YouTube ல் பரத்வாஜ் ரங்கன் நடிகர் பிரசாந்தை பேட்டி எடுத்தார். அப்பேட்டியில் பிரசாந்த் கூறியுள்ளதைப் பற்றிப் பகிரவே இக்கட்டுரை. Image Credit
பிரசாந்த்
அஜித் விஜய் போல ஸ்டார் நடிகராக வந்து இருக்க வேண்டிய பிரசாந்த், சரியான கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்காததும், அவரது திருமண வாழ்க்கை பிரச்சனையில் முடிந்ததாலும் உயரத்தை அடைய முடியவில்லை.
இதன் பிறகு அவர் நடித்த புலன் விசாரணை 2, ஜானி, சாகசம், பொன்னர் சங்கர், மம்பட்டியான் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
திரையுலகில் மறக்கப்பட்ட நடிகராக இருந்த நிலையில் அந்தகன் படத்தின் வெற்றி அவருக்கு மறு வரவைக் கொடுத்துள்ளது.
இதன் பிறகு சரியான படங்கள் அமையுமா? என்பது நேரத்தைப் பொறுத்தது.
நடித்த படங்கள்
நடித்த படங்களைப் பார்ப்பீர்களா? என்று கேட்டதற்கு,
‘நான் நடித்த படங்களைப் பார்க்கும் போது இன்னும் சிறப்பா செய்து இருக்கலாம். இதைச் செய்து இருக்கக் கூடாது என்று தோன்றும்‘ என்றார்.
இதே பரத்வாஜ் ரங்கன் பேட்டியில், ‘நான் இயக்கிய படங்களைப் பார்க்க மாட்டேன், அதில் நான் செய்த தவறுகளே எனக்குத்தெரியும்‘ என்று மணிரத்னம் கூறினார்.
இது மிகவும் உண்மை.
மாபெரும் வெற்றிப்படமாக இருந்தாலும், அதன் பிறகு பல படங்களை இயக்கிய அனுபவத்தில் ஏற்கனவே எடுத்த படங்களின் காட்சி சரியில்லாததாகத் தோன்றும்.
இதுவொரு இயல்பான எண்ணமே. எனவே, பிரசாந்த் கூறியது எதார்த்தமாக இருந்தது.
‘படங்கள் தோல்வியடைந்தால் எளிதாக எடுத்துக்கொள்வேன். பிரச்சனையை அலசுவேன், என்ன தவறு நடந்தது என்று யோசிப்பேன்.
என்னை முழுமையாக கடவுளிடம் ஒப்படைத்து விடுவேன்‘ என்று கூறினார்.
எதற்கும் அசராமல் இருக்க முடியுமா?
பிரசாந்த் பதில்களால் திருப்தியடையாத பரத்வாஜ் ரங்கன், வெவ்வேறு வழிகளில் கேள்விகளை மாற்றிக் கேட்டுப்பார்த்தார்.
இருப்பினும் தனது கருத்தில் பிரசாந்த் உறுதியாக இருந்தார்.
‘அனைத்து நேரங்களிலும் பாசிடிவாக இருந்து விட முடியாதல்லவா!‘ என்று கூறினார். இங்கே தான் இக்கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியது.
நேர்மறை எண்ணங்கள் எனக்கு பிடித்தமானது. முடிந்தவரை நேர்மறையாக இருக்க முயல்வேன் அதற்கான பலனையும் பெறுகிறேன்.
இருப்பினும் “முயல்வேன்” என்று கூறியுள்ளேன், அதன் இன்னொரு அர்த்தம் அனைத்து நேரங்களிலும் இருக்க முடியாது.
‘ஒரு படத்துக்கு என் முழு உழைப்பைத் தருகிறேன். அதையும் மீறித் தோல்வியடையும் போது அதை ஏற்றுக்கொள்கிறேன்‘ என்கிறார் பிரசாந்த் .
பிரசாந்த் சந்தித்த தோல்விகள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரை வாழ்க்கையிலும் மிகவும் கடுமையானது.
இவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது பரத்வாஜ் ரங்கனை போல எனக்கும் நம்புவதற்குக் கடினமாக இருந்தது.
ஏனென்றால், சில நாட்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பலாமே தவிர, எப்போதுமே சாதாரணமாக அனைத்தையும் எடுத்துக்கொள்வது எளிதல்ல.
காரணம், இது போன்ற சூழ்நிலையில் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாது, தூக்கம் வராது, மனம் தெளிவற்ற நிலையில் இருக்கும்.
எப்படிக் கடந்து வந்தீர்கள்?
இதற்கும் மேற்கூறிய முறையில் கொஞ்சம் மாற்றிக் கூறி இருந்தார்.
