தற்போது மொபைல் இல்லாதவர்களே கிடையாது என்றாலும், ஏதோ காரணத்தால் மொபைலை அப்போதைக்குப் பயன்படுத்தக் கேட்பவர்கள் உள்ளனர். Image Credit
கொடுக்க விருப்பமில்லையென்றாலும், இக்கட்டான சூழ்நிலையில் கேட்கும் போது தயக்கத்துடன் கொடுக்க வேண்டியதாகி விடுகிறது.
இவ்வாறு கொடுத்துள்ளேன் என்றாலும், இது தொடர்பாக நண்பர் ஒருவர் கூறிய தகவலைக் கேட்டதும் பகீர் என்று ஆகி விட்டது.
மொபைல்
நண்பரின் நண்பர் ஒருவர் உணவு விடுதி நடத்தி வந்துள்ளார்.
சிலர் சாப்பிட்ட பிறகு பணத்தைச் செலுத்தி விட்டுக் கிளம்பும் போது, மொபைலில் பேட்டரி தீர்ந்து விட்டது எனவே உங்க ஃபோனிலிருந்து ஒரு அழைப்பு செய்து கொள்கிறேன் என்று கேட்டுள்ளார்.
உரிமையாளரும் சரி என்று கொடுத்துள்ளார். கேட்டவரும் பேசி விட்டு மொபைலை கொடுத்து விட்டுச் சென்று விட்டார்.
அடுத்த நாள் காவல்துறையினர் இவரிடம் ‘உனக்கும் கொலைக்கும் என்ன சம்பந்தம்?‘ என்று கேட்டதும், இவருக்கு ஒன்றும் புரியவில்லை.
வந்த காவலர்களும் அவரிடம் அநாகரீகமாக, மரியாதைக்குறைவாகப் பேசியுள்ளார்கள்.
பின்னரே தெரிந்தது, கொலை செய்து விட்டு வந்தவர்கள், இவர் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு, இவருடைய மொபைலை பயன்படுத்திப் பேசியுள்ளார் என்று.
தற்போது இவரும் ஒரு சாட்சியென்று நீதிமன்றத்துக்கு பல காலமாக அலைந்து கொண்டு இருப்பதாகக் கூறியதும் பக்கென்று ஆகி விட்டது.
ஒரு மொபைலை கொடுத்ததற்கு இந்த நிலைமையா!
டாஸ்மாக்
தற்போது டாஸ்மாக்கில் சில கடைகளில் மின்னணு பரிவர்த்தனை தான் செய்கிறார்கள்.
எனவே, இங்கே வரும் குடிகாரர்கள் சிலர் பணம் கணக்கில் இல்லையென்று, பணத்தைக் கொடுத்து இவர்கள் கணக்குக்கு அனுப்பக் கூறுகிறார்கள்.
இங்கே வருபவர்கள் எப்படிப்பட்ட நபராகவும் இருக்கலாம்.
இதுவும் ஒரு சிக்கலாக உள்ளது.
நாளை இதே போல ‘நீ எதற்குப் பணத்தை அனுப்பின?‘ என்று கேட்டு, இதைக்கூறினால் நம்புவார்களா?
எனவே, பொது இடங்களில் உதவும் போது எச்சரிக்கையாக இருங்கள். பிரச்சனை எந்த வடிவில் வரும் என்றே தெரியாது.
அவர் யாரோ நாம் யாரோ!
எனவே, ஆபத்தில், நெருக்கடியில் உதவுவது தான் என்றாலும், நல்லது செய்யப்போய் சிக்கலில் மாட்டிக்கொள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.
இக்காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை. இரு நிமிடங்கள் பேசிட்டு, நமக்கு ஏழரையை கூட்டிவிட்டு போய்டுவாங்க.
பெரும்பாலும் தவறாக நினைத்துக்கொண்டால் என்ன செய்வது? என்ற சங்கடத்தில் தான் கொடுப்போம்.
அவர் யாரோ நாம் யாரோ! நாம் கொடுக்கவில்லையென்றால் எதையோ நினைத்துக்கொள்ளட்டும்.
அடுத்த நிமிடம் வேறு வேறு இடத்துக்கு இருவரும் சென்று விடுவோம் என்பதால், இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
சம்பவம்
இது மாதிரி இல்லையென்றாலும், வேற மாதிரி ஒரு ஆளிடம் மொபைலை கொடுத்து மாட்டிய சம்பவமே ‘என்னது பாகிஸ்தானா..?!‘ 😀 .
தற்போதும் யாரும் மொபைலை கேட்டால், இவரே நினைவுக்கு வந்து செல்வார் 🙂 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. இந்த பதிவை படிக்கும் போது பகீரென்று இருக்கிறது.. ஒரு உதவி செய்ய போய் அவர் மாட்டி கொண்டது உண்மையில் இனி யாருக்கும் உதவவே தோன்றாது.. நாமும் இது போல பல நிகழ்வுகளை கடந்து வந்து இருக்கலாம்.. ஆனால் ஒவ்வொருவரின் அனுபவம் வேறு மாதிரியாக இருக்கும்.. ஒரு முறை வயது முதிந்த ஒருவர் மருந்து சீட்டை வைத்து கொண்டு சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இங்கும், அங்குமான திரிந்து கொண்டிருந்தார்.. பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. நிறைய பேரிடம் அவர் இந்த சீட்டை நீட்டி ஏதோ கேட்டு கொண்டிருந்தார்..
