RuPay UPI எதனால் அவசியம்?

5
RuPay UPI எதனால் அவசியம்?

NPCI நிறுவனம் பணப்பரிமாற்றத்தை எளிதாக்கி வருகிறது. அதில் ஒன்றாக RuPay கிரெடிட் கார்டில் UPI கொண்டு வந்தது. Image Credit

RuPay UPI

வங்கியிலிருந்து அல்லாது கடனட்டை வழியாகவும் UPI பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று அறிவித்தது.

தற்போதைக்கு RuPay க்கு மட்டுமே UPI வசதி உள்ளது. இன்னும் Master, Visa நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை.

இதுவொருவகையில் RuPay கடனட்டையைப் பிரபலப்படுத்தவும், பலரிடையே கொண்டு சேர்க்கவும் உதவுகிறது.

இந்திய நிறுவனம் என்பதால், இது அவசியமாகிறது.

RuPay UPI எதனால் அவசியம்?

  • நாம் செய்யும் செலவு வங்கியிலிருந்து எடுக்கப்படாததால், நம் பணம் அங்கேயே தொடர்ந்து இருப்பாக உள்ளதால், காலாண்டு வங்கி வட்டி உயர வாய்ப்பு.
  • வங்கியில் பணம் இல்லையென்றாலும் RuPay UPI பயன்படுத்தி கட்டணத்தைச் செலுத்தலாம்.
  • செப்டம்பர் 1 2024 முதல் RuPay UPI பரிவர்த்தனைக்கும் Rewards Points கொடுக்க வேண்டும் என்று RBI அறிவுறுத்தியுள்ளது.
  • எனவே, பள்ளிக்கட்டணம் போன்றவற்றை இதன் மூலம் செலுத்தினால், Rewards Points கிடைக்கும்.
  • அதோடு பணம் இல்லையென்றால், UPI பரிவர்த்தனையால் ஒரு மாதம் ஒத்திப்போடலாம்.
  • எப்படியிருந்தாலும் UPI வழியாகவோ, பணத்தைக் கொடுத்தோ செலுத்தும் நிலையில், இவ்வாறு செலுத்தினால் Rewards Points கிடைக்கும்.
  • சில கடைகளில் நகை வாங்கினால் கடனட்டை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆனால், UPI ஏற்றுக்கொள்வார்கள்.
  • இது போன்ற நேரத்தில் RuPay UPI பயனுள்ளதாக இருக்கும்.

இந்திய நிறுவனம்

RuPay கடனட்டை இந்திய நிறுவனமாகும்.

உலகளவில் Master, Visa மோனோபோலியாக உருவெடுத்து இருக்கும் நிலையில், இந்தியா அவர்களைக் கதற விட்டு வருகிறது.

உக்ரைன், ரஷ்யா போரால், அமெரிக்க நிறுவனங்களான Master, Visa நிறுவனங்கள் திடீரென்று தங்களது செயல்பாட்டை ரஷ்யாவில் நிறுத்தின.

இதனால், மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள்.

ஆனால், இந்தியாவிடம் RuPay மற்றும் UPI இருப்பதால், நிதி பரிவர்த்தனையில் இந்திய தன்னிறைவு அடைந்துள்ளது.

யாரும் இந்தியாவை மிரட்டிப் பணிய வைக்க முடியாது.

எனவே, Master, Visa கடனட்டைகள் வைத்து இருந்தாலும், ஒரு RuPay கடனட்டையாவது வைத்துக்கொள்ளுங்கள், முடிந்த வரை பயன்படுத்துங்கள்.

கொசுறு

RuPay UPI கடனட்டை வழியாக செலுத்தும் போது, நமக்கு கூடுதல் கட்டணம் கிடையாது ஆனால், ₹2000 மேலே இருந்தால், கடைகளுக்கு MDR (Merchant Discount Rate) என்ற சேவைக்கட்டணம் உண்டு.

இதனால், சில கடைகளில் RuPay UPI கடனட்டை வழியாக கட்டணம் செலுத்துவதை தடை (Block) செய்து வைத்துள்ளார்கள்.

