கடவுள் நம்பிக்கை உண்மையா? பொய்யா?

4
கடவுள் நம்பிக்கை

டவுள் நம்பிக்கை எப்போதுமே விமர்சனத்துக்குள்ளாகியே வருகிறது. அதைப் பற்றிப் பார்ப்போம். Image Credit

கடவுள் நம்பிக்கை

பலருக்கும் கடவுள் நம்பிக்கை பற்றி மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் கடவுளை நம்புபவர்கள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.

நம்பிக்கை என்று வரும் போது மூட நம்பிக்கைகளும் சேர்ந்தே வருவதால், விமர்சனங்களுக்கும் குறைவில்லை.

இதற்கான விளக்கத்தைக் கண்ணதாசன் அவர்கள் அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் கூறியுள்ளார்.

சூழ்நிலை

ஒருவரின் கடவுள் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்மையைத் தீர்மானிப்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட சூழ்நிலைகள், சம்பவங்கள் தான்.

சிலர் சிறு வயதிலிருந்தே கடவுளை நம்புபவராக வளர்ந்து வரலாம், சிலர் அவர்களது பெற்றோர்கள் அல்லது சுற்றுப்புறச் சூழ்நிலைகளால் நம்பிக்கையில்லாது வளரலாம்.

பெரும்பாலும் கடவுள் நம்பிக்கையுடன் வளர்ந்து பின்னர் அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள், சம்பவங்களால் அவர்களது புரிதலில் மாற்றம் ஏற்படும்.

எதனால் மாற்றம்?

கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்கு ஏற்படும் சமாளிக்க முடியாத பிரச்சனைக்கு, மற்றவர்களால் உதவ முடியாத சூழ்நிலையில் கடவுளே ஒரே கதியாகலாம்.

நான்கு பக்கம் கஷ்டம் வந்தால், நாத்திகனும் ஆத்திகன் ஆகி விடுவான்‘ என்று கூறுவார்கள்.

அதே போல மிகப்பெரிய அளவில் கடவுள் நம்பிக்கையுடன் இருப்பவருக்கு ஏதாவது மோசமான சம்பவம் நடக்கும் போது கடவுள் மீது வெறுப்பாகலாம்.

யாரையும் ஏமாற்றவில்லை, துரோகம் செய்யவில்லை, கெடுதல் நினைக்கவில்லை ஆனாலும் எனக்கேன் கஷ்டம்? கடவுள் ஏன் உதவவில்லை?!

என்பது தான் ஒரு சராசரி நபரின் எண்ணமாக இருக்கும்.

சிலர் அப்போது கோபப்பட்டாலும், பின்னர் கடந்து சென்று விடுவார்கள். சிலருக்கு அவை பெரிய மனக்காயத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

எனவே, இவ்வளவு காலம் கடவுளை நம்பியும், வணங்கியும் என்னை ஏமாற்றி விட்டாரே? உதவவில்லையே! என்று கடவுள் நம்பிக்கையை இழக்கலாம்.

வயது / காலம்

இன்னொன்று வயது காரணம்.

கடவுளை நம்பாதவர்கள், வெறுத்தவர்கள், விமர்சித்தவர்கள் 50 வயதைக் கடக்கும் போது கிடைக்கும் அனுபவங்கள், இளம் ரத்தம் குறைந்தது கடவுளின் பால் ஈர்க்கும்.

இது போன்று ஏராளமானோர் உள்ளனர்.

இன்னொன்று இளம் வயதில் பொறுப்புகள், கவலைகள் இருக்காது. இக்கால கட்டத்தில் எப்படியும் பேசலாம், விமர்சிக்கலாம்.

ஆனால், வயது அதிகரித்து, திருமணமாகிப் பொறுப்புகள் கூடி, எதிர்காலப் பயம் அதிகமாகும் போது தானாகவே கடவுளின் மீது நம்பிக்கை வரும், பக்தி அதிகமாகும்.

சில விஷயங்களை மற்றவர்களிடம் பகிர முடியாத சூழ்நிலையில் யாரிடமாவது குறைகளைக் கூற வேண்டுமே என்று கடவுளைச் சரணடைவார்கள்.

கோவிலுக்குச் சென்று வந்தால் நிம்மதி என்பதெல்லாம் இதில் சேர்வது தான்.

உண்மையா பொய்யா?

முன்னரே கூறியபடி இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட சூழ்நிலையைப் பொறுத்தது.

சிறு வயதிலிருந்தே கடவுள் நம்பிக்கையுள்ளது ஆனால், கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் அல்லது நமக்கு மீறிய எதோ ஒரு சக்தி இருக்கிறது, கண்காணிக்கிறது என்பதை சம்பவங்களால் உணர்ந்தேன்.

அதைக்கடவுளாகவே கருதுகிறேன்.

கூடவே இருந்து வழிகாட்டுவதாகவும், கஷ்டம் ஏற்படும் போது பாதுகாப்பதாகவும் உணர்கிறேன்.

