கடுப்பைக் கிளப்பிய ஏர் இந்தியா

13
ஏர் இந்தியா

ங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும் தற்போது நடக்கும் ஏர் இந்தியா ஸ்ட்ரைக். இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களில் நானும் ஒருவன்.

நான் எப்போதுமே ஜெட்ஏர்வேஸ் விமானத்தில் தான் செல்வேன். இதில் பயணச்சீட்டு விலை குறைவும் இல்லை அதிகமும் இல்லை. Image Credit

அதாவது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போல குறைவும் இல்லை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போல அதிகமும் இல்லை.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட சரியான நேரம் பார்த்து முன்பதிவு செய்தால் குறைவாக பயணச்சீட்டை வாங்கலாம் ஆனால், அதற்கு சரியான முன்னேற்பாடு மற்றும் பொறுமை வேண்டும்.

எனக்கு இது வேலைக்காகாது என்பதால் எனக்கு எப்போதுமே ஜெட்ஏர்வேஸ் தான்.

ஜெட் ஏர்வேஸ்

என் மகனுக்கு ஜூன் மாதம் “Play school” விடுமுறை என்பதால் மே மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு செல்ல திட்டமிட்டோம் (நான் இல்லை என் மனைவியும் மகனும் மட்டும்) .

ஜூன் மாதம் என்றால் நம்ம ஊரில் பள்ளி திறந்து விடுவார்கள் (நான் தற்போது இருப்பது சிங்கப்பூர் ல்) அதனால் ஊருக்கு போயும் அங்குள்ள குழந்தைகளுடன் விளையாட முடியாது என்பதால் மே மாதம் விடுமுறை எடுத்துக்கொள்ளக்கூறினேன்.

காரணம், ஊரில் ஒரு பெரிய குழந்தைகள் படையே இருக்கு..

இதனால் கொஞ்சம் கூடுதல் சந்தோசமாக இருந்து வருவான் என்று திட்டமிட்டு இருந்தேன்.

இன்னும் ஒரு வருடம் சென்றால் IAS தேர்வு எழுதுவதைப் போலக் கடுப்படிப்பார்கள் என்பதும் விடுமுறை எடுக்க முக்கிய காரணம்.

மனைவி ஜெட் ஏர்வேஸ் பணம் அதிகம் இருக்கும் ஏர் இந்தியா ல முன்பதிவு செய்யுங்க என்று அடம்பிடித்து (விதி வலியது) முன்பதிவு செய்யக்கூறினார்.

நான் செல்வதாக இருந்தால் நிச்சயம் செய்து இருக்க மாட்டேன் ஆனால், தனக்கு பிரச்சனை இல்லை என்று மனைவி கூறியதால் சரி நாம் தான் செல்லவில்லையே என்று வேண்டாவெறுப்பாக முன்பதிவு செய்து விட்டேன்.

ஏர் இந்தியா வேலைநிறுத்தம்

விதி வலியது என்பதால் சரியாக இவர்கள் செல்லும் நேரம் பார்த்து ஸ்ட்ரைக் ஆரம்பித்து விட்டார்கள்.

ஆறு நாட்கள் ஆகியும் ஸ்ட்ரைக் முடிவிற்கு வரலை என்ன இழவுடா இது! என்று கடுப்பாகி விட்டது.

நானும் மே 2 தேதி இவர்கள் கிளம்ப வேண்டும் என்பதால் இன்று முடிவிற்கு வரும் என்று தினமும் எதிர்பார்த்து வெறுத்துப்போனது தான் மிச்சம்.

இவர்களும் ஸ்ட்ரைக்கை நிறுத்துகிற மாதிரி தெரியலை அரசாங்கமும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கிற மாதிரி தெரியலை.

ஊருக்கு செல்லும் முதல் நாள் விமான நிலையம் சென்று விசாரித்த போது அவர்கள் நாளைக்கு நீங்க வாங்க வேறு விமானம் மாற்றித்தருவார்கள் என்று கூறினார்கள்.

