சென்னையைக் கலக்கிய போர்க்கப்பல் கண்காட்சி

4
Indian War Ships

சென்னையில் போர்க்கப்பல் (துறைமுகம்) மற்றும் இராணுவ தளவாடங்கள் (திருவிடந்தை) கண்காட்சி சென்னையில் நடைபெற்றது. செம்ம கூட்டம்!

முதலில் திருவிடந்தை செல்வதாகத் தான் இருந்தது, பின்னர் தகவல்கள் குழப்பத்தால், துறைமுகம் செல்வதாக முடிவானது. எங்கள் குடும்பம் & என் அக்கா குடும்பம் சென்றோம்.

வாகனங்களைத் தீவுத்திடலில் நிறுத்த ஏற்பாடு செய்து இருந்தார்கள், வாகன நிறுத்தக் கட்டணம் கிடையாது என்பது எனக்கு வியப்பளித்தது.

பின்னர் அங்கிருந்து நடந்து நுழைவாயிலுக்குச் சென்றோம், ஆட்டோ என்றால் ₹50.

வெயிலையும் புறக்கணித்துப் பெரிய வரிசை ஆர்வமாக நின்று கொண்டு இருந்தது, அடுப்பின் அருகே நிற்பது போல வெயில் கொளுத்தியது.

வழியில் சுண்டல், சமோசா, தண்ணீர் விற்றுக்கொண்டு இருந்தார்கள்.

அடையாள அட்டை கட்டாயம்

இங்கே வந்த பிறகு தான் அடையாள அட்டை நகலுடன் கட்டாயம் என்று நினைவு வந்தது.

நாங்க அடையாள அட்டை வைத்து இருந்தோம் ஆனால், பசங்களுக்கு இல்லை.

எங்களுக்கு முன்னால் சென்ற என் மனைவி, அக்கா கேட்டுக்கொண்டதால், எங்கள் அடையாள அட்டையை வைத்துப் பசங்களை அனுமதித்தார்கள்.

எங்கள் குடும்பத்தைப் போன்றே பலரும் இது போலச் சென்று இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  அனைவரும் கொண்டு வந்து இருப்பார்கள் என்று தோன்றவில்லை.

அதோட எவரையும் வெளியே அனுப்பியதாகவும் நான் காணவில்லை.

கட்டணம் எதுவும் வசூலிக்காமல் அவர்களே நகல் (ஜெராக்ஸ்) எடுத்துக்கொடுத்தார்கள், 90% பேர் நகல் எடுக்காமல் தான் வந்தார்கள்.

எடுத்து வந்தவர்கள் இந்த வரிசையைத் தாண்டி, ஒரு மணி நேர வரிசையைத் தவிர்க்கலாம்.

90% மேல் நடுத்தர வகுப்பினர்

கப்பற்படையைச் சார்ந்தவர்கள் வந்தவர்களிடம் கருத்துகளைப் பெற்று அதைக் காணொளியில் பதிவு செய்தார்கள். வந்து இருந்தவர்களில் 90% மேல் நடுத்தர வகுப்பினர்.

பின்னர் அங்கே இருந்து மாநகரப் பேருந்து மூலம் அனைவரும் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள், கட்டணமில்லை. குடிநீர் வசதியும் செய்து இருந்தார்கள்.

நான் வியக்கும் அனைத்து வசதிகளும் அரசாங்கம் வழக்கமாகச் செய்ய வேண்டிய அடிப்படை சேவைகள் தான் ஆனால், இவற்றையெல்லாம் நாம் வியக்கும் படியானது நம் பரிதாபம்.

போர்க்கப்பல் விவரங்கள்

ஒருவருக்கு ஒரு அனுமதி சீட்டு மூலம் அங்கே உள்ள ஏதாவது ஒரு கப்பலின் உள்ளே சென்று பார்க்கலாம். ஒரு கப்பலில் சென்று வந்து விட்டால், வேறு கப்பலுக்குச் சென்று பார்க்க முடியாது.

அங்கே இருந்த காவல்துறையைச் சார்ந்தவர் “அந்தக் கப்பலுக்குச் சென்றால், மேற்பகுதியில் மட்டும் தான் பார்வையிட முடியும், நீங்கள் இதற்கே செல்லுங்கள் இக்கப்பலில் உள்ளே என்று பார்க்க அனுமதிப்பார்கள்” என்றார். 

மொத்தம் ஐந்து கப்பல்கள் இருந்தன.

உள்ளே இருந்த இயந்திரங்கள், தகவல் பலகைகள், ஆயுதங்கள், அதைப் பற்றிய விளக்கங்கள், வரைபடங்கள், மின்னனு சாதனங்கள் என்று ஹாலிவுட் படத்தை நினைவுபடுத்தியது.

பணியில் இருந்த கப்பற்படையைச் சார்ந்தவர்கள் கேட்பவர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் அளித்தார்கள்.

Torpedo

Torpedo என்ற தண்ணீருக்கு அடியே தாக்கும் ஏவுகணை இருந்தது. அது குறித்த விளக்கங்களைக் கூறினார்கள். இந்த ஏவுகணை மிகப்பிரபலமானது.