சொதப்பும் போது யோசித்துப்பார்த்தால் கடவுள் அதைத் தவிர்க்க வாய்ப்புக்கொடுத்தும் பயன்படுத்தத் தவறியது நினைவுக்கு வருகிறது.

உணர்ந்தவர்கள் எச்சரிக்கையாகிறார்கள். நேரத்தைத் தவற விட்டவர்கள், ஏற்படும் இழப்பால் கடவுளை விமர்சிக்கிறார்கள்.

சிலவற்றுக்குப் பதிலே கொடுக்க முடியாது. அதற்குப் பதில் கிடைக்க வேண்டும் என்றால், ஆன்மீகத்தில் கரைகண்டாலே முடியும்.

சுருக்கமாக, கடவுள் நம்பிக்கை உண்மையா பொய்யா? என்றால், 100% உண்மை என்று என் அனுபவத்தில் உறுதியாகக் கூறுகிறேன்.

தொடர்புடைய கட்டுரைகள்

நம்பினால் நம்புங்கள்

கடவுளை நம்பினால் மருத்துவம் எதற்கு?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. கிரி.. அனுபவமே சிறந்த ஆசான் என்பதில் பொதிந்துள்ள அர்த்தத்தை புரிந்து கொள்ள குறிப்பிட்ட காலம் வேண்டும்.. சத்தியமான வார்த்தைகள் இது.. எல்லோரின் வாழ்விலும் பொருந்தக் கூடிய ஒன்று.. கடவுள் இருக்கிறாரா?? இல்லையா??? என்ற கோட்பாட்டின் உள்ளே நுழைய விரும்பவில்லை..

    ஆனால் தனிப்பட்ட என் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை கொண்டு என் நிலைப்பாட்டை முடிவு செய்ய முடியும்.. எங்கள் மதத்தை பொறுத்தவரை கடவுள் இருப்பது உறுதி.. இந்த உலக வாழ்வில் நாம் வாழ்ந்த விதத்தை வைத்து மரணத்திற்கு பின்பு முடியாத ஒரு பெரு வாழ்வு இருப்பது உறுதியாக நம்புகிறேன்..

    இறுதி தீர்ப்பு நாளில் எல்லோருக்கும் அவரவர் உலகத்தில் வாழ்ந்த வாழ்வியலை வைத்து அவர்களின் பதிவேடு கையில் கொடுக்கப்படும்.. வலது கையில் பதிவேடை பெற்றவர் வெற்றி பெற்றவர்கள்.. இடது கையில் பதிவேடை பெற்றவர்கள் சிரமத்துக்குள்ளாவார்கள்..

    இந்த உலகத்தில் நல்லவர்கள் சோதனைக்கு உட்படுவது இயல்பு.. கெட்டவர்கள் அல்லது எதை பற்றியும் கவலை படாமல் தான் தோன்றிதனமாக தீமைகள் அதிகம் செய்து வாழ்பவர்களுக்கு உலகம் அழகாக இருக்கும்.. அவர்களுக்கு மறுமை இறுதி நாளை பற்றி எந்த வருத்தமும் இருக்காது..

    ஆனால் முழு சோதனையும் இந்த உலக வாழ்வில் நல்லவர்களுக்கு மட்டுமே என்பதால், என் வாழ்வில் நடைபெறும் எந்த கடினமாக நிகழ்வுகளை குறித்து அதிகம் கவலை கொள்வதில்லை.. காரணம் இறுதி நாளின் தீர்ப்பு மீது நம்பிக்கை வைத்து இருக்கிறேன்..

    அடுத்தவர்களின் பார்வை வேண்டுமானால் இதெல்லாம் குருட்டு தனமான நம்பிக்கையாக தெரியும்.. ஆனால் இதன் உண்மை தன்மை என்னவென்று?? இதை நம்புவர்கள் மட்டும் உள்ளுக்குள் உணர முடியும்.. யாருக்கும் தீங்கு செய்யாமல், யாரையும் வெறுக்காமல், எல்லோருடனும் நட்பு பாராட்டி, அன்பு செலுத்தி நமக்கு விதித்த நாட்கள் வரை உலகில் வாழ்ந்து விட்டு மரணிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்..

    மரணம் நமக்கு வருவதை கண் முன்னால் காணும் தினம், மரணத்தை கண்டு ஓடி ஒளியாமல் அதை நேரிடையாக சந்திக்கும் மன உறுதி வேண்டும்.. வாசல் வரை வந்த மரண தூதுவரை உள்ளே அழைத்து ” கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. ஒரு காபி சாப்பிடுங்க.. சாப்பிட்டதும் வந்துடுறேன்” என்று கூறும் அளவுக்கு தைரியம் வளர்த்து கொள்ள வேண்டும்.. நாம் பிறக்கும் போதே இறப்பிற்கான தேதி குறிப்பிட்டப்பட்டு விட்டது என்பது 100% உண்மை.. இதில் யாருக்கும் விதி விலக்கு இல்லை..

