AVM குமரன் | A Memory Stockist

9
AVM குமரன்

AV மெய்யப்ப செட்டியாரின் மகன்களில் ஒருவரான AVM குமரன் அவர்கள் பல பேட்டிகளை YouTube ல் கொடுத்து வருகிறார், சுவாரசியமாக உள்ளது. Image Credit

AVM குமரன்

பலருக்கும் AVM சரவணன் பரிட்சியமானவர் ஆனால், AVM குமரன் அவர்கள் பற்றிப் பலருக்கும் அறிமுகம் இல்லை. எதனால் என்று எனக்குத் தெரியவில்லை.

சித்ரா லட்சுமணன் டூரிங் டாக்கீஸில் இவருடைய பேட்டி மற்றும் மற்ற சேனல்களில் இவரது பேட்டியும் பார்க்கச் சுவாரசியமாக இருந்தது.

இவரின் அபார நினைவுத் திறன் பொறாமையை அளித்தது 🙂 .

வருடம், பெயர், நிறுவனம், கதாப்பாத்திரங்கள், பாடல்கள், நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் பெயர் என்று அனைத்தையும் கூறுகிறார்.

சம்பவம் கூறுவது எளிது ஆனால், சம்பவத்தை மேற்கூறிய நபர்களின் பெயருடன் கூறுவது எளிதல்ல.

எப்படி இந்த வயதில் இவ்வளவையும் நினைவில் வைத்துள்ளார்?!

மெய்யப்ப செட்டியார்

ஒரு படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும், கதை பற்றிய புரிதல், ரசிப்புத்திறன், மக்களின் எண்ணவோட்டம், என்ன செய்தால் மக்கள் ரசிப்பார்கள் என்பதை துல்லியமாக மெய்யப்ப செட்டியார் தெரிந்து வைத்துள்ளார்.

எப்படிப் படம் எடுத்தால் ஓடும், யாருக்கு இக்கதாபாத்திரம் பொருந்தும் என்பது உட்பட பல விவரங்களைத் தெரிந்து வைத்துள்ளார்.

இவர்களின் திரைப்பயணம் உண்மையிலேயே வியப்பை அளிக்கிறது.

அதே சமயம் தயாரிப்பாளராக இயக்குநருடன் கருத்து வேறுபாடுகள், சண்டை இயக்குநர் மாற்றம் உட்பட பல நடந்து உள்ளது.

அதாவது, தயாரிப்பாளரே இறுதி முடிவு எடுத்துள்ளார், தற்போது போன்று அல்ல.

பராசக்தி

நடிகர் திலகம் நடித்த பராசக்தி தமிழ் திரையுலகம் இருக்கும் வரை யாராலும் மறக்க முடியாத படம். அப்படத்தை எடுத்தது AVM நிறுவனம்.

நடிகர் திலகத்தை வைத்து 10,000 அடி எடுத்ததைப் பார்த்த மெய்யப்ப செட்டியார்..

படம் நல்லா வந்து இருக்கு ஆனால், இந்தப்பையன் (சிவாஜி) கன்னம் எல்லாம் ஒட்டிப்போய் ஒல்லியா இருக்கான்.

அதனால இவனுக்கு நல்லா சாப்பாடு கொடுத்துக் கொஞ்சம் எடை கூட வைத்து நடிக்க வைக்கலாம், சிறப்பாக இருக்கும்‘ என்று கூறியுள்ளார்.

தயாரிப்பாளரே கூறியபிறகு என்ன செய்வது? என்று இயக்குநரும் அதே போலத் திரும்ப எடுத்துள்ளார்கள். நினைத்ததை விடச் சிறப்பாக அமைந்துள்ளது.

நடிகர் திலகத்துக்கும் இப்படத்துக்கு ஒரு ஒத்திகை பார்த்தது போல ஆகி விட்டது.

தற்போது பல்வேறு கேமராக்கள், கோணங்களில் எடுக்கிறார்கள். எனவே, நடிப்பே தெரியவில்லையென்றாலும், ஓரளவுக்கு ஒப்பேத்த முடியும்.

