சிங்கையில் Condo என்ற தனியார் குடியிருப்புகள் மற்றும் HDB (Housing Development Board) என்ற அரசால் கட்டி கொடுக்கப்படும் குடியிருப்புகள் உள்ளன. Image Credit
இதில் condo வகை குடியிருப்புகள் வாடகை மிக அதிகம் குறைந்தபட்சமே 3000 வெள்ளி இருக்கும்.
இங்கு நீச்சல் குளம், உடற் பயிற்சி நிலையங்கள், விளையாட்டு இடங்கள் என்று சகல வசதிகளுடன் இருக்கும். பாதுகாப்பு கெடுபிடிகளும் அதிகம்.
HDB குடியிருப்புகள் அரசால் கட்டி கொடுக்கப்பட்டு பின் பொதுமக்களுக்கு விற்கப்படும்.
இதை பொது மக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கோ அல்லது வாடகைக்கு விடுவதற்கோ வாங்குவார்கள். நடுத்தர மக்கள் இந்த வகை குடியிருப்புக்களை பயன்படுத்த முடியும்
இந்த குடியிருப்புகள் எந்த விதத்திலும் தனியார் குடியிருப்புகளுக்கு குறைந்தவை அல்ல. அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
பெரும்பான்மையான வீடுகளில் ஏற்கனவே குளிர்சாதன பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், ஷோபா, தொலைக்காட்சி பெட்டி, பிரிட்ஜ் என்று சகலமும் இருக்கும், நாம் வாடகைக்கு போகும் முன்பு.
சிங்கையில் அரசு மேற்பார்வையில் பெரும்பாலான பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கும். மின்சாரம் தண்ணீர் குப்பை அள்ளுதல் அனைத்தும் SP services என்ற அமைப்பு தருகிறது
மின்சாரம் எப்போதுமே நிற்காது, என் இந்த ஒரு வருடத்தில் ஒருமுறை கூட மின்சாரம் போனதில்லை.
ஒரு முறை பராமரிப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட நேரத்தில் 15 நிமிடம் நிறுத்தப் போவதாக 10 நாட்களுக்கு முன் அறிவிப்பு செய்தார்கள்.
ஆனால், அப்போதும் மின்சாரம் நிறுத்தப்படவில்லை. இருட்டான பகுதியே கிடையாது என்கிற அளவிற்கு அனைத்து இடங்களிலும் மின் விளக்கு இருக்கும்.
எந்த விளக்கும் பியுஸ் போகாமல் எரியும் (பியுஸ் ஆனால் உடனே மாற்றப்படும்) குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில்.
தண்ணீரும் மின்சாரமும் நாம் சரியாக பணம் கட்டும் வரை நிற்கவே நிற்காது.
முதல் முறை கட்டவில்லை என்றால் எச்சரிக்கை காகிதம் அனுப்புவார்கள், அதன் பிறகும் கட்டவில்லை என்றால் மின்சாரம் தண்ணீர் துண்டிக்கப்படும்.
திரும்ப கட்டிய பிறகு அவர்கள் கூறிய நேரத்திற்கு முன்பே அனைத்தும் சரி ஆகி விடும்
HDB பழைய குடியிருப்புகளில் 6 தளங்களுக்கு ஒரு முறை தான் மின்தூக்கி நிறுத்தப்படும், மற்ற தளங்களில் உள்ளவர்கள் இந்த தளத்தில் இறங்கி படிக்கட்டில் செல்ல வேண்டும்.
தற்போது அனைத்து தளங்களுக்கும் நிற்கும் படி ஏற்பாடு செய்து விட்டார்கள்.
சிங்கையில் கிரவுன்ட் தளம் என்று கிடையாது நம்ம ஊரை போல, இங்கு கிரவுன்ட் தளமே முதல் தளமாக கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக நம்முடைய முதல் தளம் இவர்களுக்கு இரண்டாவது தளம்.
HDB குடியிருப்புகளில் உள்ள மின் தூக்கியில் சில சமயம் சிறுநீர் கழித்து விடுவார்கள், எச்சில் துப்பி வைத்து இருப்பார்கள்.
தினமும் சுத்தம் செய்து விடுவார்கள் என்றாலும், இதை போலக் கொடுமையை நம்ம ஊரில் கூட நான் பார்த்தது இல்லை.
காஸ் வேண்டும் என்று தொலைபேசியில் கூறினால் நம்பினால் நம்புங்கள் 15 நிமிடத்திற்குள் சிலிண்டர் கொண்டு வந்து விடுவார்கள்.
ஒரு சில இடங்களில் பைப் லைன் காஸ் ம் உண்டு
அடையாள அட்டை இருந்தால் மட்டுமே மருத்துவரிடம் செல்ல முடியும், மருந்து சீட்டு இல்லாமல் மருந்து கொடுக்க மாட்டார்கள் (சில விதிவிலக்கு).
தமிழர்களும் இங்கு மருத்துவர்களாக உள்ளனர். இங்கு மருத்துவம் மிகவும் அதிக செலவு பிடிக்கும்.
சிங்கை மக்களின் எண்ணிக்கை குறைவதால், அரசே அதிக குழந்தைகளை பெற்று கொள்ள பரிந்துரைக்கிறது, அவ்வாறு பெற்று கொள்பவர்களுக்கு பல சலுகைகளும் தரப்படுகிறது.
வீடுகளில் நாம் சத்தம் செய்தால், அது பக்கத்து வீட்டினருக்கு தொந்தரவாக இருந்தால் காவல் துறையிடம் புகார் செய்து விடுவார்கள்.
தமிழர்கள் ஒரு குடும்பமாவது ஒரு பிளாக் ல் கண்டிப்பாக இருக்கும், இங்கு சன், விஜய், ஜெயா, கலைஞர், Zee தமிழ், சன் மியூசிக் தமிழ் சேனல்கள் தெரிகின்றன.
நிகழ்ச்சிகள் ஒரு வாரம் தாமதமாக தெரியும் குறிப்பாக தொடர்கள்.
இலவச சேனல்களும் (வசந்தம்) கட்டண சேனல்களும் (வண்ணத்திரை, V தமிழ்) உண்டு. இதில் புது படங்கள் அடிக்கடி போடுவார்கள்
குடியிருப்புகள் வராண்டா மற்றும் படிக்கட்டுகளை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை கழுவி சுத்தம் செய்வார்கள், அழுக்கே இல்லை என்றாலும்
ஒரு குடியிருப்பின் வயது 30 வருடம், அதன் பிறகு அது இடிக்கப்பட்டு வேறு கட்டப்படும்
இங்கு கட்டப்படும் கட்டிடங்கள் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு கட்டப்படும், மற்றவர்களுக்கு சிறு தொந்தரவு கூட இருக்காது. நம்மவர்கள் நிறைய இதில் பணியாற்றுகிறார்கள்.
