அனைவரும் காய்ச்சி எடுத்த படங்களுக்கு தேசிய விருது!

32
நான் கடவுள் naan kadavul movie

னைத்து விருதிலும் அரசியல் புகுந்து தகுதியானவர்களுக்கு விருது கிடைக்காமல் செய்யப்படுகிறது. Image Credit

நமது நாட்டின் திரைப்படத்திற்கான தேசிய விருதிலும் பலர் குற்றம் சாட்டினாலும் தென் மாநில படங்கள் புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அதிலும் தமிழ் படங்கள் அவ்வப்பொழுது விருதுகளைப் பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்போதைய மகிழ்ச்சி இயக்குனர் பாலா இந்திய அளவில் சிறந்த இயக்குனராக நான் கடவுள் படத்திற்காகவும், சிறந்த தமிழ் படமாக வாரணம் ஆயிரம் படத்திற்கும் விருது கிடைத்துள்ளது.

இதனுடன் நான்கடவுள் ஒப்பனை கலைஞர் மூர்த்தியும் தேசிய விருது பெற்றுள்ளார்.

இவர்களுக்கு முதலில் என் மனமார்ந்த பாராட்டுகள்.

முதலில் நான் கடவுள்

இந்தப்படம் வெளியாக மூன்று வருடம் எடுத்துக்கொண்டது, பல சிக்கல்கள் கதாநாயகிகள் கதாநாயகர்கள் மாற்றம் என்று பல பிரச்சனைகளைக் கண்டு வெளியானது.

வெளிவந்த பிறகு பலரால் விமர்சனத்திற்குள்ளானது!

கதை சரியில்லை படம் படு மட்டமாக உள்ளது, பாலாவை மனநல மருத்துவரிடம் காட்ட வேண்டும் என்று தாறுமாறாக விமர்சித்தார்கள்.

வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பாடல்கள், கதாநாயகன் கூலி தொழிலாளியாக இருந்தாலும் அவருக்கும் அமெரிக்காவில் டூயட், நான்கு அவசியமில்லாத சண்டை, படம் முழுவதும் பஞ்ச் வசனங்கள் என்று இல்லாமல் நறுக்கென்று கூறி இருந்தார்.

காராசாரமாகப் பல விசயங்களைப் பேசுவார்கள் நல்ல படங்களே வருவதில்லை என்று.. எடுத்துக்காட்டுக்கு பல ஹாலிவுட் படங்களைத் துணைக்கு அழைத்து அவர்கள் எப்படி எடுத்து இருக்கிறார்கள் இவர்கள் எப்படி எடுத்து இருக்கிறார்கள் என்று கூறுவார்கள்.

ஆனால் எந்தப் படத்தையும் காப்பி அடிக்காமல் கஷ்டப்படும் மக்களின் வாழ்க்கையைக் காட்டினால், விமர்சனம் என்கிற பெயரில் நார் நாராகக் கிழித்துத் தொங்க விட்டு விடுவார்கள்.

நன்றாகச் சென்று இருக்க வேண்டிய நான் கடவுள் எதிர்மறை பிரச்சாரங்களினால் சுமாராக ஓடியது. பதிவுலகில் இந்தப் படத்திற்குப் பல விமர்சனங்கள் வந்தது, பெரும்பாலும் திட்டியே பதிவெழுதினார்கள்.

படத்திற்கு ஆதரவாகப் பதிவெழுதினால் அவர்கள் எதோ வேற்று கிரகத்து மனிதர்களைப் போல விமர்சித்தார்கள். அன்று அவ்வளவு பேசியவர்கள் இன்று என்ன பதில் கூறப்போகிறார்கள்?

இந்தப்படத்தை விமர்சனம் செய்த போது இதன் கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்திப் பற்றிக் கூறாமல் விட்டு விட்டேன் காரணம், எனக்கு அது செட்டிங்க்ஸ் போலவே தெரியவில்லை.

பின்னர் தான் தெரிந்தது படத்தில் பெரும்பாலான இடங்கள் வடிவமைக்கப்பட்டது என்று.

இது கூட அவருக்கு வெற்றி தான்! மற்றவர்கள் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு இருந்தது அவர் திறமையைத் தானே பறைசாற்றுகிறது.

அதைக் கூறாமல் விட்டுவிட்டோமே என்று உறுத்தலாக இருந்தது, தற்போது கூறியது மனநிறைவாக உள்ளது 🙂 .

இயக்குனர் பாலாவிற்கு…

பாலா நீங்கள் எடுக்கும் படங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. ஆனால், பெரும்பாலும் அனைத்து தயாரிப்பாளர்களுடனும் பிரச்சனை செய்கிறீர்கள்.

பல கோடி முதல் போட்டு அவர்கள் படம் எடுக்கிறார்கள் அவர்கள் சிரமத்தையும் நினைத்துப் பாருங்கள்.

உங்களின் அனைத்து படங்களும் அதிகம் வன்முறை சார்ந்ததாக உள்ளது (எனக்குப் பிடித்துள்ளது அது வேறு விஷயம்).

பல (ரசனை) தரப்பு மக்களும் இருக்கிறார்கள் எனவே அனைவரையும் கவரும் படி பல வகைப்படங்களையும் எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

உங்களைப் பலர் கண்டபடி திட்டினாலும் உங்கள் படங்கள் என்னைப் போன்றவர்களுக்கு என்றும் பிடித்தவை தான்.

நீங்கள் மென்மேலும் பல விருதுகள் பெற உங்கள் ரசிகனின் அன்பான வாழ்த்துக்கள்

வாரணம் ஆயிரம்

இந்தப்படத்தை ஒரு 10 பேர் பாராட்டி எழுதி இருந்தாலே பெரிய விஷயம்! சும்மா! போட்டு நொக்கி எடுத்து விட்டார்கள்.

இத்தனையையும் மீறி படம் நகரங்களில் ஓரளவு ஓடியது, வெளிநாட்டில் சிறப்பாக ஓடியது.

இதில் கதையே இல்லை என்றே அனைவரும் கூறினார்கள், இதற்காக விமர்சனம் என்கிற பெயரில்! முழுக் கதையையும் கூறினேன்.

அதென்னவோ நம்மவர்களுக்கு ஏழையின் அப்பா நடுத்தர வர்க்கத்தின் அப்பா பாசம் பற்றி எடுத்தால் தான் நன்றாக உள்ளது என்று கூறுவார்கள்.

தவமாய் தவமிருந்து

அனைவரும் தவமாய்த் தவமிருந்து படத்தை இதனுடன் ஒப்பிட்டு இதை மட்டமான படம் என்றார்கள்.

