சிங்கம் II [2013]

10
சிங்கம் II

முதல் பாகமான சிங்கம் பிறகு வந்துள்ள சிங்கம் II அதே போல மாஸ் படமாக வெளிவந்து பட்டைய கிளப்பிக்கொண்டு இருக்கிறது. Image Credit

முதல் பாகத்தில் லோக்கல் ரவுடியான பிரகாஷ்ராஜ் என்றால் இதில் லோக்கல் + இன்டர்நேஷனல்.

முதல் பாகத்தில் ஆள் கடத்தல் என்றால் இதில் போதை மருந்து.

தூத்துக்குடியில் போதை மருந்து கும்பலைக் கண்டறிய NCC ஆசிரியர் என்ற பெயரில் இருக்கும் சூர்யா எப்படி அவர்களைப் பிடித்து அடித்துத் துவம்சம் செய்கிறார் என்பது தான் சிங்கம் II.

சிங்கம் II

கேப்டனுக்குப் பிறகு சூர்யா தான் காவல் துறையைக் கையில் எடுத்துக்கொண்டார் போல. மனுஷன் காவல் அதிகாரி மாதிரியே இருக்கிறார்.

படம் முழுக்க விரைப்பாவே இருக்கிறார்.

படம் பார்க்கும் காவல் அதிகாரிகள் நேரே காவல் நிலையம் சென்றால் அங்கே இருப்பவர்களை அடித்துத் துவைத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன் 🙂 .

அந்த அளவிற்கு படம் பார்க்கும் அனைவரையும் முறுக்கேற்றி இருக்கிறார்.

இந்தப் படத்தில் சூர்யா கொஞ்சம் உடம்பு போட்டது போல இருக்கிறது.

சூர்யா பல்லைக் கடித்துக்கொண்டு பேசுவதைப் பார்த்தால் நான் அவர் வாய்க்குள் அரைபடுவது போலவே ஒரு ஃபீலிங் 🙂 .

கடிச்சு துப்பிடுவார் போல.. இந்த அளவிற்கு கோபத்தை, கத்தி முகபாவனைகளில் காட்டணுமா! நல்லவேளை படம் வெற்றி பெற்று விட்டது.

அனுஷ்கா கூட நடிக்கும் போதெல்லாம் எவ்வளவு சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது.

சூர்யா வந்த புதிதில் நடனம் ஆடியதிற்கும் தற்போதைய நிலைக்கும் மடுவிற்கும் மலைக்கும் உள்ள வித்யாசம்.

கலக்குங்க சூர்யா!

அனுஷ்கா

எங்க டார்லிங் அனுஷ்காவிற்கு இந்தப் படத்தில் மொத்தமே ஒரு வாரம் தான் கால்ஷீட் இருந்து இருக்குமோ என்று சந்தேகமா இருக்கிறது.

ரொம்பக் குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார் அதிலும் பெரும்பாலும் வந்து பாடலுக்கு ஆடிச் செல்வதோடு சரி!

சந்தானம் படத்துல சொல்ற மாதிரி அனுஷ்கா ஒரு அரேபிய குதிரை தான்.

குடும்பப்பாங்கு என்றாலும் கவர்ச்சி என்றாலும் கலக்குவது அனுஷ்கா தான். இவருக்கு மட்டும் எப்படி இரண்டுமே பொருந்துகிறது!!

ஹன்ஷிகா

ஹன்ஷிகா +2 மாணவியாக வந்து கொஞ்ச நேரம் கலகலத்து விட்டுப் போய் விடுகிறார்.

தமிழ் ரசிகர்கள் எத்தனையோ விசயங்களைத் தாங்கி இருக்கிறார்கள் என்பதால், இவர் +2 படித்துக்கொண்டு இருப்பதாகக் காட்டப்பட்டு இருப்பதையும் மனமுவந்து ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன் 🙂 .

அஞ்சலி ஒரு பாட்டுக்கு அரைகுறையாக ஆடிப் பயமுறுத்தி இருக்கிறார்.

சமீப பிரச்சனையால் சோகமாகி இளைத்து இருப்பார் என்று பார்த்தால், இரண்டு மடங்காக இருக்கிறார். ஒருவேளை முன்னாடியே இந்தப்பாட்டை எடுத்து விட்டார்களோ!

இயக்குனர் ஹரி

தமிழக மக்கள் சார்பாகத் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஒரு வேண்டுகோள்.