கட்டிடம் கட்டுவது எப்படி என்று இவர்களிடம் கற்று கொள்ளலாம். இதற்கு மேல் சிறப்பாக செய்ய முடியுமா என்று எனக்கு தோன்றவில்லை.
தொழில் சுத்தம் என்பதை இவர்களிடத்தே நாம் கற்று கொள்ள வேண்டும்.
நான் கவனித்த இன்னொரு வியப்பான விஷயம், லாரி மண்ணை எடுத்துக்கொண்டு புறப்படுகிறது என்றால் அதனுடைய சக்கரங்களைக் கழுவிய பிறகே சாலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும்
ஒருமுறை வானொலியில் நம்ம ஊர்க்காரர் தொலைபேசியில் பேசும் போது 40 நாட்கள் விடுமுறையில் போவதாக கூறினார்.
எனக்கு வியப்பு1 இத்தனை நாள் எப்படி தந்தார்கள் என்று, பின்னர் தான் கூறினார் 4 வருடங்களுக்கு பிறகு செல்வதாக.
நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை
இவர்கள் மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள், இவர்கள் வாங்கும் சம்பளத்திற்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை.
மாடு போல வேலை செய்கிறார்கள். குடும்ப நலனுக்காக அனைத்தையும் அனுசரித்து வேலை செய்கிறார்கள்.
இவர்கள் ஒரு சிலர் வாங்கும் சம்பளத்தை கேட்டால் நான் வாங்கும் சம்பளம் எனக்கு ஜீரணிக்காது.
சிங்கையில் பிச்சைக்காரர்கள் இல்லை என்று நினைத்து இருந்தேன், இங்கேயும் இருக்கிறார்கள், ஊனமுற்றவர்கள் என்றால் வசூல் அதிகமாக இருக்கும்.
கொஞ்ச மாதம் முன்பு தொலைக்காட்சியில் ஒரு டாக்குமெண்டரி போட்டார்கள், அதில் சிலர் ஒரு நாளைக்கு 150 வெள்ளி வரை வசூல் செய்கிறார்கள் என்று, எனக்கு மயக்கம் வராத குறை தான்.
இது கணிப்பொறி துறையில் ஒருவர் வாங்கும் சம்பளத்தை விட அதிகம்
இதற்காக சீனாவில் இருந்து விசா எடுத்து வந்து பிச்சை எடுத்து போவதாகவும் குறிப்பிட்டார்கள், எனக்கு தலை சுற்றி விட்டது.
பிச்சை எடுக்காமல் ஒரு சிலர் டிஷ்யு காகிதம் விற்பார்கள் ஆனால், அவர்களுக்கு உதவாமல் பிச்சைக்காரர்களை ஆதரிப்பவர்களே அதிகம் என்றும் கூறப்பட்டது, அது உண்மையும் கூட.
நான் இவர்களிடத்தே, டிஷ்யு பயன்படுத்தவில்லை என்றாலும் இவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கோடு அவ்வப்போது வாங்குவேன்.
பெடோக் என்ற இடத்தில் ஒரு பெரியவர் இவ்வாறு கொடுத்துக்கொண்டு இருப்பார் அவருக்கு குறைந்தது 90 வயது இருக்கும் (பார்வையும் சரியாக தெரியாது) இருந்தும் உழைப்பால் சம்பாதிக்கிறார் அல்லது சம்பாதிக்க நினைக்கிறார்.
சிங்கையில் கணிப்பொறி மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை மலிவாக சிம் லிம் ஸ்கொயர் என்ற இடத்தில் வாங்கலாம்
இங்கு டெபிட் அட்டை பயன்படுத்தி பொருட்களை வாங்கினால் நம்முடைய கடவு எண்ணை பதிக்க வேண்டும்.
நம்முடைய அட்டை தொலைந்தாலும் கவலைப்பட தேவையில்லை. இதை நம்ம ஊரிலும் செயல் படுத்தி இருக்கிறார்கள்.
சிங்கப்பூர் விமான நிலையம் (பட்ஜெட் விமான நிலையம் தனி) பற்றிக் கூறாமல் முடிக்கவே முடியாது.
இது பற்றி கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அத்தனை அற்புதமாக இருக்கும்.
இங்கு 3 டெர்மினல்கள் உள்ளன, இந்த மூன்றையும் ஸ்கை ரயில் இணைக்கிறது, எளிதாக செல்லலாம்.
அங்கு உதவிக்கென்று பலர் இருப்பார்கள், நமக்கு ஏதாவது தெரியவில்லை என்றால் இவர்களிடத்தே கேட்கலாம், இல்லை என்றால் அவர்களே வலிய வந்து கேட்பார்கள்.
பரந்து விரிந்த இடம், அட்டாகசமான தகவல் முறைகள், குழப்பம் இல்லாத வழிமுறைகள். அன்பான உபசரிப்பு என்று அசத்தலான சேவை
இவ்வளோ சிறிய ஊரில், இருக்கும் இடத்தில் பரந்து விரிந்த சாலைகள், குடியிருப்புகள், கட்டமைப்புகள், வடிகால்கள், வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் என்று திட்டமிட்டு செய்திருக்கும் இவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.
எந்த வித பிரச்சனையும், மன அழுத்தமும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை அமைதியாக வாழ விரும்புகிறவர்களுக்கு சிங்கப்பூர் 100% பொருத்தமான இடம் என்று பரிந்துரைக்கிறேன்
இதோடு என் சிங்கப்பூர் பற்றிய பதிவுகளை மன நிறைவுடன் முடித்துக்கொள்கிறேன்.
இவை என் ஒரு வருட அனுபவத்தில் தெரிந்து கொண்டவையாகும், நான் கூறிய தகவல்களில் கூடுமானவரை சரியாகவே கொடுத்து இருக்கிறேன் என்றே நம்புகிறேன்
சிங்கப்பூர் பற்றிய முதல் பதிவிலிருந்து எனக்கு உற்சாகமளித்த, ஆர்வமாக கருத்துக்கள் கூறிய அப்துல்லா, முரளி கண்ணன், ராமலக்ஷ்மி, ஜோசப் பால்ராஜ், வடுவூர் குமார், மோகன், வெங்கி, ஜோதி பாரதி மற்றும் பெயர் விடுபட்ட அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
இவர்களின் உற்சாகமான வார்த்தைகளே என்னை தொடர்ந்து எழுத தூண்டியது.