அங்கே பார்த்தால் கொஞ்சம் பேர் கன்னத்தில் கை வைத்து சோகமாக பெட்டியுடன் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள்.

ஆஹா! நாளைக்கு நம்மையும் இந்த போஸ்ல உட்கார வைத்து விடுவானுக போல இருக்கே! என்று நொந்துகொண்டு இவங்க கூறியதை நம்ம்ம்பி வீட்டிற்கு சென்று விட்டேன்.

மனைவியும் நீண்ட நாட்கள் கழித்து ஊருக்குப் போவதால் அந்த மகிழ்ச்சியிலும் நாளைக்கு விமானம் கிடைக்குமா! என்ற பயத்திலும் இருந்தார்.

முறையான அறிவிப்பில்லை

ஏர் இந்தியாவின் இணையத்தளத்தில் ஒழுங்கான அறிவிப்புமில்லை.

இவர்கள் கூறியதைப்பார்த்தால் உள்நாட்டு விமானங்கள் மட்டுமே பிரச்சனை என்பது போலவும் மிக சில வெளிநாட்டு விமானங்கள் மட்டுமே பிரச்சனை என்பது போலவும் இருந்தது.

கடைசியில் பார்த்தால் பெரும்பாலான விமானங்கள் இயங்கவில்லை இருப்பினும் வேறு விமானத்தில் மாற்றிக்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.

விமான நிலையத்திற்கு காலை 5.30 க்கு கிளம்ப வேண்டும் என்று அரைத்தூக்கத்தில் இருந்தால் இரவு 12 மணிக்கு ஏர் இந்தியாவில் இருந்து அழைத்து விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும் காலையில் ஏர் இந்தியா அலுவலகம் சென்று பார்க்கும்படியும் கூறினார்கள்.

வந்ததே கடுப்பு! செம டென்ஷன் ஆகிட்டேன். சரி விதிய டிக்கெட் கொடுத்து வாங்கியாச்சு என்ன பண்ணித் தொலையறது என்று படுத்தால் மன உளைச்சலில் தூக்கமும் வரவில்லை.

ரயிலில் முன்பதிவு

ஏனென்றால் இதையொட்டி 2 ம் தேதி இரவுக்குச் சென்னையிலிருந்து ஈரோடுக்கு (எங்கள் ஊர் கோபி) ரயிலில் முன்பதிவு செய்து இருந்தேன்.

நான் என்றால் கூட பரவாயில்லை எப்படியும் சமாளித்து விடுவேன். பையனை வைத்துக்கொண்டு என் மனைவி என்ன செய்வார்.

கோடை விடுமுறை என்பதால் உடனே மறுபடியும் பயணச்சீட்டு முன்பதிவு செய்வது மிக மிகச் சிரமம்.

இத்தனை யோசனையை வைத்துக்கொண்டு எங்கே தூங்குவது.

காலையில் இத்தனை யோசனையோடு ஏர் இந்தியா அலுவலகம் சென்றால், எனக்கு முன்பே பலர் நின்று கொண்டு இருந்தனர்.

டோக்கன்

பயணச்சீட்டை காண்பித்து அவர்களிடம் கேட்க நினைத்த போது உங்க டோக்கன் எண் சொல்லுங்க என்றார்.

என்னடா இது! டோக்கன் எங்குமே பார்க்கவில்லையே! என்று கூறியவர் கை காட்டிய இடத்தில் பார்த்தால் பல டோக்கன்களை ஒரு பின்னில் குத்தி வைத்து இருந்தார்கள் அதிலிருந்து ஒன்றை பிய்த்துக்க வேண்டுமாம்!

அட கொடுமையே! என்று நொந்து கொண்டு அதில் ஒன்றை எடுத்து(பிய்த்து)க்கொண்டு நின்றேன்.