Ghazi என்ற தெலுங்கு படத்தையும், போர் நீர்மூழ்கி கப்பல் பற்றிய திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கும் Torpedo பயன் என்னவென்று புரியும்.

கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் வட நாட்டைச் சார்ந்தவர்கள், தமிழ் பேச தெரிந்தவர்களை அங்கே நிறுத்தி இருக்கலாம், இருப்பினும் இவர்களும் உதவிகரமாகவே இருந்தார்கள்.

Salute

இவையெல்லாவற்றையும் விடப் பொதுமக்கள் உள்ளே வரும் போது கப்பற்படையைச் சாந்தவர்கள் Salute அடித்து வரவேற்றது பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.

பொதுமக்கள் பலர் வெளியே செல்லும் போது அதிகாரிகளுக்கு கை கொடுத்துச் சென்றார்கள்.

கொளுத்தும் வெயிலில் கருப்பு உடையை அதுவும் கனமான உடையை அணிந்து சில வீரர்கள் நின்றது பாவமாக இருந்தது.

கருப்பு வண்ணம் மற்ற வண்ணங்களை விட வெயிலை அதிகளவில் ஈர்க்கும் என்பதால், வழக்கமான வெப்பத்தை விட அதிகளவில் இருக்கும்.

வெளியே இருந்த கடற்படையைச் சார்ந்தவர்களுடன் நிழற்படம் எடுத்துக்கொண்டார்கள்.

எங்க பசங்களும் எடுத்துக்கொண்டார்கள். கப்பல் அருகே நின்று அனைவரும் நிழற்படம் எடுத்துக்கொண்டோம். கப்பலின் உள்ளே நிழற்படம் எடுக்க அனுமதியில்லை.

கப்பற்படையும், மாநில காவல்துறையும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து இருந்தார்கள், மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார்கள். 71,000 பேர் பார்வையிட்டுள்ளனர்.

கொசுறு 1

வெளியே வந்து ₹20 க்கு எட்டு (சின்ன) சமோசா வாங்கினோம், உடன் பச்சை மிளகாயும் இருந்தது என்று அதையும் வாங்கினேன்.

இரண்டுக்கும் செம்ம பொருத்தம். இத்தனை நாள் இந்தப் பச்சை மிளகாய் & சமோசா விசயம் தெரியாம போச்சே என்று வருத்தமாக இருந்தது 🙂 .

கொசுறு 2

திருவிடந்தை இராணுவ தளவாட கணக்காட்சியைக் காண, இரண்டு லட்சத்துக்கு அதிகமானோர் சென்றதாக செய்திகளில் வந்தது 😮 . இதனால், ECR சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.

4 COMMENTS

  1. ரூல்ஸ் ராமானுஜம் அடையாள அட்டை பிரதியினை மறந்துபோனது ஆச்சரியமாக உள்ளது.

  2. நான் தான் தவற விட்டுட்டேன் அண்ணா…எவ்ளோ முயற்சி பண்ணியும் என்னால் செல்ல முடியவில்லை…

  3. கிரி, சிறு வயதில் இயற்பியலின் மீது அதீத காதல்.. எல்லா பாடங்களை விட இயற்பியலும், வரலாறும் மிகவும் பிடித்தவை.. கால ஓட்டத்தில் வாழ்க்கை சூறாவளி எல்லாவற்றையும் சுழற்றி விட்டு விட்டது.. ஆனால் இன்னும் இந்த பாடங்களின் மீதான காதலின் வெளிப்பாடு அவ்வப்போது வெளிப்படுவதுண்டு… நிறைய விஷியங்களை படிப்பதற்கும், நேரில் சென்று பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு..

    கண்டிப்பாக குழந்தைகளுக்கு விருப்பமான நிகழ்வாக அமைந்து இருக்கும்.. எங்கோ ஒரு சிறிய ஊரில் பறவைகள் பார்ப்பதை வைத்து, பாடம் நடத்திய ஆசானின் அந்த அறிய நிகழ்வு தான் அப்துல் கலாம் ஐயாவின் முதல் விதை, பின்பு விருட்சமாக வளர்ந்து.. இந்த நிகழ்வு உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற ஒன்றாகவும் அமையலாம்.. வாழ்த்துக்கள் கிரி.. பகிர்வுக்கு நன்றி..

  4. @ப்ரியா ஜோசப் எனக்கு கூட தான்!!

    ரஜினியை திட்ட மட்டுமே எட்டி பார்க்குற நீங்கள் இது போன்ற கட்டுரைகளுக்கு வருவது வியப்பளிக்கிறது.

    @கார்த்தி மறுபடியும் நடத்துவார்கள் என்று நினைக்கிறேன். அப்போது சரியாக திட்டமிட்டுக்கொள்.

    @யாசின் பசங்களுக்கு விருப்பமாக இருந்தது. வெயில் தான் கொளுத்தியது..இல்லையென்றால், இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்து இருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here