Updated on 20-02-2014
பிற்சேர்க்கை – Bye Bye சிங்கப்பூர் – 2015
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
//கீ – வென் said…
இதில் ஏதும் முடியவில்லை என்றால் கை ஏந்தி பிச்சை எடுக்கலாம்.. இவர்களும் விலை உயர்ந்த மொபைல் போன் வைத்திருக்கிறார்கள்.. .. !!!!//
அவ்வ்வ்வ்வ்வ் இப்பவே கண்ணை கட்டுதே 🙂
வெங்கி உங்கள் வருகைக்கு நன்றி
கிரி,குடியிருப்புகளின் வயது 30 வருடமல்ல;99 வருடங்கள்…சிங்கப்பூர் பற்றி எழுத ஆழ்ந்த விதயங்கள் எவ்வளவோ இருக்கின்றன;அவற்றைத் தொடுவீர்கள் என எதிர்பார்த்தேன்,ஏமாற்றி வீட்டீர்கள்…பரவாயில்லை,எளிமையான சில அறிமுகம் இந்த நான்கு பதிவில் கிடைக்கிறது..பாராட்டுக்கள்….
//ஜோ / Joe said…
சிங்கைக்கு வராதவர்களுக்கு பயன்படும் அருமையான தகவல்கள் .மொத்தத்தில் அருமையான தொடர் .உங்கள் எளிமையான நடைக்கு பாராட்டுக்கள்//
நன்றி ஜோ உங்கள் வருகைக்கும் சேர்த்து
================================================================
//ஜோதிபாரதி said…
வாழ்த்துக்கள் கிரி!//
நன்றி ஜோதி பாரதி
//வடுவூர் குமார் said…
கிரி,ஒரு நல்ல தொடரை முடித்திருக்கிறீர்கள்//
நன்றி வடுவூர் குமார்
//உங்களுக்கு 1 வருடத்தில் ஒரு முறை கூட மின்சாரம் போகவில்லை,எனக்கு 13 வருடங்களில் ஒரே ஒரு முறைதான் கண்டேன்,அதுவும் முன்னறிவிப்புடன்.//
என்னை விட இதை பற்றி கேள்வி படாதவர்களுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருக்கும் :-)))
//பல பெரிசுகள் தான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்//
அடப்பாவிகளா!
//கேஸ் தோம்பு (சிலிண்டரை) இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்,கொடுக்கும் போது அட்வான்ஸோட வாங்கிக்கொள்வார்கள் ஆனால் திரும்ப நீங்கள் ஒப்படைக்கும் போது வெறும் 5 வெள்ளி தான் கிடைக்கும்.:-)//
எனக்கு என்னுடைய வீட்டு முதலாளியே கொடுத்து விட்டார், அதனால் எனக்கு பிரச்சனை இல்லை
//தண்ணீர் பணம் கட்டவில்லை என்றால் இரண்டாம் தடவைக்காக தண்ணீர் மெலிதாக வரும்,ஆதாவது குடிக்கமட்டும் பிடித்துகொள்ள உதவும்.எவ்வளவு நூதனமாக ஞாபகப்படுத்துகிறார்கள் பாருங்கள்.//
உண்மை தான்
//சகிப்புதண்மையும் கூடவே வந்துவிடும். நல்ல முறை/அமைப்பு.//
நானும் கேள்வி பட்டு இருக்கிறேன்
//.வேலை ஆரம்பிக்கும் முன்பே இதற்கு ஒரு தொட்டி கட்டி ஒரு பம்பையும் வைத்துவிடுவார்கள்//
கலக்குறாங்க 🙂
//வேலையிடத்தில் இருந்து வெளியேறும் நீரில் மண்கசடு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்ககூடாது என்று//
என்ன ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை !!!!
வடுவூர் குமார் உங்களின் தொடர்ச்சியான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் துபாய் செல்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். அங்கே சென்று அங்கே பார்த்தவைகளை எங்களுக்கு பதிவுகளில் தெரிவியுங்கள்
//அறிவன்#11802717200764379909 said…
கிரி,குடியிருப்புகளின் வயது 30 வருடமல்ல;99 வருடங்கள்//
99 வருடங்கள் ரொம்ப அதிகமாக தோன்றுகிறது. என்னுடைய நண்பர் ஒருவர் இருந்த குடியிருப்பு 30 வருடங்கள் ஆனதால் அதை இடிப்பதால் காலி பண்ண கூறினார்கள் என்று கூறினார். அதன்படி தற்போது வேறு பக்கம் குடியேறி விட்டார். அதனாலேயே குறிப்பிட்டேன்.
//சிங்கப்பூர் பற்றி எழுத ஆழ்ந்த விதயங்கள் எவ்வளவோ இருக்கின்றன;அவற்றைத் தொடுவீர்கள் என எதிர்பார்த்தேன்,ஏமாற்றி வீட்டீர்கள்…//
🙂 அறிவன் நான் ஒருவருடத்தில் தெரிந்தவற்றையே கூறி இருக்கிறேன், அதை என் பதிவிலும் கூறி விட்டேன். நீங்கள் அது பற்றிய பதிவுகளை எழுதினால் என்னை போல தெரிந்து கொள்ளாதவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்புண்டு.
//பரவாயில்லை,எளிமையான சில அறிமுகம் இந்த நான்கு பதிவில் கிடைக்கிறது..பாராட்டுக்கள்//
நன்றி அறிவன்
நிறையும் இத் தொடர் நிறைவாகவே இருந்தது கிரி. ஒரு வருடத்தில் தாங்கள் நடைமுறை வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து பதிந்திருக்கும் தகவல்கள் அனைத்தும் அருமை.
குறை நிறைகள் எங்கும் உண்டு. குறைகள் நாம் எப்பெப்படி இருக்கக் கூடாது என உணர்த்துவதாயும், நிறைகள் ‘ஆகா இப்படி மாறிடலாமே’ என நினைக்கத் தூண்டுபவையாயும் இருந்தன.
வாழ்த்துக்கள்!
//கார்க்கி said…
கலக்கல் தொடர்.. நிறைவு பகுதி என்றாலும் நிறைவா சொல்லியிருக்கிங்க..//
நன்றி கார்க்கி
//ஆனா நீங்க என்னதான் சொன்னாலும் எனக்கு ஏனோ அந்த நாடு பிடிக்கலை..பிடிக்கலை..பிடிக்கலை..//
ஹா ஹா ஏன்! இந்த கொலை வெறி.