தவமாய் தவமிருந்து அருமையான மிகச்சிறந்த படம் தான் சந்தேகமில்லை, இன்னும் கூட அதில் நடித்த (வாழ்ந்த) ராஜ்கிரணுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது.

அதற்காக இதில் காட்டப்பட்ட அப்பா பாசம் பொய் என்று ஆகி விடுமா!

பெரும்பாலும் குறை கூறியது அப்பா சூர்யா கேன்சரால் இறந்த பிறகு சிம்ரன் ஒப்பாரி வைக்காமல் சிம்ப்பிளாக முடித்துக் கொள்வார், இதை… என்னையா! கேனத்தனமாக உள்ளது! என்று விமர்சித்தார்கள்.

உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம், ஒப்பாரி வைத்து அழுதால் தான் அவர் மீது அன்புள்ளதாக அர்த்தமா!

சிம்ரன் பார்வையில் சூர்யா கேன்சரால் அவதிப்பட்டுக் கொடுமையை அனுபவித்து வந்தார், அவர் இறந்த போது மேலும் சிரமப்படாமல் நிம்மதியாக இறந்தாரே! என்பது சிம்ரன் எண்ணமாகக் காட்டப்பட்டு இருந்தது.

இதில் என்ன கேவலத்தைக் கண்டார்களோ!

படத்தில் சூர்யா பள்ளிச்சிறுவனாக அசத்தி இருப்பார், முதல் முறை பார்க்கும் போது அனைவரும் ஏமாந்து விடுவார்கள், அந்த அளவிற்கு வித்யாசம் காட்டியிருந்தார்.

சூர்யா சமீரா காதல் மிக நாகரீகமாக அழகாகக் காட்டப்பட்டு இருக்கும்.

பாடல்கள் அனைத்தும் சிறப்பான முறையில் காட்சியமைக்கப்பட்டு இருக்கும். சமீராவை மொக்கை பிகர்!! என்று கிண்டலடித்து இருந்தார்கள்!

படத்தில் குறைகளே இல்லையா! என்று நீங்கள் கேட்பது புரிகிறது. படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் கேள்விகள் அவசியமற்ற காட்சிகள் என்று உள்ளது.

குறிப்பா காஷ்மீர் காட்சிகள் எதுக்கு வைத்தார் என்று கவுதம் வாசுதேவ மேனனுக்கே வெளிச்சம்!

புரிந்து கொள்ள முடியாத அன்பு

நம்மில் பெரும்பாலனவர்கள் நடுத்தர மக்கள் எனவே நம்மால் தவமாய் தவமிருந்து படத்தை உணர்வுப்பூர்வமாக அணுக முடிந்தது ஆனால், வாரணம் ஆயிரம் படத்தில் காட்டப்பட்டு இருப்பது நடுத்தரக் குடும்பத்தைப் போன்று தோன்றினாலும் பணக்கார கலையுடனே இருக்கும்.

அதனால், நம்மால் அந்த அன்பை புரிந்து கொள்ள முடியவில்லையோ! என்றே எண்ணத்தோன்றுகிறது.

குறைகள் இருந்தாலும் அதில் உள்ள மற்ற நல்ல காட்சிகளுக்காக அப்பாவின் பாசத்தை வழிகாட்டுதலை அரவணைப்பை வெளிக்காட்டியதற்காக தற்போது தேசிய விருதை வென்றுள்ளது.

வாழ்த்துக்கள் இந்தப் படம் விருது பெற உதவிய அனைவருக்கும்.

நான் கடவுள் படத்திற்கு விருது என்பதை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள முடிந்த என்னால் வாரணம் ஆயிரம் படத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வாரணம் ஆயிரம் நல்ல படம் தான் (என் பார்வையில்) ஆனால், தேசிய விருது வாங்கக்கூடிய அளவிற்குத் தகுதியானதா! என்பது அந்தத் தேர்வு குழுவினருக்கே வெளிச்சம்.

இதை விடப் பல நல்ல படங்கள் தமிழில் வந்தன.

குறைகள் இல்லாத படங்கள் என்று எதுவுமில்லை இருக்கவும் முடியாது, தேடியாவது கண்டுபிடித்து விடுவார்கள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

32 COMMENTS

  1. நிச்சயம் விருது என்பதை வைத்து ஒரு படத்தை நல்ல படம் என்றும் மோசமான படம் என்றும் குறை கூற முடியாது
    திரை அரங்கிற்கு வரும் ரசிகன் தான் கொடுத்த பணம் இந்த படம் வீண் இல்லை என்று நினைக்கும் படி படம் இருந்தாலே போதும் அதுதான் உண்மையான சிறந்த விருது என்பது
    ரசிகன் பார்வையில் தான் ஒரு படம் சிறப்பாக அமைவதும் தோல்வி அடைவதும்.
    விளம்பரம் செய்து ஒரு காலம் வரை தான் ஏமாற்றலாம்

  2. நல்லா இருக்கே தலைப்பு. எல்லோரும் எதைக் காய்ச்சினார்கள் என்பதைக் கடிந்து நல்லாவே காய்ச்சி விட்டிருக்கிறீர்கள்:)! முடிவாக டைரக்டருக்கு சொல்லியிருக்கும் ஆலோசனை சிறப்பு.

  3. படங்கள் பார்க்கவில்லை. இரண்டாவது பார்க்க விருப்பம்.

  4. //நான் கடவுள் படத்திற்கு விருது என்பதை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள முடிந்த என்னால் வாரணம் ஆயிரம் படத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.//

    இதுதாங்க என்னோட மனநிலையும், சிறந்த தமிழ் படத்தையும் நான் கடவுளுக்கே கொடுத்திருக்கலாம்.

  5. நான் கடவுள் படம் விமர்சனங்களுக்கு உள்ளானாலும் அது விருதுக்கு தகுதியானது தான்…படத்தில் அகோரி சம்மந்தப்பட்ட காட்சிகள் குறைக்கப்பட்டனவா இல்லை எதற்காக அகோரிகள் பற்றிய கரு இதில் கொண்டு வரப்பட்டது என தெரியவில்லை. ஏனென்றால் உடல் ஊனம் உற்றவர்கள், அவர்களின் வாழ்வு பற்றியே (7ம் உலகம்) முழுப்படமும் எடுத்திருக்கலாம். எது எப்படியோ பாலா தன்னை மறுபடியும் மறுபடியும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். வாழ்த்துகள் பாலா..

