எதிர்நீச்சல் [2013]

10
எதிர்நீச்சல்

சிவ கார்த்திகேயன், தனுஷ் தயாரிப்பு, அனிருத் ஹிட் பாடல்கள். இயக்குனர் பாலசந்தரின், நாகேஷ் நடித்த எதிர்நீச்சல் படத்தின் பெயர். Image Credit

எதிர்நீச்சல்

சிவ கார்த்திகேயன் பெயர் “குஞ்சித பாதம்”. இந்தப்பெயரால் பலரின் கிண்டலுக்கு ஆளாகிறார். இதனால் கடுப்பாகி பெயர் மாற்றுகிறார், இடையில் காதல்.

தன் மாற்றிய பெயரைப் பிரபலப்படுத்த சிறுவயதில் இருந்தே ஓட்டத்தில் ஆர்வமுள்ள இவர் சென்னை மராத்தான் போட்டியில் கலந்து கொள்கிறார்.

கடைசியில் என்ன ஆகிறது என்பது தான் எதிர்நீச்சல்.

படத்தில் என்னமோ வழக்கமான நகைச்சுவை, சென்டிமென்ட் என்று இருந்தாலும் ஒரு பெயரால் வரும் சிரமத்தைப் பற்றிய படம் என்கிற அளவில் இது வித்யாசமான கதை தான்.

இது வரை ஒரு பெயரால் ஏற்படும் சிரமத்தை ஒரு முழுப் படமாக எடுத்ததாக நினைவில்லை.

சிவ கார்த்திகேயன்

சிவ கார்த்திகேயன் “கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்தை விட நடிப்பில் முன்னேற்றம். குறிப்பாக மிமிக்ரி செய்வதை இதில் முற்றிலும் தவிர்த்து இருக்கிறார்கள்.

ஏற்கனவே இவருக்கு நகைச்சுவை எளிதாக வரும் என்பதால், இதில் அவருக்கு இந்தக் கதாபாத்திரம் நன்றாகப் பொருந்துகிறது.

இவரது நண்பராக சதீஷ் என்பவர் நடித்துள்ளார். இவரைச் சந்தானமாகவே தான் நினைக்கத் தோன்றுகிறது.

சந்தானம் பட்ஜெட் அதிகம் என்பதால் இவரைப் போட்டு விட்டார்கள் போல. ரொம்ப மோசம் இல்லாமல் நடித்து இருக்கிறார்.

ப்ரியா ஆனந்த் கதாநாயகி, பள்ளி ஆசிரியையாக வருகிறார். இவருக்கு பதில் வேறு யாரையும் [நம்ம ஊர் முகமாக] நடிக்க வைத்து இருக்கலாம் என்று தோன்றியது.

இன்னொரு பகுதியில் நந்திதா [அட்டகத்தி படத்தில் வருபவர்] வருகிறார்.

இவர் பகுதியில் படம் கொஞ்சம் மெதுவாக செல்கிறது. படத்தில் பெரிய நிம்மதி இரட்டை அர்த்த வசனங்கள் எதுவுமில்லை.

படத்தில் வரும் குத்துப்பாடலான “லோக்கல் பாய்ஸ்” க்கு தனுஷ் நயன்தாரா ஆடுகின்றனர்.

தனுஷ்

இதில் தனுஷ் வரும் போது, மாடு மாதிரி இருக்கும் நான்கு பேரைப் பறக்கவிட்டு வருகிறார்.

பல்லி மாதிரி இருக்கும் தனுஷ் இவர்களை அடிப்பதைப் பார்த்தால், “எதுக்கு தனுஷ் இந்த வேண்டாத வேலை?” என்று தான் தோன்றுகிறது.

இதெல்லாம் தேவையே இல்லை, ஏன் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.

நயன்தாரா இந்தப்பாடலில் வரும் போது பலத்த விசில் 🙂 கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்களைக் கிறங்கடித்து தான் செல்கிறார்.

சிவ கார்த்திகேயன் மராத்தானுக்கு தயார் ஆகும் காட்சிகள், போட்டியில் கலந்து கொள்ளும் காட்சிகள் நன்றாக உள்ளது. இவ்வளவு பேரை எங்கே பிடித்தார்கள்!

முதலிலேயே இவர் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் உள்ளவர், வெற்றி பெற்றுள்ளவர் என்று வருவதால் மராத்தானில் பங்கு கொள்வதாக வரும் போது நமக்கு ஏற்றுக்கொள்ளும்படி தான் உள்ளது.

பெயர் சிரமங்கள்

குஞ்சித பாதத்தை “டேய்! குஞ்சி”, “குஞ்சு” என்று அழைப்பதால் அவர் எதிர்கொள்ளும் சிரமங்கள் சரியாக எடுக்கப்பட்டு இருக்கின்றன.

