“தளபதி” நினைவுகள் [1991]

35
Thalapathi

யக்குநர் மணிரத்னம் அவர்களிடம் பேட்டி எடுத்து இதுவரை நமக்குத் தெரியாத மணிரத்னம் கருத்துகளை நமக்குப் பரத்வாஜ் ரங்கன் தெரிவித்து இருந்தார்.

தலைவர் ரசிகனாகத் தளபதி குறித்து நிறையத் தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்று ஆர்வமாக இருந்தேன் ஆனால், அந்த அளவிற்கு இல்லை.

எனவே, தளபதி படம் குறித்துச் சில தகவல்களைப் பகிர வேண்டும் என்று விரும்பியதே இக்கட்டுரை.

Readமணிரத்னம் படைப்புகள் : ஓர் உரையாடல்

தளபதி படம் வெளியான போது நான் தலைவர் ரசிகன் அல்ல அதனால் படம் தொடர்பான சில நினைவுகளைத் தவிர எதுவுமே தெரியாது ஆனால், தற்போது தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

என் நினைவில் இருக்கும் சில தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

குறிப்பு: இக்கட்டுரை ரஜினி ரசிகர்களுக்கானது அதோடு “தளபதி” படத்தை ரசித்தவர்களுக்கானது. மற்றவர்கள் விருப்பம் இருந்தால் தொடரலாம்.

குனித்த புருவம்

பள்ளி மாணவர்கள் பலர் குறிப்பாகச் சுமாராகப் படிப்பவர்கள் அனைவருக்கும் இந்தப் படத்தில் வரும் “குனித்த புருவமும்” பாடல் ரொம்பப் பிடிக்கும்.

காரணம் “தமிழ்” பாடப் புத்தகத்திலும் இந்தப் பாடல் வந்தது அதோடு தேர்விலும் வந்ததால், பலரும் சரியாக எழுதி விட்டார்கள்.

இந்தப் பாடல் அனைத்து மாணவர்களுக்கும் மனப்பாடம் செய்ய எளிதாக அமைந்ததும் இது பற்றி அனைவரும் பேசிக்கொண்டு இருந்ததும் நன்றாக நினைவு இருக்கிறது.

நானும் தேர்வில் பிழையில்லாமல் எழுதினேன் 🙂 .

தற்போது போல DVD CD வெளியாகாமல், கேசட்டுகள் பிரபலமாக இருந்த காலம். “கோபி” முத்துசா வீதியில் என் அண்ணனின் (பெரியப்பா மகன்) கடை இருந்தது.

அதன் அருகே பல எலக்ட்ரானிக் கடைகளில் பெரும்பாலும் “ராக்கம்மா” பாடல் பாடிக் கொண்டே இருக்கும்.

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது அனைவருக்கும் தெரிந்த விசயம். எங்குச் சென்றாலும் தளபதி பாடல்களே!

தலைவருக்கும் நடனத்திற்கும் வெகு தூரம் என்றாலும் ஸ்டைல் என்ற ஒன்றின் மூலம் அனைவரையும் கவர்ந்து விடுவார்.

மற்ற திரைப்படங்களில் இருந்து முற்றிலும் வித்யாசமாக படமாக்கப்பட்ட விதமும் நடனமும் அனைவரையும் கவர்ந்ததில் ஆச்சர்யம் இல்லை.

இன்னொரு அண்ணன் கோபி பேருந்து நிலையம் அருகே மியூசிகல்ஸ் கடை வைத்து இருந்தார். அதில் பதிவு செய்ய ஏகப்பட்ட பேர் வந்தது நினைவில் உள்ளது.

அனைத்து கடைகளிலும் ராக்கம்மா, காட்டுக்குயிலு மற்றும் சுந்தரி பாடல்கள் தான் ஓடிக்கொண்டு இருக்கும்.

படம் எங்கே பார்த்தேன்?

இவையெல்லாம் நன்றாக நினைவு இருக்கிறது ஆனால், படம் எங்கே பார்த்தேன் என்று நினைவில்லை.

ஒரே ஒரு காட்சி மட்டும் நினைவு உள்ளது, உடன் என் அண்ணனும் இருந்தார் இதை அடிக்கடி கூறுவதால் இது மட்டும் நினைவில் இருக்கிறது.

கலிவரதன் “நான் யார் தெரியுமா?” என்று கேட்டதும் திரையரங்கில் ஒருவர் “மொட்டையன்’ என்று கிண்டலடித்தது மட்டுமே நினைவில் இருக்கிறது 🙂 .

தளபதி படம் தற்போது தொலைக்காட்சிகளில் பார்க்கும் போதெல்லாம் நானும் என் அண்ணனும் இந்தக் காட்சியையும், “தொட்ரா பார்க்கலாம்” காட்சியையும் நினைவு கூறி மகிழ்வோம்.

நான் பாட்ஷா பார்த்துத் தான் தலைவர் ரசிகன் ஆனதால், இதில் இருந்து தான் அனைத்தும் நினைவு இருக்கிறது.

உண்மையைக் கூறினால் பாட்ஷா படத்திற்குப் பிறகு தான் தளபதி படத்தைப் ரசித்துப் பார்த்தேன்.

ஒருவரை நமக்குப் பிடித்த பிறகு இதுவரை ரசிக்காத / அதிகம் ஈர்க்கப்படாத காட்சிகள் எல்லாம் அசத்தலாகத் தெரியும். அது போலானது தளபதி.

காலத்திற்கும் பெயர் கூறும் படம்

மணிரத்னம், தலைவர் ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான படத்தைக் காலத்திற்கும் பெயர் கூறும் படத்தைக் கொடுத்து இருக்கிறார்.

வழக்கமான தலைவர் படங்களில் இருந்து மாறுபட்ட படம் என்று கூறலாம்.

மாஸ்

இன்றும் “தொட்ரா பார்க்கலாம்..” என்று கிட்டியிடம் கூறும் வசனம் பலரிடையே பிரபலம்.

மாஸ் என்று கூறப்படும் மிரட்டலான காட்சி இது. இந்தக் காட்சியைத் தலைவரைத் தவிர எவர் செய்து இருந்தாலும், அது மிகை நடிப்பாகவோ அல்லது சாதாரணமான காட்சியாகவோ மாறி இருக்கும்.

இது போல நினைவு வைத்து அனைவரும் கூறும் காட்சியாக வந்து இருக்காது.

மணிரத்னம் அவர்கள் எப்படி இதைக் கற்பனை செய்தார்? நடைமுறையில் இது போல ஒரு ரவுடி கூற முடியுமா? அப்படிக் கூறுவது போல வைத்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? இதெல்லாம் எப்படி யோசித்தார் என்று யோசனையாக இருந்தது.

மணிரத்னம் பஞ்ச் வசனங்கள் வைப்பவர் போலவும் தெரியவில்லை ஆனால், “இது சூர்யா சார் உரசாதீங்க!” வசனம் எந்த மன நிலையில் வைத்து இருப்பார்?

இது பஞ்ச் வசனம் போலவும் இல்லை. இதை வேறு யார் கூறி இருந்தாலும் காலம் கடந்தும் பலருக்கு நினைவில் இருக்க வாய்ப்பே இல்லை.

இந்த வசனம் தலைவரால் பிரபலமானதா? அல்லது மணிரத்னம் சரியான நேரத்தில் சரியான நபருக்குக் கொடுத்ததால் பிரபலமாகியதா என்று குழப்பம் இருக்கிறது.

அரவிந்தசாமி

அரவிந்தசாமிக்கு இந்தப் படம் நடித்த போது 20 வயது தான் ஆகி இருந்தது என்று சமீபத்திய விகடன் பேட்டியில் கூறியிருந்தார்.

நான் கூட 25 க்கு மேல் இருக்கும் என்று நினைத்தேன். கலெக்டர் கதாப்பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்தார்.

நறுக் வசனங்கள்

தலைவர் தங்கள் தரப்பு நியாயத்தை நீட்டி முழக்கிக் கூறியதும் இறுதியாகப் “பேசி முடிச்சுட்டீங்களா?” என்று கேட்பார்.

இந்த ஒரு பதிலில் அவர்கள் அவ்வளவு பேசியதை ஒன்றுமில்லாமல் ஆக்கியதையும் இனி பேசுவது பயனில்லை என்றும் உணர்த்தி இருக்கும்.