என்னய்யா சிங்கப்பூரில் இருக்கும் ஏர் இந்தியா அலுவலகம் கூட இந்த ரேஞ்சில் இருக்கிறதே என்று அந்தகடுப்பிலும் கோபம் வந்தது.

எங்கே இருந்தாலும் மேன் மக்கள் மேன் மக்களே!

நேரம் ஆக ஆக என்னைப்போல பலர் வந்து கொண்டு இருந்தார்கள் உடன் என்னோட அறிவுரைப்படி!! டோக்கனை பிய்த்துக் கொண்டு இருந்தார்கள்.

இந்த நேரத்தில் தான் ஏர் இந்தியா செய்த கொடுமையை விட ஒரு கொடுமை நடந்தது.

சிங்கு

ஏங்க! நீங்க ஒரு நான்கு பேர் குழுவா வருகிறீர்கள் நான்கு பேருமே ஒரே பயணச்சீட்டு அப்படி இருக்கும் போது எத்தனை டோக்கன் எடுப்பீர்கள்?

நம்ம சிங்கு நான்கு டோக்கன் எடுத்து விட்டு ஒரு டோக்கனில் அலுவலகருடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.

மீதி மூன்று டோக்கன் சோபாவில் மற்ற சிங்குகளுடன் சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. ங்கொக்கமக்கா! சர்தார்ஜி சூப்பர்ஜி என்று மனதினுள் நினைத்துக்கொண்டேன்

அவர்கள் டோக்கன் 10,11,12,13 அடுத்ததாக நான் எடுத்தது 14 . வரிசையும் ஆமையை விட மெதுவாக சென்று கொண்டு இருந்தது. எனக்கு பின்னால் மூன்று பேர் வந்து 15,16,17 எடுத்து நின்று விட்டார்கள்.

எனக்கு முன்பு இருந்த சிங்கு வேலையை முடித்தவுடன் உட்கார்ந்து இருந்த மற்ற சிங்குகள் தங்களுடைய டோக்கன்களை மேசையில் வைத்து விட்டு சென்று விட்டார்கள்..

உடனே எனக்கு பின்னால் இருந்தவர்கள் அதை எடுத்ததால் நான் அவர்களுக்கு பிறகு டோக்கன் வரிசையில் சென்று விட்டேன்..

கிர்ர்ரர்ர்ர்ர் நல்ல டோக்கன் சிஸ்டம்யா என்று செம கடுப்பாகி விட்டது.

இதற்கு மேல் நல்லவன் வேஷம் போட்டால் ஏர் இந்தியா விமான பயணச்சீட்டு இல்லை சைக்கிள் சீட்டுக்கூட கிடைக்காது என்று அதிரடியாக போய் உட்கார்ந்து விட்டேன் என்ன ஆனாலும் சரி என்று! 🙂 .

நல்லவேளை மற்றவர்களும் எதுவும் கூறவில்லை.

தமிழர்கள்

இதுல ஒரு செம காமெடி அங்கே அலுவலகத்தில் இருந்தவர்கள் அனைவருமே தமிழர்கள் அவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து இருந்தது.

வந்து இருந்த சிங்குகளுக்கு ஹிந்தி தவிர எதுவும் தெரியவில்லை.

ஒரே கரா புரா னு பேசி குழப்பம் பிறகு இன்னொருவர் வந்து மொழிபெயர்ப்பு செய்து பிறகு இவர்கள் ஜாடையில் அப்படி இப்படி காட்டி எதோ செய்து அனுப்பி விட்டார்கள் 🙂 .

Refund

பயணச்சீட்டை கொடுத்து விவரம் கேட்டால்.. முதல் கேள்வியே நீங்க என் இங்கே வந்தீர்கள்? நீங்கள் விமான நிலையம் தான் செல்ல வேண்டும்.

அவர்கள் தான் மாற்று விமானம் ஏற்பாடு செய்வார்கள் என்று கூறியதும் நான் வெறுப்பின் எல்லைக்கே போய் விட்டேன்.

