சென்னைக் கல்லூரி மாணவர்களின் “பஸ் டே” பிரச்சனை பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. கொண்டாட்டத்திற்காகச் செய்து கொண்டு இருந்த விஷயம் தற்போது மக்களிடையே கடும் எதிர்ப்பையும் எரிச்சலையும் பெற்று இருக்கிறது.
பஸ் டே என்றால் என்ன?
தாங்கள் தினமும் செல்லும் பேருந்து அதில் உள்ள ஓட்டுனர் நடத்துனர் ஆகியோருக்கு மரியாதை செய்யும் பொருட்டு பேருந்தை அலங்காரம் செய்து அதில் தினம் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி அனைவருடனும் சேர்ந்து இதை ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியாக அனைவரின் மனதிலும் நிற்கும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக நிறுத்துவதே பஸ் டே என்பதன் நோக்கம்.
இதன் மூலம் பேருந்து ஓட்டுனர் நடத்துனர் பயணிகளிடையே ஒரு சுமூகமான நிலை தொடர உதவுகிறது. Image Credit
ஆனால், தற்போது நடப்பது என்ன?
மாணவர்கள் தங்கள் பலத்தை! மற்றவர்களுக்குக் காட்டுவதாக நினைத்து இந்த அருமையான பஸ் டே என்ற ஒரு விசயத்தையே அனைவரும் வெறுக்கும் ஒரு நிகழ்வாக்கி விட்டார்கள்.
போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்வதை தாங்கள் செய்யும் ஒரு பெரிய சாதனையாகவும் மச்சான்! எல்லோரையும் மிரட்டிட்டோம்ல!
அவனவன் அரண்டு போய்ட்டான் என்று கூறிக்கொண்டு தாங்கள் என்ன தவறு செய்துகொண்டு இருக்கிறோம் என்பதை தெரிந்தும் இளமை தரும் வேகத்தால் இதைப் பெருமையான நிகழ்வாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சென்னை
சென்னையில் பணி புரிந்த போது தினமும் அலுவலகத்திற்கு காலையில் 45B பேருந்தில் தான் செல்வேன்.
எனக்குத் தெரிந்து சென்னையில் அதிகக் கல்லூரிகளைக் கடந்து வரும் பேருந்து இதுவாகத்தான் இருக்கும்.
பேருந்தில் அலுவலகம் செல்வதற்குள் ஒரு சில மாணவர்கள் செய்வதைப்பார்க்கும்போது நமக்குப் பொறுமை இழந்து விடும்.
கானாப்பாடல் என்ற பெயரில் பேருந்தை உடைக்காத குறையாகத் தட்டிக்கொண்டு இருப்பார்கள்.
ஜன்னல் பக்கம் அமர்ந்து இருக்கும் பெண்களை ஏதாவது கிண்டல் செய்து கொண்டே இருப்பார்கள்.
இதைவிடக்கொடுமை அதில் தினமும் வரும் ஒரு பெண்ணிற்கு பட்டப்பெயர் வைத்து விடுவார்கள்.
அதை வைத்துத் தினமும் ஏதாவது கிண்டல் செய்து கொண்டு இருப்பார்கள். அதைப்பார்க்கும் நமக்குக் கொலைவெறி ஆகி விடும்.
கூட்டமாக இருக்கிறோம் என்ற தைரியம் தான். இதே தனியாக இருப்பவர் என்றால் எந்த வித சேட்டையும் செய்யாமல் அமைதியாக இருப்பார்கள்.
கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள் என்றால் கொஞ்சம் கலாட்டா குறும்பு காதல் இவை எல்லாம் இருந்தால் தான் அது இயல்பாக இருக்கும்.
மாணவர்கள் தங்கள் கொண்டாட்டங்களை அளவோடு நிறுத்திக்கொண்டால் எவருக்கும் பிரச்சனை இல்லை பொதுமக்களும் ஒரு ஜாலியான நிகழ்வாக எடுத்துக்கொண்டு சென்று விடுவார்கள்.
