சென்னை தண்ணீர் பிரச்சனை!

3
சென்னையை மிரட்டப் போகும் தண்ணீர் பிரச்சனை!

காராஷ்ட்ராவில் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனை எல் – நினோ என்ற பருவநிலை மாறுபாட்டாலும் அதே சமயம் அரசின் அலட்சியத்தாலும் ஏற்பட்ட நிலையே!  Image Credit

நம்ம சென்னையைப் பார்ப்போம்!

கடந்த மழையில் (இதுவும் எல் – நினோ காரணம் என்று கூறுகிறார்கள்) சென்னை கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் இந்த மழை பெய்யாமல் இருந்து இருந்தால் இன்று சென்னையும் மகாராஷ்டிரா போல இல்லையென்றாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கும்.

சென்னையைச் சுற்றி ஏராளமான பெரிய ஏரிகள் இருந்தாலும் அரசின் பொறுப்பற்ற தன்மையாலும் ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளாததாலும் அதன் பரப்பளவு சுருங்கிக் கொண்டே வருகிறது.

பிரச்சனை என்னவென்றால் Greater Chennai என்ற பெயரில் சென்னையின் பரப்பளவு விரிவடைந்து கொண்டே செல்கிறது.

ஆனால், அதிகரிக்கும் மக்களின் தண்ணீர் தேவையை நிறைவு செய்யும் ஏரிகளின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது.

அக்கறையற்ற அரசாங்கம்

அரசாங்கமும் துறையைச் சார்ந்தவர்களும் எந்த வித கவலையும் பொறுப்பும் இல்லாமல் இருக்கிறார்கள்.

காரணம் என்னவென்றால் இவர்களின் வீடுகளுக்கு 24 மணி நேரமும் தண்ணீர் வரும். எனவே, இது பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கிறார்கள்.

எனவே மக்களின் பிரச்சனைகளையும் மாநிலத்தின் எதிர்காலத் தேவையையும் உணர முடியவில்லை, அதற்கான முயற்சியையும் எடுக்கவில்லை.

பிரச்சனை வரும் போதெல்லாம் “நாங்கள் அந்த ஏரியை தூர் வாரினோம் தடுப்பணை கட்டினோம்” என்று ஏதாவது புள்ளி விவரத்தை வெளியிட்டு அப்படியே அமுக்கி விடுவார்கள்.

மகாராஷ்டிரா பிரச்சனை நமக்கு வர எவ்வளவு காலங்கள் ஆகி விடப்போகிறது?!

அதற்குள் முன்னேற்பாடாக ஏதாவது செய்தால் தானே இது போல ஒரு மோசமான நிலை வந்தால் ஓரளவாவது சமாளிக்க முடியும்.

சொல் புத்தி வேண்டும் இல்லை சுய புத்தி வேண்டும். இரண்டுமே இல்லாமல் மங்குனி அரசாங்கமாக இருந்தால், என்ன தான் செய்வது.

இதற்குத் தீர்வு என்ன?

தீர்வு நான் புதிதாகக் கூற எதுவுமில்லை ஏற்கனவே பலரும் ஊடகங்களும் எழுதியது தான்.

  • ஏரி, குளங்களைத் தூர் வார வேண்டும்
  • மழை நீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டும்
  • தடுப்பணை கட்ட வேண்டும்
  • ஆக்கிரமிப்பை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற வேண்டும்
  • மழை நீர் சேகரிப்பை வீடுகளில் / அலுவலகங்களில் கட்டாயப்படுத்த வேண்டும்
  • மணல் திருட்டை தடுக்க வேண்டும்
  • ஏரியை சுற்றி பூங்கா / நடைபாதை அமைத்து ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும்.
  • ஏரி குளங்களை ஆழப் படுத்தித் தண்ணீர் சேமிப்பை அதிகரிக்க வேண்டும்

இதையெல்லாம் படித்தால் எனக்கே சிரிப்பாக இருக்கிறது. நடக்குற கதைய பேசுயா! என்று யாரோ என்னிடம் நக்கலாகக் கூறுவது போலவே உள்ளது.

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணராத அரசாங்கம் 

இதை ஒரு அரசாங்கம் எளிதாகச் செய்ய முடியும்.