பின் கோபப்பட்டால் வேலைக்காகாது என்று கோபத்தை கட்டுப்படுத்தி அவர்களிடம் பொறுமையாக விளக்கினேன்.

“இங்க பாருங்க! அவங்க கூறித்தான் நான் வந்தேன் இப்ப நீங்க அங்கே போங்கன்னு சொல்றீங்க அங்கே போனால் அவங்க இங்க ஏன் வந்தீங்க என்று கேட்பாங்க.. உங்களுக்கே தெரியும் இதெல்லாம் நடக்கிற காரியமா!” என்று கேட்டேன்…

போகப்போறது மனைவியும் குழந்தைங்க ..நான் மட்டும் என்றாலாவது ஏதாவது செய்து கொள்வேன்.. இதை நம்பி நான் ஊருக்குச் செல்ல ரயில் முன்பதிவு எல்லாம் செய்து இருக்கேன் என்று கூறி விளக்கினேன்.

பின் அவர் மீண்டும் அவர்களைத் தொலைபேசியில் அழைத்துக்கேட்டால் இரவு விமானமும் இல்லை என்று இவரிடம் கூற..

“பார்த்தீங்களா! இப்ப நான் அங்கே போய் இருந்தா என்ன ஆகி இருக்கும்? ” என்றதும் அவர் புரிந்து கொண்டு சரி நீங்க Refund பண்ணிக்குங்க என்றார்.

நானும் அது தான் யோசித்து வைத்தேன் காரணம் இவர்களிடம் confirm பயணச்சீட்டே என்ன நிலைமை என்று தெரியவில்லை இதுல உத்தேசமா கிடைக்குமா கிடைக்காதா என்று பயந்து கொண்டே எப்படி இருப்பது!

இது ஆகறதுக்கு இல்லை என்று பயணச்சீட்டை ரத்து செய்யக்கூறினேன்.

பொறுப்பில் இருந்த நல்ல உள்ளம்

அவர் ஒரு மின்னஞ்சல் ஐ டி குறிப்பிட்டு இதற்கு மின்னஞ்சல் செய்து வாங்கிக்கொள்ளலாம் என்று கூறினார்.

ஏங்க! இவங்க கிட்ட நான் என்னோட பணத்தை வாங்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும் நீங்களே ஏதாவது பண்ணுங்க என்று கூறியதால் சரி என்று அவரே அதற்கு மின்னஞ்சல் செய்தார்.

கொஞ்ச நேரத்திலேயே refund initiated என்று மின்னஞ்சல் வந்து விட்டது.

முதலில் இவர் திரும்பக் கிடைக்க 2 மாதம் ஆகும் என்று வயிற்றில் புளியைகரைக்க சரி என்ன செய்வது என்று தலைவிதியை நொந்து கொண்டு அவருக்கு நன்றி கூறி கிளம்பி விட்டேன்.

இதில் எனக்கு இதை சரி பார்த்தவர் ஒரு பெண் (பெயர் வேண்டாம்) உண்மையாகவே அந்த பரபரப்பிலும் பொறுமையாக எனக்கு இதைச் செய்து கொடுத்தார்.

நிச்சயமாக இதே இடத்தில் வேறு ஹிந்தி வாலாக்கள் இருந்து இருந்தால் என் கதையே வேறு ஆகி இருக்கும்.

என்னமோ பண்ணிக்கோ என்று கூறி இருப்பார்கள். என்னோட கெட்ட நேரத்திலையும் நல்ல நேரம் இவங்க இருந்தது.

சிறிது நேரத்தில் 10-15 வேலைநாளில் உங்களது பணம் க்ரிடிட் செய்யப்படும் என்று மின்னஞ்சல் வந்து விட்டது.

பின்னர் நன்றி தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பி விட்டேன்.

