான தமிழர்களாகக் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களால் ஐந்த பைசாவுக்கு இது வரை பயன் கிடைத்துள்ளதா!! Image Credit
காங்கிரஸ் மேலிடம் மற்றும் கட்சி
இவர்களின் ஒரே வாதம் ராஜீவ் காந்தியை (உடன் பலர்) புலிகள் கொன்று விட்டார்கள் மற்றும் அவர்கள் தீவிரவாத செயல்கள்.
அதனால் அவர்களை எதிர்க்க வேண்டும் என்கிறார்கள், இவர்கள் கூறாமல் விட்டது கண்மூடி தனமாக என்பதை.
தெரியாம தான் கேட்கிறேன், அவர்கள் செய்தது தவறு தான் நியாயப்படுத்தவில்லை.
அதற்காக அந்த ஒ(சொ)த்தை வாதத்தை வைத்துக்கொண்டு ஒரு இனத்தையே அழிக்கத் துணை போகிறீர்களே! இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
உங்கள் எதிரி புலிகள் என்றால், இது வரை அங்குள்ள தமிழ் மக்களைக் காக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
உங்களைச் சொல்லிக் குற்றமில்லை எங்கள் தமிழக அரசியல்வாதிகளே எதுவும் கண்டு கொள்ளாமல் இருக்கும் போது உங்களைக் கடிந்து என்ன பயன்.
நீங்கள் உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை உபத்ரவம் செய்யாமலாவது இருக்கலாம்.
இருக்கிறீர்களா!! இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்து எங்கள் நெஞ்சில் மேலும் ஈட்டியை பாய்ச்சுகிறீர்கள்.
எங்கள் வரிப்பணமே எங்கள் மக்களை அழிக்கப் பயன்படுகிறது, துக்கம் தாளவில்லை. இதை விட உங்களுக்கு ஒட்டு போட்ட தமிழக மக்களை நீங்கள் கேவலப்படுத்த முடியாது.
அங்கே உள்ள தமிழர்கள் அடிப்பட்டுச் சாகிறார்கள், இங்கே உள்ளவர்கள் உங்களைப் போன்றவர்கள் செய்யும் செயல்களால் அவமானத்தால் தினம் தினம் சாகிறார்கள்.
இந்திரா காந்தி
இந்திரா காந்தியை கொன்றது சிங் என்று அப்போது பெரும் கலவரம் நடந்தது பலர் கொல்லப்பட்டார்கள் ஆனால், தற்போது மன்மோகன் “சிங்” அவர்களையே பிரதமராக்கி இருக்கிறீர்கள்.
நீங்கள் செய்தது தவறு என்று கூறவில்லை ஆனால், உங்கள் பெருந்தன்மையைத் தமிழர்கள் விசயத்தில் மட்டும் ஏன் காட்ட மறுக்கிறீர்கள்?
இவர்களுக்கு ஒரு நியாயம் தமிழர்களுக்கு ஒரு நியாயமா? இன்னும் எத்தனை காலம் புலிகள் பெயரைக் கூறி அங்கே இருக்கும் அப்பாவி தமிழர்களுக்கு நேரும் கொடுமைகளுக்குத் துணை போவீர்கள்?
அவர்கள் உடைத்தால் பொன் குடம் தமிழர்கள் உடைத்தால் மண் குடமா!
அங்கு அநியாயமாகக் கொல்லப்படும் உயிர்கள் கண்களுக்குத் தெரியவில்லையா, அங்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் அறியவில்லையா!
உங்கள் அன்னை சோனியாவும் ஒரு பெண் தானே! அவருக்குக் கூடவா ஈழ தமிழர்களின் அழுக்குரல் கேட்கவில்லை, அங்கே உள்ள பெண்களின் உள்ளக்குமுறல்கள் புரியவில்லை!!
பல காலமாக அனைவரும் வற்புறுத்தியதால், அரசியல் சுற்றுப் பயணமாக!! பிரணாப் முகர்ஜியை வேண்டா வெறுப்பாக அனுப்பி வைத்தீர்கள்.
ஆளே இல்லாத கடையில் டீ ஆத்த செல்லப் போவதை போல, எல்லாம் முடிந்த பிறகு சென்று எந்தப் பயனும் இல்லாமல் திரும்பி வந்தார்.
இனி யாராவது என்ன செய்தீர்கள் என்று கேட்டால்? நாங்கள் தான் பிரணாப் முகர்ஜியை அனுப்பி வைத்தோமே! என்று சப்பை காரணம் கூற மட்டுமே அவரது பயணம் பயன் தரும், மற்றபடி அவரது பயணத்தால் ஒன்றும் நடக்கவில்லை நடக்கபோவதுமில்லை.