உடனடியாக இயக்குனர் ஹரியை இயக்குனர் வேலையிலிருந்து இழுத்து, காவல் துறையில் வேலையைக் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙂 .

படம் முழுக்க பட்டையக் கிளப்புறார். சிங்கம் முதல் பாகத்திலேயே அவருடைய புத்திசாலித் தனமான காட்சியமைப்புகள் ரசிக்க வைத்தன.

இதில் அதை விட பல அபாரமான யோசனைகள்.

படத்தில் முதல் பாகம் போலவே இதிலும் காட்சிகள் வேகமாகப் போவது போல இருப்பதும் படத்தின் விறுவிறுப்பை கூட்ட உதவுகிறது.

இது ரொம்ப அதிகமாகப் போய்ப் படத்தில் வரும் விமானம் கூட ஜெட் போலப் பறப்பதாகக் காட்டி இருப்பது கொஞ்சம் ஓவராக இருக்கிறது 🙂 .

கார் போவதை வேகமாகப் போவது போலக் காட்டுவது ஓகே அதற்காக விமானத்தையும் கூடவா!! ஹரி சார் உங்க ஆர்வத்துக்கு அளவே இல்லையா!

வேகமாகப் போவது போலக் காட்சியமைப்புகளை வைக்கவில்லை என்றால் படம் மூன்று மணி நேரத்திற்கு மேல் வரும் போல 🙂 .

ஆனால், படம் போனதே தெரியலை என்பது தான் உண்மை.

இதில் லோக்கல் வில்லனாக வரும் ரகுமான் ஓகே. ஆமா! இவருக்கு வயசே ஆகாதா! அப்ப இருந்து அதே மாதிரியே இருக்கிறார்.

என்ன.. கொஞ்சம் உடம்பு போட்டு இருக்கிறார் அவ்வளவு தான். இன்டர்நேஷனல் வில்லனாக வருபவர் இந்திய காவல்துறையை நன்றாகத் திட்டுகிறார்.

இதற்குப் பதிலடியாக!! சூர்யா ஆப்ரிகன் அனிமல் என்று கூறி இருக்கிறார்.

முதல் பாகம் அளவிற்கு இதில் ஒன்ற முடியாமல் இருப்பதற்குக் காரணம் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட வில்லன்கள் என்று கருதுகிறேன்.

ஆப்ரிக்கா வில்லன் செம பொருத்தம். தன்னை கைது செய்து விட்டார்கள் என்ற கோபத்தில் அவரின் நடவடிக்கைகள் அசத்தல்.

இயக்குனர்களே தயவு செய்து நாட்டுப்பற்றை காட்டறேன் பேர்வழி என்று இப்படி படம் பார்த்துக்கொண்டு இருப்பவர்களைச் சங்கடத்தில் தள்ளாதீர்கள்.

தேசிய கீதம் பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும். திரையரங்கில் படம் ஓடும் போது எழுந்து நிற்க முடியுமா!

விவேக் & சந்தானம்

காமெடிக்கு விவேக்குடன் சந்தானத்தையும் இறக்கி இருக்கிறார்கள். விவேக் இதில் முதல் பாகம் போல இரட்டை அர்த்த வசனங்கள் எதுவும் பேசாதது ஆறுதல்.

சந்தானம் காமெடிக்கு திரையரங்கில் பலத்த சிரிப்பலை.

DSP முதல் பாகத்தில் இருந்தே டியூன் எடுத்துக்கலாம் என்று இருந்துட்டார் போல.

முதல் முறையாக ஒரு தமிழ் படத்தின் இரண்டு பாகங்களுமே வெற்றி பெற்றி இருக்கின்றன.

முனி, காஞ்சனா என்று இருந்தாலும் இதில் முதல் பாகம் சரியாகப் போகவில்லை. இரண்டுமே தாறுமாறான வெற்றி என்றால் அது சிங்கம் தான்.

படத்தில் கடைசியில் சில காட்சிகள் முழுமையடையவில்லை.

எனவே, அடுத்த பாகத்தையும் எதிர்பார்க்கலாம். தமிழில் இதுவரை இரண்டு பாகங்கள் மட்டுமே வந்துள்ளன என்று நினைக்கிறேன்.

சிங்கம் மூன்றாவது பாகம் வந்தால் அது சாதனையாக இருக்கும்.

