Home தெரிந்து கொள்வோம் வெரிகோஸ் நோய் என்றால் என்ன?

வெரிகோஸ் நோய் என்றால் என்ன?

6
வெரிகோஸ்

லரும் அறியாத ஆனால், பலரும் பாதிக்கப்பட்ட ஒரு பிரச்சனையாக வெரிகோஸ் உள்ளது. Image Credit

வெரிகோஸ் என்றால் என்ன?

கால் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் காலில் ஏற்படும் வீக்கம், நரம்பு சுருண்டு கொள்ளுதல், சருமம் கருமை நிறம் அடைதல் ஆகியவையே வெரிகோஸ் என்று அழைக்கப்படுகிறது.

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்நோய் பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

யார் பாதிக்கப்படுவார்கள்?

 • நீண்ட நேரம் நின்று கொண்டு இருப்பவர்கள்.
 • நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு இருப்பவர்கள்.
 • மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்கள்.
 • ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்ட வயதானவர்கள்.

இவை அனைத்தும் இருந்தாலும் சிலருக்கு எதுவும் ஆவதில்லை!

எப்பகுதி அதிகம் பாதிக்கப்படும்?

 • கணுக்கால்.
 • பாதம் மேல்பகுதி.
 • கெண்டைக்கால் தசை (Calf muscle).
 • தொடை.
 • காலில் எங்கு ரத்த அடைப்பு உள்ளதோ அப்பகுதி.

பிரச்சனையின் விளக்கம்

ரத்த ஓட்டம் என்பது தலையிலிருந்து கால் இறுதி வரை சென்று மேல் நோக்கி திரும்பப் பயணிக்கும் ஆனால், ரத்த நாளங்கள் பலவீனமாகவோ, அடைப்புகளோ இருந்தால், ரத்த ஓட்டம் சீராக இருக்காது.

கீழே இருந்து ரத்தம் மேல் நோக்கிப் புவியீர்ப்பு விசையைத் தாண்டிப் பயணிக்க வேண்டியுள்ளது, அவ்வாறு பயணிக்க முடியாமல் ரத்தம் கீழே தேங்குவதே பிரச்சனை.

ரத்தம் ஒரே இடத்தில் தேங்குவது சரியான ஒன்றல்ல, தேங்காமல் தொடர்ச்சியாகப் பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

அறிகுறிகள் என்ன?

 • கெண்டைக்கால், பாதத்தின் மேற்பகுதி, கணுக்கால் பகுதி வீக்கம் ஏற்படும்.
 • அரிப்பு ஏற்படும்.
 • ரத்தம் ஒரே இடத்தில் தேங்குவதால், கால்கள் கருமை நிறமாகும். பெரிய அளவில் கரும் புள்ளிகள் காணப்படும்.
 • முற்றிய நிலையில், நரம்புகள் சுருண்டு புடைத்துக்கொண்டு இருக்கும். வீக்கம் அதிகமானால் செருப்பு, ஷு அணிவதே சிரமமாக இருக்கும்.

எத்துறையினர் அதிகம் பாதிக்கப்படுவர்?

தொழிற்சாலைகளில் தொடர்ந்து நின்று கொண்டு இருப்பவர்கள், பேருந்து நடத்துனர்கள், போக்குவரத்து காவலர்கள், ஐடி பணிகளில் உள்ளவர்கள்.

இவர்கள் அல்லாமல், மேற்கூறிய முறையில் இருப்பவர்கள் அனைவரும்.

என் அனுபவம்

2018 ல் அப்பா காலமான போது விசாரிக்க வந்த உறவினர்களுக்காகத் தொடர்ந்து 12 நாட்கள் நிற்க வேண்டி இருந்த சமயத்தில் கால் வீக்கம் எனக்கு ஆரம்பித்தது.

பின்னர் சரியாகி சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வீக்கமானது.

சென்னை Fortis Malar மருத்துவரை சென்று பார்த்தேன், ‘இது ஒன்றும் பிரச்சனையில்லை, தண்ணீர் நிறையக் குடியுங்கள் சரியாகி விடும்‘ என்றார்.

அதே போல, கொஞ்ச நாளில் சரியானது. பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு திரும்ப இதே பிரச்சனை ஆனால், கால் வீக்கம் மிக அதிகமாக இருந்தது.

அக்கா மருத்துவத்துறையில் இருந்ததால், அவரிடம் கூறினேன். அவர் சில YouTube காணொளிகள் சிலவற்றைக் கொடுத்து, உடற்பயிற்சி செய்யக்கூறினார்.

