உலகம் முழுக்க பங்குச்சந்தை பிரபலமாகி வருகிறது. பலரும் இவற்றில் முதலீடு செய்து இலாபத்தைப் பெற்று வருகின்றனர். Image Credit
பங்குச்சந்தை என்றால் என்ன?
தனியார் நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்காகத் தங்கள் நிறுவன உரிமையைப் பங்குகளாக வெளியிடுகிறது. இவ்வாறு வெளியிடப்படும் பங்குகளைக் கையாளும் இடமே பங்குச்சந்தை எனப்படுகிறது.
ஒரு நிறுவனம் தன் உரிமையைச் சிறு பகுதிகளாகப் பங்குகளைப் பிரித்து (IPO – Initial Public Offerings) வெளியிடும் போது குறிப்பிட்ட தொகையை நிர்ணயிக்கும்.
வெளியிடும் பங்குகளை நிறுவனம் நிர்ணயித்த தொகைக்குப் பொதுமக்கள் வாங்கலாம். இவ்வாறு வாங்குபவர்களும் அந்நிறுவனத்தின் பங்குதாரராகிறார்கள்.
யார் உரிமையாளர்?
பொதுத்துறைக்கு வந்து விட்டாலே உரிமையாளர் கிடையாது. அதிகப் பங்குகளை வைத்துள்ளவர்கள் நிறுவனத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
எனவே, நிறுவன முதலாளிகள் தாங்கள் உருவாக்கிய நிறுவனத்தில் அதிகாரத்தைத் தொடர, பெரும்பான்மை பங்குகளைத் தாங்கள் வைத்துக்கொண்டு குறிப்பிட்ட சதவீதத்தை மற்றவர்களுக்கு அளிப்பார்கள்.
எடுத்துக்காட்டுக்கு, அம்பானி 65% தனக்கும், தன் குடும்பத்தினருக்கு 4%, 5% என்று பங்கைப் பிரித்துக் கொடுத்து, மீதியைத்தான் பொதுமக்கள் வாங்க கொடுப்பார்.
நிறுவனத்தை உருவாக்கியவர்கள் குறைந்த பட்சம் 51% வைத்து இருக்க வேண்டும். 60% க்கும் அதிகமாக இருந்தாலே அவர்கள் கட்டுப்பாட்டில் நிறுவனம் இருக்கும்.
Share / Mutual Fund
இவ்வாறான பங்குகளை Demat கணக்குத்துவங்கி ஷேர் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முறையில் வாங்கலாம். ஷேர் முறையை விட மியூச்சுவல் ஃபண்ட் எளிதானது.
மியூச்சுவல் ஃபண்ட் செயல்படுத்த Demat கணக்கு தேவையில்லை.
SIP எனப்படும் Systematic Investment Plan மூலமாக மாதாமாதம் வாங்கலாம். ஷேரிலும் இம்முறை இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் பிரபலமாக உள்ளது.
சமீபமாக வழக்கமான வங்கி சேமிப்பிலிருந்து பலரும் அதிக இலாபம் கிடைக்கிறது என்று மியூச்சுவல் ஃபண்ட் முறைக்கு மாறி வருகிறார்கள்.
நிறுவனம் வளர்ந்தால் முதலீட்டாளர்கள் இலாபத்தைப் பெறுவார்கள். அதே போல நிறுவனம் நட்டத்தைச் சந்தித்தால் நட்டத்தை எதிர்கொள்வார்கள்.
ZOHO
உலகளவில் நிறுவனங்களை நடத்தும் தமிழர் ஸ்ரீதர் வேம்பு, தன் நிறுவனத்தைத் தனியாரிலிருந்து பொதுத்துறை நிறுவனமாக மாற்ற விரும்பவில்லை என்று கூறினார்.
இதற்கு அவர் கூறிய காரணம்,
'பொதுத்துறை நிறுவனமாக மாற்றினால் முதலீட்டாளர்களிடமிருந்து எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. இதனால் நிறுவனத்தை இயல்பாக நடத்த முடியாமல், நெருக்கடியில் நடத்த வேண்டியதாக உள்ளது'.
