பொன்னான நிகழ்காலம் புத்தகம் பற்றி எழுதிய போது 30 – 50 கட்டுரைகள் எழுதும் அளவுக்குப் புத்தகத்தில் தகவல்கள் உள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன் என்று கூறி இருந்தேன், அதிலிருந்து 15 வது கட்டுரை. Image Credit
கைப்பிடிக்குள் நிம்மதி
பலருக்கு ஏராளமான பிரச்சனைகள் இருக்கும் ஆனால், அவற்றில் பெரும்பாலான பிரச்சனைகளுக்கான தீர்வுகள் அவர்களிடமே இருக்கும்.
ஆனால், அதை உணராமல் தொடர்ந்து வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்துக்கொண்டு இருப்பார்கள். கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போல்.
இதைச் சுவாமி சச்சிதானந்தா அழகான எடுத்துக்காட்டுடன் விளக்கியுள்ளார்.
குரங்கு
இளநீர் குடிப்பவர்கள் இளநீரை குடித்த பிறகு சில நேரங்களில் அதை வெட்ட முடியாமல் அல்லது சோம்பேறித்தனத்தால் அப்படியே வீசி விடுவார்கள்.
அதில் உள்ள இளம் தேங்காய் சுவையாக இருக்கும். இதை வழுக்கை என்று கூறுவர்.
குரங்குகள் இவ்வாறு கிடக்கும் தேங்காயை எடுக்கக் கையை உள்ளே விட்டு அதை எடுத்து, விரல்கள் உள்ளே வைத்து இருக்கும்.
ஆனால், விரல்களை மடக்கி இருப்பதால், சிறு துவாரத்தின் வழியே கையை வெளியே எடுக்க முடியாது. குரங்கும் தேங்காயைச் சாப்பிட நினைத்துக் கையை விரிக்காது.
இதனால், தேங்காயுடனே சுற்றிக்கொண்டு இருக்கும். ஒரு கட்டத்தில் சோர்வடைந்து, வலியின் காரணமாக, இனியும் முடியாது என்ற நேரத்தில் விரல்கள் தளரும்.
இந்த நேரத்தில் கை வெளியே வந்து விடும், குரங்கும் நிம்மதியாகும்.
மனத்தவறுகள்
இது போலத்தான், மனிதர்களும் சுய கௌரவம் (ஈகோ), பிடிவாதம், கோபம் ஆகியவற்றை விரல்களுக்குள் வைத்துச் சுற்றிக்கொண்டுள்ளார்கள்.
அதனால், ஏராளமான துன்பத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.
சுயகௌரவம், கோபம், பிடிவாதம் ஆகியவற்றாலே துன்பம் நேருகிறது என்று தெரிந்தாலும், அதை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு இருப்பார்கள்.
ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்து, மிகப்பெரிய பிரச்சனையாகி, நட்டமாகி, நட்புகள் எதிரிகளாகி அனைத்துமே சீரழிந்த பிறகே புரியும்.
இவற்றைப் பிடித்துக்கொண்டு இருப்பதால், எந்தப்பயனும் இல்லையென்பது.
அனுபவங்கள்
துவக்கத்தில் என் கோபமே எனக்கு மிகப்பெரிய எதிரியாக இருந்தது.
ஆனால், ஆண்டவன் எனக்குத் தவறை உணரும் சிந்தனையைக் கொடுத்ததால் யாரும் வலியுறுத்தாமலே தவறை உணர்ந்து திருத்திக்கொண்டேன்.
பலர் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளாமல் தாங்கள் செய்வது தான் சரி என்று தொடர்ந்து தவறை செய்து அவர்களும் நிம்மதியிழந்து, அவர்களைச் சுற்றி இருப்பவர்களையும் நிம்மதி இழக்க வைக்கிறார்கள்.
இவர்களால் என்றுமே நிம்மதியாக வாழ முடியாது.
கண் முன்னாடி ஒரு பிரச்சனைக்குத் தீர்வு இருப்பது தெரிந்தும், கையறு நிலையாக எதுவும் செய்ய முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.
ஏனென்றால், எவ்வளவு கூறினாலும் தவறை உணராமல் (ஈகோ, கோபம், பிடிவாதம்) தங்களை நியாயப்படுத்தித் தொடர்ந்து தவறிழைத்து வருவார்கள்.
