இந்தியில் வெளியான Andhadhun படத்தின் மறு உருவாக்கம் அந்தகன். Image Credit
அந்தகன்
பார்வையில்லாதவராக நடித்துப் பல இடங்களில் இசைக்கும் பியானோ இசைக்கலைஞன் பிரசாந்த் எதிர்பாராமல் ஒரு கொலையைக் காண நேர்கிறது. இதனால் என்னென்ன பிரச்சனைகளைச் சந்திக்கிறான் என்பதே அந்தகன்.
பிரசாந்த்
இப்படம் பார்க்க இரு காரணங்கள்.
ஒன்று படம் நன்றாக உள்ளது என்று பலரும் கூறி இருந்தார்கள், இரண்டாவது ரொம்ப வருடங்களுக்கு பிறகு வரும் பிராசந்த் படம்.
பார்வை இல்லாதவராக பிரசாந்த் முடிந்தவரை இயல்பாக நடித்துள்ளார். இவர் எடையை 10 கிலோ குறைத்தால் பார்க்க நன்றாக இருக்கும்.
காரணம், இன்னமும் இளமையான தோற்றத்தில் உள்ளவருக்குக் கூடுதல் எடை (குண்டு அல்ல) அவருக்கு Uncle தோற்றத்தைக் கொடுத்து விடுகிறது, இருப்பினும் ரொம்ப உறுத்தவில்லை.
ஜோடியாக ப்ரியா ஆனந்த் பொருத்தமான தேர்வு.
மறு உருவாக்கம்
தமிழர்களுக்கு ஒரு பழக்கம் உள்ளது. சிறப்பாக உள்ளதை சிதைப்பது.
கர்நாடகாவில் சண்டையிட்டு தண்ணீரை வாங்கி கதற கதற கடலில் கலப்பது, அற்புதமான படங்களை மறு உருவாக்கம் செய்கிறேன் என்று நாறடிப்பது.
இதுவரை பல அழகான படங்களை நாசம் தான் செய்துள்ளார்கள், வெகு சில படங்களே தப்பியுள்ளன. அவ்வாறு தப்பிய படங்களில் ஒன்று அந்தகன்.
ஒரு படத்துக்குக் கதாபாத்திரங்கள் தேர்வு அமைந்து விட்டாலே பாதி வேலை முடிந்தது, திரைக்கதையும் சரியாக அமைந்து விட்டால், முழுப்படமும் வெற்றி.
அந்தகனில் தேர்வு செய்யப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தங்கள் தேர்வை நியாயப்படுத்துகின்றன.
கதாபாத்திரங்கள்
சிம்ரனை விட்டால், இக்கதாபாத்திரத்துக்கு யார் பொருத்தமாக இருப்பார்?! தூள் கிளப்பியுள்ளார். பிரசாந்த் வீட்டில் சென்று அவரைக் கதிகலக்குவது செம 🙂 .
எல்லோரையும் மிரட்டி வந்த சமுத்திரக்கனிக்கு இக்கதாபாத்திரம் பொருத்தமில்லையோ என்று நினைத்தால் போகப்போக செமையா நடித்துள்ளார்.
அதிலும் வனிதாவிடம் மாட்டிக்கொண்டு விழிப்பது சிரிப்பு. KS ரவிக்குமார், ஊர்வசி, யோகி பாபு ஆகியோர் படத்துக்குக் கலகலப்பை கூட்டியுள்ளார்கள்.
ஊர்வசிக்கு தற்போது இரண்டாம் இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன். நடிப்பில் விதவிதமாக பட்டையைக் கிளப்பிக்கொண்டு உள்ளார்.
ஒளிப்பதிவு பின்னணி இசை
ஒளிப்பதிவு அழகாக உள்ளது. படத்தைப் பார்க்கும் போது நமக்கு அந்நிய உணர்வு வருவதில்லை. நம்ம பக்கத்துல நடப்பது போல உள்ளது, ஒரு Elite Feel இருந்தாலும்.
படத்தில் சின்ன சின்னப் பாடல்கள் வருகிறது. பின்னணி இசையும் படத்தைச் சிதைக்காத படியுள்ளது.
ஒரு இடத்தில் கார்த்திக்கு வரும் ‘சந்திரரே சூரியரே’ பாடல் யாருடைய தேர்வு?! அட்டகாசம். இதை விடப் பொருத்தமான பாடல் இருக்க முடியாது.
என்ன தான் படமென்றாலும் பார்க்கும் போது ஒரு மாதிரியாகி விட்டது.