உடனே 50% வீக்கம் குறைந்தது இருப்பினும் வீக்கம் முழுவதும் குறையவில்லை.

ரிஸ்க் எடுக்க விரும்பாததால், அதாவது நாமே மருத்துவராகி விடக் கூடாது என்பதற்காக இருவரும் இத்துறை சார்ந்த மருத்துவரை விசாரிக்க முடிவு செய்தோம்.

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை

அக்கா பின்னர் விசாரித்து கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் Dr Govindaraj என்ற Vascular surgeon நன்றாகப் பார்க்கும் மருத்துவர் என்று அவரது நண்பர்கள் கூறியதாகப் பரிந்துரைத்தார்.

பின்னர் இருவரும் மருத்துவரைப் பார்த்தோம்.

ஸ்கேன் தேவை என்றதால், ஸ்கேன் செய்து விவரங்களைக் கொடுத்தோம். Thrombus சோதனையில் இரத்த அடைப்பு (Blood clot) எப்படியுள்ளது என்பதை ஸ்கேன் கூறும்.

‘உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும் அல்லது கொடுக்கப்படும் ஊசி மருந்தைத் தினமும் வீட்டிலிருந்தபடி ஐந்து நாட்களுக்கு இரு வேளை போட்டுக்கொள்ள வேண்டும்‘ என்று கூறினார்.

கொஞ்சம் அல்ல நிறையவே அதிர்ச்சியாகி விட்டது காரணம், இதை எதிர்பார்க்கவில்லை.

இந்த மருந்து என்னவென்றால், ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும், இதன் மூலம் ரத்த ஓட்டம் வேகமாக நடக்கும். அடைப்புகள் (Clot) இருந்தால், கரையும்.

மருத்துவமனையில் இருக்கக் கூறியதற்குக் காரணம், இதன் வேகம், வீரியம்.

Blood Thinner

இதய அறுவை சிகிச்சை (Open Heart Surgery) செய்தவர்கள் பெரும்பாலும் இம்மருந்தை எடுத்துக்கொள்வார்கள்.

அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு Blood Thinner மாத்திரை பயன்படுத்துவதில்லை என்ற உறுதியைப்பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்வார்கள்.

பயன்படுத்தினால், மாத்திரையை நிறுத்தி அறுவை சிகிச்சையை இரு நாட்கள் ஒத்தி வைத்து விடுவார்கள்.

மாத்திரையில் 1,2,3,4 MG என்று அளவு உண்டு. ஊசியாகச் செலுத்தப்படும் போது இதனுடைய வேகம், வீரியம் உடனடியாக அதிகம் இருக்கும்.

இரத்த இழப்பு

நம் உடலில் அடிபட்டு ரத்தம் வெளிப்பட்டால், உடல் நியதிப்படி ரத்தம் சிறிது நேரத்தில் உறைந்து விடும் ஆனால், Blood Thinner எடுப்பவர்களுக்கு உறையாது.

அதாவது, ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டு இருக்கும், மிக ஆபத்தானது.

எனவே தான், மருத்துவமனையில் அனுமதிக்கக் கூறினார் அல்லது மருந்து முடியும் வரை வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்ற நிபந்தனையை விதித்தார்.

காரணம், வெளியே சென்று அடிபட்டு விட்டால், ரத்தம் நிற்காமல் வெளியேறி உயிருக்கே ஆபத்தாகி விடும். மாத்திரை என்றால், ஒவ்வொரு MG யைப் பொறுத்து ரத்தத்தின் வேகம் இருக்கும்.

எளிதாகப் புரிந்து கொள்ள, ரத்த பரிசோதனை செய்தால், ஊசி போட்ட இடத்தில் வழக்கமாக சில நொடிகளில் ரத்தம் உறைந்து விடும் ஆனால், இம்மாத்திரை எடுப்பவர்களுக்கு கசிவு இருக்கும்.

ஒரு ஊசி துளைக்கே கசிவு என்றால், பெரிய விபத்து என்றால், எப்படியிருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

எப்படி அறிவது?

ஊசி வழியாகச் சக்தி வாய்ந்த மருந்தாகச் செலுத்தப்படும் போது அல்லது அதிகளவு MG மாத்திரை எடுத்துக்கொள்ளும் போது நம் உடலுக்குள் மிகப்பெரிய களேபரமே நடந்து கொண்டு இருக்கும் ஆனால், நமக்குத் தெரியாது.