வடக்கே உள்ள உங்களுக்குத் தான் புரியவில்லை என்றாலும் கட்சி, கட்டுப்பாடு! கட்சி மேலிடத்தை மீறக்கூடாது, தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள என்று உங்களைப் போன்றவர்களின் செயல்களை ஆதரித்து அதற்கு தமிழரான தங்கபாலு போன்றவர்கள் செய்யும் செயலை நினைத்து வாழ்க்கையே வெறுத்துப் போகிறது
கலைஞர்
தமிழின தலைவர் என்ற பெயரை மட்டுமே கொண்டுள்ளார், இது வரை ஆக்கப் பூர்வமாக ஈழ தமிழர்களுக்காக என்ன நடவடிக்கை எடுத்தார் என்று யாராவது கூறினால் தேவலை!!
ராஜினாமா செய்து விடுவோம் என்று ஸ்ட்ராங்காகக் குறைந்தபட்ச மிரட்டல் கூட விடவில்லை, 40/40 பலமிருந்தும்.
ஈழத்தமிழர் பிரச்சனை எழும்போதெல்லாம் அறிக்கை மட்டுமே அனைவரையும் திருப்திபடுத்தி விடும் என்று நினைத்தீர்களோ!
ஒரு பழமை வாய்ந்த கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் முதல்வர், வயதானவர் என்ற குறைந்த பட்ச நாகரீகம் கூட இல்லாமல், ஜெயலலிதா ஆட்சியில் உங்களைக் குண்டுகட்டாகத் தூக்கி சென்ற போது ஐயோ! அம்மா! கொல்றாங்களே! என்று நீங்கள் கதறியதை கண்டு வெகுண்டெழுந்த தமிழக மக்கள் கண்ணீர் விட்டு, கொந்தளித்து உங்களுக்கு ஆதரவாக நின்றதை மறந்து விட்டீர்களா!
விருப்பபட்டு கடையடைத்து எதிர்ப்பு தெரிவித்ததை மறந்து விட்டீர்களா!
40/40
அடுத்தப் பாராளுமன்ற தேர்தலில் குறைந்த பட்ச வெற்றி கூட ஜெயலலிதாவிற்குத் தராமல் 40/40 என்று அனைத்து தொகுதிகளையும் தமிழக மக்கள் பெற்றுத் தந்தார்களே!
அந்த நன்றியை மறந்து தற்போது ஐயகோ! என்று அறிக்கையுடன் முடித்துக் கொண்டீர்களே! இது நியாயமா!!
கொஞ்சமும் விட்டுத் தராமல் 40/40 பலத்துடன் மறைமுக மிரட்டலுடன் உங்களுக்குத் தேவையான ஐ டி துறையைப் பெற்றுக் கொண்டீர்களே!
அதற்கு பயன்படுத்திய மிரட்டலில் பாதி ஈழ தமிழர்களுக்காகப் பயன்படுத்தி இருந்தால் கூடத் தமிழக மக்கள் இளகி இருப்பார்களே!
தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து பெற்று தருவதும், ஐயகோ! என்று அறிக்கை விடுவதெல்லாம் சாமானிய மக்களைத் திருப்தி படுத்தாது என்பதை உணருங்கள்.
தமிழ் இனத்திற்குச் செய்த துரோகம்
நாளைய வரலாறு நீங்கள் செம்மொழி அந்தஸ்து பெற்று கொடுத்ததை விட, தமிழ் இனத்திற்குச் செய்த துரோகத்தையும் புறக்கணிப்பையும் தான் நினைவு கூறும்.
தற்போதும் நாளை நாளை என்று காலம் கடத்தி வருகிறீர்கள். ஒரு வேளை மத்தியில் ஆட்சி முடியும் நாளை அதற்கு எதிர்பார்த்து இருக்கிறீர்களா!
இன்னும் எத்தனை நாள் கட்சி மற்றும் பதவிக்காக ஈழ மக்களைப் பணயம் வைப்பீர்கள்?
நீங்கள் கலந்து பேசி ஒரு முடிவிற்கு வந்து ஈழ தமிழர்களை (ஒருவேளை) நோக்கும் போது அங்கு உயிருடன் எத்தனை பேர் இருப்பரோ!
மின்சாரப் பிரச்சனை, ஸ்பெக்ட்ரம் பிரச்சனை போன்றவற்றை மறக்கடித்தது போல ஈழ தமிழர் பிரச்சனையையும் என்ன செய்து மறக்கடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறீர்களா?
நீங்கள் தான் ராஜதந்திரி ஆச்சே! உங்களுக்குத் தெரியாததா! இந்த முட்டாள் மக்களுக்கு எப்படிச் செய்தால் உங்கள் வழிக்கு வருவார்கள் என்று!
என்ன செய்தாலும் பணத்திற்காகவும், பிரியாணிக்காகவும் ஒட்டு போட இளிச்சவாயர்கள் இருக்கும் போது உங்களுக்கென்ன கவலை!