பீதி

இதற்குள் ஊருல விமானம் ரத்து என்று எல்லோரும் பீதியாகி விட்டார்கள் எப்படி குழந்தையை வைத்துட்டு என் மனைவி வருவார் என்று!

ஏர் இந்தியா பயணச்சீட்டை ரத்து செய்ய இன்னொரு காரணம் இவர்கள் transit மாதிரி மும்பை டெல்லி என்று சுத்த விட்டு விட்டால் என்ன செய்வது என்று பயம் வேறு.

அப்புறம் என்னை ஊரில் டரியல் ஆக்கி விடுவார்கள் என்பதால் இதை ரத்து செய்தேன்.

பின்னர் அவசராவசரமாக ஜெட்ஏர்வேஸ் ல முன்பதிவு செய்து நேற்று அனுப்பி வைத்தேன். சென்னையில் எப்படியோ தத்கால் பயணச்சீட்டு கிடைத்து விட்டது.

இவர்களை அழைத்துச்செல்ல என் அப்பா வேறு வந்து இருந்தார் பாவம் அவருக்கும் சிரமம்.

மனைவி நிலை கூடப் பரவாயில்லை நீண்ட விடுமுறையில் செல்கிறார்.

ஒருநாள் இரண்டு நாள் தாமதம் என்றால் கூடப் பிரச்சனை இல்லை அதுவே எனக்கு கடுமையான மன உளைச்சல் மற்றும் அலைச்சல்.

ஒரு சிலர் அடுத்த நாள் அலுவலகம் செல்ல வேண்டியது இருக்கும், அவசர விசயமாக போக வேண்டியது இருக்கும், விடுமுறையே மொத்தம் மூன்று நாள் இருக்கும்.

இப்படி இருப்பவர்கள் என்ன செய்வார்கள்! நினைத்துப்பாருங்க.. இதனால் எத்தனை ஆயிரம் பேருக்குச் சிரமம்.

இவங்க ஸ்ட்ரைக் செய்வதை முன்கூட்டியே அறிவித்து இருந்தால் கூடப் பரவாயில்லை.

நாம் அதற்குத் தகுந்த மாதிரி நமது திட்டத்தை மாற்றி இருக்கலாம் தற்போது அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது.

ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்?

எனக்கு பைலட் ஸ்ட்ரைக் செய்வதில் கூட கோபம் இல்லை.

அரசாங்கம் இப்படி பிடிவாதமாக இருந்தால் எப்படி? இதனால் பாதிக்கப்படுபவர்களை பற்றி ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்? ஒரு நாள் இரண்டு நாள் என்றால் கூடப் பரவாயில்லை.

இன்றுடன் எட்டு நாட்கள் ஆகி விட்டது இன்று வரை ஒரு முடிவும் கிட்டவில்லை என்றால் இது யாருடைய கையாலாகத்தனம்.

ஏர் இந்தியா முழுக்க ஊழலில் திளைக்கிறது இவர்கள் பைலட்டை குறை கூற என்ன தகுதி இருக்கிறது?

அரசாங்கம் இதில் யார் பெரியவன் என்று பார்த்து விடலாம் என்று பைலட்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதனால் எத்தனை பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கடுகளவும் யோசிக்கவில்லை அப்படி யோசித்து இருந்தால் இவ்வளவு நாள் நீடிக்க விட்டு இருப்பார்களா!

மருத்துவர்கள் ஸ்ட்ரைக் செய்யக் கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கிறது அப்படி இருந்தும் செய்கிறார்கள் பிறகு பைலட் ஏன் செய்ய மாட்டார்கள்.

இவர்கள் ஸ்ட்ரைக்கால் மண்டை உருளுவது பயணச்சீட்டு ஏற்பாடு செய்யும் இந்தப்பெண் போன்ற நிலையில் இருப்பவர்களே.