//ராமலக்ஷ்மி said…
நிறையும் இத் தொடர் நிறைவாகவே இருந்தது கிரி. ஒரு வருடத்தில் தாங்கள் நடைமுறை வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து பதிந்திருக்கும் தகவல்கள் அனைத்தும் அருமை. //
உங்களின் அனைத்து பாராட்டுக்களுக்கும் நன்றி ராமலக்ஷ்மி
//குறை நிறைகள் எங்கும் உண்டு. குறைகள் நாம் எப்பெப்படி இருக்கக் கூடாது என உணர்த்துவதாயும், நிறைகள் ‘ஆகா இப்படி மாறிடலாமே’ என நினைக்கத் தூண்டுபவையாயும் இருந்தன.//
மிக சரியாக கூறினீர்கள். நல்லவற்றை நமக்கு தேர்வு செய்து விட்டு கெட்டதை விட்டுவிடுவோம்
உங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு இந்த தொடர் மட்டுமல்ல அனைத்திற்கும் மிக்க நன்றி
//ஜோ / Joe said…
நீங்கள் சொல்வது சரிதான் .99 வருடம் என்பது நீங்கள் வாங்குகின்ற வீட்டுக்கு உங்கள் அதிகாரத்தின் கால அளவு .அதாவது நீங்கள் வாங்கிய வீடு 99 வருடங்களுக்கு தான் உங்களுக்கு உரிமை ..ஆனால் 30 அல்லது 35 வருடங்களில் அதை இடிக்கும் போது அதன் மதிப்புக்கு இணையான வேறு வீடு உங்களுக்கு கொடுக்கப்படும்//
சரியாக புரிந்து கொண்டு தெளிவு படுத்தியமைக்கு நன்றி ஜோ. இந்த தகவல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு ஒரு சந்தேகம், அதன் பிறகு இந்த வீட்டின் அல்லது சொத்தின் உரிமை அரசுக்கே சேர்ந்து விடுமா? அப்படி என்றால் இது உரிமையாளருக்கு பெரும் நஷ்டம் தானே! அந்த சமயத்தில் (அதாவது 99 வருடத்திற்கு பிறகு)அவரிடம் பணம் இல்லை என்றால் அவர் எப்படி மறுபடியும் வீடு வாங்க முடியும்? உங்களுக்கு இது பற்றி தகவல் தெரிந்து இருந்தால் கூறவும் நன்றி.
//பரிசல்காரன் said…
கிரி…
ஒண்ணு சொல்லவா?
சிங்கப்பூர் பற்றிய இந்தப் தொடர்பதிவுக்காக நீங்கள் எவ்வளவு உழைத்திருக்கிறீர்கள் என்பது உங்கள் எழுத்தில், narrationல் தெரிகிறது! //
நன்றி பரிசல் ஐந்து இடுகைக்கும் சேர்த்து என்னை மொத்தமாக பாராட்டி விட்டீர்கள்
//திருப்பூர் வரும்போது இதற்காகவே எக்ஸ்ட்ரா கிஃப்ட் உங்களுக்கு உண்டு!//
பரிசல்காரன் போய் “பரிசுகாரன்” ஆகி விடுவீர்கள் போல் உள்ளதே :-))))
//சீரியஸா சொல்றேன் கிரி.. சூப்பர்ப்!//
உங்கள் மனம் திறந்த பாராட்டிற்கு நன்றி கே கே
Me the First ? :))
சிங்கையில் பிச்சைக்காரர்கள் இல்லை என்று நினைத்து இருந்தேன், இங்கேயும் இருக்கிறார்கள், ஊனமுற்றவர்கள் என்றால் வசூல் அதிகமாக இருக்கும்.
இவர்களுக்கு “Buskers” என்று பெயர். லைசென்ஸ் உள்ள பிச்சைக்காரர்கள்.. சிங்கையில் பிச்சை எடுக்க போலீஸ் லைசென்ஸ் வாங்க வேண்டும். தேக்கா ஏரியா வில் சில விதி மீறல்களும் உண்டு.. மற்றபடி இவர்கள் “ஏதாவது” செய்து மகிழ்வித்து..பிச்சை கேட்கவேண்டும் என்ற ரூல்ஸ் ம் உண்டு.. (பாட்டு பாடுதல், இசைக்கருவி இசைத்தல், சில்லறை அயிட்டம் விற்றல்..) இதில் ஏதும் முடியவில்லை என்றால் கை ஏந்தி பிச்சை எடுக்கலாம்.. இவர்களும் விலை உயர்ந்த மொபைல் போன் வைத்திருக்கிறார்கள்.. .. !!!!
சிங்கைக்கு வராதவர்களுக்கு பயன்படும் அருமையான தகவல்கள் .மொத்தத்தில் அருமையான தொடர் .உங்கள் எளிமையான நடைக்கு பாராட்டுக்கள் .
நீங்கள் பார்த்ததை உள்ளது உள்ளபடி மிகைப்படாமல் எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள். ஆனால் சிங்கப்பூர் எவ்வாறு இந்த அற்புத நிலையை எட்டியது என்பது பற்றிய ஆழமான பார்வை இல்லை. ஒரு தேசத்தின் முன்னேற்றம் அதன் அரசியல்,பொருளாதார திட்டமிடலிலும் தங்கியுள்ளது.
கிரி,ஒரு நல்ல தொடரை முடித்திருக்கிறீர்கள்.சில மாற்றங்கள் உங்கள் கவனத்துக்கு…
உங்களுக்கு 1 வருடத்தில் ஒரு முறை கூட மின்சாரம் போகவில்லை,எனக்கு 13 வருடங்களில் ஒரே ஒரு முறைதான் கண்டேன்,அதுவும் முன்னறிவிப்புடன்.
மின் தூக்கி -சிறுநீர் பிரச்சனைக்கு கேமிரா வைத்து சிலருக்கு தண்டனை கொடுத்துள்ளார்கள்.பல பெரிசுகள் தான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.
கேஸ் தோம்பு (சிலிண்டரை) இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்,கொடுக்கும் போது அட்வான்ஸோட வாங்கிக்கொள்வார்கள் ஆனால் திரும்ப நீங்கள் ஒப்படைக்கும் போது வெறும் 5 வெள்ளி தான் கிடைக்கும்.:-)
தண்ணீர் பணம் கட்டவில்லை என்றால் இரண்டாம் தடவைக்காக தண்ணீர் மெலிதாக வரும்,ஆதாவது குடிக்கமட்டும் பிடித்துகொள்ள உதவும்.எவ்வளவு நூதனமாக ஞாபகப்படுத்துகிறார்கள் பாருங்கள்.
