இலங்கையை ஆக்கிரமிக்கும் சீனா | இனி என்ன நடக்கும்?!

12
இலங்கையை ஆக்கிரமிக்கும் சீனா

லங்கையை ஆக்கிரமிக்கும் சீனா சர்ச்சை தற்போது பரவலான பேச்சாக மாறியுள்ளது. Image Credit

இலங்கையை ஆக்கிரமிக்கும் சீனா

அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்த 2017 ம் ஆண்டுச் சீனா 1.12 பில்லியன் டாலர் பணத்தை இலங்கைக்கு கடனாகக் கொடுத்தது.

இலங்கையால் திரும்பச் செலுத்த முடியாததால், அம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சீனாக்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்து விட்டது.

225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 148 உறுப்பினர்களின் ஆதரவோடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொழும்பு போர்ட் சிட்டி என்ற பெயரில் 660 ஏக்கர் பரப்பளவில் நகரத்தைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நகரம் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல், சீன அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இலங்கை தலையிட முடியாது. இப்பகுதிக்குத் தனிப் பாஸ்போர்ட் என்று கூறப்படுவது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.

இந்நகரம் கன்னியாகுமரியிலிருந்து 400+ கிமீ தொலைவில் உள்ளது.

இதே போலக் காற்றாலை அமைக்கப்படும் இடம் ராமேஸ்வரத்திலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது.

மேற்கூறியவை செய்திகளிலிருந்து திரட்டியவை.

சில தகவல்கள் தவறாக இருக்கலாம் ஆனால், துறைமுகத்தை 99 வருடங்களுக்குச் சீனா குத்தகைக்கு எடுத்தது உண்மை.

இலங்கைக்கு என்ன பிரச்சனை?

சீனாவின் திருட்டுத் தனத்தை இலங்கை தெரிந்தும் எச்சரிக்கையாகாமல் போனது, இலங்கை & இந்தியா இரு நாடுகளின் துரதிர்ஷ்டம்.

காரணம், சீனாவின் திட்டமே கடனைக் கொடுத்து நாட்டின் கட்டுப்பாடை எடுத்துக்கொள்வது தான்.

இதே நிலை சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்கனவே நடந்து விட்டது, தற்போது இலங்கை இணைந்துள்ளது, விரைவில் பாகிஸ்தான் இணையும்.

எந்த உதவிக்குப் பின்பும் சுயநலம் உள்ளது. எதுவும் இலவசமாகக் கிடைக்காது.

ஏற்கனவே, சீனத் தொழிலாளர்கள் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து விட்டதாகவும், சில இடங்களில் பெயர் பலகைகளில் சீன மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை உள்ளது.

தற்போது இலங்கை போன்ற குட்டி நாட்டில் இது போன்ற ஆக்கிரமிப்பு மிகப்பெரிய அச்சுறுத்தல். நாளை என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம்!

என்ன வேண்டும் என்றாலும் என்றால்?!

இலங்கையையே தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள நினைக்கலாம். 100% வாய்ப்புள்ளது. சீனாக்கு இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு.

சீனாவில் உள்ள ஒரு பெரிய நகரின் பரப்பளவு தான் இலங்கை உள்ளது. சிறு படை போதும், எதுவும் பேச முடியாது.

நியாயம் தர்மம் எல்லாம் சீனர்கள் பார்க்க மாட்டார்கள்.

இன்று ஒரு 660 ஏக்கர் இடத்தை ஆக்கிரமிக்கத் தெரிந்தவர்களுக்கு மீதி இடத்தைக் கைப்பற்றுவது பெரிய விஷயமா? அதுவும் இலங்கை போன்ற சிறிய நாட்டில்.

இதை ஏன் சீனா செய்கிறது?

இந்திய பெருங்கடல், ஆசியா மற்றும் இப்பகுதியில் சீனா ராஜாவாக இருக்க விரும்புகிறது. இந்திய பெருங்கடல் வர்த்தகம், வழித்தடங்களைக் கைப்பற்ற நினைக்கிறது.

இவை அனைத்தையும் விட ஆசியப்பகுதியில் சீனாக்கு அடுத்த பெரிய நாடான இந்தியாக்கு செக் வைக்க நினைக்கிறது, கிட்டத்தட்ட செய்து விட்டது.