இவர்களுக்கு தரும் தகவலும் ஒழுங்கு இல்லை ஆளாளுக்கு ஒவ்வொன்றைக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

வருகிறவன் எல்லாம் இவர்களை பஞ்சர் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒருத்தர் இரண்டு பேர் என்றால் பரவாயில்லை வரிசையாக வந்து காச் மூச்னு சத்தம் போடுவாங்க..

எனக்கு பாவமாகத்தான் இருந்தது அதனால் தான் சரி நாமளும் ஏன் இவர்களை கத்த வேண்டும் என்று விட்டு விட்டேன் ஆனால், இப்படி ஒழுங்காக பேசியதால் தான் எனக்கு வேலை நடந்தது என்பது வேறு விஷயம்.

நானும் சப்போர்டில் இருந்தவன் மற்றும் இருப்பவன் என்பதால் இவர்கள் நிலை புரிந்து கொள்ள முடிந்தது.

இது எப்படி இருக்குனா பிரச்சனை செய்வது ஒருத்தன் திட்டு வாங்குவது அதற்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தன்.

மறக்க முடியாத அனுபவம்

எனக்கு இது வரை ஜெட்ஏர்வேஸ் ல் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை முதல் முறையாக ஏர் இந்தியாவில் முன்பதிவு செய்தது மறக்க முடியாதபடி ஆகி விட்டது.

இது வங்கி ராசி போன்றது தான் சிலருக்கு ICICI என்றாலே டென்ஷன் ஆகி விடுவார்கள் அந்த அளவிற்கு அவர்களிடம் குடைச்சலை சந்தித்து இருப்பார்கள்.

எனக்கு ICICI எந்தப் பிரச்சனையும் இந்த 12 வருடத்தில் வந்ததில்லை.

அது போல ஒரு சிலருக்கு ஏர் இந்தியா எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் எனக்கு…. ம்ஹீம் ஆளை விடுங்கடா சாமி.

இனி இவங்க சங்காத்தமே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.

2 ம் தேதி காலையிலிருந்து மாலைவரை எனக்கு பெரும் துணை புரிந்தது மொபைலும் இணையமும் தான்.

இவை இரண்டும் இனி இல்லை என்ற நிலை வந்தால் பேசாம இமயமலைக்கு கமண்டலத்தை தூக்கிக்கொண்டு அங்கே இருக்கிற (ஆண்) துறவி பக்கத்து பாறைல இடம்பிடித்து உட்கார்ந்து கொள்ள வேண்டியது தான் 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

13 COMMENTS

 1. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் குறைவு என்று யார் சொன்னது ….

 2. இந்தியாவில் யோகா வகுப்புகள் அதிகமாக ஆரம்பிக்கப்படுவது எதனால் என்பது இந்த பதிவை படித்தால் புரியும். 🙂

 3. இன்னுமா இந்த ஏயர் இண்டியாவை நம்புறீங்க:(

  நஷ்டத்துலே ஓடி நம்ம வரிப்பணத்தை ஓசைப்படாம முழுங்கும் இதை இப்படியே மூடிட்டால்………………..நல்லா இருக்குமே!!!!

 4. பிரச்சனை செய்வது ஒருத்தன் திட்டு வாங்குவது அதற்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தன்.

 5. ரொம்ப ஓவர்ரா பன்னுறாயுங்க னு நினைக்கிறன்..

  நாமல்லாம் பிளைட் ய் வானதுல பக்கரதொட சரி .

  இருந்தாலும் .. 246 வது வட்டசெயலாளர் வண்டு முருகன் சார்பில் இந்த ஸ்ட்ரைக்கை வன்மையாக கண்டிகிறேன்

 6. Hi.. Giri.. I hope u r doing well… this is really very bad experience.. my friend also face the same problem in dubai.. very diff with this airline always for booking and canceling and REFUNDING…

 7. “இதில் எனக்கு இதை சரி பார்த்தவர் ஒரு பெண் (பெயர் வேண்டாம்) உண்மையாகவே அந்த டென்ஷன் லும் பொறுமையாக எனக்கு இதை செய்து கொடுத்தார். ”

  – கிரி உங்க ராசி அது யாரா இருந்தாலும் உடனே ஒட்டிபாங்க.. உங்க கூட பேசவும் பழகவும் அவ்ளவு இனிமையா இருக்கும்

  அருண்

 8. ஹாய் கிரி, இது காயத்ரிநாகா சேலத்திலிருந்து… உங்கள் எழுத்து நடை மிகவும் பிரமாதம்..