வீடமைப்பு பேட்டையில் எந்த ஒரு இனமும் அதிகமாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தேசிய விகிதத்தில் பகிர்ந்துகொடுத்து மத நல்லினக்கத்தை அங்கே கொண்டுவந்துவிடுகிறார்கள்.சகிப்புதண்மையும் கூடவே வந்துவிடும். நல்ல முறை/அமைப்பு.
கட்டுமானத்துறை வேலையிடத்தில் நுழைந்துவிட்டு வெளியேரும் வாகனங்களுக்கு அதன் சக்கரங்களை கழுவவேண்டியது அத்தியாவசியம் அப்படி பண்ணாவிட்டால் தண்டனை உண்டு.வேலை ஆரம்பிக்கும் முன்பே இதற்கு ஒரு தொட்டி கட்டி ஒரு பம்பையும் வைத்துவிடுவார்கள்.அதைவிடுங்க,இன்னொரு சட்டம் 2 வருடங்களுக்கு முன்பு வந்ததாக ஞாபகம்,வேலையிடத்தில் இருந்து வெளியேறும் நீரில் மண்கசடு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்ககூடாது என்று.
இது எப்படியிருக்கு??ஏனென்றால் சிஙக்ப்பூரில் விழும் மழை நீரை ஓரிடத்தில் சேர்த்து குடிநீராக மாற்றுகிறார்கள்.
வாழ்த்துக்கள் கிரி!
கலக்கல் தொடர்.. நிறைவு பகுதி என்றாலும் நிறைவா சொல்லியிருக்கிங்க..
ஆனா நீங்க என்னதான் சொன்னாலும் எனக்கு ஏனோ அந்த நாடு பிடிக்கலை..பிடிக்கலை..பிடிக்கலை..
//99 வருடங்கள் ரொம்ப அதிகமாக தோன்றுகிறது. என்னுடைய நண்பர் ஒருவர் இருந்த குடியிருப்பு 30 வருடங்கள் ஆனதால் அதை இடிப்பதால் காலி பண்ண கூறினார்கள் என்று கூறினார். //
நீங்கள் சொல்வது சரிதான் .99 வருடம் என்பது நீங்கள் வாங்குகின்ற வீட்டுக்கு உங்கள் அதிகாரத்தின் கால அளவு .அதாவது நீங்கள் வாங்கிய வீடு 99 வருடங்களுக்கு தான் உங்களுக்கு உரிமை ..ஆனால் 30 அல்லது 35 வருடங்களில் அதை இடிக்கும் போது அதன் மதிப்புக்கு இணையான வேறு வீடு உங்களுக்கு கொடுக்கப்படும் .
கிரி…
ஒண்ணு சொல்லவா?
சிங்கப்பூர் பற்றிய இந்தப் தொடர்பதிவுக்காக நீங்கள் எவ்வளவு உழைத்திருக்கிறீர்கள் என்பது உங்கள் எழுத்தில், narrationல் தெரிகிறது!
திருப்பூர் வரும்போது இதற்காகவே எக்ஸ்ட்ரா கிஃப்ட் உங்களுக்கு உண்டு!
சீரியஸா சொல்றேன் கிரி.. சூப்பர்ப்!
//முரளிகண்ணன் said…
அருமையான முத்தாய்ப்பு//
நன்றி முரளிக்கண்ணன் உங்களின் தொடர்ச்சியான வருகைக்கும் சேர்த்து 🙂
//ஜோ / Joe said…
கிரி,
நடைமுறையில் ஒரே வீட்டை 99 வருடத்துக்கு யாரும் வைத்துக் கொள்ளப் போவதில்லை//
நியாயமான வாதம்
//அதன் அர்த்தம் நீங்கள் வீட்டை வாங்கி விட்டதால் அது தலைமுறை தலைமுறையாக உங்களுக்கு சொந்தம் என்றாகி விடாது என்ற புரிந்துணர்வுக்காகவே //
அப்படியா! இது எனக்கு புதிய தகவல். நம்ம ஊரில் நமக்கே சொந்தம் அதன் மீது நமக்கு உரிமை இருக்கும் வரை அதனாலே கேட்டேன்.
//நீங்கள் கேட்கும் கேள்வி சற்று வித்தியாசமானது .இது குறித்து விசாரிக்கிறேன்//
நன்றி ஜோ. நீங்கள் இது பற்றி கூறியதை கேட்கும் போது இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை எனக்கு ஏற்படுத்தி விட்டது. நான் எதுவும் வாங்க போவதில்லை, தெரிந்து கொள்ளவே :-)))))
உங்கள் விளக்கத்திற்கு நன்றி
//கலையரசன் said…
நீங்கள் பார்த்ததை உள்ளது உள்ளபடி மிகைப்படாமல் எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.//
நன்றி கலையரசன்
//சிங்கப்பூர் எவ்வாறு இந்த அற்புத நிலையை எட்டியது என்பது பற்றிய ஆழமான பார்வை இல்லை. ஒரு தேசத்தின் முன்னேற்றம் அதன் அரசியல்,பொருளாதார திட்டமிடலிலும் தங்கியுள்ளது.//
நீங்கள் கூறுவது சரி தான் என்றாலும் எனக்கு இது பற்றிய சரியான தகவல்கள் தெரியாது, அதனாலேயே நாம் நடைமுறையில் சந்திக்கும் பிரச்சனைகள், தேவைகள் பற்றி மட்டுமே குறிப்பிட்டேன். தெரியாத ஒன்றை பற்றி எழுத விருப்பமில்லை. உங்களுக்கு தெரிந்தால் ஒரு பதிவாக போடுங்கள், தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவு என்றில்லாமல் என்னுடைய பல பதிவுகளில் அவ்வப்போது வந்து கருத்து சொல்லும் உங்களுக்கு என் நன்றிகள் கலையரசன்
//Bleachingpowder said…
அந்த தழும்ப மறைக்க தான் உள்ள வெளியேனு நாலஞ்சு சட்டை போட்டு போட்டோ எடுத்திருக்காரு//
ஹா ஹா ஹா ஹா எனக்கு அது தான் சந்தேகமா இருக்கு, அதுவும் மூன்று “பிடிக்கலை” சொல்லிட்டாரு சம்திங் ராங் ஹா ஹா ஹா. குறிப்பா கேலாங் பற்றி நீங்க சரியா கூறவில்லைனு ரொம்ப வருத்தப்பட்டாரு .. கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு தப்பு தப்பா வருது :-))))))))