எப்போது தெரியும் என்றால், பல் துலக்கும் போது ஈறு வழியாக ரத்தம் வெளியாகும். இதன் அளவை வைத்து, மருந்தின் MG யைக்குறைத்து கொள்ள அறிவுறுத்தப்படும்.

எனவே, Blood Thinner மருந்து உட்கொள்பவர்கள் Dabur Red போன்ற பற்பசையைப் பயன்படுத்தாமல், வெள்ளையாக உள்ள பற்பசையைப் பயன்படுத்த வேண்டும்.

அப்போது தான் ரத்தம் வந்தால் தெரியும், இல்லையென்றால் பற்பசையும் ரத்தமும் கலந்து ஒரே சிவப்பு வண்ணத்தால் நமக்கு தெரியாமலே போய் விடும்.

2 MG சாப்பிட்டாலே சிலருக்குப் பல் துலக்கும் போது ஈறுகளில் ரத்தம் வரலாம்.

தற்போது எப்படியுள்ளது?

கிட்டத்தட்ட 4 வருடங்களாகப் பரிசோதனைக்குச் செல்கிறேன். துவக்கத்தில் 3 மாதங்களுக்கு ஒரு முறையும், தற்போது 6 மாதங்களுக்கு ஒரு முறையும் செல்கிறேன்.

தற்போது வீக்கம் இல்லை அல்லது குறைந்து விட்டது.

இருப்பினும் ரொம்ப தூரம் காலைத் தொங்க வைத்துப் பயணித்தால், நடந்தால், நின்றால் திரும்ப வீக்கமாகிறது.

முழங்கால் வரையுள்ள காலுறையைப் (Compression socks) பயன்படுத்தினால், இதன் அழுத்தம் காரணமாக ரத்த ஓட்டம் சீராக இருக்கும், வீக்கம் இருக்காது.

அலுவலகம் செல்லும் போது வழக்கமாக அணியும் காலுறைக்கு முன் இதை அணிந்து அதற்கு மேல், எப்போதும் போல socks அணிந்து கொள்ளலாம்.

எனவே, வெரிகோஸ் பிரச்சினையுள்ளவர்கள் அனைவரும் இக்காலுறையைப் பயன்படுத்த அறிவுறுத்துகிறேன், மருத்துவரே இதைக் கூறுவார்.

Lycra Medical Compression Stockings பயன்படுத்துகிறேன், அவரவர் தேவைக்கு ஏற்ப அளவில் வேறு நிறுவனத்திலும் வாங்கிக்கொள்ளலாம்.

வெரிகோஸ் பிரச்சனையுள்ளவர்கள் காலைத் தொங்க வைத்து நீண்ட நேரம் அமர வேண்டாம், சிறு மேசை போல வைத்து அதன் மீது காலை வைப்பது ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவும். அவ்வப்போது எழுந்து நடக்கவும் செய்ய வேண்டும்.

Dr கோவிந்தராஜ்

65 வயதுக்கு மேல் இருக்கும், ரொம்ப தங்கமான மனுசன்.

அவசியமற்று ஸ்கேன் எடுக்கக் கூற மாட்டார், தேவையற்று அதிக மருந்துகளை வாங்கச் சொல்ல மாட்டார், மிகவும் பண்பாக நடந்து கொள்வார்.

கோவிட் சமயத்தில் சந்திக்க முடியாததால், தொலைபேசியிலே பேசிக்கொள்ள அறிவுறுத்தினார், அதன் பிறகு ஏதாவது சந்தேகம் என்றால் அழைப்பேன்.

அவரும் ‘என்னப்பா கிரி!’ என்று கேட்டு விசாரித்து, அதற்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்குவார். தற்போதும் அவரை அழைத்து ஆலோசனையைப் பெறுகிறேன்.

ராமகிருஷ்ணா மருத்துவமனை அல்லாது, சொந்தமாகவும் ஒரு கிளினிக் வைத்துள்ளார். ராமகிருஷ்ணா மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இருப்பார்.

அதன் பிறகு இவரது கிளினிக் சென்று விடுவார். சில நேரங்களில் பரிசோதனை முடிவு வரத் தாமதமானால், இவரது கிளினிக்கில் சென்று பார்க்க வேண்டும்.

கோவையிலேயே இருப்பவர்கள் அடுத்த நாள் வந்து பார்த்துக்கொள்ளலாம். இவரது கிளினிக்கில் பார்த்தால், கூடுதல் கட்டணம்.