தற்போது இலங்கை உள்ள அதே கடன் நிலையில் தான் பாகிஸ்தான் உள்ளது. விரைவில் அங்கும் இந்திய எல்லைப்பகுதிகளில் இதுபோலச் சுற்றி வளைக்கும்.

ஏற்கனவே, கன்னியாகுமரி வந்து விட்டது, இந்தப் பக்கம் அருணாச்சல் பிரதேசம், நேபாள். பிரம்மபுத்திராக்குச் சண்டை போட்டுக்கொண்டுள்ளது.

இன்னொரு பக்கம் பாகிஸ்தான்.

இமயமலை பகுதியில் சீனா சாலை போட்டுக்கொண்டு உள்ளது, இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வந்தது, தற்போதைய நிலை தெரியவில்லை.

இச்சாலை சீனா பாகிஸ்தான் தரைவழி போக்குவரத்து என்று கூறப்பட்டதாக நினைவு.

எனவே, இது போல இந்தியாவை அனைத்து பக்கங்களிலும் தனது பணத்தினால் சீனா சுற்றி வளைத்து விட்டது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்ய நினைத்ததுக்கு இந்தியப் படைகள் பதிலடி கொடுத்ததால், எதுவும் செய்ய முடியாமல் பின்வாங்கியது.

இலங்கையும் துணைத் தீவுகளும்

சொல்லப்போனால் இந்தியாக்கு இலங்கை மிகப்பெரிய செக்! இலங்கை மிக முக்கியமான இடத்தில் உள்ளது.

எதிர்காலத்தில் இலங்கையில் துறைமுகம் போல ஒரு படைத்தளத்தை உருவாக்கினால் தென் மாநிலங்களை எளிதாக அடிக்கலாம்.

தற்போது நடக்கும் லட்சத்தீவு சர்ச்சைகள் இதையொட்டிய மாற்றங்களா என்பது தெரியவில்லை.

ஏனென்றால், இலங்கையைத் தாண்டி கேரளா கோவா பக்கம் வந்தால், இத்தீவு மட்டுமே குறிப்பிடத்தக்க இடமாக உள்ளது.

எனவே, இந்திய அரசு இதைத் தன் முழுக்கட்டுப்பாட்டில் எடுக்க விரும்பலாம்.

லட்சத்தீவுகள் புள்ளிகள் தான் ஆனால், பரிமாற்றம் நடக்கக்கூடிய சாத்திய கூறுகளுள்ள இடம். இந்திய வரைபடத்தைப் பார்த்தால் புரியும்.

அந்தமான் தீவுகளிலும் லட்சத்தீவு போல இனி மாற்றங்கள் நடைபெறலாம்.

இந்தியா

இப்பிரச்சனை வரும் என்று தான் விமர்சனங்கள் இருந்தாலும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி வந்தது.

ஜப்பானும் இந்தியாவும் இலங்கையில் கூட்டாக அமைக்க இருந்த துறைமுகத்தைச் சீனா தடுத்து விட்டது.

தற்போதைய அறிவிப்பு நிச்சயமாக ஆபத்து தான். குறிப்பாகப் போர் என்று வந்தால், அனைத்து பக்கங்களிலும் இருந்தும் சீனா தாக்க முடியும்.

தற்போதைய உலக மயமாக்கலில் போர் வர வாய்ப்பில்லை என்றாலும், இந்தியாவை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கண்காணிக்க முடியும்.

இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில் இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்ட கச்சத்தீவையாவது தற்போது மீட்க வேண்டும்.

இல்லையென்றால், அங்கும் இடத்தைக் கைப்பற்றி எதையாவது ஆரம்பித்துச் சிக்கலைக் கொடுக்கும்.

இலங்கை பிரச்சனை கைமீறி போய் விட்டது காரணம், வரும் காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை கட்டுப்பாட்டைச் சீனா எடுத்துக்கொள்ளும்.

இச்சிக்கலிலிருந்து இனி இலங்கை மீளவே முடியாது, மக்கள் போராட்டம் வெடித்தால் மட்டுமே வாய்ப்பு ஆனால், அதையும் சீனா அடக்கி விடலாம்.

எதிர்காலத்தில் இது தொடரும் போது இலங்கை, சீனாவின் காலனி நாடாக மாறி விடும். எதையும் தீர்மானிப்பது சீனாவாக இருக்கும்.

