நிறுவனங்கள் நம்மை ஒட்டுக் கேட்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?!
தகவல்கள்
தொழில்நுட்பம் எவ்வளவுக்கெவ்வளவு வளர்ந்துள்ளதோ அதோடு பிரச்சனைகளும் வளர்ந்து வருகின்றன. நிறுவனங்கள் தங்களை மேம்படுத்த நம் தகவல்களைப் பயன்படுத்தி வருகின்றன. Image Credit
தகவல்கள் எனப்படும் டேட்டா மிக முக்கியமான தேவையாக நிறுவனங்களுக்கு மாறி வருகிறது. காரணம், எவ்வளவுக்கெவ்வளவு அதிக டேட்டா உள்ளதோ அதற்கு ஏற்றப் பயன்களைக் கொடுக்க முடியும்.
எடுத்துக்காட்டுக்கு, நம்முடைய மொத்த ஜாதகமும் கூகுளிடம் உள்ளது. கடந்த 25 வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நம் தகவல்களைச் சேமித்து வருகிறது.
தனது செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) மூலம் தன்னிடம் உள்ள டேட்டாக்களை வைத்து FineTune செய்து தனது பயனாளர்களுக்குச் சேவையை வழங்குகிறது.
அதாவது, நமது விருப்பம் என்ன? எது பிடிக்காது? என்ன வாங்க வேண்டும்? என்ன விளையாட்டு பிடிக்கும்? என்பன உட்பட அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளது.
கூகுள்
கூகுளின் எந்தத் தளம் சென்றாலும் (Google Search, YouTube, Maps) நம் விருப்பத்துக்கு ஏற்பச் செயல்படுகிறது. நமக்குப் பிடித்தமானவற்றைக் காண்பிக்கிறது.
கூகுள் தேடுதலில் எதையாவது தேடினால், அது தொடர்பான செய்திகளை Google News, Google Discover ல் காட்டும்.
இவை பெரும்பாலும் பிரவுசரில் உள்ள Cookies ல் இருப்பதை வைத்தே பரிந்துரைகளை வழங்குகின்றன.
சில நேரங்களில் மனதில் நினைத்ததெல்லாம் வருகிறதே என்று குழம்புகிற அளவுக்குப் பரிந்துரைகள் வரும். அனைவருக்கும் இந்த அனுபவம் இருக்கும்.
இதனால் பயனுள்ளது என்பதை மறுக்க முடியாது என்றாலும், நம் தகவல்கள் திருடப்படுகிறது என்பதும் உண்மை.
ஒட்டுக்கேட்பு
சில மாதங்கள் முன்பு நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்த போது..
‘WhatsApp ல் சாட் செய்வது உட்படப் பலதும் பரிந்துரையில் வருகிறது. நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தது பரிந்துரையில் வருகிறது‘ என்றார்.
கேட்க வியப்பாக இருந்தது ஆனால், அதன் பிறகு கவனித்ததில் எனக்கும் அதே போல ஆனது.
அதாவது நிறுவனங்களின் செயலிகளை நிறுவும் போது Mic க்கு அனுமதி கேட்கும், அதைக்கொடுத்தால் பயன்படுத்தும் போது தேவைப்படுவதற்காக என்று நினைத்து இருப்போம்.
ஆனால், சாதாரண நேரங்களிலும் நாம் பேசுவதை ஒட்டுக்கேட்கின்றன.
அதாவது நாம் பேசுவதிலிருந்து Keywords எடுத்துக்கொண்டு, அது தொடர்பான விளம்பரங்கள், செய்திகளைக் காண்பிக்கின்றன. திரைப்படம், பாடல், பரிந்துரைகளை அளிக்கின்றன.
திருட்டு
இவை இதைப் போலத் திருட்டு வேலைகளைச் செய்து எடுக்கப்படும் தகவல்களை வைத்து நம் அனுபவத்தை எளிமையாக்குகின்றன என்றாலும், சட்டப்படி குற்றம்.
ஐரோப்பாவில் இதற்குக் கடுமையான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன, இந்தியாவில் தற்போது தான் இதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு எடுக்கப்படும் தகவல்களை வைத்துக் கூகுள் தன்னை மேம்படுத்திக்கொள்ளவே முயன்றுள்ளது, வேறு யாருக்கும் (இதுவரை) விற்பனை செய்யவில்லை.
ஆனால், ஃபேஸ்புக் மற்ற நிறுவனத்துக்கு விற்றது நினைவிருக்கலாம்.
என்ன செய்வது?
