மஞ்சள் பூ மர்மமும் சீமை கருவேல மரமும்

6
மஞ்சள் பூ மர்மமும் சீமை கருவேல மரமும்

காமிக்ஸ் பிரபலமாக இருந்த காலத்தில் முத்துக் காமிக்ஸ் வெளியீட்டில் வந்த “மஞ்சள் பூ மர்மம்” காமிக்ஸ் புத்தகம் மிகப் பிரபலம். அந்தச் சமயத்தில் சக்கைப் போடு போட்ட காமிக்ஸ்.

மஞ்சள் பூ மர்மம்

மஞ்சள் பூ மர்மம் கதை என்னவென்றால், ஒரு நாட்டில் பிரச்னையை ஏற்படுத்தத் தண்ணீரில் கை வைக்கலாம் என்று முடிவு செய்து தண்ணீரை அதிகளவில் உறிஞ்சும் மஞ்சள் பூ ஒன்றின் விதையைத் தூவி விடுவார்கள்.

இந்தப் பூ ஆறுகளில் பரவி விடும். நீங்கள் ஆறு வாய்க்கால் குளங்களில் ஆகாயத் தாமரை வகைச் செடியைப் பார்த்து இருக்கலாம். அது போல இது பரவி விடும்.

பரவியதோடு தண்ணீரை உறிஞ்ச ஆரம்பித்து விடும். இதனால் நாளடைவில் ஆறுகள் வற்றி நாட்டில் தண்ணீர் பஞ்சம் கடுமையாக ஏற்படும்.

இதன் பிறகு இதை அழித்து எப்படித் தண்ணீரை மீட்கிறார்கள் என்பது தான் கதை.

ரொம்பச் சுவாரசியமான கதை.

செய்திகள் படிப்பவராகவும் தண்ணீரின் மீது அக்கறை உள்ளவராகவும் இருந்தால், இந்நேரம் நான் என்ன கூற வரப் போகிறேன் என்று தெளிவாகப் புரிந்து இருக்கும்.

ஆம்.

அந்த “மஞ்சள் பூ” செடியின் நிலைமையில் தான் நம் ஊரில் உள்ள “கருவேல மரம்” உள்ளது.

ஆங்கிலேயர்கள் செய்த வேலையா?

இந்தக் கருவேல மரத்தை ஆங்கிலேயர்கள் வேண்டும் என்றே நம் ஊரில் வளர நடவடிக்கை எடுத்து இது போல நிலையைக் கொண்டு வரத் திட்டமிட்டார்கள் என்று எப்போதோ படித்தேன்.

அப்போது நம்பவில்லை ஆனால், தற்போது உண்மைதானோ என்று எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

“நீதிமன்றமே கருவேல மரங்களை அழிக்க உத்தரவிட்டுள்ளது” என்றால், இதனுடைய தீவிரம் உங்களுக்குப் புரிந்து இருக்கும்.

தமிழ்நாட்டில் அதிகளவில் கருவேல மரங்கள் பரவியுள்ளன. இவை தண்ணீரை உறிஞ்சி நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவேகமாகக் காலி செய்து வருகிறது.

மரம் பார்க்க வறட்சியான மரம் போல இருக்கும் ஆனால், தண்ணீரை உறிஞ்சிக் கொண்டே இருக்கும்.

பிற்சேர்க்கை

நண்பர்கள் பலர் கூறியதில் இருந்து சீமைக் கருவேல மரங்களே மண்ணை பாதித்து, தண்ணீர் பற்றாக்குறையையும் ஏற்படுத்துகின்றன.

இராமநாதபுரம் மாவட்டம் ஏன் வறட்சியாக இருக்கிறது தெரியுமா?

இராமநாதபுர மாவட்டம் வறட்சிக்குப் பெயர் போனது.

அங்கே உள்ளவர்களைக் கேட்டுப்பாருங்கள், எங்கே பார்த்தாலும் கருவேல மரங்கள் தான் பரவியிருக்கும் ஆனால், பலருக்கு கருவேல மரத்தால் தான் நம் மாவட்டம் வறட்சியாக உள்ளது என்பது தெரியாது.

அங்கே உள்ள கண்மாய்களின் ஓரத்தில் கருவேல மரங்கள் அதிகளவில் இருக்கும்.