இலங்கை நிச்சயம் பெரும் முன்னேற்றம் அடையும், வளர்ச்சி பெறும் ஆனால், அடிமையாக இருக்கும் சூழ்நிலையாகும்.

இந்தியா இப்பிரச்சனையை எப்படிக் கையாளப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி!

தமிழகம்

தற்போது இந்தியாக்கு மிக முக்கியமான மாநிலமாகத் தமிழகம் மாறியுள்ளது. பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியுள்ளது.

பொதுவாகத் தமிழகத்தில் உள்ள போராளிகள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் தேசிய உணர்வு கொண்டவர்கள் அல்ல.

இந்தியா எக்கேடு கெட்டாலும், சீனாக்கு ஆதரவாகப் பேசக்கூடிய சைக்கோக்கள்.

தற்போதே இந்தியாவை ஒன்றியம் என்று உளறிக்கொண்டுள்ளார்கள். இவர்களை வைத்துக்கொண்டு இப்பிரச்சினைகளைக் கையாள்வது மிகப்பெரிய சவால்.

நல்லது நடக்கட்டும் என்று இலங்கைக்கும், இந்தியாக்கும் சேர்த்து வேண்டிக்கொள்வோம்.

நீதி : தகுதிக்கு மீறிக் கடன் வாங்காதீர்கள். 

இக்காணொளி 2019 ல் இருந்து ஃபேஸ்புக் உட்பட பல்வேறு இடங்களில் வெளிவந்தது. தற்போது இதில் கூறியுள்ளது அனைத்தும் நடந்து வருகிறது.

தொடர்புடைய கட்டுரை

இந்தியாவை கிண்டலடிக்கும் சைக்கோ இந்தியர்கள்

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

12 COMMENTS

  1. வணக்கம்,
    வழமையாக அவ்வப்போது கருத்திடுவதுண்டு, நீங்கள் பதில் இடுவதில்லை அதனால் கருத்தக்கள் படிப்பதில்லை என நினைத்து விட்டு விடுவேன்.
    ஆனால் இது ஈழம் சம்மந்தப்பட்டு வருவதால் ஒரு ஈழவாசி என்ற வகையில் பதில் அளிக்க வேண்டிய கடமை இருக்கின்றது. அதனால் அளிக்கின்றேன்.

    இறுதிப்போரில் எல்லா நாடுகளும் இலங்கைக்கு பெரிய அளவில் உதவினாலும் அதன் தொடர்ச்சியை பேணியதில் சீனா மிக முக்கியமான நாடாகும். இலங்கையில் நடந்த பெரும் போரில் இந்தியா செய்த தேவையற்ற ஆணி புடங்கல் தான் அவர்களுக்கு தலையிடியை கொடுத்துள்ளது. தனது அண்டைய நாட்டில் உள்நாட்டு குழப்பம் இருக்க வேண்டும் என்ற நோக்கில் 80 களில் தமிழ் இளைஞர்கள் பலரை இந்திய அழைத்து ஆயுதப்பயிற்சியைக் கொடுத்தது. அதில் விடுதலைப்புலிகளின் காவலராக எம்ஜிஆரும் மற்றைய சகோதர இயக்கங்களின் காவலராக கருணாநிதியும் இருந்தார்கள்.

    உதாரணத்திற்கு புளொட் இயக்கத்தைக் கொண்டு மாலைதீவை கைப்பற்ற வைத்து , இந்திய இறங்கி அவர்களை கைது செய்து பின்னர் இலங்கையுடன் இருக்கும் கைதிப்பரிமாற்ற சட்டத்தின்படி இலங்கைக்கு மாற்றி இங்கு வைத்து அவர்களை விடுதலை செய்தது.

    சகோதர இயக்கங்களின் போர் அதிகரிக்க இந்திய இராணுவத்தை சமாதானப்படை என்ற பெயரில் இங்கு அனுப்பியது அதே காலப்பகுதியில் சிங்கள பகுதியில் ஜேவிபி தலை எடுத்ததால் அதை அடக்க சிங்கள இராணுவம் அங்கு செலவளிக்க அந்த ஆட்பற்றாக்குறையை இந்தியா பயன்படுத்தியது.