மணிரத்னம் சுருக்கமாக வசனங்களை வைப்பார் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று தான். அவை தளபதி படத்தில் ஏகப்பட்டது இருக்கும்.

தலைவரை சிறையில் இருந்து விடுவிக்கும் போது

ஏன்?

தேவா

அம்ரிஷ் பூரி பேசும் போது (இந்த இடத்தில் வரும் பின்னணி இசை அசத்தல்)

அவன் கூட இருந்தால் அழிஞ்சு சாவ

உங்கூட வாழறதை விடத் தேவா கூடச் சாவது மேல்

நல்லா இரு

மம்முட்டி –> அரவிந்தசாமி

இப்ப உங்களுக்கு என்ன வேணும்?

எல்லாத்தையும் நிறுத்தனும்

முடியாது.

சாருஹாசன் கூறும்நான் செத்தப்புறம்

கலிவரதன் –> மம்முட்டி 

வயசாகுதுல்ல.. சாவுக்காக காத்துட்டு இருக்கிறேன்

யார் சாவுக்கு?

என்று கூற ஏகப்பட்ட வசனங்கள் இருக்கிறது.

இதெல்லாம் சிறிய வசனங்கள் என்றாலும், மிகவும் சக்தி வாய்ந்த வசனங்களாகவும் எளிதில் நினைவில் இருக்கும் வசனங்களாகவும் இருக்கிறது.

படத்திற்கு இரண்டு முடிவு

தளபதி படத்தைப் பற்றி அப்போது இருந்து தற்போது வரை தொடரும் ஒரு பேச்சு… படத்திற்கு இரண்டு முடிவு.

தமிழில் மம்முட்டி இறந்து விடுவார் மலையாளத்தில் ரஜினி இறந்து விடுவார் என்பது ஆனால், மணிரத்னம் அப்படி எதுவும் இல்லை என்று கூறி விட்டார்.

எப்படி நம்பிக்கைக்கு உரியவரானார்?

மம்முட்டி எப்படித் தலைவரை உடனே தன் தளபதியாக்கிக் கொள்கிறார் என்பது தான் புரியவில்லை.

இதற்குச் சரியான காரணம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை.

ஏற்கனவே பழைய ஆட்கள் பலர் இருக்க உடனே எப்படி இவர் நம்பிக்கைக்குரிய நபரானார் என்பது எனக்கு இருக்கும் சந்தேகம்.

ஸ்ரீவித்யா சிறு வயதில் எப்படி கர்ப்பமானார்? அதற்குக் காரணம் யார்? என்பதை மக்களே ஊகித்துக் கொள்ளட்டும் என்று விட்டதாக மணிரத்னம் குறிப்பிட்டு உள்ளார்.

இளையராஜா

இந்தப் படத்தில் சிறப்பாகக் கூற எத்தனையோ விசயங்கள் இருக்கிறது என்றாலும் அத்தனை விசயங்களும் பிரம்மாண்டமாகவும் ஒரு மாஸ் தோற்றத்தைக் கொடுத்ததற்கும் முக்கியக் காரணம் இளையராஜா என்றால் மிகையில்லை.

என்ன ஒரு அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை!! பின்னணி இசையைப் பற்றி மட்டுமே என்னால் ஒரு கட்டுரை எழுத முடியும்.

அந்த அளவிற்கு வரைமுறையில்லாமல் அசத்தல் இசை கொடுத்து இருக்கிறார். பின்னணி இசையைக் கேட்டாலே காட்சியைக் கூற முடியும்.

அந்த அளவிற்குப் பின்னணி இசை அனைவர் மனதிலும் இருக்கும். இதற்கு யாருடைய ரசிகராகவும் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

நான் கூறுவது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் ஆனால், உண்மை.

பாடலின் இசை கேட்டுக் கண் கலங்கினேன் என்றால் அது “சின்னத்தாயவள்” பாடலில் வரும் வயலின் இசை கேட்டுத் தான்.

இளையராஜா எத்தனையோ அற்புதமான இசையைப் பல்வேறு படங்களில் கொடுத்து இருக்கிறார் ஆனால், எனக்கு இந்த வயலின் இசையே உலுக்கியது.

உங்களுக்கு மனது வருத்தம் அல்லது சோகம் இருக்கும் நேரத்தில் இதைக் கேட்டுப் பாருங்கள் கலங்கி விடுவீர்கள்.

இவரெல்லாம் மனுசனே கிடையாது.

முதன் முதலாக மம்முட்டி தலைவரை ஒரு பாலத்தில் மழை பெய்து கொண்டு இருக்கும் நேரத்தில் மிரட்டும் போது வரும் பின்னணி இசையெல்லாம் கேட்டு ஒவ்வொரு முறையும் பிரம்மித்து இருக்கிறேன்.

இசையில் பிரம்மாண்டம் என்கிறார்களே அதைக் காண முடியும்.

அதாவது அந்தக் காட்சியை அடிதடி இல்லாமலேயே ஒரு படி மேலும் மிரட்டலாக கொண்டு வர உதவி இருப்பது பின்னணி இசை தான்.

காலத்தால் அழியாத பல பாடல்களை, பின்னணி இசையைக் கொடுத்த மணிரத்னம் இளையராஜா கூட்டணிக்கு  இதுவே கடைசிப் படமானது.

“ரோஜா” படத்தில் ரகுமான் அமைந்தது யதேச்சையானது என்று கூறி இருக்கிறார் ஆனால், நம்பத்தான் முடியலை.

மணிரத்னம் இளையராஜா இருவருக்கும் “ஜூன் 2” பிறந்த நாள் 🙂 .

ராக்கம்மா / சுந்தரி கண்ணால் ஒரு சேதி / காட்டுக்குயிலு

ராக்கம்மா பாடல் BBC உலகளவில் தேர்வு செய்த சிறந்த பாடல்களில் ஒன்றாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

“சுந்தரி கண்ணால் ஒரு சேதி” ஒரு காவியத்தையே படைத்து இருக்கும். இசையும் அதற்கேற்ப காட்சியமைப்பும் காவியமாக இருக்கும்.

இதில் தலைவர் தலைமுடியைக் கட்டி கொண்டை போலப் போட்டுக் கொண்டு வெற்று உடம்புடன் இருக்கும் காட்சி அசத்தலாகவும் புதுமையாகவும் இருக்கும்.

தலைவரை எப்போதும் ஒரே மாதிரியான ஒப்பனையிலேயே பார்த்த ரசிகர்களுக்கு இது மிக வித்யாசமாக இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தச் சமயத்தில் நான் தலைவர் ரசிகன் இல்லையென்பதால் இது குறித்து ரசிகர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்துத் தெரியவில்லை.

ராக்கம்மா பாடலை எட்டு இரவுகள் மகாபலிபுரம் மலையில் படப்பிடிப்பு நடத்தியதாக முன்பு படித்து இருக்கிறேன். இதில் நடித்தவர் இந்தி நடிகை சோனுவாலியா.

இவர் பெயர் ஏனோ எனக்கு இன்னும் மறக்கவில்லை.

“காட்டுக்குயிலு” பாடலில் இசையுலகின் ஜாம்பவான்களான SPB மற்றும் யேசுதாஸ் இருவரையும் பொருத்தமாகப் பாட வைத்தது இளையராஜாவின் சாதனை.

நடிகர்களில் இரு திறமையானவர்கள் ஒரு படத்தில் என்பது போல பாடகர்களில் இரு திறமையானவர்கள் ஒரு பாடலில்!

மலையாள நடிகர் மம்முட்டிக்கு பொருத்தமாக மலையாளப் பாடகர் யேசுதாஸ், ரஜினியே பாடுவது போல இருக்கும் குரலுக்கு வழக்கமான SPB.

இவையெல்லாம் அதுவா அமையனும்!

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு

“சின்னத்தாயவள்” இரண்டாவது பாடல் கோவிலில் வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் மிகச் சிறப்பாக இருக்கும்.

சந்தோஷ் சிவன் முதன் முறையாக மணிரத்னம் அவர்களுடன் இணைந்த படம். பலரும் PC ஸ்ரீராம் தான் ஒளிப்பதிவு என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள்.

ஒளிப்பதிவாளர் யாராக இருந்தாலும் மணிரத்னம் தன் தனித் தன்மையைக் காட்சிகளில் கொண்டு வந்து விடுகிறார்.

