திருமணத்துக்காக திருச்சி சென்ற போது மாலையில் நேரம் இருந்ததால், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் செல்ல முடிவெடுத்துச் சென்றேன். Image Credit
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில்
‘ஸ்ரீ ‘சமஸ்கிருதம் என்று ஸ்ரீ க்கு பதிலாகத் திரு என்று மாற்றியதில் திருவரங்கம் என்று பெயர் மாற்றி விட்டார்கள், துவக்கத்தில் குழம்பி விட்டேன்.
108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் உள்ளது.
இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது.
தல வரலாறு
திருவரங்கம் கோயில் சிலை பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டுத் தோன்றியதாகும் (இதைச் சுயம்பு என்று கூறுவர்).
பிரம்மா நித்திய பூசை செய்யச் சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்தச் சிலையைத் தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றார்.
இலங்கையிலிருந்து தனது பட்டாபிசேகத்துக்கு வந்த விபீடணனுக்கு இராமர் அச்சிலையைப் பரிசாகக் கொடுத்தார்.
இதனை விபீடணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தார்.
‘சிலையைக் கீழே வைக்கக் கூடாது‘ என்று அங்கு இருந்த சிறுவனிடம் கூறி இளைப்பாறிய நேரத்தில் சிறுவன் சிலையைக் கீழே வைத்து விடுகிறான்.
சிறுவன் சிலையைக் கீழே வைத்ததைக் கண்டு, ‘என்ன காரியம் செய்தாய்!‘ என்று சிலையை எடுக்க முயன்றும், எடுக்க முடியவில்லை.
சிறுவனாக வந்து பெருமான் சிலையைக் கீழே வைத்தது நான் தான் என்று விபீடணனிடம் கூறி விநாயகர் மறைந்து விடுகிறார்.
அவ்விநாயகருக்கு காவிரி ஆற்றின் மற்றொரு கரையில் கோவில் உள்ளது, அதுவே மலை மீது இருக்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகும், திருவரங்கம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது.
பின் வைகுண்ட பெருமாள் அரங்கநாதராக காட்சியளித்து காவிரிக்கரையிலேயே தங்கி இருக்க விருப்பம் என்று தெரிவித்தார்.
சோழ நாட்டை ஆண்டு வந்த தர்ம வர்ம சோழன் ஆறுதல் கூறி, விபீடணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி” பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார்.
உறுதியளித்தபடி அச்சிலையைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தார். பின் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மணலால் கோவில் மூடப்பட்டது.
பின் வந்த சோழ மன்னர் கிள்ளிவளவன் மணலால் மூடிய கோவிலை அக்கோவிலை புரணமைத்து, பின்பு அரங்கநாதருக்கு பிரம்மாண்டமான கோவிலைக் கட்டினார்.
இதன் பிறகு வந்த பல அரசர்களாலும் கோவில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
அக்கோவிலே தற்போது வழிபடும் அரங்கநாதர் கோவிலாக உள்ளது.
கிளியின் உதவியுடன் கோவிலைக் கண்டுபிடித்ததால் கிளி சோழன் என்றும் சோழன் கிள்ளிவளவன் என்றும் அழைக்கப் பெற்றார்.
தகவல் நன்றி – விக்கிபீடியா
துணைக் கோவில்கள்
இக்கோவிலுக்குச் செல்லாதவர்கள், கூறினால் நம்ப மாட்டீர்கள்.
கோவில்களின் உள்ளே சிறு சிறு கோவில்கள் இருப்பது இயல்பானது ஆனால், இக்கோவிலுக்கு உள்ளே தோராயமாக 25+ கோவில்கள் இருக்கலாம்.
இங்குள்ள ஒவ்வொரு சிறு கோவிலின் அளவே வழக்கமான நடுத்தரக் கோவிலின் அளவில் சுற்றுப் பிரகாரத்துடன் உள்ளது.
புரியும் படி கூற வேண்டும் என்றால், இதில் ஒரு கோவிலை அப்படியே வெளியே எடுத்து வைத்தால், இதுவே ஒரு தனிக்கோவிலாக இருக்கும் அளவில் உள்ளது.
பெருமாள், ராமர், அனுமன், ராமானுஜர், ஆழ்வார்கள் என்று அனைவருக்கும் தனிக்கோவில்கள், சிலைகள் உள்ளன.
வசந்தமண்டபத்தில் ராமானுஜர் ஜீவசமாதி உள்ளது. செப்பு சிலையுடன் இருக்கும் ராமானுஜர் நகம், முடி வளருகிறது உட்பட பல்வேறு நம்பிக்கைகள் உலா வருகின்றன.