ஆனால், அக்காலத்தில் வசனம் உட்பட எல்லாமே Live ஆக இருக்கும். எனவே, ஒருவர் தவறு செய்தால், மொத்தப் பேரும் திரும்ப நடிக்க வேண்டும்.

இசை ஞானம்

AVM குமரன் அவர்களுக்கு இசை ஞானம் அபாரம். அதே சமயம் இசையமைப்பாளரிடம் தலையீடும் இருந்துள்ளது.

இவருக்கும் MSV அவர்களுக்கும் சிறப்பான புரிதல் உள்ளது.

இவர் ஒவ்வொரு பாடலைப் பற்றிக் கூறும் போதும், அட! என்று வியக்க வைக்கிறார். இதனால் பல அசத்தலான பாடல்களைக் கொடுத்துள்ளனர்.

AVM லோகோ வரும் போது, நாதஸ்வர இசைபோல வரும் இசை எப்படி உருவாக்கினார்கள் என்று கூறியது சுவாரசியமாக இருந்தது.

மிகக்குறைந்த நாளில், குறைந்த வாத்தியங்களைக் கொண்டு, குறைந்த நபர்களைக் கொண்டு இந்த அற்புதமான இசையை உருவாக்கியுள்ளனர்.

அந்த இசையை எல்லாம் இவர் நினைவிலிருந்து கூறும் போது என்னய்யா மனுசன் இவர்!! என்று தான் தோன்றுகிறது 🙂 .

பாடல் விவாதங்கள்

அவளுக்கென்ன அழகிய முகம்‘ பாடலை, யாருக்கு என்று TMS கேட்டு நாகேஷுக்கு என்று கூறியவுடன் நடந்த உரையாடல்களும், அந்தப் பாடலில் TMS வருவது குறித்த விவாதங்களும் சிறப்பு.

உதயசூரியனின் பார்வையிலேயே‘ வரிகளுக்கு நடந்த தணிக்கை சிக்கல்கள், ‘ராஜாவின் பார்வை‘ பாடலில் நடந்த உரையாடல்கள் சுவாரசியம்.

நடிகர் திலகம் AVM ல் அதிகப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலானவை வெற்றிப் படங்களே! ‘ப / பா’ வரிசை படப்பெயருக்கு உள்ள சென்டிமென்ட் கதையும் கூறினார்.

களத்தூர் கண்ணம்மா படத்தின் ‘அம்மாவும் நீயே‘ பாடலுக்கு நடந்த கருத்து வேறுபாடுகள், சண்டை வியப்படைய வைத்தது. இயக்குநரையே மாற்றி விட்டார்கள்.

புல்லாங்குழல்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர் பாடல்கள் ஆல்பம் வெளியிடத் திடீர் திட்டமிடல் AVM செய்கிறார்கள்.

கவியரசு கண்ணதாசன் உடனே ஒப்புக்கொள்கிறார், MSV யும் வந்து விடுகிறார்.

கண்ணதாசன் இயற்றிய பாடலில் ஒன்று தான் தற்போதும் அனைவரும் விரும்பும் பாடலாக, காலம் கடந்தும் இருக்கும் ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே‘.

எட்டுப்பாடல்களை உருவாக்கியுள்ளார்கள், எட்டும் செம ஹிட்டு 🙂 . அதிலும் புல்லாங்குழல்1 பாடல் இன்றுவரை அனைவரையும் ரசிக்க வைத்து வருகிறது.

இப்பாடலின் காம்போ இவர்கள் தான் என்பதே தற்போது தான் தெரியும்.

YouTube

தற்போது YouTube பலருக்கு வெளிச்சத்தைத் தருகிறது.

முன்பு தொலைக்காட்சியில் வந்தால் மட்டுமே ஒருவரின் பேட்டியைக் காண முடியும். தொலைக்காட்சிக்கும் சம்பந்தப்பட்ட நபருக்கும் சண்டை என்றால் பேட்டியே வராது.

ஆனால், YouTube அப்படியல்ல, எவரும் பேட்டி எடுக்கலாம், கொடுக்கலாம் எனும் போது பலருக்கும் இதன் மூலம் வெளிச்சம் கிடைக்கிறது.

