காமன்வெல்த் வெற்றி | கில்லி சிலி

11
காமன்வெல்த்

துவக்கத்தில் பல சர்ச்சைகளைப் பெற்று இருந்தாலும் காமன்வெல்த் துவக்க நிகழ்ச்சிகளில் தொடங்கி அனைவரையும் வாய் பிளக்க வைத்து முடியும் வரை சிறப்பாகப் போட்டிகளை நடத்தி இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றி விட்டார்கள். Image Credit

இவ்வளவு சிறப்பாக எந்த ஒரு பெரிய குறையும் கூற முடியாதபடி போட்டிகளை நடத்தியது பலருக்கு மிக மிக வியப்பு!

காமன்வெல்த்

என்ன நடக்கப்போகிறதோ என்று பயந்து கொண்டு இருந்தேன்! இந்த வெள்ளைக்காரனுக சும்மாவே இந்தியாவை நக்கலடிப்பாணுக…

வெறும் வாயையே மெல்கிறவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரி அது சரியில்லை இது சரியில்லை என்று அனைவரும் படத்துடன் போட்டு நாறடித்து ஒட்டுமொத்தமாக டேமேஜ் செய்து விட்டார்கள்.

பல நாடுகள் வருவதற்கே யோசித்துக் கொண்டு இருந்தன.

கடைசியில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் போட்டியைச் சிறப்பாக நடத்தியதோடு இல்லாமல் பதக்கங்களையும் குவித்து மகிழ்ச்சியில் அனைவரையும் திக்குமுக்காட வைத்து விட்டார்கள்.

ஊடகங்களுக்கு கவனிப்பு

ஒரு சிலர் ஊடங்கங்களுக்குச் சரியான “கவனிப்பு” இல்லாததால் தான் இதைப்போலப் பிரச்சனைகள் பூதாகரமாக எழுப்பப்பட்டன என்று கூறுகிறார்கள்.

அதற்குத் தகுந்த மாதிரி பாலம் இடிந்து விழுந்ததும் கூரை பேத்துக்கொண்டதும் பலரின் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்தன.

இவை அல்லாமல் இவர்கள் செய்த ஊழலே பலரின் கோபத்தைக் கண்டபடி கிளறி விட்டுவிட்டது.

பணத்தையும் சாப்பிட்டு விட்டு வேலையும் செய்யவில்லை என்றதும் பலர் வெறுப்பின் உச்சிக்கே சென்று விட்டார்கள்.

அதற்கு முன் இருவரை தீவிரவாதிகள் சுட்டுவிடப் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆனது.

இத்தனை பிரச்சனைகளோடு பலரும் பயத்தில் பார்த்துக்கொண்டிருந்த போட்டிகள் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்து முடிந்தது ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விசயமாக இருக்கும்.

இரண்டாவது இடம்

இதுவரை காமன் வெல்த் போட்டிகளில் நான்காவது இடத்தையே பிடித்து இருந்த இந்தியா முதல் முறையாகப் பரபரப்பான கடைசி நேரப்போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.

அதோடு 101 பதக்கங்களும் பெற்று புதிய சாதனை (நம்ம அளவிற்கு) பெற்று நம் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது.

மயிரிழையில் இங்கிலாந்து இரண்டாவது இடத்தைத் தவற விட்டது.

நம் நாட்டின் வீரர்கள் பெரும்பாலும் துப்பாக்கி சுடுவதிலும், வில்வித்தையிலும் மற்றும் மல்யுத்த போட்டிகளிலும் அதிகளவில் தங்க பதக்கங்களை வெற்றி பெற்றார்கள்.

தடகளப்போட்டியில் நம்மவர்கள் வழக்கம் போல ஜொலிக்கவில்லை என்றாலும் இந்த முறை சிறப்பாகவே செயல்பட்டு நம்முடைய நம்பிக்கையை அடுத்துவரும் தடகளப்போட்டியில் அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

ஜிம்னாஸ்டிக் ல் எல்லாம் வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

அசிங்கப்பட்ட BBC

BBC உட்பட இந்தியாவை நொக்கி எடுத்த பல ஊடகங்களுக்குச் சப்பென்று போய் இருக்கும்.

இந்தியா சொதப்பி வைக்கப்போகிறது மானத்தை வாங்கிவிடலாம் என்று காத்து இருந்தவர்களுக்குப் பணம் கொடுக்காமலே பல்பு கொடுத்து விட்டார்கள்.

