விஜயின் அரசியல் வருகை

2
விஜயின் அரசியல் வருகை

னியொருவரை நம்பி ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்துவது என்பது இயலாத ஒன்று. அதற்கான காரணங்களைப் பார்ப்போம். Image Credit

ஏற்கனவே உள்ள பலம் வாய்ந்த கட்சிகளை, அதன் எதிர்காலத்தைப் பற்றித் தனியொரு கட்டுரையில் காண்போம்.

இது புதிய கட்சி துவங்கிய, துவங்குபவர்களுக்கானது மட்டுமே.

அரசியல்

தமிழக அரசியல் என்றில்லை எந்த மாநிலத்தின், தேசிய அரசியலை எடுத்துக்கொண்டாலும் பணமில்லை என்றால் எதுவுமே செய்ய முடியாது.

முந்தைய காலத்தில் கட்சிக்காக எதிர்பார்ப்பு இல்லாமல் உழைத்தார்கள் ஆனால், தற்போது பணம் கொடுத்தால் மட்டுமே வேலைகளைச் செய்கிறார்கள், அதுவே எதார்த்தமும் கூட.

இன்னமும் திமுக, அதிமுக போன்ற மூத்த கட்சிகளில் துவக்கத்திலிருந்து இருந்ததாலும், கட்சி மீதுள்ள பாசத்தாலும் கட்சியால் எந்தப்பலனுமில்லை என்றாலும் சிலர் தீவிர தொண்டர்களாகத் தொடர்கிறார்கள்.

சிலர் வெறுத்து ஒதுங்கி விட்டார்கள், சிலர் மூப்பின் காரணமாக அமைதியாகி விட்டார்கள்.

ஒரு கட்சியை நடத்துவது எளிதல்ல, மிக செலவு பிடிக்கும் விஷயமாகும். எனவே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நேர்மையான ஆட்சியை எதிர்பார்க்க முடியாது.

இருப்பதற்குள் பரவாயில்லை என்று தேர்ந்தெடுக்கும் படியே சூழ்நிலையுள்ளது. சிலர் நேர்மையாக இருக்கலாம் ஆனால், ஒட்டு மொத்தக்கட்சியாக இருக்க முடியாது.

யாரும் சொந்தக்காசை செலவழித்து வேலை செய்ய மாட்டார்கள். அதில் ஒரு ஆதாயம் கண்டிப்பாக இருக்கும் அல்லது பின்னர் கிடைக்கும் வாய்ப்புக்காகச் செலவு செய்வார்கள்.

ரஜினியின் அரசியல்

ஒரு ரசிகனாக ரஜினி அரசியலுக்கு வருவதை மிக எதிர்பார்த்தேன். காரணம், தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதற்காக.

ஆனால், கொரோனா, உடல்நலக்குறைவு காரணமாக ரஜினியால் அரசியலுக்கு வர முடியவில்லை. வரப்போவது போல இருந்த காலத்தில் நடைபெற்ற செலவுகளைப் பார்த்துக் கிறுகிறுத்து விட்டது.

சிறு வயதிலிருந்தே பணத்துக்கு மிகச்சிரமப்பட்டு வந்ததால், ஒவ்வொன்றையும் கணக்கிட்டுப் பார்ப்பது வழக்கம். எனவே, உறுப்பினர் அட்டை செலவைக் கணக்கிட்டுப் பார்த்தேன்.

தோராயமாக 10 லட்சம் தொண்டர்களுக்கு அடையாள அட்டையை ₹10 செலவில் வழங்குவதாக (உற்பத்தி மற்றும் பட்டுவாடா) கொண்டாலே ஒரு கோடி வருகிறது.

இது மிக அடிப்படையான செலவு. இவையல்லாமல், கூட்டம், இணையத் தளம், சமூக வலைத்தளம், மாநாடு, மற்ற பொறுப்புகள் என்று கணக்கிட்டால் எங்கேயோ செல்கிறது.

ரஜினி வராதது ஏமாற்றமாக இருந்தாலும், தற்போதுள்ள நியாயமற்ற அரசியல் சூழ்நிலையில் வராமல் இருந்தது நல்லதே என்று தோன்றுகிறது.