படத்தைப் பார்த்தாலே இது மணிரத்னம் படம் என்று அனைவரும் கூறும் படி காட்சியமைப்புகள் இருக்கும்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு “தளபதி” படத்தை எங்கேயோ கொண்டு சென்று இருக்கிறது. எத்தனை அழகான காட்சிகள்! மறக்க முடியுமா..!!

ஷோபனா

எனக்குக் கூற நிறைய இருக்கிறது என்றாலும் ஷோபனா தலைவர் குறித்து நான் மிகவும் ரசித்த இரு காட்சிகளைக் கூற விரும்புகிறேன்.

ஷோபனா அரவிந்தசாமியை திருமணம் செய்ய வேண்டியதாக தலைவரிடம் கூறியதும் தலைவர் கடுப்பாகித் திட்டி அனுப்பிய பிறகு மனசு கேட்காமல் திரும்பிப் பார்க்கும் காட்சி, காதலித்தவர்கள் ஒவ்வொருவருக்கும் வலி புரியும்.

இதே போல இறுதியில் அரவிந்தசாமியை காண வரும் தலைவர், ஷோபனாவைப் பார்த்து “நல்லா இருக்கியா?” என்று கேட்பதும் அதற்கு ஷோபனா பதில்களும் ரசனையான காட்சிகள்.

மம்முட்டி

பானுப்ரியா மம்முட்டியிடம் “உங்கள் ஆட்கள் என்னிடம் பணம் கொடுக்கும் வரும் போது தவறாக நடக்கிறார்கள் நாங்கள் ஊருக்கே போகிறோம்” என்று கூறுவார்.

அந்தக் காட்சியில் மம்முட்டியின் நடிப்பு தாறுமாறாக இருக்கும்.

உடனடி ஆத்திரம் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கும் அவரது உடல் மொழி, நடிப்பு என்று சொல்லவே முடியாதபடிக்கு உணர்ச்சிப் பிழம்பாக இருக்கும்.

இந்தக் காட்சி மட்டுமல்ல தலைவர், அரவிந்தசாமி அண்ணன் என்று தெரிந்ததும் ஒரு அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பார் அதுவும் இதே போல.

மம்முட்டி மிகச் சிறந்த தேர்வு. கம்பீரமான குரலும் இவரது கதாப்பாத்திரத்தை நியாயப்படுத்தியிருக்கும். இவரது குரல் Base குரல் போல இருக்கும்.

மம்முட்டி மலையாளத்தில் மிகப்பெரிய நடிகர். தலைவர் தமிழில் மிகப்பெரிய நடிகர்.

இருவரையும் இணைத்து சமமான அந்தஸ்தில் யார் நடிப்பு சிறந்தது என்ற கேள்விக்கே இடம் தராமல் இருவரையும் மிகச் சரியாக பயன்படுத்தி இருக்கும் மணிரத்னம் அவர்களின் திறமை மிரட்டுகிறது. இதெல்லாம் சாதாரணம் விசயமல்ல.

பிரபலமான இருவர்

சிறு காட்சியில் வந்து இன்னும் பலரின் நினைவுகளில் இருப்பவர்கள் இருவர்.

ஒருவர் அறிமுகச் சண்டைக் காட்சியில் வரும் சண்டை நடிகர் “தினேஷ்”, இதன் பிறகு “தளபதி தினேஷ்” என்று அழைக்கப்படுகிறார்.

பின்னர்ச் “சந்திரமுகி” படத்திற்குச் சண்டைக் காட்சியும் அமைத்தார்.

இன்னொருவர் “காட்டுக்குயிலே” பாடலில் வரும் ஷர்மிலி தனித்துத் தெரியப்பட்டு (அதற்கு அவரது முடி அலங்காரம் ஒரு காரணம்) பலரால் இன்றும் நினைவில் இருப்பவர். 

இது குறித்து சில வருடங்கள் முன்பு ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

தளபதி Font

தளபதி படத்தின் Font வித்யாசமாகக் கவர்ச்சிகரமாக வந்தது. இதற்கு முன் சில படங்கள் வந்து இருந்தாலும் “தளபதி” போல மனதில் நிற்கவில்லை.

இன்னொன்று என்றால், விக்ரம் பட Digital font கூற முடியும்.

இது குறித்து மணிரத்னம் குறிப்பிடும் போது

அப்போது இதெல்லாம் புதிதாக இருந்தாலும் தற்போது இவற்றை வடிவமைக்கவே பல நிறுவனங்கள் வந்து விட்டன, அவர்களிடம் கூறி விட்டால் நம் விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைத்துக் கொடுத்து விடுவார்கள்” என்று கூறி இருக்கிறார்.

தனித்துவமான நடிப்பைப் பெற்ற மணிரத்னம்

“கோச்சடையான்” பேட்டியில் (இது எனக்குப் பிடிக்காத ஒரு பேட்டி கூட, விவேக் ரொம்பப் பில்டப் செய்து ரசிகனுக்கே யப்பா போதும் என்கிற அளவிற்கு ஆனது) மணிரத்னம் தன்னிடம் வேலை வாங்கியதை தலைவர் குறிப்பிட்டு இருந்தார்.

அதில் கோபப்படும் போது அதை நினைங்க இதை நினைங்க என்று கூறினார்.. கோபப்படுறதுக்கு எதுக்குயா இதெல்லாம் நினைக்கணும்..!

அடிப்படையில் நான் சிறந்த நடிகன் இல்லை.. அதனால் அப்படியே உள்வாங்கி நடிப்பதெல்லாம் எனக்குத் தெரியாது, அப்படி நடித்ததும் இல்லை

என்று கூறினார்.

ஆனால், இறுதியில் தன் வழக்கமான நடிப்பை விட்டு அவர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதைச் செய்வதாகக் கூறி அதன் படி நடித்து இருக்கிறார்.

இதுவே இன்றும் தலைவரை மற்ற படங்களில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டி இருக்கிறது என்று நம்புகிறேன்.

ஒரு அணைப்பகுதி படப்பிடிப்பில் அனைவரும் தயாராக இருக்க, தனக்கு தற்போது நடிக்கும் மனநிலை இல்லையென்று கூறி படப்பிடிப்பை ரஜினி ரத்து செய்து விட்டார் ஆனால், அடுத்த நாள் ஒரே டேக்கில் இந்தக் காட்சியை நடித்துக் கொடுத்தார்

என்று மணிரத்னம் குறிப்பிட்டு இருக்கிறார்.

மணிரத்னம் தலைவரின் நடிப்பிற்கு Benchmark ஆக வைத்து இருந்தது “முள்ளும் மலரும்” படத்தைத்தான்.

இதை மனதில் வைத்தே “தளபதி” காட்சிகளை அமைத்ததாகக் கூறியிருக்கிறார்.

அதோடு அப்போது இவருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியதில் “முள்ளும் மலரும்” (இயல்பான காட்சியமைப்புகள்) முக்கியப் பங்கு வகித்து இருக்கிறது.

இறுதியில் தலைவருக்குக் குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையென்று விடுதலை செய்யப்படும் காட்சி சினிமாத்தனமாக இருக்கிறது என்று விமர்சிக்கப்பட்டது என்று அரைகுறையாக நினைவு இருக்கிறது.

படம் எப்படித் தொடங்கியது?

மணிரத்னத்தின் அண்ணன் GV தலைவருக்கு நெருக்கம் என்பதால், தலைவர் தான், வெங்கடேஷ் மூலம் மணிரத்னம் அவர்களை அணுகி படம் செய்யலாம் என்று கேட்டு இருக்கிறார்.

தலைவருடன் படம் என்று முடிவாகியதும் கதை பிரம்மாண்டமாகவும் அதே சமயம் தன் படமாகவும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து துரியோதனன் / கர்ணன் கதையான மகாபாரதத்தில் மாற்றங்கள் செய்து கதை உருவாக்கியிருக்கிறார்.

இக்கதையைக் கூறியதும் தலைவர் ஏற்றுக் கொண்டு மம்முட்டி கதாப்பாத்திரத்திற்கு சக்தி வாய்ந்த நடிகரை போடலாம் என்று பரிந்துரைத்து இருக்கிறார்.

அப்படி இருந்தால் தான் படம் நன்றாக இருக்கும் என்று கூறியதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதில் மணிரத்னம் கூறும் ஒரு கருத்து குறிப்பிடத்தக்கது.

