உண்மைச்சம்பவங்களான ஆணவக்கொலையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் மர்டர். Image Credit
மர்டர்
இந்தியா முழுக்க சாதி, மதங்களில் நடக்கும் ஆணவக்கொலையை வைத்து ஏற்கனவே ஏராளமான படங்கள் வந்து விட்டன, சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இவை நிற்காது. இன்னும் சில தலைமுறைகள் சென்றால் மாறலாம். காரணம், தற்போது சமூகத்தளங்களும், திரைப்படங்களும் வளர்த்து வருகின்றன.
இவ்வாறு நடந்த ஒரு சம்பவத்தை வைத்து மர்டர் எடுக்கப்பட்டுள்ளது.
என்ன சிறப்பு?
இப்படத்தின் விமர்சனம் எழுதும் அளவுக்கு முக்கியத்துவம் இல்லை ஆனால், இதோடு சிலவற்றையும் கூற நினைத்ததால் இந்த விமர்சனம்.
பாசமிகு அப்பாவாக நடித்தவர் ஆகச்சிறந்த நடிப்பு. துவக்கத்திலிருந்து இறுதி வரை அபாரமாக நடித்துள்ளார் குறிப்பாக அவரது Transformation.
தான் அளவு கடந்த அன்பு வைத்த மகள் புதிதாக வந்த ஒருவனுக்காகத் தன்னையே ஒதுக்கும் போது உடைந்து விடுகிறார்.
எதிர்பாராத நிகழ்வை அவரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
பெண்ணின் அம்மா நன்றாக நடித்துள்ளார். ஒரு சராசரி அம்மாவாக, மனைவியாக அவரது பரிதவிப்பை அழகாக பிரதிபலித்துள்ளார்.
ராம் கோபால் வர்மா
வர்மா படத்துக்கே உரிய ஒளிப்பதிவு கோணங்கள். செலவு என்று எதுவுமே இல்லை. பெரும்பாலான படத்தை ஒரு வீட்டுக்குள்ளேயே முடித்து விட்டார்கள்.
ஆனால், சலிப்பை ஏற்படுத்தாத அளவுக்கு உள்ளது.
பலரும் இப்படத்தைக் கடுமையாக விமர்சித்து உள்ளார்கள். ஆணவக்கொலையை ஆதரிப்பது போல உள்ளது என்பது உட்படப் பல குற்றச்சாட்டுகள்.
அவர் செய்தது தவறு என்றாலும், இறுதியில் தன் மகளுக்காகவே அனைத்தையும் செய்ததாக முடிக்கப்படுகிறது.
அந்தப்பையனை கொன்றால், மகள் தன்னிடமே வந்து விடுவாள் என்பது லாஜிக்கே இல்லையென்றாலும் செய்கிறார்.
இது தான் நடக்கும் என்று தெரிந்த படம், இருப்பினும் பெண்ணின் அப்பா கதாபாத்திரத்தின் நடிப்பு கவர்ந்தது.
லிட்டில் பிரின்சஸ்
என் அக்காக்களுக்கு அப்பா கட்டுப்பாடான சுதந்திரம் கொடுத்தார். அந்தச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை அனைவரையும் உணரச்செய்து இருந்தார்.
ஒரே பையன் என்பதற்காக எனக்கு எந்தக் கூடுதல் உரிமையோ, சுதந்திரமோ கொடுத்ததில்லை, அனைவரையும் ஒரே மாதிரி தான் பெற்றோர் வளர்த்தார்கள்.
இதையே என் பசங்க கிட்ட பின்பற்றுகிறேன் ஆனால், என் பெற்றோர் போல வளர்க்க முடியுமா? என்ற பயம் இருந்து கொண்டே உள்ளது.
அக்காலத்தில் இருந்தே என்றாலும் தற்போது அப்பாக்கள் மகளை வரம்புக்கு மீறிக் கொண்டாடுவது, செல்லம், கட்டுப்பாடற்ற சுதந்திரம் கொடுப்பது என்றுள்ளார்கள்.
ஊருல இவங்க தான் மகளைப் பெற்றது போல அலப்பறை.