ஒருவர் தனக்கு ஏற்படும் சிக்கலை எப்படியும் சமாளிக்க முயலலாம் என்றாலும், அதற்கு அடிப்படைத் தேவை பொருளாதாரம்.
நமக்கு வரும் கோபத்தைத் தடுக்கலாம், சண்டையிடாமல் அமைதியாக இருக்கலாம் ஆனால், நாளைக்கு வேண்டிய செலவுக்கு என்ன செய்ய முடியும்?
எடுத்துக்காட்டுக்கு, வேலை பறிபோனால் கட்ட வேண்டிய EMI, பள்ளிக்கட்டணம், எதிர்காலம் குறித்த பயம் என்று வரிசைக் கட்டி நிற்கும்.
ஆனால், அதே வேறொரு வழியில் வருமானம் வருகிறது என்றால், ‘சரி பார்த்துக்கலாம், என்ன இப்போ?!‘ என்ற மனநிலை, தைரியம் இருக்கும்.
இந்தத் தைரியத்தைக் கொடுப்பது எது?!
தியாகராஜன்
பிரசாந்துக்கு அவரது அப்பா மிகப்பெரிய உதவியாக இருந்தார். பிரசாந்தை தூக்கி விட, அடுத்த படங்களை எடுக்க உறுதுணையாக இருந்தார்.
அந்தகன் படத்தின் மறு உருவாக்க உரிமையை வாங்கி, இரு இயக்குநர்களை மாற்றி, இறுதியில் தியாகராஜனே இயக்கி வெற்றி அடைய வைத்தார்.
உஸ்மான் சாலையில் ‘PRASHANTH GOLD TOWER‘ என்ற மிகப்பெரிய வணிக வளாகம் உள்ளதோடு தியாகராஜன் தொழிலதிபராக இருந்தது பிரசாந்த் அதிர்ஷ்டம்.
இது போன்ற வாய்ப்புகள் எத்தனை பேருக்குக் கிடைக்கும்?!
பொருளாதாரப் பின்புலம் இருந்ததாலே பிரசாந்த் நெருக்கடிகளைச் சந்தித்தாலும் அடுத்த வேலையில், முயற்சியில் கவனம் செலுத்த முடிந்தது.
இருப்பினும், நெருக்கடிகளைக் கடந்து, விமர்சனங்களை எதிர்கொண்டு திரும்ப ஒரு வெற்றியைப் பெறுவது பாராட்டத்தக்கது.
ஏனென்றால், பணம் இருந்தும் பலர் மனம் உடைந்து தவறான முடிவுகளை எடுக்கும் போது, அதைக்கடந்து வருவது சிறப்பு.
சிறப்பான பேட்டி
மேற்கூறியதை தவிர்த்துப் பிரசாந்த் பொறுமையாக, பரத்வாஜ் ரங்கனை இடைமறிக்காமல் கேள்வி கேட்க விட்டது சிறப்பானதாக இருந்தது.
தான் சார்ந்த விஷயங்களைப் பரத்வாஜ் ரங்கன் கூறியதை பிரசாந்த் ரசித்துக் கேட்டதோடு அவரைப் பேசவிட்டு மேலும் விவரிக்க அவரை வலியுறுத்தினார்.
தான் தேர்வு செய்த படங்களை நியாயப்படுத்திய போது முழுக்க ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், கூறியதில் நியாயம் இருந்ததை உணர முடிந்தது.
ஷாக், பொன்னர் சங்கர் போன்ற படங்கள் இவ்வகை (Genre) படங்களுக்கு ஆரம்பமாக இருந்தது என்றார்.
இந்நேர்முகம் அந்தகன் படம் வெளியாகும் முன்பு வெளியானது.
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. பொதுவாக எந்த துறையில் சாதித்தவர்களின் அனுபவங்களை கேட்பதற்கும், அதை குறித்து படிப்பதற்கும் மிகவும் பிடிக்கும்.. அதே சமயம் வாழ்வில் உயரே இருந்து கீழே சரிந்தவர்களின் அனுபவங்களை தெரிந்து கொள்ளவும் பிடிக்கும்.. காரணம் இரண்டு நிகழ்வுகளும் பெரிய வேறுபாடு என்பது இல்லை.. இதை செய்ததால் நான் மேலே சென்றேன்.. இதை செய்யாததால் கீழே சென்றேன்.. அவ்வளவுதான் வித்தியாசம்.
கண்ணதாசன் அவர்களின் வாழ்வியலை விட ஒரு பெரிய எடுத்துக்காட்டு இருக்கவே முடியாது.. தன்னுடைய வாழ்நாளில் அவர் எல்லா படிநிலைகளையும் கடந்து வந்தவர்.. பணம், பேர், புகழ், வறுமை என எல்லாவற்றையும் அவர் வாழ்ந்த காலத்திலே பார்த்தார்.. நிறைய பேருடைய சரித்திரங்களை படித்து இருந்தாலும், இவரின் வாழ்வியல் நான் எப்போது படித்தாலும் பிரமிப்பதுண்டு..