விஜயகாந்த் முனைப்புடன் செயல்பட்ட போது கட்சி சிறப்பாக இருந்தது, அவர் உடல் நிலை பாதிக்கப்பட்ட பிறகு வரவேற்பு குறைந்து விட்டது.

தனியொருவரை நம்பி இருக்கும் கட்சிக்கு எதிர்காலமில்லை.

கமல் கட்சி

கமலுக்கு மேற்கூறிய பிரச்சனைகளே காரணம். அதோடு அவர் எதிர்பார்த்த மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை.

எனவே, யாரை எதிர்த்துக் கட்சியை ஆரம்பித்தாரோ, யாரிடம் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறினாரோ அவர்களுடனே கூட்டணி வைக்க வேண்டிய நிலைக்குச் சென்று விட்டார்.

திருமாவளவன் எப்படி சில இடங்களுக்காகக் கூட்டணி வைத்துத் தனது கட்சியை நடத்தி வருகிறாரோ அந்நிலை தான் கமலுக்கும் ஏற்பட்டுள்ளது.

கமல் ஏற்கனவே பாரளுமன்ற பதவிக்காக ஆதரிக்கிறேன் என்று செய்தியாளர் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு அவரே ஒத்துக்கொண்டுள்ளார்.

எனவே, மநீம என்ற கட்சி தனிப்பெரும் கட்சியாக இனி வளர வாய்ப்பில்லை, அதற்கான முயற்சிகளைக் கமல் எடுப்பதாகவும் தோன்றவில்லை. திமுக கூட்டணியில் 2024 சென்னையில் நின்றால் கமல் வெற்றி பெறலாம்.

விஜயின் அரசியல் வருகை

தற்போது விஜய் அரசியலில் இறங்கப்போவதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் அமைப்பைச் சார்ந்தவர்கள் போட்டியிட்டு வெற்றிபெற்றார்கள்.

மக்களுக்கு உணவு வழங்கினார், தற்போது அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்குப் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதெல்லாம் அரசியலுக்கு முன்னோட்டம் என்பதை அனைவரும் அறிவார்கள்.

விஜய் வந்தால் யாருடைய வாக்கைப் பிரிப்பார் என்பதே கேள்வியே தவிர, தனியாக நின்று ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் கற்பனையிலும் நடக்காத செயல்.

அரசியலுக்குப் பேச்சுத் திறமை, பொறுமை ஆகியவை மிக முக்கியம். இவை விஜயிடம் இருப்பதாக உணரவில்லை, குறிப்பாக மக்களைக் கவரும் பேச்சுத்திறமை.

விஜய் பேசிய நிகழ்வுகள் பெரும்பாலும் திட்டமிட்ட மேடைகளில் மட்டுமே. மேடைகளில் புள்ளிவிவரங்களுடன் தர்க்க ரீதியாகப் பேசுவது எளிதல்ல.

ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல்களுடன் பதிலளிக்க வேண்டும். தவறாக ஒன்றை கூறினாலும், அதை வைத்தே பெரிய பிரச்சனையாக்கி விடுவார்கள்.

விஜயை ஏற்பவர்கள் யார்?

விஜயை ஆதரிப்பவர்கள் பலர் ஏற்கனவே பாஜக எதிர்ப்பாளர்கள், மேலும் பலர் திமுக, நாதக ஆதரவாளர்கள். இதை நான் அவருடைய ரசிகர்களை வைத்துக்கூறுகிறேன்.

பொதுமக்கள் எந்த அளவுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பது தெரியவில்லை, விஜய் கிறித்துவர் என்பதால், கிறித்துவ மக்களின் வாக்குகள் இவருக்குக் கிடைக்கலாம்.

ஆனாலும் சிறுபான்மை மக்களிடையே பிரபலமாக உள்ள திமுகவை ஒதுக்கி இவருக்கு வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே!

விஜய் பிரிப்பது திமுக வாக்குகளை, அதுவும் இளம் வாக்காளர்கள் மட்டுமே. மற்றவர்கள் விஜய் செயல்பாட்டில் நம்பிக்கை வரும் வரை திமுகவையே ஆதரிப்பார்கள்.