ஆழ்வார் சிலைகளைப் பார்த்ததும் எக்காலத்திலும் மறக்க முடியாத பொன்னியின் செல்வன் கதாபாத்திரம் ஆழ்வார்க்கடியான் விவாதங்கள் நினைவுக்கு வந்தன 🙂 .
பிரம்மாண்டம்
தஞ்சை பெரிய கோவில், சிதம்பரம் கோவில், மதுரை மீனாட்சி கோவில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் போன்றவை மிகப்பிரம்மாண்டமானவை.
ஆனால், இக்கோயில்களில் இது போன்ற இவ்வளவு துணைக்கோவில்கள் உள்ளதாக நினைவில்லை.
ரெங்கநாதர் கோவிலின் உள்ளே அனைத்துக் கோவில்களுக்கும் சென்று வருபவர்கள் வெகு சிலரே! காரணம், கோவில்களின் அதீத எண்ணிக்கை.
சில கோவில்கள் படிகளில் மேலே ஏறிச் சென்று வணங்க வேண்டியதாக உள்ளது.
எனவே, சிலர் சோம்பேறித்தனத்தாலும், சிலர் நடக்க முடியாததாலும் இக்கோவில்களுக்குச் செல்லாமல் புறக்கணித்து விடுகின்றனர்.
வயதானவர்களால் நடப்பதே சிரமம் என்ற நிலையில், அனைத்துக் கோவில்களுக்கும் படியேறி செல்வது சாத்தியமற்றது.
எனவே, இது போன்ற கோவில்களில் ஒப்பீட்டளவில் கூட்டம் இல்லாததால் இங்கே செல்பவர்களை அர்ச்சகர்கள் வரவேற்று, கடவுள் பெயர்களை, சிறப்புகளைக் கூறி விவரிக்கிறார்கள்.
பெரும்பாலான அனைத்துக் கோவில்களிலும் சலிக்காமல் துளசி தீர்த்தம் கொடுத்து மற்றும் சடாரி வைக்கிறார்கள். மிக மனநிறைவாக இருந்தது.
ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று எந்தப் பக்கம் சென்றேன்? எந்தப்பக்கம் வந்தேன்? என்பதே புரியவில்லை. எப்படி வெளியே செல்வது என்று குழம்பி விட்டது.
வேறு கோபுர வாசல் வழியாகச் சென்றால், பேருந்துக்குச் செல்ல முடியாது. முதன்மை கோபுரம் வழியாகவே செல்ல வேண்டும்.
எப்படிக் கட்டியிருப்பார்கள்?
தமிழர்களின் கட்டிடக்கலை வியக்க வைக்கிறது.
ஒவ்வொரு கோவில்களையும், அதில் அவர்கள் செய்துள்ள அற்புதங்களையும் காணும் போது கிறுகிறுக்க வைக்கிறார்கள். தொழில்நுட்பம் இல்லாத போதே எவ்வளவு திறமையாகக் கட்டியுள்ளார்கள்!
இது போன்ற கட்டிடங்களைத் தொழில்நுட்பம் பெருகிய இக்கால கட்டத்தில் கூடக் கட்ட முடியவில்லையே! மாமல்லபுரம் இன்னொரு அற்புதம்.
தமிழகத்தின் மொத்தக் கற்களும் கோவில்களில் தான் உள்ளது என்பது போல இளைத்து இளைத்துக் கட்டியுள்ளார்கள்.
பல்வேறு போர்களுக்கும், அழிப்புகளுக்குப் பிறகும் இக்கோவில்கள் கம்பீரமாக நிற்பதைக் காணும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.
இது போன்ற திறமையான கட்டிடங்களைக் காண்கையில் கால இயந்திரத்தில் சென்று கட்டியவர்களைக் கட்டியணைத்து முத்தமிடத் தோன்றுகிறது 🙂 .
பராமரிப்பு
UNESCO விருதை இக்கோவில் பெற்றுள்ளது.
கவனித்த வரை மற்ற கோவில்களை விட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பராமரிப்பு சிறப்பாக உள்ளது.
கோவில்கள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன, மின்னணு அறிவிப்புப் பலகைகள் காணப்படுகின்றன (Digital Announcement Board).
ஏராளமான துணைக் கோவில்கள் இருப்பதால், எப்படியும் குறைந்தது 100+ அர்ச்சகர்கள் பணி புரிவார்கள் என்று கருதுகிறேன்.
பிரசாதம் வாங்குவது முக்கியம் என்று கூறினார்கள் ஆனால், வாங்கவில்லை.
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவில்
மேற்கூறிய அனைத்தையும் பார்த்தாலும் நேரம் காரணமாக முதன்மை கோவிலான அரங்கநாத சுவாமி கோவிலுக்குச் செல்லவில்லை.