அளவு மீறும் போது அநாகரீகமாக நடந்து கொள்ளும் போது தான் தங்கள் பொறுமையை இழக்கிறார்கள்.
பஸ் டே அன்று போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்து விடுகிறார்கள்.
வழியில் செல்லுபவர்களை ஆபாசமான சைகைகளால் கிண்டலடிக்கிறார்கள், வழியில் உள்ளவற்றை சேதப்படுத்துகிறார்கள்.
இதன் பெயரா கொண்டாட்டம்? கொண்டாட்டம் என்பது தானும் மகிழ்ந்து தன்னை சார்ந்து உள்ளபவர்களையும் மகிழ்விப்பது. இவர்கள் செய்வது என்ன?
அரசுக்கு மாணவர்களைப் பகைத்துக்கொள்வதில் பயம் அதனாலே அரசு மற்றும் அரசியல்வாதிகள் மாணவர்களின் இந்தப் பஸ் டே என்ற பொறுக்கித் தனத்திற்கு ஆதரவு தருகிறார்கள்.
இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காமல் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். நீதிமன்றம் வந்து கேள்வி கேட்கும் அளவிற்கு தங்கள் நிலையை வைத்து இருக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் அவர்கள் நன்மைக்காகச் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் படிப்பில் கோட்டை விட்டு வேலை எதுவும் கிடைக்காமல் போட்டி மிகுந்த உலகத்தில் விழி பிதுங்கிக் கொண்டு இருக்கும் போது நினைப்பீர்கள்.
இதைப்போல அனைத்து மாணவர்களும் நடப்பதில்லை தங்களின் குடும்ப நிலை தன் எதிர்காலம் கருதி இதைப்போல விசயங்களில் கலந்து கொள்ளாமல் படிப்பில் கவனமாக இருப்பவர்கள் பலர் உண்டு.
இதன் பெயர் வீரம் அல்ல
போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்து கூட்டமாகச் சேர்ந்து அப்பாவியை மிரட்டி ஹீரோவாகக் காட்டிக்கொள்வதைக் கூட்டமாகச் செய்தால் எவரும் செய்ய முடியும்.
இதனால் பாதிக்கப்படுபவர்கள் எத்தனை பேர்? அவசரமாக மருத்துவமனை செல்பவர்கள், விமானத்தை ரயிலைப் பிடிக்கச் செல்பவர்கள்.
நேர்முகத்தேர்வு செல்பவர்கள், முக்கியமான அலுவலக வேலையாகச் செல்பவர்கள் எத்தனை பேரின் வாழ்க்கையில் இதைப் போலப் போக்குவரத்து இடையூறு செய்து விளையாடுகிறார்கள்.
இதில் பாதிக்கப்படுபவர்கள் இவர்களுடைய அம்மாவோ, அப்பாவோ, அண்ணனோ அல்லது தங்கையாகவோ கூட இருக்கலாம்.
சாலையில் செல்பவர்களின் மண்டையை வேறு உடைத்து இருக்கிறார்கள்.
இதை எல்லாம் தெரியாமல் செய்கிறார்கள் என்று மட்டும் யாரும் வக்காலத்து வாங்கி விடாதீர்கள். அனைத்தும் நன்கு தெரிந்தும் இதைப்போலச் செய்கிறார்கள்.
பின்னாளில் குடும்பத்துடன் அக்கா, தங்கை அல்லது மனைவியுடனோ செல்லும் போது எவனாவது ஒரு பொறுக்கி கீழ்த்தரமாக நடத்து கொள்ளும் போது உங்களுக்கு வலிக்கும் பாருங்கள்…. அப்போது புரியும்.
கொண்டாட்டம் மற்றவர்களைப் பொதுமக்களைப் பாதிக்காமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.