“ஒரு நடிகராக அவருக்குத் தன் திறமை மீது முழு நம்பிக்கை இருந்தது.

அவருக்குக் கதையின் கருவும் கதாப்பாத்திரமும் பிடித்து விட்டால் வேறு எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ள மாட்டார்.”

தலைவருக்கு எப்போதுமே தன் மீது நம்பிக்கை இருக்கிறது. எனவே தான் வில்லன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருப்பார்.

வில்லன் சக்தி வாய்ந்தவராக இருந்தால் மட்டுமே கதாநாயகன் கதாப்பாத்திரம் எடுபடும். இதை நன்றாக உணர்ந்து இருக்கிறார்.

எனவே, தலைவருக்கு இணையான பலம் உள்ள மம்முட்டி கதாப்பாத்திரத்தை நினைத்துப் பயக்கவில்லை.

பாட்ஷா” இன்றளவும் அனைவராலும் ரசிக்கப்பட முக்கியக் காரணங்களுள் ஒருவர் ரகுவரன். எவராலும் மறுக்க முடியாது.

இன்றளவும் இருக்கும் ஏக்கம் எந்திரனில் “ரகுவரன்” நடிக்கவில்லையே! என்பது. இந்த சமயத்தில் காலமாகி விட்டார் 🙁 .

“சிவாஜி” கவுரவத் தோற்றமே கடைசித் தலைவர் படம்.

வலிக்கும் வார்த்தைகள்

தளபதி படத்தில் சுருக்குனு தைக்கும் வார்த்தைகள் உண்டு.

தலைவர் அரவிந்தசாமியிடம் பேசும் போது உங்க கூடப்பிறந்த அண்ணன் சொல்வதா நினைத்துக்குங்க என்றவுடன் “உன்னை மாதிரி ஒரு அண்ணன் எனக்குப் பிறந்து இருந்தால், உன்னை அப்பவே விட்டெரிஞ்சு இருப்பாங்க” என்று கூறுவார்.

கரக்ட் சார்… கரக்ட் என்று கூறும் காட்சி உண்மையிலே அந்த நிலையில் இருந்தால் ஒருவருக்கு எப்படி இருக்கும் என்று நினைக்க வைக்கும் காட்சி.

ஏற்கனவே மனதளவில் அனைத்தையும் இழந்த ஒருவனை அறியாமலே மேலும் குத்திக் கிழிக்கும் வார்த்தை.

பொருத்தமான இடத்தில் வைக்கப்பட்ட வசனம். இதை விடச் சரியாக இந்த வசனத்தை வேறு எங்குமே பயன்படுத்தி இருக்க முடியாது.

இதே போலத் துவக்கத்தில் கிராமத்தில் போர் போட்டுத் தண்ணீர் வந்தவுடன் “தப்பு பண்ணிட்டியேம்மா! ஒரு மகனோடு நிறுத்திட்டியேம்மா” என்று கூறும் போது ஒரு தாயின் நிலையில் “ஸ்ரீவித்யா” நிலை பரிதாபமானது.

அரவிந்தசாமி கேட்டதுக்கு எந்த விதத்திலும் குறைவானது அல்ல ஆனால், இரு காட்சிகளிலும்  பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அந்த வலி தெரியும்.

The Legend

25+ வருடங்கள்

படம் வெளியாகி 25+ வருடங்களாகிறது.

இத்தனை வருடங்களில் எத்தனையோ முறை இப்படத்தைப் பார்த்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றைக் கண்டு ஆச்சர்யப்படலாம்  ஆனால், முதல் முறை இத்தனை விசயங்களை எப்படி யோசித்து எடுத்து இருக்க முடியும்?

இதெல்லாம் யோசித்து வைக்கப்பட்டதா? எதிர்பாராமல் க்ளிக் ஆகியதா? உண்மையில் இது போல ஏகப்பட்ட கேள்விகள் என்னிடம் உள்ளது.

ஆனால், புத்தகத்தில் கதை / தொழில்நுட்பத் தகவல்களே தளபதி படத்திற்கு அதிகம் கேட்கப்பட்டு இருந்தது.

நான் அதிகம் எதிர்பார்த்தது இது போன்ற உணர்வுப் பூர்வமான காட்சிகளும், வசனங்களும், மிரட்டிய பின்னணி இசை பற்றியும் தான்.

சில இடங்களில் இவரின் கேள்விகளுக்கு (மசாலா படம்) மணிரத்னம் கோபம் அடைந்து பதில் கூறியிருக்கிறார்.

அனைவரின் எதிர்பார்ப்பையும் ஒருவரால் நிறைவேற்ற முடியாது ஆனால், பல வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்.

இனி எப்போது “தளபதி” பற்றிப் பேசப் போகிறார்?! என்ற ஆதங்கமே கூற வருவது.

கட்டுரையை முடிக்க மனமில்லாமல் முடிக்கிறேன்.

கொசுறு 1

இப்புத்தகத்தில் இன்னும் தளபதி குறித்து எதிர்பார்த்தேன் அவை இல்லாததால் என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை எழுதலாம் என்று தான் இதை ஆரம்பித்தேன் ஆனால், சத்தியமாக இவ்வளோ எழுதுவேன் என்று நினைக்கவில்லை.

கூற நினைத்ததில் 30% தான் கூறி இருப்பதாகக் கருதுகிறேன். எனக்குள்ளே “தளபதி” குறித்து இத்தனை செய்திகள் இருப்பதே எனக்கே தற்போது தான் தெரியும்.

கொசுறு 2

தளபதி குறித்த உங்களுடைய அனுபவங்கள் / தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

Read: தலைவர் ரஜினி

கொசுறு 4

விரைவில் “முள்ளும் மலரும்” படத்தின் விமர்சனம் எழுதுகிறேன்.

பிற்சேர்க்கை – முள்ளும் மலரும் [1978]

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

35 COMMENTS

  1. அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்

    நான் 7ஆம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன் அப்போதிருந்தே ரஜினி சார் ரசிகன் தான்

    முதல் நாள் பார்க்கும் சந்தர்பம் அமையவில்லை காரணம் வயது
    ஆனாலும் அந்த நேரம் எங்களுடைய பேச்சு தளபதி பற்றியதுதான்

    சில / பல நாட்கள் கழித்து படம் பார்த்த போது ( குறிப்பாக டிக்கெட் வாங்கிய போது ) கிடைத்த சந்தோசம் மறக்க முடியாத நினைவுகள்

    போலீஸ் ஸ்டேஷன் இல் புகுந்து …. போறவழியில் லத்தியை எடுத்து கதவை பூட்டி தால்பாளில் மாடி போலீஸ் ஐ போட்டு புரட்டி எடுக்கிற சீன் …..

    “இது சூர்யா சார் உரசாதீங்க!” ரஜினி சார் பேசுனதால்தான் அது பஞ்ச் இல்லனா கடந்து / மறந்து போகக்கூடிய ஒரு வசனம்.

    என்ன ஒரு வருத்தம்னா மம்மூட்டி சேட்டன தான் கொஞ்சம் அதிகமா திட்டிவிட்டோம் அந்த முதல் சந்திப்பில் ” சூர்யா இருக்கமாட்டான் ” னு சொன்னதற்காக

    திரும்பி பார்க்கிற அந்த ஸ்டில் மீண்டும் ரஜினி சாரே கொடுக்கமுடியுமானு சந்தேகம்
    என்ன ஒரு பார்வை….

    மைதீன்

  2. ஹாய் கிரி

    அருமையான விமர்சனம்.

    துரியோதனன் / கர்ணன் கதையான மகாபாரதத்தில் கர்ணன் தான் முதலில் சாவார் ஆனால் திரைபடத்தில் கர்ணன் சாவதே இல்லை (தமிழும்/மலையாளத்திலும்) இரண்டிலும் மம்முட்டி தான் சாவர். இதுவே தலைவரின் ரசிகர்களுக்கு பெருமை
    மலையாளத்திலும் தலைவர் ரசிகர்கள் அதிகம் அதனால் தான் மகாபாரதத்தில் முடிவில் மாற்றம் செய்யப்பட்டது.

    முடிவில் மாற்றம் செய்ய படாமல் இருந்தால் படம் தோல்வி அடைய கூட வைப்பு அதிகம்

    “முள்ளும் மலரும்” படத்தின் விமர்சனதிற்காக காத்திருகிறேன்.