    ஆனால் இங்கு வந்த இராணுவம் 12,000 க்கு மேற்பட்ட மக்களை கொன்றதுடன் , 3000 க்கு மேற்பட்ட பெண்களை பாலியல்வன்கொடுமையும் செய்தது. இந்திய இராணுவத்துக்கு இசைந்த கொடுக்காத விடுதலைப்புலிகள் தனியாக தலை எடுத்தார்கள். அன்று அன்று இந்தியா புள்ளி போட்டு ஆரம்பித்த திட்டம் 2009 இல் முடிவுக்கு வந்தது. ஆனால் அதற்காக இலங்கை அரசாங்கம் எல்லா நாட்டிடமும் கடன் வாங்க வேண்டியிருந்தது.

    ஏற்கனவே இலங்கை ஒரு கேந்திர நிலையமான இடமாகும். அதை விட இந்தியாவின் ஒரு துணைக்கண்டம் போன்றது. அதன் மேல் இந்தியா கைக்கொண்ட அணுகுமுறை மிகத் தவறானதாகும்.

    கச்சதீவு விடயத்தில் இந்திராகாந்தி இலங்கையிடம் கொடுத்த காரணம். இலங்கையின் வடபகுதி மழமையாக தமிழர் பகுதியாகும், இந்தியாவின் தென்பகுதியும் தமிழர் பகுதியாகும் இரண்டுக்குமான உறவு நெருக்கம் அதிகரித்தால் இரு மத்திய அரசாங்கத்திற்கும் தலை இடி அதிகரிக்கும் என்பதேயாகும். அதன் ஒரு அங்கமாகத் தான் இலங்கை அரசு தமிழக மீனவரை சுடுவதும் இந்திய மத்திய அரசு கண்டும் காணாமல் விடுவதுமாகும்.

    குறிப்பு – காற்றாலைக்கு இராமேஸ்வரத்துக்கும் உள்ள இடைவெளி சரியானதாகும், ஆனால் சைனாவின் துறைமுகத்துக்கும் கன்னியாகுமரிக்குமான அளவில் பெரு வித்தியாசம் வரக்கூடும். ஏன் என்றால் எமக்கே இங்கிருந்த செல்ல 300 மைகள் ஆவது ஆகும்.

  2. @மதிசுதா

    “வழமையாக அவ்வப்போது கருத்திடுவதுண்டு, நீங்கள் பதில் இடுவதில்லை அதனால் கருத்தக்கள் படிப்பதில்லை என நினைத்து விட்டு விடுவேன்.”

    மதிசுதா இது தவறானது.

    இதற்கு முன்பும் ஒரு முறை இதே போல குறிப்பிட்டு இருந்தீர்கள். எந்த கட்டுரையில் நான் பதில் அளிக்கவில்லை என்று கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லை.

    திரும்ப அதே கருத்தை கூறியுள்ளீர்கள்.

    இதுவரை நான் யாருக்கும் பதில் அளிக்காமல் இருந்ததில்லை, பதில் அளிப்பதில் தாமதம் இருக்கலாம் ஆனால், நிச்சயம் கேள்விகளுக்கு பதில் அளித்து இருப்பேன்.

    10 வருடங்களுக்கு மேலாக படிக்கிறீர்கள் என்று நினைக்கிறன். நீங்களே இவ்வாறு கூறுவது வருத்தம் அளிக்கிறது.

    இப்பிரச்சனையை இதோடு முடிக்க விரும்புகிறேன். எந்த கட்டுரையில் நான் பதில் அளிக்கவில்லை என்பதை இங்கே நீங்கள் கட்டாயம் சுட்டியோடு பகிரவும்.

    —–

    இந்தியா அமைதிப்படையை அனுப்பி செய்த மோசமான நிகழ்வுகள், இந்தியர்களாகிய எங்களுக்கும் ஆறா வடுவே. உங்களுடைய வலியைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    மற்றபடி நீங்கள் கூறியுள்ள மற்ற தகவல்கள் பற்றி எனக்குத் தெரியாது. தெரியாத விஷயத்தில் கருத்து கூறுவதில்லை.

    தற்போது நடந்து வருவது அனைவரும் அறிந்தது. எனவே, இது பற்றி எனக்குத் தெரிந்ததை இக்கட்டுரையில் விளக்கியுள்ளேன்.