ராமகிருஷ்ணா மருத்துவமனையில் OP கட்டணம் 2019 ல் ₹200 இருந்தது, தற்போது (2024) ₹400, ஐந்து நாட்களுக்கு செல்லும் என நினைக்கிறேன். அதாவது அடுத்த நாள் வந்தாலும் இதையே காண்பிக்கலாம்.

PT INR ரத்தப் பரிசோதனையை மருத்துவர் கூறும் கால இடைவெளியில் செய்து, ரத்த ஓட்டத்தின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சென்னையில் MetroPolis பரிசோதனை மையத்தில் எடுக்கிறேன் (நுங்கம்பாக்கம்), சிறப்பான சேவை. விவரங்களை மின்னஞ்சலிலேயே பெற்றுக்கொள்ளலாம்.

Graph உடன் கொடுப்பதால், பழைய முடிவுகளை ஒப்பிட்டு பார்ப்பது எளிது.

உணவு வழக்கங்கள்

முட்டைக்கோஸ், கீரை, காலிப்ளவர் சாப்பிடக் கூடாது. கீரை ரத்தத்தைக் கெட்டியாக்குவதால், சாப்பிடக் கூடாது.

பெரிய பிரச்சனை என்னவென்றால், உணவகம் சென்றால் இவ்வகை காய்கறிகளே பெரும்பாலும் வைப்பார்கள். கீரை பிடித்தமானது, இதற்காகத் தியாகம் செய்ய வேண்டியதாகி விட்டது 🙂 .

ஆனால், தற்போது வந்துள்ள முன்னேறிய மாத்திரைகளுக்கு இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை, அதே போல PT INR ரத்தப் பரிசோதனையும் அவசியமில்லை.

இருப்பினும், மேற்கூறியவற்றைச் சாப்பிடுவதில்லை.

பாதுகாப்பு காரணங்களுக்காக மருந்தின் பெயர், ரத்த ஓட்ட அளவு ஆகியவற்றை குறிப்பிடவில்லை. நபருக்கு நபர் அளவு மாறுபடும். எனவே, மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.

எப்போது சரியாகும்?

வெரிகோஸ் ஒருமுறை வந்து விட்டால், அவ்வளவு சீக்கிரம் சரியாகாது. சிலருக்கு சரியாகலாம், பலருக்கு வாழ்நாள் முழுவதும் அதோடு தொடர வேண்டும்.

உயிருக்குப் பாதிப்பு மிகக்குறைவு என்பதால், பலரும் இப்பிரச்சனையை அலட்சியமாகக் கருதுகிறார்கள், தவறு.

எனக்குத் துவக்க நிலை என்பதால், நரம்பு புடைப்பது போன்ற முற்றிய பிரச்சனைகள் இல்லை ஆனால், வீக்கம், காலில் கருமை நிறம் உள்ளது, தற்போது குறைந்து விட்டது.

முற்றிய நிலையில் உள்ளவர்களின் கால்களைப் பார்க்கவே பயமாக இருக்கும். நரம்புகள் சுருண்டு, புடைத்து, முடிச்சுகளுடன், கரும் பச்சை நிறத்தில் இருக்கும்.

கெண்டைக்கால் தசை (Calf Muscle) உடலின் இரண்டாவது இதயம் என்று கூறப்படுகிறது. எனவே, இங்கே பாதிப்பு ஏற்பட்டால், அது இதயத்திலும் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, அலட்சியம் வேண்டாம்.

தற்போது நண்பர் பரிந்துரைத்த சித்த மருத்துவரின் மருந்தைச் சாப்பிட்டு வருகிறேன். இப்பிரச்சனை சரியானால், அம்மருத்துவர் குறித்த கட்டுரையை எழுதுகிறேன்.

பரிந்துரை

எனக்கெல்லாம் எப்படி வந்தது என்றே தெரியவில்லை! தினமும் குறைந்தது 3 கிமீ நடக்கிறேன் ஆனாலும், அதிக நேரம் அமர்ந்து இருப்பது இப்பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கலாம். தற்போது அவ்வப்போது எழுந்து நடக்கிறேன்.

எனவே, ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்காதீர்கள், உட்காராதீர்கள். Smart Watch அணிந்து இருந்தால், நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதை நினைவுபடுத்தும்.

வெரிகோஸ் பிரச்சனை எனக்கு பெரிய செலவு எதையும் இழுத்து விடவில்லையென்றாலும், இதுவொரு தொல்லையாகத்தான் பார்க்கிறேன்.