உண்மையாகவே தியாகராஜன் தான் இயக்கினாரா?! தற்போதைய தலைமுறை இயக்குநர்களை விட மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார்.
தேவையில்லாத காட்சியென்று எதுவுமே இல்லை, கச்சிதமான இயக்கம்.
யார் பார்க்கலாம்?
வயது வந்தோர் காட்சியுள்ளது ஆனால், விரைவில் கடந்து சென்று விடுகிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை ரசிப்பவர்கள் தவறவிடக்கூடாத படம்.
சஸ்பென்ஸ் படமென்பதால், ட்விஸ்டுகளை கூற முடியாததால், வேறு எதையும் குறிப்பிடவில்லை.
திரையரங்கு சென்று பார்த்த கடைசிப் படங்கள் பார்க்கிங், லால் சலாம் மற்றும் அந்தகன். பார்க்கிங், அந்தகன் படங்கள் மன நிறைவைக் கொடுத்த படங்கள்.
Directed by Thiagarajan
Screenplay by Thiagarajan
Dialogue Pattukkottai Prabakar
Based on Andhadhun by Sriram Raghavan
Produced by Shanthi Thiagarajan, Preethi Thiagarajan
Starring Prashanth, Simran, Priya Anand, Karthik, Samuthirakani
Cinematography Ravi Yadav
Edited by Sathish Suriya
Music by Santhosh Narayanan
Distributed by V Creations
Release date 9 August 2024
Country India
Language Tamil
கொசுறு
சிட்டி சென்டரில் படம் பார்த்தோம். லால் சலாமுக்கு சென்ற போது ₹280 இருந்த பாப்கார்ன் தற்போது குறைந்த பட்சமே ₹350 என்கிறார்கள், அநியாயம்.
சரி வந்தாச்சு! பையனை ஏமாற்றமடையச் செய்ய வேண்டாம் என்று வாங்கிக்கொடுத்தேன்.
படம் முடிந்து கீழே வந்த பிறகு மால் உள்ளேயே ஒரு தள்ளுவண்டி போல இருந்த கடையில் கோன் ஐஸ் கிரீம் வைத்து இருந்தார்கள்.
பையனும், மனைவியும் வாங்கலாம் என்று கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.
எவ்வளவு என்று கேட்டால், ₹260 என்கிறான். எனக்குத் தான் சரியா காது கேட்கவில்லையோ என்று, திரும்பக் கேட்டால் ஒன்று ₹130 என்று கூறி கீழே இருந்து அட்டையை எடுத்துக் காட்டுகிறான்.
செம கடுப்பாகி விட்டது. அந்தக் கோன் பிஸ்கட் வழக்கமான அளவை விட சிறியதாக வேறு இருந்தது. இவ்வளவுக்கும் INOX cornetto ₹70 தான்.
கோன் ஐஸ் கிரீம் அதிகபட்சம் ₹40 கூட இருக்காது. மாலில் கடை இருப்பதால் ₹50 என்று வைத்துக்கொண்டால் கூட ₹130 என்பது நம்பவே முடியாததாக இருந்தது.
பையன், மனைவி இருவரும் கடுப்பாகி விட்டார்கள். விலையைக் கேட்காமல் வாங்கி விட்டோமே என்று புலம்பிக்கொண்டே வந்தார்கள். எனக்கு மனசே ஆறலை.
யாராவது ₹130 க்கு கோன் ஐஸ் கிரீம் சாப்பிட்டுள்ளீர்களா?
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கோவை பிவிஆர்-ல் பார்த்தேன். எனக்கு அந்தகன் படம் ஓரளவு பிடித்து இருந்தது ஆனால் படத்தில் அடிக்கடி பாட்டு வந்து கடுப்பேற்றி விட்டது. எந்த பாட்டுமே கேட்க நன்றாகவே இல்லை பார்க்கவும் நன்றாக இல்லை பிரசாந்த் பியானோ வாசித்துக் கொண்டே பாடிக்கொண்டே இருக்கிறார்😀 பாட்டு எப்போது முடிந்து எப்போது அடுத்த சீன் வரும் என்று இருந்தது. படம் ஆரம்பித்து 15 நிமிடத்திற்கு பிறகு கதைக்கு வருகிறார்கள் அதுவும் எனக்கு சலிப்பை தந்தது. என்னை பொறுத்தவரை சுமாராக இருந்தது மிகவும் மோசம் என்று சொல்ல முடியாது இது என்னுடைய பார்வை.