SBI RuPay UPI யில் FUEL கட்டணம் செலுத்தினால், கட்டணம் வசூலிக்கிறார்கள். எனவே, தவிர்க்கவும்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. இந்த சேவைக்கு கட்டணம் இல்லாமல் தொடரும் வரை இது சிறப்பான ஒன்றாக கருதுகிறேன்.. ஜியோ மொபைல் சேவை போல ஆரம்பத்தில் இலவசம் என்று தொடங்கி குறிப்பிட்ட காலத்திற்கு பின் (மக்கள் பழக ஆரம்பித்த) பிறகு கட்டணத்தை உயர்த்தியது போல இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். மொபைல் பயன்படுத்தினாலும் / இல்லை என்றாலும் மாத கட்டணம் என்ற CONCEPT விளங்க வில்லை.

    ப்ரீபெய்ட் சேவையில் பயன்படுத்தினாலும் / இல்லையென்றாலும் மாத கட்டணம் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.. இது என்ன லாஜிக் என்பது புரியவில்லை. 2007 இல் மொபைல் பயன்படுத்த தொடங்கிய போது தேவை பட்டால் பணத்தை ரிச்ர்ஜ் செய்து பேசுவேன். ஆனால் தற்போது அவ்வாறு இல்லை.. ஒரு குடும்பத்தில் 6 / 8 பேர் இருக்கும் போது மாத மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இதற்கே செலவு செய்ய வேண்டும்..

    இங்கு வந்த பிறகு 16 வருடமாக ஒரு சிம் மட்டும் ப்ரீபெய்ட் பயன்படுத்தி வருகிறேன்.. தேவைப்படும் போது ரீசார்ஜ் செய்து வருகிறேன்.. இதுவரை கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்தியது இல்லை.. பின்பு அங்கு மட்டும் ஏன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இது போல மாத கட்டணத்தை வசூல் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.. உங்களுக்கு தெரிந்தால் பகிரவும்.

    இந்தியாவில் வெகு விரைவில் 2000 ரூபாய்க்கு மேற்பட்ட பண பரிவர்த்தனையில் GST வசூல் செய்யப்படும் என்ற செய்தியை படித்தேன்.. உண்மையா என்று தெரியவில்லை.. ?? இவ்வாறு கூடுதல் கட்டணம் செலுத்தி ஒரு சேவையை பயன்படுத்தும் போது அது சிறந்தது என்று எவ்வாறு கூற இயலும்.. தவிர்க்க முடியாத தருணங்கள் Ok.. ஆனால் எல்லா நேரங்களிலும் கூடுதல் கட்டணம் செலுத்தி இந்த சேவையை பயன்படுத்த எத்தனை பேர் தயாராக இருப்பார்கள். அது சரியா என்றும் தெரியவில்லை..

  2. @யாசின்

    உங்கள் கேள்விகளுக்கு தெரிந்த வரை விளக்கம் அளிக்கிறேன்.

    “இந்த சேவைக்கு கட்டணம் இல்லாமல் தொடரும் வரை இது சிறப்பான ஒன்றாக கருதுகிறேன்”

    உண்மை.

    “ஜியோ மொபைல் சேவை போல ஆரம்பத்தில் இலவசம் என்று தொடங்கி குறிப்பிட்ட காலத்திற்கு பின் (மக்கள் பழக ஆரம்பித்த) பிறகு கட்டணத்தை உயர்த்தியது போல இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.”

    ஜியோ தற்போதும் பெரியளவில் உயர்த்தவில்லை.

    ஒரு காலத்தில் மாதம் 1 ஜிபி க்கு ₹200 கட்டணம் செலுத்திக்கொண்டு இருந்தோம். தற்போது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

    எனவே, ஒப்பீட்டளவில் ஜியோவால் மக்கள் பலனைப் பெற்று வருகிறார்கள்.

    ஆனால், யார் கட்டணம் உயர்த்தினாலும் ஜியோவை தான் குறை கூறுகிறார்கள். இவ்வளவு வருடங்களாக ஏர்டெல் கொள்ளையடித்து வந்தது, ஜியோவால் தடுக்கப்பட்டது.

    தற்போது கட்டற்ற இலவச அழைப்பு, தினமும் 1.5 ஜிபி என்று பலனை மக்கள் அனுபவிக்கின்றனர்.

    மக்களுக்கு எல்லாமே இலவசமாக, குறைந்த கட்டணத்தில் வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது எப்படி சாத்தியம்?

    அவர்கள் செய்த முதலீடும் அதிகரிக்கிறது, 5G உள்கட்டமைப்புக்கு, அலைக்கற்றை க்கு என்று ஏராளமான பில்லியனை முதலீடு செய்துள்ளார்கள்.

    இதனால் கிடைக்கும் பலன் மட்டும் வேண்டும் ஆனால், கூடுதலாக செலுத்த மாட்டேன் என்பது நியாயமானதாக இல்லை.