வயதும் அனுபவமும்
சிலருக்கு என்ன கூறினாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள், அந்தக் குரங்கு போல அடிபட்டு, ஓய்ந்து, பலவற்றை இழந்த பிறகு புத்தி வரலாம்.
எனவே, குரங்கு போல நீங்களும் பிரச்சனைகளைக் கையில் பிடித்துக் கொண்டு இராமல், அவற்றைக் கை விட்டுப் பாருங்கள், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நாம் நினைக்கும் அளவு மோசமில்லை என்று புரியும்.
தவறிலிருந்து எவ்வாறு பாடம் கற்றுக்கொண்டு ஒருவர் தன்னை மாற்றிக்கொள்கிறாரோ அவரே உயர்ந்த நிலையை அடைகிறார்.
சிலர் வயதாகியும், இறப்பு வரையும் கூடத் தவறை உணராமல் இருப்பார்கள். எனவே, அனுபவத்துக்கும் வயதுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. இந்த பதிவுக்கு நா. முத்துக்குமார் அவர்களின் கவிதை (தலைப்பு : தூர்) ஒன்று பொருத்தமாக இருக்கும், எனவே அதை இங்கு பகிர்கிறேன்..
========================
வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விஷேசமாக நடக்கும்.
ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்…
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்…
எடுப்போம் நிறையவே!
‘சேறுடா சேறுடா’ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.
இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.
கடைசி வரை அப்பாவும்
மறந்தேப் போனார்
மனசுக்குள் தூர் எடுக்க..!”
========================
இந்த பதிவை படித்தவுடன் இந்த கவிதை தான் நினைவுக்கு வந்தது, காரணம் மிக மிக எளிமையாக இருந்த வாழ்க்கை முறையை விரும்பியோ, விரும்பாவிடினோ என்று கடினமாக மாறி போனது போல் ஒரு எண்ணம் பெரும்பாலும் உண்டு.. காரணங்கள் பலது உண்டு.. அதை பட்டியல் இட்டால் நீண்டு கொண்டே போகும்..
எல்லோரும் நம் மனதை முறையாக தூர் எடுத்தாலே நமது எண்ணங்கள் செம்மையாகம் பெறும்.. உங்களை நீங்கள் ஆரம்பத்தில் கோபம் கொள்பவராக கூறி உள்ளீர்கள்.. நான் சிறுவயது முதலே மிகவும் சாது.. ஆனால் வாழ்க்கையில் கோபப்பட்ட தருணங்களை விட ஏமாற்றத்தால் வலியால் மனதுக்குள் துடித்த தருணங்களே அதிகம்..
வயதாக, வயதாக என்னுள் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து கொள்ள முடிகிறது.. முன்பு ரசித்த பல விஷியங்களை தற்போது ரசிக்க முடியவில்லை.. ஒரு வித பக்குவப்பட்ட நிலையும் தெரிகிறது..எல்லோருக்கும் எப்போதும் நல்லவனாக இருக்க முடியாது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது..
சில நேரம் நடக்கும் நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது என்னடா??? வாழ்க்கையின் டிசைன் எவ்வாறு வடிவைமைக்க பட்டிருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை…
@யாசின்
கவிதை நல்லா இருக்கு 🙂
“வயதாக, வயதாக என்னுள் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து கொள்ள முடிகிறது.. முன்பு ரசித்த பல விஷியங்களை தற்போது ரசிக்க முடியவில்லை.. ஒரு வித பக்குவப்பட்ட நிலையும் தெரிகிறது”
கிடைக்கும் அனுபவங்களே காரணம்.
“எல்லோருக்கும் எப்போதும் நல்லவனாக இருக்க முடியாது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது..”
இதை பலமுறை இத்தளத்தில் கூறியுள்ளேன்.
உங்களை அறிந்தவரை இதிலிருந்து நீங்கள் வெளியே வர முடியாது என்றே தோன்றுகிறது. காரணம், உங்களின் சாதுவான மனது.
“சில நேரம் நடக்கும் நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது என்னடா??? வாழ்க்கையின் டிசைன் எவ்வாறு வடிவைமைக்க பட்டிருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை…”
பல த்ரில்லர், சஸ்பென்ஸ், திகில் படங்களைப்போலவே உள்ளது 🙂 .