    உங்களோட கூடுதல் தகவல்களுக்கு நன்றி.

  3. கிரி, உலகில் தற்போது நடந்து கொண்டிருக்கின்ற பல நிகழ்வுகளுக்குகான காரணம் தெரியவில்லை.. ஆனால் சூழ்நிலையை பார்க்கும் போது வல்லரசு நாடுகள் தங்களை மேலும் வல்லரசாக வேண்டிய முயற்சிகளையும், பின் தங்கிய நாடுகள் முன்னேற்றத்தை தடுத்து காலத்திற்கும் தங்களுக்கு கீழ் இருக்க வேண்டிய வண்ணம் கட்டமைப்பை அமைத்து வருகிறது.. அமைதியான பூமியை ஒரு சில மனிதர்கள் தன் சுயநலத்திற்காக கூறு போட்டு எல்லோருடைய நிம்மதியையும் கெடுத்து வருகிறார்கள் தலைவன் என்ற ரீதியில் .. சமீபத்தில் படித்த மிகவும் சிந்திக்க வைத்த வரிகள் : (ஓடி வருகின்றன மீன்கள், நேற்று பொரி போட்ட கையில் இன்று தூண்டில்….) பகிர்வுக்கு நன்றி கிரி..

  4. “தற்போதே இந்தியாவை ஒன்றியம் என்று உளறிக்கொண்டுள்ளார்கள்”. இது ஒன்றும் உளறல் இல்லையே. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி சரியான ஒன்று தான்

  5. @யாசின் வல்லரசு நாடுகள் அனைத்துமே இதை தான் செய்கின்றன ஆனால், சீனா செய்வது அடாவடித்தனமானது.

    “ஓடி வருகின்றன மீன்கள், நேற்று பொரி போட்ட கையில் இன்று தூண்டில்”

    எப்படி இதையெல்லாம் நினைவு வைத்துக்குறீங்க யாசின்? 🙂 நான் படிப்பேன் ஆனால், நினைவில் இருப்பது குறைவு.

    @Ambrose நலமா? 🙂

    “இது ஒன்றும் உளறல் இல்லையே. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி சரியான ஒன்று தான்”

    இந்திய அரசியல் அமைப்பை மத்திய அரசு, நடுவண் அரசு என்றும் கூறப்படுகிறது. மாநிலங்கள், மாநில அரசு என்று கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் இந்திய / மத்திய அரசை ஒன்றியம் என்று கூறுவது தவறானது என்று நான் நிச்சயம் விளக்குகிறேன்.

    அதற்கு முன் ‘ஒன்றியம்’ என்பதற்கு உங்கள் விளக்கத்தைக் கொடுங்கள்.

  6. ““தற்போதே இந்தியாவை ஒன்றியம் என்று உளறிக்கொண்டுள்ளார்கள்”. இது ஒன்றும் உளறல் இல்லையே. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி சரியான ஒன்று தான்”

    இந்த குழப்பம் அமெரிக்கா மாகாணங்களுடன் தொடர்பு படுத்தி பார்ப்பதினால் வருவது. இந்த சுட்டி சில புரிதல்கள் தரும் என நினைக்கிறேன்.

    https://www.quora.com/Is-the-concept-of-states-in-United-States-of-America-the-same-as-that-of-states-in-India-What-are-the-major-differences-in-the-US-and-Indian-version-of-states

  7. நலம் கிரி. நன்றி.
    ஒன்றியம் என்றால் அதற்கு யூனியன் என்று பொருள் அவ்வளவுதான். இந்தியா என்பது ‘யூனியன் ஆப் ஸ்டேட்ஸ்’என அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். ஆகவே யூனியன் கவர்மெண்ட் என்பதை ஒன்றிய அரசு என சொல்கிறார்கள். இதில், ஏதும் சொல் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

  8. @மணிகண்டன் சரியானது. இதில் உள்ள அதிகாரத்தை வரைபடம் தெளிவாக புரியும்படி விளக்குகிறது.

  9. @Ambrose

    சொற்குற்றம் இருப்பதாக நானும் கருதவில்லை, உயர்நீதிமன்றம் / உச்சநீதிமன்றம் கூட இது பற்றி குறிப்பிட்டதாக நினைவு.