    தற்போது BSNL போட்டிக்கு வந்து விட்டதால், ஏர்டெல், ஜியோக்கு நெருக்கடியாகி திரும்பக் கட்டணங்களை மாற்றி வருகிறார்கள்.

    10 வருடங்கள் முன்பு வாங்கிய சம்பளத்தையே நாம் தற்போதும் பெறுகிறோமா?… இல்லையே.. அப்படியிருக்கும் போது மற்ற சேவைகளின் கட்டணமும் உயர்வது இயல்பு தானே!

    அனைத்து புதிய தொழில்நுட்பங்களும் வேண்டும் ஆனால், கூடுதல் கட்டணம் செலுத்த மாட்டேன் என்பது நியாயமானதாக இல்லை.

    இந்நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்துவது சரி ஆனால், அநியாயமாக உயர்த்துவது தான் தவறு.

  3. @யாசின்

    “ப்ரீபெய்ட் சேவையில் பயன்படுத்தினாலும் / இல்லையென்றாலும் மாத கட்டணம் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.. இது என்ன லாஜிக் என்பது புரியவில்லை”

    பயன்படுத்தப்படாமல் ஏகப்பட்ட எண்கள் உள்ளது, எண்கள் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.

    தற்போது 10 இலக்க எண்ணை அதிகப்படுத்தப்போவது பரிசீலனையில் உள்ளது.

    இன்னொன்று நீங்கள் பயன்படுத்தவில்லையென்றாலும், உங்கள் மொபைல் சிக்னல் டவரை தொடர்பு கொண்டு தான் இருக்கும்.

    இது அந்நிறுவனத்துக்கு சிக்னல் ட்ராபிக்கை ஏற்படுத்துகிறது. இதனால், தொடர்பு கொள்வதில் மற்ற நபர்களுக்கு தெளிவற்ற நிலை ஏற்படுகிறது.

    இது அந்நிறுவனத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது.

    பலர் எண்ணை வாங்கிக்கொண்டு பயன்படுத்தாமல் வைத்து இருந்தாலும், அதற்கான கணக்குகளை பராமரிக்க வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு உள்ளது.

    இது அவர்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை, பணிச்சுமையை அளிக்கிறது. நமக்கு ஒரு எண், அவர்களுக்கு கோடிக்கணக்கான எண்கள்.

    இது போன்ற காரணங்களால் பயன்படுத்தாமல் அல்லது அவ்வப்போது மட்டும் பயன்படுத்தும் எண்களை துண்டிக்க இது போன்ற கட்டண முறையை நிறுவனங்கள் செயல்படுத்துகின்றன.

    நானும் என் அப்பா எண்ணை பல ஆண்டுகளாக வைத்து இருந்தேன். கூடுதல் கட்டணம் என்பதால், சில மாதங்களுக்கு பிறகு எண்ணை துண்டித்து விட்டேன்.

    “இங்கு வந்த பிறகு 16 வருடமாக ஒரு சிம் மட்டும் ப்ரீபெய்ட் பயன்படுத்தி வருகிறேன்.. தேவைப்படும் போது ரீசார்ஜ் செய்து வருகிறேன்.. இதுவரை கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்தியது இல்லை.. பின்பு அங்கு மட்டும் ஏன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இது போல மாத கட்டணத்தை வசூல் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.. உங்களுக்கு தெரிந்தால் பகிரவும்.”

    மேற்கூறியது தான் காரணம்.

    நீங்கள் உள்ள நாடு மக்கள் தொகையின் அளவு குறைவு, பொருளாதார ரீதியாக வளர்ந்தவை. எனவே, அவர்களின் நிலை வேறாக உள்ளது.

    ஆனாலும், இந்தியாவில் தான் தொலைபேசி கட்டணம் (இணையமும் சேர்த்து) குறைவாக உள்ளது. நீங்கள் உள்ள நாட்டுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

  4. @யாசின்

    “இந்தியாவில் வெகு விரைவில் 2000 ரூபாய்க்கு மேற்பட்ட பண பரிவர்த்தனையில் GST வசூல் செய்யப்படும் என்ற செய்தியை படித்தேன்.. உண்மையா என்று தெரியவில்லை.. ?”

    வழக்கம் போல ஊடகங்கள் தவறான செய்தியைப் பரப்புகின்றன. இதில் ஓரளவு உண்மை உள்ளது என்றாலும், இவர்கள் வைக்கும் தலைப்பு தவறு.