    வாரணம் ஆயிரம்…பாடல்கள்…மற்றும் சில காட்சிகள்…அவ்வளவுதான்…இதுக்கு விருது கிடைத்தாலும் கிடைத்தது இனி கெளதம் என்ன துள்ளு துள்ளப்போகிறாரோ தெரியாது. அண்மையில் சசிக்குமாரைப் பற்றி குறை சொன்னவராச்சே :-))))

  6. Giri ,
    I am a new visitor of your blog and your blog is very nice..,

    I fully agree with your review of NAN KADAVUL.,
    I don t know how to write in tamil ,Pls anybody help ,a lot of things i want to said to arivan ,but my ENGLISH knowledge is very poor pls help ..,

  7. கிரி,உங்கள் பார்வையில் நான் வேறுபடுகிறேன்.
    நான் கடவுள் உருவாக்கத்திற்காக பாலா நிறைய சிரமம் எடுத்துக் கொண்டிருக்கலாம்;மற்றபடி சமூகத்தை பிரதிபலிக்கிறேன் பேர்வழி என்று சமூகத்தின் அழுக்குகளைத் தேடிப் பிடித்து பொது ரசனைக்குள்ளாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.அதை புண்'நவீனத்துவம் என்று பலர் சொன்னாலும்!
    சினிமா என்பது ஒரு கலை வடிவம்;ஒரு கலை அல்லது அதன் வெளிப்பாடு மனிதனின் நல்ல மென்மையான ரசனைகளுக்கு வடிகாலாக இருக்க வேண்டும்.அந்த வகையில் அகோரி மற்றும் ஊனமுற்ற குழந்தைகளை மனிதத்தனத்தை மீறி கொடுமைப்படுத்தும் காட்சிகளைப் பொதுப்பார்வைக்கு வைத்த பாலா நிச்சயம் ஒரு இயைந்த-balanced-மனநிலையில் இருக்கும் நபர் அல்ல என்றே நானும் நினைக்கிறேன்…மற்றும் அவரது எல்லா படங்களும் மனச்சிதைவடைந்த மனிதர்களையே சுற்றிச் சுழல்கிறது;அவருக்கே தெரியாமல் அவரது உள்ளார்ந்த மனம் எங்காவது சிதைவுற்றிருக்கலாம்…எனவே நான் கடவுளுக்கு விருது என்பது தவறான முன்னுதாரணம்;இதைவிட வன்முறை மற்றும் சமூக வன்முறைகளை முன்னிலைப்படுத்தும் படங்களை சிந்தனையில் வளர்க்க டைரக்ஷன் கனவில் இருக்கும் பல துணை இயக்குனர்கள் கோடம்பாக்கத்தில் தயாராவதை இந்த விருது ஊக்கப்படுத்தியிருக்கிறது;இன்னும் பல அகோரி கதைகளுக்கு தமிழ்க்களம் தயாராக வேண்டும் !

    இரண்டாவதான வாரணம் ஆயிரம் பற்றியது.காஷ்மீர் என்று டில்லி காட்சிகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்(சிறுவன் கடத்தல்…தில்லிதான் என்று நினைக்கிறேன்)
    வா.ஆ.படம் முழுவதும் ஒரு பாசிடிவ் எனர்ஜி விரவியிருந்தது.அப்பா ஒரு குடும்பப் பிணைப்பு என்ற ஒரு விதயத்தை முதன்மைப் படுத்த,மகன் தன் முனைப்பு என்ற ஒரு விதயத்தை முதன்மைப்படுத்தியதாக எனக்குத் தோன்றியது;அந்த முனைப்பிற்காக முயற்சியின் எந்த எல்லைக்கும் இருவரும் செல்கிறார்கள்.இந்த இரண்டு டைமன்ஷனில் அப்பாவை பல விதயங்களில் வரித்துக் கொள்ளும் மகனின் விவரிப்பில் படம் செல்கிறது.

    எனக்கு மிகவும் பிடித்து ரசித்தேன்..டில்லிக்காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் எனினும் ஒரு தாங்க முடியாத இழப்பைத் தாங்குவதற்கு செய்யப்படும் மனிதனின் முயற்சியாக அதைப் பார்க்கும் போது இயல்பாகவே இருந்தது.
    நினைத்தவுடன் கடன்களை அடைக்க முடிவதும்,நினைத்த உடன் ராணுவத்தில் வேலை கிடைப்பதும் லாஜிக் ஓட்டைகள் என்றாலும் அவை தரும் நேர்மறை எண்ணங்களுக்காக அவற்றை மன்னிக்கலாம்!

    எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கலை அனுபவம் பார்வையாளனின் சிந்தனையில் ஒரு புள்ளியாவது ஆக்கபூர்வ மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் அல்லது தான் சார்ந்த சமூகத்தின் மீதான தனது பார்வையை நெகிழ்த்தியிருக்க வேண்டும்;இவை முறையே பாசிட்டிவ் சினிமா அல்லது நெகட்டிவ் சினிமா என்ற இரண்டு பரந்த வகைப்படுத்தலுக்குள் வந்துவிடும்.

    ஆனால் நான் கடவுள் இரண்டாவது வகையின் போர்வையில் வந்த ஆனால் நொந்து போக வைக்கும் ஒரு படம்.

    சாரி..கொஞ்சம் நீண்டு விட்டது !

  8. எனக்கும் நான் கடவுள் படம் பிடித்திருந்தது. பாலா அவரது முந்தைய படங்களுக்கு விருது வாங்கியிருக்கவேண்டும் என்றாலும் இந்தப் படத்திற்கு வாங்கியது விமர்சகர்களின் முகத்தில் கரியைப் பூசியது போல..

    வாரணம் ஆயிரத்துக்கு விருது வழங்கியதில் ஏதாவது அரசியல் இருக்குமென்று நினைக்கிறேன்.

  9. அருமையான பதிவு கிரி,பாலா போன்ற இயக்குனர்கள் போன்றவர்களினால் தான்
    தமிழ் படங்களை வேறு தளத்திற்கு சென்று சேர்க்க முடியும்.

  10. // arumbavur said…
    நிச்சயம் விருது என்பதை வைத்து ஒரு படத்தை நல்ல படம் என்றும் மோசமான படம் என்றும் குறை கூற முடியாது //

    உண்மை தான்.

    //திரை அரங்கிற்கு வரும் ரசிகன் தான் கொடுத்த பணம் இந்த படம் வீண் இல்லை என்று நினைக்கும் படி படம் இருந்தாலே போதும் அதுதான் உண்மையான சிறந்த விருது //

    அதனால் அதான் அதிகம் மசாலா படங்கள் வெற்றி பெறுகின்றன. இதுவே நிறைந்து இருந்தால் எப்படிங்க! நம்ம படங்கள் மற்ற படங்களுடன் போட்டி போட வேண்டாமா! பசங்க என்று ஒரு நல்ல படம் வந்தது.. அதை பாராட்டி பதிவெழுதுவதை விட வேட்டைக்காரனை திட்டி கிண்டல் செய்து பதிவிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    ======================================================================

    // சின்ன அம்மிணி said…

    இரண்டு படங்களுமே நான் ரசித்தவை.//

    நானும் 🙂

    ======================================================================

    // நட்புடன் ஜமால் said…

    வாரண ஆயிரம் மட்டுமே விரும்பி 2க்கு மேற்பட்ட முறை பார்த்தேன்.//

    நானும், பாடல்களை கணக்கு வழக்கில்லாமல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் இன்னமும்.