ஊடகங்கள் கிளப்பிய பீதியில் தான் போட்டி கமிட்டியினர் பயந்து போய் இவர்கள் சுட்டிக்காட்டிய அனைத்து குறைகளையும் அசுர பலத்தை (இராணுவம் உட்பட) பயன்படுத்தி வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள்.

இதனால் அவர்கள் முகத்தில் கரியை பூசிய மாதிரியும் ஆச்சு நம்ம வேலை ஒழுங்கா நடந்த மாதிரியும் ஆச்சு!

அரசு இயந்திரம்

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அரசு நினைத்தால் எப்படிப்பட்ட நிலையையும் எந்த வித நெருக்கடியையும் திறமையாகக் கையாண்டால் பிரச்னையை எளிதாக முடிக்கலாம் என்று அறிய முடிகிறது.

நம்மவர்கள் கடந்த பல வருடங்களாகச் செய்த வேலையை விடப் போட்டி நடப்பதற்குக் கொஞ்ச நாள் முன்பு சர்ச்சையாகி அதன் பிறகு செய்த அசுரப் பணியே பெரிதாகப்படுகிறது.

ஊடகங்களே பல பிரச்சனைகளைப் பூதாகரமாக்கினாலும் அவையே இந்தக் காமன் வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடைபெற துணை புரிந்தன என்றால் அது மிகையில்லை.

போட்டிகள் முடிந்து விட்டாலும் கல்மாடி குழு செய்த ஊழல்களை விசாரிக்கும் வேலை துவங்கி விட்டது. அப்படியே இவங்க விசாரிச்சுட்டாலும்…

கில்லியான சிலி

கனிமம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 33 சுரங்கப் பணியாளர்கள் ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று மண்சரிந்து மொத்தமாக மூடி உள்ளே 700 மீட்டர்!! ஆழத்தில் மாட்டிக்கொண்டார்கள்.

இவர்கள் அனைவரும் இறந்து விட்டதாகவே முடிவு கட்டியிருந்த வேளையில். அந்த நாட்டின் அதிபர் Sebastian Pinera பணியாளர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக என் உள்ளுணர்வு கூறுகிறது.

எனவே, இன்னும் தேடிப்பாருங்கள் என்று கூறியதை அடுத்து நம்பிக்கையுடன் ஒவ்வொரு இடமாகச் சிறு குழாய்களை உள்ளே இறக்கி பார்த்து இருக்கிறார்கள்.

17 வது நாள் இவர்கள் இறக்கிய குழாயில் நாங்கள் 33 பெரும் உயிருடன் இருக்கிறோம் என்பதை அதில் எழுதி அனுப்பி இருக்கிறார்கள்.

அதன் பிறகு அனைவரும் அடைந்த உற்சாகத்தை எழுத்தில் கூற முடியாத அளவிற்கு அடைந்து அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று திட்டம் போட்டு 69 நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமாக அனைவரையும் காப்பாற்றி இருக்கிறார்கள்.

ஒருவாரம் என்றால் கூடப் பரவாயில்லை 17 நாட்கள் நம்பிக்கையுடன் முயற்சி செய்தார்கள் என்றால் உள்ளே இருந்தவர்கள் நம்பிக்கையைப் பாராட்டுவதா! அல்லது இவர்கள் கிடைப்பார்கள் என்று ஒவ்வொரு இடமாகத் தோண்டிக்கொண்டு இருந்தவர்களைப் பாராட்டுவதா!

எப்படி சமாளித்தார்கள்?!

இதன் பிறகு உள்ளே இருந்தவர்களுக்கு இந்தக்குழாயின் மூலமாக உணவு, தண்ணீர், குடும்பத்தினர் கடிதங்கள், மன உறுதிக்கான செய்திகள் என்று அனைத்தையும் அனுப்பி அவர்களின் நம்பிக்கையைத் தளர விடாமல் பார்த்து இருக்கிறார்கள்.

உள்ளே இருந்தவர்கள் செய்தியை அனுப்பிய போது அது கீழே விழுந்து இருந்தால் அல்லது மேலே உள்ளவர்களால் கவனிக்கப்படமால் போய் இருந்தால்! ஐயையோ நினைத்தாலே கலவரமாக உள்ளது.

உள்ளே மாட்டி இருந்தவர்கள் என்ன நினைத்துக் கொண்டு இருந்து இருப்பார்கள்? அவர்களது குடும்பத்தினர் எவ்வளவு மன உளைச்சல்களுக்கு ஆளாகி இருப்பார்கள்.

அங்கே (விளக்கு) வெளிச்சம் இருந்து இருக்குமா? இருட்டினுள் இருந்தார்களா?