ஜெயலலிதா
இவரும் காங்கிரஸ் கட்சிக்கு சற்றும் சளைக்காதவர், புலிகள் எதிர்ப்புப் புலிகள் எதிர்ப்பு என்று ஓயாமல் கூறி வருபவர்.
நீங்கள் புலிகள் எதிர்ப்பு எதற்குச் செய்கிறீர்கள்? அவர்கள் தீவிரவாத செயல்கள் செய்கிறார்கள் என்று கருதுவதால் தானே!
அப்படி என்றால் எந்த ஒரு நடு நிலைமையும், போர் வரைமுறையும் இல்லாமல் போர் தொடுத்து அப்பாவி தமிழ் மக்கள் மீது குண்டு வீசி கொள்ளும் சிங்கள அரசை எதிர்த்து ஏன் எதுவும் கூறவில்லை?
அங்கு அல்லல் படும் அப்பாவி தமிழ் மக்களைப் பற்றி உங்களுக்கேன் எதுவும் தோன்றவில்லை? நீங்கள் தமிழர் அல்லாதது காரணமா!
ஒருவேளை அதனால் உங்களால் எங்கள் இன மக்கள் படும் வேதனைகளைப் புரிந்து கொள்ளமுடியவில்லையோ!
வேற்று இனமாக இருந்தாலும் இவர்களும் மனித இனம் தானே! குறைந்த பட்ச மனிதாபிமான இரக்கம் கூடவா வரவில்லை!
நீங்களும் ஒரு பெண் தானே! அங்கே ஒரு பெண் படும் வேதனையை உங்களால் உணரமுடியவில்லையா!
பாலியல் வல்லுறவுகளுக்கு ஆளாகி அவர்கள் கொடுக்கும் கூக்குரல் உங்கள் செவிகளில் விழவில்லையா!
இன்னும் எத்தனை காலம் தான் புலிகள் என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு ஒரு இனத்தை அழிக்கத் துணை போவீர்கள்.
எது எதற்கோ ஆளும் கட்சியை எதிர்த்து போராடுகிறீர்கள், உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் உண்ணாவிரதம் இருக்கிறீர்கள்!
ஆனால், தமிழர்கள் படும் அல்லலை நினைத்து சிறு அளவிலாது எதிர்ப்பு தெரிவித்தீர்களா!
கொடை நாடு எஸ்டேட் மற்றும் பல இடங்களில் பல பங்களாக்களை ஓய்வெடுக்க வாங்கிக் குவிக்கிறீர்கள்.
அங்கே ஈழ மக்கள் ஒளிய கூட இடம் இல்லாமல் இருப்பது உங்கள் பார்வைக்குத் தெரியவில்லையா!
உங்களை என்ன ஈழத்திற்குச் சென்று போராடாவா எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்! ஒரு தார்மீக ஆதரவைக் கொடுங்கள் என்று தானே கேட்கிறார்கள்.
ஆளும் கட்சியில் பிரச்சனை ஆகும் முன்பே அறிக்கை மேல் அறிக்கை விடும் நீங்கள் இது பற்றி என்றாவது யோசித்ததாவதுண்டா!
வைகோ, ராமதாஸ், திருமா, விஜயகாந்த் மற்றும் பலர்
வைகோ ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தார் பேசிக்கொண்டு இருந்தார் இடையில் காணாமல் போய்த் தற்போது மீண்டும் வந்து இருக்கிறார்.
ராமதாஸ் அவர்களும் போராட்டம் போராட்டம் என்று கூறி கொண்டு இருக்கிறார் செயலில் என்ன என்று புரியவில்லை.
திருமா சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தவுடன் மகிழ்ச்சியடைந்த நபர்களில் நானும் ஒருவன்.
மற்றவர்களைப் போல இல்லாமல் செயலில் காட்டுகிறாரே என்று, பின் தான் தெரிந்தது இது நான்கு நாள் உண்ணாவிரதம் என்று.
இவ்வளவு தானா உங்கள் உறுதி!
தமிழ் மக்கள் தமிழ் மக்கள் என்று மூச்சுக்கு நூறு முறை கூறும் விஜயகாந்த் எங்கே போனார் என்றே தெரியவில்லை!
ஈழ தமிழர்கள் துன்பம் தீரும் வரை பிறந்தநாள் கொண்டாட போவதில்லை என்றார். இதை வைத்து என்ன செய்வது!
இதனால் யாருக்கு லாபம் இவருக்குக் கொண்டாட்ட செலவு குறையும் அது மட்டுமே லாபம். தற்போது திடீரென்று ஆதரவு அறிக்கை விடுகிறார்.
இத்தனையையும் பார்த்து ஏமாந்து மறுபடியும் ஏமாந்த நிகழ்ச்சி, இவர்கள் சமீபத்தில் செய்தது, ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக நாம் கூடி முக்கிய முடிவெடுக்கலாம் என்று கூறிய போது அப்பாடா! நல்ல ஒரு போராட்ட முடிவு எடுப்பார்கள் என்று மறுபடியும் நம்பி இருந்த வேளையிலே ஒன்றும் உதவாத சப்பையான வழக்கமான அறிவிப்பை தெரிவித்தார்கள்.