இது போன்ற ஒரு வாய்ப்பு இல்லையென்றால், AVM குமரன் அவர்கள் கூறிய பல அனுபவங்களைக் கேட்காமாலையே தவறவிட்டு இருப்போம்.

இவரது அனுபவங்களை ‘avm kumaran interview’ என்று YouTube ல் தேடினால் கிடைக்கும். நேரம் அமையும் போது பாருங்கள், சுவாரசியமாக இருக்கும்.

ஆனால், 80’s க்கு கீழே பிறந்தவர்களுக்கு இவை விருப்பமாக இருக்கும், 90’s ஓகே. 2K கிட்ஸ்க்கு ஒன்றுமே புரியாது, சுவாரசியமாகவும் இருக்காது.

உண்மையிலேயே 70 / 80’s தலைமுறையே கொடுத்து வைத்த தலைமுறை. மூன்று தலைமுறை திரைப்படங்களையும், இசையையும் ரசித்த தலைமுறை 🙂 .

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

9 COMMENTS

  1. 70,80 களில் பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றால் 50,60 களில் பிறந்தவர்களை என்னவென்று சொல்வீர்கள். அடியேன் 52ல் பிறந்தவன். திரைப்பட பாடல்களின் பொற்காலம் என்றால் அடியவனைப் பொறுத்த அளவில் 55 லிருந்து 70 வரை என்று சொல்வேன். இந்த காலகட்டத்தில் வந்த படங்கள் பெரும்பாலும் கதை நடிப்பு வசனம் பாடல்கள் என்று அனைத்து அம்சங்களிலும் தூள் கிளப்பும். மெலோடியஸ் என்றும் எப்போது கேட்டாலும் அலுக்காத சலிக்காத பாடல்கள் என்று தரப்படுத்தும் அனைத்து பாடல்களும் இந்த காலகட்டத்தில் வந்தவைதான். அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அனைத்துமே மாறிவிட்டது. மக்களின் ரசனையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. படங்களின் தரமும் எல்லா அம்சங்களிலும் மாறிவிட்டது. ஆகவே 50,60 களில் பிறந்தவர்களே மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்றால் அது மிகையாகாது. நன்றி வணக்கம்

  2. கிரி.. இந்த நேர்காணலை நானும் பார்த்தேன்.. அருமையாக இருந்தது.. எடிட்டிங் முறையாக கற்றது மட்டுமில்லாமல் , சினிமாவின் பல நுணுக்கங்களை (பின்னணி இசை உட்பட) இவர் தெரிந்து வைத்து இருந்தார்.. சித்ரா சார் உண்மையில் திரைத்துறையை பொறுத்தவரை ஒரு மிக பெரிய ஆளுமை என்பது chai with chitra என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது தான் தெரிகிறது..

    திரைத்துறையில் இதுவரை நாம் அறிந்திராத நபர்களின் திரை வாழ்க்கையை வெளிக்கொண்டு வந்த ஒரே நிகழ்ச்சி இதுவாக தான் இருக்கும்.. வெகு சமீபத்தில் நடிகர் மோகன் / ராமராஜன் இருவரின் நேர்காணல் மிகவும் யதார்த்தமாக இருந்தது.. திரைத்துறையில் நடந்த பல நிகழ்வுகளை தற்போது தெரிந்து கொள்ளும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது..பல படங்களை தயாரித்த AVM நிறுவனம் தற்போது படங்களை தயாரிப்பதில்லை.. அதற்காக காரணத்தை ஒரு நேர்காணலில் சரவணன் குறிப்பிட்டு இருந்தார்.. தற்போது திரைத்துறையின் போக்கு முற்றிலும் மாறி விட்டது..

    குறிப்பாக தனிப்பட்ட நபர்கள் (சவுத்திரி போன்றவர்கள்) தயாரிப்பதை முற்றிலும் குறைத்து விட்டார்கள்.. கோவிட்க்கு பிறகு திரைத்துறை மிக பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்ற கருத்து பரவலாக இருந்தது.. ஆனால் தற்போது முன்பை விட வளர்ச்சியை சந்தித்து வருகிறது..