    இந்த முறை ஏற்கனவே உள்ளது ஆனால், விளக்கம் கொடுக்கப்படவில்லை.

    எடுத்துக்காட்டுக்கு, கடைகளில் துணி வாங்கினால், பெரிய கடையாக இருந்தால், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால் நம்மிடம் கூடுதல் கட்டணம் வாங்க மாட்டார்கள்.

    ஆனால், அவர்களுக்கு தோராயமாக 2% சேவை கட்டணம் கிரெடிட் கார்டு நிறுவனங்களால் விதிக்கப்படும்.

    இதை கடைகள் நம்மிடம் வசூலிப்பதில்லை, அவர்களே கட்டி விடுவார்கள்.

    இந்த 2% சேவைக்கட்டணத்துக்கு தான் வரி விதிப்பதாக கூறப்பட்டது ஆனால், தற்போது வரி விதிக்கும் திட்டம் எதுவுமில்லை என்று கூறியுள்ளார்கள்.

    மேற்கூறியது ஏற்கனவே பல கடைகளில் உள்ளது தான்.

    சிறிய கடைகளுக்கு சென்றால், கிரெடிட் கார்டு பயன்படுத்த அனுமதியுண்டு ஆனால், கூடுதலாக 2% கட்டணம் செலுத்த வேண்டும் என்பார்கள்.

    தேவைப்படுபவர்கள் செலுத்துவார்கள், மற்றவர்கள் வேறு வழிகளில் பணம் செலுத்தி விடுவார்கள்.

    எனவே, ஒருவேளை சேவை வரி விதித்தால், அந்த வரியைக் கடைகள் வாடிக்கையாளரிடம் வசூலிக்கலாம், அல்லது அவர்களே செலுத்தியும் விடலாம்.

    இது ஒவ்வொரு கடைகளைப் பொறுத்தது.

    ஒருவேளை வாடிக்கையாளரிடம் வசூலித்தால், ₹1000 கொடுக்க வேண்டிய இடத்தில ₹1003 கொடுக்க வேண்டியதாக இருக்கும்.

    நேரடியாக வாடிக்கையாளருக்கு அரசு வரி விதிக்கவில்லையென்றாலும், கடைகள் அந்த வரியை வாடிக்கையாளரிடம் வசூலிக்க வாய்ப்புள்ளது.

    எனவே, சேவைக்கு வரி விதிக்க கூடாது என்பதே என் நிலை.

    பல செய்திகளைப் படித்து புரிந்து கொண்டதையே மேலே குறிப்பிட்டுள்ளேன் ஆனால், இன்னும் உறுதிப்படுத்த வேண்டியது உள்ளது.

    இங்குள்ள ஊடகங்கள் எதையுமே விசாரித்து விரிவாக எழுதுவதில்லை. மேலோட்டமாக எழுதிப் பிரச்சனையை உருவாக்கி விடுகிறார்கள்.

    தற்போது சரியான, முழுமையான செய்தியைத் தெரிந்து கொள்வது மிகக்கடினமாக உள்ளது.

    மேற்கூறிய புரிதலைப் பெறவே, ஏராளமான கட்டுரைகளை, பதிவுகளைப் படித்தேன். இன்னும் சில கேள்விகள் எனக்குள்ளது.

    இன்னொன்று கூடுதல் வரி விதிப்பு என்பது மாநிலங்களின் ஒத்துழைப்புடனே விதிக்கப்படுகிறது ஆனால், குற்றச்சாட்டு என்னவோ மத்திய அரசுக்கு தான் வருகிறது.

    எடுத்துக்காட்டுக்கு, பெட்ரோல், டீசலை GST யில் கொண்டு வர மாநிலங்களே எதிர்ப்பு தெரிவிக்கின்றன. காரணம், அவர்களுக்கான வரி வருவாய் குறையும் என்பதால்.

    எனவே, மத்திய அரசு மட்டுமே ஒரு பொருளின், சேவையின் வரியை உயர்த்த / குறைக்க முடியாது. மாநிலங்கள் ஒப்புக்கொண்டாலே மாற்ற முடியும்.

    இந்த சேவை வரி விதிக்கப்பட்டால், மாநிலங்கள் ஒத்துழைப்புடனே (GST council) விதிக்கப்படுகிறது என்றே அர்த்தம்.

  5. கிரி.. உங்கள் நேரத்தை செலவிட்டு சிரமம் பாராமல் என் கேள்விகளுக்கு பதிலளித்தமைக்கு மிக்க நன்றி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!