//ரொம்ப நல்லா இருந்தது அனைத்து பகுதிகளும். வாழ்த்துக்கள்.//
நன்றிங்க ப்ளீசிங் பௌடர்
//Senthil Kumar said…
கிரி அண்ணே, சிங்கப்பூர் பற்றிய பாகங்களையும் படித்தேன். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கிரி எங்கு போனாலும் நன்றாக ஊர் சுற்றி பார்பார். அருமையாக இருந்தது//
வாய்யா செந்தில்! ரொம்ப எல்லாம் எங்கேயும் சுத்தவில்லை ..போன கொஞ்ச இடத்தை தான் இப்படி பிரித்து பிரித்து கூறி இருக்கிறேன் :-)))))
//ஸ்நொவ் சிட்டி , சயின்ஸ் சென்டர் விடுடிங்க்லே.. சீகிரமாக முடித்து விடேர்கள். //
இங்கெல்லாம் நான் போனதே இல்லை 🙁 . ரொம்ப கூறினால் படிக்க யாரும் இருப்பார்களா என்று தெரியவில்லை. குறைவாகவும் கூறவில்லை அதேசமயம் அதிகமாகவும் கூறவில்லை. புதிதாக வருபவர்கள் இந்த பதிவுகளை படித்தாலே போதுமானது என்று கருதுகிறேன்
உன் வருகைக்கு நன்றி செந்தில்
திரும்ப வாய்ப்பு கிடைத்தால் அது பற்றி எழுதுகிறேன்
\\எந்த வித பிரச்சனையும், மன அழுத்தமும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை அமைதியாக வாழ விரும்புகிறவர்களுக்கு சிங்கப்பூர் 100% பொருத்தமான இடம் என்று நான் பரிந்துரைக்கிறேன் \\
அருமையான முத்தாய்ப்பு
//எனக்கு ஒரு சந்தேகம், அதன் பிறகு இந்த வீட்டின் அல்லது சொத்தின் உரிமை அரசுக்கே சேர்ந்து விடுமா? அப்படி என்றால் இது உரிமையாளருக்கு பெரும் நஷ்டம் தானே! அந்த சமயத்தில் (அதாவது 99 வருடத்திற்கு பிறகு)அவரிடம் பணம் இல்லை என்றால் அவர் எப்படி மறுபடியும் வீடு வாங்க முடியும்? உங்களுக்கு இது பற்றி தகவல் தெரிந்து இருந்தால் கூறவும் நன்றி.//
கிரி,
நடைமுறையில் ஒரே வீட்டை 99 வருடத்துக்கு யாரும் வைத்துக் கொள்ளப் போவதில்லை . சட்ட ரீதியாக நிலம் அரசாங்கத்துக்கே சொந்தம் என்பதால் 99 வருடம் lease-க்கு தான் வீட்டை தருகிறார்கள் .அதன் அர்த்தம் நீங்கள் வீட்டை வாங்கி விட்டதால் அது தலைமுறை தலைமுறையாக உங்களுக்கு சொந்தம் என்றாகி விடாது என்ற புரிந்துணர்வுக்காகவே .நீங்கள் இன்னொருவருக்கு அந்த வீட்டை விற்கும் போது மீண்டும் 99 வருடம் ஆரம்பிக்கும் . அதாவது 99 வருடத்துக்குள் அந்த வீட்டை நீங்கள் விற்றுக் கொள்ளலாம் .
ஆனாலும் நீங்கள் கேட்கும் கேள்வி சற்று வித்தியாசமானது .இது குறித்து விசாரிக்கிறேன் ..மேலும் கோவியார் போன்றவர்களுக்கு தெரிந்தால் சொல்கிறார்களா பார்ப்போம்.
//நீங்க என்னதான் சொன்னாலும் எனக்கு ஏனோ அந்த நாடு பிடிக்கலை..பிடிக்கலை..பிடிக்கலை..
//
அது ஒன்னுமில்ல கிரி, நம்ம கார்க்கி சிங்கையில ஒரு நாள் பைக்குல ஒவர் ஸ்பீடா போய் மாட்டிகிட்ட போது, திரும்பி நிக்கிறது பெண் போலீஸ்னு, தெரியாம விவேக் மாதிரி 20 வெள்ளியை சட்டை பையில் வைக்க பார்த்திருக்காங்க. அவங்க நடந்த கசாமுசால தழும்போட நம்ம ஊருக்கே வந்துட்டாங்க :))
அந்த தழும்ப மறைக்க தான் உள்ள வெளியேனு நாலஞ்சு சட்டை போட்டு போட்டோ எடுத்திருக்காரு.
ரொம்ப நல்லா இருந்தது அனைத்து பகுதிகளும். வாழ்த்துக்கள்.
கிரி அண்ணே, சிங்கப்பூர் பற்றிய பாகங்களையும் படித்தேன். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கிரி எங்கு போனாலும் நன்றாக ஊர் சுற்றி பார்பார். அருமையாக இருந்தது.
ஸ்நொவ் சிட்டி , சயின்ஸ் சென்டர் விடுடிங்க்லே.. சீகிரமாக முடித்து விடேர்கள்.
நன்றி
செந்தில்
நீங்க மிச்சம் வச்சுருக்க இடத்தை நான் அங்க வர்றப்ப ரெண்டு பேருமா சுத்திப் பார்த்துருவோம் 🙂
// புதுகை.அப்துல்லா said…
நீங்க மிச்சம் வச்சுருக்க இடத்தை நான் அங்க வர்றப்ப ரெண்டு பேருமா சுத்திப் பார்த்துருவோம் :)//
அப்பாடா! சுத்தறதுக்கு ஒரு ஆளு கிடைத்தாரு..
வாங்கோ வாங்கோ!
Good one.
நல்ல தகவல்கள் கிரி. முக்கியமாக தேர்ந்தெடுத்த படங்கள் மிக நன்றாக இருந்தன. சிங்கப்பூரில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள். கூடிய சீக்கிரம் வருவேன் என்று நினைக்கிறேன்….
//Later said…
Good one.//
நன்றி லேட்டர்
==========================================================================
//நான் ஆதவன் said…
நல்ல தகவல்கள் கிரி. முக்கியமாக தேர்ந்தெடுத்த படங்கள் மிக நன்றாக இருந்தன//
நன்றி ஆதவன்.