மாடுகளுக்குக் கருவேல மரத்தில் இருக்கும் கருவேல மர காய் பிடிக்கும். அதைத் தின்று கண்மாய்ப் பகுதிகளில் சாணத்தைப் போடும் போது அதில் இருந்து மேலும் கருவேல செடிகள் முளைக்கின்றன. கண்மாய்களும் விரைவில் வறண்டு விடுகின்றன.

ஒவ்வொருவரின் வீடு அருகேயும் கருவேல மரங்கள் அதிகளவில் இருக்கும். இதனுடைய ஆபத்து தெரியாமலே பலர் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

ஒரு மாவட்டமே இந்தக் கருவேல மரத்தால், தண்ணீர் பிரச்சனையில் தவிக்கிறது ஆனால், அரசாங்கம் தூங்கிக்கொண்டு இருக்கிறது.

மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து மரங்களை வேரோடு பிடுங்கி எடுத்து, மற்ற மரங்களை நட்டு இருந்தால், இராமநாதபுர மாவட்டமும் மற்ற மாவட்டங்களைப் போல வறட்சியின் பிடியின் சிக்காமல் இருந்து இருக்கும்.

தயவு செய்து முயற்சித்துப் பாருங்கள்

இதைப் படிக்கும் இராமநாதபுர மாவட்ட மக்கள் உங்கள் தோட்டம், வயல் பகுதிகளில் உள்ள கருவேல மரங்களை வெட்டாமல் வேரோடு பிடுங்கி எறிந்து அதற்குப் பதிலாக வேறு மரங்களை நட்டு வளருங்கள்.

நிச்சயம் உங்கள் பகுதியின் வறட்சியில் மாற்றத்தைக் காண முடியும். குறிப்பாகக் கிணறு, குளம், கண்மாய், ஏரி பகுதிகளில் கருவேல மரங்கள் இருக்கவே கூடாது ஆனால், இந்த இடங்களில் தான் அதிகமுள்ளன என்பது கசப்பான உண்மை.

உங்களுக்கு இராமநாதபுர மாவட்ட நண்பர்கள் இருந்தால், அவர்களிடம் கருவேல மர ஆபத்து குறித்துக் கூறி அவர்களை நடவடிக்கை எடுக்கக் கூறுங்கள்.

நான் கூறுவது இராமநாதபுர மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல, யாரெல்லாம் உங்கள் பகுதிகளில் கருவேல மரங்களை வைத்துள்ளீர்களோ, அவர்கள் எல்லாம் வேரோடு பிடுங்கி எறிந்து, மற்ற மரங்களை வளருங்கள்.

எங்களுடைய அனுபவம் 

எங்களுடைய தோட்டத்தில் ஒரு பகுதியில் கருவேல மரங்கள் நிறைய அளவில் இருந்தன. நாங்களும் அது நல்ல விலைக்குப் போகும் என்று அப்படியே விட்டு விட்டோம் ஆனால், தண்ணீர் குறைந்து அப்பகுதி மட்டும் வறட்சியாக இருந்தது.

சரி.. எதோ பிரச்சனை போல என்று நாங்களும் கண்டு கொள்ளவில்லை.

சில மாதங்கள் கழித்து அப்பகுதியை இன்னொருவருக்கு விற்று விட்டோம். வாங்கியவர் ஒரு பெரிய பாட்டாளி, விவசாயத்தில் கடின உழைப்பாளி.

வாங்கியதும் அவர் செய்த முதல் வேலை புல்டோசர் வைத்து அனைத்து மரங்களையும் வேரோடு பிடுங்கி விட்டார்.

பின்னர் மரம் இருந்த இடத்தில் நெல் பயிரிட்டார். நாங்கள் கொஞ்ச மாதங்கள் அப்பகுதிக்கு செல்லவில்லை, பின்னர் ஒரு நாள் சென்று பார்த்தால், அந்த இடமே பசுமையாக மாறி இருந்தது.

என் அப்பாவும் விவசாயி தான் ஆனால், அவருக்குக் கருவேல மரத்தின் பாதிப்பு தெரியவில்லை. அப்போது இது குறித்த விழிப்புணர்வும் இல்லை.