திமுகவில் ஏற்கனவே அடுத்தத் தலைமுறை உதயநிதி இருப்பதால், அவருக்குப் போட்டியாக விஜயை ஏற்றுக்கொள்வார்களா? என்பது உறுதியில்லை.

அப்படி ஏற்றுக்கொண்டால், வாக்குகளுக்காகப் பயன்படுத்திக்கொள்வார்களே தவிர, விஜய் முக்கியத்துவம் பெற அனுமதிக்க மாட்டார்கள்.

திமுகவுக்கு ஒருவரை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று தெளிவாகத் தெரியும். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு திருமாவளவன்.

விஜயை அரசியலில் எதிர்ப்பவர்களுக்கு சமூகத்தளங்களில் பெரிய வேலை இருக்காது காரணம், விஜய் ரசிகர்களே சமூக வலைத்தளங்களில் ஏராளமான திரை ரசிக எதிரிகளை அவசியமற்று சம்பாதித்து வைத்துள்ளார்கள்.

செலவு அதிகம்

விஜய் தற்போது தனது பட விளம்பரங்களை ட்விட்டர், YouTube ல் PR செய்வது போல அரசியலில் செய்து விட முடியாது. காரணம், இதற்கான வருமானமில்லாத செலவுகள்.

அதாவது திரைத்துறையில் இதுபோலச் செய்து படங்களுக்கு எதிர்பார்ப்பைக் கூட்டி சம்பளம், வசூல் அதிகப்படுத்தலாம் ஆனால் அரசியலில் முடியாது.

காரணம், அரசியல் என்பது செலவு மட்டுமே. ஆட்சிக்கு, அதிகாரத்துக்கு வந்தால் மட்டுமே வரவு. அந்த வரவும் ஊழல் செய்து சம்பாதித்தால் மட்டுமே முடியும்.

எனவே, நேர்மையான அரசைக் கொடுப்பேன் என்பதெல்லாம் புதிய கட்சிகளுக்கு நடக்காத காரியம். ஊழலை எதிர்த்து ஆட்சிக்கு வந்த கெஜரிவால் கட்சியினரே ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே உள்ள கட்சிகள்

ஜெ வைக் கையாள்வதே சிரமம் என்று விஜய் நினைத்து இருக்கலாம், தங்களுக்கு ஆபத்து என்றால், விஜய் கண்ணில் திமுக விரலை விட்டு ஆட்டி விடுவார்கள்.

திமுகவை சீண்டாதவரை விஜய்க்கு பெரிய பிரச்சனையில்லை. அரசியல், ஊடக பலம் மற்றும் அனுபவம் கொண்டவர்கள்

இனி புதிதாகக் கட்சி துவங்கி அதை ஆட்சியை மாற்றக்கூடிய அளவில் ஒரு தலைவர் உருவாவது, கட்சியைப் பெரியளவில் வளர்ப்பது தற்கால அரசியல் சூழலில் கடினம். இறுதி குறைந்தபட்ச வாய்ப்பு ரஜினியோடு முடிந்து விட்டது.

காரணம், கட்சி நடத்துவதற்கான செலவு, கட்சி கட்டமைப்பு, தேவையான மக்கள் ஆதரவு. அதற்கான காலச்சூழல் தற்போது மாறி விட்டது.

எதிர்காலத்தில் திராவிடம் தேசியம் என்ற இரு கொள்கைகள் கொண்ட கட்சிகளே கோலோச்சும், மற்றவை இவற்றில் ஏதாவது ஒன்றில் இணைய முடியுமே தவிர தனித்துச் செல்ல முடியாது.

இல்லையென்றால், சீமான் போல 8% – 10% வாக்குக் கொண்ட ஆட்சிக்கு வரமுடியாத கட்சியாகத் தொடரலாம். சீமான் ‘என் தலைமையை விஜய் ஏற்க வேண்டும்‘ என்று கூறுகிறார்.

நாதக வளர்ந்து வரும் சிறிய கட்சி, இதற்குக் கீழ் விஜய் என்றால், எதற்கு விஜய் அரசியலுக்கு வர வேண்டும்?! ஆனால், நாதக, விஜய் கூட்டணி வாக்குகளைப் பெறும்.

அதிமுக, திமுகவுடன் இணைந்தால் அரசியலுக்கு வந்ததற்கான அர்த்தமில்லை, கமல் செய்ததைப் போல ஆகி விடும்.