அம்மாவை இப்பெண்கள் (ஒப்பீட்டளவில்) மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நீயா நானாவில் ‘என்னை மதிப்பதே இல்லை, அவளுக்கு எல்லாமே அப்பா தான்‘ என்று ஒரு பெண் விரக்தியாகக் கூறினார்.
இவ்வாறு அதிக செல்லம் கொடுத்து வளர்த்து, பின்னர் மேற்கூறிய முறையில் ஏதாவது நடந்தால், கொந்தளிக்க வேண்டியது.
அதிக செல்லம்
பாசம் கொடுப்பது தவறில்லை ஆனால், அதையே Advantage ஆக எடுத்துக்கொண்டு, நாம் எது செய்தாலும், கேட்டாலும் செய்வார்கள், செய்ய வேண்டும் என்ற மனநிலைக்குப் மகளைக் கொண்டு செல்வது தவறு.
தற்போது பெரும்பாலான வீடுகளில் இது தான் நடக்கிறது. இதைக்கேட்டால் ‘மகளைப் பெற்ற அப்பாக்களுக்குத் தான் தெரியும்’ என்று வசனம் பேசுவார்கள்.
இவர்களே அதிகச் செல்லம் கொடுத்து லிட்டில் பிரின்சஸ் என்று வளர்த்து ஆளாக்கி, திருமணம் ஆன பிறகு குடும்பத்திற்குள் பெரிய சண்டையை உருவாக்கி விடுவார்கள்.
இன்றைய தலைமுறை பசங்க மனைவியிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு படுவதற்குப் பெண்ணுடைய அப்பாவின் அதிகச் செல்லம் கொடுக்கும் வளர்ப்பு முக்கியக் காரணங்களில் ஒன்று.
ஒரு குழந்தை
விமர்சனம் பெண் தொடர்பானது என்பதால் இதைக்குறிப்பிட்டேன். இதே போல வளர்க்கப்படும் பசங்க கதையை இன்னொரு கட்டுரையில் பகிர்கிறேன்.
தற்போது பலரும் பள்ளிக்கட்டணம், பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக ஒரு குழந்தையே பெற்றுக்கொள்கிறார்கள். இதன் காரணமாகவே கண்டபடி செல்லம் கொடுத்து நாசமாக்கி வருகிறார்கள்.
தன் பிள்ளையின் எதிர்காலத்தை நாசமாக்கியதில் தனக்கும் பங்குள்ளது என்பதையே பிள்ளைகள் பாதிக்கப்படும் போது தான் பெற்றோர்கள் உணர்கிறார்கள். சிலர் கடைசி வரை உணர்வதில்லை.
எல்லாம் முடிந்த பிறகு கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது?!
Read : மகளுக்கு வில்லியாகும் அம்மாக்கள்
யார் பார்க்கலாம்?
இப்படத்தில் சிறப்பாக எதுவுமில்லை காரணம், ஏற்கனவே இது போன்ற ஏராளமான படங்கள் வந்து விட்டன.
பெண்ணின் அப்பா கதாபாத்திரத்தின் நடிப்பு ரசிக்கும் படியிருந்தது. மகிழ்ச்சி, பாசம், விரக்தி, ஏமாற்றம், அதிர்ச்சி, கோபம் என்று அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தியிருந்தார்.
Amazon Prime ல் காணலாம், தமிழில் உள்ளது.
இந்த விமர்சனம் எழுதக்காரணமே லிட்டில் பிரின்சஸ் அட்ராசிட்டிஸ் தான்.
Directed by Anand Chandra
Written by Anand Chandra
Produced by Ram Gopal Varma, Anuraag Kancharla
Starring Srikant Iyengar, Sahithi
Cinematography Jagadeesh Cheekati
Edited by Srikanth patnaik
Music by DSR
Release date 24 December 2020
Running time 113 minutes
Country India
Language Telugu/Tamil
கொசுறு
Sairat என்ற மராத்தி மொழிப் படம் இது போன்ற ஆணவக்கொலை படம் ஆனால், மிகச்சிறப்பாக எடுத்து இருப்பார்கள்.
