மும்மொழி கொள்கை குறித்துத் திரும்ப விவாதங்கள் துவங்கியுள்ளன. இரு மொழிக் கொள்கை சரியா தவறா? என்று பார்ப்போம்.
இரு மொழிக் கொள்கை
இந்தித் திணிப்பு குறித்து ஏற்கனவே பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். கால மாற்றத்தில் எனக்குள்ள சில மாற்றுக்கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன். முன் முடிவுடன் படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். Image Credit
1965 களில் நடந்த மொழிப்போர் காரணமாக இந்தித் திணிப்புத் தடுக்கப்பட்டுத் தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழிக்கொள்கைகளாகத் தமிழகம் இன்றுவரை பின்பற்றி வருகிறது.
இந்தித் திணிப்பு தடுக்கப்பட்டு, ஆங்கில அறிவு முன்னெடுக்கப்பட்டதால் தான், தமிழகம் இன்றும் தமிழ் மொழியை இழக்காமல், முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகவுள்ளது.
தமிழிசை
ஆனால், இந்தி தெரியாததால் என்னால் முன்னேற முடியவில்லை என்று தமிழிசை புலம்புகிறார். தற்போது இவர் என்ன முன்னேற முடியாமல் போய் விட்டது?!
மருத்துவராக வெற்றி பெற்று இருக்கிறார், ஒரு தேசியக் கட்சியின் மாநிலத்தலைவராக இருந்தார். இது வெற்றியில்லையா? முன்னேற்றமில்லையா?!
ஒரு மாநிலத்தின் கவர்னராக தற்போது (2020) இருக்கிறார்.
முன்னேற்றம் என்றால், இவர்கள் அகராதியில் என்ன கூற வருகிறார்கள்?! இந்தி படித்தால் / தெரிந்தால் மட்டும் போதுமா? ஒருவர் முன்னேறி விட முடியுமா? ஒருவர் முன்னேற்றத்தின் அளவுகோல் இந்தி தெரிந்து கொள்வதா?
தமிழிசை அவர்கள் இது போல கூறுவதற்கு இரு காரணங்கள் மட்டும் இருக்க முடியும்.
ஒன்று இவர் கட்சி சார்ந்த அரசியல், இன்னொன்று இவரின் தாழ்வு மனப்பான்மை.
தமிழகத்தில் இந்தி கற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது, அதில் மக்கள் எவ்வளவு பயன் பெறுகிறார்கள் என்பதைப் பற்றி ஏற்கனவே விரிவாக விளக்கி விட்டேன்.
இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளைப் படித்துக்கொள்ளவும்.
Read: “இந்தி”யால் இந்தியா முன்னேறுகிறதா?
சரி நான் கூற வருவது வேறு..
தமிழகத்தில் துவக்கத்தில் அரசு பள்ளிகள் மட்டுமே இருந்தன. எனவே, பள்ளிகளில் இரு மொழி கொள்கை என்பது ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது.
ஆனால், தற்போது அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதை கௌரவக் குறைச்சலாகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் தவிர்க்கிறார்கள்.
அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தேன் ஆனால், என் பசங்க தனியார் பள்ளியில் படிக்கிறார்கள். என்னைப்போல நிலையில் உள்ளவர்களே தமிழகத்தில் பலர்.
எதிர்காலத்தில் அரசாங்கப்பள்ளிகள் முன்னேற்றம் அடைந்தாலும் மக்கள் அரசு பள்ளிகளில் முன்பு போல சேர்ப்பார்களா என்பது சந்தேகமே!
சமச்சீர் கல்வித் திட்டம்
மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு அமைப்புகளின் கல்வி முறையை ஒருங்கிணைத்து சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட 2009 – 2010 முதல் பலரும் தங்கள் பிள்ளைகளை CBSE பள்ளிக்கு மாற்றுவது அதிகரித்தது.
தமிழகத்தில் பெரும்பாலான மக்களை இந்தி (CBSE) நோக்கி நகர்த்தியதற்கு சமச்சீர் கல்வித் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கலைஞரின் சமச்சீர் கல்வியின் நோக்கம் நல்லது என்றாலும், மக்களின் நம்பிக்கையைப் பெறவில்லை, எதிர்பார்ப்பை ஈடுசெய்யவில்லை.