  3. பழைய நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். கலிவரதனோட முதல் டயலாக் கொஞ்சம் கொர கொரா வாய்சில் “என்ன பாத்து ரொம்ப நாள் ஆச்சு “ என்பார். அதற்கு என் நண்பன் சத்தமாக “ என்ன பாத்ரூம் போய் நாளாச்சா” என்று கேட்க தியேட்டரே வெடித்துச் சிரித்தது.

  4. பிண்ணிட்டீங்க ஜி… தலைவர் தலைவர் தான்…

    என்றென்றும் தலைவர் வழியில்
    உதய் ஜி

  5. மணிரத்னமும் இளையராஜாவும் இணைந்த கடைசி படம் அஞ்சலி.

  6. இப்ப எல்லோரும் தளபதி படம் சூப்பர் என்று
    சொல்கிறார்கள், அது உண்மை தான் அனால் அது ரஜினியின் c சென்டர் ரசிகனுக்கு ஏற்ற படம் இல்லை, வசூலும் நார்மல் தான். அனால் இதற்கு அப்புறம் வந்த மன்னன் படம்
    தான் a b c என எல்லா சென்டர்களிலும் சக்கை போடு போட்டது, வசூலும் அள்ளியது தளபதியை விட என்பது தான் உண்மை.

  7. அருமையான கட்டுரை.
    தளபதியுடன் குணா படமும் ரீலீஸ் ஆனது இன்னும் என் நினைவில் உள்ளது. குணா தோல்வி அடைய வேண்டி கடவுளை கும்பிட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது. குணாவை கம்பேர் செய்தால் தளபதி மாபெரும் வெற்றி தான் 🙂

  8. அப்படியே படத்த திருப்பி பின்னணி இசையோட பார்த்த உணர்வ உங்க பதிவு தந்துச்சு.. சூப்பர்ங்க….

  9. அந்தக் காலத்துலேயே முதல் ஷோ டிக்கெட் 200 ரூபாய் மதுரையில்.. அதுவும் ஏக கிராக்கி.. ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். ஏனென்றால் அப்பொழுதெல்லாம் ஒரு திரைப்படம் ஒரு ஊருக்கு ஒரு திரையரங்கில் தான் வெளியாகும்.

  10. நிச்சயம் ரஜினி சார் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த பதிவாக இதை நான் கருதுகிறேன். தளபதி படம் வெளிவந்த போது நான் சின்ன பையன். படம் வெளியாகி பத்து வருடங்களுக்கு பின் தான் படம் பார்த்தேன்..

    ரஜினி சாருக்கு ஒரு மிக சிறந்த வெற்றி படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. இது போல ஒரு பெரிய வெற்றி படம் கொடுத்து விட்டு பின்பு ஏன் மீண்டும் இந்த கூட்டணி இணையவில்லை என்பது புரியாத புதிர்.

    இசைக்கு ராஜா : – நாம் குப்பை படம் என்று கருதும் பல படங்களை 3/4 முறை படத்தை திரும்ப பார்த்து “தன்னுடைய இசையை கொண்டு” படத்தை எப்படியாவது ரசிக்குமாறு முயற்சி செய்த (செய்யும்) எங்கள் ராஜாவின் தொழில் பக்தியை என்னவென்று கூற!!!!

    ராட்டினம் எவ்வளவுதான் சுற்றினாலும் அதனுடைய நடுக்கம்பு அச்சை விட்டு அகலுவதில்லை. நான் எங்கேயெங்கே போய் அலைந்தாலும், திரிந்தாலும் என் இதயத்தில் இளையராஜாவின் இசை ஒரு நாளும் ஒலிக்காமல் இருப்பதில்லை…

    மரியாதை (கொசுறு 3) : – (இதில் நான் “ரஜினி” என்று கூறாமல் “தலைவர்” என்று தான் கூறி இருப்பேன்). இயக்குனர் பாக்யராஜ் சார், ஆரம்ப காலங்களில் பாரதியராஜா சார் அவரிடம் தான் உதவியாளராக பணிபுரிந்தார்.

    ஆனால் இன்று வரை எங்குமே “பாரதிராஜா ” என்று பெயரிட்டு அழைத்ததில்லை. “எங்க டைரக்டர்” என்று மட்டுமே அழைப்பார்.. என்ன ஒரு குரு மரியாதை.

    (இந்த பணிவை நான் உங்களிடம் பார்க்கிறேன்..) பணிவை, மரியாதையை குழந்தைகளுக்கு கற்று கொடுக்காமல் நாம் வாழ்ந்து காட்டிவிடலாமே!!!! பகிர்வுக்கு நன்றி கிரி.

  11. உங்க பதிவ படிச்சப்புறம்…இப்பவே ஒரு HD பிரிண்ட்ட, டவுன்லோட் பண்ணி, full sound லையோ, இல்ல headset use பண்ணியோ “தளபதி ” படத்த பார்த்திடனும் போல இருக்கு

    அப்படி தூண்டி விட்டீங்க !!!

    தளபதி படம் One of the Masterpiece என்பதில் துளியும் சந்தேகமில்லை!!!

    அருமையான பதிவு!! நன்றி !!!

  12. தளபதி சில நினைவுகள்:

    “ஏ, பி” யைவிட “சி”யில் சுமாராகவே ஓடியது. நான் இரண்டு முறை பார்த்தேன். முதல் முறை சி – சென்டரான இராஜபாளையத்தில்.. இங்கு படம் சரியாக ஓடவில்லை. இரண்டாம் முறை அரையாண்டு விடுமுறையில் பி – சென்டரான ஈரோட்டில் [அபிராமி தியேட்டரில்] இங்கு படத்தை வெகுவாக கொண்டாடினார்கள்.

    குனித்த புருவம் பாடலை நடத்திவிட்டு எங்கள் தமிழாசிரியர், “இந்த பாட்டுக்கு டெஸ்ட் வச்சி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை எல்லோரும் பிழையில்லாமல் எழுதிவிடீர்கள்” என்றார். எங்களின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கேட்டார்கள். “ரா ரா சரசக்கு ரா ரா” பாடலை மனப்பாடம் செய்த தமிழர்களுக்கு தேவாரம் திருவாசகம் எல்லாம் எம்மாத்திரம். இசையின் மகிமையை உணர்த்தும் விஷயம்.

    ரஜினி என்றுமே டைரக்டர்களின் நடிகர் என்பதை வலுவாக உணர்த்தியபடம் தளபதி. டைரக்டர்களுக்கு என்ன தேவையோ அதை அவர்கள் விருப்பத்திற்கு சரியாக கொடுக்கும் சிறந்த நடிகர். கூர்ந்து கவனித்தால் சிவாஜி எந்திரனில் ரஜினியை மீறி டைரக்டர் ஷங்கர் ரஜினியின் நடிப்பில் தெரிவார். பழைய படத்தில் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் “நல்லவனுக்கு நல்லவன்”. முதல் பாதி எஸ்.பி.எம் படம். பின் பாதி விசு படம் [ இந்த படத்திற்கு விசு-திரைக்கதை வசனம்]. இப்போது பார்த்தாலும் ரஜினியை மீறி விசு ரஜினியின் நடிப்பில் தெரிவார் [ நேரம் இருந்தால் பார்க்கவும்].

    பானுப்பிரியா உச்சத்தில் இருந்த நேரம். இந்த படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் பெரும் சரிவை சந்தித்தது. இது பற்றி பானுப்பிரியா ஒரு பேட்டியில், “ ரஜினிக்கு ஜோடி என்று கூரிவிட்டு யாரோ பெயர் தெரியாத ஒருவருக்கு ஜோடியாக்கி எனது மார்க்கெட்டை மணிரத்னம் காலி பண்ணிவிட்டார்” என்று ஆவேசப்பட்டு இருந்தார். ரஜினி பானுப்பிரியாவுக்கு டூயட் சரியாக இருந்திருக்காது; இருந்தும் ஏன் அந்த பாடலை [புத்தம் புது பூ பூத்தது] ஒலிப்பதிவு செய்தார்களோ? இந்த பாடல் கிட்டத்தட்ட முதலிரவு சாங் மாதிரி, படத்தில் வைத்திருந்தால் படம் நாஸ்தி ஆயிருக்கும்.