    இங்கே பெயரை அப்படியே தமிழாக்கம் செய்வதில் பிரச்சனையில்லை ஆனால், அதன் பிறகு அதனுடைய உட்கருத்தில், எண்ணங்களில் தான் பிரச்சனை.

    முதல்வரானவுடன் ஸ்டாலின் இச்சர்ச்சையை அமித்ஷாக்கு பதில் கொடுத்து ஆரம்பித்து வைத்தார்.

    இதன் பிறகு அதை PTR தியாகராஜன் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றார், தற்போது திமுகவை ஆதரிப்பவர்கள் பெரும்பாலானோர் இதை ஆதரித்து வருகிறார்கள்.

    என்ன பிரச்சனை?

    மத்திய மாநில அரசுகள் ஒன்று. மத்திய அரசுக்கு என்று வாக்கு வங்கி இல்லை, மாநிலங்களை ஒன்றிணைப்பதால் ஒன்றிய அரசு என்று தியாகராஜன் கூறுகிறார்.

    ஒன்றியம் / யூனியன் என்பது பல்வேறு இடங்களில் பல்வேறு அர்த்தங்களில் வருகிறது. மத்திய அரசு / நடுவண் அரசு என்பது போல தெளிவான அர்த்தத்தை தரவில்லை.

    இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றல்ல, ஒரே அதிகாரம் அல்ல.

    மத்திய அரசு நினைத்தால் மாநில அரசை கலைக்க முடியும் மாற்றங்களை செய்ய முடியும்.

    இந்தியா வாக்காளர் என்று உள்ளதே தவிர மாநிலங்களுக்கான வாக்காளர்கள் அல்ல. நீங்கள் இந்திய வாக்காளர் என்று கூற முடியுமே தவிர தமிழ்நாட்டு வாக்காளர் என்று கூற முடியாது.

    கணக்குகளுக்காக கூறலாமே தவிர இந்திய வாக்காளர் என்பதே சரி.

    இந்திய வாக்காளர் என்பதே இந்திய / மத்திய அரசு என்ற அரசியலமைப்பில் இருந்து வருவது தான்.

    மாநிலங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும், மத்திய அரசை அணுகி தான் தீர்க்க முடியுமே தவிர, அனைவரும் ஒன்று என்று நாமாகவே தீர்த்துக்கொள்ள முடியாது.

    மேலே மணிகண்டன் பகிர்ந்துள்ள சுட்டியில் (Nikhil Srivastava) அதிகாரம் எவ்வாறு உள்ளது என்பது எளிமையாக கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் காலனிகள் இணைந்து அமெரிக்கா உருவாகியது. அங்கே மாநிலங்களுக்கே அதிக அதிகாரம். அவர்கள் நினைத்தால், விலகிக்கொள்ளலாம்

    தங்களுக்கேற்ப சட்டங்களை தனியாக மாற்றியமைக்கலாம்.

    இந்தியாவில் இருப்பது காலனிகள் அல்ல, மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்கள். இந்திய அரசியலமைப்பு சட்டம் மத்திய அரசுக்கே அதிக அதிகாரத்தை வழங்கியுள்ளது.

    தனிப்பட்ட மாநிலத்துக்கு என்று எந்த அதிகாரமும் இல்லை, இன்னொரு வகையில் கூறுவதென்றால், மாநிலங்கள் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டவை.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மத்திய அரசு நினைத்தால், ஒரு மாநிலத்தை யூனியன் ஆக்க முடியும், யூனியனை மாநில அந்தஸ்துக்கு உயர்த்த முடியும்.

    இது சரியா தவறா என்பது வேறு விஷயம் ஆனால் அதிகாரத்தை பற்றி கூறுகிறேன்.

    இந்திய அரசை ஒன்றிய அரசு என்றால், தமிழ்நாடு என்ற மாநிலத்தை என்னெவென்று அழைப்பீர்கள்? மாவட்டத்தை எப்படி அழைப்பீர்கள்?

    இவர்களுக்கு பெயர் பிரச்சனையில்லை, தேவையற்ற பிரிவினைவாதத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள்.

    Dravidan stock என்று கூறுகிறார் ஸ்டாலின். என்ன பெரிய Dravidan stock?!

    கன்னடத்துக்காரன் நமக்கு தண்ணீர் தர மாட்டேங்குறான், குறுக்கே அணை கட்டுவேன் என்கிறான். திராவிடன் தானே நம்மால் என்ன பண்ண முடிந்தது?

