குழந்தை வளர்ப்பின் ரகசியங்கள்

3
kuzhanthai valarpin ragasiyangal குழந்தை வளர்ப்பின் ரகசியங்கள்

குழந்தை வளர்ப்பின் ரகசியங்கள் தெரிந்தவர்கள் இது ஒரு அற்புதக் கலை என்று உணர்வார்கள். இது அனைவருக்கும் வாய்த்து விடாது, குறிப்பாகத் தற்காலப் பெற்றோர்கள்.

குழந்தை வளர்ப்பின் ரகசியங்கள்

தற்போது பெற்றோர்கள் இருவரும் பெரும்பாலும் பணிக்குச் செல்கிறார்கள், ஒருவர் மட்டும் சென்றாலும் முன்பு இருந்த பொறுமை தற்போதைய பெற்றோர்களுக்கு இல்லை.

உடனடி கோபம், பொறுமை இழப்பு குழந்தைகளைப் பாதிக்கிறது.

இவை குழந்தைகள் பெரியவர்களாகும் போது அவர்களுடைய அடிப்படை குணத்தை சிதைத்து பிடிவாதம், கோபம், பொறுப்பற்றத்தனம், செலவாளியாக, பாசமற்றவர்களாக மாற்றி விடுகிறது.

குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? எதைப் பேசக் கூடாது? எதைக் கற்றுத்தர வேண்டும்? என்பது உட்படப் பல்வேறு ஆலோசனைகளை ஆசிரியர் சேவியர் இப்புத்தகத்தில் வழங்கியுள்ளார்.

ஏற்கனவே, குழந்தைகளிடம் பெற்றோர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது குறித்து எழுதி இருந்தேன்.

Read: குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்கள்

அதையே இன்னும் கொஞ்சம் விளக்கி ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்று நினைத்தேன் ஆனால், என்ன எழுதினாலும் இப்புத்தகம் போலச் சிறப்பாக எழுத முடியாது என்று தோன்றியதால், முடிவைக் கைவிட்டு விட்டேன் 🙂 .

வயது வாரியாக விளக்கம்

வயது வாரியாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி விளக்கியுள்ளார்.

பிள்ளைகள் வளர வளர அவர்களிடம் நாம் நடந்து கொள்ளும் முறையையும் மாற்றிக்கொள்ள வேண்டும். இதைக் கவனத்தில் கொள்வது அவசியம்.

குழந்தைகளுக்கு ஈகை குணம், உணவுப் பழக்கம், நட்பைத் தேர்ந்தெடுத்தல், சேமிப்பு, செலவு, மேசை நாகரீகம், விவாதிப்பது, விளையாடுவது, நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது, சுற்றுசூழல் பாதிப்பு, Good touch bad touch என்று அனைத்தையும் விளக்கியுள்ளார்.

குழந்தைகளைச் சரியாக நடத்துபவர்களுக்கு இப்புத்தகம் தேவையில்லை, அதே போலக் குழந்தையைச் சரியாக நடத்தாதவர்களுக்குப் படித்தும் புரியப்போவதில்லை.

ஏனென்றால், அவர்கள் பின்பற்றப்போவதில்லை 🙂 .

இருப்பினும் இதில் தெரிந்து கொள்ளப் பல்வேறு விஷயங்கள் உள்ளன. சில எனக்குப் பயனுள்ளதாகவும், புதிதாகத் தெரிந்து கொள்ள உதவியாகவும் இருந்தன.

அனைத்துமே தெரிந்தவர் என்று எவருமில்லை. எனவே, தங்கள் குழந்தைகளை நல்ல வழியில் வளர்க்க விரும்புபவர்கள் இப்புத்தகத்தைப் படிக்கலாம்.

இதில் உள்ளவை சில உங்களுக்குத் தெரியாத விஷயங்களாகவும் இருக்கலாம்.

அமேசானில் வாங்க  –> குழந்தை வளர்ப்பின் ரகசியங்கள் Link

கொசுறு 1

குழந்தைகள் பெரியவர்களுக்கே பாடம் எடுப்பார்கள் தெரியுமா?

ஒரு நாள் காலையில் குளிக்கும் போது என் பையன் யுவன் தன்னுடைய உடையை அழுக்குத் துணி கூடையில் போடும் போது பிரித்து, சரியான முறையில் போடுவதைப் பார்த்ததும் எனக்கு அசிங்கமாக இருந்தது ஏனென்றால், நான் அப்படியே போட்டு இருந்தேன்.

பிரித்துச் சரியாகப் போடுவதன் மூலம், துணி துவைக்கும் போது எளிதாக இருக்கும்.