15 வருடங்களுக்குப் பிறகு இப்பிரச்சினைக்காக மருந்து சாப்பிட வேண்டிய நிலை வந்தது. பெரும்பாலும் மருந்து சாப்பிடாமலே சரி செய்து கொள்வேன்.

அதிகளவில் மருந்து சாப்பிடுவது இயல்பாகவே உள்ள நம் உடலின் எதிர்ப்புச் சக்தியைக் காலி செய்து, அடிக்கடி உடல்நிலையைப் பாதிப்படையச் செய்து விடும் என்பதால் முடிந்தவரை மருந்தைத் தவிர்த்து விடுவேன்.

எனவே, வந்த பிறகு சரி செய்ய முயலாமல், முடிந்தவரை வராமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுங்கள், அதற்கு உடற்பயிற்சி அவசியம்.

ரத்த ஓட்டப் பிரச்சனை, வெரிகோஸ் பிரச்சனையுள்ளவர்கள் தினமும் இக்காணொளியில் உள்ள உடற்பயிற்சியை செய்யவும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

 1. கிரி.. படிக்கும் போது ஆச்சரியமாகவும் அதே சமயம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.. வெரிகோஸ் பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன்.. ஆனால் இந்த அளவுக்கு விவரமாக தெரியாது.. உண்மையில் படிக்கும் போது கொஞ்சம் யோசனையாக தான் இருக்கிறது.. படித்த பின்பும் இதன் சிந்தனை வந்து வந்து போகிறது.. காரணம் நான் பொதுவாக என் உடல் நலனில் அதிகம் அக்கறை காட்டுவது குறைவு..

  இதுவரை நான் பிட்டாக இருப்பதாக மிகவும் ஆழமாக உள்ளுணர்வு இருக்கிறது. வாரத்தில் 3 நாட்கள் கிரிக்கெட் மற்றும் இரண்டு நாட்கள் பேட்மின்டன் ஆடுகிறேன். முன்பை விட தற்போது விளையாட்டின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. ஆனால் உடல் எந்த அளவிற்கு ஒத்துழைக்கும் என்பது எதிர்காலத்தில் தான் தெரியும். விளையாட்டு இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் யோசிக்க கூட முடியவில்லை..

  ரொம்ப சின்ன வயதில் என்னோட பள்ளி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் போது எல்லோரும் பேட்டிங் மீது ஆர்வமாக இருப்பார்கள்.. ஆனால் எனக்கு எப்போதும் FAST பௌலிங் தான் விருப்பம்.. கேப்டனா டாஸ் ஜெயித்து பௌலிங் தேர்வு செய்து, அந்த விக்கி கார்க் பால்ல சும்மா முதல் ஓவர் போடும் போது இருக்குற சந்தோசம் இருக்குதே.. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.. சில சமயம் முதல் பந்தில் BOWLED ஆகும் போது “எப்பா இப்ப நெனச்சாலும், சும்மா அப்படி இருக்குது..

  அம்ப்ரோஸ்ம் / மெக்ராத்ம் என்னுடைய ஹீரோக்கள். தற்போதும் தலைவன் அம்ப்ரோஸ்ன் பழைய காணொளிகளை யூடூபில் காண்பதுண்டு.. ஒரு வேக பந்து வீச்சாளருக்கு உண்டான எல்லா அம்சமும் கொண்ட ஒரு அபூர்வ பந்து வீச்சாளர். மெக்ராத்தை குறித்து பல விமர்சங்கள் இருந்தாலும் மிகவும் திறமையான ஒரு பந்து வீச்சாளர் என்பதை மறுக்க முடியாது.

  மரணம் வந்து தழுவும் வரை விளையாடி கொண்டே இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.. ஆனால் உடல்நிலை எவ்வாறு ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை.. காலம் தான் பதில் கூற வேண்டும்.. இப்பவே என் பையன் கேட்கிறான் நீங்க எப்ப கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவீங்க என்று???? அவனுக்கு நான் என்ன பதில் சொல்ல????

 2. Don’t use tamarind Giri. That’s the main culprit in creating blood clots. Also the sudden increase in the weight. If you avoid both, it should be fine.

 3. @யாசின்

  “காரணம் நான் பொதுவாக என் உடல் நலனில் அதிகம் அக்கறை காட்டுவது குறைவு”

  அத்தவறை மட்டும் செய்யாதீர்கள்.

  “இதுவரை நான் பிட்டாக இருப்பதாக மிகவும் ஆழமாக உள்ளுணர்வு இருக்கிறது.”