ஒரு வகையில், இந்தித் திணிப்பைத் தடுத்தவர்களில் ஒருவரான கலைஞரே தமிழகத்தில் பலர் இந்தி (CBSE) நோக்கி நகர முக்கியக் காரணமாகி விட்டார் என்பது கசப்பான உண்மை.
சமச்சீர் கல்வி தரம் குறித்து அப்போதே கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
தமிழ் கட்டாயம்
“ஜெ” 10 ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை 2015 ம் ஆண்டு வெளியிட்டார். இதற்கான ஆரம்பம் கலைஞர் (2006) ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டாலும், நடைமுறைப்படுத்தப்படவில்லை.
உடனே அனைத்து வகுப்புகளிலும் அடுத்த வருடமே தமிழை கட்டாயப் பாடமாகச் சேர்க்க முடியாது என்பதால், முதலாம் வகுப்பில் இருந்து கட்டாயமாக்கப்பட்டது.
7 ம் வகுப்பு வரை வேற்று மொழி படித்த CBSE மாணவனுக்குத் திடீர் என்று தமிழை அடுத்த வருடம் கொடுத்தால், அவனால் எப்படித் தமிழைப் பின்பற்ற முடியும்?
இதனாலே முதல் வகுப்பில் (2015) இருந்து மாற்றப்பட்டது.
அதாவது, இன்னும் ஐந்து வருடங்கள் சென்றாலே, 10 ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் இருக்கும்.
இனி எதிர்கால மாணவன் தமிழ்நாட்டில் இருந்து படித்துக் கொண்டே, தமிழ் படிக்க எழுதத் தெரியவில்லை என்று கூறும் பரிதாபகரமான நிலை இருக்காது.
கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரை
“இந்தியை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை படிக்க வேண்டும்.
இந்தி அல்லாத மற்ற மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மூன்றாவது மொழியாக இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைத்தது.
இதற்குத் தான் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
திருத்தப்பட்ட புதிய வரைவு திட்டத்தின்படி,
“தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாகக் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
மாணவர்கள் மூன்றாவது மொழியாகத் தங்கள் விருப்ப மொழியைத் தேர்வு செய்து கொள்ளலாம்” என்று மாற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படுவதால், ஆங்கிலம், தமிழ் மட்டுமே கற்றுத்தரப்படுகின்றன. தமிழக அரசும் இதில் மாற்றமில்லை என்று உறுதி செய்தது.
தமிழக CBSE பள்ளிகளில் மும்மொழி கொள்கையே முன்பிருந்து பின்பற்றப்படுகிறது.
மத்திய அரசு மும்மொழிக் கொள்கை இந்தியா முழுக்க கட்டாயம் என்றுள்ளதால், இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழியாக எந்த மொழியை அதிகம் தேர்வு செய்வார்கள்?!
இந்திக்கு உண்மையிலேயே ஆதரவு உள்ளதா?
தாய்மொழி இந்தியாக உள்ள மாநிலங்களில் வருடாவருடம் இந்தியில் தோல்வியடைபவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது.
உத்தரபிரதேசத்தில் 2019 ம் ஆண்டு 12 ம் வகுப்பு இந்தி தேர்வில் 10 லட்சம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
இங்கே எப்படித் தமிழ்ப் படிப்பதை இழிவாகக் கருதி முக்கியத்துவம் கொடுக்காமல் சிலர் புறக்கணிக்கிறார்களோ, அதே போல இந்திக்கு கொடி பிடிக்கும் வட மாநிலங்களில் இங்கே தமிழ் போல அங்கே இந்தியை அவர்கள் மதிப்பதில்லை.
கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இங்கே எப்படி பலருக்கு தமிழ் பேசத் தெரியும் ஆனால், படிக்கத் தெரியாதோ! அதே போல அங்கே இந்தி பேசத் தெரியும் ஆனால், படிக்கத் தெரியாது.
ஆனால், நம்மை இந்தி கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று புலம்பி வருகிறார்கள்.
தனியார் பள்ளிகளின் அதிகரிப்பு
தற்போது தனியார் பள்ளிகள் அதிகரித்து வருகிறது, பலரும் அரசு பள்ளியை விடக் கட்டணம் அதிகமாக இருந்தாலும், கௌரவம் மற்றும் பல தனிப்பட்ட விருப்பம் காரணமாகத் தனியார் பள்ளிகளிலேயே சேர்க்கிறார்கள்.