மற்றவர்கள் கூறி யாரும் தன்னை மாற்றிக்கொள்ளப்போவதில்லை தானாக மாறினால் தான் உண்டு.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
நானும் சென்னையில் ஆறு வருடம் இருந்துள்ளேன் ,உண்மையில் அன்று அவர்கள் செய்வது அராஜகம் இன்றி வேறேதும் இல்லை ,எரிச்சலின் விளிம்பில் அனைவரும் இருப்பார்கள் ,அசிங்கமான அநாகரீகமான சீண்டல்கள் ..
அட போங்கய்யா உங்கள தான் வருங்கால இந்தியான்னு பெருமை பீத்திக்கிட்டு இருக்காங்க ..வெளங்கிரும் …
யாரவது ஒருவர் சின்ன எதிர்ப்பை காட்டினால் கூட சவுண்ட் எகிறும் , நடத்துனரும் ஓட்டுனரும் மனதில் சொல்ல முடியாத துயரத்தோடு வண்டி ஓட்டுவார்கள் ..
தனி தனியாக இவர்கள் எல்லாம் மோசமானவர்களா -நிச்சயம் இல்லை
எல்லாம் குழு மனப்பான்மை படுத்தும் பாடு ..வேறு என்னத்த சொல்ல .
மிக நல்ல பதிவு. கடைசி பத்தியை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
பஸ் டேவைபற்றி தெளிவான பார்வையுடன் சொல்லியிருக்கீங்க அண்ணே,
நீங்கள் சொல்வதுபோல்
//உங்களுக்கு இப்போது இதன் வலி புரியாது.. நீங்களும் பின்னாளில் குடும்பத்துடன் அக்கா, தங்கை அல்லது மனைவியுடனோ செல்லும் போது எவனாவது ஒரு பொறுக்கி கம்முனாட்டி நீங்கள் செய்ததைபோல கீழ்த்தரமாக நடத்து கொள்ளும் போது உங்களுக்கு வலிக்கும் பாருங்கள்…. //
அவர்களும் அந்த வலியை உணரும்போது தவறு செய்திருக்கிறோம் என்று வருந்துவார்கள் இந்த நேரத்தில் நியூட்டனின் மூன்றாம் விதியைத்தான் நினைக்க வேண்டியுள்ளது “ஒவ்வொரு வினைக்கு அதற்கு சமமான எதிர்வினை உண்டு”
அடுத்த வருட கொண்டாட்டங்கள் போது, மாணவர்கள் பொது மக்களின் சாபத்தை அல்ல – வாழ்த்தை பெறுவார்கள் என்று நம்புவோம்.
…
மிக அருமையான செய்தியை சொன்னதற்கு மிக்க நன்றி அண்ணா,
நான் பச்சையப்பன் கல்லூரியில் பயிலுகின்றேன். இது போன்ற சம்பவங்கள் தினமும் பார்கின்றேன், சில சமயம் என் நண்பர்களே இச்செயலில் ஈடுபடுகின்றனர்.நான் அறிவுரை கூறினாலும் அதை எடுத்துகொள்ள அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் செய்கிற தவறினால் சில நல்ல மாணவர்களையும் மக்கள் திட்டி தீர்க்கின்றனர். இது மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது. நீங்கள் சொன்னதுபோல் மற்றவர்கள் கூறி யாரும் தன்னை மாற்றிக்கொள்ளப்போவதில்லை தானாக மாறினால் தான் உண்டு.
குடித்து கும்மாளமிட ஒரு தினம் வேண்டும். அதற்காகத்தான் இந்த பஸ் டே. இதை கண்டிப்பான முறையில் தடை செய்ய வேண்டும்…
// கொண்டாட்டம் என்பது தானும் மகிழ்ந்து தன்னை சார்ந்து உள்ளபவர்களையும் மகிழ்விப்பது//
இதை புரிந்து கொண்டாடுபவர்கள் யாரும் இல்லை… பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நீங்களே சொல்லிட்டிங்க சொல்லி ஒண்ணும் ஆகபோறது இல்லைனு…
நான் சின்ன பையன் ….. நான் என்ன சொல்லுறது
தமிழக போலீஸ் பாவம் இவர்களின் அராஜகத்தை வேடிக்கை பார்க்க வேண்டிய நிலைமை (அரசியல்வாதிகளால்). மிகவும் நல்ல பதிவு கிரி. நன்றி
இந்த மாணவர்கள் அவர்களின் அக்கா தங்கையுடன் இதே போல கொண்டாடினால் நன்றாக இருக்கும்.