இதற்கென ஒரு துறை இருக்கிறது அவர்களிடம் கூறி நடவடிக்கை எடுக்கலாம் ஆனால், இதைப் பற்றியே கவலையில்லாமல் இருக்கிறார்கள். இதை நினைத்தால் கடுப்பு தான் ஏற்படுகிறது.

இந்த அரசியல்வாதிகள் தண்ணீர் குறித்துக் கவலையே இல்லாமல் இருக்கிறார்கள் என்று கோவை, சேலம் போன்ற நகரங்களில் தனியார் அமைப்புகளுடன் பொதுமக்களே ஏரியை தூர் வாருவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை, சேலம் நகரங்கள் தமிழ்நாட்டுக்கு முன் மாதிரியாக உள்ளது. Image Credit www.skyscrapercity.com, https://www.flickr.com/photos/rafimmedia

Periya Kulam Ukkadam Kovai

Kannang kuruchi Lake Salem

இது போல ஏன் சென்னையில் நடக்கவில்லை?

இந்த இரண்டு ஏரிகளும் பொது மக்களின் ஒத்துழைப்பின் மூலமே தூர்வாரப்பட்டு / சீரமைக்கப்பட்டு மீட்கப்பட்டது. இது போல ஏன் சென்னையில் நடக்கவில்லை?

சென்னை ஏரியை ஆழப்படுத்தித் தூர் வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரை சேமிக்கவில்லை என்றால் சென்னை மிகப்பெரிய தண்ணீர் பிரச்னையை எதிர்நோக்கும். சந்தேகமே இல்லை.

சென்னை புழல், செம்பரம்பாக்கம், போரூர் ஏரிகளை தூர் வாரி ஆழப்படுத்தி இருந்தால், எவ்வளவோ கன அடி தண்ணீரை இந்த மழையில் சேமித்து இருக்க முடியும்.

ஏரியைச் சுத்தம் செய்து ஏரியைச் சுற்றி நடைபாதை பூங்கா, மரக்கன்றுகள் வைத்து மக்களின் நடைப் பயிற்சிக்கு வசதிகள் செய்து கொடுத்தால் ஆக்கிரமிப்புச் செய்ய முடியாது.

ஏரியின் எல்லைப்பகுதி சரியாக இல்லாதததே ஆக்கிரமிப்புக்குக் காரணமாகிறது.

முரண் 

மணல் எடுக்கக் கூடாத ஆற்றில் (கட்டுப்பாடு இருந்தாலும்) அரசாங்கமே கட்டுப்பாடற்ற மணல் எடுக்க அனுமதிக்கிறது.

மண்ணைத் தூர் வார வேண்டிய ஏரியில் எதையும் செய்யாமல் அப்படியே போட்டு வைத்து இருக்கிறது!

சமீபத்தில் சேத்துப்பட்டு ஏரியை 42  கோடி செலவில் சீரமைப்பு செய்து படகு சவாரி செய்யும் படி அழகாக மாற்றி அமைத்து இருக்கிறார்கள்.

அரசாங்கம் செய்த ஒரே ஒரு உருப்படியான தண்ணீர் சார்ந்த செயலாக இதைக் காண்கிறேன்.

மற்றதெல்லாம் சும்மா வாயால் வடை சுடும் அறிவிப்பு மட்டுமே!!

Image Credit – Google Photos

சேத்துப்பட்டு ஏரியைப் போல புழல், போரூர், செம்பரம்பாக்கம் ஏரிகள் எப்போது மாற்றம் பெறுகிறதோ அன்று தான் சென்னை ஏரி குறித்த பிரச்சனைகளுக்கு முடிவு வரும்.

சேத்துப்பட்டு ஏரியை ஆக்கிரமிப்பு செய்ய முடியுமா?

முடியாது!

ஏன்?

காரணம் இதன் எல்லைப் பகுதி பாதுகாக்கப்பட்டு இருக்கிறது.

படகு போக்குரவத்து கூடுதல் வருமானத்தை அரசாங்கத்துக்குத் தருவதுடன் ஏரி பாழடையாமலும் மற்ற குப்பைகள் இதில் சேராமலும் இருக்க உதவுகிறது.

எனவே தான் இது போல பாதுகாக்கப்பட்ட அழகுபடுத்தப்பட்ட எல்லைப் பகுதி மற்ற ஏரிகளுக்கும் வேண்டும் என்று கூறுகிறேன்.