சமச்சீர் கல்வி முறையால் தற்போது CBSE பள்ளிகளுக்கான தேவை அதிகரித்து விட்டது. எனவே, பலர் தங்கள் பள்ளிகளை CBSE க்கு அனுமதி பெற முயற்சித்து வருகிறார்கள், பலர் அனுமதி பெற்று விட்டார்கள்.
எனவே, இயல்பாகவே தனியார் பள்ளிகளில் இந்தி என்பது விரும்பினாலும் விரும்பவில்லையென்றாலும், உள்ளது என்பது நிதர்சனமாகி விட்டது.
தமிழகத்தில் இந்திக்குத் தடை என்பது வெளியில் தான் பேசப்படுகிறதே தவிர, அரசுப் பள்ளி மாணவர்களைத் தவிர மற்றவர்கள் இந்தி விரும்பினால் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. சொல்லப்போனால் கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது.
எனவே, தனியார் பள்ளிகளுக்கு அந்த வாய்ப்பு இருக்கும் போது அரசு பள்ளிகளில் ஏன் இல்லை? என்று கேட்பவர்கள் கேள்வி நியாயமானது.
திமுகவினரின் பள்ளிகள்
இந்திக்கு எதிராகக் குரல் கொடுக்கும் திமுகவினர் பள்ளிகளே இந்தியை பாடமாக வைத்த CBSE பள்ளிகளே! இந்த நிலையில் பொதுமக்களுக்குக் கோபம் வருவது இயல்பு தானே!
விவாதத்தில் ஒரு உடன்பிறப்பு கூறுகிறார், “அது அவங்க வியாபாரம் அதைக் கேள்வி கேட்கக்கூடாது” என்று.
இவருக்குக் கல்வி வியாபாரம் என்றால், பொதுமக்கள் தங்கள் பிள்ளையின் எதிர்காலம் என்று நினைக்ககூடாதா? இவர்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
இந்திக்கு எதிராகக் கொந்தளிக்கும் ஸ்டாலின் மகளின் பள்ளியே இந்தியை பாடமாக வைத்துள்ள CBSE பள்ளி தான். பின்னர் இவர்கள் பேசினால், மக்களிடையே கோபம் வருவது இயல்பு தானே!
மக்கள் / தமிழ் மீதான அக்கறை இருந்தால், இவர்கள் ஏன் இந்திப் பாடத்தை வைத்துள்ள CBSE பள்ளியை நடத்தப்போகிறார்கள்?! தமிழை வளர்க்க இவர்கள் முயற்சி எடுக்கலாமே!
தற்போது என்னுடைய எண்ணம் என்னவென்றால்..
அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழிக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதே! தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மூன்றாவது மொழி வாய்ப்பு கொடுக்கப்படுவது நியாயமல்ல.
கொடுத்தால் அனைவருக்கும் மும்மொழிக் கொள்கை வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும், இல்லையென்றால் யாருக்கும் கொடுக்கக் கூடாது.
இனி தனியார் (CBSE) பள்ளிகளில் இந்தியை தடுக்க முடியாது. எனவே, ஒரே வழி அரசுப் பள்ளிக்கு கொடுப்பது தான்.
மூன்றாவது மொழி இந்தி என்றில்லாமல், தனியார் பள்ளிகள் போல இந்தியைக் கட்டாயப்படுத்தப்படாமல் எந்த மொழியையும் தேர்வு செய்யும் உரிமை வேண்டும்.
தனியார் பள்ளிகளில் ஏன் இந்தி கட்டாயப்படுத்தப்படுகிறது என்பதை அரசு விசாரிக்க வேண்டும். விருப்பப்பட்டால் மட்டுமே சொல்லித்தரப்பட வேண்டும், திணிக்கக் கூடாது.
ஒருவேளை அரசு பள்ளிகளில் மும்மொழி கொள்கை வருகிறது என்றால், மூன்றாவது மொழிகளாக என்னென்ன மொழிகளைச் சேர்க்கலாம் என்று பிரச்சனை வரும்.