    இங்கேயும் மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் தான் உதவிக்கு வந்தாக வேண்டும். ஆந்திரா தண்ணீர் தரவில்லையென்றால், சென்னை நாறிவிடும்.

    தமிழ்நாடு, சுயாட்சி என்று பெருமைகொள்ளலாம் ஆனால், நடைமுறை எதார்த்தம் அவ்வாறு இல்லை.

    ஒவ்வொரு மாநிலமும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது. மாநிலங்கள் மத்திய அரசை சார்ந்துள்ளன.

    தமிழ்நாடு இல்லையென்றாலும் மத்திய அரசு மற்ற மாநிலங்களுடன் தொடர்ந்து இயங்க முடியும் ஆனால், மத்திய அரசு இல்லையென்றால் மாநில அரசால் இயங்க முடியாது காரணம், மற்றவர்களை அதன் தேவைக்கு சார்ந்துள்ளது.

    தமிழ்நாடு அதிக வரி கொடுக்கிறது எனவே தமிழ்நாட்டுக்கு அதிக முக்கியத்துவம் வேண்டும், கோவா போன்ற சின்ன மாநிலத்துக்கு என்ன தகுதி உள்ளது என்கிற அளவில் PTR தியாகராஜன் பேசுகிறார்.

    இவரே சுயாட்சி, மரியாதை பற்றியும் பேசுகிறார் பின்னர் கோவாவை சிறிய மாநிலம் என்கிறார்.

    மாநிலம் சிறியது பெரியது என்பது கணக்கல்ல, அதுவும் ஒரு மாநிலம். மற்ற மாநிலங்களுக்கு என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை தான் சிறிய மாநிலத்துக்கும் உள்ளது.

    அதிக வரி கட்டுவதால் தமிழ்நாடு உயர்ந்ததாகி விடுகிறதா? அதிக வரி கட்டுவதால், Request செய்யலாம் ஆனால், Demand செய்ய முடியாது.

    எங்கள் மாநிலத்தில் தான் அதிக மக்கள் தொகையுள்ளது எனவே, எங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வேறொரு பிரச்சனையில் மத்திய பிரதேசமும், உத்தரபிரதேசமும் ஆரம்பித்தால், தியாகராஜன் ஏற்றுக்கொள்வாரா?

    இவர் தேவையற்று மாநிலங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துகிறார். தான் புத்திசாலி என்று காட்ட சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார்.

    இவ்வளவு பேசும் இவர்கள் தான் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று தமிழ்நாட்டில் கோவையை புறக்கணித்தவர்கள். சர்ச்சை எழுந்த பிறகே கவனம் கொடுத்தார்கள்.

    தங்கள் மாநிலத்தில் ஒரு மாவட்டத்துக்கே சரியான உரிமையை வழங்காத போது சுயாட்சி பற்றி பேசுவது சரியா?

    இவர்கள் கட்சி நபர் தமிழக அரசை ஏன் கேட்கிறீர்கள்? மத்திய அரசை கேளுங்கள் என்கிறார். அப்படியென்றால், யார் கூறுவது சரி?

    மத்திய அரசு தவறாக நடந்தால், ஒருதலைப்பட்சமாக நடந்தால், சட்ட ரீதியாக போராடி உரிமையைப் பெறலாமே தவிர இது போன்ற சர்ச்சைகளை உருவாக்கியல்ல.

    நான் தமிழ்நாட்டை அதிகம் நேசிக்கிறேன் ஆனால், இந்தியத் தமிழன்.

    எனக்கு நாடும் முக்கியம், மாநிலத்தின் மரியாதையும் முக்கியம்.

    இவர்களின் அரசியல் சுயநல பிரிவினைவாத எண்ணத்தை என்றும் ஆதரிக்க மாட்டேன்.

    இங்கே ஒன்றியம் என்ற மொழி மாற்றத்தில் பிரச்சனையில்லை ஆனால், அதன் பின்னே உள்ள உள்நோக்கத்தில் தான் பிரச்சனை.

  10. இந்த ஆட்சியாளர்கள் பிரிவினைவாத எண்ணத்தை கொண்டவர்கள் என்ற உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
    விளக்கத்திற்கு நன்றி.

