மஹாத்ரயாரா என்பவர் எழுதிய ‘தாயம்’ புத்தகத்தைப் படித்தேன். மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. எனக்கு அனுபவங்கள் குறித்த புத்தகம் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால், அனுபவங்களைக் கற்றுக்கொள்வது என்றால் மிக விருப்பம்.
இதில் வாழ்க்கை குறித்த பல விஷயங்களை மிகச்சிறப்பாக விளக்கியுள்ளார்.
இதை ஒரு கட்டுரையோடு முடித்து விடாமல், இதில் எனக்குப் பிடித்த தலைப்புகளை உங்களுடன் அவ்வப்போது பகிர்கிறேன். அதில் இது முதல்.
அடுத்த நிலைக்குச் செல்ல விரும்பாதவர் யார்?
யாரும் ஒரே நிலையில் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள்.
மேலும் உயர வேண்டும், பல தடைகளைக் கடந்து பலரும் பாராட்டும்படி நடந்து கொள்ள வேண்டும், பெரும் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
எடுத்துக்காட்டுக்கு, ஒவ்வொருத்தருக்கும் அவரவர் பணி புரியும் வேலையில் / தொழிலில் எது உச்சமோ அதை அடைய வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.
ஒவ்வொருவரும் எதையும் விருப்பப்படலாம் ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்பது அனைவரும் அறிந்தது. அதற்குக் கடுமையான உழைப்பு தேவை.
ஓட்டப்பந்தயம்
ஒரு அலுவலகத்தில் துவக்க நிலையில் இருப்பவருக்குப் பெரிதாகப் பொறுப்புகள் இருக்காது, அலுவலகம் வந்தமோ போனோமா என்று இருக்கலாம்.
ஆனால், அதே அவருடைய மேலாளர் என்றால் அனைத்தையும் ஒழுங்காகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற பொறுப்பு உள்ளது.
பலரை சமாளிக்கணும், வாடிக்கையாளரிடம் பேச வேண்டும், பிரச்சனை என்றால் சமாதானப்படுத்த வேண்டும், முதலாளிக்கு பதில் கூற வேண்டும்.
அதே அந்நிறுவன முதலாளி என்றால், கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.
நிறுவனத்தைத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற மிகப்பெரிய சவால் உள்ளது.
பணம் கிடைக்கும் என்றாலும், அதற்கான தனிப்பட்ட இழப்புகள் அதிகம்.
இது போல ஒவ்வொரு நிலைக்கும் அதற்கான பணி, நெருக்கடிகள், கட்டுப்பாடுகள், தனிப்பட்ட வாழ்க்கை இழப்பு என்று தொடரும்.
எனவே, நாம் அடுத்தக் கட்டத்துக்குச் செல்லச் செல்ல அதற்கான நெருக்கடிகளும், பிரச்சனைகளும் அதிகரித்துக்கொண்டே செல்லும்.
உள்ளூர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற குறைந்த முயற்சி போதும்.
காரணம், போட்டி குறைவு ஆனால், அதே மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில்?! அதையும் தாண்டி ஒலிம்பிக் என்றால் எவ்வளவு முயற்சி, பயிற்சி வேண்டும்!
எனவே, சிகரத்தை அடைவது எளிதல்ல.
வரலாற்றைப் படிப்பவரும் படைப்பவரும்
பொதுவாழ்க்கைக்கு வருவதென்று முடிவெடுத்து விட்டால், அதற்கான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும், அவமானங்களையும் சந்தித்துத் தான் ஆக வேண்டும்.
என்ன இருந்தாலும், வரலாற்றைப் படிப்பவருக்கும், வரலாற்றைப் படைப்பவருக்கும் வித்யாசம் இருக்கத்தானே வேண்டும்!
மேற்கூறியதைப் படித்தால், அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப நபர் நினைவுக்கு வருவார். உங்களுக்கு யார் நினைவுக்கு வருகிறார்? 🙂 .
‘வாழ்க்கைப் பிரச்னை அதிகமாகத் தாக்குவதாக நீங்கள் உணர்ந்தால், கடவுள் உங்கள் மீது வைத்த கண்ணை எடுக்கவில்லை என்று அர்த்தம்.