அப்போது அவர்கள் அறிக்கையில் சொல்லாமல் விட்டது…..இன்னுமாடா இந்த உலகம் நம்மை நம்பிட்டு இருக்குது!
முத்துக்குமார்
இவர் செய்தது சரி தவறு என்று பலரும் விவாதித்து அவரைப் பல முறை கொன்று விட்டதால் நான் எதுவும் கூற விரும்பவில்லை.
மாணவர்கள்
எந்தப் போராட்டம் என்றாலும் நாங்கள் கலந்து கொண்டால் மட்டுமே ஒரு எழுச்சியை நீங்கள் காண முடியும் என்று கூறாமல் தங்கள் செயலில் காட்டியவர்கள்.
அரசியல்வாதிகள் அனைவரும் வெற்று அறிக்கையில் காலத்தை ஒட்டி கொண்டு இருக்க, எங்களைப் பாருங்கள் என்று சாகும் வரை உண்ணாவிரதம் என்று அதைக் கடைபிடித்தவர்கள் கடை பிடித்துக்கொண்டு இருப்பவர்கள்.
அரசியல்வாதிகள் சினிமா நடிகர்களும் சென்று ஆதரவு தான் கொடுத்து வருகிறார்களே தவிர ஒருத்தராவது தானும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்கிறேன் உங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கிறேன் என்று கூறினார்களா! இவர்கள் எல்லாம் உஷாராகத் தான் இருக்கிறார்கள்.
மாணவர்களே உங்களை மனதார பாராட்டுகிறேன்.
எனக்குத் தனிப்பட்ட முறையில் உங்கள் மீது சில விசயங்களில் வருத்தம் இருந்தாலும், உங்கள் போராட்டத்தை வன்முறையில் காட்டாமல் அற வழியில் தொடருங்கள்.
திரும்ப ஒருமுறை மாணவர் சக்தி என்ன எனபதை அனைவருக்கும் உணர்த்தி இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.
மாணவர்கள் போராட்டம் நாளுக்குநாள் வலுப்பெறுவதால் அரசு காலவரையின்றி விடுமுறை அறிவித்துக் கல்லூரிகளையும் விடுதிகளையும் மூடியுள்ளது.
கலைஞர் அவர்களே! திரும்ப ஒரு முறை நீங்கள் ஒரு அரசியல் சாணக்கியன்!! என்பதை நிரூபித்து இருக்கிறீர்கள்.
உங்கள் எண்ணம் ஈடேறுமா என்பதை விரைவில் பார்ப்போம்.
நீங்கள் ஒன்றை கவனித்தீர்கள் என்றால் புரியும்!
அரசியல்வாதிகள் இது வரை எந்த உருப்படியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
ஆனால், மாணவர்கள் மற்றும் முத்துக்குமார் பிரச்சனையில் ஏற்படும் எழுச்சியைத் தங்களுக்கு ஆதரவாக மாற்றிக் கொள்ள அவர்களுடன் போராடுவது போலப் பேட்டி மேல் பேட்டி கொடுத்துக்கொண்டு, என்னமோ இவர்களாலே அனைத்தும் நடப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள்.
சன், கலைஞர், ஜெயா டிவி க்கள் மற்றும் சில ஊடக பத்திரிகைகள்
ஒன்றுமில்லாத பிரச்னையைக் கூடப் பூதாகரமாக்க கூடிய சக்தி பெற்ற சன் டிவி, பூதாகரமாக இருக்கும் தமிழர் பிரச்சனை பற்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
இவர்கள் நினைத்தால் பொது மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் ஆனால், அரசியல் காரணங்களால் புறக்கணிக்கிறார்கள்.
இவர்கள் படம் “படிக்காதவன்” க்கு கொடுத்த முக்கியத்துவம் கூட ஈழ தமிழர்கள் பிரச்சனைக்குச் செய்திகளில் கொடுக்கப்படவில்லை.
கலைஞர் டிவியைத் தங்கள் சொந்த பிரச்சனைக்காகப் பலரும் வாய் பிளக்க வைக்கும் குறுகிய நேரத்தில் துவக்கினார்கள்.
ஆனால், ஈழ தமிழர்கள் பிரச்சனைக்கு நாளை நாளை என்று காலம் கடத்தி அறிக்கை விட்டுக் கொண்டுள்ளார்கள்.
முத்துக்குமார் உண்மையைச் சொன்னதாலோ என்னவோ அவரது செய்தி மற்றும் பல ஈழ செய்திகளைப் பத்தோடு பதினொன்றாகச் செய்திகளில் ஒரு ஓரமாகக் கூறுகிறார்கள்.