குறிப்பாக நாயகியாக வரும் பெண் கதாபாத்திரம் மறக்க முடியாத கதாபாத்திரம். இப்படம் பார்த்தால், இதன் தாக்கம் ஓரிரு நாட்களுக்கு இருக்கும்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
இது போன்ற படங்களின் மீது எப்போதும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் சுத்தமாக கிடையாது .. காரணம் இந்த ஆவண கொலை என்ற கோட்பாடே ஆரம்பம் முதல் பிடிக்காத ஒரு கான்செப்ட். குறிப்பாக இந்த ஆணவக்கொலைகள் ஒன்று ஜாதிக்காகவும் மற்றொன்று சுய கவுரவத்துக்காவும் (மற்றவர் பார்வையில் என்ன நினைப்பார்களோ) என்பதற்காக தான் பெரும்பாலும் நிகழ்த்தபடுகிறது..
இது போல கொலைகளை செய்வதற்கு எங்கிருந்து தான் மனது வருகிறதோ தெரியவில்லை.. ரெண்டு பிள்ளைகளை பெற்ற ஒரு தகப்பனாக எனக்கு இது போன்ற செய்திகளை படிக்கும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறது.. தற்போதைய காலகட்டத்திலும் பெற்றோர்கள் இவ்வளவு வன்மமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.. எல்லோரும் ஒரு குழந்தையை வளர்க்க தற்போது இவ்வளவு போராட்டங்களை, வலிகளை எதிர்கொள்கின்றனர்..
சிறு வயதிலே எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு சொல்லி வளர்ப்பது பெற்றோரின் கடமை.. அதையும் மீறி சில விஷியங்கள் கை மீறி செல்லும் போது, அதை பக்குவமாக எதிர்கொள்ள வேண்டும்.. இதற்கு ஆணவ கொலை என்பது தீர்வல்ல.. ஒரு ஆவண கொலை என்பது ஒட்டு மொத்த குடும்பத்தின் நிம்மதியை குலைத்து விடுவது மட்டுமல்லாமல் எதிர்காலத்தையே சூனியமாக்கி விடுகிறது..
மாரத்தி மொழி என்ற உடனே 10 / 12 வருடங்களுக்கு முன்பு கேட்ட ஒரே ஒரு மராத்தி மொழி பட பாடல் நினைவுக்கு வந்து போகிறது.. ஹரிஹரன், ஷ்ரேய கோஷல் பாடியது.. படத்தின் பெயர் Jogwa . மொழியே புரியவிடினும் இருவரின் குரலில் ஒரு வித மயக்கம் இருக்கும்.. மனம் அமைதியான இருக்கும் போது ஆடியோ மட்டும் கேட்டு பாருங்க கிரி..
https://www.youtube.com/watch?v=en60_iC0u2M
பங்களாதேஷ் கலவரம் அந்நாட்டு நிலவரம் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள். அடுத்தது இந்தியா தான் என்று அந்த கலவரக்காரர்களும் இந்த கலவரக்காரர்களுக்கு இங்கு சப்போர்ட் செய்கிறவர்களும் பேசிக் கொள்கிறார்கள் அதை பற்றி நீங்கள் உங்கள் அபிபிராயத்தை சொல்லுங்கள்
@யாசின்
“சிறு வயதிலே எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு சொல்லி வளர்ப்பது பெற்றோரின் கடமை.. அதையும் மீறி சில விஷியங்கள் கை மீறி செல்லும் போது, அதை பக்குவமாக எதிர்கொள்ள வேண்டும்.”
இது தான் சரி யாசின்.
பெற்றோர்கள் நல்லதை சொல்லி தந்தாலும், அவர்கள் செல்லும் இடம், சூழ்நிலை ஆகியவை ஒருவரை மாற்றி விடுகிறது.
“மனம் அமைதியான இருக்கும் போது ஆடியோ மட்டும் கேட்டு பாருங்க கிரி..”
கேட்டேன்.. ரொம்ப நன்றாக உள்ளது 🙂 .
@ராமகிருஷ்ணன்
எழுதி விட்டேன் ஆனால், இன்று தான் வெளியிட்டேன்.