//சிங்கப்பூரில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள். கூடிய சீக்கிரம் வருவேன் என்று நினைக்கிறேன்//
அப்படியா! வாங்க வாங்க!! எங்க ஜோதியில ஐக்கியமாகுங்க :-))
ஆர்வமா கேட்டுட்டு இருந்தீங்களே! எங்கடா ஆளை காணோம் என்று பார்த்தேன்! வருகைக்கு நன்றி ஆதவன்
கட்டுரை மிக அருமை.மின்வெட்டில் வெந்து நொந்து போயிருக்கும் தமிழனுக்கு சிங்கபூரில் மின்சாரம் போவதே இல்லை என்று சொல்லியிருப்பது பொறாமை யாகத்தான் இருக்கிறது
10 வருடம் ஆன வீட்டை இன்னொருவர் வாங்கும்போது அவருக்கான உரிமை 89 வருடம் மட்டுமே.
சிங்கப்பூரின் முழுமையான வரலாற்றை ஓரளவு தெரிந்துகொள்ள் “The Singapore Story: Memoirs of Lee Kuan Yew ” உதவும்.
இன்னும் சில முக்கியமான தகவல்கள்:
– ஆடவர் அனைவரும் 18 வயதுக்கு மேல் கட்டாய இராணுவ பயிற்சிக்கு 2 வருடம் செல்ல வேண்டும். பெண்களுக்கு விதிவிலக்கு
– ஆண் வேற்று நாட்டு பெண்ணை மணந்து சிங்கப்பூருக்கு அழைத்து வரலாம். பெண்களுக்கு அந்த உரிமை இல்லை என நினைக்கிறேன்.
– செட்டியார்கள் சாதி சங்கம் வைத்திருக்கிறார்கள். டோபிகாட் சுப்பிரமனியர் ஆலயம் செட்டியார் சாதி சங்கத்து சொந்தமானது.
– நார்த் ப்ரிட்ஜ் ரோடு மாரியம்மன் ஆலயம் இலங்கை தமிழர்களுக்கு சொந்தமானது
– என்னைக் கவர்ந்தது ‘மன்மத காருனீஸ்வரர் ஆலயம்’. அதன் பின்னனியை பற்றி தெரிந்துகொள்ள ஆவல்.
– புக்கிட் பாத்தோக் இப்பொதெல்லாம் புக்கிட் பாரத்தாக மாறிக்கொண்டு உள்ளது. இங்கு இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் புதிதாக இந்தப் பகுதியில் வீடு வாங்க விரும்பும் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை.
————————–
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-’08)
// ப. சேர்முக பாண்டியன் said…
கட்டுரை மிக அருமை//
நன்றி சேர்முக பாண்டியன்
//மின்வெட்டில் வெந்து நொந்து போயிருக்கும் தமிழனுக்கு சிங்கபூரில் மின்சாரம் போவதே இல்லை என்று சொல்லியிருப்பது பொறாமை யாகத்தான் இருக்கிறது//
அரசியல்வாதிகள் சரியாக இருந்தார்கள் என்றால் நமக்கும் இதே போல மின்சாரம் கிடைக்கும், ஆனால் நமக்கு அது தான் பெரிய பிரச்சனை ஆச்சே. நம் நாடு வளத்தில் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல, இப்படி பட்ட ஆட்களால் தான் நமக்கு இவ்வாறு பிரச்சனைகள் வருகிறது.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி
//Tharuthalai said…
10 வருடம் ஆன வீட்டை இன்னொருவர் வாங்கும்போது அவருக்கான உரிமை 89 வருடம் மட்டுமே.
சிங்கப்பூரின் முழுமையான வரலாற்றை ஓரளவு தெரிந்துகொள்ள் “The Singapore Story: Memoirs of Lee Kuan Yew ” உதவும்//
தகவலுக்கு நன்றி
கிரி, ரொம்ப அருமையா எழுதுனீங்க, ஆனா சீக்கிரம் முடிச்சுட்டீங்க.
ஒரு தடவை என் வீட்ல திடீர்னு மின்சாரம் போயிடுச்சு, இராத்திரி நல்லா தூங்கிட்டு இருக்கப்ப இப்டி ஆயிடுச்சு. ஆகா , சிங்கப்பூர்லயும் மின்வெட்டான்னு யோசிச்சுகிட்டே எழுந்திருச்சு ஜன்னல் வழியா பார்த்தா மத்த இடங்கள்ல எல்லாம் மின்சாரம் இருந்துச்சு. அப்றம் தான் புரிஞ்சுச்சு, நம்ம வீட்ல மட்டும் ட்ரிப் ஆயிருக்குன்னு. என் வீட்ல தங்கியிருக்க நண்பர் ஏதோ ஆராய்சி செஞ்சுருக்காரு, அதான் ட்ரிப் ஆயிடுச்சு. சரி, ட்ரிப்பரை சரி செய்யலாம்னா கும் இருட்டு, அப்பத்தான் தெரிஞ்சுசு, நம்ம வீட்ல ஒரு டார்ச் லைட், மெழுகுதிரி இதுஎல்லாம் இல்லைன்னு. அப்றம் கஷ்டப்பட்டு செல்போன கண்டுபிடிச்சு, அதுல இருக்க லைட்ட போட்டு ட்ரிப்பை சரி செஞ்சேன்.
தண்ணீர், மின் கட்டணம் கட்டாதவர்கள் வீடுகளில் குழந்தைகளும், வயதானவர்களும் இருந்தால் அவர்களுக்காக மேலும் சில நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். முன்னரே அறிவிப்பு செய்துவிட்டு தான் இணைப்பை துண்டிப்பார்களாம்.
ஹெச் டி பி வீடு வாங்க பி.ஆர் ஆகவோ அல்லது குடிமக்களாகவோ இருக்க வேண்டும். குடிமக்கள் நேரடியாக அரசாங்கத்திடமிருந்து புது வீடுகளை வாங்கலாம். ஆனால் பி.ஆராக இருப்பவர்கள் கட்டி 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வீடுகளை மட்டுமே வாங்க முடியும். காண்டோ வீடுகளை ஈபியில் உள்ளவர்கள் கூட வாங்கலாம்.
தறுதலை,அட்டகாசகமான குறிப்புகள்…
நான் இந்திய நண்பர்களிடம் சொல்வதும் இதுதான்.