    தளபதி font உன்மையிலே அற்புதமான கற்பனை. ரஜினியின் போஸ்டர் ஸ்டில் அதி அற்புதம், குறிப்பாக தலையை திரும்பி பார்க்கும் அந்த ஸ்டில். இந்த ஸ்டில் நீண்ட வருடங்கள் குற்றாலம் ஐந்தருவியில் பெரிய போர்டில் ஒரு விளம்பத்திற்காக [ பீடி விளம்பரம் என நினைவு] வைக்கப்பட்டு இருந்தது. குற்றாலம் செல்லும் போதெல்லாம் வியந்து நின்று பார்ப்பேன். பாசமுள்ள பாண்டியரே படத்தில் மீனா அறிமுக பாடலில் இந்த போர்டு பின்னனியில் வரும்.

    “சின்னத்தாயவள் தந்த ராசாவே” இளையராஜாவின் தாயார் பெயர் சின்னத்தாய். இந்த வரி கதைக்கும் பொருந்தும் இளையராஜாவுக்கும் பொறுந்தும், இருபொருள்படும்படி வாலி எழுதிய உன்னதமான பாடல். இந்த பாடலை காட்சி படுத்தியதில் மணிரத்னம் தவறு செய்து இருப்பார். இந்த பாடல் இரண்டு வெர்ஷன் [mp3—ஆக ஒரு வெர்ஷன் மட்டுமே இணையத்தில் கிடைக்கிறது]. படத்தில் டைட்டில் கார்டில் வரும் சரணம் “ தாயழுதாளே” என்று ஆரம்பிக்கும், ஸ்ரீவித்யாவை கோயிலில் பார்க்கும் போது “பால் மணம்” என்று ஆரம்பிக்கும். காட்சிப்படி இரண்டையும் மாற்றி வைத்திருக்க வேண்டும். மணிரத்னம் வாலியிடம் சரியாக எழுதி வாங்கிவிட்டு பாடலை placement செய்வதில் தவறு செய்திருப்பார்.

  13. தலைவர் பற்றி நாகேஷ்…

    மணிரத்னத்தின் ‘தளபதி‘ படத்தில் மம்முட்டியின் உதவியாளர்களுள் ஒருவராக நான் வருவேன். என்னிடம் பத்து நாள் கால்ஷீட் வாங்கி இருந்த போதிலும், படத்தில் நான் நடித்த மூன்றே மூன்று காட்சிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.

    ‘தளபதி‘ ரிலீசான பிறகு, ரஜினியை ஒரு தடவை சந்தித்த போது, ‘மணிரத்னம் என் கால்ஷீட்டை வீணாக்கி விட்டார். இன்னும் சில காட்சிகளில் என்னைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கலாம்’ என்ற என்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது, அவர் பதில் ஏதும் சொல்லாமல் புன்னகை புரிந்தார். அவ்வளவுதான். ‘என்னடா இவர்! நான் சொன்னதை ஆதரித்து சில வார்த்தைகள் சொல்லலாம். இல்லையெனில், படத்தில் டைரக்டர் எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்று மணிரத்னத்துக்கு ஆதரவாகப் பேசி இருக்கலாம். இரண்டும் சொல்லாமல் இவர் அமைதியாக இருக்கிறாரே’ என்று இலேசாகக் குழம்பினேன்.

    பின்னர் எனக்கு, ரஜினியின் மௌனத்துக்கு அர்த்தம் புரிந்தது. ரஜினியிடம் பேசிக்கொண்டு இருக்கிறபோது, அங்கே இல்லாத மூன்றாவது நபரைப் பற்றிக் குறை கூறிப் பேசினால், அதை அவர் விரும்புவதில்லை. மூன்றாம் மனிதரைப் பற்றிப் பேசுவதோ, விமர்சிப்பதோ நாகரீகமில்லை என்பது அவரது பாலிசி. இது எனக்குத் தெரிய வந்தபோது, அவர் மீதான மதிப்பு பல மடங்கானது.

  14. அசத்தலான பதிவு. இதை எழுதுவதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்பட்டிருக்கும் என புரிகிறது. (மணிரத்னம் – ஒரு உரையாடல் பதிவுக்கும் கூட) உங்கள் உழைப்பிற்கு முதலில் ஒரு சல்யூட்.

    தலைவர் கையெறிகுண்டுகளை தன் லெதர் ஜாக்கெட்டில் மாட்டிக்கொண்டு வில்லன்களை பறக்கடித்த மனிதன் படத்தை உள்ளூர் திரையரங்கில் பார்த்துவிட்டு உடனடி ரஜினி ரசிகனான காலம். தளபதி வெளியான சில காலம் கழித்து பெருங்களத்தூரில் திரையிடப்பட்டது. (எங்க ஊருக்கு வந்தாதான் படம் பாக்கமுடியும், பக்கத்து ஏரியான்னா கூட கண்டிப்பா மறுத்துடுவாங்க அப்பா அம்மா).

    எல்லோரும் சொல்வதுபோல் எந்த ஆடியோகேசட் கடையை கடந்தாலும் தளபதி பாடல்கள்தான் ஓடிக்கொண்டிருக்கும். நான் எனது பாட்டியுடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவந்த ‘கேப்’பில் பெற்றோர் தம்பி,தங்கையுடன் படம் பார்த்துவிட்டு வந்துவிட்டார்கள். நான் வீட்டுக்கு வந்து ‘என்னை விட்டுட்டு போயிட்டீங்களே’ என்று செம அழுகை. அப்போது எனக்கு சுமார் ஒன்பது, பத்து வயதிருக்கும் என்று நினைக்கிறேன்.

    ஒருமுறை பார்த்துவிட்டால் அவ்வளவுதான், அதற்குமேல் வீட்டில் யாரும் திரைப்படத்திற்கு போகமாட்டார்கள். நான் அவ்வப்போது ‘தளபதி’ பார்க்கல என்று புலம்புவது இன்னும் சில வருடம் நீண்டது. பின்னர் உள்ளூரில் மற்றொரு திரையரங்கில் வந்தபோதுதான் பார்க்கமுடிந்தது, நண்பர்களுடன். அப்போது மனதில் பதிந்தது தலைவரின் சண்டைக்காட்சிகளும், பாடல்களும்தான். அரவிந்த்சாமியின் திமிரான(நமக்கு) கேரக்டர் பிடிக்காமலே போனது.

    பின்னர் பட்டயப்படிப்பு படிக்கும்போதும், அதற்குப்பிறகும் மீண்டும் மீண்டும் படத்தைப்பார்க்க இளையராஜாவின் வீச்சு புரிந்தது. ஒளிப்பதிவு புரிந்தது. ‘தொட்றா பாக்கலாம்’ வசனமும் தலைவரின் நடிப்பும் ரஜினி ரசிகனுக்கு பொக்கிஷம். தலைவரை அவ்வளவு அழகாக அதற்குப்பின்னர் யாரும் காட்டவில்லை என்று நினைக்கிறேன். (ராஜாதிராஜாவில் ‘வா வா மஞ்சள் மலரே’ பாடலில் செம அழகாக இருப்பார்)

    மற்றபடி அருண் சொன்னதுபோல் கதாபாத்திரங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் கதை நடக்குமிடம் தமிழ்நாட்டிற்கு பொருந்தாமல்தான் இருக்கும். ஆனாலும் இந்த ஒரு காரணத்திற்காக படத்தை குறைத்து மதிப்பிடமுடியாது. மணிரத்னமும் ரஜினியும் மீண்டும் ஏன் இணையவில்லை என்கிற ஏக்கம் எனக்கு இல்லை. ‘தளபதி’யை விட சிறந்ததாக ஒரு ரஜினி படம் மணிரத்னத்திடமிருந்து கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறியே.

    தளபதி – என்றென்றும் மறக்கமுடியாத ஒரு ரஜினி படம். தலைவரின் கிரீடத்தில் ஒரு வைரக்கல்.

  15. தல,
    செம பதிவு.. ரசிச்சு எழுதி இருக்கீங்க
    தளபதி படத்தோட பாட்டு ரிலீஸ் ஆனப்ப அந்த பாட்டு கேக்கணும் நு எங்க அப்பா கிட்ட கெஞ்சி tape recorder வாங்கினேன். கடை ல தளபதி ஆடியோ கேசட் கொடுத்தா தான் உங்க கிட்ட tape வாங்குவேன் நு சொல்லி வாங்கினேன் 🙂

    ஒரு 500 டைம் minimum பாட்டு கேட்டு இருப்பேன் அந்த ஒரு வாரத்துல…அது ஒரு கனா காலம் பாஸ்

    – அருண் கோவிந்தன்

  16. அருமையான பதிவு (சாதாரணமான கமெண்டாக இருக்கும், வேறு எப்படி சொல்வது?)