  I am expecting you more about superstar Rajini..

  I pray for him to get well soon…

 9. கார்த்திக் பிரபு தேவராஜன் துளசிகோபால் ராஜராஜேஸ்வரி ஆனந்த் பிரதீபா முஹம்மத் யாசின் அருண் மற்றும் காயத்ரி நாகா வருகைக்கு நன்றி

  @கார்த்திக் அதை எப்போது கேன்சல் செய்வார்கள் என்று தெரியாததால் நான் அதை விரும்புவதில்லை மற்றபடி சரியான நேரத்தில் முன்பதிவு செய்தால் மிகக்குறைந்த கட்டணத்தில் செல்லலாம்,

  @பிரபு ஏங்க! நான் தான் சொன்னேன்.. ஏதாவது போராட்டம் செய்யப்போகிறார்களா இதற்கு 🙂

  @தேவராஜன் ஹி ஹி

  @துளசி கோபால் இனி நம்ப மாட்டேன் 🙂

  @ஆனந்த் 🙂

  @முஹமது யாசின் நன்றாக உள்ளேன் 🙂 இதனால் அவதிப்பட்டவர்கள் கதை மிகப்பெரியது

  @அருண் உங்கள் அன்பிற்கு நன்றி 🙂

  @காயத்ரி நாகா பாராட்டிற்கு நன்றி. ரஜினி பற்றி அடிக்கடி எழுதினால் சுவாரசியம் இருக்காது. தேவை இருக்கும் போது நிச்சயம் எழுதுவேன்.. மேலே இருக்காரே அருண்! இல்லைனா விடமாட்டாரு 🙂

 10. இதெல்லாம் ரொம்ப கொடுமைங்க. நாம கூட போறதுன்னா எப்படியோ சமாளிச்சுடலாம்… இந்திய அரசோட விமானம்னா பின்ன சும்மாவா?

  “சிங்”குகள பத்தி நீங்க போன்ல சொன்னப்ப எனக்கு சிரிப்பா அடக்கவே முடியலங்க. ஆனாலும் எல்லா சிங்கும் அப்பிடி இல்ல, தற்செயலா அந்த சிங்குங்க அப்பிடி இருந்திருப்பாங்க. 🙂

  –> நான் செல்வதாக இருந்தால் நிச்சயம் செய்து இருக்க மாட்டேன் ஆனால் தனக்கு பிரச்சனை இல்லை என்று என் மனைவி கூறியதால் சரி நாம் தான் செல்லவில்லையே என்று வேண்டாவெறுப்பாக முன்பதிவு செய்து விட்டேன்

  ஏங்க, இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல? நீங்க கூட போறதா இருந்தாதான இந்த ஏர் இந்தியாவெல்லாம் யோசிக்கலாம், அவங்க “பரவால்ல பண்ணுங்க”-ன்னா நீங்க “நாமதான் போகலையில்ல…”-ன்னு புக் பண்ணிடுவிங்களா? 🙂

 11. @சிங்கக்குட்டி என்கிட்டே இருந்து பிடுங்காம இருந்தா போதாதா! 🙂

  @முத்துக்குமார் சொன்னா கேட்டாத்தானே! நான் பலமுறை விளக்கி விட்டேன்.. இதுல பிரச்சனை வரும் என்று. அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் என்று கூறிய பிறகு நான் என்ன பண்ண முடியும் 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here