கிரி, அந்தகன் விமர்சனத்தை நான் நிச்சயம் எதிர்பாரக்கவில்லை.. காரணம் படம் நன்றாக இருக்கிறது என்ற கருத்து பரவலாக இருந்தாலும், நீங்கள் திரையில் இந்த படத்தை பார்ப்பீர்கள் என எண்ணவில்லை.. கல்லூரி படிக்கும் போது பிரசாந்த் பிடிக்கும்..;ரசிகன் என்றெல்லாம் கிடையாது.
அவரின் personality, உடைகள், டீ ஷர்ட் – ஜீன்ஸ் என்றாலே அவர் தான் ஹைலைட்.. கண்ணெதிரே தோன்றினால் படத்தில் சில காட்சிகளில் சட்டைம் அணிந்து வருவார்.. அதுவும் செம்மையாக இருக்கும்.. பிரியாத வரம் வேண்டும் படத்தில் வரும் விடைகொடு பாடல் என் வாழ்க்கையோடு தொடர்புடைய பாடல் அது.. தற்போது கேட்டாலும் கல்லூரியில் படித்த நாட்கள் நினைவுக்கு வந்து போகும்..
எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த சமயத்தில் பிரசாந்த் திரைவாழ்க்கை வேறு மாறி போனது.. உண்மையில் அவருடைய மனநிலையில் இருந்து பார்க்கும் போது கடுமையான ஒன்று.. காரணம் உச்சியில் இருந்து கீழே வருவது போல ஒரு சரிவை தாங்கி கொண்டு மீண்டும் நடிப்பது, உடலை பராமரிப்பது, தயாரிப்பில் ஈடுபடுவது எல்லாம் கடினமான ஒன்று..
இவரின் தந்தை பலமாக இருப்பது மிகவும் சிறப்பு.. இந்த படம் வெற்றி பெற்றதில் நிச்சயம் இருவரும் இரட்டிப்பு சந்தோஷம் அடைந்து இருப்பார்.. இடையில் சில படங்கள் நடித்து இருந்தாலும் எந்த படமும் அவருக்கு பெரிய அளவில் வெற்றி அடையவில்லை…
அந்தாதூன் ஹிந்தி படம் பட்ஜெட் 38 கோடி.. வசூலித்தது 430 கோடிக்கு மேல் என படித்த போது, சத்தியமாக நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. அதுவும் பாலிவுடில் இந்த பட்ஜெட் மிக மிக குறைவு.. நிறைய மொழிகளில் படத்தை மறு உருவாக்கம் செய்து உள்ளார்கள்.. வெற்றி பெற்றதா என்று தெரியவில்லை.. ஹிந்தி படம் வெளியான போதே கடும் போட்டி இருந்த சமயத்தில் தியாகராஜன் இதன் உரிமையை வாங்கி உள்ளார்.. எவ்வளவு தொகை என்பது அறியவில்லை..
படத்தை முடித்து இத்தனை நாட்கள் கழித்து வெளியிட்ட போதும் வரவேற்பு பெற்றது இன்னும் சிறப்பான ஒன்று.. ஏனெனில் சில நல்ல படங்கள் வெளியீட்டில் தாமதமாகும் போது படம் வெற்றி பெறாமல் போகி விடும்.. இரண்டு இயக்குனர்கள் மாறி, மூன்றாவதாக தியாகராஜனே படத்தை இயக்கி வெற்றியும் பெற்று உள்ளார்..
@ஹரிஷ்
“படத்தில் அடிக்கடி பாட்டு வந்து கடுப்பேற்றி விட்டது.”
படமே பியானோ இசைக்கலைஞரை மையமாக வைத்துள்ளது. அப்படியிருக்கையில் பாடல் வருவது இயல்பு.
இதைத் தவிர்த்து படத்தை எடுக்க முடியாது.
ஆனால், முழுப்பாடலாக இல்லாமல் சிறு சிறு பாடல்களாகத்தான் கொடுத்தார்கள்.
“பிரசாந்த் பியானோ வாசித்துக் கொண்டே பாடிக்கொண்டே இருக்கிறார்😀”
சரவண பவன் உணவகத்தில் எல்லாமே சைவமா இருக்குனு சொல்ற மாதிரி இருக்கு நீங்க சொல்வது 🙂 .
இசைக்கலைஞர் அதைத்தானே செய்ய முடியும்.
“என்னை பொறுத்தவரை சுமாராக இருந்தது மிகவும் மோசம் என்று சொல்ல முடியாது இது என்னுடைய பார்வை.”
