திரையரங்கில் வெளியாகாமல் உலகத்திரை விழாக்களில் பங்கு பெற்று விருதுகளைக் குவித்து, OTT யில் வெளியான படம் கூழாங்கல். Image Credit
கூழாங்கல்
பெற்றோர் வீடு சென்ற மனைவியை, அழைத்து வர மகனுடன் செல்கிறான் குடிகார கணவன். மனைவி வந்தாரா? என்ன நடந்தது? என்பதே கூழாங்கல்.
கலைப்படம்
படத்தின் துவக்கமே கூறி விடுகிறது இதுவொரு கலைப்படம் என்று.
ஒரு குடும்பத்தின் அல்லது சிலரின் வாழ்க்கையை எந்தத் திரைப்பூச்சும் இல்லாமல், எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களுக்கென்று ஒரு மொழி, வகை உள்ளது. அது எதார்த்தம் கிடையாது, அவ்வாறு பெரும்பாலானவர்களுக்கு நடப்பதில்லை.
எப்போதுமே திரைப்படங்கள் வழக்கமான வாழ்க்கையிலிருந்து எதோ ஒரு வகையில் விலகி இருக்கும். தற்போது வரும் படங்கள் சில குறிப்பாக மலையாளப்படங்கள் உண்மைக்கு நெருக்கமாக உள்ளன.
வறட்சி
சமீப காலத்தில் இப்படியொரு வறட்சியான பகுதியை எந்தப்படத்திலும் காணவில்லை. வறட்சி என்றால் அப்படியொரு வறட்சி.
படம் பார்க்கும் நமக்கே தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றி விடும் போல.
இறுதியில் இந்த வறட்சியையும் முக்கிய பகுதியாகக் காண்பித்துள்ளார் இயக்குநர். இயக்குநர் வினோத் மதுரை பகுதியைச் சார்ந்தவர் என்பதால், இப்பகுதியைக் கதைக்குத் தேர்ந்தெடுத்து இருக்கலாம்.
என்ன தான் கலைப்படம் என்றே தெரிந்து தான் பார்க்கிறோம் என்றாலும், இந்த அளவுக்கு இயல்பாக எடுக்க வேண்டுமா?! என்று தோன்றுகிறது.
நடந்து செல்வதையே 10 / 20 நிமிடங்கள் காண்பித்தால் எப்படி?! படம் முழுக்க இது போன்ற காட்சிகளே அதிகம்.
சபாபதி
‘சபாபதி’ என்ற படத்தில் TR ராமச்சந்திரன் பணக்கார வீட்டுப்பையனாகவும், மாணவனாகவும் நடித்து இருப்பார்.
ராமச்சந்திரனிடம் ‘செங்கல்பட்டிலிருந்து ரயில் ஒரு இடத்துக்குப் போவதைக் கட்டுரையாக எழுது‘ என்பது போல ஆசிரியர் ஒரு இடத்தைக் கூறுவார்.
அதற்கு ரயில் நிலையத்திலிருந்து ரயில் கிளம்பி குப் குப் குப் என்று போனது என்பதையே பக்கங்களாக ராமச்சந்திரன் எழுதி வைத்து இருப்பார்.
அதாவது விடையாக ‘குப் குப் குப் குப்‘ மட்டும் இருக்கும் 😀 .
அது போலக் கூழாங்கல் படத்தில் பாதிக்கும் மேல் நடப்பது உள்ளது அல்லது எங்காவது வெறித்துப் பார்ப்பது இருக்கிறது.
என்ன தான் கலைப்படம் என்றாலும் நடப்பதையே பெரும்பகுதி காண்பித்துக்கொண்டு இருப்பது நியாயமா?
கதாபாத்திரங்கள்
நடித்தவர்கள் அனைவருமே நடிகர்களா அல்லது அங்கே உள்ளவர்களையே நடிக்க வைத்து விட்டார்களா? என்று தெரியவில்லை.
ரொம்ப இயல்பாக உள்ளார்கள். குறிப்பாக அப்பாவும் பையனும். இப்படத்தில் வசனங்கள் குறைவு.
நடித்துள்ளவர்கள் அனைவருமே நாம் கண்ட, எதிர் கொண்ட, கேள்விப்பட்ட, சந்தித்த எதோ ஒரு நபரை நினைவுபடுத்துகிறார்கள்.
யுவன் இசைக்கு வேலையில்லை, வறட்சியை ஒளிப்பதிவு அப்பட்டமாகக் காண்பித்துள்ளது. நாமே அந்த இடத்தில் இருப்பது போலவே உள்ளது.
யார் பார்க்கலாம்?
இது பொழுதுபோக்கு படமல்ல. எனவே, கலைப்படத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம், மற்றவர்கள் தவிர்ப்பது நல்லது .