    //மற்றபடி …

    வாழ்த்துகள் விருது பெற்றவர்களுக்கு//

    அப்ப நான் கடவுள் வொர்க் அவுட் ஆகலைன்னு சொல்றீங்க ஹி ஹி ஹி

    ======================================================================

    // ராமலக்ஷ்மி said…

    நல்லா இருக்கே தலைப்பு. எல்லோரும் எதைக் காய்ச்சினார்கள் என்பதைக் கடிந்து நல்லாவே காய்ச்சி விட்டிருக்கிறீர்கள்:)! முடிவாக டைரக்டருக்கு சொல்லியிருக்கும் ஆலோசனை சிறப்பு.//

    🙂 நன்றி ராமலக்ஷ்மி

    ======================================================================

    // அறிவன்#11802717200764379909 said…

    கிரி,உங்கள் பார்வையில் நான் வேறுபடுகிறேன்.//

    🙂 பார்வை ஒவ்வொருவருக்கும் வேறு தான் அறிவன்..வரவேற்கிறேன்

    //சமூகத்தின் அழுக்குகளைத் தேடிப் பிடித்து பொது ரசனைக்குள்ளாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.//

    உண்மையை தானே கூறினார்

    //அந்த வகையில் அகோரி மற்றும் ஊனமுற்ற குழந்தைகளை மனிதத்தனத்தை மீறி கொடுமைப்படுத்தும் காட்சிகளைப் பொதுப்பார்வைக்கு வைத்த பாலா நிச்சயம் ஒரு இயைந்த-balanced-மனநிலையில் இருக்கும் நபர் அல்ல என்றே நானும் நினைக்கிறேன்.//

    அறிவன் இதை விட மோசமாகவே உண்மையில் நம்ம ஊரில் நடந்து கொண்டு இருக்கிறது.. அவர் காட்டியது மிகக்குறைவு.

    //அவருக்கே தெரியாமல் அவரது உள்ளார்ந்த மனம் எங்காவது சிதைவுற்றிருக்கலாம்.//

    🙂 பொதுவாக இயக்குனர்கள் தங்களை பாதித்த நிகழ்ச்சிகளை சம்பவங்களைத்தான் படமாக எடுக்கிறார்கள், எனவே அவர் தான் கூற வேண்டும்

    //எனவே நான் கடவுளுக்கு விருது என்பது தவறான முன்னுதாரணம்;//

    என்பது உங்கள் கருத்து..

    //காஷ்மீர் என்று டில்லி காட்சிகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்//

    காஸ்மீர் தான் என்று நினைக்கிறேன்..மறந்து விட்டது 🙂

    //எனக்கு மிகவும் பிடித்து ரசித்தேன்.//

    நான் கூட ..பதிவுகள் விமர்சனங்களை நம்ம்ம்பி சென்றால் மாறாக எனக்கு ரொம்ப பிடித்தது 🙂

    //நான் கடவுள் இரண்டாவது வகையின் போர்வையில் வந்த ஆனால் நொந்து போக வைக்கும் ஒரு படம்.//

    :-))

    நன்றி அறிவன் உங்கள் நாகரீகமான மாற்று கருத்திற்கு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. உங்கள் பொறுமையான பதிலுக்கு மிக்க நன்றி

  11. // எப்பூடி … said…

    இதுதாங்க என்னோட மனநிலையும், சிறந்த தமிழ் படத்தையும் நான் கடவுளுக்கே கொடுத்திருக்கலாம்//

    பாலாவிற்கு கொடுத்தற்க்கே பலர் கண்டபடி திட்டுகிறார்கள்.. 🙂

    ======================================================================

    // ’டொன்’ லீ said…

    படத்தில் அகோரி சம்மந்தப்பட்ட காட்சிகள் குறைக்கப்பட்டனவா இல்லை எதற்காக அகோரிகள் பற்றிய கரு இதில் கொண்டு வரப்பட்டது என தெரியவில்லை//

    பல காட்சிகள் வெட்டப்பட்டு விட்டன என்பது உண்மை.. குறிப்பாக பெரும்பாலான காசி காட்சிகள்.

    // எது எப்படியோ பாலா தன்னை மறுபடியும் மறுபடியும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். //

    யார் கூறுவதையும் கண்டுகொள்ளாமல் அவர் வழியில் அவர் சென்று கொண்டு இருக்கிறார்

    //வாரணம் ஆயிரம்…பாடல்கள்…மற்றும் சில காட்சிகள்…அவ்வளவுதான்…இதுக்கு விருது கிடைத்தாலும் கிடைத்தது இனி கெளதம் என்ன துள்ளு துள்ளப்போகிறாரோ தெரியாது. அண்மையில் சசிக்குமாரைப் பற்றி குறை சொன்னவராச்சே :-))))//

    ஹா ஹா ஹா ஆமாம்.. இனி இவர் அலப்பறை தாங்காது :-))) சசிக்குமாரை மட்டுமா! பலரை குறை கூறி இருக்கிறார்.. ஷங்கரை கூட சிவாஜி படம் எடுத்ததற்கு கண்டபடி விமர்சித்தார் 🙂 இவர் Derailed படத்தை சுட்டு அப்படியே பச்சைக்கிளி முத்துசரம் எடுத்ததை எந்த கணக்கில் சேர்ப்பது, என்ன கொடுமை சார்! :-))

    ======================================================================

    // முகிலன் said…

    எனக்கும் நான் கடவுள் படம் பிடித்திருந்தது. பாலா அவரது முந்தைய படங்களுக்கு விருது வாங்கியிருக்கவேண்டும் என்றாலும் இந்தப் படத்திற்கு வாங்கியது விமர்சகர்களின் முகத்தில் கரியைப் பூசியது போல..//

    டின் டின்னா பூசிட்டாங்க 🙂

    //வாரணம் ஆயிரத்துக்கு விருது வழங்கியதில் ஏதாவது அரசியல் இருக்குமென்று நினைக்கிறேன்.//

    எதோ சொல்றாங்க கேட்டுப்போம்!