    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் என் தற்போதும் விரும்பி கேட்கும் பாடல்.. கண்ணதாசன் தினமும் தூங்கும் முன்பு இந்த பாடலை கேட்பது வழக்கம்.. இந்த பாடல் மட்டுமில்லாமல் ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் பாடலும் மிகவும் பிடிக்கும்..

    இந்த பாடல்களை கேட்கும் போது என்னுடைய பள்ளி நாட்கள் நினைவில் வந்து போகும்.. SPB பாடிய நமசிவாய நமசிவாய பாடலை தற்போது கேட்டாலும் கல்லுரி நாட்களில் ஒரு தேநீர் கடையில் முதல் முதலில் கேட்ட நினைவு வந்து போகும்.. அருமையான பாடல்..

  3. @விபுலானந்தன்

    சார் நீங்க 50+ இருப்பீர்கள் என்று நினைத்தேன் ஆனால், பிறந்ததே 52 ல் என்று தற்போது தான் தெரியும் 🙂 .

    நான் சிங்கப்பூரிலிருந்த போது இருந்து இத்தளத்தை படிக்கிறீர்கள். நீங்கள் இப்பவும் தொடர்வது எனக்கு பெருமையை அளிக்கிறது.

    சார் நான் கூறியது, மூன்று தலைமுறை இசையை ரசிக்கும் தலைமுறை என்ற அர்த்தத்தில்.

    MSV காலத்தில் சிறு வயது ஆனால், அந்த இசையைக் கேட்டு வளர்ந்தேன், இளையராஜா, தேவா, ரகுமான், ஹாரிஸ், வித்யாசாகர், சந்தோஷ் நாராயண், அனிருத் என்று தற்போது வரை ரசிக்கிறோம்.

    உங்களுக்கு தற்கால இசை பிடிக்காமல் போகலாம். காரணம், நீங்கள் MSV போன்றவர்களின் இசையை ரசித்தவர்கள்.

    அதனாலே மூன்று தலைமுறை இசையையும் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்த தலைமுறை என்று கூறினேன்.

    • ஆம். உங்களின் ஊகம் சரிதான்.
      தாங்கள் சிங்கப்பூரில் இருந்த காலம் தொட்டு இன்றுவரை தங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நடுநிலையான உண்மையான இன்னும் சொல்லப்போனால் ஆத்மார்த்தமான என்று சொல்வார்களே அதைப்போலவே சத்தியத்தை தங்களின் எழுத்துகளில் நான் உணர்ந்தபடியால் தொடர்ந்து படித்து வருகிறேன்.
      மேலும் கொடுத்து வரும் விடயங்கள் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒன்றாக இருந்து வருகிறது.
      புதிய விடயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமான காலகட்டத்தில் நாம் இப்போது வாழ்ந்து வருகிறோம்.
      தெளிவாகவும் சுருக்கமாகவும் உண்மையோடும் நடுநிலையான தன்மையுடனும் தங்களின் எழுத்து அமைந்துள்ள படியால் அடியேன் தொடர்ந்து தங்களின் பதிவுகளை கண்டு வருகிறேன்.
      என்போன்றே உண்மையை சத்தியத்தை பற்றி நிற்பவர் எவரும் தங்களின் எழுத்துக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருவார்கள் என்பது திண்ணம்.
      நன்றி வணக்கம்

    • ஆம். 2000 ஆண்டிற்கு பிறகு வந்த பாடல்கள் என் போன்றவர்கள் மனதிற்கு ஏற்ற ஒன்றாக இல்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி மூன்று தலைமுறை இசையை கண்டுவிட்டோம் என என்போன்ற வயது ஒத்தவர்கள்
      சொல்லிக்கொள்ளலாம்.
      இப்போது வரும் பாடல்களில் உண்மை மிகவும் குறைவு ஆத்மார்த்தமான உழைப்பு குறைவு . ஆர்ப்பாட்டம் கூச்சல் அவசரம் இவையே அதிகம். எனவே இயல்பாகவே என்போன்ற வர்களுக்கு இக்கால இசையில் நாட்டம் போய்விட்டது.
      இவைகள் அனைத்தும் காலத்தின் கோலமே என்று உணர்ந்து காலத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறேன்.
      நன்றி வணக்கம்

  4. @யாசின்

    “சினிமாவின் பல நுணுக்கங்களை (பின்னணி இசை உட்பட) இவர் தெரிந்து வைத்து இருந்தார்.”