  என்ன இருந்தாலும், பரிசோதனை முக்கியம். பிரச்சனைகள் உடனே தெரியாது, நாளடைவில் பெரியதாகும்.

  நமக்கு தெரிய வரும் போது பிரச்சனை தீவிரமாகி இருக்கும்.

  “வாரத்தில் 3 நாட்கள் கிரிக்கெட் மற்றும் இரண்டு நாட்கள் பேட்மின்டன் ஆடுகிறேன்.”

  உங்களுக்கு எப்படி நண்பர்கள் கிடைக்கிறார்கள்? எங்கே சென்று விளையாடுகிறீர்கள்?

  “இப்பவே என் பையன் கேட்கிறான் நீங்க எப்ப கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவீங்க என்று?”

  எதனால் கேட்கிறான்?

  @பனிமலர் & பாரதி நன்றி

 4. உடல் பரிசோதனை : நிச்சயம் தாமதிக்காமல் செய்கிறேன்.

  நண்பர்கள் : 2010இல் இருந்து தமிழ்நாட்டு நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இவர்கள் எல்லோரும் வெவ்வேறு மாவட்டத்தை சேர்த்தவர்கள். யாரையும் முன்பு யார்க்கும் தெரியாது. எங்கள் எல்லோரையும் இணைத்த ஒரு விஷியம் : தமிழ் மொழி & கிரிக்கெட். நிறைய பேர் வருவார்கள், பின்பு சென்று விடுவார்கள்.. ஆனால் சில பேர் மட்டும் இந்த குழு கலைந்து விடாமல் பாதுகாத்து வருகிறோம்.

  இங்கு நிறைய விளையாட options இருக்கிறது . ஆனால் பெருன்பான்மை கட்டணம் செலுத்த வேண்டும் . அதனால் எல்லோரும் கட்டணத்தை பகிர்ந்து கொண்டு விளையாடுவோம். இயல்பாகவே எளிதில் எல்லோருடன் பழகி அவர்களில் நட்பை பெற்று விடுவேன். 99% விளையாட்டை பொறுத்தவரை கமிட் செய்தால் நிறைவேற்றுவேன்.

  அதனால் என் அலுவல் நேரம் கழிந்து என்னால் தொடர்ந்து விளையாட்டில் இயங்கி வர முடிகிறது. விளையாட்டையும் மீறி எல்லோர்க்கும் அவரவர் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு முக்கிய இடமாக மைதானம் (அரட்டை, கேலி, கிண்டல், கோபம், சண்டை, நட்பு) விளக்குகிறது.

  ஓய்வு பெறுவீங்க & எதனால் கேட்கிறான்? : பையனுக்கு கிரிக்கெட்டில் கொஞ்சம் ஆர்வம் உண்டு. அதனால் என் குடும்பம் இங்கு இருந்த போது சிறு வயதிலே அவனை நான் எல்லா போட்டிக்கும் அழைத்து செல்வேன் (மனைவிக்கு விருப்பம் இல்லாமல்).

  தற்போது 10 வயது முடிந்து விட்டதால் கடந்த முறை விசிட்டில் இங்கு வந்த போது, அவனை விளையாட அழைத்து சென்ற போது ரொம்ப ஆர்வமாக இருந்தான். நான் ஓய்வு பெற்று விட்டு இந்த என்னுடைய டீமில் அவனை சேர்த்து விட வேண்டுமாம்.. அதனால் தான் என் ஓய்வுக்காக ஆர்வமாக இருக்கிறான்.

 5. @யாசின்

  “நிறைய பேர் வருவார்கள், பின்பு சென்று விடுவார்கள்.. ஆனால் சில பேர் மட்டும் இந்த குழு கலைந்து விடாமல் பாதுகாத்து வருகிறோம்.”

  பெரிய விஷயம் தான்.

  “99% விளையாட்டை பொறுத்தவரை கமிட் செய்தால் நிறைவேற்றுவேன்.

  அதனால் என் அலுவல் நேரம் கழிந்து என்னால் தொடர்ந்து விளையாட்டில் இயங்கி வர முடிகிறது.”

  இப்ப நீங்க அங்க தனியா இருப்பதும் விளையாட முழுமையாக செல்ல வாய்ப்பாக உள்ளது, இல்லையென்றால் கடினமே.

  “நான் ஓய்வு பெற்று விட்டு இந்த என்னுடைய டீமில் அவனை சேர்த்து விட வேண்டுமாம்.. அதனால் தான் என் ஓய்வுக்காக ஆர்வமாக இருக்கிறான்.”

  😀

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here