    ======================================================================

    // Karthik said…

    then will expect Ayrathil Oruvan best film in 2010//

    கார்த்திக் கிண்டல் செய்யறீங்களா! இல்லை நிஜமாத்தான் சொல்றீங்களா! ஏற்கனவே இந்த படத்தை ஆதரிங்கப்பா என்று கூறியதற்கு என்னை கண்டபடி திட்டுகிறார்கள் :-)))

    ======================================================================

    // MANI said…

    Giri ,
    I am a new visitor of your blog and your blog is very nice..,//

    நன்றி மணி

    //I don t know how to write in tamil ,Pls anybody help ,a lot of things i want to said to arivan ,but my ENGLISH knowledge is very poor pls help//

    மணி அது சப்பை மேட்டர் இங்கே சென்று டைப் பண்ணுங்க http://www.google.com/transliterate/tamil

    ======================================================================

    // தமிழ் குமார் said…
    அருமையான பதிவு கிரி,பாலா போன்ற இயக்குனர்கள் போன்றவர்களினால் தான்
    தமிழ் படங்களை வேறு தளத்திற்கு சென்று சேர்க்க முடியும்//

    இதை கூறினால் என்னையும் திட்டறாங்க! :-)) ஒரே குஷ்டமப்பா!

    ======================================================================

    // அஹோரி said…

    பாலாவின் படைப்புகள் இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடம்.//

    நம்ம ஆளுங்க குத்து பாட்டு வேணும்னு அடம் பிடிக்கறாங்க! 🙂

  12. //பாலாவிற்கு கொடுத்தற்க்கே பலர் கண்டபடி திட்டுகிறார்கள்//

    இதுக்கு என்ன பண்ணுறது? தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை அவளவுதான் என்று விட்டுவிட வேண்டியதுதான்.

  13. பாலாவிற்கும் மூர்த்திக்கும் வாழ்த்துக்கள் ….

    வாரணம் ஆயிரம் : சூர்யாவின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் எனக் கருதுவேன், சிங்கையிலும் சென்னையிலும் திரையில் பார்த்த பரவசம்… குறிப்பாக தந்தையின் பாசம் + பாடல்கள் மற்றும் அதை எடுத்த விதம் + + சமீரா ரெட்டி

    //சிம்ரன் பார்வையில் சூர்யா கேன்சரால் அவதிப்பட்டு கொடுமையை அனுபவித்து வந்தார், அவர் இறந்த போது மேலும் சிரமப்படாமல் நிம்மதியாக இறந்தாரே! என்பது சிம்ரன் எண்ணமாக காட்டப்பட்டு இருந்தது. இதில் என்ன கேவலத்தை கண்டார்களோ//

    விடுங்க, இது உணர வேண்டிய விஷயம். சிலருக்கு இது புரியாது….. என் தாய் நீரிழவுடன் பத்து வருடங்கள் போராடி பிறகு நிரந்தர துயில் கொண்ட போது எனக்கு கண்ணீரே வரவில்லை. அவர் இருக்கும் போதே நிறைய சிந்தி விட்டதால் பிறகு வரவில்லை போலும்…

    //நான் கடவுள் படத்திற்கு விருது என்பதை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள முடிந்த என்னால் வாரணம் ஆயிரம் படத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வாரணம் ஆயிரம் நல்ல படம் தான் (என் பார்வையில்) ஆனால் தேசிய விருது வாங்கக்கூடிய அளவிற்கு தகுதியானதா! என்பது அந்த தேர்வு குழுவினருக்கே வெளிச்சம்.//

    தேர்வு குழுவில் "நக்மா" இருந்ததை நீங்கள் கவனிக்கலையா? 🙂

  14. ரெண்டு படங்களுமே விருதுகளுக்கு தகுதி இல்லாதவைங்கறது என் கருத்து…:(

  15. எனக்கும் இரு படங்களும் பிடித்திருந்தன.
    ஆனால் நீங்கள் சொன்னது போல வாரணம் ஆயிரத்தை விட சிறந்த படங்கள் இருக்கிறது.
    வன்முறையான படங்கள் (பலருக்கு பிடித்த வேட்டையாடு விளையாடு, பருத்தி வீரன்) எனக்கு பிடிப்பதில்லை.
    நான் கடவுள் படத்தில் வன்முறை அதிகம் என்று பல விமர்சனங்களில் படித்ததால் படம் பார்ப்பதா வேண்டாமா என்ற தயக்கம் முதலில் இருந்தது. ஆனால் படம் பார்த்த போது பிடித்திருந்தது. படத்தின் தாக்கம் பல நாட்கள்
    மனதில் இருந்தது. பலருக்கு படம் பார்க்க சொல்லி சிபாரிசு செய்தனான்.

  16. // Mahesh said…
    ரெண்டு படங்களுமே விருதுகளுக்கு தகுதி இல்லாதவைங்கறது என் கருத்து…:(//

    :-)) ஓகே

    ======================================================================

    //hayyram said…
    gud நான் கடவுள் நான் மிகவும் ரசித்த படம். நல்ல படங்கள்.//

    🙂 நன்றி ராம்

    ======================================================================

    //வாசுகி said…
    எனக்கும் இரு படங்களும் பிடித்திருந்தன. //

    பரவாயில்லை ..இரண்டு பொண்ணுக ஆதரவு கிடைத்து விட்டது 🙂

    //வன்முறையான படங்கள் (பலருக்கு பிடித்த வேட்டையாடு விளையாடு, பருத்தி வீரன் எனக்கு பிடிப்பதில்லை//

    எனக்கு இரண்டும் பிடித்தது ..ஆனால் வேட்டையாடு விளையாடு படத்தில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை போல வருவதால் அவ்வளவா பிடிக்கலை

    //படம் பார்த்த போது பிடித்திருந்தது//

    இப்படித்தாங்க பலர் படம் பார்க்காமலே படம் பிடிக்காதுன்னு அவர்களா நினைத்துக்கறாங்க.

    ======================================================================

    //

    எப்பூடி … said…

    இதுக்கு என்ன பண்ணுறது? தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை அவளவுதான் என்று விட்டுவிட வேண்டியதுதான்//

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை, நியாயங்கள். இதில் நாம் கூற என்ன இருக்கிறது! அடுத்தவர் ரசனையை கேவலப்படுத்தாமல் இவர்கள் இருந்தாலே போதுமானது!

    ======================================================================

    // Logan said…
    குறிப்பாக தந்தையின் பாசம் + பாடல்கள் மற்றும் அதை எடுத்த விதம் + + சமீரா ரெட்டி //

    சமீரா ++ கொடுத்துட்டுட்டீங்க ஓகே 😉

    //, இது உணர வேண்டிய விஷயம். சிலருக்கு இது புரியாது….. //

    இவங்களுக்கு புரியல அதோட விட்டாங்களா.. கண்டபடி இல்ல திட்டறாங்க!