தகவல்கள் திருடப்படுவது பன்னாட்டு நிறுவனங்களில் மட்டுமல்ல, அடிக்கடி செல்லும் துணிக்கடை, பீட்சா, உணவகங்கள், பல்பொருள் அங்காடி என்று அனைத்து இடங்களிலும் நடைபெறுகிறது.
நம் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணைக்கொடுத்தால், அதை விற்று விடுகிறார்கள். எனவே தான் ஸ்பாம் அழைப்புகள் அதிகம் வருகின்றன.
எனவே, இவ்விடங்களில் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மற்ற பன்னாட்டு நிறுவனங்களைப் பற்றி உறுதியாகத்தெரியவில்லை ஆனால், கூகுள் தன்னை மேம்படுத்திப் பயனாளர்களுக்குக் கூடுதல் வசதியைத் தரவே பயன்படுத்துகிறது.
எனவே, கூகுளின் பல சேவைகளைப் பயன்படுத்துவதாலும், அதனால் அதிகளவில் பயன் பெறுகிறேன் என்பதாலும், கூகுள் டேட்டா திருட்டை கண்டுகொள்வதில்லை.
அதோடு ரகசியம் என்று எதுவுமில்லை, எனவே, இதைப் பெரிய இழப்பாகக் கருதவில்லை ஆனால், பலர் இதைக் கவனம் எடுக்கிறார்கள்.
எனவே, உங்கள் விருப்பம் என்னவோ அதன்படி எச்சரிக்கையாகச் செயல்படுங்கள்.
நிறுவனங்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்தப் பயனாளர்கள் தகவல்களைத் திருடுகின்றன, ஒட்டுக்கேட்கின்றன என்பது உண்மையே!
கொசுறு
அலுவல் தொடர்பாகப் படித்துக்கொண்டு இருப்பதால், அடுத்த ஓரிரு மாதங்களுக்கு எழுதுவது குறைவாக இருக்கும்.
தொடர்புடைய கட்டுரைகள்
தேவையற்ற அழைப்புகளைத் தவிர்ப்பது எப்படி?
கிரி, உண்மையில் ஆரம்பத்தில் இது போன்ற நிகழ்வுகள் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கும்.. ஆனால் அந்த ஆச்சரியம் தற்போது இல்லை என்பது தான் நிஜம்..
செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) இந்த வார்த்தை அடிக்கடி கேட்டு இருந்தாலும் தமிழிலும் / ஆங்கிலத்திலும் படிக்க நன்றாக இருக்கிறது. tolerance (சகிப்புத்தன்மை) இந்த வார்த்தை +11 படிக்கும் போது, நான் தெரிந்து கொண்ட வார்த்தை.. இன்று வரை மறக்கவே இல்லை..
நான் பொதுவாக என்னுடைய அலைப்பேசி எண்ணை அவசியமில்லாமல் எங்கும் பகிர்வதில்லை.. அப்படி இருந்தும் சில சமயம் தேவையில்லாத அழைப்புகள் வருவதுண்டு..
ஆனால், ஃபேஸ்புக் மற்ற நிறுவனத்துக்கு விற்றது நினைவிருக்கலாம். – இந்த செய்தி வெளியில் வந்த போது மிக பெரிய பின்னடைவை FB நிறுவனம் சந்தித்தது..
(அதோடு ரகசியம் என்று எதுவுமில்லை, எனவே, இதைப் பெரிய இழப்பாகக் கருதவில்லை ஆனால், பலர் இதைக் கவனம் எடுக்கிறார்கள்.
எனவே, உங்கள் விருப்பம் என்னவோ அதன்படி எச்சரிக்கையாகச் செயல்படுங்கள்.)
ஏற்று கொள்கிறேன் கிரி..
உண்மைதான் நவீன உலகில் யாரும் யாரையும் வேவு பார்க்க முடியும் என்கிற நிலை பரவலாக வந்துவிட்டது….
@யாசின்
“நான் பொதுவாக என்னுடைய அலைப்பேசி எண்ணை அவசியமில்லாமல் எங்கும் பகிர்வதில்லை..”
ரொம்ப நல்லது.
“அப்படி இருந்தும் சில சமயம் தேவையில்லாத அழைப்புகள் வருவதுண்டு”
ஏற்கனவே எங்காவது கொடுத்ததிலிருந்து பகிரப்பட்டு சென்றவையாக இருக்கலாம்.
“இந்த செய்தி வெளியில் வந்த போது மிக பெரிய பின்னடைவை FB நிறுவனம் சந்தித்தது.”
ஆமாம் ஆனால், தற்போது மீண்டுள்ளது.
@அலிம் உண்மை தான். தொழில்நுட்பம் பெருகும் போது இப்பிரச்சனைகளும் தவிர்க்க முடியாதது.