முகேஷ் அம்பானி தனது மகள் இஷா அம்பானியின் திருமணத்தைப் பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார். Image Credit
இதற்காக விமானங்கள், அதி சொகுசு விடுதிகள், விலையுயர்ந்த கார்கள் ஆகியவை விருந்தினர்கள் வருகைக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது போதாதா நம்ம மக்கள் பொங்குவதற்கு!
ஏழை விவசாயி
“ஒரு ஏழை விவசாயி சிரமப்படுகிறான்” என்ற வசனத்தை ஆரம்பித்து விட்டார்கள். இவர்களுக்கு அக்கறை ஏழை விவசாயின் மீதல்ல, அம்பானி செய்யும் செலவின் மீது.
நம்ம ஆளுங்களுக்கு அது என்னமோ பணக்காரன் என்றாலே வயித்தெரிச்சல். இது வயித்தெரிச்சல் என்பதை விட மிகப்பெரிய தாழ்வு மனப்பான்மை.
நம்மால் செய்ய முடியாததை இது போல ஆதங்கத்தைச் சப்பைக்கட்டு கட்ட சம்பந்தமே இல்லாம பாவம் விவசாயி சட்டையைப் பிடித்து இழுக்கறாங்க.
விவசாயி
விவசாயி முக்கியத்துவம் இவர்கள் கூறி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. விவசாயிகள் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
ஆனாலும் தங்கள் கெத்தை விடாமல் விவசாயம் செய்து வருகிறார்கள். இலாபமோ நட்டமோ விவசாயியால் விவசாயத்தை விட்டு வெளியே வர முடியாது.
என்ன பிரச்னை இருந்தாலும், சிக்கல்களை எதிர்கொண்டாலும் மதிப்பாகவே வாழ்கிறார்கள், குறைந்த பட்சம் வாழ முயற்சிக்கிறார்கள். இதைப்படித்துக்கொண்டு இருக்கும் பலரின் அப்பா விவசாயியாக இருப்பார், இருந்து இருக்கலாம்.
ஆனால், இந்தப் போராளிகள் இவர்கள் வயித்தெரிச்சலை, பொறாமையைச் சரிக்கட்ட சம்பந்தமே இல்லாமல் எதற்கெடுத்தாலும் விவசாயியைக் கொண்டு வந்து அனைத்திலும் நுழைத்து அவர்களை அசிங்கப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
“ஏழை விவசாயி” என்ற சொல்லே தற்போது சமூகத்தளங்களில் கிண்டலடிக்கப் பயன்படுத்தும் சொல்லாகச் சிலருக்கு மாறி விட்டது.
எதையாவது கூறி, “ஏழை விவசாயி கடந்து சென்றார்” என்று மீம் போடுகிறார்கள்.
விவசாயிகள் பருவமழை பொய்ப்பு, இடைத்தரகர்கள் என்று பல சிரமங்களையும் கடந்து தங்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள்.
அவர்களை ஏன் இந்தப் போராளிகள் எதோ முடியாதவர்களைப் போலக் கட்டமைக்கிறார்கள்?!
இது அவர்களைச் சிறுமைப்படுத்தும் செயலே!
உனக்குப் பில்லியன் அடுத்தவனுக்கு லட்சம்
அம்பானி உலகின் மிகப்பெரும் பணக்காரர்களுள் ஒருவர், ஒரே பொண்ணு (இரண்டு பசங்க) அதற்குச் செலவு செய்ய நினைப்பார்.
ஒண்ணுமில்லாதவனே இப்ப இல்லாத அட்டகாசம் பண்ணுறான். பில்லியன் கணக்கில் சொத்துள்ளவர் செலவு செய்ய மாட்டாரா?!
அம்பானிக்கு அறிவுரை சொல்றவங்க, 15 – 20 லட்சம் செலவு செய்து திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதை நிறுத்திக் கோவிலிலோ / பதிவு திருமணமாகவோ செய்து ஏன் மீதியை ஏழை விவசாயிக்குக் கொடுக்கக் கூடாது?
உனக்குப் பில்லியன் பெரிய பணம் என்றால், உனக்குக் கீழே உள்ளவனுக்கு லட்சங்கள் பெரியது தானே!
உன்னோட தாழ்வு மனப்பான்மை, வயித்தெரிச்சலை மறைக்க எதுக்குயா பாவம் விவசாயிக்குச் செண்டிமெண்ட் முலாம் பூசி அவர்களை அசிங்கப்படுத்துறீங்க!
மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் உள்ளதா? மகிழ்ச்சி. உதவி செய். அடுத்தவனை உதவி செய்யச் சொல்லி நிர்பந்திக்காதே! பொறாமைப்படாதே!
உனக்கு அம்பானி செய்வது வெட்டிச் செலவாக இருந்தால், நீ செய்வது உனக்குக் கீழே உள்ளவனுக்குத் தண்டச் செலவாக இருக்கும்.
இதெல்லாம் புரியாமல் போராளி வேடம் போடுவது சரியல்ல. பலரின் பிரச்சனைகளுக்கு, கோபங்களுக்கு காரணம் வயித்தெரிச்சல் அன்றி வேறில்லை.
கிரி, இதை பற்றி பேச வேண்டிய தேவையே இல்லை!!! உங்கள் உழைப்பில் நீங்கள் சம்பாரித்தவற்றை செலவு செய்ய உங்களுக்கு முழு அதிகாரமும், உரிமையும் உண்டு!!! அதைவிட்டு விட்டு அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் மூக்கை நுழைப்பது சரியானதாக எனக்கு படவில்லை!!! ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்திரனரே அவர்கள் சக்திக்கு மேல் கடன்வாங்கி தன் குடும்ப நிகழ்வுகளை மேற்கொள்ளும் போது, உலகின் பணக்கார தொழிலதிபர் அம்பானியை பற்றி கூட வேண்டுமா என்ன???? இது அவர்களது தனிப்பட்ட விஷியம், இதில் விவசாயிகளின் பிரச்சனைகளையோ, மற்ற பிரச்சனைகளையோ இதனுடன் ஒப்பிட்டு பேசுவது என்பார்வையில் சரியான ஒன்று இல்லை!!!
இதுபோன்ற திருமணங்களில் எத்தனை தொழிலாளர்கள் பயன் அடைகிறார்கள், இதுபோன்ற திருமணங்கள் நடக்கும் விருந்துகளில் பல விவசாயிகளுக்கு மறைமுகமாக பயன் பயன் கிடைக்கிறது. அந்த ஏழு நூறு கோடி பலரால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. பணம் உள்ளவர்கள் அனைவரும் எளிய முறையில் திருமணம் செய்தால் இதை நம்பி உள்ள பல தொழில்கள் நலிவடையும். பத்திரிக்கை அடிக்கும் அச்சகங்கள், புகைப்பட கலைஞர்கள் சமையல் கலைஞர்கள் மேடை அலங்கார கலைஞர்கள், சிகை அலங்கார கலைஞர்கள் நெசவாளர்கள், வாகன ஓட்டுனர்கள்இப்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெறுவார்கள் அதிகம்.
@யாசின் அதே தான்.. அவன் சம்பாதிக்கிறான் செலவு செய்கிறான். இவனுங்களுக்கு ஏன் குடையுதுன்னு தெரியல.
@அசோக் சரியா சொன்னீங்க.. நியாயமாக நீங்க கூறியதை நானே குறிப்பிட்டு இருக்க வேண்டும். சரியான கருத்து.
பலர் இதன் மூலம் பயன் பெற்று இருக்கிறார்கள். லாபம் அடைந்து இருக்கிறார்கள்.