இதுவொரு திரைப்படம் என்பதை விடச் சம்பவங்களைக் காட்சிப்படுத்தியதாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
முன்னரே என்ன மாதிரியான படம் என்று தெரிந்து இருந்தாலும், இவ்வளவு இழுவையாகக் கொண்டு செல்வதைத் தவிர்த்து இருக்கலாம்.
படம் மெதுவாகச் செல்வது பிரச்சனையில்லை ஆனால், எதுவுமே இல்லாமல் செல்வது தான் அயர்ச்சியைத் தருகிறது.
படத்தைத் தயாரித்தவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.
SONYLiv ல் காணலாம்.
Directed by P. S. Vinothraj
Screenplay by P. S. Vinothraj, Vignesh Kumulai
Produced by Vignesh Shivan, Nayanthara
Starring Chellapandi, Karuththadaiyaan
Cinematography Vignesh Kumulai, Jeya Parthipan
Edited by Ganesh Siva
Music by Yuvan Shankar Raja
Release date 4 February 2021 (Rotterdam)
Running time 75 minutes
Country India
Language Tamil
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, இந்த படத்தை பற்றி என் நண்பன் கூற கேட்டுள்ளேன். ஆனால் நான் இது வரை படத்தைப் பார்க்கவில்லை. பெரும்பான்மை திரை ரசிகர்களுக்கு இது போன்று பொறுமையாக செல்லும் கதைகளை பார்க்கும் ஆர்வம் குறைவு தான். தற்போதைய இளைய தலைமுறையின் ரசனை முற்றிலும் மாறி விட்டது. இவர்களின் திரைப்பார்வையே வேறு மாதிரி இருக்கிறது.
முன்பு நான் பார்த்த சில படங்கள் இடைவேளை முடிந்தும் எந்த திருப்பமும் ஏற்படாமல் இறுதியில் ஏன்டா? இரண்டரை மணி நேரம் செலவழித்தோம் என்று பல முறை நினைக்க வைத்து இருக்கிறது. ஒரு படத்தை பார்க்கும் போது நாம் நினைப்பதையே இயக்குனர் படமாக்காமல், அதை வேறு விதமாக எடுத்து இருந்தால் நாம் இன்னும் படத்தை உள்வாங்கி ரசிப்போம்..
We have the option in our remote like : Fast Forward, Rewind.
OTTs allow us to do Fast Forward, Rewind options.
I watched this movie within 17 minutes. Did lots of FF. what to do?
For all other masala movies, I just skip title, songs, fights – within 35 minutes I complete them.
@யாசின்
“பெரும்பான்மை திரை ரசிகர்களுக்கு இது போன்று பொறுமையாக செல்லும் கதைகளை பார்க்கும் ஆர்வம் குறைவு தான்.”
அவரவர் வாழ்க்கையே சிக்கலாக போகும் போது திரைப்படமும் அவ்வாறு சென்றால் பார்க்க பொறுமையில்லை .
“தற்போதைய இளைய தலைமுறையின் ரசனை முற்றிலும் மாறி விட்டது. இவர்களின் திரைப்பார்வையே வேறு மாதிரி இருக்கிறது.”
உண்மை.
“ஏன்டா? இரண்டரை மணி நேரம் செலவழித்தோம் என்று பல முறை நினைக்க வைத்து இருக்கிறது.”
எனக்கும் தோன்றியிருக்கிறது.
இப்படித்தான் போகும் என்று தெரிந்தும் முழுதா பார்த்து நொந்து கொள்வேன் 🙂 .
“ஒரு படத்தை பார்க்கும் போது நாம் நினைப்பதையே இயக்குனர் படமாக்காமல், அதை வேறு விதமாக எடுத்து இருந்தால் நாம் இன்னும் படத்தை உள்வாங்கி ரசிப்போம்.”
சரியா சொன்னீங்க.
சில படங்களில் ஏற்படும் ட்விஸ்ட் ரொம்ப நன்றாக இருக்கும் . பீட்சா படத்தில் வரும் ட்விஸ்ட் செமையா இருக்கும்.
@tamilnenjam
ஹலோ இப்படி பார்த்தால் படம் எப்படிங்க மனசுல ஒட்டும் 😀
பாடல்கள், சண்டை பிடிக்கவில்லையென்றால், ஓட்டுவேன் ஆனால், பெரும்பாலும் படத்தை ஸ்கிப் செய்ய மாட்டேன் .
பிடிக்கலைன்னா வேற படத்துக்கு மாறி விடுவேன்.
எந்தப் படம் முழுதா சமீப வருடங்களில் பார்த்து இருக்கீங்க?
சமீபத்தில் தனுஷின் கேப்டன் மில்லரை திரையரங்கில் பார்த்தேன். FF, Rewind, Pause, Mute செய்ய வழியில்லை. சண்டைகளைத் தவிர்க்க முடியவில்லை.ஹாஹாஹா
@தமிழ்நெஞ்சம் Ultimate Answer 😀 😀 .