  11. ஃஃஃஃஃ10 வருடங்களுக்கு மேலாக படிக்கிறீர்கள் என்று நினைக்கிறன். நீங்களே இவ்வாறு கூறுவது வருத்தம் அளிக்கிறது.ஃஃஃஃஃ

    தங்களின் பதிலை நான் கூடத் தவற விட்டிருக்கலாம்… சட்டென நினைவுக்கு வரவில்லை ஏதோ ஒரு முக்கிய சந்தேகத்துக்கு தான் பதிலுக்காக காத்திருந்தேன்…

    ஆனால் 11 வருடங்களாக நான் உங்கள் வாசகர் தான்… சினிமாத்துறைக்குள் முழுமையாக இருப்பதால் முன்னர் போல் நான் வலைப்பதிவில் இல்லாவிடினும் மின்னஞ்சல் ஊடாக உங்கள் பதிவுகளை படித்துக் கொண்டே இருக்கின்றேன்.

    இப்படி ஒரு பதிவுக்காக மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் குறிப்பிட்டது இந்தியா இலங்கை இனப்பிரச்சனையைக் கையாண்டதன் ஒரு பகுதி தான்,
    நேற்றைய நாளில் தான் இந்திய இராணுவத்தினர் வான் வழியில் இருந்த இங்கு உணவுப் பொட்டலங்களைப் போட்ட நாளாகும்.
    அது தொடர்பாக எழுத்தாளர் சாத்திரி அவர்களின் பதிவை இதில் இணைக்கின்றேன்.

    04 . 06 .1987 ல் இந்தியப்படைகள் எங்கள் மண்ணில் உணவுப் பொருட்களை வீசிய நாள் இன்று
    புலிகள் மீதான பெரும் படையெடுப்பு பத்தாயிரம் இராணுவத்தோடு டென்சில் கொப்பேக்கடுவ வடமராட்சி ஊடாக வழி நடத்துகிறார் இலங்கை பாது காப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி பருத்தி துறை சந்தியில் கெலி கொப்ரரில் வந்து இறங்கி நடவடிக்கைகளை பார்வையிடுகிறார் . புலிகள் அமைப்பிற்குள் சில உள் முரண்பாடுகளோடு மாத்தையா வழிநடத்தினார் . வட மராச்சியை புலிகள் கை விட்டு விட்டு பின் வாங்குகிறார்கள் . புலிகளிடம் இந்திய றோ அமைப்பு தொடர்பு கொண்டு பின்னடைவை தடுக்க தாங்கள் ஆயுதம் தருவதாகவும் ஆயுதப் பட்டியலை கேட்கிறார்கள்.புலிகள் கொடுத்த ஆயுதப் பட்டியலை இலங்கையரசிடம் காட்டி இத்தனை ஆயுதங்களையும் புலிகளிற்கு கொடுக்கப் போகிறோம் என மிரட்டி பிரெஞ்சு தயாரிப்பான மிராச் 2000 குண்டு வீச்சு விமானங்களை பிரதி பண்ணி இந்தியா தாயாரித்த விமானங்களின் உதவியோடு உணவு பொதிகளை வீசுகிறார்கள். அதையடுத்து இந்திய இலங்கை ஒப்பந்தம் நடைபெற்றது

  12. “சினிமாத்துறைக்குள் முழுமையாக இருப்பதால் ”

    🙂 வாழ்த்துகள். என்னவாக உள்ளீர்கள்?

    ஈழ பிரச்சனை பற்றி எனக்கு என்றில்லை, பெரும்பாலான தமிழக தமிழர்களுக்குத் தெரியாது. 2008 / 2009 வாக்கில் தான் பலருக்கு தெரிய வந்தது.

    இது பற்றித் தெரிந்து கொள்ள 2008 ல் ஒரு கட்டுரை எழுதி, ஈழ தமிழர்கள் பலர் கொந்தளித்து கருத்திட்டு பெரிய பஞ்சாயத்தாகி விட்டது அப்போது 🙂 . அக்கட்டுரை தற்போது Private ல் உள்ளது.

    யாருக்கும் பதில் அளிக்காமல் இருந்ததில்லை, 2008 முதல் இதை நான் பின்பற்றி வருகிறேன்.

    தற்போது யாசின் மட்டுமே பெரும்பாலும் கருத்திடுவதால், கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!