எனக்கு இது பற்றித் தெரிந்து கடந்த சில மாதங்களுக்கு  முன்பு நினைவு வந்து கேட்ட போது தனக்குத் தெரியவில்லை என்று கூறினார்.

இது தான் பலரின் நிலை.

மக்களிடையே விழிப்புணர்வு இல்லை

கருவேல மரத்தின் தீமை பற்றிப் பலருக்குத் தெரியவில்லை. அது நம்மை அழிக்க வந்த பிசாசு. மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு இல்லை.

கருவேல மரத்தை வெட்டினால் போதாது வேரோடு பிடுங்கி ஏறிய வேண்டும்.

தமிழ்நாடு நீர் ஆதாரம் அதிகளவில் இல்லாத மாநிலம், இதில் கருவேல மரமும் பரவி இருந்தால், நம் நிலை என்ன?

அரசாங்கம் இதை அழிக்கக் கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால், எதிர்காலத்தில் நாம் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்படுவோம் 🙁 .

அரசாங்கம் நினைத்தால், ஒரே ஒரு அறிவிப்பின் மூலம் இதை மிகச் சாதாரணமாகச் செய்ய முடியும். பொறுப்பில் உள்ளவர்களுக்கு அக்கறை இல்லை இதில் யாரை நொந்து என்ன செய்ய!

பொதுப்பணித்துறை நினைத்தால், இதெல்லாம் ஒரு விசயமே அல்ல ஆனால், நினைக்க மாட்டேங்குறாங்களே! ரொம்ப நாளா சொல்லணும் என்று நினைத்தேன், சொல்லிட்டேன்.

தொடர்புடைய கட்டுரை

மியாவாக்கி காடு வளர்ப்பு முறை என்றால் என்ன?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

 1. சரி தான் கிரி…!!!

  கடந்த வாரம் நான் ராமேஸ்வரம் செல்லும் போது இதை கவனித்தேன்…
  அங்கு என் காலிலும் முள் குத்திவிட்டது அந்த காயம் இன்னும் வலிக்கிறது 🙁
  ஆனால் வட தமிழகத்தில் இருக்கும் மரத்திற்கு, அதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது….!!

  சமீபத்தில் கிருஷ்ணா தண்ணியும் சண்டைபோடாமல்(நான் அறிந்தவரை ) திறந்து விட்டு இருக்கிறார்கள்…..

 2. நல்ல செய்தி , ஒரு சிறு தகவல் , கருவேல் மரம் பரவலாக இருக்கும் மரம் ஆனால் மிக வேகமாக பரவும் இயல்பு யில்லை . சீமை கருவேல் மரம் தான் (Prosopis ஜூலிபிலோர) விஷம் போல பரவி நமது மண் மற்றும் நீர் வளங்களை கடுமையாக பாதிக்கிறது .
  நன்றி

 3. கிரி, காமிக்ஸ் இந்த வார்த்தையை உயிர் உள்ளவரை மறக்க முடியாது. 10 வகுப்பு படிக்கும் வரை காமிக்ஸ் தான் என் உலகம். எத்தனை புத்தகங்கள் படித்து இருப்பேன் என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட புத்தகத்தை படித்ததாக நினைவு இல்லை.

  90 % மாயாவி புத்தகங்கள் மட்டுமே படித்தேன். இதை பதிவு செய்கின்ற போது கூட மாயாவி தொடு திரையின் மீது அமர்ந்து இருப்பது போல் ஒரு உணர்வு… புத்தகங்கள் வாங்க பண வசதி கிடையாது. ஆனால் பக்கத்து வீடு, எதிர்வீடு என நண்பர்களின் வீடுகளில் சிறு சிறு வீட்டு வேலை செய்து அதற்கு பகரமாக புத்தகங்கள் வாங்கி படித்த நிகழ்வு மனதை விட்டு இன்னும் அகலவில்லை.

  எங்கள் ஊர் ஏரியில் இருந்த கருவேல மரங்களை பல வருடங்களுக்கு முன்பே முற்றிலும் அழித்து விட்டார்கள். இதை பற்றி விழிப்புணர்வு இன்னும் தேவை. அரசாங்கம் நினைத்தால் அனைத்தையும் முறைப்படி சட்டம் இயற்றி நடைமுறைக்கு கொண்டு வரலாம். ஆனால்???? வளைகுடா போன்ற பாலைவன இடங்களில் தற்போது முறையாக இயற்கையை பராமரிக்கப்பட்டு தற்போது மழை பொழிவை பார்க்க முடிகிறது.

