இந்து மதக் கடவுள்களில் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் பிள்ளையார் அல்லது விநாயகர் பாடல் வரிகள் உடன் கூடுதல் விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.
பிள்ளையார் வணக்கம்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் அருளைத் தரும் பிள்ளையார்
ஆற்றங்கரை ஓரத்திலே அரசமரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
ஆறுமுக வேலவனின் அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் தீர்த்து வைக்கும் பிள்ளையார்
மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்
அஞ்செழுத்து மந்திரத்தை நெஞ்சில் காட்டும் பிள்ளையார்
அவல்பொரி கடலையும் அரிசி கொழுக்கட்டையும்
கவலையின்றி உண்ணுவார் கண்ணைமூடித் தூங்குவார்.
கலியுகத்தின் விந்தையைக் காண வேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார்.
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசைப் பாடப்
பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும், பெரும்பாரக் கோடும்
வேழ முகமும், விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும், அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும், மும்மதச் சுவடும்
இரண்டு செவியும், இலங்குபொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரிய மெய் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் கிகரும் மூக்ஷிக வாகன
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்தே
திருந்திய முதல்ஐந் தெழுத்துத் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடாயுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவித்
திருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்குந் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத் தங்குச நிலையும்!
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
சண்முக தூலமுஞ் சதுர்முகச் சூக்கமும்
எண்முக மாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் கட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித் தெனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருவெளி யிரண்டிற் கொன்றிட மென்ன
அருள்தரும் ஆனந்தத் தழுத்தி, என் செவியில்
எல்லை இல்லா ஆனந் தமளித்
தல்லல் களைந்தே, அருள்வழி காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீரும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக, விரைகழல் சரணே
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணி விப்பான் – விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
–கபிலர்
ஐந்து கரத்தனை ஆனைமு கத்தனை
ஐந்து கரத்தனை ஆனைமு கத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே
-திருமூலர்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா
-ஒளவையார்
தொந்தி கணபதி
தொந்தி கணபதி வா வா வா
வந்தே ஒரு வரம் தா தா தா
கந்தனின் அண்ணா வா வா வா
கனிவுடன் ஒரு வரம் தா தா தா
பானை வயிற்றுடன் வா வா வா
பணிந்தேன் ஒரு வரம் தா தா தா (தொந்தி)
குள்ள குள்ளனே வா வா வா
குண்டு வயிறனே வா வா வா
ஆனை முகத்துடன் வா வா வா
அவசியம் ஒரு வரம் தா தா தா (தொந்தி)
எல்லாம் அறிந்த கணபதியே
எவ் வரம் கேட்பேன் தெரியாதா
நல்லவன் என்னும் ஒரு பெயரை
நான் பெறவே வரம் தா தா தா (தொந்தி)
விநாயகர் வழிபாடு
விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுதாகக் காணப்படுகிறது. தாய்லாந்திலும் விநாயகரை வணங்குகிறார்கள்.
விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது. இந்தக் காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவச் சமயத்தோடும் ஒன்றிணைந்தது.
வைணவர்கள், விநாயகரைத் “தும்பிக்கை ஆழ்வார்” என்று அழைப்பார்கள்.
பெயர்க்காரணம்
இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும், யானையின் முகத்தினைக் கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.
விநாயகரின் வேறு பெயர்கள்
- பிள்ளையார்
- கணபதி – கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
- ஆனைமுகன் – ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
- கஜமுகன் – கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
- விக்னேஸ்வரன் – விக்கினங்களைத் (தர்மவழியில் நிற்பவர்களின் துன்பங்களை) தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது அறத்தின் வழியில் வாழ்பவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்
- பிள்ளையாரை வணங்கிச் செயலைத் தொடங்கினால் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் தன்னம்பிக்கையுடன் செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.
விநாயக சதுர்த்தி
ஐந்து கரங்களை உடைய ஆனைமுகனைத் தமிழ் வருடந்தோறும் ஐந்தாவது மாதம் ஆன ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும்.
துர்வா கணபதி விரதம் துர்வா யுக்மம் எனும் சொல்லானது அருகம்புல்லைக் குறிப்பதாகும். விநாயகருக்கு விரதம் இருந்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்வதும், மாலையிடுவதும் இந்நாளில் செய்யப்படுகிறது.
விநாயகர் அகவல்
ஔவையார், விநாயகர் மேல் பாடிய அகவல் ’சீதக்களப செந்தாமரை..” எனத் தொடங்கும் விநாயகர் அகவல்.
விநாயகர் அகவலைத் தினமும் பாராயணம் செய்து வருவோரைத் தீவினை நெருங்காது, நல்லதே நடக்கும் என்பது தொன் நம்பிக்கை.
தகவல் நன்றி விக்கிபீடியா
ழுழு முதற்கடவுள்
கோவிலில் பிள்ளையாரை வணங்கிய பிறகே மற்ற கடவுள்களை வணங்கச் செல்வோம்.
பிள்ளையாரை வணங்கிய பிறகு செயலை துவங்குவதும், எழுதும் போது பிள்ளையார் சுழியுடன் ஆரம்பிப்பதும் தொன்று தொட்ட வழக்கமாக உள்ளது.
பிள்ளையாரை போன்று வித விதமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கடவுள் உலகத்திலேயே இருக்க வாய்ப்பில்லை. விநாயகர் சதுர்த்தியன்று பலரும் தங்கள் கற்பனைத்திறனைக் காட்டியிருப்பார்கள் 🙂 .
தங்களுக்குப் பிடித்த தொழிலில், விளையாட்டில் என்று அனைத்திலும் பிள்ளையாரை வடிவமைப்பது வழக்கம்.
அதே போலப் பிள்ளையாரை வரைவதும் எளிது. பிள்ளையாரை வடிவமைப்பதில், பலரின் கற்பனைத்திறனைக் காணலாம்.
குழந்தை, காவல் துறை, கிரிக்கெட் என்று அனைத்து கதாபாத்திரங்களிலும் உருவாக்கப்படும், வரையப்படும் ஒரே கடவுள் விநாயகர் மட்டுமே!
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி.. தமிழில் நம் முன்னோர்களின் அறிவினை கண்டு எப்போதும் வியந்து போகிறேன்.. வரும் சந்ததிகள் இவற்றை எவ்வாறு அடுத்த தலைமுறைக்கு கடத்த போவார்கள் என்பது தெரியவில்லை.. இருப்பினும் எல்லாம் நன்றாக நடக்கும் என நம்புவோம்..