ஜெயா டிவி…… கூற ஒன்றுமில்லை
தமிழ் பத்திரிகைகள்
தமிழ் பத்திரிகைகள் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிராகவே!
இவர்களுக்குத் தமிழர்கள் மீது அப்படி என்ன வெறுப்பு! அவர்கள் மூலம் வரும் பணம் மட்டும் வேண்டும் ஆனால், அவர்கள் உள்ளக்குமுறல்கள் தேவையில்லையா!
இவர்கள் குறி புலிகள் என்றால் அங்குள்ள மக்கள் என்ன பாவம் செய்தார்கள். ஏற்கனவே பத்திரிக்கை தர்மத்தை குழி தோண்டி புதைத்து விட்டார்கள்.
தற்போது அதற்க்கு சமாதி கட்டி ஸ்ட்ராங் ஆக்கி விட்டார்கள்.
கட்சி தான் முதலில் என்று பேசும் அரசியல் கட்சி தொண்டர்களே! கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டியது தான், தவறில்லை.
ஆனால், நம் தமிழினம் அங்கு அழிந்து கொண்டு இருக்கும் போதும் கட்சி! கொள்கை!! அரசியல்!!! என்று பிடிவாதமாக உங்கள் கட்சி மற்றும் தலைவர்களின் செயல்களை நியாயப்படுத்திப் பேசும் உங்களிடம் கூற ஒன்றுமில்லை.
மனிதாபிமானம் என்ற ஒன்று உங்கள் மனதில் எங்காவது ஒரு ஓரத்தில் இருந்தால் புரிந்துகொள்ளுங்கள்.
லண்டனில் ஈழத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்
உண்மையில் அதை இணையத்தில் பார்த்து அசந்து போனேன், இதைப் போல ஒரு போராட்டம் நம் தமிழகத்தில் எப்போது என்று.
அங்குப் பேசியவர்கள் பலரும் ஐரோப்பாவின் கவனத்தை ஈர்க்க வேண்டும், உலக மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் அங்கே அல்லல் படும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றார்கள்.
ஆனால், உண்மையான ஆதரவு கொடுக்க வேண்டிய இந்தியாவோ சொத்தைக் காரணங்களைக் கூறி நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
நம் கையைக் கொண்டே நம் கண்களைக் குத்துகிறது.
அரசியல்வாதிகளோ ஈழத் தமிழர்கள் துன்பத்தைத் தங்களுக்குச் சாதகமாக எப்படிக் கொண்டு வருவது என்று முயற்சித்துக்கொண்டு!
அரசியல்வாதிகளே!…….. ம்ஹீம் நல்லா இருங்க
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
அருமையான சாட்டையடி கிரி..ஏதோ நல்லது நடந்தா சரி
//எம்.எம்.அப்துல்லா said…
கிரி அண்ணே அப்ப அவரச் சாகச் சொல்லுறீங்களா??//
சாகும் வரை உண்ணாவிரதம் என்பது ஒரு வார்த்தைக்கே என்றாலும் அதில் குறைந்தபட்ச உறுதியாவது வேண்டாமா!
மாணவர்களுக்கு இருக்கும் உறுதி கூட இல்லையே! ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு
இதற்க்கு எதற்கு சாகும் வரை உண்ணாவிரதம் என்ற அறிவிப்பு!, அடையாள உண்ணாவிரதம் என்று கூறி ஒரு நாளில் முடித்து கொள்ள வேண்டியது தானே!
இன்னும் கூற நினைக்கிறேன் ஆனால் பதிவு ஈழ தமிழர்கள் பற்றியது, திருமா உண்ணாவிரதம் பற்றியதல்ல.
பொறுத்து பொறுத்து பொங்கீட்டீங்க போல!பதிவு நீளமா இருந்ததால் நேரே பின்னூட்டத்துக்கு வந்து விட்டேன்.இனி பதிவுக்கு.
மனசு வலிக்குதுங்க.எதையாவது செஞ்சு அந்த மக்கள காப்பாத்தணும்
MY DEAR BLOOD,CRYSTAL CLEAR IF ANYBODY READ THIS,THEY MUST DO IT NOW.THANKS YOULIKE CRRYING BLOODIQBAL
சூடாப் பேசறப்பவே நினைச்சேன் பதிவு சூடாயிடும்ன்னு.
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
Excellent Writeup Giri.
ஏதாவது ஒரு நல்ல அரசியல் தலைவர் வந்து இந்த எழுச்சி மிக்க மாணவர்களை வழி நடத்த மாட்டாரான்னு தோணுது ..
Thanks,
Arun
//பின் தான் தெரிந்தது இது நான்கு நாள் உண்ணாவிரதம் என்று, இவ்வளவு தானா உங்கள் உறுதி! //
கிரி அண்ணே அப்ப அவரச் சாகச் சொல்லுறீங்களா??