நான் சற்று தூரத்தில் இந்த நிகழ்வை பார்த்து கொண்டிருந்தேன்.. நானே wanted டா அவரிடம் சென்று விசாரித்து, மருந்து சீட்டை பார்த்து விட்டு மருந்து வாங்கி தருவதாக சொன்னேன்.. அவர் பணத்தை மட்டும் கேட்டார்.. எனக்கு என்னவோ மருந்தை மெடிக்கலில் வாங்கி கொடுத்து விடலாம் என்று தோன்றியது.. சுற்றி முற்றி பார்க்கும் போது சற்று தொலைவில் மெடிக்கல் இருந்தது.. ஆனால் அவர் பணத்தை கொடுத்து விடு தம்பி.. நான் போய் வாங்கி கொள்கிறேன் என்றார்..
எனக்கும் காரைக்கால் பேருந்துக்கு செல்ல வேண்டும்.. இருப்பினும் சரி மருந்தை வாங்கி கொடுத்து விடலாம் என்று சொன்ன போது, அவர் பேச்சு வேறு மாதிரி இருந்தது.. பின்பு தான் உணர்தேன்.. தேவையில்லாமல் உதவ போனது என் தவறு என்று, அவரின் இலக்கு பணத்தை வாங்கி கொண்டு டாஸ்மார்க் செல்ல வேண்டும் என்பது தான்.. பின்பு 100 / 200 ரூபாயா? நினைவில் இல்லை.. கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன்..
சில நேரம் ஊருக்கு வரும் போது முன் பின் யாரென்று தெரியாதவர்கள் விமான நிலையத்தில் பார்சல் கொண்டு செல்லுமாறு தொல்லை செய்வார்கள்.. குறிப்பாக நாம் தமிழ் என்று தெரிந்து கொண்டால், தொல்லை இன்னும் அதிகமாக இருக்கும்.. சிலர் ஒரு படி மேலே போய், பணம் தருகிறேன்.. இல்லை என்றால் தமிழனுக்கு தமிழன் உதவ மாட்டான் என்றெல்லாம் தேவையில்லாமல் பேசுவார்கள்.. நான் இதெல்லாம் காதில் வாங்கி கொள்வதே இல்லை.
உதவி செய்ய போய் நாம் சிக்கலில் மாட்டி கொண்டால், நம்மை யாரும் காப்பாற்ற வரமாட்டர்கள்.. நீங்கள் கூறியது தான் என் மனநிலையும் : அடுத்த நிமிடம் வேறு வேறு இடத்துக்கு இருவரும் சென்று விடுவோம் என்பதால், இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
@யாசின்
“மருந்தை வாங்கி கொடுத்து விடலாம் என்று சொன்ன போது, அவர் பேச்சு வேறு மாதிரி இருந்தது.. பின்பு தான் உணர்தேன்.. தேவையில்லாமல் உதவ போனது என் தவறு என்று”
நான் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி படித்துக் கொண்டு இருந்தேன்.
சைக்கிளில் கடைக்குச் சென்று பேருந்து நிலையம் வழியாக வந்த போது ஒருவர் கிழிந்த பாக்கெட் காண்பித்து, பிக்பாக்கெட் அடித்து விட்டார்கள்.
ஊருக்குச் செல்லப் பணம் கொடுத்து உதவுங்கள் என்று கேட்டதால், பாவப்பட்டு 20 கொடுத்தேன் (அப்போது 20 பெரிய தொகை எனக்கு).
இரு நாட்கள் கழித்து அதே நபர் அதே கதையுடன் என்னை அடையாளம் தெரியாமல் கேட்ட போது கடுப்பாகி திட்டி அனுப்பி விட்டேன்.
இது போல நிறைய இடங்களில் ஏமாந்ததால், உண்மையாக உதவி கேட்பவர்களைக் கூடச் சில நேரங்களில் தவிர்க்க வேண்டியதாகி விடுகிறது.
இது ஒரு வகையில் வருத்தத்தை ஏற்படுத்துகிறது . இவ்வாறு கேட்கும் போதே ஏமாற்றுகிறாரோ என்று தான் தோன்றுகிறது .
“சில நேரம் ஊருக்கு வரும் போது முன் பின் யாரென்று தெரியாதவர்கள் விமான நிலையத்தில் பார்சல் கொண்டு செல்லுமாறு தொல்லை செய்வார்கள்”
இதை மட்டும் செய்து விடாதீங்க யாசின்.
என் அனுபவம் இது https://www.giriblog.com/chennai-airport-luggage/