    கலக்குகிறார், எல்லாத்தையும் பெயரோடு கூறுவது எனக்கு மிகுந்த வியப்பையும், பொறாமையையும் அளித்தது 🙂 .

    எப்படிடா இவ்வளவையும் நினைவு வைத்துள்ளார் என்று.

    “திரைத்துறையில் இதுவரை நாம் அறிந்திராத நபர்களின் திரை வாழ்க்கையை வெளிக்கொண்டு வந்த ஒரே நிகழ்ச்சி இதுவாக தான் இருக்கும்.”

    உண்மை.

    இவரும் திரைத்துறையை சார்ந்தவர் அதோடு மூத்தவர் என்பதால், பல தகவல்களைத் தெரிந்து வைத்துள்ளார்.

    குமரன் அளவுக்கு நினைவு வைத்துக் கூறவில்லையென்றாலும், இவர் நினைவுத்திறனும் அட்டகாசம்.

    இதையெல்லாம் எப்படி சரியாகக் கூறுகிறார் என்று நினைப்பேன்.

    “பல படங்களை தயாரித்த AVM நிறுவனம் தற்போது படங்களை தயாரிப்பதில்லை.. அதற்காக காரணத்தை ஒரு நேர்காணலில் சரவணன் குறிப்பிட்டு இருந்தார்”

    நானும் பார்த்தேன். வியாபார முறை மாறி விட்டதே இதற்கு காரணம் என்று கூறினார்.

    அதோடு படம் எடுப்பது முன்பு போல ஒழுங்கு இல்லை. தயாரிப்பாளருக்கு சரியான மரியாதை இல்லை.

    “குறிப்பாக தனிப்பட்ட நபர்கள் (சவுத்திரி போன்றவர்கள்) தயாரிப்பதை முற்றிலும் குறைத்து விட்டார்கள்.”

    உண்மையே

    “கோவிட்க்கு பிறகு திரைத்துறை மிக பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்ற கருத்து பரவலாக இருந்தது.. ஆனால் தற்போது முன்பை விட வளர்ச்சியை சந்தித்து வருகிறது..”

    என்னைப்பொறுத்தவரை தமிழ்த் திரையுலகம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இது பற்றி பின்னர் எழுதுகிறேன்.

    “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் என் தற்போதும் விரும்பி கேட்கும் பாடல்.. கண்ணதாசன் தினமும் தூங்கும் முன்பு இந்த பாடலை கேட்பது வழக்கம்.. இந்த பாடல் மட்டுமில்லாமல் ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் பாடலும் மிகவும் பிடிக்கும்..”

    எனக்கும் இப்பாடல்கள் விருப்பம். TMS முருகன் பாடல்கள் அனைத்துமே பிடிக்கும்.

    “SPB பாடிய நமசிவாய நமசிவாய பாடலை தற்போது கேட்டாலும் கல்லுரி நாட்களில் ஒரு தேநீர் கடையில் முதல் முதலில் கேட்ட நினைவு வந்து போகும்.. அருமையான பாடல்..”

    இதுவும் நான் அடிக்கடி கேட்கும் பாடல். SPB பாடியதாலையே இப்பாடல் ஒருபடி சிறப்பு ஆகி விட்டது.

  5. @விபுலானந்தன்

    சார் நீங்கள் பாராட்டும் அளவுக்குத் தகுதியானவன் இல்லை. தன்னடக்கத்துக்காக கூறவில்லை.

    உண்மையாகவே நான் நடுநிலை கிடையாது ஆனால், என் மனசாட்சிக்கு சரி என்று படுவதை எழுதுகிறேன். மனசாட்சிக்கு ரொம்ப பயப்படுவேன்.