இது போலத் தர்மசங்கடமான பெயரை உள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அனுபவம்

அப்பா தமிழ் பற்றால் எனக்கு கிரிராசு என்று பெயர் வைத்தார்.

மேல்நிலைப் பள்ளி வரும் வரை பெரிய பாதிப்பில்லை. என் இனிசியல் KP. நான் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு உடுமலைப் பேட்டை அருகே பள்ளியில் படித்தேன்.

ஹாஸ்டலில் என்னை “KP” என்று தான் அழைப்பார்கள். எனக்கும் அவ்வாறு அழைப்பது பிடித்து இருந்தது.

எட்டாவது வரும் போது, எதோ ஒரு திரைப் படத்தில் KP க்கு “நல்ல” அர்த்தத்தைக் கொடுக்க 🙂 பள்ளியில் இதை வைத்தே என்னை ஓட்டித் தள்ளி விட்டார்கள்.

அடுத்த வருடம் கோபியிலேயே ஒரு ஹாஸ்டலில் சேர்ந்தேன் அங்கே யாரும் “KP” என்று கூப்பிடவில்லை என்றாலும், அட்டனன்ஸ் கூப்பிடும் போது “KP கிரிராசு” என்று அழைக்க.. எல்லோரும் கெக்கே பிக்கேன்னு சிரிப்பாங்க.

ஒரு சில நாட்கள், ஹாஸ்டலில் பசங்க தான் அட்டனன்ஸ் எடுப்பானுக! அவனுக வேண்டும் என்று அழுத்தி கூப்பிட்டு கடுப்பேத்துவானுக.

சிவகார்த்திகேயன் மாதிரி, என் பெயர் வரப்போகிறது என்றாலே கலவரம் ஆகி விடுவேன் 🙂 .

பின்னர் அப்பாவிடம் சண்டை போட்டுப் பத்தாவது வந்து P.கிரிராஜ் என்று மாற்றி விட்டேன்.

10 வகுப்பு முடிக்கும் போது இது போல மாற்ற முடியும். அதன் பிறகு “கிரி” மட்டுமே என் பெயராகி விட்டது.

இப்பவும் யாரும் என் முழுப் பெயரைக் கூப்பிட்டால் வேறு யாரையோ அழைக்கிறார்கள் என்று நினைத்துத் திரும்பக் கூட மாட்டேன் 🙂 .

இது போல பெயர் பிரச்சனை என் மகனுக்கு வரக்கூடாது என்று யோசித்து யோசித்து வைத்த பெயரைப் பற்றி எழுதியுள்ளேன் 🙂 .

எனவே எனக்கும் இந்தப் படத்திற்கும் ஒரு வகையில் தொடர்பு உள்ளது. என்னைப் போலப் பலருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

Read: “யுவன்”னு பேரு வச்சாச்சுல்ல அப்புறம் என்ன குட்டித் தம்பி!

பாடல்கள்

பாடல்கள் ஏற்கனவே செம ஹிட் ஆகி விட்டதால் படத்தில் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு. ஒளிப்பதிவு வேல்ராஜ் (பொல்லாதவனுக்கு ஒளிப்பதிவு செய்தவர்).

அனிருத் கூட தனுஷ் வரும் காட்சியில் வருகிறார்.

“3” படத்தோடு காணாமல் போய் விடுவாரோ என்று நினைத்தேன்… திறமையுள்ள ஆள் தான். படத்தில் Big FM RJ பாலாஜி ஒரு காட்சியில் வருகிறார்.

இவர், படத்தை விமர்சனத்தில் டேமேஜ் செய்து விடக்கூடாது என்று சேர்த்து விட்டார்களா! 😉 .

“நிஜமெல்லாம் மறந்துபோச்சு” மற்றும் “பூமி என்னை சுத்துதே” பாடலை தனுஷ் எழுதி இருக்கிறார். இவருடைய “மயக்கம் என்ன” படத்தில் எழுதிய பாடல்களிலேயே ஆச்சர்யப்படுத்தி இருந்தார், தொடர்ந்து இதிலும்.

படத்தில் லாஜிக் பிரச்சனை என்று பார்த்தால், இவர் பெயரை மாற்றிய பிறகு இவரின் பழைய பெயரை அறிந்தவர்கள் “எதேச்சையாக” ஒரே சமயத்தில் வருவது போன்ற சில காட்சிகள் உள்ளது.

இடைவேளைக்கு பிறகு கொஞ்ச நேரம் படம் மெதுவாகச் சென்றாலும், இறுதியில் சரிகட்டி விடுகிறார்கள்.

முடிவு இது தான் இருக்கும் என்று முன்பே ஊகிக்க முடிகிறது.

குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நல்ல பொழுது போக்குப் படமாக இருப்பதால் சிறிய குறைகளை மன்னித்து, அனைவரும் பார்க்கலாம் என்று எதிர்நீச்சல் பரிந்துரைக்கிறேன்.