    //தேர்வு குழுவில் "நக்மா" இருந்ததை நீங்கள் கவனிக்கலையா? :)//

    🙂

    ======================================================================

    //காத்தவராயன் said…

    நான் கடவுள் பதிவின் போதுதான் உங்கள் வலைப்பூவிற்கு முதன்முதலாக வந்தேன் //

    அப்படியா! நன்றி 🙂

    //ராஜாவுக்கும் பூஜாவுக்கும் விருது கண்டிப்பாக கிடைக்கும் என எதிர்பார்த்தேன்//

    இளையராஜாவிற்கு நான் எதிர்பார்க்கவில்லை, பூஜாவிற்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். படத்துல பூஜா பாடுவதையும் அவர் குரலிலேயே!! போட்டு இருக்கலாம்..நல்லா இருக்கோ இல்லையோ!

    //வலைப்பூத்தளங்களில் ஒரு பிரபல பதிப்பகத்தின் கோஷ்ட்டி ஒன்று உள்ளது//

    ஹி ஹி ஹி

    //பாலா பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் பேட்டி கொடுப்பதில்லை என்பதால் அவர்களும் சமயம் பார்த்துக்கொண்டிருந்தார்கள் சாதித்து விட்டார்கள் //

    எப்படி எல்லாம் தங்கள் வேலையை காட்டுகிறார்கள் 🙁

    //ஏதாவது புரிஞ்சதா கிரி.ரொம்ப அதிகமா எழுதிட்டேனோ//

    :-))) புரிஞ்சுது, அந்த கடத்தல் சம்பவத்தை வைத்து பார்த்தால் நீங்கள் கூறுவது பொருந்தி வருகிறது.. உடன் ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சி..இவை இரண்டும் படத்தோடு ஒட்டவில்லை. அதனால் நீங்கள் கூறுவது சரி என்று பட வாய்ப்பு இருக்கிறது. காரணம் சூர்யா எப்படி ராணுவத்திற்கு திடீரென்று போனார் என்பதற்கான சரியான காரணம் இல்லை, முன்பு அதற்க்கான ஆசை இருந்ததாகவும் காண்பிக்கப்படவில்லை. இனி கவுதம் வாசுதேவ மேனனை தான் கேட்கணும்.. சார் என்ன உட்டாலங்கடி வேலை செய்தீங்க என்று! :-))

    உங்க நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி 🙂

  17. நான் கடவுள் பதிவின் போதுதான் உங்கள் வலைப்பூவிற்கு முதன்முதலாக வந்தேன், அதற்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. ராஜாவுக்கும் பூஜாவுக்கும் விருது கண்டிப்பாக கிடைக்கும் என எதிர்பார்த்தேன்.

    //கதை சரியில்லை படம் படு மட்டமாக உள்ளது, பாலாவை மனநல மருத்துவரிடம் காட்ட வேண்டும் என்று தாறுமாறாக விமர்சித்தார்கள்//

    வலைப்பூத்தளங்களில் ஒரு பிரபல பதிப்பகத்தின் கோஷ்ட்டி ஒன்று உள்ளது, அந்த கோஷ்ட்டிக்கு மட்டுமல்ல பிற எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நான்கடவுளின் வசனகர்த்தா ஜெமோ மீது வெறுப்பு/பொறாமை அதிகம், அதனால்தான் ஜெமோவை கவிழ்க்க எண்ணி நான்கடவுளை கவிழ்த்தார்கள்.
    மேலும்
    பாலா பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் பேட்டி கொடுப்பதில்லை என்பதால் அவர்களும் சமயம் பார்த்துக்கொண்டிருந்தார்கள் சாதித்து விட்டார்கள், எனக்குதெரிந்து கடந்த 7/8 வருடங்களில் விகடன் ரா.கண்ணன் (இவர் ரஜினி போன்ற பெரும்தலைகளை மட்டும் பேட்டி எடுப்பவர்) தவிர வேறு யாரும் பாலாவை பேட்டி கண்டதில்லை.

    //குறிப்பா காஷ்மீர் காட்சிகள் எதுக்கு வைத்தார் என்று கவுதம் வாசுதேவ மேனனுக்கே வெளிச்சம்!//

    இந்தியில் – வெட்னஸ்டே
    தமிழில் – அஞ்சாதே, வாரணம் ஆயிரம், உ.போ.ஒ

    இந்த படங்களுக்குள் உள்ள ஒற்றுமைதான்(ஒரிஜினல் எந்த இங்கிலிஸ் படமோ யாம் அறியோம்!) காஷ்மீர் காட்சி, கொஞ்சம் விரிவாகவே சொல்கிறேனே,

    வாரணம் ஆயிரம் படம் தொடங்கியபோது பிரமாண்டமாக இந்திய எல்லையோரம் அனுமதிபெற்று கடத்தல் மற்றும் அதனை கண்டுபிடித்தல் (kidnap and tracking) பற்றிய கதையை படமாக்கினார்கள், வாரணமாயிரம் படக்குழுவினர் இதை படமாக்கிவிட்டு வருவதற்குள், குறுகிய காலத்தயாரிப்பாக அஞ்சாதேவை தயாரித்து (இதுவும் கடத்தல்/கண்டுபிடித்தல் கதை) ரிலீஸ் செய்து வென்றுவிட்டார்கள், இரண்டும் ஒரே கதை என்பதால் வா.ஆ படக்குழு கதையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது, மீண்டும் ஸ்கிரிப்ட் ரெடியாவதற்குள் சூர்யா வேல் படத்தை முடித்து கொடுத்தார், புதிதாக இன்னொரு சூர்யா, ரம்யா, சிம்ரன் ஆகியோர் வா.ஆ.க்குள் வந்தார்கள்.
    சமீரா பகுதி, ரம்யா பகுதி, சிம்ரன் பகுதி ஆகியவை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமலிருக்க இந்த குழப்பம்தான் காரணம்.
    இன்னொரு உதாரணம் கூட சொல்லலாம்,
    அஞ்சாதே – குடிகாரன் டூ போலீஸ்
    வா.ஆ – போதைக்கு அடிமையானவன் டூ மிலிட்ரி ஆபீஸர்.

    ஏதாவது புரிஞ்சதா கிரி.ரொம்ப அதிகமா எழுதிட்டேனோ………

  18. இடுகை ரொம்ப நல்லா இருக்கு கிரி.

    அதையும் குறை சொல்லி குட்டையை குழப்பி விட்டார்கள் நம்ம மக்கள்.

    "வாரண ஆயிரம்" தமிழ் கலாச்சார படம் அல்ல என்று :-), என்ன கொடுமை பார்த்தீர்களா.