இருட்டினுள் இருந்தார்கள் என்றால் இத்தனை நாள் (மாதம்) இருந்தால் எப்படிச் சமாளித்து இருப்பார்கள்? பிழைப்போமா மாட்டோமா என்று எதுவும் தெரியாமல் எப்படி இத்தனை நாள் ஓட்டியிருப்பார்கள்?

எப்படி அங்கு இருந்த கொஞ்ச உணவை அனைவரும் சண்டை இல்லாமல் பகிர்ந்து கொண்டார்கள்? எப்படி இரவு பகல் தெரியாமல் இருப்பது?

இதைப்போலப் பல எப்படிகள் உள்ளது.

இதை யோசித்தாலே களைப்பாக இருக்கிறது ஆனால், இவர்கள் இத்தனை (69) நாள் சமாளித்து உயிருடன் வெளியே வந்து இருக்கிறார்கள் என்றால் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

வெளியே வந்த பிறகு அவர்களது மனநிலை எப்படி இருந்து இருக்கும்? யப்பா! நினைத்தாலே தலை கிறுகிறுக்கிறது.

வெளிச்சத்தை ஒரு நாள் பார்க்கவில்லை என்றாலே நமக்குப் பைத்தியம் பிடித்தது போல் ஆகி விடும்.

சுரங்கத்தொழிலாளர்களுக்கு இது சாதாரணம் என்றாலும் இத்தனை நாள் இருந்ததை நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது.

எப்படி காப்பாற்றப்பட்டார்கள்?

இவர்களைக் காப்பாற்ற பெரிய அளவில் ஆழ்துளைகள் இட்டு அதன் வழியே இதற்காகவே சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட குழாய்கள் மூலம் ஒவ்வொருவராக வெளியே கொண்டு வந்து இருக்கிறார்கள்.

இதில் யார் முதலில் செல்வது என்ற விவாதத்தில் எந்தச் சிக்கலையும் மன உறுதியுடன் சமாளிக்கக்கூடிய Florencio Avalos என்பவரைத் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள் காரணம் மேலே செல்லும் போது மண் சரிவு ஏற்படலாம் வேறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் ஆகும்.

இவர் வெற்றிகரமாக மேலே வந்த பிறகு ஒவ்வொருவராக இதைப்போல வெளியே எடுத்து இருக்கிறார்கள்.

கடைசியாக வந்தவரும் மிகுந்த மனதைரியம் உடையவராகவும் மிகுந்த பொறுப்பு மிக்கவராகவும் இருந்து இருக்க வேண்டும்.

இந்த 33 பேரில் 19 வயதே ஆன ஒரு நபரும் அடங்குவார் இவருக்கு 4 மாத குழந்தை ஒன்றுள்ளது.

இவரால் இன்னும் சகஜமாகப் பேசமுடியாமல் அமைதியாகவே உள்ளார் என்று மருத்துவர் கூறுகிறார்.

தப்பிப் பிழைத்தவர்கள் பலர் தூங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள் எனவும் ஒருவரைத் தவிர அனைவரும் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும் கூறி இருக்கிறர்கள்.

அனைவரும் பழைய நிலைக்குத் திரும்பச் சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.

உயிர் பிழைத்த சுரங்கத்தொழிலாளர்களுக்கும் சிலி அரசாங்கத்திற்கும் உலகெங்கும் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சுரங்கத்தொழிலாளர்களுக்குப் பலரும் பரிசுகளைக் கொடுத்தவாறு உள்ளனர்.

அந்த நாட்டின் தொழிலதிபர் ஒவ்வொருவருக்கும் தலா 10000$ USD யும், ஆப்பிள் நிறுவனர் Steve Jobs எல்லோருக்கும் லேட்டஸ்ட் iPod ம் கொடுத்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஃபுட்பால் ரசிகர்கள் என்பதால் பெரிய ஃபுட்பால் போட்டியைப் பார்க்கும் வாய்ப்பும் கொடுத்து இருக்கிறார்கள்.

அனைவரும் வெளியே வந்த நிமிடம் காரின் ஹார்ன் சத்தத்தாலும் சர்ச்சின் மணி சத்தத்தாலும் சிலி நாடே மகிழ்ச்சியில் அதிர்ந்ததாம்.

நினைத்தாலே உடம்பெல்லாம் புல்லரிக்குதுப்பா! படங்கள் நன்றி mypaper.com.sg

கொசுறு

காமன்வெல்த் போட்டி ஹாக்கியில் இந்தியா ஆஸியிடம் தர்ம அடி வாங்கினாலும் கிரிக்கெட் ல் ஆஸியை இந்தியா டெஸ்ட் போட்டியில் 2-0 என்று பஜ்ஜி ஆக்கி விட்டது.

