பிச்சைக்கார வாழ்க்கை

2
பிச்சைக்கார வாழ்க்கை

கொஞ்ச நாள் முன்பு செய்திகளில் ஒரு பிச்சைக்காரர் இறந்து விட்டதாகவும் அவரிடம் 8 லட்சம் பணம் இருந்ததாகவும் படித்து இருப்பீர்கள். Image Credit

திரைப்படங்களிலும் பிச்சைக்காரர்கள் குறித்த ஏராளமான நகைச்சுவை காட்சிகள் உள்ளன. பிச்சைக்காரர்கள் பற்றிப் ‘பிச்சைக்காரன்’ என்ற படமே வந்து, அவர்களின் இன்னொரு வாழ்க்கை பற்றிக் காட்டியது.

பிச்சைக்கார வாழ்க்கை

ஒரு முறை (சதாப்தி) ரயிலில் செல்லும் போது ஒருவர் கீழே உள்ள குப்பைகளை எல்லாம் கூட்டி, பயணிகளிடம் பிச்சை கேட்டார்.

சதாப்தி என்பதாலும், இவர் ஒரு வேலையைச் செய்து பிச்சை கேட்டதாலும் பலரும் குறைந்த பட்சமே 10 ருபாய் கொடுத்தார்கள்.

அவர் அந்த ஒரு பெட்டியில் மட்டுமே தோராயமாக ₹100 – 150 சம்பாதித்து இருப்பார். இது போலத் தொடர்ந்தால் எளிதாக ஒருநாளைக்கு ₹2000 சம்பாதித்து விடலாம்.

சிங்கப்பூரில் பிச்சை

சீனாவில் இருந்து விசா எடுத்து வந்து சிங்கப்பூரில் பிச்சை எடுத்து, ஊர் திரும்பும் நிகழ்வு நடந்ததாக, சிங்கப்பூர் ‘Channel 5’ தொலைக்காட்சியில் ஆவணப்படம் வந்தது.

ஏதாவது பாடல் பாடியோ, ஏதாவது பொருளை விற்பனை செய்தோ உதவி எதிர்பார்ப்பவர்களை விட, அம்மா தாயே என்று பரிதாப தோற்றத்தில் பிச்சை எடுப்பவர்களுக்குச் சிங்கப்பூர் மக்கள் அதிகளவில் பிச்சையிடுவார்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு பொருளைத் தேவையற்று வாங்கிச் சேர்ப்பதை விட, பணத்தைப் பிச்சையாகப் போட்டுவிட்டு செல்வதையே எளிதாகக் கருதுவதும் ஒரு காரணம்.

வட இந்தியர்கள்

தமிழ்நாட்டுக்கு வேலை தேடி மட்டுமே வட இந்தியர்கள் வருவதில்லை, பிச்சை எடுக்க வருபவர்களும் அதிகரித்து விட்டார்கள்.

தற்போது ஏராளமான வட மாநில பிச்சைக்காரர்களைக் காண முடிகிறது, இங்கே விசா தேவையில்லை 🙂 .

பணத்துக்காகக் குழந்தைகளை, சிறுவர் சிறுமிகளை மிரட்டிப் பிச்சை எடுக்க வைப்பது தனி.

விடை தெரியாத கேள்விகள்

இதெல்லாம் ஒரு பக்கம் என்றாலும், அவர்கள் வாழ்க்கை குறித்த கேள்விகள் எப்போதுமே எனக்குண்டு.

இவர்கள் (நம்ம ஊர் பிச்சைக்காரர்கள்) சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்வார்கள்?

வாழ்க்கை முழுவதும் பிச்சை எடுப்பார்களா? அப்படி எடுத்தால், அதில் பணத்தைத் தவிர அவர்களுக்குக் கிடைப்பது என்ன?

மரியாதையான வாழ்க்கை வாழ முடியாது காரணம், மற்றவர்களிடம் மதிப்பு இருக்காது.

எங்கள் அலுவலகப் பகுதியில் ஒரு பெண்கள் கும்பல் தொடர்ந்து பிச்சை எடுத்து வருகிறார்கள், நானே கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகப் பார்க்கிறேன்.

அதே நிலையில் தான் தொடர்கிறார்கள்.

அதே அழுக்குத் துணி, பஞ்சம் படிந்த கண்கள், வலிமையற்ற தேகம், நாற்றம் பிடித்த உடைகள், பரட்டை தலை  என்று எப்போதுமே ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள்.