The Singapore Story’ உடன் லீ சீனியரின் From Third World to First இரண்டும் படித்தால் அரசியல் மற்றும் அரசான்மை பற்றிய சில குருட்டுப் பார்வைகள் மாறும்…
//ஜோசப் பால்ராஜ் said…
கிரி, ரொம்ப அருமையா எழுதுனீங்க, //
நன்றி ஜோசப் பால்ராஜ்
//ஆனா சீக்கிரம் முடிச்சுட்டீங்க.//
எனக்கு தெரிந்ததே அவ்வளோ தாங்க 🙁
//அப்றம் கஷ்டப்பட்டு செல்போன கண்டுபிடிச்சு, அதுல இருக்க லைட்ட போட்டு ட்ரிப்பை சரி செஞ்சேன்.//
ஹி ஹி ஹி நாம யாரு 🙂
உங்கள் தகவலுக்கு நன்றி. என்னடா! இது அனைத்து பதிவிக்கும் ஆர்வமாக வந்து கருத்து கூறினீர்களே இதற்க்கு ஆளையே காணோமே என்று பார்த்தேன். உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி ஜோசப் பால்ராஜ்.
கிரியாரே, (கிரியை மரியாதையாக குறிப்பிடுகிறேன்)அனைத்து பதிவுகளும் அருமை. அருமையான நடை. மற்றவர்கள் சொன்னது போல சீக்கிரமாக முடித்து விட்டீர்கள். சிங்கப்பூர் பற்றி நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன். நீங்கள் இதில் சொல்லாத விடயங்களை அப்புறமாக ஒரு பாலோ அப் பதிவாக போடலாம். உதாரணத்திற்கு 99 வருட குத்தகை பற்றி இன்னும் சரியாக புரிய வில்லை (புரிந்தால் 2-3 வீடுகள் சிங்கையில் வாங்கலாமென்று இருக்கிறேன் ஹிஹி).மொத்தத்தில் பிரமாதம்.
//மோகன் Mohan said…
கிரியாரே, (கிரியை மரியாதையாக குறிப்பிடுகிறேன்)//
அப்படியெல்லாம் கூப்பிட்டு என்னை வயதான ஆளா ஆக்கிடாதீங்க :-))
//அனைத்து பதிவுகளும் அருமை. அருமையான நடை. //
நன்றி மோகன்
//மற்றவர்கள் சொன்னது போல சீக்கிரமாக முடித்து விட்டீர்கள். //
ஓவர் டோஸ் ஆக போய் விட்டால் நன்றாக இருக்காதே என்று முடித்து விட்டேன்.
//சிங்கப்பூர் பற்றி நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன். நீங்கள் இதில் சொல்லாத விடயங்களை அப்புறமாக ஒரு பாலோ அப் பதிவாக போடலாம்//
முயற்சி செய்கிறேன்
//புரிந்தால் 2-3 வீடுகள் சிங்கையில் வாங்கலாமென்று இருக்கிறேன் ஹிஹி//
கலக்குங்க…
//மொத்தத்தில் பிரமாதம்.//
என்னுடைய அனைத்து பதிவிலும் கருத்துக்கள் கூறி உற்சாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
“மின்சாரம் தண்ணீர் குப்பை அள்ளுதல் அனைத்தும் SP services என்ற அமைப்பு தருகிறது “குப்பை அள்ளும் வேலைகளை செம்ப் வேஸ்ட் http://www.sembwaste.com என்னும் நிறுவனம் மேற்கொள்ளுகின்றது.
//சிங். செயகுமார். said…
குப்பை அள்ளும் வேலைகளை செம்ப் வேஸ்ட் http://www.sembwaste.com
என்னும் நிறுவனம் மேற்கொள்ளுகின்றது//
தகவலுக்கு நன்றி செயகுமார், ஆனால் பில் என்னவோ SP services பெயரில் தான் வருகிறது.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி
நண்பர் ராஜ் அவர்களே உங்கள் வலை பதிவை இன்றுதான் பார்த்தேன் மிக அருமை. சிங்கப்பூர் கட்டுரை புதிதாக செல்வர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.என்றும் உங்கள் நண்பன்ஆர். வடிவேலன்
//தகவலுக்கு நன்றி செயகுமார், ஆனால் பில் என்னவோ SP services பெயரில் தான் வருகிறது.//
முன்னர் அது PUB (Public Utility Board) ஆக இருந்தது.. இப்போது அது (SP Services – Singapore Public Utility Services) ஆக மாறி 4~5 ஆண்டுகள் ஆகி விட்டது..அதாவது காஸ், கரண்ட், வாட்டர் எல்லாம் ஒரே குடையின் கீழ்….முன்னர் எல்லாம் தனியாக இருந்தது..
//கீ – வென் said…
அதாவது காஸ், கரண்ட், வாட்டர் எல்லாம் ஒரே குடையின் கீழ்….முன்னர் எல்லாம் தனியாக இருந்தது..//
விளக்கத்திற்கு நன்றி வெங்கி
======================================================================
//வடிவேலன் .ஆர் said…
நண்பர் ராஜ் அவர்களே உங்கள் வலை பதிவை இன்றுதான் பார்த்தேன் மிக அருமை. சிங்கப்பூர் கட்டுரை புதிதாக செல்வர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.//
நன்றி வடிவேலன் உங்களின் முதல் வருகைக்கும் சேர்த்து
ரெம்ப அருமையா விளக்கி சிங்கப்பூர்ரை அதிகமாக தெரிந்து கொள்ள உதவியமைக்கு நன்றி
mr.giri,
One of my friend told that canning is the punishment given in singapore for Eve teasing (that too in butt). Is it true? have you seen that punishment?
This article was written before three years. In this three years do you come across new things?
I like to see Batu caves in malaysia and singapore in future (if i go foreign tour)
Rajesh.v
ராஜேஷ் ஈவ் டீசிங்கிற்கு இந்த தண்டனை உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை இருக்க வாய்ப்புண்டு.
இந்த தண்டனைகளை பொது மக்கள் பார்க்க முடியாது சவூதி போல. போலத்தான் இங்கேயும் கொடுக்கப்படுகிறது.
சிங்கப்பூர் மலேசியா இரண்டு நாடுமே நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும் தற்போது விமானக் கட்டணங்கள் குறைந்து விட்டது திட்டமிட்டு ஒரு முறை வந்து செல்லுங்கள்.
அருமையான தொடர். தொடர்ந்து குடும்பத்தோடு அனைத்து பாகங்களையும் வாய்விட்டுப் படிக்கச் சொல்லிக் கேட்டோம். என் மனைவி வாசிக்க குழந்தைகள் இருவரும், நானும் ஒரு மணி நேரத்தில் சிங்கையைப் பற்றித் தெரிந்துகொண்டோம்.
மிக்க நன்றி
Singapore Seeman, ungalukku thirumba Singapore poga viruppam irukka ?