    அதுவும் தேர்வு குழுவில் நக்மா இருந்ததால் தான் அவர் தங்கை கணவர் படத்துக்கு இந்த விருது கிடைத்ததாம்!…

    அவ்வவ்வ்வ்வ்…ரூம் போட்டு உக்காந்து யோசிப்பாங்களோ 🙂

  19. இந்த இரண்டு படமும் எனக்கு பிடித்த படம், வாரணம் ஆயிரம் நன்றாக இருந்தது என்று ஆளில் நானும் ஒருவன்.

    பிதாமகனின் தோல்விக்கு காரணம், மனிதர்கள் நிறம்/ஜாதி/மதம் பார்த்து பழகும் மிருகங்கள், இவர்களுக்கு பிச்சைக்காரர்களை வாழ்க்கையை சினிமாவுக்காக கூட ரசிப்பது சிரமம்தானே?

  20. முதலில் பாலா விட்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இனிமேல் அவர் இந்த மாதிரி கான்செப்ட் படங்களை எடுக்க போவதில்லை என படித்ததாக ஞாபகம்.

    படத்தில் குறைகளே இல்லையா! என்று நீங்கள் கேட்பது புரிகிறது. படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் கேள்விகள் அவசியமற்ற காட்சிகள் என்று உள்ளது, குறிப்பா காஷ்மீர் காட்சிகள் எதுக்கு வைத்தார் என்று கவுதம் வாசுதேவ மேனனுக்கே வெளிச்சம்!

    இதில் குழப்பம் ஒன்றும் இல்லை.

    ஒரு காதலின் வலியை மறக்க அந்த கதையின் நாயகன் தேர்ந்து எடுக்கும் இடம் காஷ்மீர், அவ்வளவே. சென்ற இடத்தில் அந்த பையனை தேடி செல்லுதல் போன்றவை படத்தின் விறுவிறுப்பை குறைத்திருக்கலாம் ஆனால் அந்த மாதிரி சம்பவம் நடக்க வாய்பே இல்லை என கூறமுடியாது.

    படத்தின் பின் பாதி காட்சிகள், டேஹ்ரடுன் மற்றும் காஷ்மீரில் எடுக்கப்பட்டவை. ஆதலால் அதட்க்கு ஏற்றவாறு கதை அமைப்பில் அவர் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    மேலும் எடுத்தவுடன் டேஹ்ரடுன் ட்ரைனிங் சென்றாலும் நம் மக்கள் நம்ப மாட்டார்கள். அதட்கு கூட அந்த காட்சி ஒரு ஆதேண்டிக் ஆக இருக்கலாம்.

    கெளதம் இன் பர்சனல் ஸ்டோரி என சொல்லுவதால் அவருக்கு உள்ள மிலிட்டரி மற்றும் போலீஸ் கன்செப்ட்ஸ் உள்ளே வருவது எனக்கு ஒன்றும் புதிதாகவோ முரண்படகோவே தெரியவில்லை.

    மற்றபடி அவர் சசிகுமார் மற்றும் ஆமீர் போன்றவர்களை விமர்சனம் செய்தது அவர் தனிப்பட்ட விருப்பம். அவரின் படங்களை மற்றவர்கள் விமர்சனம் செய்வது போல தான் இதுவும். ஒருவரை விமர்சனம் பண்ண template எதுவும் வைக்க முடியாது.

    சசி யை எனக்கும் புடிக்கும். ஆனால் தலையில் தூக்கி கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என்பதைதான் நானும் சொல்கிறேன்.

  21. // சிங்கக்குட்டி said…

    இடுகை ரொம்ப நல்லா இருக்கு கிரி.//

    நன்றி சிங்கக்குட்டி

    //"வாரண ஆயிரம்" தமிழ் கலாச்சார படம் அல்ல என்று :-), என்ன கொடுமை பார்த்தீர்களா.//

    இதில் என்ன கலாச்சார கொடுமையை கண்டார்களோ! இந்த காலாச்சார பாதுகாவலர்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி!

    //அதுவும் தேர்வு குழுவில் நக்மா இருந்ததால் தான் அவர் தங்கை கணவர் படத்துக்கு இந்த விருது கிடைத்ததாம்!…//

    🙂

    ======================================================================

    // MANI said…

    கிரி ,
    ரொம்ப நன்றி ..//

    மணி அவ்வளோ தான் விஷயம்! 🙂

    ======================================================================

    // குடுகுடுப்பை said…

    பிதாமகனின் தோல்விக்கு காரணம், மனிதர்கள் நிறம்/ஜாதி/மதம் பார்த்து பழகும் மிருகங்கள், இவர்களுக்கு பிச்சைக்காரர்களை வாழ்க்கையை சினிமாவுக்காக கூட ரசிப்பது சிரமம்தானே?//

    சரியா சொன்னீங்க! இதில் பிச்சைக்காரர்களுடன் அப்படி உருவாக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். பாலா இந்தப்படத்தில் காட்சிகளை காட்டியது மிகக்குறைவு, உலகில் இதை விட மோசமாகவே நடந்து கொண்டுள்ளது!

    பிதாமகன் தோல்விக்கு இன்னொரு காரணம், பாலா மற்றும் தயாரிப்பாளர் துரை சண்டை. இதனால் படத்திற்கு விளம்பரமே செய்யவில்லை.. சூர்யா தன் கை காசை போட்டு விளம்பரபடுத்தினார்.

    ======================================================================

    // Sadhasivam said…

    இனிமேல் அவர் இந்த மாதிரி கான்செப்ட் படங்களை எடுக்க போவதில்லை என படித்ததாக ஞாபகம்//

    ம்ம்ம் நானும் படித்தேன் ! பார்ப்போம்

    //சென்ற இடத்தில் அந்த பையனை தேடி செல்லுதல் போன்றவை படத்தின் விறுவிறுப்பை குறைத்திருக்கலாம் ஆனால் அந்த மாதிரி சம்பவம் நடக்க வாய்பே இல்லை என கூறமுடியாது.//

    நானும் அதை தாங்க சொல்றேன்.. மன நிம்மதிக்கு போகலாம் ஆனால் கடத்தல் காட்சிகள் எல்லாம் மற்றவர்கள் கொட்டாவி தான் விடுவார்கள்.

    //கெளதம் இன் பர்சனல் ஸ்டோரி என சொல்லுவதால் அவருக்கு உள்ள மிலிட்டரி மற்றும் போலீஸ் கன்செப்ட்ஸ் உள்ளே வருவது எனக்கு ஒன்றும் புதிதாகவோ முரண்படகோவே தெரியவில்லை.//

    இவர் பர்சனல் வாழ்க்கை விருப்பம் எல்லாம் நமக்கு தெரியும்.. படம் பார்க்கும் அனைவருக்கும் தெரியுமா! அல்லது அதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயாமா! படம் பார்ப்பவர்கள் படத்தின் கதை போக்கை தான் பார்ப்பார்கள் கவுதமுக்கு இதில் எல்லாம் ஆர்வம் என்பதெல்லாம் அவர்களுக்கு தேவையில்லாத விஷயம்!