அவர் கூறியது போல் ஒரு மனிதன் இப்படி தான் வாழ வேண்டும் என்பதை விட, எப்படியெல்லாம் வாழ கூடாது என்பதை என் வாழ்க்கையை பார்த்து தெரிந்து கொள் என்பதை தெளிவாக கூறியுள்ளார்.. தான் வாழும் காலத்திலே தன்னை பற்றி உள்ள குறைகளை யாரும் வெளிக்காட்டி கொள்ள விரும்பமாட்டார்கள்.. ஆனால் அதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் எல்லாவற்றையும் அவரே பதிவு செய்து இருப்பது மிகவும் சிறப்பு..
பொதுவாக தற்போது சினிமாவில் சாதித்தவர்களின் வரலாற்றிலிருந்து ஏதேனும் படிப்பினைகளை எடுத்து கொள்ளலாம் என்றாலும், அது எவ்வாறு நம் வாழ்வியலோடு ஒத்து போகும் என்று எனக்கு தெரியவில்லை.. முன்பு விஜய் சேதுபதியின் உரையாடல்கள் மிகவும் பிடிக்கும்.. ஆனால் தற்போது கமலை விட அதிகம் புரியாமல் பேசுவதால் நான் முற்றிலும் தவிர்த்து விட்டேன்..
பணம் உள்ளவர்கள் தான் அதை ஒரு பொருட்டாக பார்ப்பதில்லை.. ஆனால் பணம் இல்லாமல் தவிர்ப்பவர்களுக்கு தான் அதன் வலி புரியும்.. இங்கு பெரும்பாலும் நடிகர்களின் நிலை, ஒரு காலகட்டத்தில் நடிகர்களுக்கு வாய்ப்பு குறைந்து விட்டாலும், இடைப்பட்ட காலகட்டத்தில் தான் சம்பாரித்ததை சரியாக முதலீடு, சேமிப்பு வைத்து இருந்தால் கவலையில்லை..
அதுமட்டுமில்லாமல் மற்ற துறையின் வருமானத்தையும் , சினிமாவின் வருமானத்தையும் compare செய்யவே முடியாது.. ஒரு நேர்காணலில் இயக்குனர் கே.ஸ். ரவிக்குமார் கூறியது நாட்டாமை திரைப்படத்தில் ரவிக்குமார், சரத்குமார், கவுண்டமணி இவர்களின் சம்பளம் நான்கு லட்ச ரூபாய்.. திரைப்படங்களை ரசிக்கலாம், கொண்டாடலாம் தவிர இவர்கள் வாழ்வியல் நமது நடுத்தர வாழ்க்கைக்கு ஏற்புடையதாக இருக்குமா? என்றால் என்னை பொறுத்தவரை இருக்காது..
@Yaasin
கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தில் அவரை பற்றி விரிவாக கூறி இருப்பார். அந்த ஒரு புத்தகம் மட்டுமே அவர் சார்ந்து படித்தது.
“தான் வாழும் காலத்திலே தன்னை பற்றி உள்ள குறைகளை யாரும் வெளிக்காட்டி கொள்ள விரும்பமாட்டார்கள்.. ஆனால் அதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் எல்லாவற்றையும் அவரே பதிவு செய்து இருப்பது மிகவும் சிறப்பு.”
இவ்வாறு கூறுவதற்கு ஒரு தில் வேண்டும்.
தலைவரையும் கூறலாம். தனக்கு நேர்ந்தவற்றை தயக்கமில்லாமல், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றியெல்லாம் கவலையில்லாமல் கூறுவார்.
“விஜய் சேதுபதியின் உரையாடல்கள் மிகவும் பிடிக்கும்.. ஆனால் தற்போது கமலை விட அதிகம் புரியாமல் பேசுவதால் நான் முற்றிலும் தவிர்த்து விட்டேன்.”
அதற்கு காரணம், அவருடைய இடது சாரி சிந்தனை நண்பர்களின் பழக்கம்.
நல்லா இருந்த மனுஷனை கெடுத்து விட்டார்கள்.
“டைப்பட்ட காலகட்டத்தில் தான் சம்பாரித்ததை சரியாக முதலீடு, சேமிப்பு வைத்து இருந்தால் கவலையில்லை..”
பெரும்பாலானவர்கள் செய்யத் வறி விடுகிறார்கள். பணம் வந்தால் உடனே வீண் செலவுகளை செய்து, சேமிக்க மறந்து விடுகிறார்கள்.