//Shivaji Rao Admirer said…
விடுதலை புலிகளும் ஈழ தமிழர்களும் ஒன்று அல்ல என்பதை முதலில் நினைவில் கொள்க//
அதை நான் நன்கு அறிவேன்.
//ஏதோ விடுதலை புலிகள் தான் ஈழ தமிழர்களை காப்பாற்றி வருவது போல பேசுகிறீர்கள்//
நான் எந்த இடத்திலும் அவ்வாறு கூறவில்லை. புலிகள் பெயரால் ஒன்றும் அறியா அப்பாவி தமிழ் மக்களுக்கு இவர்கள் செய்யும் புறக்கணிப்பை மட்டுமே கூறி உள்ளேன்.
அங்கு யார் யாரை காப்பாற்றுகிறார்கள் என்று அங்குள்ளவர்களுக்கு தான் தெரியும். நாம் ஊகத்திலும் ஊடகங்களில் படிப்பதையும் வைத்தே பேசுகிறோமே தவிர நமக்கு யாருக்கும் அங்குள்ள உண்மை நிலவரம் தெரியாது. சரியாக தெரியாத ஒன்றை வைத்துக்கொண்டு அவர்கள் காப்பாற்றுகிறார்கள் அல்லது காப்பாற்றாமல் இருக்கிறார்கள் என்று கூறுவது முறையல்ல.
//தாங்கள் மனித கேடயங்களாக பிடித்து வைத்திருக்கும் ஈழ தமிழர்களை வெளியே அனுப்ப மறுத்த கருணா மூர்த்திகள் யாருப்பா ?
இதை மறுக்கிறீர்களா ?//
இது பற்றி எனக்கு தெரியாது. தெரியாத விஷயங்களில் கருத்து கூறவிரும்பவில்லை கூறுவதுமில்லை.
இந்த பதிவு முழுவதும் ஈழ தமிழர்கள் மற்றும் அவர்கள் படும் வேதனைகள் பற்றியது மட்டுமே, வேறு யாரை ஆதரித்தும் அல்ல.
ஒன்றுமில்லாத பிரச்னையை கூட பூதாகரமாக்க கூடிய சக்தி பெற்ற சன் டிவி, பூதாகரமாக இருக்கும் தமிழர் பிரச்சனை பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கிறது.//
அவர்களுக்கு படிக்காதவன் படத்துக்கு விளம்பரம் செய்யவே நேரம் குறைவாக இருகிறதாம்!
நல்ல அலசல்
நீங்கள் கலந்து கொள்ளலாமே, மாணவர்களுடன்!!
48 மணி நேரம் குடுத்தது எதுக்கு? மக்கள் ஏன் பாதுகாப்பு வளையத்துக்குள் வரவில்லை? சும்மா தெரிஞ்சிக்கத்தான்.
உள்ளக்கிடக்கை…. 🙁
விரிவான பதிவுக்கு நன்றி.
முத்துக்குமாரின் மரணம் இன்றும் வலித்துக்கொண்டு தான் இருக்கிறது.
ஏதோ எழுதவேண்டுமே என்று எழுதாமல் அக்கறையாக எழுதியதற்கு நன்றி.
நெத்தியடி பதிவு
//// விடுதலை புலிகளும் ஈழ தமிழர்களும் ஒன்று அல்ல என்பதை முதலில் நினைவில் கொள்க .ஏதோ விடுதலை புலிகள் தான் ஈழ தமிழர்களை காப்பாற்றி வருவது போல பேசுகிறீர்கள் !உண்மை நிலவரம் என்ன ?தாங்கள் மனித கேடயங்களாக பிடித்து வைத்திருக்கும் ஈழ தமிழர்களை வெளியே அனுப்ப மறுத்த கருணா மூர்த்திகள் யாருப்பா ?இதை மறுக்கிறீர்களா ?///இருவரும் வேறு என்றால் ஏன் தமிழ் மக்கள் கொல்லப்படுகிறபோது இந்திய மத்திய அரசு பேசாமல் இருக்கிறது? சும்மா புலிகளில் பிழை சொல்லும் நீங்கள் ஒழுங்காக செய்திகளை (நிச்சயமாக இந்திய தொலைக்காட்சிகளல்ல இந்திய அணி டாஸ் வெற்றி பெற்று பாட் செய்வதை பிளாஸ் நியுஸ்சாக போடும் வடஇந்திய தென்னிந்திய ) பிரணாப் சொன்னார் 48 மணி நேரம். அன்பழகன் சொன்னார் தங்காளல் தான் என்று. சரி அப்போ தமிழக கட்சிகள் கேட்டபோது போயிருந்தால் எத்தனை தமிழ் மக்கள் காப்பாற்றபட்டிருப்பார்க்ள,? எனையா மன்மோகன் மருத்துவமைனையில் . மிகப்பெரிய பொறுப்பெல்லர்ம அவர் தலையில் இருக்க 5 மணிநேரம் கொழும்பில் இருந்து என்ன புடுங்கினார்? சரி 48 மணிநேர யுத்தநிறுத்தத்தில் 3 லட்சம் மக்கள் எப்படி வெளியேறுவார்கள்? சரி பிரணாப் கருணாநிதி கொண்டுவந்ததாக சொன்ன யுத்தநிறுத்தம் யுத்தநிறுத்தம் அல்ல it is not a ceasefire it is a truce. அதாவது மக்கள் வெளியேற கொடுக்கப்பட கெடு என இலங்கை சொன்னதே. அது உங்களுக்கு தெரியாதா? சும்மா கிணற்றுத்தவளை மாதிரி கத்தவேண்டாம். உங்களுக்கு விளக்கம் சொல்லி விளங்க வைக்க முடியாது. தமிழக தமிழர்களு்ககு விளக்கும் எங்கள் நிலை.