தனித்து நின்றால் வெற்றி பெற முடியாது, வாக்கைப் பிரிக்க மட்டுமே உதவும். கூட்டணி வைத்தால் பத்தோடு பதினொன்றாக கட்சி மாறி விடும்.

ஒரு படம் வெற்றி பெறுவது ரசிகர்களை மட்டுமே வைத்தல்ல. எனவே, இவை அரசியலுக்கும் பொருந்தும்.

விஜய் என்ன முடிவெடுப்பார், யாரை எதிர்த்து அரசியல் செய்வார், மக்களை எப்படிக் கவர்வார், தமிழக அரசியலை, அரசியல்வாதிகளை, ஊடகங்களை எப்படிச் சாமாளிப்பார் என்பதைக் காண ஆர்வமாக உள்ளேன்.

என்ன நினைத்து அரசியலுக்கு விஜய் வருகிறார் என்று தெரியவில்லை ஆனால், அரசியல் எவ்வளவு கடினம், சிக்கலானது என்பதை வந்த பிறகு உணர்வார்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. தற்போது நேரம் இருக்கும் போது தமிழகத்தின் 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றை படித்தும் / காணொளிகள் மூலமாகவும் தெரிந்து கொண்டு வருகிறேன்.. எத்தனை சூழ்ச்சிகள், வஞ்சங்கள், தந்திரங்கள், என பல்வேறான நிகழ்வுகள் நடந்து இருக்கிறது.. இதிலும் குறிப்பாக 90 க்கு பின்பு நிலைமை ரொம்ப மோசம்.. சினிமாவில் ஜெயிப்பது போல அரசியலில் ஜெயிப்பது கடினம் என்பதற்கு நடிகர் திலகம் / பாக்யராஜ் இவர்களை விட வேறு யாரையும் உதாரணம் சொல்ல வேண்டியதில்லை..

    MGR அவர்களால் கலையுலக வாரிசு பாக்யராஜ் என்று அறிவிக்கப்படும், MGR மரணத்திற்கு பின்பு ஜானகி அம்மையாரே பாக்யராஜை அரசியல் எதிரியாக பார்க்க பட்டது கொடுமையிலும் கொடுமை.. MGR கடைசி காலங்களில் அவரை (USA ) மருத்துவமனையில் பார்க்க சென்ற பாக்யராஜை அவரை பார்க்க விடாமல் செய்த, ஜானகி அம்மையார் பின்பு MGR ஐ பாக்யராஜை சந்திக்கும் போது ஒன்றும் தெரியாது போல நடந்த நிகழ்வுகளை எல்லாம் கேட்கும் போது.. என்ன சொல்வது என்றே தெரியவில்லை..இதை கூறியது பாக்யராஜ் அவர்கள் தான்..

    சிவாஜி அரசியலில் ஜெயிக்ககாமல் போனதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.. ரஜினி அவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பது நலன்.. அவருடைய குணநலனுக்கு அரசியல் செட்டாகாது.. சுதாகரன் அவசரப்படாமல் இருந்திருந்தால் இன்று அவர் கூட முதல்வர் ஆகி இருக்கலாம் என வரலாறு சொல்கிறது.. நான் எதிர்பார்த்த சகாயம் ஐயா இன்று அட்ரஸ் தெரியாமல் ஆகி விட்டார்.. விஜய்யின் அரசியல் பிரவேசம் என்பது உறுதி.. வெற்றியா? தோல்வியா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்..

  2. @யாசின்

    அரசியல் என்றாலே அதில் துரோகம், அதிகாரம், ஏமாற்றம், வன்மம், ஆதிக்கம் என அனைத்துமே இருக்கும். எனவே, இதையெல்லாம் புரிந்து கொள்பவர் வெற்றி கொள்கிறார் மற்றவர்கள் தோல்வி அடைகிறார்கள் அல்லது ஒதுங்கி விடுகிறார்கள்.

    “நான் எதிர்பார்த்த சகாயம் ஐயா இன்று அட்ரஸ் தெரியாமல் ஆகி விட்டார்”

    தெரிந்த ஒன்றே. அரசியல் வேறு, அரசு அதிகாரம் வேறு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!