    வசனங்களின் குறியீடுகளை எழுதியது அருமை. ஆனாலும் வசமே இல்லாமல் “ரஜினி ஸ்ரீவித்யா என இரண்டு நபர்களின் பங்களிப்பான மொழி மௌனங்களும் விழி வசனங்களும்” இடம் பெற்ற காட்சிகள் கொடுத்த அழுத்தம் அபரிதமானது. கூடவே இசை…வாவ் !

    முள்ளும் மலரையும் நினைவு படுத்தியதற்க்கு நன்றி (இயல்பான நடிப்பிற்கு பாடம்).

    ரஜினி என்ற ஆளுமை வெறும் ஸ்டைல் எனும் அடிப்படையில் மட்டும் நாம் மதிப்பிடுவதும் சிலாகிப்பதும்…. அவருக்கு செய்யும் அநீதி.
    அந்த மனிதனின் ஆரம்ப கால அசுரத்தனமான உழைப்பையும் & இயல்பான நடிப்பின் பங்களிப்பையும் புறம் தள்ளிவிட முடியாது.

    ஒருவர் நன்றாக வேலை செய்ய வில்லை எனில் ஆளை மாற்றுவார்கள் ஆனால் ராஜா சாருக்கு நடந்தது வேறு…
    தளபதி & புது புது அர்த்தங்கள் என இரண்டிலும் இசையை கேட்டதை விட அதிகமாக கொடுக்கப்பதற்காக மீண்டும் அவரோடு வேலை செய்ய வேண்டாம் என முடிவு செய்து விட்டார்கள். (காலத்தின் கட்டாயம்…?)

  17. இசைஞானியுடன் வேலை செய்யும் அனுபவங்கள் – வயலினிஸ்ட் பிரபாகர்

    தளபதி படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலின் Recording Bombay’ல் உள்ள Bombay Film Lab என்ற Recording Theatre’ல் நடைபெற்றது. பாடலுக்குக் கிட்டத்தட்ட 40 Violin, 4 Double Bass, 3 Trombone வரை உபயோகித்திருந்தார். Trumpet வாசிப்பவர்கள் கிடைக்காததால் Heavy Brass உபயோகித்தார்.

    பாடலுக்கு Tuba வாசிப்பதற்காக Bombay Navy Band’ல் இருந்து இசைக்கலைஞர்கள் வந்திருந்து இசைத்தனர்.

    ’சுந்தரி கண்ணால்’, ‘ராக்கம்மா’ ஆகிய பாடல்களுக்கு இசைஞானி Full Score எழுதி முடிக்க எடுத்துக்கொண்ட நேரம் அரை மணி நேரம் மட்டுமே. ஆனால் ஒவ்வொரு பாடலுக்கான ரெக்கார்டிங் 3 முதல் 4 நாட்கள் நடந்தது.

    முதல் நாள் Keyboard, இரண்டாவது நாள் மற்ற Instruments, Chorus எல்லாம் Mix செய்தார்கள். அடுத்த நாள் Strings Section அதற்கடுத்த நாள் Voices..! அங்கு 4 track recording செய்யுமளவிற்குத்தான் வசதி இருந்தது. ஆனால் நிறைய வாத்தியங்கள் இசைக்க வேண்டியிருந்ததால் நான்கு நான்கு Track’ஆக Overlap செய்து Recording செய்தனர்.

    Strings Section Recording முடிந்தவுடன் 30 விநாடிகளுக்கு இசைக்கலைஞர்கள் யாரும் பேசவில்லை. அதன் பிறகு எழுந்து நின்று கைதட்டினர். ஏனென்றால் அந்த Sound, Composition மற்றும் Arrangement அவர்களுக்கு மிகவும் புதிது.

  18. புதிய ஒரு விதமான ரயில் ஓசை. அதை கேட்கும் போது ஒரு வித வலி ஏற்படும் நெஞ்சில். அவர்களுக்கு மட்டும் அல்ல நமக்கும்.

    ஆதரவற்று திரும்ப திரும்ப அவமானபட்டு, அடைக்கலம் கிடைத்ததும் மம்முட்டியுடன் கூடும் காட்சி கர்ணனனை நினைவுபடுத்தும்.

    நாடடுக்கொரு நல்லவன் படம் அடைந்த மாபெரும் தோல்வி தான் தளபதியின் கிளைமாக்ஸ் மாற்றி அமைக்க காரணம் என்று கேள்விபட்டிருக்கிறேன்.

  19. @மைதீன்

    “போலீஸ் ஸ்டேஷன் இல் புகுந்து …. போறவழியில் லத்தியை எடுத்து கதவை பூட்டி”

    🙂 🙂 ஆமாம் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.

    இனி ஒரு படம் இது போல வர வாய்ப்பில்லை. பாட்ஷா, தளபதி இரண்டுமே Ever Green

    @சந்தோஷ் மணிரத்னம் இது பற்றிக் கூறும் போது இது முழுக்க மகாபாரதம் பற்றிய கதையல்ல ஆனால், அந்தக் கதையில் இருந்து காட்சிகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது என்றார்.

    @தியாகராஜன்

    ” கொஞ்சம் கொர கொரா வாய்சில்”

    ஹா ஹா ஹா இது அப்போது ரொம்ப பிரபலம்.. நானும் என் அண்ணனும் கிண்டல் செய்துட்டு இருப்போம். எனக்குப் பிடித்த குரல் கூட.

    @உதய் நன்றி

  20. @ஜகன் உண்மை தான்.. பெரிய வெற்றி என்று கூற முடியாத படம் தான் ஆனால், தோல்விப்படமல்ல.

    @ராஜ்குமார் ஹா ஹா ஹா ரசிகர்கள் சண்டை பிரச்சனை என்றாலும்.. அதுவும் ஒரு சுவாரசியம் தான்.

    @ஜனா நன்றி 🙂

    @அருண் பிரதீப் அப்பவே 200 ரைட்டு.. நான் அதிகம் பட்சம் இதுவரை கொடுத்தது ஒரே படம் பாபா. அதோட அதிகம் கொடுப்பதையே நிறுத்திட்டேன் 🙂

    @யாசின்

    10 வருடங்களுக்குப் பிறகா? அடேங்கப்பா! இனி மணிரத்னம் தலைவர் இணைந்தாலும் இந்த மேஜிக் இனி கிடைக்காது 🙂

    இளையராஜா ரைட்டு.. தீவிர ரசிகர் யாசின் 🙂

  21. @பாலாஜி நன்றி 🙂 பாருங்க பாருங்க.. எத்தனை முறை பாரத்தாலும் சலிக்காது

    @காத்தவராயன் உங்க கருத்தை நான் எதிர்பார்த்தேன் 🙂

    ஈரோடு அபிராமியில் செமையா இருந்து இருக்கும்.

    குனித்த புருவம் பாடல் அப்போதைய மாணவர்களுக்கு மிக உதவியாக இருந்ததில் ஆச்சர்யமில்லை.

    சிவாஜி என்னைப் பொருத்தவரை ரஜினி படம் தான். எந்திரன் ஷங்கர் படம்.

    பானுப்ரியா குறித்து நீங்கள் கூறிய கருத்தை நானும் நினைத்தேன்.. எழுத மறந்து விட்டேன். இதை சேர்த்து விடுகிறேன்.

    தளபதி font பலரை கவர்ந்து இருப்பது உண்மையில் ஆச்சர்யமளிக்கிறது. நான் இவ்வளவு பேர் குறிப்பிடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

    சின்னத்தாயவள் பாடல் குறித்து நீங்கள் கூறிய தகவல் நான் கேள்விப்பட்டது இல்லை.. மணிரத்னம் எப்படி தவறவிட்டார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது.