சேர்க்கப்படும் மொழிகளுக்கு உண்டான தகுதி வாய்ந்த ஆசிரியர்களைத் தமிழகம் முழுவதும் பணியில் அமர்த்த வேண்டும்.
இந்தி உட்பட பிற மொழிகளுக்கான ஆசிரியர்களைத் தமிழ்நாடு முழுக்க பணியில் அமர்த்துவது எளிதான செயல் அல்ல.
இந்தி மொழிக்கான மாணவர் சேர்க்கை அதிகமாகவும் மற்ற மொழிகளுக்கு குறைவாகவும் விண்ணப்பம் இருக்கும்.
இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு வரும்.
எனவே, இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது ஆனால், தவிர்க்க முடியாதது.
இவை ஒரு பக்கம் என்றாலும்..
இந்தி படித்தால் முன்னேறலாம் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை முட்டாள்தனமான வாதம். இவையெல்லாம் தாழ்வுமனப்பான்மையால் கூறப்படுவது.
தேவை என்று வரும் போது எவரும் கற்றுக் கொள்வார்கள்.
தங்களுடைய இயலாமையை மறைக்கக் கூறுவதே, என்னை இந்தி கற்றுக்கொள்ளாமல் செய்துவிட்டார்கள் என்ற புலம்பல்.
இந்தி தெரிந்தால் இன்னொரு மாநிலம் சென்று பணி புரிய வாய்ப்புள்ளது, பணிபுரிபவர்களுடன் பேச வேண்டியுள்ளது என்றால், கற்றுக் கொள்ளலாமே!
தங்களின் இயலாமை மறைக்க, படிக்க விடாமல் செய்து விட்டார்கள் என்று கூறுவதெல்லாம் சமாளிப்பே!
தோல்வியை சமாளிக்க காரணம் தேடாதே! அதை வெற்றி கொள்ள முயற்சி செய்!
இரு மொழிக் கொள்கை
அரசுப் பள்ளி மாணவர்கள் மும்மொழி கொள்கையைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.
மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கக் கூடாது.
தனியார் பள்ளிகளுக்கு ஒரு நியாயம்! அரசு பள்ளிகளுக்கு ஒரு நியாயம்!! என்பது சரியல்ல.
அதே சமயத்தில் அரசு அலுவலகங்களில், போக்குவரத்து வாகனங்களில், பொது இடங்களில் என்று அனைத்துப் பகுதிகளிலும் தற்போதுள்ள இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்பட வேண்டும்.
இங்கே இந்தித் திணிப்பை அனுமதிக்கக் கூடாது. இங்கே இந்தியை சேர்க்க யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
சுருக்கமாக, அனைத்துப் பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கையும், மற்ற அனைத்து இடங்களிலும் இரு மொழிக் கொள்கை பின்பற்றப் படவேண்டும் என்பது என்னுடைய விருப்பம் / பரிந்துரை.
இதுவே நியாயமானதாகத் தோன்றுகிறது.
இதனால் கிடைக்கும் பலன்
பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை அனுமதிக்கப்பட்டால், தமிழகத்தில் இந்தி மற்ற இடங்களில் / வழிகளில் திணிக்கப்படும் போது எதிர்க்க, பதிலடி கொடுக்க முடியும்.
இல்லையென்றால், “இந்தி கற்றுக் கொள்ள விடாமல், எங்களை முன்னேற விடாமல் செய்து விட்டார்கள்” என்ற பழைய வாதத்தை வைத்தே இந்தி ஆதரவாளர்கள் எப்போதும் கேள்வி கேட்பார்கள்.
இதற்கு நேர்மையான பதிலைக் கூறும் சூழ்நிலை தற்போது இல்லை.
இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்களும், இந்தியை ஆதரிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளும்படியான தீர்வாக இந்த முறை மட்டுமே எனக்குத் தோன்றுகிறது. ,
உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால், இதில் உள்ள நியாயம் புரியலாம்.
நம்முடைய கருத்துகளில் உறுதியாக இருப்பதில் தவறில்லை ஆனால், தற்போதைய சூழ்நிலை, நடைமுறை எதார்த்தம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்வது அவசியம்.
இக்கட்டுரையை விமர்சிக்கும் முன் பின்வரும் கட்டுரையைப் படித்துப் பின் விமர்சிக்கவும்.