    “மேலும் கொடுத்து வரும் விடயங்கள் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒன்றாக இருந்து வருகிறது.”

    ஆமாம் சார். முடிந்தவரை ஒரே மாதிரியான கட்டுரைகள் எழுதுவதை தவிர்க்கிறேன்.

    ஒரே மாதிரி எழுதுவது பலதரப்பட்ட வாசகர்களும் படிக்கும் நிலையில் சலிப்பை ஏற்படுத்தும்.

    எனவே, 10 ல் 6 – 7 கட்டுரைகள் ஒருவருக்கு படிக்க ஆர்வம் இருக்கும் வகையில் மாற்றி மாற்றி எழுதுகிறேன்.

    உங்களை போன்ற மூத்தவர்களின் ஆசிர்வாதம் இருப்பதே எனக்கு பெருமை தான்.

    மூத்தவர்களிடம் ஆசியும் பாராட்டும் வாங்குவதை எப்போதுமே விரும்புவேன். மூத்தவர்களின் மீது எனக்கு எப்போதுமே தனிப்பட்ட பிரியம் உண்டு.

    “2000 ஆண்டிற்கு பிறகு வந்த பாடல்கள் என் போன்றவர்கள் மனதிற்கு ஏற்ற ஒன்றாக இல்லை.”

    ஆமாம் சார் அதனால் தான் குறிப்பிட்டேன்.

    “இயல்பாகவே என் போன்றவர்களுக்கு இக்கால இசையில் நாட்டம் போய்விட்டது.”

    இது நடைமுறை எதார்த்தம் தான் சார். எங்கள் தலைமுறைக்கு அடுத்த தலைமுறை இசைக்கு உங்களைப்போலத் தோன்றும் என்று நினைக்கிறேன்.

    காலம் மாறும் போது நமது ரசனைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே உள்ளது.

    • நம் அனைத்து செயல்களையும் நமது ஆன்மா எப்போதும் கவனித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதன் வேலை கவனிப்பது மட்டுமே. வேறு வேலை என்பது அதற்கு எப்போதுமே கிடையாது. இதைத்தான் நாம் மனச்சாட்சி என்று கூறுகின்றோம்.
      அது உண்மையை மட்டுமே விரும்பும். அதையே நமக்கு காட்டும். ஒருவரின் மனச்சாட்சி ஒரு போதும் தவறான பாதையை காட்டாது. அப்படி தவறாக காட்டினால் அது மனச்சாட்சியாக இருக்க முடியாது. நேர்மையும் உண்மையும் இருக்கும் ஒருவரிடத்தே மனச்சாட்சி உண்மையை மட்டுமே காட்டும். ஆக உண்மையும் நேர்மையும் நடுநிலை சார்ந்ததே. அந்த வகையில்
      நீங்கள் என்னைப் பொறுத்தவரை நடுநிலைப் பேணுபவரே . நேராக நாம் பார்த்திராத இட்டாலும் இந்த பிரபஞ்சத்தில் மன அலைவரிசைகளில் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. அது மனிதர்களை இணைக்கிறது. இணையத்தின் மூலமாக இப்படித்தான் நட்பு மலர்கிறது. இணைபவர்கள் நல்ல நோக்கத்துடன் இணைந்தால் நன்மை விளையும். ஒருவர் மாறுபாட்டால் அங்கு நல்லவர் பாதிக்கப்படுவார். அவ்வளவே.
      பதில் மிகவும் நீண்டு விட்டது.
      தங்களுக்கு எல்லா விதங்களிலும் இறையருள் பரிபூரணமாக உதவ வேண்டி முடிக்கிறேன். நன்றி வணக்கம்.

  6. @விபுலானந்தன்

    “ஒருவரின் மனச்சாட்சி ஒரு போதும் தவறான பாதையை காட்டாது. அப்படி தவறாக காட்டினால் அது மனச்சாட்சியாக இருக்க முடியாது.

    சரி தான் சார்.

    “தங்களுக்கு எல்லா விதங்களிலும் இறையருள் பரிபூரணமாக உதவ வேண்டி முடிக்கிறேன்”

    தங்களின் ஆசிக்கு நன்றி சார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!