என்று கூறினார். இவர் கூறுவது சரியானது தான்.
எடுத்துக்காட்டுக்கு, ஒருவர் தன் கடுமையான உழைப்பால் ஒரு நிறுவனத்தை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு வந்து பொதுத்துறை நிறுவனமாக மாற்றியிருப்பார்.
ஒருவேளை நிறுவனம் எதிர்பார்த்த இலாபத்தை எதோ காரணத்தால் பெறவில்லையென்றால், முதலீட்டாளர்களுக்குப் பதில் கூற வேண்டிய நிலையில் நிறுவனம் இருக்கும் (Board Members).
பதில் கூறியாக வேண்டும்
அதிக பங்குகளை வைத்துள்ள, நிறுவனத்துக்குச் சம்பந்தமில்லாத (பங்குகளை வைத்துள்ளதைத் தவிர்த்து) ஒருவர் நிறுவனத்தைக் கடுமையாகக் கேள்வி கேட்பார்.
இவருக்கு நிறுவனத்தின் செயல்பாடுகள், அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பற்றி புரிதல் இல்லையென்றாலும், கேள்விக்குப் பதில் கூறியாக வேண்டும்.
அவர் கடுமையாக விமர்சித்தாலும் ஏற்க வேண்டிய நிலையில் இருப்பார்கள்.
பொதுத்துறை நிறுவனம்
தொடர்ந்து நிறுவனத்தில் தனது பங்குகளின் சதவீதத்தை உயர்த்திக்கொண்டு சென்றால், அந்நிறுவனத்தையே கைப்பற்றி விட முடியும்.
தங்கள் கட்டுப்பாட்டை நிறுவனத்தில் வைத்துக்கொள்ளப் பெரும்பான்மை சதவீதப் பங்கை மற்றவர்களுக்கு நிறுவன தோற்றுவிப்பாளர்கள் விட்டுத்தர மாட்டார்கள்.
ஒரு நிறுவனத்தை விரிவாக்க, பொதுத்துறை நிறுவனமாக மாற்றினாலே கூடுதல் நிதியைத் திரட்ட முடியும், நிறுவனத்தை பெரியளவில் கொண்டு செல்ல முடியும். இம்முறையையே உலகம் முழுவதும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன.
பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றுவதில் நன்மை தீமைகள் கலந்தே உள்ளன.
நெருக்கடிகள்
நிறுவன இலாபம் உயரும் போது, நம்பிக்கையால் பங்குகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து பங்குகளின் மதிப்பு உயர்கிறது,
பங்குகள் வீழ்ச்சியடையாமல் இருக்க, நிறுவனங்கள் பொய்யான காலாண்டு இலாபத்தை வெளியிடுவதும் இயல்பானது. இவையெல்லாம் நெருக்கடிகள்.
ஆனால், பங்குகள் இலாபம் உயர்ந்து நிறுவனம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவதே அதிகம். எடுத்துக்காட்டாக ஏராளமான நிறுவனங்களைக் கூறலாம்.
ஃஇன்போஸிஸ், விப்ரோ, டாடா, ரிலையன்ஸ், அதானி, கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் பங்குகளை வெளியிடும் பொதுத்துறை நிறுவனங்களே.
ZOHO நிறுவனத்தின் இலாபமும் நட்டமும் ஸ்ரீதர் வேம்பு என்ற தனிப்பட்ட ஒருவரை மட்டுமே சாரும், அவர் வேறு யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய நெருக்கடியில்லை.
இதுவொரு சுதந்திரமான நிலை.
பங்குச்சந்தை இலாபமா? நட்டமா?
அனைத்தும் சரியாகச் சென்றால், மிகப்பெரிய அளவில் இலாபம் ஆனால், சொதப்பினால் மிகப்பெரிய நட்டம்.
அதாவது, இதில் ஆபத்து (RISK) உள்ளது.
என்ன மாதிரியான ஆபத்து உள்ளது என்பதைப் பங்குச்சந்தை ஆபத்தானதா? என்ற கட்டுரையில் விளக்குகிறேன். இக்கட்டுரையைத்தான் எழுதத் துவங்கினேன்.