விடுதலை புலிகளும் ஈழ தமிழர்களும் ஒன்று அல்ல என்பதை முதலில் நினைவில் கொள்க .
ஏதோ விடுதலை புலிகள் தான் ஈழ தமிழர்களை காப்பாற்றி வருவது போல பேசுகிறீர்கள் !
உண்மை நிலவரம் என்ன ?
தாங்கள் மனித கேடயங்களாக பிடித்து வைத்திருக்கும் ஈழ தமிழர்களை வெளியே அனுப்ப மறுத்த கருணா மூர்த்திகள் யாருப்பா ?
இதை மறுக்கிறீர்களா ?
என்றும் அன்புடன் !
கிரி,
உங்க அளவுக்கு எனக்கு பொறுமையில்லீங்க. இந்த கேடுகெட்ட அரசியல் வியாதிங்க செய்யிறத நினைச்சா வர்ற கோவத்த அடக்க முடியல, அந்த கோவத்தோட எழுத முடியல.
ஆனால் நான் எழுத நினைச்சத ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க.
மாணவர்கள் புரட்சி வரணும்.
உண்மைகள்…
மாணவர் சக்திக்கிருக்கிற வலிமையை இன்னும் இலங்கையின் சுய அறிவே இல்லாத சிங்கள மாணவர் சமுதாயம் உணரவே இல்லை…
இலங்கையின் பல்கலைக்கழகங்கள் நினைத்தால் நல்ல முடிவொன்றிருக்கிறது
நல்லா சொல்லி இருக்கிறீங்க. இது புரிய வேண்டியவங்களுக்கு புரியாதே.,புரிய மாட்டிக்குதே..
குமுறிக் கொந்தளித்திருக்கிறீர்கள்.. நன்றிகள் நீங்கள் சொன்ன உண்மை நிலைக்கு..
அனல் பறக்கிறது உங்கள் வார்த்தைகளில்..
உங்களைப் போன்ற நல்ல நெஞ்சங்களின் வேண்டுதலாவது எமக்கு நல்ல நிலை பெற்றுத் தரட்டும்..
//அரசியல்வாதிகளோ ஈழ தமிழர்கள் துன்பத்தை தங்களுக்கு சாதகமாக எப்படி கொண்டு வருவது என்று முயற்சித்துக்கொண்டு…..//
வேதனையும்,வெட்கக்கேடும்.
வேதனையும்,வெட்கக்கேடும்.
தமிழ் ஈழ செய்திகளையும், முத்துகுமாரின் மரணத்தையும் இரட்டிப்பு செய்யும் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி இணைப்புக்களை உலகம் முழுதும் பரவி உள்ள ஈழ தமிழர்களும் மற்றும் அனைத்து தமிழ் மக்களும் உடனே துண்டித்தால் அவர்களுக்கு உறைக்கும். அவர்கள் தொழிலில் கை வைத்தால் ஒழிய அவர்கள் திருந்த மாட்டார்கள். உண்மையிலேயே ஈழ தமிழர்களுக்கு இந்த தொலைக்காட்சிகளின் மீது வெறுப்பு இருந்தால் அவர்கள் இதை ஒரு பிரச்சாரமாக செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இல்லாமல் தமிழக தமிழர்களை போல சீரியல் மோகத்தில் ஆட்பட்டு இருந்தால் இதனை உங்களால் செய்ய முடியாது.
நல்ல சொன்னீங்க கிரி ……..இந்த அரசியல்வாதிகளால் நல்லது ஒன்றும் நடக்காது என்பது மட்டும் உண்மை .. என்னமோ நடக்குது..ஒன்னும் புரியல …முத்துகுமாரின் தியாகத்துக்கு பலன் கிடைத்தால் சரி…
மிக அருமையான அலசல் கிரி. தேர்ந்த பத்திரிகையாளருக்குரிய முனைப்போடு தகவல்களைத் திரட்டி எழுதியுள்ளீர்கள்! க்ரேட்!
if ltte and tamils are one then why everyone is crying when SLArmy kills “ltte”?????