  என்ன கிரி??? நிலத்தை விற்று வீட்டிர்கள்??? வருத்தமாக இருக்கிறது. (ஏதேனும் சொந்த பிரச்சனைகள் இருந்து இருக்கலாம்.) எனக்கு 1 / 2 அடி நிலம் சொந்தமாக இல்லை. ஆனால் விளைநிலத்தை யாரெனும் விற்று விட்டால் கொஞ்சம் வருத்தமாக இருக்கும். நீங்கள் விற்ற நிலத்தை உங்களிடம் பணம் உள்ள போது நீங்கள் விரும்பினாலும் வாங்க முடியாது. எதிர்காலத்தில் ஒரு இயற்கை விவசாயாக மாறுவதற்கு தற்போது கொஞ்சம், கொஞ்சமாக கற்று வருகிறேன்.

  புத்தகத்திற்கே நண்பர் பெயர் கூறக்கூடாது என்று கூறிவிட்டாரா???? நல்ல பழக்கம். பகிர்வுக்கு நன்றி கிரி.

 4. சமூக அக்கறையுள்ள பதிவு. வாழ்த்துகள் கிரி.

  கருவேலமரம், வேலிக்கருவேலமரம், சீமைக்கருவேலமரம் என்று இது தொடர்பான செய்திகளில் இந்த பெயர்கள் அடிபடுவது உண்டு. அதிக பாதிப்பு எந்த மரத்தினால் என்பதை படத்துடன் எந்த கட்டுரையையும் இதுவரை நான் படித்ததில்லை. அதனால் இந்த விஷயத்தில் எனக்கு கொஞ்சம் குழப்பம். சரியான மரம் எது என்பதில் பெரும் குழப்பம்தான்.

  நீங்கள் குறிப்பிடும்படி மஞ்சள் பூ மலரை கொண்ட மரம் என்றால். அதை வெட்ட அரசு தடை செய்துள்ளது. எங்கள் ஊரின் வனப்பகுதி / கண்மாய் பகுதியில் வனஅலுவலர்கள் ரோந்து வருவதுண்டு, யாரேனும் கருவேலமர விறகை வெட்டினால் கைது செய்ய……, எங்கள் வயலின் அருகே உள்ள கண்மாய் கரையில் பெரிய கருவேல மரம் உள்ளது, அதை எங்களால் வெட்ட முடியாததற்கு காரணம், வன அலுவலர்களின் தடை.

  1980களின் மத்தியில் எங்கள் ஊரில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் அரசாங்கமே வரிசையாக [தென்னந்தோப்பு போல] இந்த மஞ்சள் பூ உள்ள கருவேல மரத்தை வளர்த்தார்கள். பிறகு ஏலம் விட்டார்கள், வெட்டினார்கள். இது 1990களில் பெரும்பாலான கண்மாய்களில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டுவிட்டது, தப்பிய மரங்கள் ஒன்றிரண்டு கரையோரம் உள்ளது, அதை வெட்ட தடையும் உள்ளது.

  15 வருடங்களுக்கு முன்பு எனது கல்லூரி நாட்களில் தினசரியில் ஒரு கட்டுரையை படித்த ஞாபகம், அதில் ஒரு முறை ரஷ்யா சென்றிருந்த அந்நாள் முதல்வர் கு.காமராசர், ரஷ்ய அரசு கொடுத்த எந்த வறட்சியையும் தாங்கி வளரும் கருவேலமர விதைகளை வாங்கி வந்து தமிழகமெங்கும் தூவினார் என்று பெருமையாக எழுதியிருந்தார்கள். ஏன் தூவினார் என்றால், அன்றைய திடீர் மக்கள் தொகை பெருக்கத்தால், வனத்தில் உள்ள மரங்களை வெட்டி மக்கள் அடுப்பெரிக்க தொடங்கியதை தடுத்து வனத்தை காக்கவும், மக்களுக்கு எரிப்பான் எளிதாக கிடைக்கவும் வேலிகளில் வளரக்கூடிய விறகுக்கு பயன்படக்கூடிய கருவேலமரங்களை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்தார் என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.
  இன்று நிலைமை தலைகீழ், கருவேலமரம் தொடர்பான செய்திகளில் காமராசரை பார்க்க முடியவில்லை.