சிங்கம் II அனைத்திற்கும் ஈடு கொடுக்கும் படி அதிரடி மாஸ் மசாலா படம். குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழலாம் என்று பரிந்துரைக்கிறேன்.

Directed by Hari
Produced by S. Lakshman Kumar
Written by Hari
Starring Suriya, Anushka Shetty, Hansika Motwani, Vivek, Santhanam
Music by Devi Sri Prasad
Cinematography Priyan
Editing by V. T. Vijayan
Studio Prince Pictures
Distributed by Prince Pictures (Tamil Nadu) Studio Green (Telugu version)
Release date(s) 5 July 2013

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

10 COMMENTS

  1. மாற்றான் தோல்விப்படம் இல்லை.. அதே சமய வெற்றி பெறவில்லை …ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது 🙂 🙂

  2. தமிழக மக்கள் சார்பாக தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஒரு வேண்டுகோள். உடனடியாக இயக்குனர் ஹரியை இயக்குனர் வேலையில் இருந்து இழுத்து, காவல் துறையில் வேலையைக் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙂

  3. தல விமர்சனத்துக்கு நன்றி… (படம் 2.45 மணி நேர படம் என்பதால் முந்தைய காட்சி முடிந்து கதவு திறக்க தாமதம் ஆகியது உடனே பலர் விசிலடித்து நம்முடைய பண்பாட்டை காப்பாற்றிக்கொண்டு இருந்தார்கள்) எந்த ஊர இருந்தாலும் நாம கலக்கணும் கிரி…

  4. சிங்கப்பூரில் திரையரங்க வசதிகள் எப்படின்னு தெரியல. ஆனா இங்கே காது கிழியும் அப்படிங்ற ஒரு வார்த்தையையும் சேர்த்து எழுதிடுங்க. இன்னும் தலைவலி போகல.

  5. கடைசி 30 நிமிடங்கள் செம கடி…. க்ளைமாக்ஸ் சொதப்பல்…. ஆப்பிரிக்க வில்லன் வேஸ்ட்…. பாடல்கள் ஐயோ ரகம்…..

    சூர்யா நடிப்பு சூப்பர்….. சந்தானம் நிறைய டபுள் மீனிங் டயலாக்ஸ் பேசறார்…. குறைத்து கொள்வது நமக்கு நலம்…..

    இந்த பாகமும் சரியாக முடிவடையாதது போல் காட்டியதால், சிங்கம்-3 வரும் வாய்ப்பு இருக்கு (அதுலயும் அனுஷ்காவாஆஆ????? யப்பாஆஆஆ தாங்காதுடா சாமி…..)… அமீரகத்தில் 20 தியேட்டர்களில் ரிலீஸ்….. ஒரு தமிழ்ப் படம் அதிக பட்ச தியேட்டர் ரிலீஸ் ஆனது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன்…..

    மற்றபடி சமீபத்தில் வெளிவந்த பெரிய பட்ஜெட் படங்களில் இது தான் பெரிய வெற்றி பெரும் என்று நினைக்கிறேன்……..

  6. ” சமீப பிரச்சனையால் சோகமாகி இளைத்து இருப்பார் என்று பார்த்தால், இரண்டு மடங்காக இருக்கிறார். ”

    – சிலபேருக்கு சோகத்துல உடம்பு ரொம்ப ஊதிடுமாம் கிரி 🙂

  7. தல,
    படம் ஒரு டைம் பாக்கலாம் ரகம்
    அஞ்சலி காக ஒரு பாட்டு நல்லா இருக்கு

    – அருண்

  8. “தொப்பை / தலை வலி”
    – 101ஆம் வட்டம் அஞ்சலி ரசிகர் மன்றம் சார்பாக, இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் my lord.

  9. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @ஸ்ரீநிவாஸ் ரைட்டு 🙂

    @ராஜேஷ் இது நெம்ப ஓவரா இருக்கே! 🙂

    @ஜோதிஜி 🙂

    @கோபி நலமா! 🙂 20 திரையரங்கா!! பெரிய விஷயம் தான்.

    @கௌரிஷங்கர் 🙂

    @அருண் உங்களுக்கு படம் பிடிக்கலையா! எனக்கு ரொம்ப பிடித்தது. இன்னொரு முறை பார்ப்பேன்.

    @இந்துமதி யாருயா அது…! என்னோட விமர்சனத்தை படித்தே ஆகணும் என்று இந்துமதிய வற்புறுத்தியது! 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here