பேய் படமாக வெளியாகி வெற்றி பெற்ற டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகம் டிமான்ட்டி காலனி 2. Image Credit
டிமான்ட்டி காலனி 2
பேய் பங்களாவாகக் கருதப்படும் டிமான்ட்டி காலனி பங்களா உள்ளே சென்று சங்கிலி எடுக்க முயன்று அதனால், ஏற்படும் விளைவுகளே டிமான்ட்டி காலனி.
இரண்டாம் பாகத்தில் குறிப்பிட்ட புத்தகம் படித்ததால் இறந்து விடுகிறார்கள். பாதிக்கப்பட்ட நபரின் மனைவியாக ப்ரியா பவானி ஷங்கர்.
முதல் பாகத்தில் இறந்ததாகக் காட்டப்படும் அருள்நிதிக்கு சகோதரராக இன்னொரு பணக்கார அருள்நிதி இக்கதையில் வருகிறார்.
இருவரும் எதனால் பாதிப்படைகிறார்கள்? இதில் ப்ரியா எப்படி வந்தார்? சங்கிலி என்ன ஆனது? என்பதே இரண்டாம் பாகம்.
திரைக்கதை
முதல் பாகம் போல எளிமையான நேர் கோட்டுக்கதையாக இல்லாமல் பல்வேறு கிளைக்கதைகள், கதாபாத்திரங்கள், விளக்கங்கள் உள்ளது.
சிலருக்கு இவற்றைப் புரிந்து கொள்வதில் குழப்பம் இருக்கலாம்.
சிலர் பாகங்களைத் திட்டமிட்டு துவக்கத்திலேயே திரைக்கதை அமைப்பார்கள். சிலர் படம் வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்தை எடுப்பார்கள்.
டிமான்ட்டி காலனி இரண்டாம் வகை.
முதல் பாகத்தின் தொடர்போடு திரைக்கதை அமைத்தாலும் பல விளக்கங்கள், காட்சிகளை அதை ஈடுகட்ட வைக்க வேண்டியதாகி விடுகிறது.
ஆனாலும், இரண்டாம் பாக தொடர்ச்சிக்கு நியாயம் செய்துள்ளார்கள்.
கதாபாத்திரங்கள்
பணக்கார அருள்நிதி பேச்சுகள், மேனரிசம் அந்தப் பணக்கார அருள்நிதியை வித்தியாசப்படுத்தவில்லை. இரு கதாபாத்திரங்களும் ஒன்று போலவே உள்ளது.
ராசியில்லாத நடிகையாக முத்திரை குத்தப்பட்ட ப்ரியா, இப்படத்தின் மூலம் அதிலிருந்து வெளியே வந்துள்ளதோடு நன்றாகவும் நடித்துள்ளார்.
அருள்நிதி சித்தப்பா முத்துக்குமார் நடிப்பு இயல்பாகவும், பொருத்தமாகவும் இருந்தது. அருண்பாண்டியன் பேசும் முறை ஆங்கில பட தமிழ் டப்பிங் போல உள்ளது.
துவக்கத்திலிருந்து இறுதி வரை ஏதோ ஒரு பரபரப்பை வைத்துக்கொண்டுள்ளார்கள். எனவே, சலிப்பைத்தராமல் கச்சிதமாக முடித்துள்ளார்கள்.
புத்த பிட்சுகளைப் பேயைக் கண்டு பிடிப்பவர்களாகவும், அவற்றை அழிக்கும் முயற்சியில் இருப்பவர்களாகவும் காண்பித்துள்ளார். முதன்மையாக வருபவர் நன்றாக நடித்துள்ளார்.
இவர்களையெல்லாம் எங்கே பிடிக்கிறார்கள்? 🙂 .
ஒளிப்பதிவு இசை
ஒளிப்பதிவு ஓகே ஆனால், ஆவலாக எதிர்பார்த்த பின்னணி இசை திருப்தியளிக்கவில்லை. இன்று வரை நான் ரசித்த பின்னணி இசை பட்டியலில் டிமான்டி காலனி 1 உள்ளது.
முதல் பாகத்தில் தனித்துவமான டங் டங் என்ற பின்னணி இசையிருக்கும். படத்துக்கே மிகப்பெரிய பலத்தை, த்ரில்லை கொடுத்து இருந்தது.
இதில் அப்படியெதுவும் இல்லை, இரைச்சலாகத்தான் உள்ளது, மனதில் நிற்கும் இசையாக இல்லை.
யார் பார்க்கலாம்?
பேய், ஹாரர் படங்கள் பார்ப்பதில் ஆர்வமுள்ளவர்கள் செல்லலாம் (U/A).
மூன்றாம் பாகத்துக்கான Lead யைப் போற போக்கில் கொடுக்காமல், அதில் தான் முக்கியமான திருப்பங்கள், விளக்கங்கள் உள்ளது என்பதோடு முடித்துள்ளார்கள்.