நீங்களும் உங்கள் ஈழ தமிழ் ஆதரவும் என்று சொல்வதில் இருந்தே நீங்கள் புலிகளை ஆதரிப்பது தெரிகிறது.இப்போ நீங்கள் சொல்ல வந்தது என்ன? கலைஞர் ஜெயலலிதா வைகோ ராமதாஸ் திருமா விஜயகாந்த் எல்லோரும் பேசாமல் இருக்கிறார்கள் ஏன் புலிகளை ஆதரியுங்கள் என்பது தானே.இலங்கை தமிழ்மக்கள் புலிகளால் பணயம் வைக்கப்பட்டு உள்ள இந்த நிலையிலும் அந்த மக்களை யுத்தப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளிக்கொண்டு வருவதைக் கோருவதை விட்டுவிட்டு புலிகளுக்கு ஆதரவாகவும் பிரகாகரன் முடிசுட்டுவதற்கும் ஆதரவாக பதிவிட்டுள்ளீர்கள்.
//thequickfox said …நீங்களும் உங்கள் ஈழ தமிழ் ஆதரவும் என்று சொல்வதில் இருந்தே நீங்கள் புலிகளை ஆதரிப்பது தெரிகிறது.//பதிவு முழுவதும் வாசிக்கவில்லை போல் இருக்கிறது. அப்படி ஆதரவான கருத்து எதுவும் இந்த பதிவில் இல்லையே.
//thequickfox said…
நீங்களும் உங்கள் ஈழ தமிழ் ஆதரவும் என்று சொல்வதில் இருந்தே நீங்கள் புலிகளை ஆதரிப்பது தெரிகிறது.இப்போ நீங்கள் சொல்ல வந்தது என்ன? கலைஞர் ஜெயலலிதா வைகோ ராமதாஸ் திருமா விஜயகாந்த் எல்லோரும் பேசாமல் இருக்கிறார்கள் ஏன் புலிகளை ஆதரியுங்கள் என்பது தானே.
இலங்கை தமிழ்மக்கள் புலிகளால் பணயம் வைக்கப்பட்டு உள்ள இந்த நிலையிலும் அந்த மக்களை யுத்தப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளிக்கொண்டு வருவதைக் கோருவதை விட்டுவிட்டு புலிகளுக்கு ஆதரவாகவும் பிரகாகரன் முடிசுட்டுவதற்கும் ஆதரவாக பதிவிட்டுள்ளீர்கள்.//
வேற ஏதாவது சொல்லாம விட்டு இருக்கீங்களா!
Yuor analysis is 100% correct. Politicians are just interested in making money, Thamizh inam in Thamizhnadu is another goats, not interested in doing anything
முத்துகுமாருக்கு வீர வணக்கம்.———————அணையப் போவதாய் எண்ணிக் கொண்டிருந்த இனநெருப்பை பற்றவைத்த அக்கினிக்குஞ்சு நீ!ஆம்!உன் தாய் தமிழச்சி தான் உயிரை துச்சமென மதிக்கும் விவேகமிக்க வீரனைப் பெற்றெடுக்கஓர் தமிழச்சியால் தானே முடியும்…நீ தூத்துக்குடிதான்கலப்படமில்லா முத்து அங்குதானே கிடைக்கும் …முராரியால் பூபாளம் பாடிய புதிய வரலாறு நீ!அவர்கள் புலியாய் போரிடுகின்றனர் நீ ஒளியாய் போரிட்டாய் நாங்கள் வாய்மொழியாலாவது போரிட வேண்டாமா?முத்துக்குமார் தமிழ்க்கடவுள் என்றனர் நம்பவில்லை…முத்துக்குமார்தானே தமிழ்க்கடவுளாகஇருக்க முடியும் இப்போது நம்புகிறேன்…நீ எழுதி வைத்த மரண ஓலைதான் இனி எங்கள் புதிய புறநானூறு!பல அரசியல் வாதிகள் பிணங்களாய்ப் போனார்கள்….நீ எப்போதும் உயிரோடு இருப்பாய்!தூக்குக்கயிற்றை முத்தமிட்டான் பகத்சிங் தீயை முத்தமிட்டாய் நீ!அன்று இந்தியா கிடைத்தது…நாளை ஈழம் கிடைக்கும்!வீர வணக்கத்துடன்Dr.ச.தெட்சிணாமூர்த்தி,அறந்தாங்கி.
Regarding using the civilians as Human Shield…================================As per Srilankan Army,they have killed most of LTTE.LTTE has least strength with them…Do u think, is it possible to a least of number of LTTEs can take 2.5 lacs civilians along with them without their willingness.I dont think so….That too staying with them for past 10 days??????
You are disappointing.
சரியான சாட்டையடி ! பொறுமையோடு தகவல்களை திரட்டி தந்திருக்கிறீர்கள் !முயற்சிக்கு வாழ்த்துக்கள் !