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை, தவறில்லை.
@யாசின்
“கிரி, அந்தகன் விமர்சனத்தை நான் நிச்சயம் எதிர்பாரக்கவில்லை.. காரணம் படம் நன்றாக இருக்கிறது என்ற கருத்து பரவலாக இருந்தாலும், நீங்கள் திரையில் இந்த படத்தை பார்ப்பீர்கள் என எண்ணவில்லை..”
ஆமாம் யாசின் 🙂 . எனக்கே திட்டமில்லை. திடீரென்று தான் செல்ல முடிவு செய்தேன்.
“கண்ணெதிரே தோன்றினால் படத்தில் சில காட்சிகளில் சட்டைம் அணிந்து வருவார்.. அதுவும் செம்மையாக இருக்கும்.. ”
அதோடு அவரது கண்ணாடியும் ஒரு பணக்கார களையை அக்கதாப்பாத்திரத்துக்கு கொண்டு வந்து இருக்கும்.
“எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த சமயத்தில் பிரசாந்த் திரைவாழ்க்கை வேறு மாறி போனது.”
அவரது மனைவியுடன் பிரச்சனையானது.
“உச்சியில் இருந்து கீழே வருவது போல ஒரு சரிவை தாங்கி கொண்டு மீண்டும் நடிப்பது, உடலை பராமரிப்பது, தயாரிப்பில் ஈடுபடுவது எல்லாம் கடினமான ஒன்று..”
அவரது அப்பா துணையாக இருந்ததாலும், இவருடைய முயற்சியும், நேரமும் சேர்ந்து அமைந்து விட்டது.
“இந்த படம் வெற்றி பெற்றதில் நிச்சயம் இருவரும் இரட்டிப்பு சந்தோஷம் அடைந்து இருப்பார்.. இடையில் சில படங்கள் நடித்து இருந்தாலும் எந்த படமும் அவருக்கு பெரிய அளவில் வெற்றி அடையவில்லை…”
ஆமாம் 🙂 .
பொன்னர் சங்கர் படம் இவர் தவிர்த்து இருக்க வேண்டும். இப்படம் இவருடைய சந்தை மதிப்பை குறைத்து விட்டது.
“படத்தை முடித்து இத்தனை நாட்கள் கழித்து வெளியிட்ட போதும் வரவேற்பு பெற்றது இன்னும் சிறப்பான ஒன்று.”
சரியா சொன்னீங்க.. இது போன்று தாமதித்து வரும் படங்கள் வெற்றி பெற்றதில்லை.
இப்படமும் சரியான நேரத்தில் (விடுமுறை நாட்களில்) வெளியாகி இருந்தால், மேலும் வசூலை பெற்று இருக்கும்.
“இரண்டு இயக்குனர்கள் மாறி, மூன்றாவதாக தியாகராஜனே படத்தை இயக்கி வெற்றியும் பெற்று உள்ளார்..”
இது வியப்பான ஒன்று. தியாகராஜனுக்கு மன நிறைவை கொடுத்து இருக்கும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை, தவறில்லை.
@உங்கள் ரசனையும் தவறில்லை.
சரவண பவன் உணவகத்தில் எல்லாமே சைவமா இருக்குனு சொல்ற மாதிரி இருக்கு நீங்க சொல்வது 🙂
ஹி ஹி ஹி. உதாரணம் நல்லா இல்லை இன்னும் நல்லா ஏதாவது சொல்லி இருக்கலாம்.
படமே பியானோ இசைக்கலைஞரை மையமாக வைத்துள்ளது. அப்படியிருக்கையில் பாடல் வருவது இயல்பு.
ஹையோ சாமீ. பாடல்கள் வருவது இயல்பாக இருக்கலாம் ஆனால் அந்த பாடல்கள் நன்றாக இல்லை அதனால் போர் அடிக்கிறது என்று தான் நானும் சொன்னேன் ஏன் பாடல்கள் வருகிறது என்று நான் சொல்லவில்லையே. ஏதோ நான் சொல்வதை விமர்சனம் செய்ய வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாக உள்ளது போல தெரிகிறது.
இசைக்கலைஞர் அதைத்தானே செய்ய முடியும்
இது கொலை யார் செய்தார்கள் என்பது பற்றிய கிரைம் திரில்லர் படம் தானே இது. இப்படம் ஒன்றும் இசையை பற்றிய படம் இல்லையே. நீங்கள் ஏன் அவர்களுக்காக இவ்வளவு மொட்டு கொடுக்கிறீர்கள்