மாநிலப் பொருளாதாரம் எப்படி இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது என்பதே இக்கட்டுரை. Image Credit
பொருளாதாரம்
ஒரு மாநிலம் நன்றாக இருந்தாலே அதையொட்டி நாட்டின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். மாநில பொருளாதாரம் சீரழிந்தால் அதனால் பாதிக்கப்படுவது அம்மாநிலம் மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரமும் தான்.
மாநிலங்களின் பொருளாதாரம் இலவசங்களால் சீரழிந்து வருகின்றன.
உரிமைத்தொகை
மாநிலத்தின் பொருளாதாரத்தைச் சீரழிப்பதில் பெண்கள் உரிமைத்தொகை முக்கியப்பங்கை வகிக்கிறது.
அரசியலில் மாற்றம் கொண்டு வருகிறேன் என்று வந்து, உரிமைத்தொகையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்.
இவர் வரவில்லை ஆனால், இவர் கூறியதைப் பயன்படுத்தி திமுக, அதிமுக கட்சிகள் உரிமைத்தொகை அறிவித்துத் திமுக ஆட்சிக்கு வந்து விட்டது.
உரிமைத்தொகை மற்றும் இலவசங்களால், அச்செலவைச் சமாளிக்க மாநில அரசு தொடர்ந்து கட்டணங்களை உயர்த்தி வருகிறது.
சொத்து வரி, மின்சாரக்கட்டணம் 100% முதல் 150% உயர்த்தப்பட்டுள்ளது.
மறைமுகச் செலவு
மறைமுகமாக அதிகளவில் செலவாகும் பணத்தை யோசிக்காமல், நேரடியாக வரும் ₹1000 மட்டுமே முக்கியமாக மக்கள் கருதுகிறார்கள்.
மாநிலத்தின் உட்கட்டமைப்பு கேவலமாக உள்ளது.
சாலைகள் படு மோசமாக உள்ளது, நாட்டுக்கே முன்னோடியாக இருந்த தமிழ்நாடு பேருந்துகள் படிக்கட்டுகள், கியர் உடைந்து தொங்குகிறது.
பேருந்து டாப் பறக்கிறது, வழியில் பழுதாகி நிற்கிறது, இருக்கை உடைந்து பயணி சாலையில் விழுகிறார். இது போன்று கூற எடுத்துக்காட்டுகள் ஏராளம்.
மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுப்பதாகக் கூறி, புத்தகங்களின் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள்.
ஒரு புறம் இலவசம் இன்னொரு புறம் கட்டண உயர்வு இது தான் திராவிட மாடல்.
இங்கே எதுவுமே இலவசம் இல்லை என்பதை மக்கள் உணர மறுக்கிறார்கள்.
மற்ற மாநிலங்கள்
உரிமைத்தொகையைத் தமிழகம் ஆரம்பித்து வைத்து, மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றத் துவங்கி விட்டன.
நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அள்ளித்தெளித்து ஆட்சியைப் பிடித்து, அதைச் செயல்படுத்த முடியாமல் விழித்து வருகின்றன.
இதில் நான்கு மாநிலங்கள் மிக முக்கியமானவை.
ஹிமாச்சல் பிரதேஷ்
காங்கிரஸ் ஆளும் ஹிமாச்சல் பிரதேஷ் தற்போது அரசு ஊழியர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஊதியம் கொடுக்கவே திணறி வருகிறது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் கொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
பழைய ஓய்வூதிய முறையை அறிவித்து அதைச் செயல்படுத்த முடியவில்லை. செயல்படுத்தினால், மீள முடியாத திவால் நிலைக்குச் செல்லும்.
கேரளா
அரசு ஊழியர்களுக்குக் கேரளா ஊதியம் கொடுக்க முடியாமல் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
பேருந்துகள் மோசமான நிலையில் உள்ளது என்று சமூகத்தளங்களில் கிண்டலடிக்கப்படுகின்றன.
வயதானோருக்குக் கொடுக்கும் ஓய்வூதியம் 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்
நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய பணத்தை மாநில அரசு செலவுகளுக்கு பயன்படுத்தும் நிலையில் பஞ்சாப் உள்ளது.
உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாததால், அறிவித்த திட்டங்களைத் திரும்பப் பெறப்போவதாக தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.
அதிக கடன் வைத்துள்ள மாநிலங்களில் ஒன்றாக பஞ்சாப் உள்ளது.
கர்நாடகா
கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ், கொடுத்த இலவசத் திட்டங்களைச் செயல்படுத்தக் கண்டபடி கட்டணங்களை உயர்த்தி வருகிறது.
கேட்டால், நாங்கள் அறிவித்த இலவசத் திட்டங்களைச் செயல்படுத்த எங்களுக்கு வேறு வழியில்லை என்கிறது.
மேற்கூறிய அனைத்து மாநிலங்களும் இந்தி கூட்டணி மாநிலங்களாகும்.
முதலுக்கே மோசம்
இவர்கள் அனைவருமே பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவதாகக் கூறி வெற்றி பெற்று, தற்போது மாத ஊதியத்தையே கொடுக்க முடியாத பரிதாப நிலையில் உள்ளார்கள்.
பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்தினால் என்ன ஆகும்? என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
தமிழகமும் இவ்வரிசையில் எதிர்காலத்தில் இணைந்தால் வியப்பதற்கில்லை. காரணம், கடன் தொகை அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பாஜக மாநிலங்கள்
இது போன்ற இலவசங்களைத் தவிர்த்து உட்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாஜக மாநிலங்களும் தற்போது இதில் குதித்து விட்டன.
மத்தியப் பிரதேச அரசு இவ்வாறு உரிமைத்தொகை கொடுத்து வருகிறது.
இந்தியாவின் பொருளாதாரத்தில் முதல் இடத்தில் பங்களிக்கும் மஹாராஷ்டிராவும் தற்போது தேர்தலுக்காக உரிமைத்தொகையைச் செயல்படுத்தியுள்ளது.
போட்டி வாக்குறுதிகள்
ஆட்சிக்கு வரக் காங்கிரஸ் பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிடுவதால், ஆட்சிக்கு வரப் பாஜகவும் இதே போன்று செயல்படுகிறது.
2024 பாராளுமன்றத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் மாதம் ₹8500 கொடுப்பதாகக் கூறி, வாய்ப்பே இல்லாத இடத்தில 50% இடங்களை இந்தி கூட்டணி கைப்பற்றியது.
எனவே, கட்டமைப்பு வளர்ச்சி பற்றிப் பேசுவதை விட, இலவசத்தைக் கொடுத்தால் தான் வாக்களிப்பார்கள் என்ற நிலைக்குப் பாஜகவினரும் சென்று விட்டார்கள்.
கடுப்பாக உள்ளது.
மக்கள் எதிர்பார்ப்பு
நேரடியாகக் கிடைக்கும் இலவசங்களை, உரிமைத்தொகையைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
யார் நல்ல ஆட்சி கொடுக்கிறார்கள்? என்பதைக் கண்டு கொள்வதில்லை.
மறைமுகமாகக் கட்டணங்களை உயர்த்தியே இலவசங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை உணர மறுக்கிறார்கள்.
2021 தேர்தலில் ₹1000 கொடுத்த திமுக, அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்கப் பெண்கள் உரிமைத்தொகையை ₹1,500, ₹2,000 என்று அறிவிப்பார்கள்.
அதிமுக ₹2,500 என்று கூறும்.
உச்சநீதிமன்றம்
மத்திய அரசின் முடிவுகளில் உச்சநீதிமன்றம் தலையிட்டுத் தடை விதிக்கிறது ஆனால், நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கும் இம்முறைக்கு ‘அரசின் கொள்கை முடிவு அதனால் தடை விதிக்க முடியாது‘ என்று கூறுகிறது.
இவற்றுக்குத் தடை கேட்டுப் பொதுநல வழக்கு தொடர்ந்தால் தள்ளுபடி செய்கிறது.
உச்சநீதிமன்றமே மறுத்தால் யாரிடம் கூறுவது?!
