70‘s / 80s இசை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று ‘நீ வருவாய் என’. இப்பாடலை பாடிய பாடகி கல்யாணி மேனனை பற்றிய கட்டுரை. Image Credit
நீ வருவாய் என
விஜயன், சரிதா நடித்து 1980 ம் ஆண்டில் வெளியான ‘சுஜாதா’ என்ற திரைப்படத்தில் வந்த ‘நீ வருவாய் என‘ பாடல் பலரையும் கவர்ந்தது.
MS விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்துக் காலம் கடந்தும் பலரால் ரசிக்கும் பாடலாக உள்ளது. அடிக்கடி கேட்கும் என் விருப்ப பட்டியலில் உள்ள ஒரு பாடல்.
இது போன்ற இன்னொரு பாடல் ‘நானே நானா யாரோ தானா‘.
YouTube நேர்முகம்
குட்டி பத்மினி YouTube நேர்முகத்தில் இயக்குநர் சுந்தர்ராஜன் இப்பாடலைப் பற்றியும், இப்பாடலைப் பாடிய பாடகி கல்யாணி மேனனை பற்றியும் கூறினார்.
ஒரு படத்தின் பாடலுக்காக நீ வருவாய் எனப் பாடலைப்பாடிய பாடகியைப் பாட வைக்க, MS விஸ்வநாதன் அவர்களிடம் சுந்தர்ராஜன் கேட்டுள்ளார்.
அப்போது நடந்த சம்பவத்தை MS விஸ்வநாதன் கூறியுள்ளார்.
கல்யாணி மேனன்
கல்யாணி மேனன் ஒரு மேடைப்பாடகி.
இவர் பாடும் இடத்துக்கெல்லாம் ஒரு நபர் சென்று அவரது பாடலை ரசிப்பதும், முன் வரிசையில் அமர்வதும், ஆட்டோஃகிராப் வாங்குவதும் வழக்கம்.
நாளடைவில் காதலாகி திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.
திருமணம் ஆன பிறகு இவரது கணவர் இவர் திரை துறையில் பாட பல இசையமைப்பாளர்களைச் சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளார்.
டெல்லி
இருவரும் மத்திய அரசின் வேலையிலிருந்துள்ளார்கள், கணவருக்கு டெல்லிக்கு மாற்றல் வந்து அவர் டெல்லி சென்று விட்டார்.
இருப்பினும் தொலைபேசியில் அழைத்து என்ன ஆனது? வாய்ப்பு கிடைத்ததா? என்று கேட்பது வழக்கம்.
அப்படிக் கேட்ட ஒரு நாள், ‘MS விஸ்வநாதன் அழைத்துள்ளார் நாளைக்குச் செல்ல வேண்டும்‘ என்று கூறியுள்ளார்.
இதைக்கேட்டு மகிழ்ந்த கணவர், ஒலிப்பதிவு துவங்குவதற்கு முன் வந்து விடுகிறேன் என்று கூறி, எப்படியோ விமானத்தில் பயணச்சீட்டை வாங்கி விட்டார்.
காத்திருப்பு
அடுத்த நாள் கல்யாணி மேனனும் கணவர் வருவதற்காகக் காத்திருக்கிறார் ஆனால், நேரமாகிறது வரவில்லை.
பாடல் பதிவு துவங்க வேண்டும் என்பதால் சமாதானம் கூறி, தானும் உன் அப்பா போலத்தான், தன்னிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு பாடலைப் பாட கூறியுள்ளார் MS விஸ்வநாதன் அவர்கள்.
இவரும் அரைகுறை மனதோடு கணவர் வரவில்லையே என்று பாட, பாடலின் வரிகளும் அதற்கேற்றாப்போல இருந்ததால், அதே ஏக்கத்துடன் பாடியுள்ளார்.
ஆனால், விமானநிலையத்துக்குச் சென்ற காரை வேகமாக ஓட்டக் கூறிச் சென்றதால் ஏற்பட்ட விபத்தில் கணவர் இறந்து விடுகிறார்.
இதனால், இதன் பிறகு இவர் பாடுவதையே நிறுத்தி விட்டார் என்று MS விஸ்வநாதன் அவர்கள் கூறியதை சுந்தர்ராஜன் கூறினார்.
இவ்வளவு காலமும் நாம் ரசித்த பாடலுக்குப் பின்னே இப்படியொரு சோகம் உள்ளதா? என்று மிக வருத்தமாக இருந்தது 🙁 .
விக்கிபீடியா
இதன் பிறகு இதற்காக இணையத்தில் தேடிப்பார்த்தேன் .
கல்யாணி மேனன் முதல் பாடல் ‘நல்லதொரு குடும்பம்’ படத்தில் இளையராஜா இசையமைப்பில் (1979) பாடியுள்ளார்.
இரண்டாவது பாடல் தான் 1980 ல் பாடிய ‘நீ வருவாய் என’.
இதன் பிறகு நான்கு வருடங்கள் அவர் பாடவில்லை. இடைப்பட்ட காலத்தில் தான் சுந்தர்ராஜன் கூறிய சம்பவம் நடந்து இருக்க வேண்டும்.
அதாவது, இந்த நான்கு வருட இடைவெளியில் தான் இவரைப் பாடவைக்க சுந்தர்ராஜன் கேட்டு இருக்க வேண்டும்.