படம் சலிப்பாக்காமல் செல்கிறது. இவற்றோடு மேற்கூறியதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
பேய் படங்களுக்கு லாஜிக் பார்க்கலாம் அதற்காக ஒவ்வொன்றுக்கும் பார்த்தால், படத்தை ரசிக்க முடியாது. எனவே, எந்த மாதிரியான படத்துக்குச் செல்கிறீர்கள் என்பதை மனதில் நிறுத்திப் படம் பார்த்தால் படங்களை ரசிக்கலாம்.
Directed by R. Ajay Gnanamuthu
Written by R. Ajay Gnanamuthu, Venky Venugopal, Rajavel
Produced by Bobby Balachandran, Vijay Subaramaniam, RC Rajkumar
Starring Arulnithi, Priya Bhavani Shankar
Cinematography Harish Kannan
Edited by Kumaresh D
Music by Sam C. S.
Distributed by Red Giant Movies
Release date 15 August 2024
Running time 144 minutes
Country India
Language Tamil
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
பேய் படம் மற்றும் கிராபிக்ஸ் படங்களின் மீது எப்போதும் ஆர்வம் மிக மிக குறைவு.. திரில்லர் கதையம்சம் கொண்ட படங்கள் பிடிக்கும்.. இது போன்ற படங்களின் பின்னணி இசை சிறப்பாக இருந்தால் தான் குறைந்த பட்சம் படத்தில் குறைகள் இருந்தாலும் அதை மறந்து ரசிக்க முடியும்.. சில படங்களின் பின்னணி இசையே படத்திற்கான உயிர்..
ராட்சன் பின்னணி இசை தற்போது கேட்டாலும் ஒரு வித திகில் வந்து போகும்.. லாஜிக் சரியாக இருந்தால் மட்டும் தான் படத்தை பார்ப்பேன் என்றால் 95% படங்களை தவிர்த்து தான் ஆக வேண்டும்..ரெண்டு மணி நேரம் நமது சொந்த பிரச்சனையை, கவலையை மறந்து வேறு உலகில் நம்மை பயணப்பட வைப்பதை தான் பெரும்பாலும் திரை ரசிகர்கள் விரும்புவார்கள்..
கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது, ஆட்டோகிராப் படத்தை திரையில் பார்த்து எல்லா நண்பர்களும் மனம் வெம்பி கண்ணில் கண்ணீருடன் வெளியே வந்த போது நண்பன் ஒருவன் சொன்னது தற்போதும் நினைவில் உள்ளது.. என்னடா மொக்கை படத்துக்கு கூட்டிட்டு வந்துடீங்க.. படம் வேஸ்ட் டா என்ற போது எல்லோரும் திகைத்து போய் அவன் சட்டையை பிடிக்க போன போது.. அவன் ரொம்ப கூலா மச்சான் கொஞ்சம் யோசித்து பாருங்க!!!
3 வருஷம் நம்ம காலேஜ்ல படிக்கும் போது ஒரு பிகர சைட் அடிக்கிறதுக்குகுள்ள நாக்கு தள்ளி போகுது.. இதுல படத்துல ஹீரோக்கு 3 இடத்துல லவ் வருது.. அந்த 3 லவ் வையும் விட்டுட்டு 4 வது வேற பொன்ன கல்யாணம் பண்ணுறார்.. என்ன மச்சான் லாஜிக் இதுன்னு??? பட்டுனு சொன்ன போது, கேட்ட எங்க எல்லாருக்கும் அதிர்ச்சி.. தற்போதும் இந்த படத்தின் பாடலையோ / காட்சியோ பார்த்தால் நண்பனின் நினைவு வந்து போகும்..
@யாசின்
“பேய் படம் மற்றும் கிராபிக்ஸ் படங்களின் மீது எப்போதும் ஆர்வம் மிக மிக குறைவு.”
எனக்கும் அதே! ஆனால், யாவரும் நலம் போன்ற படங்கள் ரொம்பப் பிடிக்கும்.
“ராட்சன் பின்னணி இசை தற்போது கேட்டாலும் ஒரு வித திகில் வந்து போகும்..”
தற்போதும் அடிக்கடி கேட்கும் பின்னணி இசை. அற்புதமான இசை. நீங்கள் சொன்னது போல கேட்கும் போதே ஒருவித திகிலா இருக்கும்.
“அந்த 3 லவ் வையும் விட்டுட்டு 4 வது வேற பொன்ன கல்யாணம் பண்ணுறார்.. என்ன மச்சான் லாஜிக் இதுன்னு?”
😀 படம் வெற்றி பெற்றதுக்கு காரணம், அனைவருமே எதோ ஒரு கட்டத்தில் இப்படத்தில் வரும் சம்பவம் போல பாதிக்கப்பட்டு இருப்போம்.. அல்லது எதோ ஒன்று கடந்து சென்று இருக்கும்.
எனவே தான் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
காதலித்த பெண்ணை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்றால், இன்று பலர் திருமணம் ஆகாமலே சுற்றிக்கொண்டு இருப்பார்கள் 🙂 .
ஒவ்வொரு திருமணத்துக்கு முன்னரும் ஒரு காதல் இருக்கும். குறைந்த பட்சம் ஒருதலைக்காதலாவது.