வசனம் பேசுன ரிக்கி.. பக்கி மாதிரி முழிச்சுட்டு இருக்காரு! 🙂 .

சச்சின் 200 அடித்து அவரது சாதனைகளையே அடித்து நொறுக்கிட்டு போயிட்டு இருக்காரு.

வாழ்த்துக்கள் சச்சின்.

நாளுக்கு நாள் சச்சின் மதிப்பு டாப் கியர்ல போயிட்டு இருக்கு!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

11 COMMENTS

  1. சச்சின் 200 அடித்து அவரது சாதனைகளையே அடித்து நொறுக்கிட்டு போயிட்டு இருக்காரு. வாழ்த்துக்கள் சச்சின். நாளுக்கு நாள் சச்சின் மதிப்பு டாப் கியர் ல போயிட்டு இருக்கு!

    …ஜெய் ஹோ!!!!!!!

  2. காமன் வெல்த் கேம்ஸ்: அய்யயோ, இப்ப அத நெனச்சா சிரிப்பாவும் ஒரு பக்கம் பெருமையாவும் இருக்கு. எவன நம்புறது எத நம்பக்கூடாதுன்னே தெரிய மாட்டேங்குது இப்பல்லாம். இவனுங்க விசாரனைங்கற பேர்ல அடிக்கபோற கூத்தைத்தான் இனிமேல் தாங்க முடியாது. எது எப்படியோ, காங்கிரஸ் அரசுக்கு இது மிகப்பெரிய வெற்றி. //அரசு நினைத்தால் எப்படிப்பட்ட நிலையையும் எந்த வித நெருக்கடியையும் திறமையாக கையாண்டால் பிரச்னையை எளிதாக முடிக்கலாம் என்று அறிய முடிகிறது// இதை நான் 100௦% வழி மொழிகிறேன்.

    சிலியில் சுரங்கத் தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டது மிகப்பெரிய செயல் கிரி… அந்த தொழிலாளர்களின் மன நிலையை அப்படியே சொல்லி இருக்கீங்க. அப்பப்பா. எனக்குத் தெரிஞ்சு இதுதான் உலகத்துல ஒருத்தனுக்கு நேரக்கூடிய மிகப்பெரிய கொடுமைன்னு நினைக்கிறேன். அவங்கள காப்பாத்திட்டதா செய்திகள்ல பாத்தப்ப அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு.

  3. “”””ஊடகங்களே பல பிரச்சனைகளை பூதாகரமாக்கினாலும் அவையே இந்த காமன் வெல்த் போட்டிகளை சிறப்பாக நடைபெற துணை புரிந்தன என்றால் அது மிகையில்லை….”””””

    கிரி நீங்க சொன்னதுபோல கெட்டதுலயே ஒரு நல்ல விசயம், இந்தியாவோட மானத்த காப்பாத்திட்டாங்க…. நல்ல மனதோடு உழைத்த அனைவருக்கும் நன்றி.. பதக்கம் வென்ற கில்லிகளுக்கு வாழ்துக்கள்….

    Congrats To Sachein…..

    “””எப்படி சுரங்கப் பணியாளர்கள் காப்பாற்றப்பட்டார்கள்?”””

    தெளிவான விளக்கங்களுடன் பகிர்ந்ததற்க்கு நன்றி கிரி….நிச்சயமாக அவர்கள் உளவியல் ரீதியாக எதிர்கொண்ட பிரச்சினைகளை நினைக்கவே முடியவில்லை..
    Thanks To God..

  4. வணக்கம் கிரி சார். நலமா இருப்பீங்கன்னு நம்புறேன். எனது இணைய இணைப்பில் ஏதோ பிழையென நினைக்குறேன். உங்க பதிவுககு கருத்து போடும் போது கட் ஆகி விட்டது. நான் சொல்ல வந்த கருத்தையே முத்துகுமார் ஆர்.கே நண்பன் சொல்லியதால் அவற்றை வழிமொழிகிறேன். மற்றபடி தங்கள் எண்ணப்பதிவுகள் அனைத்தும் பாராட்டுக்குரியதாக உள்ளது. அசத்துங்க சார்.

  5. கிரி , இண்ட்லி இல் இந்த பதிவுக்கு எப்படி வோட் போடுவது…???