யாருக்கிட்டடா கத்துகிட்ட இதை?‘ என்றதும் ‘ஆயா கிட்ட‘ என்று கூறினான். இதை என் அம்மா கிட்ட சொன்னதும் ரொம்பப் பெருமைப்பட்டு மகிழ்ந்தார்கள்.

இதைப் பார்த்த பிறகு நானும் துணியைச் சரியாகப் பிரித்துப் போடுகிறேன், சுருட்டி கசக்கி போடுவதில்லை, பிள்ளைகளும் கற்றுத்தருவார்கள்!

அம்மா வீட்டை மிகச் சுத்தமாக வைத்துக்கொள்வார்கள். அவரிடம் நான் கற்றுக்கொண்டது ஏராளம். என் பையனும் அவரிடம் கற்றுக்கொண்டு இருக்கிறான் என்பது எனக்கும் பெருமையே.

சுத்தமாக இருப்பதை சிறுவயதில் பழக்கி விட்டால், எக்காலத்திலும் நீச்சல் போல மறக்காது.

கொசுறு 2

நாங்கள் செல்லமாகக் ‘கேப்டன்’ என்று அழைக்கும் நண்பர் விஜயிடம் அவரது பெண்ணுக்கு Kindle வாங்கித்தர சொல்லி இருந்தேன்.

அவர் பெண் புத்தகம் படிக்கிறேன்னு சொன்னதால், படிக்கிறேன்னு குழந்தைக சொல்வதே பெரிய விஷயம். எனவே, கண்டிப்பாக வாங்கிக்கொடுங்க என்று கூறி இருந்தேன்.

கடந்த வாரம் ‘Black Friday’ தள்ளுபடியில் அவரது பெண்ணுக்கு Kindle ஒரு வருட Kindle Unlimited உடன் வாங்கிக்கொடுத்து விட்டார். மகிழ்ச்சி 🙂 .

குழந்தைகளுக்குப் படிக்கும் வழக்கத்தை அதிகப்படுத்துவதன் மூலம், அவர்களுடைய மொழி அறிவு மேம்படும்.

சின்னப் பையனாக இருந்த போது அப்பா எனக்குக் காமிக்ஸ் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.

‘மந்திரவாதி மாண்ட்ரேக்’ தினமணியில் வரும், அதில் ஆரம்பித்தது பின்னர் காமிக்ஸ், பாக்கெட் நாவல் என்று விரிவடைந்தது.

இன்று என் எழுத்துக்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று சிறு வயது புத்தகப்படிப்பும்.

தொடர்புடைய கட்டுரை

அமேசான் Kindle ஏன் வாங்க வேண்டும்?!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

 1. நன்றி கில்லாடி Kindle வாங்க சொன்னதுக்கு. என் பொண்ணு நெறைய புத்தகம் படிப்பா அதுனால வாங்கினேன். நெறைய புத்தகம் படிச்சாச்சு இப்போவே 🙂 🙂 🙂

 2. கிரி.. தனிப்பட்ட முறையில் இந்த புத்தகத்தின் மீது எனக்கு ஆர்வம் இல்லை.. காரணம் குழந்தை வளர்ப்பு என்பதற்கான இலக்கணம் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.. நம் குழந்தைகள் களிமண். அவற்றைக்கொண்டு சிற்பம் செய்வதும், வீணாக்குவதும் நம் கையில் உள்ளது.. சமுதாயத்தின் பங்கு, அதிகம் இருந்தாலும் பெற்றோர்களின் பங்குதான் முதன்மையானது..

  விக்ரம் வேதா படத்தில் பிடித்த வசனம் : காந்தியோட பையன் காந்திய சார் விஜய் சேதுபதி கேட்பார்.. எவ்வளவு ஆழமான பொருள் கொண்ட வசனம்.. என் வாழ்க்கையை அப்படியே என் மகன் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் என்றும் விரும்புவது இல்லை.. என்னுடைய ஒரே விருப்பம் மொழியின் மீது காதல் & வறுமையிலும் நேர்மை இந்த ரெண்டு மட்டும் அவன் விளங்கி கொண்டாலே போதும்.. வாழ்க்கையின் வலி அவனுக்கு புரியும் .. வலி உள்ளவனுக்கு தான் வாழ்வின் அற்புதமும் புரியும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 3. @விஜய் 🙂

  @யாசின் “காரணம் குழந்தை வளர்ப்பு என்பதற்கான இலக்கணம் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.”

  அனுபவம் தான் யாசின். நமக்குத் தெரியாத ஒரு விஷயம் இன்னொருவருக்கு தெரியலாம். அவர்கள் கூறியதில் நல்ல விஷயம் இருந்தால், எடுத்துக்கொள்வதில்லை தவறில்லையே.

  பசங்களோட வளரும் சூழ்நிலையே எதையும் தீர்மானிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here