  2. @யாசின்

    “இந்த உலகத்தில் நல்லவர்கள் சோதனைக்கு உட்படுவது இயல்பு”

    அது தான் எதற்குன்னு தெரியல .

    “யாருக்கும் தீங்கு செய்யாமல், யாரையும் வெறுக்காமல், எல்லோருடனும் நட்பு பாராட்டி, அன்பு செலுத்தி நமக்கு விதித்த நாட்கள் வரை உலகில் வாழ்ந்து விட்டு மரணிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்..”

    இதில் அனைத்தையும் இல்லையென்றாலும் பெரும்பாலானவற்றை பின்பற்றுகிறேன் .

    “ஒரு காபி சாப்பிடுங்க.. சாப்பிட்டதும் வந்துடுறேன்”

    🙂 .

  3. கிரி, மனிதனின் அடிப்படை கேள்விகளை(பிறப்பு, இறப்பு, துக்கம்) நோக்கி பதில் சொல்வதால் தான் மதங்கள் இன்றும் என்றும் உயிர்ப்புடன் இருக்கும். நம் கண்முன் இருக்கும் பருப்பொருளை, தொடர்ந்து மாறிக்கொண்டு இருக்கும் இவ்வுலுகை அறிய உதவுவதில் தத்துவ கல்வி மிக முக்கியமானது.இந்து ஞான மரபில், மூல நூல்களில் (பிரம்ம சூத்திரம், உபநிடதங்கள் , கீதை) பல வழிகள் மிக தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. 200 – 400 ஆண்டுகள் நடந்த நீண்ட உரையாடல்கள் வழியாக உருவாகி வந்த இந்து ஞான மரபு நம் மண்ணில் உள்ளது.

    அவ்வாறு வந்த ஒரு தரிசனம் தான் வேதாந்தம்( உத்திர மீமாம்சம்). அதன் அடிப்படைகள் இவ்வாறு வளர்ந்து வந்துள்ளது.

    1.நேதி நேதி நேதி [இதுவல்ல இதுவல்ல இதுவல்ல]
    2.பிரக்ஞானம் பிரம்மாஸ்மி [பிரக்ஞையே பிரம்மம்]
    3.அஹம் பிரம்மாஸ்மி [நானே பிரம்மம்]
    4.ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் [இவையனைத்திலும் ஈசா உறைகிறது]
    5.தத்வமஸி [அது நீதான்]

    நல்ல குரு அமைவார் என்றால் கடவுளின் இருப்பை தத்துவமாக விளக்கி கொள்ளலாம். குரு அமைவது ஒரு நல்லூழ். ஞான மார்க்கம் தேவை இல்லை என்றால், பக்தி மார்க்கம் வழியாக இறைவனை உணரலாம் ,அடையலாம். இதில் மேல் கீழ் என்று இல்லை, இரண்டு மார்க்கத்திலும் முக்தி பெற்றவர்கள் இருக்கிறார்கள்.

    சில விஷயங்களை நம்மால் தர்க்கமாக விளக்கி கொள்ள முடியாது. இந்த பிரமாண்டமான, பல ஊடுபாவு விசைகள் மூலம் இயங்கும் சிக்கலான உலகில் எதையும் அறுதியிட்டு வரையறுத்து சொல்ல முடியாது. அதை தான் ஆதியும் அந்தமமும் ஆன பரம்பொருள் என்று வகுத்து கொள்கிறோம். அதுவே லௌவீக வாழ்க்கைக்கு சிறந்தது, பல மூளை சிக்கலலில் இருந்து விடுதலை கொடுப்பது.

    தேடல் உள்ளவர்க்கு ஞான மார்க்கம் சிறந்தது. பெற்ற ஞானத்தை விடுவதும் கற்றலின் ஒரு பகுதியே.

    யாசின் அவர்களின் கேள்விக்கு (“இந்த உலகத்தில் நல்லவர்கள் சோதனைக்கு உட்படுவது இயல்பு”) பதில் திருக்குறளில் இருக்கிறது.

    குறள் 169:
    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும்

    ஜெயமோகன் அவர்களின் இந்த கட்டுரை உங்களுக்கு ஒரு தெளிவு கொடுக்கும் என்று நம்புகிறேன்.

    https://unifiedwisdom.guru/199424

  4. @மணிகண்டன்

    ஜெயமோகன் கட்டுரையைப் படித்தேன்.

    அதில் கூறியுள்ள கருத்துகள் சிலவற்றை என் பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன்.

    குறிப்பாக கர்மா பற்றிய கட்டுரையில், நம் கடமைகளைச் செய்யாமல் ஏற்படும் இழப்புகளுக்கு கர்மாவை காரணம் காட்டுவது தவறு என்பது உட்பட.

    இவற்றோடு என் வாழ்க்கையில் நான் சந்தித்த பிரச்சனைகள், அதில் கிடைத்த அனுபவங்களையும் கூறியுள்ளேன். அவற்றைத் தொகுத்தால் இக்கட்டுரையில் வரும் பல கருத்துகளோடு பொருந்திப்போகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!