திருவிழா நாட்கள் வாரம், வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் சென்னையைத் தாண்டுவது என்பது மிகப்பெரிய சாதனை.
சென்னை விமான நிலையம் தாண்டிய பிறகு ஆரம்பிக்கும் போக்குவரத்து நெரிசல் “மறைமலை நகர்” வந்த பிறகே குறையும்.
அதிலும் பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி தாண்டுவது “சகாரா” பாலைவனத்தைக் கடப்பது போலக் கடினமானது. இங்கே மட்டுமே ஒரு மணி நேரம் கடந்து விடுகிறது.
கடந்த முறை நாங்கள் தீபாவளிக்கு செல்ல அக்கா கணவர் புதிய வழியை அறிமுகப்படுத்தினார். அவருக்கே சமீபமாகத் தான் தெரிந்தது என்று கூறினார்.
திருப்போரூர் வழி
OMR வழியாகச் சென்று சோழிங்கநல்லூர், சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர் சென்று, அங்கே உள்ள ரவுண்டானாவில் வலது பக்கம் திரும்பி நேராகச் சென்று கொண்டே இருக்க வேண்டியது தான்.
முடிவில் செங்கல்பட்டு வந்து விடும்.
மரங்கள் சூழ கிராமங்கள் வழியாகப் பாதை செல்கிறது, பகலில் செல்ல நேர்ந்தால் சிறப்பான பயணமாக இருக்கும்.
இரட்டை வழிச்சாலை கிடையாது ஆனால், மோசமில்லை.
தற்போது இந்த வழி பலருக்கு தெரிந்து விட்டதால், இங்கேயும் வாகனங்கள் அதிகரித்து விட்டதாகக் கூறினார் ஆனால், தடங்கல் இல்லாத போக்குவரத்து.
OMR வழிப் பாதை என்பதால், மைலாப்பூர், மந்தைவெளி, அடையார், திருவான்மியூர், சோழிங்கநல்லூர் பகுதி அருகே வசிப்பவர்களுக்கு மட்டுமே பயனுள்ளது.
மற்றவர்களுக்கு இது சுற்று தான். எனவே, தேவைப்படுகிறவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
கொசுறு
பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் விடுமுறைக்குச் செல்பவர்கள், இதுவரை இந்த வழி தெரியாதவர்கள் முயற்சித்துப் பாருங்கள்.
விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதால், இந்த பதிவு நிச்சயம் பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயன்படும்.. கோவையில் பணி புரிந்த நாட்களில் விடுமுறை நாட்களில் 10 /12 மணி நேரம் கூட பேருந்தில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டு சென்ற கசப்பான அனுபவம் உண்டு!!! தற்போது நினைத்தால் எனக்கே வியப்பாக இருக்கிறது.. சென்னையில் என்னுடைய முதல் நேர்காணல் காலதாமதத்தால் தவற விட்டது இன்னும் நினைவில் இருக்கிறது.. இத்தனைக்கும் 6 மணி நேரம் முன்பே கிளம்பியும், போக்குவரத்து பிரச்சனையால் குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை… பகிர்வுக்கு நன்றி கிரி..