கிரி,
அட்வைஸ் கூட வலிக்காம சொல்லுறீங்க உங்க பையன் கொடுத்து வெச்சவன் தான்:)
– அருண்
சுனில் ராமலக்ஷ்மி மாணவன் சித்ரா மணிகண்டன் பாலா சரவணன் ஆனந்த் வெங்கடசுப்ரமணியம் ரங்கநாதன் மற்றும் அருண் வருகைக்கு நன்றி
@சுனில் நீங்கள் கூறிய குழுமனப்பான்மை தவறுகளை தைரியமாகச் செய்யத் தூண்டுகிறது.
@மணிகண்டன் ஜாலியாக இருப்பதில் தவறில்லை அது வரம்பு மீறும் போது தான் பிரச்சனையாகிறது.
@அருண் இப்பெல்லாம் அறிவுரை கூறுவது என்றால் அது காமெடியான நிகழ்வு. அறிவுரை எல்லாம் கேட்டு நடக்க இங்க யாரும் இல்லை.. அந்தக்காலம் எல்லாம் மலையேறி விட்டது. இது புரியாம அறிவுரை சொல்றேன்னு காமெடி பண்ணிட்டு இருக்காங்க.
நெனச்சத இப்பிடி படார்னு எழுதுங்க கிரி, கேட்டு / பாத்து திருந்துறவங்க இன்னும் இருக்காங்க. உங்களோட இந்த பதிவு ஒரு மாணவனோட மனச மாத்தினாலும் உங்களுக்கு வெற்றிதான். உங்களோட இயல்பான நடையும் பிராக்டிகலான கருத்தும்தான் உங்க எழுத்தின் பலமே, அதையே ஆயுதமா வச்சு சென்சிடிவ் விஷயங்கள்ல கூட அநாயாசமா கருத்து சொல்லலாம் நீங்க. 🙂
//இப்படி எல்லாம் கூறுவதால் எந்தப்பயனுமில்லை என்று நன்றாகத்தெரியும் இருப்பினும் சொல்லத்தோன்றியது அவ்வளவே! மற்றவர்கள் கூறி யாரும் தன்னை மாற்றிக்கொள்ளப்போவதில்லை தானாக மாறினால் தான் உண்டு.//
தெளிவான மற்றும் உண்மையான கருத்துப் பகிர்வு தலைவா..!!!
வணக்கம் கிரி அவர்களே
மிக அருமையான கட்டுரை என்னைப் போன்றோரின் மனக்குமுறல்களை வலிமையாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
நன்றி
அன்பு நண்பரே,வணக்கம்.தாங்கள்” பஸ் டே” பற்றி மிகத் தெளிவாகக் கூறியுள்ளீர்.எல்லா மாணவர்களையும் தவறாக மதிப்பிடுவது தவறு.உதாரணமாக அதே பச்சையப்பன் கல்லூரி மாணவரான நண்பர் மணிகண்டன் வேதனையையும் இதே பகுதி கருத்துப் பதிவில் காண்கிறோம்.இது போல எத்தனை மாணவ நண்பர்கள் வேதனைப்படுவார்கள். அவர்களுக்காகவாவது நாம் சகித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.என்ன செய்வது? BY – பரமேஸ் டிரைவர் –
@கோபி ஏற்கனவே படித்து விட்டேன் 🙂 என்னத்தை சொல்லி என்ன ஆகப்போகுது!
@முத்துக்குமார் நன்றி முயற்சி செய்கிறேன்.
@இளவரசன் பிரவின் நன்றி
@பரமேஸ்வரன் அனைத்து மாணவர்களையும் நான் குறிப்பிடவில்லை. நீங்கள் சரியாக படித்தீர்களா என்று தெரியவில்லை