ஆனால், பங்குச்சந்தை பற்றிய புரிதல் கொடுக்காமல் ஆபத்தை விளக்குவது சரியாக இருக்காது என்பதால், பங்குச்சந்தை என்றால் என்ன? கட்டுரையை எழுதினேன் 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
சேமிப்புப் பழக்கம் குறைந்து விட்டதா?
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாமா?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. 10 ஆவது முடித்து விட்டு அறிவியலில் ஆர்வம் இருந்த எனக்கு சரியான புரிதல் இல்லாததால் 11 வது வகுப்பில் கணக்கியல் (நண்பர்கள் சேர்ந்ததால்) பாடத்தில் சேர்ந்து விட்டேன்.. ஒரு வாரம் பள்ளி சென்ற பிறகு தான் தெரிய வந்தது இதில் அறிவியல் பாடம் இல்லை என்று. விருப்பம் இல்லாமலே 3 / 4 மாதங்கள் கழிந்தது.. பின்பு மேலாண்மை பாடத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டதால் பின்பு விரும்பி படிக்க ஆரம்பித்தேன்..
படிப்பில் புலி என்றெல்லாம் கிடையாது.. ஆனால் எதுவும் சாத்தியம் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். அந்த பருவத்தில் மேலாண்மைக்கு அடுத்தது எனக்கு மிகவும் பிடித்த பாடம் கணக்கியல், அதில் குறிப்பாக பங்குசந்தை பாடம் மிகவும் பிடித்து போனது.. காரணம் இந்த பாடத்தை படிக்கும் முன்பு பங்குசந்தை பற்றி எதுவும் தெரியாது.. படிக்க படிக்க ஆர்வம் மிகையாகி போனது..
கல்லூரியில் படிக்கும் போது ஹர்ஷத் மேத்தா பங்கு சந்தையில் செய்தவைகளை படித்த போது தலை சுற்றி விட்டது.. இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் ஹர்ஷத் மேத்தா ஒரு முக்கிய நபராகி போனார்.. இவர் பங்குசந்தையை ஏமாற்ற ஆரம்பித்த பிறகு தான் அரசே பல புதிய விதிகளை கொண்டு வந்ததது.. இவரை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் Scam 1992 இந்த webseries பார்க்கவும்.. செம்மையாக இருக்கும்..
மேலும் நீங்கள் இந்திய பங்குசந்தையின் ஆரம்பகாலம் எவ்வாறு இருந்தது என்பதை இதில் தெளிவாக காண்பித்து இருப்பார்கள்.. ஒரு சாதாரண புரோக்கராக பங்குசந்தையில் நுழைந்து, சில வருடங்களில் ஒட்டு மொத்த சந்தையை இவர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது எல்லாம் யோசிக்க முடியாத நிகழ்வுகள்.. இவர் ஆரம்பித்த நிறுவனத்தின் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும் Grow More . 1985 / 1990 காலகட்டத்தை இயக்குனர் மும்பையை மிகவும் அழகாக படம் பிடித்து இருப்பார்.. நிச்சயம் இந்த series உங்களை ஏமாற்றாது.. நேரம் இருக்கும் போது பார்க்கவும்..
@யாசின்
பங்குச்சந்தையில் இவ்வளவு ஆர்வத்தை வைத்துக்கொண்டு இது பற்றி ஒரு முறை கூட பேசவில்லையே!
“இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் ஹர்ஷத் மேத்தா ஒரு முக்கிய நபராகி போனார்.. இவர் பங்குசந்தையை ஏமாற்ற ஆரம்பித்த பிறகு தான் அரசே பல புதிய விதிகளை கொண்டு வந்ததது.”
ஆமாம். இவரால் பங்குச்சந்தை பிரபலமானது 🙂 .. அதாவது பலருக்கு தெரிய வந்தது.
“இவரை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் Scam 1992 இந்த webseries பார்க்கவும்.. செம்மையாக இருக்கும்.”
ஏற்கனவே பரிந்துரைத்துள்ளீர்கள். பார்ப்பது தள்ளிச்செல்கிறது. விரைவில் பார்த்து விடுகிறேன்.