நான் என்ன செய்கிறேன்?

சிறு வயதில் இருந்தே ஏனோ தண்ணீரை வீணாக்கக் கூடாது என்ற எண்ணம் உள்ளது. இது எப்படி எனக்கு வந்தது என்ன காரணம் என்று புரியவில்லை.

அதை இன்று வரை பின்பற்றி வருகிறேன்.

என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

சில உணவகங்களில் வேகமாகத் தண்ணீர் வந்து வீணாவதைப் பார்த்து அதன் வேகத்தைக் குறைத்து வைக்கக் கூட அறிவுறுத்தியுள்ளேன்.

உணவகங்களில் கை கழுவும் இடத்தில் நேரே கண்ணாடியை வைப்பதை தவிர்ப்பது தண்ணீர் வீணாவதை தடுக்கும் காரணம், கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே கை கழுவி நிறையத் தண்ணீரை வீண் செய்கிறார்கள்.

என் பசங்க இருவரிடமும் தண்ணீரை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்பதையும் தண்ணீரின் முக்கியத்துவத்தையும் விளக்கியுள்ளேன்.

இதுவே என்னளவில் நான் செய்யக் கூடியது.

நம் அனைவரின் பொறுப்பு என்ன?

அரசாங்கத்தைத் திட்டும் முன் நாம் நம்மளவில் தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம்.

என்றைக்கு நீங்கள், பெட்ரோல் டீசல் லாரி போலத் தண்ணீர் சிந்தாமல் செல்வதைக் காண்கிறீர்களோ அன்று தண்ணீரின் தேவையை மக்கள் உணர்ந்து விட்டார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

ஆனால், அன்று தண்ணீரை டீசல் பெட்ரோல் போல லிட்டர் கணக்கில் தினமும் பயன்படுத்திக் கொண்டு இருப்போம் (ஏற்கனவே பலரின் நிலை இப்படித்தான் உள்ளது).

தண்ணீரை சேமியுங்கள், வீணாக்காதீர்கள். அதோடு ஏரி, குளம் தூர் வாரும் நிகழ்வு உங்கள் பகுதி அருகே நடைபெற்றால் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

தண்ணீரின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கும் உணர்த்துங்கள்.

3 COMMENTS

  1. அருமையான கட்டுரை.இனிவரும் அரசாங்கமாவது இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

  2. எதிர்கால சந்ததிகளின் நிலையை எண்ணினால் வருத்தமாக இருக்கிறது.. ஒரு ஆட்சியின் திட்டங்கள் மறு ஆட்சியில் முடக்கபடுகிறது.. மத்திய அரசு கொடுக்கும் MP நிதிகளை சில தொகுதிகளில் முழுமையாக வாங்கவே இல்லை என்பதே வேதனையான ஒன்று.. மக்களையும் குறை சொல்ல முடியாது… ஒவ்வொரு முறையும் மாற்றத்தை எதிர் பார்கின்றனர்… ஆனால்?????

  3. மாற்றம் தேவை எனில் நாம் (மக்கள்) தான் போராட வேண்டும். ஏனெனில் நாம் இருப்பது மக்களாட்சி. நாம் இறங்கி போராடினால் தான் நம் தேவைகள் நிறைவேறும்.

    கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக சென்னை தண்ணீர் கஷ்டத்தில் தான் உள்ளது. மக்களாகிய நாம் பொறுப்பற்று இருக்கிறோம். நாம் அனைவரும் நம் பொறுப்பை உணர்ந்தால் போதும் நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

    நாம் அரசாங்கத்தின் மீது பழி போடுகிறோம்.
    அதற்கு பதில் அவர்களுக்கு நாம் நம் எதிர்ப்பை தீவிரமாக காட்டினால் அவர்களை செயல்பட வைக்க முடியும். இல்லை எனில் எழுதி /படித்து ஆதங்க படுவதோடு முடிந்து விடும்.
    தேவையற்ற வீண் சண்டைகளை சமூக வவலைத்தளங்களில் செய்யும் மக்கள் இது போன்ற மிக தேவையான நடவடிக்கைகளுக்கு ஒன்று கூடினோம் ஆனால் நீரை கட்டாயம் சேமிக்க முடியும். ஏனெனில் நாம் இருப்பது மக்களாட்சி……….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here