    தேடி தேடி பாக்குறேன் ஒன்னும் புரியல….. 🙁

  6. நல்ல பகிர்வு கிரி 🙂

    இந்தியா நினைத்தால் முடியாதது இல்லை என்று அனைவருக்குமே தெரியும், இந்த லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிந்தால் இன்னும் வேகமாக வளரும் நம் நாடு என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

    சுரங்கப் பணியாளர்கள் விசையம் உண்மையில் ஒரு உலக சாதனைதான், தன்னபிக்கைக்கு சிறந்த உதாரணம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    கபில் போல சச்சின் மீதும் பழிகள் விழுகின்றன, நல்ல வீரரை அவமதிப்பதே நம் மக்களுக்கு வழக்கமாகி விட்டது :-(.

    பகிர்வுக்கு நன்றி!.

  7. சுரங்க தொழிலாளர்களது மீட்பு நடவடிக்கை உண்மையில் மிகவும் மகிச்சியான விடயம். உள்ளுக்குள் இருந்த நாட்கள் தொழிலாளர்களுக்கு எப்படி மரணவேதனையாக இருந்திருக்குமென்பதை புரிந்துகொள்ள முடிகிறது, அதேபோல அவர்களது இப்போதைய மகிழ்ச்சியையும் புரிந்து கொள்ள முடிகிறது. சிலி அரசிற்கு பாரட்டுகள் என்று கூறுவது வெறும் வார்த்தைதான், உண்மையில் இது ஒரு வரலாற்று முக்கியமான நிகழ்வு.

    சச்சின் எப்போதும் சச்சின்தான், நோ றீபிலேஸ்மன்.

    காமன் வெல்த்திற்க்கு வாழ்த்துக்கள்

  8. அண்ணே !! காமன் வெல்த் ,ஸ்பெக்ட்ரம் கு சரியான போட்டி !!!! இப்போ பாருங்க எந்த காங்கிரஸ் காரனும் வாய தொறக்க மாட்டான் 🙂

  9. சித்ரா, முத்து, RK நண்பன், பிரவீன், சிங்கக்குட்டி, ஜீவதர்ஷன் மற்றும் ராஜ் வருகைக்கு நன்றி

    @முத்து நமக்கு தெரியாம பல விஷயங்கள் நடந்து இருக்கும்னு நினைக்கிறேன். இது எப்படியோ லைம் லைட்டுக்கு வந்துடுச்சு

    @R K நண்பன் எனக்கு ஓட்டு போட வழி தேடுற உங்களை நினைத்தா எனக்கு புல்லரிக்குது ஹி ஹி ஹி நன்றி. என்னோட போஸ்ட் லயே ஒட்டுப்பட்டை இருக்கு.. ஏற்கனவே நீங்க அதை பண்ணிட்டீங்க.. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    @பிரவின் உங்களின் தொடர்ச்சியான பாராட்டிற்கு நன்றி

    @சிங்கக்குட்டி நீங்க சொன்ன மாதிரி ஊழல் மட்டும் இல்லேன்னா இந்தியா பட்டைய கிளப்பும்.

  10. ” நாம் இந்த ஊடகங்களை கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும் இவர்கள் கிளப்பிய பீதியில் தான் போட்டி கமிட்டியினர் பயந்து போய் இவர்கள் சுட்டிக்காட்டிய அனைத்து குறைகளையும் அசுர பலத்தை (இராணுவம் உட்பட) பயன்படுத்தி இந்த அளவிற்கு வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள். இதனால் அவர்கள் முகத்தில் கரியை பூசிய மாதிரியும் ஆச்சு நம்ம வேலை ஒழுங்கா நடந்த மாதிரியும் ஆச்சு! ”
    இவை அனைத்தும் சரியே மீடியா சரியாக வேலை செய்தால்
    அரசியல் வாதிகளுக்கு ஒரு பயம் இருக்கும் நல்ல பதிவு
    உண்மையில் நல்ல வாய்ப்பு கிடைத்தால் அதை நாம் சரியாக பயன்படுத்த முடியும் என்பது இதன் மூலம் நிருபணம். – பாலா

  11. சிலியில் சுரங்கத் தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டது மிகப்பெரிய செயல் கிரி… அந்த தொழிலாளர்களின் மன நிலையை அப்படியே சொல்லி இருக்கீங்க. அப்பப்பா. எனக்குத் தெரிஞ்சு இதுதான் உலகத்துல ஒருத்தனுக்கு நேரக்கூடிய மிகப்பெரிய கொடுமைன்னு நினைக்கிறேன். அவங்கள காப்பாத்திட்டதா செய்திகள்ல பாத்தப்ப அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு. – bala

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!