வாழ்க்கை என்பது உங்களை எரித்துக்கொண்டு இருக்கும் உலை அல்ல. ஜொலிக்கும் வெள்ளியாக உங்களை மாற்றிக்கொண்டு இருக்கும் உலை‘ என்று கூறுகிறார்.
எனவே, சிகரத்தை அடைவது எளிதல்ல. எளிதாக அடைந்தால் அது சிகரமல்ல 🙂 .
கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்குறது என்னைக்குமே நிலைக்காது.
புத்தகத்தைப் படிக்கக் கொடுத்த பாலு சித்தப்பாக்கு நன்றி.
அமேசானில் வாங்க –> தாயம்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
நல்ல நூல். நல்ல பகிர்வு.
ஆங்கில மூலமான “Unposted Letter” நூலில் இருந்து எனக்குப் பிடித்த வரிகளைத் தமிழாக்கம் செய்து அவ்வப்போது எனது படங்களுக்கு மேற்கோள்களாக பகிர்ந்து வந்திருக்கிறேன். ஒரு தொகுப்பு இங்கே:
https://tamilamudam.blogspot.com/2017/07/10.html
கிரி, இந்த குறிப்பிட்ட பதிவுக்கும் எனக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.. வாழ்க்கையில் உச்சகட்ட வெற்றி என்று நாம் நினைப்பது எது??? என்ற கேள்விக்கு நீண்ட தேடலுக்கு பிறகு கூட விடை கிடைக்கவில்லை.. ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து, தட்டுத்தடுமாறி படிப்பை முடிச்சி, அந்த வேலை இந்த வேலை செஞ்சி, ஒரு நிரந்தர வேலையை தேடிக்கொண்டு, கல்யாணம் முடிச்சிட்டு, குழந்தைகள் பிறந்த பின்,
சொந்தவீடு கட்டவேண்டிய நிர்பந்தத்தில், பெற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும் கவனிக்க முடியாமல், நண்பர்களிடமும் பேச முடியாமல், இருக்குற வேலைய 1008 பாலிடிக்ஸ்க்கு நடுவுல தக்கவைச்சிகிட்டு தினமும் எங்க ஓடுறோமுனே தெரியாம ஓடிக்கொண்டிருக்கின்ற கோடிகணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன்!!!
எனக்கு எங்கு தேடியும் இன்று வரை பதில் கிடைக்கவில்லை ” வாழ்க்கையில் வெற்றி என்பது என்ன???? நல்ல வேலையா?? சம்பளமா??? வசதிவாய்ப்பா??? பெரிய வசதியான வாழ்க்கை முறையா?? ஆரோக்கியமான உடல்நிலையா??? சத்தியமா தெரியவில்லை.. அடிக்கடி படித்து என்னை ஆசுவாசப்படுத்தி கொள்ளும் வரிகள் இது (வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.தூரத்தில் இருப்பது தெளிவாக தெரிந்தாலும் அருகில் வரும் போதே பொருள் புரிகிறது) பகிர்வுக்கு நன்றி கிரி.
@ராமலக்ஷ்மி அப்ப.. நான் தான் ரொம்ப தாமதமாக இவர் புத்தகம் பற்றி தெரிந்து உள்ளேன் போல 🙂
@யாசின் “வாழ்க்கையில் வெற்றி என்பது என்ன???? நல்ல வேலையா?? சம்பளமா??? வசதிவாய்ப்பா??? பெரிய வசதியான வாழ்க்கை முறையா?? ஆரோக்கியமான உடல்நிலையா??? ”
செமையா இருக்கே.. எனக்கும் இப்ப சந்தேகம் வந்து விட்டது 🙂
இது நபருக்கு நபர் வேறுபடும் என்று நினைக்கிறேன்.
சிலருக்கு அமைதியான வாழ்க்கை, சிலருக்கு CEO, சிலருக்கு மூன்று வேளை சாப்பாடு.. இப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆனால், அவர்கள் நினைத்ததை அடைந்த பிறகு அடுத்தது என்ன என்று தான் யோசிப்பார்கள்.