மக்களும், அரசியல் கட்சிகளும் தவறிழைக்கும் போது அதைக் கண்டித்து வழிநடத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, இந்த தலைப்பை வைத்து பேசினால் நேரில் நிறைய விஷியங்களை பேசலாம்.. அடிப்படையையே தவறாக உள்ள போது, பின்பு மற்றவைகள் எவ்வாறு சரியாக இருக்கும் என எதிர்பார்க்க முடியும். எல்லா வளங்களும், வளர்ச்சிக்கான சாத்திய கூறுகள் இருந்தும் நமது நாடு எட்ட வேண்டிய தூரத்தை இன்னும் எட்டாமல் இருப்பது எதனால்???
அரசாங்கத்தில் ஒரு கடைநிலை ஊழியனாக பணியில் சேர குறைந்த பட்ச தகுதி நிச்சயம் வேண்டும்.. ஆனால் ஆட்சி அதிகாரத்தில் அமர எந்த தகுதியும் தேவையில்லை என்பது என் பார்வையில் சரியாக இல்லை. சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களில் குற்றம் செய்த எத்தனை அரசியல் வாதிகள் தண்டிக்க பட்டுள்ளார்கள்..
அரசு பணியில் லஞ்சம், ஊழல் அல்லது வேறு குற்றங்கள் செய்தவர்களுக்கு அதிகபட்சம் என்ன தண்டனை அளிக்கப்படுகிறது?? வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு எந்த வகையில் சிறந்ததாக இருக்க முடியும்..
திரு. யாசின் கருத்து அடியேனின் கருத்தும் ஆகும். அடியேனும் அப்படி நினைத்ததுண்டு. என் செய்வது கலிகாலம் அதன் வேலை முழுமையாக நடக்கிறது.
@யாசின், விபுலானந்தன்
” எல்லா வளங்களும், வளர்ச்சிக்கான சாத்திய கூறுகள் இருந்தும் நமது நாடு எட்ட வேண்டிய தூரத்தை இன்னும் எட்டாமல் இருப்பது எதனால்???”
அரசியல் தான் காரணம். என்ன செய்தாலும் அரசியலுக்காக எதிர்ப்பு, முட்டுக்கட்டையெனச் செயல்படும் போது, ஜனநாயக நாடு என்பதால், இவற்றைக்கடந்து, சமாளித்து செல்வதால் தாமதமாகிறது.
“அரசாங்கத்தில் ஒரு கடைநிலை ஊழியனாக பணியில் சேர குறைந்த பட்ச தகுதி நிச்சயம் வேண்டும்.. ஆனால் ஆட்சி அதிகாரத்தில் அமர எந்த தகுதியும் தேவையில்லை என்பது என் பார்வையில் சரியாக இல்லை.”
இது என்றாலும், நன்கு படித்து தேர்வாகிய IAS IPS அதிகாரிகளும் மிகப்பெரிய ஊழல்வாதிகளாக உள்ளனர்.
ஆனால், படித்து வரும் போது திட்டங்களை செயல்படுத்த, ஒரு விஷயத்தைப் பற்றி புரிந்து செயல்பட முடிகிறது.
எடுத்துக்காட்டு, அஸ்வினி வைஷ்ணவ். இவருக்கு இவருடைய கல்வி திட்டமிட உதவுகிறது.
“அரசு பணியில் லஞ்சம், ஊழல் அல்லது வேறு குற்றங்கள் செய்தவர்களுக்கு அதிகபட்சம் என்ன தண்டனை அளிக்கப்படுகிறது??”
நானும் இதை அடிக்கடி எண்ணி கடுப்பாவேன்.
பெயில் என்ற ஒன்றின் மூலம் வெளியே சுற்றிக்கொண்டுள்ளார்கள். லல்லு பிரசாத் உடல்நிலையை காரணம் காட்டி வெளியே வந்து விட்டார்.
இன்னும் பலர் சிறைக்கு கூடச் செல்லவில்லை, சுதந்திரமாக நடமாடிக்கொண்டுள்ளார்கள்.. இதைப் பார்த்தாலே கடுப்பாகிறது. பல நேரங்களில் சலிப்பாகவும் உள்ளது.
“வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு எந்த வகையில் சிறந்ததாக இருக்க முடியும்.
அது அவரவர் கட்சி தொண்டர்களின் சகிப்பு தன்மையைப் பொறுத்து. மக்களின் ஏற்றுக்கொள்ளும் தன்மையைப் பொறுத்து.