பிச்சைக்காரன் படத்தில் வருவது போல இன்னொரு வாழ்க்கை இருப்பதாகக் கூறினாலும், அப்படத்திலும் யாரோ ஒருவர் திருமணத்தில் தான் சென்று சாப்பிடுவார்கள்.

எனவே, இவர்கள் பணம் அதிகம் வைத்து இருந்தாலும் வாழ்வது என்ன மாதிரியான வாழ்க்கை?!

எவ்வளவு தான் பணம் வைத்து இருந்தாலும், இறுதியில் பிச்சைக்காரராகத் தானே அடையாளப்படுத்தப்படுகிறார். சமூக அந்தஸ்து என்பது 0% தானே!

லட்சக்கணக்கில் பணம் வைத்து இறந்த பிச்சைக்காரரின் குடும்பத்தைத் தேடிக்கண்டுபிடித்துப் பணத்தை ஒப்படைக்க முயன்ற போது அவர்கள் வாங்க மறுத்ததாகச் செய்திகளில் வந்தது.

‘இந்த வேலை பார்க்கிறதுக்குப் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்’ என்று சொல்லப்படுவது வழக்கம் ஆனால், பிச்சைக்கார வாழ்க்கை வாழ்வது பணம் இருந்தும் எளிதல்ல.

திரைப்பட நகைச்சுவைக்கு வேண்டும் என்றால் பொருந்தலாம்.

ஒருவேளை குடும்பத்தினரின் அவமானங்கள், புறக்கணிப்பு, துரத்தல், கை விடல்களை விடப் பிச்சை எடுத்து வாழ்வது மேல் என்று நினைக்கிறார்களோ!

சமீபத்தில் திரும்ப இது போல ஒரு பிச்சைக்காரர் பற்றிச் செய்தியைப் படித்ததும், இதை எழுத வேண்டும் என்று தோன்றியது 🙂 .

Read : மற்றவர்களுக்கு கிண்டல் நமக்கு அடையாளம்

2 COMMENTS

  1. பிச்சைக்காரர்கள் என்றாலே என்வாழ்வின் மறக்க முடியாத இரண்டு நபர்கள்.. ஒன்று ஜானி & பலராமன்.. ஜானி பார்ப்பதற்கு மனநலன் குன்றியவர் போல இருப்பார்.. மெலிந்த தேகம், யாரிடமும் பேச மாட்டார். நிறைய படித்ததால் பைத்தியமாகி விட்டார் என எல்லோரும் சொல்லுவார்கள்.. கையில் காசு ஏதும் இருக்காது.. யாரவது உணவு கொடுத்தால் வாங்கி கொள்வார்.. ஒரே ஒரு முறை நான் ஆட்டோகிராப் வாங்கி இருக்கிறேன்..

    இன்னொருவர் பலராமன்.. கடுமையான உழைப்பாளி.. 25 கிலோமீட்டர் சைக்கிளில் சென்று அசால்ட்டாக திரும்ப வருவார்.. யார் எந்த வேலை கொடுத்தாலும் செய்வார்.. வேலைக்கான கூலியை வாங்கி கொண்டு தான் செல்வார்.. ஒரே ஒரு சிறிய குடிசை.. பணத்தை தபால் நிலையத்தில் கட்டி வந்தார்.. இறந்த போது 20 வருடம் முன்பு சேமிப்பு ரெண்டு லட்சத்திற்கு மேல் இருந்தது..

    எனக்கு நினைவு தெரிந்து இருவரும் நல்ல உடையோ, உணவோ எதுவும் அவர்களுக்காக செய்ததில்லை.. கடைசி வரை யாருக்காக வாழ்ந்தார்கள் என்று தெரியவில்லை.. தற்போது நினைத்து பார்த்தாலும் பாவமாக இருக்கிறது..

    பல முறை பேருந்து நிலையங்களில் பிச்சைகேட்கும் வயதானவர்களை பார்க்கும் போது, மனம் கணக்கும்.. அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருந்து இருக்கும்.. மகன் இருப்பான், மகள் இருப்பாள்.. சொந்தபந்தங்கள் இருந்து இருக்கும்.. என அவர்கள் குறித்த எண்ணங்கள் மனதில் ஓடும்.. எப்படி ஒரு ஆணோ??? பெண்ணோ??? வயதான பின் குடும்பத்தில் உதாசீனப்படுத்த பட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.. நினைத்தாலே மனம் வெம்புகிறது…

  2. யாசின் எல்லாத்துக்கும் ஒரு கதை / அனுபவம் வைத்து இருக்கீங்க எப்படி? 🙂

    உங்க கிட்ட விரிவா பேசினால் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் போல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here