    //அவர் சசிகுமார் மற்றும் ஆமீர் போன்றவர்களை விமர்சனம் செய்தது அவர் தனிப்பட்ட விருப்பம். அவரின் படங்களை மற்றவர்கள் விமர்சனம் செய்வது போல தான் இதுவும். ஒருவரை விமர்சனம் பண்ண template எதுவும் வைக்க முடியாது. //

    செயலில் காட்டுகிறவர்கள் அதிகம் பேச மாட்டார்கள், மற்றவர்களை குறை கூற மாட்டார்கள். தங்களை மேலும் எப்படி உயர்த்துவது என்றே சிந்திப்பார்கள். இது அவருடைய உரிமையாக இருக்கலாம் ஆனால் இது அவர் மீதான எண்ணத்தை குறைக்கவே வழி செய்யும். சச்சின் ரஜினி எல்லாம் ஏன் இந்த உயரத்தில் இருக்கிறார்கள் என்றால் புகழ் அடைந்தாலும் மற்றவர்களை பற்றி குறை கூறுவதில்லை.

    //சசி யை எனக்கும் புடிக்கும். ஆனால் தலையில் தூக்கி கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என்பதைதான் நானும் சொல்கிறேன்//

    :-)) சதா இதை நீங்க என்னை மனதில் வைத்து கூறவில்லை என்று நினைக்கிறேன். நல்ல படம் கொடுத்தார் என்ற அளவில் அவரை பிடிக்கும் மற்றபடி அவரை தூக்கி வைத்து கொண்டாடக்கூடிய அளவிற்கு நிரூபிக்க இன்னும் பல தூரம் செல்ல வேண்டியுள்ளது 🙂

  22. கண்டிப்பாக ஒருவரை பற்றி நெகடிவ் ஆக கூறினால் யாருக்கும் புடிக்காது. இது ஒருவருடைய தனிப்பட்ட விஷயம். சச்சின், ரஜினி போன்றவர்கள் அந்த ரகம். கெளதம் போன்றோர்கள் இன்னொரு ரகம்.

    செயலில் காட்டுகிறவர்கள் அதிகம் பேச மாட்டார்கள், மற்றவர்களை குறை கூற மாட்டார்கள். தங்களை மேலும் எப்படி உயர்த்துவது என்றே சிந்திப்பார்கள்.

    இந்த மாதிரி சிந்தனைகள் நம் நாட்டில் அதிகம் இருப்பதாக நான் உணர்கிறேன்..ரிக்கி பாண்டிங் ஒரு நல்ல ஆட்டக்காரர், கேப்டன்…ஆனால் அவரின் விமர்சனங்கள் பற்றி நாம் அறிவோம்..

    கெளதம் மேல் என்னக்கும் நெறைய மாறுபட்ட கருத்துக்கள் உண்டு…ஆனால் நான் விரும்புவது அவரின் ரசனையான படங்களை மட்டுமே..

  23. // Arun said…
    nalla pathivu giri.. So yellarum KAachina – Vettaikaran, Ayirathil oruvan kumm National award possible nu solla vareengala:)//

    :-))) அருண் ஒரு படத்தை எதற்காக விமர்சிக்கறாங்க எனபதும் முக்கியம். வேட்டைக்காரனை யாரும் விவாதிக்கவில்லை கிண்டல் தான் செய்தார்கள். ஆயிரத்தில் ஒருவனில் சர்ச்சைகள் இருந்தாலும் முற்றிலும் ஒதுக்கி விடக்கூடிய படமல்ல!

    ======================================================================

    // Sadhasivam said…

    இந்த மாதிரி சிந்தனைகள் நம் நாட்டில் அதிகம் இருப்பதாக நான் உணர்கிறேன்..ரிக்கி பாண்டிங் ஒரு நல்ல ஆட்டக்காரர், கேப்டன்…ஆனால் அவரின் விமர்சனங்கள் பற்றி நாம் அறிவோம்..//

    சரியான உதாரணம் சதா! ரிக்கி திறமையானவர் ஆனால் அவருக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் சச்சினை போல புகழை பெற முடியவில்லை, காரணம் அவரது "வாய்" தான். இன்னும் கூறப்போனால் அவரை சதத்தில் வேகமாக நெருங்கி வருபவர்.

    //கெளதம் மேல் என்னக்கும் நெறைய மாறுபட்ட கருத்துக்கள் உண்டு…ஆனால் நான் விரும்புவது அவரின் ரசனையான படங்களை மட்டுமே.//

    நானும் அதே! சதா. அதனால் தான் இந்தப்படத்தையும் குறிப்பிட்டேன், இல்லை என்றால் எல்லோரையும் போல நான்கடவுள் படத்தை மட்டும் குறிப்பிட்டுவிட்டு வாரணம் ஆயிரம் படத்தை குறிப்பிடாமல் இருந்து இருப்பேன்.. அந்த படத்தை ரொம்ப ரசித்து பார்த்தேன்.. இன்று வரை இதன் பாடல்கள் என் iPod ல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

  24. //கவுதம் வாசுதேவ மேனனுக்கே வெளிச்சம்!//

    ஆரம்பத்தில்
    1) கவுதம்
    2) கவுதம் வாசுதேவ்
    3) இப்போது கவுதம் வாசுதேவ் மேனன்

    அடுத்து படத்தை மலையாளத்தில் எடுத்து தமிழ்ப்படம் என்பாரோ? மேல்மட்ட நடுத்தர வர்கத்தில் வாழ்வியலை காட்டுவதாக படம் அமைந்திருந்தது. டாடி, மம்மி சோகத்தில் ஆங்கிலம் என தமிழ்க் கொலையை முடிந்த அளவில் செய்திருந்தார்.

    குறைகள் இருப்பினும் இந்தப்படம் எனக்கு பிடித்திருந்தது.

  25. //கவுதம் வாசுதேவ மேனனுக்கே வெளிச்சம்!//

    ஆரம்பத்தில்
    1) கவுதம்
    2) கவுதம் வாசுதேவ்
    3) இப்போது கவுதம் வாசுதேவ் மேனன்

    அடுத்து படத்தை மலையாளத்தில் எடுத்து தமிழ்ப்படம் என்பாரோ? மேல்மட்ட நடுத்தர வர்கத்தில் வாழ்வியலை காட்டுவதாக படம் அமைந்திருந்தது. டாடி, மம்மி சோகத்தில் ஆங்கிலம் என தமிழ்க் கொலையை முடிந்த அளவில் செய்திருந்தார்.

    குறைகள் இருப்பினும் இந்தப்படம் எனக்கு பிடித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here