1980 க்கு பிறகு திரும்ப இளையராஜா இசையில் 1984 ல் பாடியுள்ளார்.
ரகுமான்
அதன் பிறகு 10 வருட இடைவெளிக்குப் பிறகு ரகுமான் இசையில் ‘புதிய மன்னர்கள்’ படத்துக்காக 1994 ல் பாடியுள்ளார்.
இதைத்தொடர்ந்து காதலன், அலைபாயுதே, முத்து என ரகுமான் இசையில் பல பாடல்களைப்பாடியுள்ளார்.
இறுதிப்பாடலாக ’96’ படத்தில் (2018) ‘காதலே காதலே’ பாடலைப்பாடியுள்ளார்.
தனது 80 வது வயதில் 2021 ம் ஆண்டு காலமாகியுள்ளார்.
செய்திகளைத் தேடிப் படித்ததில் கிடைத்த இன்னொரு (இன்ப) அதிர்ச்சி இவருடைய மகன் தான் ஒளிப்பதிவாளர், இயக்குநர் ராஜிவ் மேனன் என்பது 🙂 .
எப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து தனது மகனை எப்படி கொண்டு வந்துள்ளார் பாருங்கள்! Great 🙏.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, இந்த பதிவை படிக்கும் போது ஒரு சில மணித்துளிகள் யோசிக்க வைக்கிறது.. நீங்கள் குறிப்பிட்ட பாடலை நான் இதுவரை கேட்டதில்லை.. ஆனால் இந்த பாடலுக்கு பின் இவ்வளவு பெரிய சோகம் இருப்பது உண்மையில் வருத்தமாக இருக்கிறது.. நாம் எங்கோ செய்திகளில் பார்த்து அதை கடந்து விடுகிறோம்.. ஆனால் பாதிக்கப்பட்டவர்க்கு மட்டும் தான் அதன் வலி புரியும்.
இந்த பதிவை படித்த பிறகு, இதனுடன் தொடர்புள்ள வேறு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. பத்திரகாளி படத்தில் வாலி எழுதி, இளையராஜா இசையமைத்த பாடல் : கண்ணன் ஒரு கைக்குழந்தை, இந்த பாடலை எப்போதெல்லாம் கேட்கிறேனோ அப்போதெல்லாம் சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சி உள்ளுக்குள் ஏற்படுவது இயல்பு. பாடலின் வரிகளை அவ்வளவு ரசிப்பேன் .
பாடலை காட்சிப்படுத்திய விதமும் பிடிக்கும்.. குறிப்பாக நடிகை ராணி சந்திரா இயல்பாக நடித்து இருப்பார். இந்த படம் நடித்து கொண்டிருக்கும் போதே தனது தாய் மற்றும் மூன்று சகோதரிகளுடன் விமானத்தில் பயணித்த போது மும்பையில் விபத்தில் இறந்து விட்டார்.. மிகவும் சோகமான நிகழ்வு இது.
சில பாடல்களை கேட்க பிடிக்கும்.. சிலது பார்ப்பதற்கு பிடிக்கும்.. இரண்டும் ஒரு சேர இருப்பது வெகு சில பாடல்கள் மட்டுமே.. எனக்கு இந்த வகையில் எப்போதும் முதலில் பிடித்தது.. பயணங்கள் முடிவதில்லை படத்தில் வரும் மணி ஓசை கேட்டு எழுந்து பாடல் தான்.. மோகன் வித்தியாசமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.. ஓவர் ஆக்ட்டிங் இல்லாமல் அளவாக நடித்து இருப்பார்..
காட்சி அமைப்பில் பிடிக்காத பாடல் : பருவராகம் படத்தில் வரும் பூவே உன்னை நேசித்தேன், கல்லூரி பருவத்தில் பல முறை பேருந்தில் கேட்டு இருக்கிறேன்.. தற்போதும் விரும்பி கேட்டும் பாடல் இது.. பாடலை கேட்டும் போது கடந்த கால நினைவுகள் வந்து போகும்.
@யாசின்
“நீங்கள் குறிப்பிட்ட பாடலை நான் இதுவரை கேட்டதில்லை.”
என்னது கேட்டதில்லையா . .. ஆஹா !
“பருவராகம் படத்தில் வரும் பூவே உன்னை நேசித்தேன்”
பாடல் எனக்கு பிடிக்கும் . . காட்சிகள் நினைவில்லை. நீங்கள் பரிந்துரைத்த கன்னட பாடலை அடிக்கடி கேட்கிறேன், ரொம்ப நன்றாக உள்ளது 🙂 .
“பாடலை கேட்டும் போது கடந்த கால நினைவுகள் வந்து போகும்.”
எனக்கு தேவா பாடல்களைக் கேட்டால், என் அறை நண்பர்களுடன் இருந்தது நினைவுக்கு வரும்.
கிரி, மன்னிக்கவும், நான் எந்த கன்னட பாடலை உங்களுக்கு கூறினேன். நினைவிலில்லை. எது என்று சொல்லவும்.
My all time favorite song : நீ வருவாய் என நான் இருந்தேன்
@Tamilnenjam
🙂 எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்.
@யாசின்
கன்னட பாடல் அல்ல Jeev Rangla மராத்தி பாடல் 🙂 .