Read: இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்! [FAQ]
இந்தி திணிப்பின் பிரச்னை என்ன?
இந்தியை திணித்தால் தமிழ் அழிந்து விடுமா?
இந்தி புகுத்தப்பட்டதால், மற்ற மாநிலங்களில் என்ன நடந்தது?
இந்தி அதிகரித்தால் என்ன நடக்கும்?
என்ற உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கான பதில்களும் இக்கட்டுரையில் உள்ளது.
Teaching more science and math is worthwhile more than any lang – period.
TN has decent system as of now. Having 3rd or 4th lang(some cbse does it) is DAMN ridiculous and couter productive.
India is turning into Idiocracy…If we plan to teach 3rd language, let’s drop science.
And if we want to teach 4th language, then drop science and see how future turns out. STOP ROBBING kid’s time.
விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் எத்தனை மொழியும் கற்கலாம். பொதுவில், இரு மொழிகளுக்கு மேல் கற்பதால் நேரம் வீணாகிறது; ஆற்றலும்தான்.
சி.பி.எஸ்.இ. இல் மாணவர்கள் ஹிந்தி கற்பதால், நம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பைத் தருதல் வேண்டும் என்பது சரியே. அதைக் காட்டிலும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் இந்தியை நீக்கச் சொல்லலாம். மாநில மொழியையும் ஆங்கிலத்தையும் மட்டுமே கற்பிக்கச் சொல்லலாம்.
இது குறித்து எவரும்[குறிப்பாக அரசியல்வாதிகள்] வாய் திறப்பதில்லையே, ஏன்?
இதற்கான பதில் உங்களின் இந்தப் பதிவிலேயே இருக்கிறது.
//இந்திக்கு எதிராகக் குரல் கொடுக்கும் திமுகவினர் பள்ளிகளே இந்தியைப் பாடமாக வைத்த CBSE பள்ளிகளே! இந்த நிலையில் பொதுமக்களுக்குக் கோபம் வருவது இயல்பு தானே!
விவாதத்தில் ஒரு உடன்பிறப்பு கூறுகிறார், “அது அவங்க வியாபாரம் அதைக் கேள்வி கேட்கக்கூடாது” என்று.
இவருக்குக் கல்வி வியாபாரம் என்றால், பொதுமக்கள் தங்கள் பிள்ளையின் எதிர்காலம் என்று நினைக்ககூடாதா? இவர்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
இந்திக்கு எதிராகக் கொந்தளிக்கும் ஸ்டாலின் மகளின் பள்ளியே இந்தியைப் பாடமாக வைத்துள்ள CBSE பள்ளி தான்//
இனியொரு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து, அது தோல்வியில் முடியுமேயானால் அதற்கு இவர்களின் சுயநலமும் முக்கிய காரணமாக இருக்கும்.
@Mika மூன்று மொழிகள் நிச்சயம் மாணவர்களுக்கு நெருக்கடியே! சந்தேகமே இல்லை.
@பரமசிவம்
“விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் எத்தனை மொழியும் கற்கலாம். பொதுவில், இரு மொழிகளுக்கு மேல் கற்பதால் நேரம் வீணாகிறது; ஆற்றலும்தான்.”
உண்மை சார்.
“இனியொரு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து, அது தோல்வியில் முடியுமேயானால் அதற்கு இவர்களின் சுயநலமும் முக்கிய காரணமாக இருக்கும்.”
சார் இந்தி என்பது தமிழகத்தில் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது ஆனால், காலமாற்றத்தில் சில இவர்களால் தடுக்க முடியாது என்பதே உண்மை.
ஆனால், இவர்கள் நடித்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்.
ஹிந்தி மொழி திணிப்பு ஆதரவு என்பதனை தனியாக வைத்து விடுவோம். திமுக குறித்து தெரிந்தது தானே? தினம் ஒரு ஹிந்தி மொழி வார்த்தை கற்றுக் கொள்ள முயற்சி செய்யும் மத்திய அரசாங்கம் இங்கே வந்து வேலை செய்பவர்கள் ஏன் தமிழ்மொழி கற்றே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. அல்லது பயிற்சி கொடுப்பதில்லை. வந்தவர்களும் பத்து ஆண்டுகள் ஆனாலும் வடா தோசா என்று புலம்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.