₹100 கட்டணம் செலுத்திச் சென்று பார்த்தாலே அரை மணி நேரம் ஆகும் என்றார்கள். பணம் கொடுத்துக் கடவுளைத் தரிசிப்பது வழக்கமில்லை என்பதால் செல்லவில்லை.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் வரை உண்டியலில் பணம் செலுத்துவதில்லை, நன்கொடை வழங்குவதில்லை என்ற முடிவில் உள்ளேன்.
கட்டணமில்லா வரிசையில் சென்று தரிசித்து வர நேரம் இல்லையாததால், அடுத்த முறை சரியான திட்டமிடலுடன் வந்து பொறுமையாகப் பார்க்க வேண்டும்.
கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் கோவில் போலக் கருவறையில் மின் விளக்குகள் இல்லாமல், தீப ஒளியில் இருக்கும் என்று கூறினார்கள்.
எந்தக்கோவில் கால மாற்றங்களால் அதன் பழைமையை இழக்காமல் உள்ளதோ அக்கோவில்கள் மனதுக்கு நெருக்கமானவை.
என்று திரும்ப வருகிறேனோ அவ்வாறு வரும் நாளில் இக்கட்டுரையை மேம்படுத்துகிறேன் 🙂 .
இதுவரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குச் செல்லாதவர்கள் ஒரு முறையாவது சென்று பார்த்து வர வேண்டுகிறேன். நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.
கொசுறு
இவ்வளவு பிரம்மாண்டமான கோவிலுக்குச் செல்லும் வழி / தெரு முழுவதும் கடைகள், வீடுகள் ஆக்கிரமித்து அந்தக் கோவிலின் மதிப்பை குறைக்கிறார்கள்.
நெரிசலான பகுதியைத் தாண்டிக் கோவிலுக்குச் சென்றால், தனி உலகத்துக்குச் சென்றது போலப் புதிய அனுபவமாக உள்ளது.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
Hi Giri,
Kandipa I will plan to visit with my daughter’s (school holidays la) .
Last year a irunduu many school (Chennai) planning quarterly holidays around “navaratri time”. I hope inum temple alaga irukum anta week la. Thanks for your hints
பல ஆன்மீக தளங்களுக்கு சக்தியுடன் ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருவருக்கும் உண்டு.. ஆனால் எப்போது சாத்தியம் என்பது தற்போது வரை தெரியவில்லை.. கோவையில் பணி புரிந்த போது மருதமலை, தென்திருப்பதி, பண்ணாரி அம்மன் இந்த கோவில்களுக்கு சென்று இருக்கிறேன். கல்லூரி பருவத்தில் திருவண்ணாமலை, சிதம்பரம், திருநாள்ர் கோவில்களுக்கு சென்று இருக்கிறேன்..
இதை தவிர்த்து எங்கள் பகுதியில் உள்ள சில கோவில்களுக்கும் சென்று இருக்கிறேன்.. எந்த கோவில்களிலும் கட்டிட அமைப்பை காண்பதும், சிற்பங்களை காண்பதும். விக்ரங்களை காண்பதும் மிகவும் பிடிக்கும்.. பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் உலகில் பழைய கோவில்கள் உள்ள இடங்கள் எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருப்பது மிகவும் பிடிக்கும்.. காற்றின் ஓசையும், பறவைகளின் ரீங்காரங்களும், மரங்களின் இசையும் தவிர வேறு சத்தங்கள் ஏதும் இங்கு கேட்பதில்லை..
@JaiSuba Moorthik
நிச்சயமாக அலங்காரங்களுடன் அழகாக இருக்கும்.
எனக்கு கூட்டம் என்றால் பிடிக்காது என்பதால், கூட்டமான நேரங்களில் கோவிலுக்குச் செல்வதை தவிர்த்து விடுவேன்.
திருப்பதி போக பலர் அழைத்தாலும் பெரிய கும்பிடா அவர்களுக்கே போட்டு விடுவேன் 🙂 .
இதுவரை வாழ்க்கையிலேயே இரு முறை மட்டுமே திருப்பதி சென்றுள்ளேன்.
@யாசின்
திருவண்ணாமலை இது வரை சென்றதில்லை. பல முறை செல்ல திட்டமிட்டோம் எனோ சரியாக அமையவில்லை.
செல்ல வேண்டிய பட்டியிலில் இக்கோவில் உள்ளது.
தற்போது இதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த கோவில்களைக் கூட YouTube மூலம் சிலர் பிரபலப்படுத்தி விட்டார்கள்.
இதனால் இங்கே திடீர் கூட்டம் அலைமோதுகிறது.
ஒருவகையில் கோவிலுக்கு செல்கிறார்களே என்று இருந்தாலும், அமைதியான அந்தக்கோவிலையும் பரபரப்பாக்கி விட்டார்களே என்றும் உள்ளது.