நடிகராக, பாடல் ஆசிரியராக, பாடகராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்று இருக்கிறார். வாழ்த்துக்கள் தனுஷ்!

முதல் படத்தின் முடிவே பலரின் தலையெழுத்தை தீர்மானிக்கிறது. அந்த வகையில் இயக்குனர் துரை செந்தில்குமாருக்கு சந்தோசமான விஷயம் தான்.  

இயக்குனர் செந்தில்குமாருக்கு இயக்குனராக முதல் படம், தயாரிப்பாளராக தனுஷ்க்கு முதல் படம்.

Directed by R. S. Durai Senthilkumar
Produced by Dhanush
Written by R. S. Durai Senthilkumar
Screenplay by R. S. Durai Senthilkumar
Story by R. S. Durai Senthilkumar
Starring Sivakarthikeyan, Priya Anand, Nandita
Music by Anirudh Ravichander
Cinematography Velraj
Editing by Kishore Te.
Studio Wunderbar Films
Distributed by Vendhar Movies
Release date(s) 1 May 2013
Running time 129 minutes
Country India
Language Tamil

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

10 COMMENTS

  1. இது ரெண்டாவது படம் பாஸ். ஏற்கனவே சோலாவாக மனம் கொத்தி பறவையில் நடித்திருக்கிறார்.

    நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

  2. படம் நல்லாருக்கா கிரி. அப்ப சரி படம் பார்க்க தயாராகிறேன்

    பிரியா ஆனந்த் இங்க்லீஷ் விங்க்ளிஷ் படத்தில் வந்தவர் தானே
    கொசுறு செய்திகளில் இந்த பதிவில் முழுக்க சினிமா பற்றி எழுதியுள்ளீர்கள். இது நல்லாருக்கு.ஓகே அடுத்து மூன்று பேர் மூன்று காதல் படம் விமர்சனம் எழுதுவீர்கள் என்று நினைக்கிறேன்

  3. ஒரு படம் விடறதில்ல போல கிரி…
    விமர்சனம் நல்லா இருக்கு..
    பெயரை முன்னிறுத்தி ஒரு படம்..good attempt
    எதிர் நீச்சல் என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்று தான் புரியவில்லை;)

  4. // அனிருத் “3″ படத்தோடு காணாமல் போய் விடுவாரோ என்று நினைத்தேன்… திறமையுள்ள ஆள் தான். //

    அனிருத் குடும்பத்திற்கு கொஞ்சம் சங்கீத ஞானம் உண்டு. அனிருத்தின் அத்தை “டிக் டிக் டிக்” “அன்புள்ள ரஜினிகாந்த்” “வள்ளி” போன்ற படங்களில் நல்ல பாடல்களை பாடியுள்ளார். யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா கிரி?

    கிரிராசு – கிரிராஜ் – கிரி – இது உங்க கதையா

    இது என் கதை;
    கார்த்திக் – அம்மா வைத்த பெயர் – official ஆகவும் இதுதான்
    காத்தவராயன் – அப்பா வைத்த பெயர், கார்த்திக் என்ற பெயரை இது அப்பா உச்சரித்து கேட்டதில்லை; அப்பாவுக்கு என்றும் நான் காத்தவராயன்.
    எனக்கென்னமோ கார்த்திக்கை விட காத்தவராயன் பெயரில் அதிக ஆர்வம்.

    இந்த மாதிரி பெயர் குழப்பத்திலும் சுவாரசியம் உண்டு.

  5. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @சரவணன் 🙂

    @அகிலா என்னையும் திரைப்படங்களையும் பிரிக்க முடியாது :-). ஒரே நாளில் சலிக்காமல் 5 படம் எல்லாம் பார்த்து இருக்கிறேன். திரையரங்கில் நான்கு காட்சிகளும் பார்த்து இருக்கிறேன்.

    @காத்தவராயன் இது உங்களுடைய புனைப் பெயர் என்று நினைத்தேன் :-).

    கண்டுபிடிக்க சிரமமாக இருக்காது.. காரணம் பாடியது இது போன்ற சில பாடல்கள் தான் 🙂

  6. நல்ல படம் எனக்கு இதுவரைக்கும் நேரம் கிடைக்கல சிவ கார்த்திகேயனுக்காவது ஒரு முறை எப்படியாவது தியேட்டருக்கு போய் பாக்கனும்னு முடிவு பண்ணி இருக்கேன்.

  7. ஹாய் கிரி, என்னோட பெயரும் உங்களுக்கு தெரிந்ததே.. இந்த படத்தில் வருவது போல் பல முறை என் பெயரால் அடி வங்கி, நானும் அதே reaction கொடுத்து all flash back of my life … நான் என்னையே படத்தில் பார்த்த மாதிரி இருந்தது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here