  இன்றும் எங்கள் ஊர் செங்கல்சூளைக்கு எரிப்பானாக, வேலியோரத்து முள்மரங்கள் [இதுதான் நீங்கள் கூறும் கருவேலமரமா என்று தெரியவில்லை] அதிக அளவில் பயன்படுகிறது. வேலை இல்லாதவர்கள் / வேலை நேரம் போக எஞ்சிய நேரத்தில் இந்த மரங்களை வெட்டி செங்கல்சூளைக்கு கிலோ இத்தனை ரூபாய் என்ற கணக்கில் விற்பதுண்டு.

  எனக்கு மட்டுமல்ல பொதுவாக எங்கள் ஊரிலுள்ள யாருக்குமே இந்த கருவேலமரம் பற்றிய சரியான புரிதல் இல்லை. படத்துடன், வேறு ஏதாவது இணைப்பு இருந்தால் பகிருங்களேன் கிரி, உபயோகமாய் இருக்கும்.

  ========

  மேலும்;

  இராமநாதபுரம் மாவட்டத்து வறட்சிக்கும் இந்த கருவேல மரத்துக்கும் சம்மந்தமில்லை என்பதை பழைய இராமநாதபுரம் மாவட்டத்துக்காரன் என்ற முறையில் தெளிவாக சொல்ல முடியும்.

  அந்தக்காலத்து சினிமாவுல சொல்லுவாங்களே, தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திருவாங்கன்னு, அந்த தண்ணியில்லாத காடு எப்பவுமே பழைய இராமநாதபுரம் மாவட்டம்தான் 🙂

  கிழக்கே கடலும் மேற்கே மலையும் என்று பரந்து விரிந்த எல்லையைக் கொண்ட தமிழகத்தின் ஒரே மாவட்டம் பழைய இராமநாதபுரம் மாவட்டம். மற்ற மாவட்டங்களைப் போல அல்லாது வற்றாத நதி[!] என்ற ஒன்று இல்லாததும் , மழை மறைவு பிரதேசம் என்பதும் இந்த மாவட்டத்தின் வறட்சிக்கு முக்கிய காரணம். இந்த மாவட்டத்தின் கிழக்கே இலங்கை உள்ளதால், மழைக்காலங்களில் கூட கடலில் இருந்து ஈரப்பதம் குறைவாகவே நிலத்தை நோக்கி வரும். [இந்த தியரி தூத்துக்குடி [வடக்கு] மாவட்டத்துக்கும் கொஞ்சம் பொருந்தும்] இதனால் இந்த மாவட்டம் கொஞ்சம் வித்தியாசமான மழை மறைவு பிரதேசம்.

  பழைய இராமநாதபுரம் மாவட்டம் எனப்து இன்றைய இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள்.

 5. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @அக்ரி மருது தகவலுக்கு நன்றி

  @யாசின் நாங்கள் விற்ற நிலை அதிகம்.. இதில் குறிப்பிட்டுள்ளது குறைவு.

  இயற்கை விவசாயி… கேட்கவே மகிழ்ச்சி. நிச்சயம் முயற்சி எடுங்கள்.

  @காத்தவராயன் அனைவரும் கூறுவதைப் பார்க்கும் போது சீமைக் கருவேல மரம் மிக ஆபத்தானதாக உள்ளது.

  விறகு எரிக்க இது பயன்படுகிறது ஆனால், அதே சமயம் தண்ணீரை அதிகளவில் உறிஞ்சவும் செய்கிறது.

  “இராமநாதபுரம் மாவட்டத்து வறட்சிக்கும் இந்த கருவேல மரத்துக்கும் சம்மந்தமில்லை ”

  நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். இதுவே காரணமில்லை ஆனால், தற்போது இதுவும் ஒரு காரணம். நிச்சயம் நீங்கள் கூறுவது போல கால நிலை முக்கியக் காரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here