  22. @ஸ்ரீனிவாசன் தகவல்களுக்கு நன்றி

    @சூர்யா நீங்கள் மனிதன் ல இருந்து ரசிகரா ரைட்டு 🙂

    “தலைவர் கையெறிகுண்டுகளை தன் லெதர் ஜாக்கெட்டில் மாட்டிக்கொண்டு வில்லன்களை பறக்கடித்த மனிதன் படத்தை உள்ளூர் திரையரங்கில் பார்த்துவிட்டு உடனடி ரஜினி ரசிகனான காலம். ”

    ஹா ஹா ஹா

    அப்போதெல்லாம் படம் பார்க்க நாம் எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறோம்.. இப்ப என்னடான்னா 🙂

    @அருண் தளபதி படத்தோட டேப் ரெகார்டரையும் ஏறக்கட்டி இருப்பீங்கன்னு நினைக்கிறேன். இத்தனை முறை ஓடவிட்டு இருந்தால், அது கதறி இருக்குமே 🙂

    @முத்து

    “ரஜினி என்ற ஆளுமை வெறும் ஸ்டைல் எனும் அடிப்படையில் மட்டும் நாம் மதிப்பிடுவதும் சிலாகிப்பதும்…. அவருக்கு செய்யும் அநீதி.”

    முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். அவரின் நடிப்பை முழுமையாக இன்னும் எந்தப் படமும் வெளிபடுத்தவில்லை என்று நினைக்கிறேன். முள்ளும் மலரும் நல்லவனுக்கு நல்லவன் போல சில படங்கள் தவிர்த்து.

    @ஷாஜி ரயில் ஓசை நீங்கள் குறிப்பிடுவது சரி தான். இளையராஜா அதை சரியாகப் பயன்படுத்தி இருப்பார்.

  23. மம்முட்டி மலையாளத்தில் மிகப்பெரிய நடிகர். தலைவர் தமிழில் மிகப்பெரிய நடிகர்

    “தலைவர் தமிழில் மிகப்பெரிய நடிகர்”
    சீரியஸ் ஆன கட்டுரைக்கு நடுவில் இந்த வரி சற்று ரிலாக்ஸ் ஆகா இருந்தது.

  24. இந்த படம் பார்க்க நான் 2 நாள் ஸ்கூல் போகாமல் அழுது கட் அடித்து தர்ணா செய்தது இன்னும் மறக்க முடியாது. எப்போவெல்லாம் நினைவு வருகிறதோ அப்போவெல்லாம் இந்த படத்தை யு tube ல் பார்த்துருக்கேன். சூப்பர் scenes la . ஐந்தருவில் உள்ள அந்த கட் அவுட் பத்தி சமீபத்தில் அங்கு போயிருந்த பொது பேசிக்கொண்டோம். அது அரசன் பீடி விளம்பரம். தலைவர் மாதிரியே அப்போது ஹேர் style வச்சுக்கிட்டு ஸ்கூல் uniform ஷர்ட் கைய மடிச்சு விட்டுகிட்டு திரிஞ்சோம்.

  25. சுந்தரி கன்னல் ஒருசேதி பாட்டு கொண்டை.
    முதல் நாள் காட்சிகளுக்கு ரசிகர்கள் அந்த கொண்டையோடுதான் வந்தார்கள்.
    அந்தளவு தளபதி கொண்டை famous .
    மம்மூட்டி கதாபாத்திரம் ரௌடியாக இருந்தாலும் நேர்மை உள்ள பாத்திரம்.அதனால் தான் தளபதி தினேஷ் கடன் கொடுத்த பெண்ணிடம் தவறாக பேசியது தெரிந்த பின் தலைவரை தளபதியாக சேர்த்து கொள்வார். இது அழுத்தமான காரணம் தான் என்பது என் கருத்து.

  26. தளபதி படம் பாத்தாலே அழுகதான் கடைசில வருது
    மம்முட்டி: பாத்தியா என் தளபதிய

  27. @ rrg-pogi ““தலைவர் தமிழில் மிகப்பெரிய நடிகர்” சீரியஸ் ஆன கட்டுரைக்கு நடுவில் இந்த வரி சற்று ரிலாக்ஸ் ஆகா இருந்தது.”

    உங்களுக்கு சிறு ஆறுதல் கிடைத்தது மகிழ்ச்சி.

    வேதாத்திரி மகரிஷி யோகா (நித்தியல்ல) சென்றீர்கள் என்றால் ஆறுதலுடன் நல்ல எண்ணங்களையும் சேர்த்து வளர்த்துக் கொள்ளலாம்.

    @மன்னன் முத்து

    கையை மடித்து விட்டு இருந்தது நீங்கள் கூறியபிறகே கவனித்தேன் 🙂

    @sb

    தளபதி கொண்டை பற்றிய தகவலுக்கு நன்றி 🙂 நீங்க ஒருவர் தான் இது பற்றி கூறியிருக்கிறீர்கள். நான் இதைப் பலரிடம் எதிர்பரத்தேன்.

    “தளபதி தினேஷ் கடன் கொடுத்த பெண்ணிடம் தவறாக பேசியது தெரிந்த பின் தலைவரை தளபதியாக சேர்த்து கொள்வார்.”

    இந்த ஒரு காரணத்திற்காக தன் வலது கையாக வைத்துக் கொள்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாக எனக்கு இருக்கிறது.

    @கார்த்தி 🙂

  28. கிரி,
    1)ராஜாதி ராஜா பற்றி ஒரு பதிவு எழுதுங்கள்
    2)மற்ற சீனியர் நடிகர்கள் போல் தலைவர் நடிக்கலாமே என்பதற்கு ஒரு பதில் பதிவு எழுதுங்கள்,

  29. அருமையா எழுதி இருக்கிங்க. தளபதி திரைப்படம் திரையிடப்பட்ட காலத்தில் நான் பிறக்கவே இல்ல… ஆனால் நான் அதிக தடவை தளபதி பார்த்து இருக்கேன். நீங்க தலைவரை பேர் சொல்லி அழைக்க விரும்பலனு சொன்னிங்க அதே நிலை தான் எனக்கும்.. நடிகர் என்பதைத் தாண்டி நல்ல மனிதனா எல்லோருக்கும் தலைவர பிடிக்கும். “இது சூர்யா சார் உரசாதிங்க”

  30. I watched this movie on the very first day at Saraswathi theater, Madurai. It was an evening show. One interesting incident happened. After Mammooty was stabbed Thalaivar will take him to hospital shouting “Deva sahadae”. At that time whole theater was in dead silence wondering what will happen. Suddenly the boy who was sitting next to me shouted nothing will happen to Mammooty. Again everyone started shouting at that boy. I asked that boy how he knows it. The boy replied he is watching for the second time.

    The funniest dialogue will happen in the hospital. “Devkku onnum ahadhu” “doctor sonnara” “illa Deva sonnar”

  31. நான் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்து விட்டேன் . திரு. ரஜினியை பிடிக்கும். ஆனால் , அடுத்த தேர்தலில் என் வோட்டை திரு. ரஜினிக்கு போடுவதும், மக்கள் மன்றத்தில் தொடர்ந்து இருப்பதும் அவர் கட்சியின் கொள்கைகளையும் , செயல்பாடுகளையும் பொறுத்தே இருக்கும்.
    சென்ற சட்டமன்ற தேர்தலில் அன்புமணி அவர்களின் பேச்சை நம்பி வாக்களித்தேன் ஏமாற்றி விட்டார். அது போன்ற ஒரு ஏமாற்றத்தை திரு ரஜினி அவர்கள் ஏற்படுத்த மாட்டார் ஏன நம்புகிறேன் .

  32. என் விருப்பம் என்னவென்றால் ரஜினி அவர்கள் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிட வேண்டும் . தனது கட்சியின் கொள்கைகளையும் , திட்டங்களையும் மக்களுக்கு ஏடுத்து கூறி , மற்ற கட்சி தலைவர்களை போல் தரக்குறைவாக அடுத்த கட்சி தலைவர்களை பற்றி பேசாமல் அமைதியான முறையில் பிரச்சாரம் செய்து மக்களை தன பக்கம் ஈர்த்து , முழு மெஜாரிட்டியுடன் முதல்வராக வேண்டும். பிரதமரை உருவாக்கும் , ஏழைகளின் முதல்வர் காமராஜரை போல வர வேண்டும் ஏன்பதே ஏனது விருப்பம். முதல்வரானதும் சாராயக்கடை யை மூடி, கல்வி மற்றும் மருத்துவத்தை மேம்படுத்த வேண்டும் , விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் , சூப்பர் ஸ்டார் பட்டம் மாறி மக்களின் முதல்வர் ஆகா வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here